கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 161 
 
 

வீட்டை விட்டுக் கிளம்பும் போதே மகள் சொன்னாள், “இப்படி வேளை கெட்ட வேளையில், புறப்பட வேண்டாம். இன்று ராப்பொழுது தங்கிவிட்டு, காலையில் விடிந்ததும் போ… விடியாப்பொழுதா.. என்ன? வீட்டுல என்ன கைப்பிள்ளையையா விட்டுட்டு வந்திருக்க? என் வீட்டுக்காரரும், இப்ப வந்திருவார். அவர் வந்தபிறகு, போறதுதான் நல்லது” என்று.

இப்போது மணி எட்டுதான் ஆகிறது. இப்ப புறப்பட்டா, கால் மணி நேரத்தில், பஸ் ஸ்டாண்ட் போயிறலாம். அங்க இருந்து அஞ்சு நிமிசத்திற்கு ஒரு முறை திருநெல்வேலிக்குப் பஸ் இருக்கு. ஒன்பது ஒன்பதே காலுக்குத் திருநெல்வேலி போயிட்டா கடைசி பஸ்ஸைப் பிடித்து ஊர் போய்ச் சேர்ந்திருவேன். உம்புருசன், இப்பமும், தண்ணிய போட்டுக்கிட்டுத்தான் வருவாரு.. இதுவரை என்னைப் பேசிய பேச்சு காணாதா? எவனாவது அத்தைய “தேவடியா, பலவட்டர” என்று பேசுவானா..? எந்த மூஞ்சியை வச்சிக்கிட்டு, என்னைய இங்க இருக்கச் சொல்லுத? எங்காயாவது போய் செத்தாலும் சாவனே தவிர, இனிமேலும் நான் நொடிப்பொழுது கூட தாமதிக்க மாட்டேன். ஏதோ, நீ போன் பேசுனியே வரச் சொன்னியேன்னு வந்தேன்.. நீதான் உன் புருசக்காரனை கட்டிக் கிடந்து அழணும். தங்கமாத்தான் பேசுகிறார் மனுஷன், தண்ணிய வாயில ஊத்திக்கிட்டு வந்துட்டார்னா, என்ன பேசணும் ஏது பேசணும் எப்படிப் பேசனும்னு ஒரு கணக்கு வழக்கு இல்லாமப் பேசுகிறாரே, நான் என்ன செய்யட்டும். நான் என்னால இயன்ற மட்டும் கொடுத்து உதவிட்டேன்.

இப்ப நான் காத்துல போட்டிருக்கது கூட கவரிங் கம்மல்தான். தங்கக் கம்மலக் கூடக் கழற்றிக் கொடுத்தேன். அதைக்கூட வித்து மனுஷன் குடிச்சித் தீத்துட்டான். நீ, அவங்கூட இருந்து காலங் கழிக்கிறதா இருந்தாக் கழி. இல்லைன்னா, பேசாம பிள்ளையைத் “தூக்கிக்”கிட்டு வீடு வந்து சேர்ந்திரு. எது சௌகர்யமோ, உன் இஸ்டப்படி செய். நான் வேண்டாம்னு சொல்லலை. உன் புருசனைத் திருத்த முடியும்னு எனக்குத் தோணலை. உன்னை நினைச்சா, என் நெஞ்சே வெடிச்சிரும் போல இருக்கு. கண்ணாசை பார்த்துட்டேன். அது போதும், அஞ்சும் பத்துமா சேர்த்து வச்சிருந்ததைக் கொண்டு வந்த உன் கையில் கொடுத்தேன். உன் புருசக்காரர் அதையும் புடிங்கிட்டுக்கிட்டுப் போயி குடிச்சிட்டு வந்துட்டார். உங்கப்பனும் குடிகாரமட்டைதான் குடிச்சிக் குடிச்சிக் குடல் அந்துதான் மண்டையைப் போட்டார். ஆனா அவர் உம் புருஷனை மாதிரி முடாக்குடி, குடிக்க மாட்டார். குடிச்சாலும் இப்படி, தாறுமாறுமா பேசி அழிச்சாட்டியம் பண்ண மாட்டார். இருக்க, இடம் தெரியாம இருந்துக்கிருவார். எனக்கு நேரமாகிறது, நான் உங்கிட்டப் பேசிக்கிட்டே இருந்தா நேரமாயிரும். பஸ்ஸை விட்டிருவேன். உம் புருசன் வாரதுக்குள்ள நான், கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

நான் புறப்படும் போது, கசங்கிய ஒரு பத்து ரூபா நோட்டை என் கையில் திணித்தாள். அவள் கண்கள் கலங்கி இருந்தது. “என்ன செய்ய… அவள் தலை எழுத்து இப்படி ஆகிவிட்டது”, என்று நினைத்துக்கொண்டே, வீட்டு வாசல்படி இறங்கினேன்.

மருமகன் வந்து இன்னும் ஏதாவது பேசி மனக்கஷ்டப்படுவதற்குள் சென்று விடுவோம் என்று நினைத்து வேகமாக நடையைக் கட்டினேன். தெருமுனை பஸ் ஸ்டாப்பிற்குச் சென்றதும் டவுண் பஸ் கிடைத்தது. கூட்டம் அதிகம் இல்லை. பஸ்ஸில் ஏறி பெண்கள் பக்கம் காலியாக இருந்த இடத்தில் அமர்ந்து கொண்டேன். மனசு லேசான மாதிரி இருந்தது. பஸ், ஜன்னல் வழியாக வந்த காற்று முகத்தில் பட்டது குளுமையாக இருந்தது.

மகளிடம் அவ்வளவு தூரம் பேசி இருக்க வேண்டாமோ என்று பட்டது இப்போது. மகளிடம் வளவளவென்று பேசியதில் நேரமும் கடந்துவிட்டது. எப்படியாவது ஊர் போய்ச் சேர்ந்துவிட வேண்டும் என்ற வெறி மட்டும் மனதில் இருந்தது. தூத்துக்குடி பஸ் ஸ்டாண்ட் வந்ததும் தாமதமில்லாமல் திருநெல்வேலி போகிற பஸ்ஸும் கிடைத்தது. அது ஒரு எல்.எஸ்.எஸ் பஸ்தான் என்றும், ஒரு மணி நேரத்தில் திருநெல்வேலி போய்ச் சேர்ந்துவிடும் என்றும் கூறினார்கள். மனசுக்கு நிம்மதியாக இருந்தது. நான் ஏறி உக்கார்ந்ததும் டிரைவர் பஸ்ஸைக் கிளப்பி விட்டார். ஜன்னலோரமாக உள்ள இடத்தில் உக்காந்திருந்ததால் காற்று ‘ஜில்’ லென்று வந்து முகத்திலடித்தது.

பகலெல்லாம் அலைந்த களைப்பில் கண்களைச் சொக்கியது. முன் சீட்டுக் கம்பியில் கைகள் இரண்டையும், கட்டி வைத்துக் கொண்டு தலை சாய்த்தேன். மனதில் பலப்பல நினைவுகள் ஓடின…

சின்ன வயதிலேயே புருசனைப் பறிகொடுத்த பிறகு, ஒரு பெண் தன்னந்தனியாக வாழ்வது என்பது எவ்வளவு கசப்பானது என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். நல்லவனோ… கெட்டவனோ… இயன்றவனோ… இயலாதவனோ… புருசன் என்று ஒரு மனுஷன் துணையாக இருந்தால் அதன் மதிப்பே தனிதான். கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறு கிடக்கும் வரை, எந்த ஆம்பளையும் கை நீட்டி ஒரு சொல் சொல்லப் பயப்படத்தான் செய்கிறான்.

அவர் மண்டையை போடும்போது எனக்கு ஐம்பதைத் தாண்டிவிட்டது. பெண் பிள்ளைகள் இரண்டையும் கட்டிக் கொடுத்தாகிவிட்டது. காலமெல்லாம், காடு கரைகளுக்குச் சென்று உழைத்தால், உடம்பும், வத்தலும், தொத்தலுமாகிவிட்டது. கல்யாணமான புதிதில் ஆள் பார்க்க ஒரு மாதிரி அம்சமாகத்தான் இருந்தேன். அவருக்கு வாக்கப்பட்டதில் இருந்து உழைத்து உழைத்தே ஓடாய்த் தேய்ந்துவிட்டேன்.

ஆம்பளை துணை இல்லததால் எத்தனை கஸ்டங்கள். நான் மனம் திறந்து பேச ஆரம்பித்தால், எத்தனை ஆம்பிளைகளின் முகத்திரை கிழியும்? ஏன் இந்த ஆம்பளைகள் பொம்பளை மோகத்தில் அலைகிறார்கள்? எத்தனை முகச் சடவுகள்? எத்தனை ஆவலாதிகள்? ஆம்பளைகளின் வேட்டையில் இருந்து தப்பிக்க எத்தனை பொய்களைக் கூறி இருக்கிறேன். எப்படி எப்படி எல்லாம் ஆசை வார்த்தைகள் கூறிப் பெண்ணைப் பணிய வைக்க பார்க்கிறார்கள். அதற்கும் அவள் பணியவில்லை என்றால் எத்தனை உருட்டல்கள், மிரட்டல்கள் எப்படியோ அந்தக் கடவுள் புண்ணியத்தில் வேத்தாள் விரல் என் மேனியின் மேல் படாமல் இதுவரை காலங்கழித்தாயிற்று. இனிமேல் என்ன… அரைக் கிழவிமாகிவிட்டேன்.

திடீரென்று பஸ் தாறுமாறாகப் போவது போல் இருந்தது. பஸ்ஸில் இருந்தவர்கள் ‘ஐயோ… அம்மா’ என்று கூச்சல் போட்டார்கள். என்ன ஏது…? என்று விசாரிப்பதற்குள் பஸ் ஒரு பள்ளத்தில் போய் நின்றது. பஸ் நின்றதும் பஸ்ஸில் இருந்தவர்கள் முண்டியடித்துக் கொண்டு பஸ்ஸிலிருந்து கீழே இறங்கினார்கள். கீழே இறயங்கியவர்கள், ஒண்ணும் பயப்பட வேண்டாம், பஸ், எப்படியோ ரோட்டை விட்டுத் தடம் புரண்டு, ஒரு பள்ளத்தில் இறங்கிவிட்டது என்றாலும் டிரைவர் சாதூர்யமாகப் பிரேக்போட்டு, பஸ்ஸை நிறுத்திவிட்டார். ஆட்கள் யாருக்கும் சேதம் இல்லை, டிரைவர் உட்பட என்று ஆறுதலாகக் கூறினார்கள்.

ஒரு விபத்தை அனுபவித்ததில் நானும் குலுங்கிப் போனேன். எல்லோரும் பஸ்ஸை விட்டு இறங்கினோம். இனி, இந்த பஸ்ஸை, இப்போதைக்கு எடுக்க முடியாது, டிப்போவில் இருந்து, வண்டி வந்துதான் பார்க்கணும். வண்டியில் வந்தவர்களை, இனி வரும் வண்டியில், கொஞ்சங் கொஞ்சமாக ஏற்றி விடுகிறேன் என்றார் கண்டக்டர்.

எல்லாரும் கும்பலாக, ரோட்டிற்குச் சென்றார்கள். நானும் சென்றேன். நேரம் ஆக, ஆக எனக்குத் ‘திக் திக் கென்று அடித்தது. ஊருக்குப் போக கடைசி பஸ் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற பயத்தில் சிறிது நேரத்தில் மெயின் ரோட்டில் ஒரு பஸ் வந்தது. வந்த பஸ் நிறைய கூட்டம் இருந்தது என்றாலும், ரோட்டில் நின்ற ஆண்கள் அனைவரும் அந்த பஸ்ஸில் ஏறத் தயாரானார்கள். பஸ் நின்றதும். ஆண்கள்தான் அடித்துப் பிடித்துக்கொண்டு பஸ்ஸில் ஏறினார்கள். ‘இருட்டு நேரத்தில் காட்டு வெளியில் பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் எல்லாம் பயந்தபடி நிற்கிறார்களே…! என்ற கவலை எதுவும் அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை…!

கும்பலாக நின்றவர்களில் பத்துப் பதினைந்து பேருக்கு மேல் ஏற முடியாது என்று வந்த பஸ்ஸின் கண்டக்டர் சொல்லிவிட்டார். சிறிது நேரம் காத்திருந்த பிறகு, இன்னும் ஒரு பஸ் வந்தது. அதிலும் ஆண்களே… அடித்துப் பிடித்துக்கொண்டு ஏறினார்கள்… நேரம் செல்லச் செல்ல எனக்குப் பயமாக இருந்தது. வெகு நேரம் கழித்து மற்றொரு பஸ் வந்தது. பெண்கள் வேண்டிக்கொண்டதற்கு இணங்க, கண்டக்டர், அந்த பஸ்ஸில் எங்களை ஏற்றி அனுப்பினார்.

நின்று கொண்டுதான் பயணம் செய்ய வேண்டியதாயிற்று. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வந்ததும் ஒரு பெரியவரிடம் மணி என்ன என்று கேட்டேன். மணி பத்து என்று கூறினார். அவசர அவசரமாக பஸ்ஸை விட்டு இறங்கி, எங்கள் ஊருக்குப் போகிற பஸ் நிற்கும் இடத்திற்குச் சென்றேன். அங்கு நின்றவர்களிடம் மலையடிக்குறிச்சிக்குப் போகிற கடைசி பஸ் போய்விட்டதா என்று கேட்டேன். அவர்களில் பேண்டு, சட்டை போட்ட ஒரு பெரியவர், அந்த பஸ் டயம் ஒன்பதரைக்குத்தானே அந்த பஸ் போய் அரை மணி நேரமாகிவிட்டது என்று கூறினார்.

“மகள் வீட்டிலேயே இருந்துவிட்டு விடியற்காலம் வந்திருக்கலாமே, இப்ப என்ன செய்ய..? எங்கே… போக, இந்த பஸ் ஸ்டாண்டில் விடிய விடிய, குத்தவச்சிக்கிட்டு இருக்க முடியுமா…? என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, பேண்ட் சட்டை போட்ட பெரியவர், அதோ… அந்த பஸ், சேரன்மகாதேவி வழியாகத் தென்காசி போகுது. நீங்க அந்த பஸ்ஸில் சேரன்மகாதேவி போயிருங்க, அங்க இருந்து போக்கு வண்டியோ, வேனோ கிடைத்தால் ஊருக்குப் போயிரலாம் என்று யோசனை கூறினார்.

“அந்தப் பெரியவர் கூறுவதும் சரி என்றுபட்டது மனதிற்கு. சேரன்மகாதேவி போய்விட்டால் அங்கிருந்து ஊர்பக்கம் தான். ரொம்பப் பயம் தோத்தாது…” என்று நினைத்து புறப்படத் தயாராக நின்ற அந்த பஸ்ஸில் ஏறினேன். ராத்திரி வெகு நேரத்திற்குப் பிறகு புறப்படும் பஸ் என்பதால் அந்த பஸ்ஸில் கூட்டம் அதிகம் இல்லை, என்னையும் சேர்த்து மொத்தம் நான்கு பெண்கள்தான் இருந்தார்கள். ஆண்களும் பத்துப் பதினைந்துபேர்தான் இருந்தார்கள்.

மனது ‘திக், திக்’ கென்று அடித்துக்கொண்டுதான் இருந்தது.. இனி என்ன செய்ய…? எப்படியாவது ஊர்போய்ச் சேர்ந்திருவோம் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்.

சேரன்மகாதேவி பஸ்ஸ்டாண்டு வந்ததும், இறங்குங்கும்மா. ஊர் வந்துட்டு என்றார் கண்டக்டர். சேரன்மகாதேவி நான் அடிக்கடி வருகிற ஊர்தான். இங்கிருந்து நாலைந்து மைல்தான், எங்கள் ஊருக்கு பஸ்ஸை விட்டு இறங்கினேன். மெர்குரி விளக்குகளின் வெளிச்சம் வெள்ளியை உருக்கி ஊத்தியதைப் போன்றிருந்தது. கடைகளில் பெரும் பகுதியை அடைத்து விட்டார்கள். ஆளே இல்லாமல் பஸ் ஸ்டாண்டு வெறிச்சோடிக் கிடந்தது. தூரத்தில் ஒரு போலிஸ்காரர் யாரோடோ பேசிக் கொண்டிருந்தார். தன்னந்தனியா அந்த இடத்தில் நிற்பதற்குத் தயக்கமாக இருந்தது. இனி என்ன செய்ய…? தன்னந்தனியாக, தனி வழியாக நடந்து போகவும் முடியாது. இந்த பஸ் ஸ்டாண்டில் தங்கவும் முடியாது. வேறு துணைக்குத் தெரிந்த ஆளும் இல்லையே என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது டி.வி.எஸ் பிப்டியில் ஒரு இளம் வயது பையன், வந்து என் முன்னால் வண்டியை நிப்பாட்டினான். எக்கா.. உங்களுக்கு மலையடிக்குறிச்சிதான…! இந்த நேரத்துல இங்க எப்படி வந்தீங்க…? வெளியூருக்குப் போயிட்டு வாரீகளா…? எனக்கு பக்கத்தூருதான், மேட்டூருதான் போறேன், வேணா, வாங்க வண்டியில பின்னால ஏறிக்கங்க. நான் உங்களைக் கொண்டு போய் ஊரில் விட்ருதேன். என்னைத் தெரியலையா. நான், பால் வியாபாரி முருகன். எனக்கு உங்களை நல்லாத் தெரியுமே என்று மூச்சுவிடாமல் பேசினான்.

அவன் என்னைப் பதில் பேசவிடாமல், அவனே, தட, தட என்று பேசுகிறான். நம்மைத் தெரியும் என்று சொல்கிறான். நம் ஊர்ப் பெயரையும் சரியாகச் சொல்கிறான். சிறு பையனாக இருக்கிறான். நல்லா இருந்தா அவனுக்குப் பதினெட்டு, இருபது வயதுதான் இருக்கும். என் புள்ளை வயசுதான் அவனுக்கு இருக்கும். இங்கே, இடம் தெரியாத இடத்தில் நின்று கொண்டிருப்பதைவிட, முகம் தெரிந்த இந்த பையனுடன் ஊர் போய்ச் சேர்ந்திரலாம் என்று நினைத்தேன்.

‘தம்பி இருட்டு வேளை பையப் போகணும்’ என்று கூறிக்கொண்டே அந்தப் பையனின் டி.வி.எஸ்.பிப்டி வண்டியின் பின்னால் ஏறிக்கொண்டேன். வண்டி புறப்பட்டது. ஊரைத் தாண்டிப் போனதும், நான்தான் அவனிடம் தம்பி உன் பெயர் என்ன? என்று பயம் தோன்றாமல் இருக்க கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே வந்தேன். அந்தப் பையனும் நான் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் கூறிக்கொண்டே வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றான். இருட்டு ‘கொய்’ என்றிருந்தது. இருட்டுப்பூச்சிகள் ‘உய்’ யென்று சத்தமிட்டுக் கொண்டிருந்தன.

ஊருக்குப் போகிற தார் ரோட்டை விட்டு வண்டியை ஒரு ஓத்தையடிப் பாதையோரமாகத் திருப்பினான். ஏன் தம்பி இந்தப் பாதை வழியா போற. நேரே தார் ரோடு வழியாப் போகவேண்டியதுதானே! என்று கேட்டேன்.

‘யக்கா அது சுத்துப்பாதை, நான் குறுக்குப்பாதை வழியாப் போகிறேன்’ என்று சொல்லிவிட்டு ஒத்தயடிப்பாதை வழியாகவே வண்டியயை ஓட்டினான். அப்பதான் எனக்குச் சந்தேகம் வந்தது.

தம்பி, நேரே தார் ரோடு வழியாப் போ.. இல்லைன்னா நான் இறங்கிக்கிடுதேன் என்றேன். எங்கே நான் வண்டியிலிருந்து குதித்துவிடுவேனோ.. என்ற பயத்தில், வண்டியின் வேகத்தைக் குறைத்து வண்டியை நிப்பாட்டினான்.

வண்டி நின்றதும் நான் வண்டியில் இருந்து கீழே இறங்கினேன். ‘ஏன் தம்பி வண்டியை நிறுத்திட்டே’ என்று கேட்டேன் குழப்பத்துடன். ‘வண்டியில ஏதோ கோளாறு, அதான் வண்டிய நிறுத்திட்டேன். இருங்க இப்ப, கொஞ்ச நேரத்துல சரி பண்ணிருவேன் என்றவன் வண்டியை ஸ்டாண்டு போட்டுவிட்டு, என்னருகில் வந்து எதிர்பாராத விதமாக என் சேலையைப் பிடித்தான்.

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. பச்சப்புள்ளை மாதிரி இருந்தான், முகத்தில் பால் வடிவது போல் இருந்தது. தனிமையில், இருட்டில் தாய் வயதுள்ள ஒரு பெண்ணிடமே இப்படி நடந்துகொள்கிறானே! என்று நினைத்த என்னால் நடக்க இருக்கிற விபரீதத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது.

நான், “சீ… பாவி …. நீ …. மனுசனா…. விடுடா என் சேலையை” என்று இழுத்தேன். சாண்பிள்ளை என்றாலும் ஆண் பிள்ளை என்று சொன்னது சரியாகத்தான் இருந்தது. அவன் கைகளால் சேலையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு இழுத்ததும், என் சேலை குலைந்துவிட்டது. சேலையின் மறுநுனியைப் பிடித்துக்கொண்டு, பாவிப்பயலே, சண்டாளா… நீ நல்லா இருப்பியா.. நம்பி வந்தவளை இப்படிக் கழுத்தறுக்கலாமா?” என்ற கூறி கத்தினேன். அவன் ‘வெட்’ டென்று இழுத்ததில், சேலை நுனியையும் விட்டுவிட்டேன். சேலையை உறுவியவன் அடுத்து என் மேல் பாய ஆயத்தமானான்.

“இனியும் இந்த இடத்தில் நிற்கக்கூடாது” என்று நினைத்தவள், திக்கு திசை தெரியாமல் ஓடத் துவங்கினேன். அவன் என் பின்னாலேயே ஓடிவரும் காலடிச்சத்தம் கேட்டது. முள்ளுமுடை என்று பார்க்காமல் நான் ஓடிப்போய் ஒரு மரத்தடியில் நின்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கத் திரும்பிப் பார்த்தேன். அவனைக் காணவில்லை. மனித காலடிச் சத்தமும் கேட்கவில்லை. இப்போது நேரம் நடூச் சாமம் இருக்கும் என்று உத்தேசமாக நினைத்துக் கொண்டேன். நெஞ்சு ‘திக் திக்’ என்று அடித்துக்கொண்டுதான் இருந்தது.

உடம்பெல்லாம் வேர்த்துக் கொட்டியது. கால்கள் ரெண்டும் நடுங்க ஆரம்பித்தது. தாகமாக இருந்தது, நாக்கு வரண்டுவிட்டது. காலில் குத்திய முட்கள் இப்போது தான் வலிக்கத் தொடங்கியது. நான் பதுங்கி இருந்தது ஒரு பெரிய பூவரச மரம் என்பது மரத்தின் வாசனையிலிருந்து அறிய முடிந்தது.

மரத்தடிக்கு வந்து பத்துப் பதினைந்து நிமிடமாகிவிட்டது. அவனைக் காணவில்லை. சண்டாளப் பாவியைக் காணவில்லை. எப்படியோ அந்த காளியாத்தா புண்ணியத்தில் இன்று மானத்தைக் காப்பாற்றினோம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதுதான், உடுத்தி இருந்த உள் பாவாடை, ஓடி வந்த வேகத்தில் கிழிந்திருப்பதும், போட்டிருந்து சட்டையிலும் முள், இழுத்து நாலைந்து இடத்தில் கிழிந்திருப்பதும், தெரியவந்தது. “அட.. கடவுளே… முக்கால் நிர்வாண கோலத்தில் நிற்கிறோமே, இந்தக் கோலத்துடன் எப்படி வெளியே வர” என்று நினைத்த போது என் கண்களில் கண்ணீர் முட்டியது.

அந்த மரத்தடியிலேயே அப்படியே குத்துக்காலிட்டு, கிழிந்த பாவாடையுடனும், கிழிந்த சட்டையுடனும் உக்கார்ந்து விட்டேன். எவ்வளவு நேரம்தான் இப்படியே இருந்துவிட முடியும். விடிவதற்குள் ஏதாவது ஒரு வழி செய்ய வேண்டும். விடிய, விடிய, இப்படியே உக்கார்ந்து இருந்தாலும், விடிந்தபிறகு, இந்தக் கோலத்தில் வெளியே இறங்கி நடக்கவும் முடியாது. என்னடா.. செய்ய… என்று நினைத்துக் கொண்டு மெல்ல எழுந்து சுத்தும் முத்தும் பார்த்தேன். வானத்தில் இப்போதுதான் நிலவு உதித்திருந்தது. தேய்பிறைக் காலமாக இருக்க வேண்டும் அது.

நிலவின் மங்கிய வெளிச்சத்தில் சற்று தொலைவில் ஒரு ஓத்தையடிப் பாதை போல தெரிந்தது. விதிப்படி நடக்கட்டும் என்று நினைத்து அந்தப் பாதையை நோக்கி நடக்க அடியெடுத்து வைத்த போதுதான், கால் பாதங்களில் முட்கள் குத்திய வேதனை தெரிய வந்தது.

“காளியாத்த.. நீதான் காப்பாத்த வேண்டும்” என்று நினைத்துக் கொண்டு பற்களைக் கடித்துக் கொண்டு மெல்ல, மெல்ல முன் பாதத்தை மட்டும் ஊன்றி அடி மேல் அடியெடுத்து வைத்துப் பாதையை அடைந்தேன்.

பாதையில் சிறிது தூரம் சென்றதும், ஒரு பனைமரத்தைப் பார்த்தேன். முதலில் பனைமரத்தடியில் யாரோ ஒரு பெண்தான் நிற்கிறாள் என்று நினைத்தேன். அது நம்ம காளியாத்தாகத்தாவாக.. இருக்கக்கூடாதா? என்று மனம் ஏங்கியது. பனை மரத்திற்குள் இருந்து ஒரு பெண்ணின் குரல் பேசியது, “மகளே.. பயப்படாதே.. வா.. உன் மானம் காக்கத்தான் நான் சேலை உடுத்தி இருக்கிறேன். என் சேலையை அவிழ்த்து எடுத்துக்கொள். உன் மானத்தைக் காத்துக்கொள்” என்றது.

நான் அருகில் சென்று பார்த்தேன். குரல் கொடுத்த பெண்ணைக் காணவில்லை. ஒத்தைப்பனை மரம்தான், ஒரு முழுச் சேலையை உடுத்தியபடி ஓங்கி வளர்ந்து நின்றது. ஒருமுறை அந்த பனை மரத்தின் முன்னால், சாஸ்டாங்கமாக விழுந்து கும்பிட்டுவிட்டு, பனை மரத்தில் கட்டப்பட்டிருந்த பட்டுச் சேலையை அவிழ்த்து எடுத்து நான் உடுத்திக்கொண்டேன்.

பாஞ்சாலியின் சேலையை பாவி துச்சாதனார் உருவியபோது கிருஷ்ணர்.. பாஞ்சாலியின் மானத்தைக் காக்க சேலையை வளர்த்து போல், ஒரு பாவி, என் சேலையை உரிந்து என் மானத்தைக் கெடுக்க முயன்றான். இந்த காளியாத்தாள், எனக்குச் சேலை கொடுத்து என் மானத்தைக் காத்துவிட்டாள் என்று நினைத்துக்கொண்டு தூரத்தில் தெரிந்து தார்ரோட்டைப் பார்த்து நடக்க ஆரம்பித்தேன்.

– ஜூலை 2013

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *