கதையாசிரியர்:
தின/வார இதழ்: கலைமகள்
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: April 15, 2012
பார்வையிட்டோர்: 9,748 
 
 

எம்ஆர்டீயில் ஏறியதுமே போன் சிணுங்கியது. ராஜனின் போன். நான் சரியான நேரத்திற்கு சாங்கி விமான நிலையத்தை அடைந்துவிடுவேனா என்ற சந்தேகம் ஒரே மணிநேரத்தில் அவருக்கு இரண்டாவது முறையாக வந்திருந்தது. என்னை செல்பேசி மூலமே மேற் பார்வையிட்டார். “ஹலோ, ..பெடோக் தாண்டிட்டேன் சர், அரை மணிநேரம் முன்னாடியே போயிடுவேன். கவலையே வேண்டாம். ம்,.ஆமா, ‘திருமதி. லீலா’ னு கொட்டகொட்டயா அட்டையில எழுதி எடுத்துகிட்டேன். நோ ப்ராப்ளம்,பை, ” என்றதுமே துண்டித்துவிட்டார். ராஜனின் செயல் எனக்குச் சற்று விநோதமாகத்தான் இருந்தது.

மூச்சுவிடவும் நேரமில்லாமல் ஓடிக்கொண்டேயிருக்கும் மக்களுக்குக் குழந்தை குடும்பம் ஆகியவற்றைவிடவும் அந்த ஓட்டமே பிரதானமாகியிருந்தது. பணத்தை விட்டெறிந்து நேரத்தை வாங்கத் தலைப்பட்டுவிட்டனர். அதனால்தான் ‘எனி சர்விஸ்’ ஒரே வருடத்தில் பதினோரு ஊழியர் களுக்கும் கணிசமான போனஸ் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்திருந்தது. ஒருநாள் மள மளவென்று ஆபீஸிற்குள் நுழைந்தார் ஓர் ஆண். தன் மனைவி மிகவும் ‘பிஸி’, ஆகவே ஒரு வாடகைத்தாய் தேவையென்றார். தன் தொலைபேசி எண்ணைக் கொடுத்துவிட்டுப் போய் விட்டார். பாஸ் ஒரு மாதமாய் அந்தத்தம்பதியருக்குப் பிள்ளை பெற்றுக் கொடுக்கவென்று வாடகைத் தாயைத் தேடிக்கொண்டிருக்கிறார்.

நாயை ‘வாக்கிங்’ அழைத்துச்செல்லக் கூட பலருக்குக் காலைநேரத்தில் ஆள் தேவையாக இருந்தது. கையில் பழைய ந்யூஸ் பேப்பரை எடுத்துக்கொண்டு உடன் நடந்துகொண்டே போகவேண்டும். அதன் காலைக்கடனையெல்லாம் பேப்பரில் எடுத்து குப்பைத்தொட்டியில் போடவேண்டும். இல்லையென்றால் அபராதமுண்டு. நாயைக் குளிப்பாட்டி பிரஷ் செய்துவிட, வீட்டு மளிகை வாங்க, வீட்டிலுள்ள திரைச் சீலைகளையெல்லாம் அகற்றித் துவைத்து மறுபடியும் மாட்டிவிட என்று எதற்கும் எல்லாவற்றிற்கும் மக்களுக்கு நேரப் பற்றாக் குறையிருந்தது. பணம் அள்ள அள்ளக் குறைவேயில்லாமல் இருக்கும் இவர்கள் இவ்வேலைகளுக்காக எங்களிடம் வந்தனர். சொல்லியழத்தோள் கொடு, காதுகொடு என்றெல்லாம் கூட தொலைபேசியிலழைத்து நேரம் சொல்லிக் கூப்பிடுவார்கள். வேலையைப்பொருத்தும் சேவையைப்பொருத்தும் கட்டணங்களை பாஸ் தீர்மானிப்பார்.

போன வாரம் ஒரு தொலைபேசியழைப்பு வந்தது. பாஸ் தான் எடுத்தார். அழைத்தது ஒரு தந்தை. அவருக்கும் அவரது துணைவியாருக்கும் தங்களின் வர்த்தகத்தைக் கவனிக்கவே நேரமில்லை. ஆகவே, அவர்களது பதிமவயதுப் பெண்ணின் பிரச்சனைகளையெல்லாம் காதுகொடுத்துக் கேட்கவேண்டும். ஒரு ஜோடிக் காது கிடைக்குமாவென்று கேட்டார். ரவியின் இருகாதுகளையும் அனுப்பிவைக்கிறேன் என்று கூறிவிட்டு பாஸ் போனை வைத்தார்.

மஞ்சள் முகத்தில் ஒரு மகிழ்ச்சியின்மை. கேட்க ஆள் கிடைத்ததும் அந்தப்பெண் ஒரேயரு நிமிஷம் தயங்கிவிட்டுப் பிறகுக் கொட்டித்தீர்த்துவிட்டாள். பதினைந்து வயதில் ஒரு பெண்ணுக்கு இவ்வளவு கவலைகளா என்று வியக்கும்படியிருந்தது எனக்கு. குறைந்தது இரண்டு வருடங்களாகப் பெற்றோரிடம் பேச நினைத்துப் பேசாமலேயே மனதிற்குள் உறங்கிக்கொண்டிருந்த அத்தனையும் வெளியேறின. முதலில் பெற்றோரிடம் பேச நினைத்தவையும், பிறகு ஒரு நண்பனிடம் பகிர்ந்துகொள்ளும் சில்லறை விஷயங்களும் கொஞ்சம் கொஞ்சமாக வந்து விழுந்தது. விவரமாகக் கேட்டுவிட்டுச் சுருக்கமாக எழுதியனுப்ப எனக்கு இரண்டு மணிநேரச் சம்பளமாக நாற்பது டாலர்கள். இறுதியில் அப்பெண்ணின் முகம் பிரகாசமாகியிருந்தது.

‘பெடோக்’ ரயில் நிலையத்தைக் கடந்ததுமே மறுபடியும் போன். டாரதி! படித்துக்கொண்டே ‘பிராண்டட்’ உடைகள் மற்றும் காலணிகள் போன்ற தன் ஆடம்பரச்செலவுகளைச் சமாளிக்க உபரிவருமானம் ஈட்டவென்று சிலமாதங்களுக்கு முன் வேலைக்குச் சேர்ந்த ஓர் இரண்டுங்கெட்டான். “ஹலோ”, என்றதுமே,” ரவி, நீ எங்க இருக்க? பெரியவரு வீட்டு நாய்க்கு இன்னிக்கு ‘செக்கப்’, மறந்திட்டியா? நீ போறியா, இல்ல நான் போகட்டா?””டாரதி, தாத்தாவும் நாயும் வேற ஆளப்பாத்தாலே டென்ஷனா யிடுவாங்க. ஆனா, வேற வழியுமில்ல, இன்னிக்கு நான் போகமுடியாது. நான் வேற ‘அசைன்மெண்ட்’ல இருக்கேன். நீயே சமாளி.”

சனிக்கிழமை என்பதால் ரயிலில் காலைநேர நெருக்கடி அதிகமில்லை. சில பள்ளி மாணவர்கள் அவர்களின் தனியுலகத்தில் சஞ்சரித்தபடி பயணித்தனர். இரண்டு முதியவர்கள் காலைநேர ஓட்டத்தை முடித்துவிட்டு வியர்வை பளபளக்க நாளிதழில் ஆழ்ந்திருந்தனர். ஜன்னல் வழியே வெளியே நோட்ட மிட்டேன். நேற்றைய மழையின் நினைவை மறந்த வானம் ஒன்பது மணிக்கே வெயிலால் வெளிறிக் கிடந்தது.

ஒருவாரம் முன்பே ராஜன் ‘எனி சர்விஸ்’ கதவைத்தட்டித் தன் விசித்திரமான கோரிக்கையை வைத்திருந்தார். மெர்ஸிடிஸ் பென்ஸ் காரில் வந்திறங்கினார். உடையும் மிடுக்குமே ‘பெரிய’ பணக்காரர் என்று பறைசாற்றியன. நேர்த்தியான ஆங்கிலம் நாவில் விளையாடியது. எல்லா விரல்களிலும் வைரம் மிளிரியது. ” நானும் என் வொய்·பும் ரொம்ப பிஸி. ஒருத்தர் இந்தியாவிலிருந்து ‘டிரான்சிட்’ல வராங்க. அவங்கள ‘ரிஸீவ்’ பண்ணி, ஐஞ்சு மணிநேரம் அவங்க கூட இருக்கணும். மறுபடியும் ‘ஏர் இந்தியா’ விமானத்துல கலிபோ·ர்னியாவுக்கு அவங்க கிளம்பறவரைக்கும் கூட இருந்தாபோதும்.”” சரி, இவங்க யாரு? என்ன பேரு? என்ன வயசு? எந்த ·ப்ளைட்ல வராங்க? எத்தனை மணி வரைக்கும் கம்பெனி குடுக்கணும். எந்தமாதிரி உதவியெல்லாம் தேவையாயிருக்கும்? இந்தமாதிரி விவரங்கள்ளாம் தேவை, இந்த ·பார்ம்ல ·பில் பண்ணுங்க”, என்று சொல்லி என்னைப்பார்த்துக் கொள்ளச்சொல்லிவிட்டு பாஸ் அடுத்துவந்த தொலைபேசியழைப்பைக்கவனிக்கச் சென்றுவிட்டார்.

மூதாட்டிக்கு ஆங்கிலம் தெரியுமென்றாலும் கூட ஓர் இந்திய ஊழியரையே அனுப்ப விண்ணப் பித்திருந்தார். ராஜனின் முக்கிய எச்சரிக்கை விமான நிலையத்தில் திருமதி. லீலாவைத் தவறவிடக் கூடாது. அப்படி நான் அவரைக்காணத்தவறினால், கையிலிருக்கும் ராஜனின் முகவரியை டாக்ஸி ஓட்டுனரிடம் காட்டி நேராகச்சென்று அவர் வீட்டுக்கதவைத் தட்டிவிடுவார். அவர் தங்களின் வீட்டுக்கதவைத் தட்டிவிடாமல் இருக்கத்தான் ‘எனி சர்விஸ்’ ஸின் உதவியையே நாடியிருந்தார். அடுத்துவந்த மூன்று நாட்களுமே அதைப்பற்றியேதான் பேச்சாயிருந்தது ஆபீஸில்.

‘சாங்கி’ ரயில் நிலையத்திலிருந்து வெளியேறி நடந்தேன்.மெள்ள விமான எண்ணைச் சரிபார்த்து உரிய இடத்தையடைந்தேன். அதிசயமாக இந்திய விமானம் சரியான நேரத்திற்குத் தரையிறங்கியிருந்தது. அடுத்த அரை மணிநேரத்தில் பயணிகள் நான்கு மணிநேரப் பயணக்களைப்பையெல்லாம் முகத்திலேந்திக் கொண்டும் தள்ளுவண்டிகளைத் தள்ளிக்கொண்டும் கூட்டம் கூட்டமாக வெளியேறினர். ஒருசிலரைத் தவிர மற்ற அனைவருக்கும் சொந்தபந்தங்கள் எதிர்கொண்டழைக்க வந்திருந்தனர். நான்கு அட்டைகளில் மூன்று நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்காகப் பிடித்துக்கொண்டிருந்தவை. நான் பிடித்துக்கொண்டிருந்தது தான் தனிநபருக்கானது. வெளியேறிய பயணிகளின் நடுத்தர வயதைக்கடந்த இந்தியப் பெண்மணியைத் தேடினேன். ராஜன் எடுத்துப்பல வருடங்களாகியிருந்த ஒரு நிழற்படத்தைக் காட்டியிருந்தார். அதில் இருப்பதைப்போல இப்போது இருக்கமாட்டார் என்றும் எச்சரித்திருந்தார்.

வெளிர் நீலச் சேலையணிந்து, தளர்ந்த கொண்டையுடன், தோளில் ஒரு பயணப்பையும் மறுகையில் ஒரு பணப்பையுமாக தூரத்தில் வந்துகொண்டிருந்தவர் தான் திருமதி. லீலாவாக இருக்கமுடியுமென்று தோன்றியது. அவர் கண்களில் நன்றாகப் படும்படி அட்டையைக் கொஞ்சம் பலமாக ஆட்டிவிட்டு அவரது உயரத்திற்குப் பிடித்தேன். கவனிக்காது என்னைக்கடந்து சென்றுவிடாமல் அவரையே உற்றுப்பார்த்தேன். அவர் அட்டையைப்பார்த்து என்னைநோக்கிவருவது தெரிந்ததும்தான் இயல்பு நிலைக்குத் திரும்பினேன். நல்ல சிவந்த நிறத்தில் இருந்த அவர் பளீரென்று புன்னகைத்தார்.

“நீங்க திருமதி லீலாவா?”, என்றது ஆமென்று தலையசைத்தார். என் பெயர் ரவி. நான் ராஜன் கீழ வேலை செய்யறேன். அவர் எனக்கு நல்ல நண்பர்”, நானும் சிரித்துக்கொண்டே ராஜன் சொல்லச்சொன்ன முதல் பொய்யைச் சொன்னேன். அவ்வாறு சொல்வது என்வேலை என்று என் மனசாட்சிக்குச் சமாதானம் சொல்லிக்கொண்டேன். அந்தப்பொய்யால் குறைந்தபட்சம் அந்த வயாதான மூதாட்டிக்கு அதிர்ச்சியோ மனவேதனையோ இல்லாதிருக்குமென்றும் ஒரு கூடுதல் சமாதானம் உள்ளுக்குள் பிறந்தது. ஆனால், ராஜன் தவிர்க்க நினைக்கும் அளவிற்குப் பெரிய தொந்தரவாகத் தெரியவில்லையே இவரைப்பார்த்தால்.

ராஜன் சொல்லச்சொன்ன பொய்கள் ஒவ்வொன்றாக என் வாயிலிருந்து உதிர்ந்ததை உணர்ந்து எனக்கே என் மேல் ஆச்சரியம் பிறந்தது.” ரெண்டுபேருமே கொழந்தைங்களக் கூட்டிகிட்டு பினாங்குக்குப் போயிருக்காங்க. இந்த ‘ட்ரிப்’ முன்னாடியே ப்ளான் பண்ணினது. அதனாலகேன்சல் பண்ண முடியல்ல. அதான் பாவம், வேற வழியில்லாம என்னை உங்களுக்குக் கம்பெனிகுடுக்க அனுப்பியிருக்காங்க. உங்க கிட்ட விளக்கிச்சொல்லிப் புரிய வைக்கச்சொன்னாங்க. “, என்றதுமே,” ராஜன் வருவான்னு நெனச்சேன். போன்லயாவது அவனோட பேசலாமா?”, என்று குழந்தையின் ஆர்வத்தோடுகேட்டார்.

இணைப்பு கொடுக்கக்கூடாது, பேசவிருப்பமில்லை என்ற ராஜனின் எச்சரிக்கை நினைவு வந்தது. “இல்ல, அவங்க போன் எடுத்துகிட்டுப் போகல்ல. இதையும்கூடச் சொல்லச் சொன்னாங்க. கவலைப்படாதீங்க. நான் அவர்கிட்டசொல்றேன். வரீங்களா ஒரு கப் காபி சாப்பிடலாம்,” என்று பேச்சை மாற்றினேன். “நானே ஒங்கிட்டக்கேக்கணும்னு நெனச்சேன் ஒரு காபி சாப்பிடணும்னு. அதுக்குமுன்னால குளிக்கணும் ரவி. ஒரே கசகசன்னு இருக்கு. இங்கே குளிக்க வசதியிருக்கா?””ஓ. இருக்கே !” என்றபடி குளியலறைகள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றேன்.“பரவாயில்லையே! இவ்வளவு வசதிகள் இங்கயே இருக்கும் பொழுது யார் வீட்டுக்கும் போய் தொந்தரவு பண்ண வேண்டாம் இல்ல’ என்றாள். எனக்கு லேசாக திடுக்கென்றது. ராஜனின் குட்டு வெளிப்பட்டுவிடுமோ? “என்னோட பைய நீ பார்த்துக்கோ. நா சீக்கிரமே வந்துடறேன். வாபோன்னு நா ஒன்னக் கூப்பிடலாமில்ல. எப்படியும் நீ என்னோட கடைசி மகளவிடச் சின்னவனாத்தான் இருப்ப, அவளோட பிரசவத்துக்குத்தான் யூஎஸ் போறேன். முதல் பிரசவம்.,” என்றபடி உட்கார்ந்திருந்த இருக்கையிலிருந்து எழுந்துகொண்டார். பையிலிருந்து தனக்கு வேண்டிய சோப்பு, துண்டு, மாற்று உடை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அங்கு வரிசையாக இருந்து குளியலறைக்குள் சென்று மறைந்தார்.

கையில் இருந்த பையில் அவரது பாஸ்போர்ட் போன்ற முக்கிய ஆவணங்கள் இருந்ததால், கீழே வைக்காமல் மடியில் வைத்துக்கொண்டு உட்கார்ந்தேன். தீவிரவாதம், சார்ஸ், பறவைக்காய்ச்சல் எதுவுமே சுருங்கிவிட்ட உலகில் பயணத்துக்குத் தடையாகவே தெரியவில்லை. மக்கள் அலுக்காமல் மணிக்கணக்காகப் பறக்கத் தயாராகவேயிருக்கின்றனர். அங்கு வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததில் இருபது நிமிடம் ஓடிவிட்டிருந்தது. மனதின் மூலையில் சிறு சந்தேகம் துளிர்த்தது. அது பயமாக வளருமுன் திருமதி. லீலா குளியலறையிலிருந்து வெளிப்பட்டார். அழுக்குடன் களைப்பையும் சோப்புப்போட்டு கழுவியிருந்தார். நிறம் இரட்டிப்பாகியிருந்தது. இருக்கைக்கு வந்தவர், “அடடா, சோப் பாக்ஸை உள்ளேயே விட்டுட்டேன்.,..”, என்று மறுபடியும் திரும்பிச்சென்றவரை, அவர் ஒருமையில் என்னைக்கூப்பிட்ட தைரியத்தில்,” இருங்க ஆண்டி நா போய் எடுத்துகிட்டு வரேன். நீங்க உக்காருங்க,. இதோ வந்துடறேன்,” என்று அவரது பையை அவர் கையில் கொடுத்துவிட்டு குளியலறைக்குள் நுழையவிருந்த ஓர் இளம்பெண்ணிடன் சோப்புப்பெட்டியை எடுத்துக் கொடுக்கச் சொல்லி வாங்கிக்கொண்டு திருமதி. லீலாவிடம் கொடுத்தேன். “ரொம்ப தேங்க்ஸ்பா. வரவர ஞாபக மறதி ஜாஸ்தியாயிடுச்சு,..”, என்றார் சிரித்தபடி. ‘கா·பெடேரியா’ வை நோக்கி நடக்கவாரம்பித்தோம்.

மறுபடியும் ராஜன். எண்ணைப்பார்த்ததும் என் குரலைக் குறைத்துக்கொண்டே, “ம்,. ஆமா சர். வந்துட்டாங்க. அவங்க இப்பத்தான் குளிக்கப்போயிருந்தாங்க. இப்ப காபி சாப்பிட அழைச்சி கிட்டுப் போறேன். தெரியும் சர். ம்,.. ஓகே சர். நோ ப்ராப்ளம், பை”, என்றபடியே என்பின்னே நடந்த திருமதி.லீலா வருகிறாரா என்று பின்னாடிப்பார்த்துக்கொண்டே அவருக்கு இசைவாய் மெதுவாக நடந்தேன். “ஆண்டி, உங்களுக்கு வேற ஏதும் சாப்பிட வேணாமா? மேல ஒரு இட்டாலியன் ரெண்ட்ராண்ட் இருக்கு. ரொம்ப நல்லா இருக்கும். வேணாப்போவோமே.” “இல்ல எனக்குப்பசிக்கல்ல. தாகமாத்தான் இருக்கு, காபியே போதும்”, என்றதும் நடையைத் தொடர்ந்தேன். “ரவி, பார்க்கத்தான் நான் கிண்ணுனு இருக்காப்போல இருக்கும். ஆனா, எனக்கு ஆர்த்ரைடிஸ் ப்ராப்ளமுண்டு”, என்றவரிடம் குற்றுவுணர்ச்சியுடன், “ஓ, ஐ’ம் சாரி ஆண்டி. நான் ரொம்ப வேகமா நடந்துட்டேன் இல்ல. மெதுவாவே நடப்போம். ஒண்ணும் அவசரமில்ல”, என்றேன் நடையின் வேகத்தைக்குறைத்தபடி.

தொந்தரவாக இருந்த மொபைலை ‘ஆ·ப்’ பண்ணிவிடுவோமா என்று கை துருதுருத்தது. செய்தால் மறுநாளே வேலை போய்விடும். பாஸ் சரியான துர்வாசர். ஏன் என்ன வென்றெல்லாம் விசாரிக்காமல் சீட்டைக்கிழிப்பதற்குப் பெயர்போனவர். நான் என் வேலையை இழக்கவிரும்பவில்லை. ஆகவே ‘சைலண்ட் மோட்’ இல் வைத்துக்கொண்டு தொடர்ந்து நடக்க ஆரம்பித்தேன். பேசிக்கொண்டே வந்தார். திருமதி. லீலா தன் மூத்தமகளுடன் சென்னையில் வசிக்கிறார்.

காபிக்குக் காசுகொடுக்கும்போது அவரிடம் சிங்கப்பூர்பணம் நூறு வெள்ளித்தாள்தான் இருந்தது. கடைக்காரர் சில்லறையாகக் கேட்டதும் நானே என்னிடமிருந்து இரண்டு காபிகளுக்கும் பணம் கொடுத்தேன். காபிக்கோப்பையைக் கையில் எடுத்துக்கொண்டே, “அங்கெயெல்லாம் டிசம்பர் ரொம்ப குளிராமே. என்னோட மூட்டுவலிதான் ஜாத்தியாயிடும். அதுக்குத்தான் சொல்லவந்தேன். இதோ இந்த ஏர்கண்டிஷனேகூட ஒத்துக்கல்ல. மூட்டு கொடைய ஆரம்பிச்சாச்சு”, என்றார்.

காபிக்குச் சர்க்கரை போட்டுக்கொள்ளாமல் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கோப்பை வரைபேசாமல் குடித்தார். பிறகு எதோ நினைவு வந்தவராகத் தன் தோள் பையைத் திறந்தார். அதில் வெவ்வேறு அளவுகளில் பொட்டலங்கள். அவற்றை வேறு ஒரு ப்ளாஸ்டிக் பையில் போட்டு என்னிடம் நீட்டி, ” எலவடாம், கடுகுமாங்கா, வெங்காயவத்தல், இதெல்லாம் நானே செஞ்சது. ஒரு பாட்டில் மாகாளிகூட இருக்கு. ராஜனுக்குப் பிடிக்கும். இதயெல்லாம் அவங்ககிட்ட நானே என் கையால கொடுப்பேன்னு தான் நெனச்சேன். பரவால்ல, நீயே கொடுத்துடு. பேரப்பிள்ளைக ரெண்டுபேரையும் பார்க்கமுடியாதது வருத்தம்தான். பார்த்து கிட்டத்தட்ட ஒண்ணரை வருஷமிருக்கும். ராஜனையும் ரேஷ்மியையும்கூட பாக்கணும்னு ஆசையாயிருந்தேன். ரெண்டுவாரம் முன்னாடி போன்லகூட ஊருக்குப் போகறவிவரம் சொல்லல்ல. அதான் வெளியவரும்போதே அவனோட முகத்தையே தேடிகிட்டு வந்தேன். ராஜன் எனக்கு ஒரே சன்.”

“என்ன ராஜன் உங்க மகனா?” என்று நாக்கு நுனி வரை வந்தகேள்வியை நல்லவேளை தக்க தருணத்தில் அடக்கிக்கொண்டேன். “ரொம்ப பாசம் எம்மேல அவனுக்கு. ரேஷ்மி இந்த நாட்டு பெண்ணா இருந்தாலும் எங்கூட சிநேகிதி மாதிரிப் பழகுவா தெரியுமா? நான் போன தடவை வந்து ஒரு மாசமிருந்தேன். நாந்தான் தெனம் சமைப்பேன் விதவிதமா. ரேஷ்மிக்கு நம்ம சமையல் அவ்வளவா தெரியாது. கத்துக்கொடுத்தாத்தானே தெரியும். இந்த ஊர் கிச்சன் அவ்வளவா பழக்கமில்லையா. முதல்லே கொஞ்சம் தகராறா இருந்தது”, என்று தொடர்ந்தபடியே யோசனையிலாழ்ந்தார் ஆண்டி.

அடப்பாவி, சொந்தத் தாயா? யாரோ தூரத்துச்சொந்தமென்றல்லவா சொன்னான் அந்த ராஜன் அன்று! ‘அம்மா’ வென்று சொல்லியிருந்தாலும் கூட பாஸ் இதற்கு இசைந்திருப்பார். அவருக்குத் தன் நிறுவனத்தின் சேவையின் தரம் மற்றும் வாடிக்கையாளர்களின் திருப்தி மிகமிக முக்கியம். உணர்ச்சிகளுக்கு இடமில்லையென்றிருப்பார். பாஸ் போகச்சொன்னால், நானும் மாட்டேனென்றா சொல்லியிருப்பேன்?! ஆனால், வேறு யாரையாவது அனுப்ப முயன்றிருக்கலாம். “வேற யாராவது செய்தாலும் பரவாயில்லையாக்கும், நீ மட்டும் செய்யக்கூடாதோ. டேய் ரவி, இதுவும் ஒருவிதத்தில் சுயநலம் தாண்டா”, என்ற அதட்டியது மனசாட்சி. கண்களில் லேசாகக் கண்ணீர் தளும்பியது.

“படிக்க ஏதானும் ‘மேகஸின்ஸ்’ கிடைச்சா வாங்கிட்டு வரமுடியுமா, ஆனா எங்கிட்ட ‘சேஞ்ச்’ தான் இல்ல,” என்று தயங்கித்தயங்கிக் கேட்டார். அதோடு ஒரு பனடால் மாத்திரையும் கேட்டார். உடனே எழுந்து “நானே வாங்கிக்கிட்டு வரேன் ஆண்டி. ரொம்ப ஒண்ணும் ஆகாது,” என்றுசொல்லிவிட்டு பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் இருக்கும் ‘·பேர் ப்ரைஸ்’ கடையில் நுழைந்து அவர் கேட்டவற்றை வாங்கி கொண்டு வந்து கொடுத்தேன். புன்னகையாலேயே நன்றி கூறினார்.

சுமார் மூன்று மணிக்கு ‘ஏர் இந்தியா’ பயணிகளுக்கு முதல்அழைப்பு விடுக்கப்பட்டது. திருமதி. லீலா என் முகத்தைப்பார்த்தார். “பரவாயில்ல. இன்னும் நேரமிருக்கு. என்னோட போன் நம்பர் எழுதிக்கொடுக்கறேன். எப்போ இந்தியா திரும்பரீங்களோ அப்போ நா வரேன். நேரமிருந்தா உங்கள எங்க அக்காவீட்டுக்குக் கூட்டிட்டுப்போறேன்”, என்று ஒரு காகிதத்தில் என் முகவரி மற்றும் போன் நம்பர்களை எழுதிக் கொடுத்தேன்.

” உனக்கெதுக்கு வீண் சிரமம். வரும்போது ராஜன் இருப்பான். அவன் வந்து கூட்டிட்டுப் போவான். முடிஞ்சா உனக்கு போன் பண்றேன். பார்ப்போமா,.,. ஆமா, ராஜனை உனக்கு எத்தனை நாளா தெரியும்?,” விடைஎதிர் பாராத கேள்வியை உதிர்த்துவிட்டுக் கையசைத்துச் சென்றார். அவரது நம்பிக்கையும் பாசமும் அப்படியே இருக்கட்டுமே! ராஜனின் குட்டையுடைத்து அதன்மூலம் அந்தத்தாயின் இதயத்தையும் உடைக்க ஏனோ எனக்கு மனமே வரவில்லை. கஷ்டப்பட்டு என் வாயைக்கட்டுப் படுத்திக் கொண்டேன். குற்றவுணர்வு ஒருபுறமும் மனநிம்மதி மறுபுறமுமாக என்னைக் குழப்பின. விநோதமான ‘அசைன்மெண்ட்’ என்று காலையில் அதிசயித்தவன் என் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமையுமென்று நினைத்திருப்பேனா ! நெடுநாட்கள் பழகியவரைப்பிரியும் மனக்கனத்துடன் வெளியேறினேன்.

மொபைல் கவனத்தை ஈர்த்தது. ராஜனின் அழைப்பு மறுபடியும் ! இத்தனை முறை போனில் என்னோடு பேசமுடிகிற இவனால், பெற்றவளுக்காக நேரத்தை ஒதுக்கவும் வீட்டிற்கு அழைத்துப்போகவும் முடியவில்லை. ஹார்ட்லெஸ் ·பூல்! ” ஹலோ, ரவி, அவங்களுக்காக நீங்க ஏதும் செலவு செஞ்சா அதுக்கெல்லாம் நான் பொறுப்பில்ல. முன்னாடியே சொல்லியிருக்கேன் ஞாபகமிருக்கில்ல? இதுதான் என்னோட கடைசிக்’கால்’. உங்களுடைய சேவைக்கான கட்டணத்துக்கு என்னோட ஆபீஸ¤க்குப் பில்ல அனுப்பினா, ஒரே நாள்ள செக் அனுப்பிடறேன், சரியா”,என்றதும், ” செலவென்ன சர், பெரியசெலவு? பணத்த நீங்களே வச்சிக்கோங்க சர். பாஸ்கிட்டவும் சொல்லிடறேன். இதுக்கு நான் ‘சார்ஜ்’ பண்ணப் போறதில்ல. குட் பை “, என்று பட்டென்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தேன். எனக்குத்தான் அம்மா இல்லை. நிழலில் இருக்கும் ராஜன், வெயிலில் இருக்கும் என் அளவிற்கு நிழலின் அருமையை உணர்ந்திருப்பாரா என்ன?!

நன்றி:

– அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டி 2005 ல் பிரசுரத்திற்கென்று
தேர்ந்தெடுக்கப்பட்டு 18-09-05 இதழில் பிரசுரமானது.

– கலைமகள் – அக்டோபர் 2005

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *