கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: June 14, 2024
பார்வையிட்டோர்: 2,921 
 
 

(பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்.)

முன்னுரை

வரப்புயர நீருயர, நீருயர நெல்லுயர, நெல்லுயரக் குடியுயர என்று ஒரு நாட்டின் மேன்மைக்கு அச்சாணியாக உள்ள தொழில் விவசாயமே என்ற குறிப்பைத் தமிழ் மூதாட்டி அவ்வை அழகாக உணர்த்தியுள்ளார். விவசாயம் என்ற சொல்லே பொதுவாகத் ‘தொழில்’ என்றே பொருள்படுவதாக இருந்தாலும், தமிழுக்கு அது வரும்போது உழவுசெய்து பயிரிடும் தலையாய தொழிலையே குறிப்பிடும் முழுமையைப் பெற்றிருக்கிறது. ‘சுழன்று மேர்ப்பின்ன துலகம்’ என்றும் ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ என்றும் வள்ளுவர் இத்தொழிலின் புகழை இசைக்கிறார். ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்று இந்நாள் நூற்றாண்டு விழாவுக்குரிய புதுயுகக் கவிஞன் பாரதி போற்றினான். ‘நாங்கள் சேற்றிலே கால் வைத்தால் தான் நீங்கள் சோற்றிலே கை வைக்க முடியும்’ என்று கவிஜோதி அவர்களின் புதுக்கவிதைத் துணுக்கும் முழக்குகிறது.

இவ்வாறெல்லாம் கவிஞர்களால் புகழப்பட்டிருக்கும் உழவுத் தொழிலைச் செய்பவரை நாயகர்களாக்க வேண்டும் என்ற வெகுநாளைய ஆவலே இப்புதினம் உருவாகக் காரணமாக இருந்தது.

பயிர்த்தொழில் செய்யும் மக்களைப் பற்றியும், அவர்கள் உதிரம் தேய்த்து உழைப்பைக் கொடுக்கும் களங்களையும், அவர்களையும் ஒருங்கே உடமையாக்கிக் கொண்ட மேற்குலத்தாரான ஆண்டைகள் குறித்தும் எனது சொந்த வாழ்வில் நேரிடையான பரிச்சயங்களுக்கும் தொடர்புகளுக்கும் வாய்ப்புக்கள் இல்லையெனினும், சின்னஞ்சிறு பிராயத்திலேயே இவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டுவிட்டேன். நந்தன் சரித்திரத்தை எங்கள் சிற்றூரில் பல கதாகாலட்சேப பாகவதர்கள் விரித்துரைக்கும் சந்தர்ப்பங்களில் ஒன்றைக்கூட நான் நழுவவிட்டதில்லை. முன் வரிசைப் பொட்டு பொடிகளிடையே நானும் ஒருத்தியாய் முழுசும் தூங்காமல் விழித்திருந்து, பாகவதர் பாடும் பாடல்களில் சொக்கி இருந்ததுண்டு. வேதியருக்கும், உழவு செய்ய வேண்டிய சேரி நந்தனுக்கும் இடையே ஏற்படும் ரசமான விவாதங்களை, நொண்டிச் சிந்தில் அமைந்த எளிய பாடல்களைத் திருப்பித் திருப்பிச் சொல்லிப் பார்த்துக் கொண்டதுண்டு.

நண்டைப் புசித்துக் கள்ளைக் குடித்துக் கொண்டே காட்டேறி வீரனுக்குப் பூசைபோடும் மக்களே சேரியில் வாழ்பவர். இவர்களே சேற்றிலே உழைப்பவர்கள். இவர்களில் நந்தன் மேற்குளச் சாமியைப் பூசிக்கிறான். ‘ஒன்றே குலம். ஒருவனே தேவன். சுவாமி ஒருவரே. பல பேரிட்டு அழைக்கிறோம்’ என்ற வாசகங்கள் அந்நாளில் என் போன்ற சிறுவர்களுக்கு மனதில் பதியும் வண்ணம் பாடமாய் அமைந்திருந்தன. ‘சாமிகளிலும் மேற்குலம் கீழ்க்குலம் என்ற பாகுபாடுகள் உண்டு’ என்ற மாதிரியிலான முரண்பட்ட உண்மைகள் அப்போது என்னைக் கவர்ந்ததுண்டு. அந்தப் பருவத்தில் அதற்கு மேற்பட்ட சிந்தனைகள் வளர வாய்ப்புகள் ஏதுமில்லை. கோபால கிருஷ்ண பாரதியாரின் நந்தன் சரித்திரம், இவ்வகையில் மிகவும் ஆற்றல் வாய்ந்த வகையில் சமுதாய உணர்வைப் பளிச்சிட்டுக் காட்டுகிறது எனலாம்.

இந்துமத சமுதாயம் என்று பொதுவாக எடுத்துக் கொண்டால், நான்கு வருணப் பாகுபாடு, வாழ்க்கை முறையில் வேரூன்றிவிட்டதை மறுப்பதற்கில்லை. இந்த நால்வருண அமைப்புக்கு அப்பாற் பட்டவர்களையே பஞ்சமர் – ஐந்தாவது படியில் உள்ளவர்கள் அல்லது மிகத் தாழ்ந்தவர்கள் என்றும், அடிமைகளாகக் கொள்ளப்படுபவர்கள் என்றும் தீர்ந்திருக்கிறது. நான்கு வருணங்களுக்குள் வராமல், வெளிநாட்டிலிருந்து வந்த இனத்தாரைப் பஞ்சமர் என்று ஐந்தாம் வருணத்தவராக மறந்தும் குறிப்பிடுவதில்லை. ஏன்? அவர்களுடைய வெள்ளைத்தோல், அவர்களை ஆளும் தகுதிக்குரியதாக நம்மை ஒப்புக் கொள்ளச் செய்திருக்கிறது!

எனவே நால்வகை வருணங்களுக்கு அப்பாலும் தாழ்த்தப்பட்டு, மேற்குலத்தோரின் அடிமைகளாய், சேற்றில் உழன்று தலையாய தொழிலுக்குரிய உழைப்பை நல்குவதற்கே பிறவி எடுத்திருப்பதாகக் கருதச் செய்வது நியாயமாக்கப்பட்டு வந்திருக்கிறது. கரும பயன் – அல்லது முன்வினை என்ற தத்துவங்கள், இத்தகைய அடிமை ஆண்டான் நியாயங்களுக்காகவே நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன என்றும் கொள்ளலாம்.

அந்த நியாயங்களால் உறுதிபெற்ற ‘சண்டாள – தருமங்களை’ எந்த மனீஷா பஞ்சகங்களும் அசைத்து விடவில்லை. ‘அரிசனங்கள்’ என்ற பெயர் மாற்றமும் சமுதாயப் புரட்சியைச் சாதித்து விடவில்லை. அவர்களை உயர் சாதிக் கோயில்களில் நுழையச் செய்தும், பார்ப்பனர் குடியிருப்புக்களில் உரிமை கோரச் செய்து சட்டங்கள் இயற்றியும் சலசலப்புக்களைத் தோற்றுவித்திருக்கிறோம். ‘ஏழை என்றும் அடிமை என்றும் இந்தியாவில் இல்லையே’ என்று சமத்துவம் சட்ட பூர்வமாக்கப்பட்டிருக்கிறது. கல்விச் சலுகை, வேலைச் சலுகைகளின் ஒதுக்கீடுகள், சாதிப் பிரிவற்ற ஒரே சமுதாயம் என்ற இலட்சியத்தைக் குறிப்பாக்கியே நிலைநிறுத்தப் பெற்றிருக்கின்றன.

நந்தன் காலத்திலிருந்து பார்த்தால், இன்று வரை, அரசியல், சமுதாய, அறிவியல், பொருளாதார அரங்குகளில் புதிய புதிய ஒளிகள் பிறந்திருப்பது தெரிய வருகின்றது. எனவே, தலையாய உழைப்பை வழங்குபவர்கள் இந்நாளில் எப்படி இருக்கின்றனர் என்றறியும் அவா என்னுள் குடைந்து கொண்டே இருந்தது. சாதியற்ற சமுதாயம் என்ற இலக்கைக் குறியாக்கி வழங்கப்பெறும் சலுகைகள், ஒதுக்கீடுகள், பின் தங்கிய வகுப்பினரை இந்த முப்பத்து நான்காண்டுகளில் துடைத்தெறியாமல், பட்டியலாக நீட்டிக் கொண்டு சென்றிருப்பதன் உண்மையும் உறுத்திக் கொண்டே, இருந்தது.

எனவே, இந்த முயற்சியை மேற்கொள்ளத் துணிந்தேன்.

முதலில் உயிர்க்குலம் வாழத் தொழில் செய்த மனித வரலாற்றிலிருந்து சில ஏடுகளைப் பார்க்கலாம்.

காட்டுமிராண்டியாகப் பச்சை யூனைப் புசித்து உயிர் வாழ்ந்த மனிதன், பூமித்தாயின் வன்மையைப் பயிர்த்தொழிலால் பெற்று உயிர் வாழலாம் என்று நாகரிகமடைந்த பிறகு, ஓரிடத்தில் தங்கி வாழலாம் என்று குழுக்களாக இணைந்து வாழத் தொடங்கிய பிறகு, ‘நில உடமை’ என்ற நில ஆதிக்கமே ஆதி மனிதர்களிடையே உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற வேற்றுமையைத் தோற்றுவித்திருக்கிறது. இதுவே பெண்ணடிமைக்கும் வழி வகுத்திருக்கிறது. இந்த அடிப்படையிலேயே இந்நாள் மனித சமுதாயத்தைக் கூறுபோடும் எல்லாப் பிளவுகளுமே வலுப்பெற்று வந்திருக்கின்றன என்பது கண்கூடு.

நமது அனைத்துச் சீர்திருத்தங்களும், முற்போக்குச் சட்டங்களும், இந்த அடித்தள உண்மையைத் தீண்டியிராததால், மேற்போக்காகவே பயனற்றுப் போயிருக்கின்றன. உடைமை பாராட்டுபவர் உழைப்பிலிருந்து விடுபட்டு, பிறர் உழைப்பை உரிமையாக்கிக் கொள்ளும் நியாயத்தைத் தோற்றுவிக்கிறார். இந்த வகையில் எந்தக் கட்டுப்பாடும் செய்யாமல் சீர்திருத்த முயற்சிகள் பயனளிக்காது என்ற உண்மையையே அன்றாட நடப்புக்கள் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன. உடமைகளையும் உரிமைகளையும் ஒரு சாராருக்கு நியாயங்களாக்கும் கலாசாரம், சமயம், அரசியல் எல்லாம் வலிமை படைத்திருக்கும் போது சட்டங்களும் ஒதுக்கீடுகளும் மற்றும் வளர்ச்சித் திட்டங்களும் பலனளிக்காத கண் துடைப்பாகவே முடிந்து விடுகின்றன. எழுச்சிகளும் போராட்டங்களும் கூட இந்தப் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்குச் சாதகமல்லாத எதிர்வினைகளைத் தோற்றுவிக்கின்றன என்றால் தவறில்லை.

இந்தப் புதினத்தை உருவாக்க, நான் கீழ்த் தஞ்சைப் பகுதிகளில் பல சிற்றூர்களில் வாழும் அடித்தள மக்களின் வாழ்வை அருகிருந்து உணர்ந்தேன். பாரதம் அரசியல் விடுதலை பெறுமுன்பு, இப்பகுதி மக்களிடையே, சமுதாய விடுதலை, ஏற்றத்தாழ்வில்லாத சமத்துவம், பொருளாதார மேன்மை ஆகியவற்றைக் குறிப்பாக்கிக் கிளர்ச்சிக்கு வித்திடப்பட்டது. ஆனால் வெறும் அரசியல் விடுதலை, முன்பு குறிப்பிட்ட வகையில் ஆழ்ந்த குறிக்கோள்களைக் கொண்டிராததனால் இம்மக்களின் உண்மையான முன்னேற்றம் மலர்ந்து விடவில்லை. உயிர் வாழ இன்றியமையாததான நீருக்கும் உணவுக்குமே தட்டுப்பாடாகவும் போராட்டமாகவும் பிரச்னைகளாகவும் தொடர்ந்து, குடியரசு உரிமையில் எழுச்சிகளுக்கான வாய்ப்புக்களைக் காட்டிலும் ஆதிக்கங்களுக்கான உரிமைகளும் வாய்ப்புக்களுமே வலிமை பெற்று வந்திருக்கின்றன.

உழைப்பாற்றல் மனித வாழ்வில் தலைசிறந்ததென்று மதிக்கப்பெறாத வரையில், கௌரவிக்கப் பெறாத வரையில், சமத்துவம் ஏறக்குறையக் கூடச் சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது. அதீதமான உடமை உரிமைகள் சந்து பொந்துகளுக்கு இடமின்றித் தவிர்க்கப்பட வேண்டும்.

இந்தப் புதினத்தை நான் உருவாக்கிய காலத்தில் ‘சமுதாய மனச்சாட்சி’ என்ற ஒன்றைத் தேடிய காலமாக இருந்தது என்று கூடச் சொல்லலாம்.

காவிரித்தாய் தன் கரங்களால் மண் அன்னையைத் தழுவிப் பிரியாவிடை கொள்ளும் இப்பிரதேசத்தில் அவள் வன்மையைக் கொட்டிவிட்டுச் செல்கிறாள். தனது மக்கட்செல்வங்கள் அனைவரும் வளமையுடன் வாழவேண்டும் என்ற அந்த இயற்கைத் தாயின் நியாயங்களை மனிதர் மதித்திருக்கவில்லை. தம்மினத்தவரையே மனிதர் அற்பங்களாக்கத் தலைப்படும் போது பிரச்னைகள் ஒவ்வொரு நாளும் அமைதி குலைக்கின்றன. சேற்றிலும் வரப்பிலும், விரிந்த நீர்க்கரைகளிலும் வானுலகைச் சிருஷ்டிக்கும் மனிதர்கள், இன்னமும் மிடிமைகளில் அழுந்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்த மனிதர்களை நான் சந்தித்து, அவர்களுடன் மனமொன்றிப் பழகும் வாய்ப்பைத் தர, எனக்குப் பல நண்பர்கள் ஆதரவளித்து உதவி புரிந்திருக்கின்றனர். அவர்கள் இருவரை மிக முக்கியமாகக் குறிப்பிடக் கடமைப்பட்டுள்ளேன். எனக்குப் பழக்கமில்லாத சேற்றிலும், வயல் வரப்புக்களிலும், இம்மக்கள் குடியிருப்புக்களிலும், என்னுடன் துணையாக வந்தும், வேறு வகைகளில் ஆதரவளித்தும் திருமதிகள் மீனாட்சி சுந்தரத்தம்மாளும் ஏனங்குடி இராஜலட்சுமியும் எனக்குப் பேருதவிகள் புரிந்திருக்கின்றனர். ஒரு வாழ்வை நுணுகி அறிவதற்கு இத்தகைய நேர் அநுபவங்கள் இன்றியமையாதவை அன்றோ?

எனக்குப் பல செய்திகளை ஆர்வத்துடன் கூறி உதவிய பலதரப்பட்ட சோதரர்களுக்கும் சோதரிகளுக்கும் எனது நன்றியைப் புலப்படுத்திக் கொள்கிறேன்.

எனது ஒவ்வொரு புதிய முயற்சிக்கும் ஊக்கத்தையும் ஆதரவையும் அளித்து வரும் பாரி புத்தகப் பண்ணையாரே, இந்த நூலையும் கொண்டு வருகிறார்கள். நூல் வடிவில் கொண்டு வரும் போது ஏற்படும் சிரமங்களைப் பொருட்படுத்தாமல் முனைந்து நிறைவேற்றித் தரும் பாரி புத்தகப் பண்ணை, திரு. கண. முத்தையா அவர்களுக்கும், இளவல் கண்ணன் அவர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, தமிழ் வாசகரிடையே இந்நூலை வைக்கிறேன்.

– ராஜம் கிருஷ்ணன்.


அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

வரப்புயர… குடியுயர…

அத்தியாயம்-1

சொட் சொட்டென்று முற்றத்தில் சாண நீர் விழும் ஓசைதான் சம்முகத்தைத் துயிலெழுப்புகிறது. திக்கென்ற உணர்வுடன் கண் விழித்ததும் தன்னையுமறியாமல் கை குதிகால் புறத்தைத் தடவுகிறது. இரவெல்லாம் விண் விண்ணென்ற குத்துவலி. விடிந்தால் நடக்க முடியுமா என்ற கவலையிலேயே தூக்கம் பிடிக்கவில்லை. இப்போது அவ்வளவாக வலி தெரியவில்லை போலிருக்கிறது.

“எந்திரிச்சிட்டீங்களா? ராவெல்லாம் தூங்கவேயில்ல, இன்னிக்கு எப்படி ஐயா உன்னைக் கூட்டிட்டுப் போவாரு. நீ வாணா அண்ணனைக் கூட்டிட்டுப் போன்னு இப்பதா காந்திகிட்டச் சொன்னேன்…”

“அவன் வீட்டில இருக்கிறானா? ரா எப்ப வந்தான்?”

லட்சுமியின் முகம் சுருங்குகிறது. “எங்கே போயிருப்பான்? சினிமாக்குப் போயிட்டு டைலர் கடயில படுத்திருப்பான். கூட்டனுப்பிச்சா வாரான்.”

“அதெல்லாம் யாரையும் கூட்டனுப்ப வாணாம். சுடு தண்ணி வையி. கொஞ்சம் ஒத்தடம் போட்டுக்கிட்டு மெள்ளமா நடந்திடறேன். கடவீதில ஏழு மணிக்குத்தான் பஸ்ஸு வருது?”

லட்சுமி கைச்சின்மியை எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் செல்கிறாள்.

பொழுது இன்னும் நன்றாக வெளுக்கவில்லை.

காந்தி அதற்குள் எழுந்து குளித்துவிட்டாள் போலிருக்கிறது.

முகப்பவுடர் வாசனை வருகிறது.

சம்முகம் எழுந்து படுக்கையில் உட்காருகிறார்.

“காந்தி?…”

“என்னப்பா!…”

விரிந்த கூந்தலும் சீப்பும் கையுமாக வெடவெட என்று உயரமாக வரும் அவளைப் பெருமையுடன் அந்த மங்கிய வெளிச்சத்தில் பார்க்கிறார். “சர்ட்டிபிகேட், இண்டர்வ்யூ கடிதாசி எல்லாம் பத்திரமா எடுத்து வச்சிருக்கியாம்மா?”

“ராத்திரியே எடுத்து வச்சிட்டேம்பா…”

“இன்டர்வ்யூ பதினோரு மணிக்குத்தானம்மா?”

“ஆமாம்பா…”

லட்சுமி முட்சுள்ளியை வைத்து அடுப்பில் எரியவிட்டு ஒரு பல்லாயில் ஆவி பறக்கும் சுடு நீரைக் கொண்டு வந்து வைக்கிறாள்.

விளக்கொளியில் காலை நீட்டிப் பார்க்கிறாள். சிவந்து வீங்கி, முகம் முனைப்பு இல்லாமல் இருக்கிறது.

“முள்ளுகிள்ளு குத்திச்சா?…”

“ஒண்ணுந் தெரியல. இன்னிக்கும் நடவுக்கு வாரதுக்கில்ல. இந்தக் காயிதம் ஒரு நாலு நா முன்ன வந்திரிந்திச்சின்னா எல்லாம் ஒழுங்கு பண்ணிக்கலாம்…”

“நாலு நா முன்னவே வந்திருக்கணும். கடித எண் தேதி மூணாந்தேதி. இங்க பதினொண்ணாந்தேதி நமக்குக் கிடச்சிருக்கு. இது இன்னிக்கித் தபால்ல வந்திருந்திச்சின்னாக் கூட ஒண்ணும் புண்ணியமில்ல…”

“நேத்துதா நா புதுக்குடில நம்ம தங்கசாமிட்ட சொல்லிட்டிருந்தேன். நம்ம பொண்ணு கூடத்தான் தொழிற்கல்வி வேணும்னு புதுசா அப்ளிகேசன் போட்டிருக்கு. அதும் எஸ்.எஸ்.எல்.ஸி. படிச்சிட்டு மூணு வருசமா வேலை கிடைக்காம இருக்கு. கணக்குல, அறிவியல்ல, எல்லாம் நல்ல மார்க்கு. உடனே மேல படிக்க வைக்கணும்னு, குடும்பத்தில பையனைப் படிக்க வச்சி இவளையும் அப்ப முடியாம நிறுத்தி வச்சிட்டிருந்தேன். அப்ளிகேசன் போட்டு ஒரு மாசமாகுது. ஒரு தகவலும் தெரியலன்னு சொல்லிட்டிருந்தேன். ராத்திரி வந்தப்புறம் தான் தெரியுது, இங்க தபால் வந்த சங்கதி…

லட்சுமி ஒரு துணியைச் சுடுநீரில் நனைத்துக் காலில் ஒத்தடம் கொடுக்கிறாள்.

“அடுப்பில பானைய வச்சி இட்டிலி மாவை எடுத்து ஊத்தி வை. பையில கட்டி எடுத்திட்டுப் போனா, புட்டுப் போட்டுக்கலாம். நேத்து இதுக்காகவே விளக்கு வச்சி மாவாட்டினேன்.”

“போம்மா கட்டிட்டெல்லாம் போக வாணாம்! இங்கியே ரெண்டு தின்னிட்டுப் போகலாம்…”

“பெரி… நாஜுக்கு. தூக்குப் பாத்திரத்தில போட்டு வயர் பையில வச்சிட்டுப் போனா என்னவாம்? கிளப்பிலே போனா காசுதா செலவழியும் வீணா.”

“நா ஒண்ணும் வயர்பையெல்லாம் கொண்டிட்டுப் போகப் போறதில்ல!”

சம்முகம் உள்ளூரப் பூரிக்கிறார்.

தாழ்த்தப்பட்ட குலம் என்பதை அவர் தலைமுறையில் எழுச்சியுள்ளதாக்க முனைந்தார்கள். இப்போது அவர் மகள் தொழிற்கல்வி பயிலப் போகிறாள். சேற்றில் உழன்று நாற்று நடும் பின்புலத்தில் இவள் ஒரு தாமரையாக மலரப் போகிறாள்.

“இப்பல்லாம் எலக்ட்ரானிக்ஸ் தாம்ப்பா எல்லாம். அதுக்குத்தான் நல்ல ஸ்கோப். நான் அதையே எடுக்கறதுதான் நல்லதுன்னு, என் ஃப்ரண்ட் சுந்தரி அப்பா கூடச் சொன்னாரு” என்று முகம் ஒளிர நின்றாள்.

இவளுக்கு இந்தப் பள்ளர் குடியில் சிநேகிதர்களில்லை. ரங்கநாதபுரத்திலும், அம்மங் கோயிலிலும் உயர் வகுப்பாரிடையே சிநேகிதிகள்.

அம்சு வாசலுக்குச் சாணம் தெளித்துப் பெருக்கிக் கோலமிட்டுக் கொல்லை சுத்தம் செய்யப் போகிறாள்.

அவர் மெல்ல எழுந்து பின்புறம் ஆற்றுக் கரையோரம் சென்று வருகிறார். பொழுது மைகரைந்த தெளிவாகப் புலர்ந்து விட்டது.

அம்சு தண்ணீர் கொண்டு வந்து தொட்டியை நிரப்புகிறாள். இவள் காந்தியை விட குட்டை. ஆறாவதுக்கு மேல் படிக்கவில்லை. சடங்கு சுற்றி நான்காண்டுகளானாலும் குழந்தைத்தனம் மாறாத பேதமை குடிகொண்ட முகம்.

பின் தாழ்வாரத்தில் இருந்த கோழிக் கூண்டைத் தூக்கி வைத்து பெட்டையையும் ஆறு நோஞ்சான் குஞ்சுகளையும் விடுதலை செய்கிறாள். வெளி முற்றத்தில் மூங்கிற் படலைத் தடுப்புக்குள் அவரை, புடல் விதைத்துக் கொடி வீச எழும்பியிருக்கிறது. முளைக்கீரைப் பாத்தி ஒருபுறம் பசுமையாக இருக்கிறது. கோழியைப் படலைக்கு அப்பால் விரட்டி விட்டு அவள் இன்னொரு புறம் நிற்கும் மரத்துப் போன பசுவை அவிழ்த்து வேறு முனையில் கட்டுகிறாள்.

அப்போது ஆற்றின் கரை மேட்டோடு கையில் உணவுத் தூக்குகளுடன் பெண்கள் நடவுக்குப் போகிறார்கள்.

“அம்சு!…” என்று ஒருத்தி கூவுகிறாள்.

“ஒங்க பங்குல நடவா இன்னிக்கி?”

“தெரில… சாம்பாரு வந்திருப்பாரில்ல?”

“இல்லியே? ஐயனார் கொளத்துல நேத்தே துட்டிக்குப் போயிருக்காவன்னு செவத்தையஞ் சொன்னா?”

பல் துலக்கிக் கொண்டிருந்த சம்முகம் திரும்பிப் பார்க்கிறார்.

“ஆரு…? சாலாச்சியா? என்னம்மா? ஐயனார் கொளத்துல ஆரு போயிட்டா?”

“அதா, குப்பன் – சாம்பாரு சம்பந்தி, நேத்துக் காலமே போயிட்டாராம். சங்கத் தலவரப் பாக்கணும்னு நேத்து மத்தியானமே வந்திருந்தாவ…”
சம்முகத்துக்கு துணுக்கென்று உணர்வு முட்டுகிறது. குப்பன் தான் இவருக்குப் படைத் தலைமைபோல் நம்பகமான தோழன். இவருக்குச் சொந்தமான எட்டு மா நிலம், ஐயர் பண்ணையின் ஆறு ஏகரா பந்தகமாக வந்திருக்கும் துண்டு பூமி, எல்லாவற்றுக்கும் காவலிருந்து, மடைகோலி, மடை அடைத்து, கங்காணம் செய்பவன். உழைப்பாளியான குப்பனுக்கு உழைப்பாளியான மகனும் தலையெடுத்து விட்டான். பெண்கள் மூவரையும் கட்டிக் கொடுத்தாயிற்று. கடைசிக்காரி பஞ்சமியைத்தான் ஐயனார் குளத்தில் கட்டியிருந்தான். அங்கே ஏதோ தகராறு. கையில் ஒரு குழந்தையுடன் அவள் தாய் வீடு வந்து ஐந்தாறு மாதமிருக்கும். புருசன் விலக்கிவிட்டான் என்று தான் சொன்னார்கள். அந்தப் பெண்ணின் மாமியார்க்காரிதான் இறந்து போனாளா? பெண்ணை விலக்கிய பிறகு சாவு வாழ்வு பாத்தியதை இல்லை என்ற மட்டில் விவகாரம் கிளம்பி அவரை மத்தியஸ்தத்துக்கு வந்து தேடியிருப்பார்களோ?

“ஆரு வந்தது?”

“தெரியாது. எங்காம்பிள தேடிகிட்டு வந்து கேட்டாங்கன்னு சொன்னாவ.”

சம்முகம் பல் துலக்கிக் கொப்பளித்து முகம் கழுவிக் கொள்கிறார்.

மெள்ளச் சுவரைப் பற்றிக் கொண்டு எழுந்து உள்ளே வருகிறார். நடுவில் இருக்கும் பகுதிதான் புழங்கும் இடம். ஓரத்தில் மண்குதிர் சாணி மெழுகிப் பளிச்சென்று மஞ்சளும் குங்குமமும் அழியாமல் இருப்பது விவரமாகப் புலனாகாது போனாலும் அந்த மூலை இவருக்கு லட்சுமி மூலை. அதற்கு அருகில் ஓரமாகக் கொடியில் மடித்துப் போட்டிருக்கும் புடவை வேட்டி, துணிகள் கூடை, முறம், சுவரில் மாட்டியிருக்கும் கள்ளிப்பெட்டி அலமாரியில் புத்தகங்கள் எல்லாம் இரண்டு தலைமுறைகளையும் இணைக்கும் சின்னங்கள். அந்த ஓலைக்கூரை வீட்டின் பொக்கிஷமான அறை உள்ளே சென்ற பின்னரே புலப்படுகிறது. பகல் வெளிச்சத்தில் கூட அந்த அறையில் இருட்டு ஆட்சி புரியும். உள்ளே புளி மற்றும் உளுந்து பயறு சேமித்து வைக்கக் கூடிய பானைகள், விதைக் கோட்டைகள், துருப்பிடித்த இரண்டொரு தகர டின்கள் ஆகிய சாமான்களுடன் பழையதாகிப் போன நாகப்பட்டினம் டிரங்குப் பெட்டி ஒன்றும் இருக்கிறது.

சம்முகம் கை ஊன்றி அமர்ந்து கொண்டு, அந்தப் பெட்டியை சாவி கொண்டு திறக்கிறார். அதற்குள்ளிருந்து வெளுத்த சர்ட்டு, ஒரு வெளுத்த வேட்டி ஆகியவற்றை எடுத்து வைக்கிறார். உள்ளே ஓரமாக வைத்த ஞாபகத்துடன் தேடி சிறு பிளாஸ்டிக் பையை எடுத்து ரூபாய் நோட்டுக்களை எண்ணிக் கொண்டிருக்கையில் பையனின் குரல் கேட்கிறது.

“ஐயாவுக்கு உடம்பு நல்லால்ல, நீ கூட்டிட்டுப் போனா என்னடா?”

“அதெல்லாம் முடியாதம்மா! அவரே போகட்டும்.”

“ஏ, காந்தி… காந்தி?”

“என்னப்பா?”

அவள் உள்ளே எட்டிப் பார்க்கிறாள்.

பத்து ரூபாய் நோட்டுக்களாகப் பத்தை அவளிடம் எண்ணிக் கொடுக்கிறார்.

“உன் கைப்பையில் வச்சுக்க, பத்திரம். உங்கம்மாளக் கூப்பிடு?”

லட்சுமி இட்லியைத் தட்டுகையில் கொல்லைப் புறத்துத் தாழ்வாரத்தில் தடுத்த அறைக்கதவை உள்ளிருந்து நாகு உடைக்கிறான்.

“அம்சு! கதவைத் திறந்து நாகுவ வெளியே கூட்டிட்டுப் போயிட்டு வா!” என்று சொல்லிக் கொண்டு வந்து எட்டிப் பார்க்கிறாள்.

“இதபாரு, நான் நூறு ரூபா எடுத்திட்டுப் போறேன். இன்னிக்கோட மூங்கித் தோப்புக்குப் பக்கத்திலிருக்கிற பங்குல நடவ முடிச்சிடணும்னு சொன்னான் குப்பன். இதோ எம்பளது ரூபா வச்சிருக்கிறேன். கூலிக்கு எடுத்துக்க. நான் இவ இண்டர்வியூ முடிஞ்சதும் நேரா புதுக்குடி வந்து காலை டாக்டர்கிட்டக் காட்டிட்டு வரலாமின்னிருக்கிறேன். வெளயாட்டுப் போல இன்னிக்கு மூணு நாளாவுது. நேத்தே ரதவீதிக்குப் போய் ஐயரப் பாக்கணும்னு நினைச்சேன். எங்க போக முடியுது?… பறிச்ச நாத்துக்கட்ட எல்லாம் நேத்து வச்சாச்சா, இன்னுமிருக்கா?”

“கெடக்கு. காவாயிலே மாலகட்டில்ல இளுத்திட்டுப் போவணும்?”

“இன்னிக்கி என்னவோ சொல்லிக்கிறாவ, வடிவு வாரானோ இல்லையோ? சாம்பாரு நேத்தே துட்டிக்குப் போயிட்டான். நேத்தே முடிச்சிருக்கணும். மூணு மணிக்கே அல்லாம் கரையேறிப் போயிட்டாளுவ…”

“இந்தத் தொர இன்னிக்கு ஊருக்குப் போறாராமா?”

“அதொண்ணும் நா கேக்கல. காந்தியக் கூட்டிட்டுப் போறியான்னேன். அவுரே போகட்டுமின்னா…”

“அணிப்புள்ள, தென்னம்புள்ளதா…”

முணுமுணுத்துக் கொண்டு பெட்டியைச் சாத்துகிறார்.
பின்புறம் நாகு எதற்கோ ரகளை செய்கிறான். மனதில் இருப்பதை ஆழமாக வெளியிடத் தெரியாததால் கொட்டும் குழம்பைப் போல் குரல் ஒலி சிந்தி ஓடும் நாராசம். காலை நேரத்தில் இந்த ஒலியைக் கேட்டாலே இவருக்கு இப்போதெல்லாம் பொறுமை குலைந்து போகிறது.

“ஏண்டி அந்தப் பயலக் காலங்காத்தால கெளப்பிவிடுறிங்க!”

“இல்லப்பா, கால் கழுவாம உள்ளாற ஓடியாறான், கசம்… தண்ணிய ஊத்தினேன்…”

லட்சுமி சென்று அவனை இழுத்துக் கொண்டு வந்து அடுப்பின் பக்கம் உட்கார்த்திக் கொள்கிறாள். குரல் ஓய்கிறது.

ஒழுங்காக இருந்திருந்தால், ஏரோட்டுவதற்கு ஆளைத் தேட வேண்டாமே? படிப்பு இல்லாத போனாலும், ஒரு ஆள் என்ற வலிமையேனும் இருக்குமே?

எதற்கும் பயனில்லை, ஒரு சுமை. இந்தச் சுமையை அன்று வயிற்றில் மட்டும் சுமக்கவில்லை. கால் நூற்றாண்டாய் இன்னும் சுமக்கிறாள்.

நடுவீட்டில் பாயைப் போட்டுக் கொண்டு படுத்துக் கிடக்கும் தலைமகனைப் பார்த்து முகத்தைச் சுளித்துக் கொண்டு மாடத்திலிருக்கும் சிறு கண்ணாடி பார்த்துத் தலை வாரிக் கொள்கிறார். சாமி கும்பிடுவது வழக்கம் விட்டுப் போனாலும், மரவையிலிருந்து துளி திருநீற்றைப் புருவங்களுக்கிடையில் வைத்துக் கொள்வது விட்டுப் போகவில்லை.

லட்சுமி மிளகாயையும் உப்பையும் அம்மியில் வைத்து நசுக்கித் துவையல் அரைத்துக் கொண்டிருக்கிறாள். நாகு அடுப்படியில் ஒரு நீண்ட குச்சியை வைத்துக் கொளுத்தி வெளியே எரிய விடுகிறான்.

பளாரென்று அவன் முதுகில் ஓர் அறை விழுகிறது.

அவனுடைய அழுகைப் பின்னணியில் அவர் கத்துகிறார்.

“இந்தப் பய ஒரு நா குச்சி கொளுத்திக் கூரையில போட்டுடப் போறான். அவன அடுப்படிலே குந்த வச்சிட்டு ஏன் போறீங்க?”

“காந்தி எங்க? அவளப் பாத்துக்கச் சொல்லிட்டுப் போனேன்?”

இரண்டு இட்டிலியும், சுக்கும் வெல்லமும் போட்ட தேநீரும் அருந்திவிட்டு வெளிக்கிளம்பும் போது, பாட்டி வாயிலில் குந்தியிருக்கிறாள். வலப்புறத்துத் திண்ணைதான் பாட்டி பாட்டன் இருவருக்கும் இருப்பிடம். தேய்த்துப் போட்ட தேங்காய் நாராகக் கூந்தல் பசையிழந்து போயிருக்கிறது. எண்ணற்ற சுருக்கங்களுடைய முகத்தில் கண்கள் இன்னமும் கூர்மையாக இருக்கிறது. இந்தக் குடியினரிடையே அபூர்வமாகத் தோன்றக் கூடிய சிவப்பு. நெற்றிப் பச்சைக்கோடு, இந்த வயசிலும் தீர்க்கமாகத் தெரிகிறது.

அவள் திரும்பி சுருண்டு கிடக்கும் கிழவனை எழுப்புகிறாள்.

“த, எந்திரி, புள்ள காலேசிக்குப் போகுது… எந்திரி…!”

காந்திக்குப் பாட்டனின் அருகில் செல்வதற்கு விருப்பமில்லை. பாட்டியைப் போல் நறுவிசாகச் சிக்கென்று இருக்கமாட்டார்.

“தாத்தா, நான் போயிட்டு வாரேன்…”

வாய் பேசத் தொடங்கும் முன் கிழவனுக்கு இருமல் பிடித்துக் கொள்கிறது.

“யே குட்டி அம்சு! நீராரம் இத்தினி கொண்டாடி…!”

“ஆமா, நீராரம்! கறட்டுக் கறட்டுன்னு இருமிட்டு!…”

“உனக்கென்னடீ தே… மவளே? நா இந்தூட்டு எசமான். கொண்டாடீ!” இருவருக்கும் இடையே பொழுது விடிந்ததிலிருந்து இவ்வாறு சிறு பூசல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும்.
கிழவனுக்கு உடம்பு ஒடுங்கினாலும் இன்னும் குரலும் பிடிவாதமும் ஒடுங்கிவிடவில்லை. கண் முக்காலும் தெரியவில்லை. முடி உதிர்ந்து, தலை பனங்குடுக்கை மாதிரி ஒரு தோற்றம் தருகிறது. நீராகாரம் கேட்ட உடன் வராததால் வசை புழுக்கிறது.

“லட்சுமி, அவரு கேட்டதக் குடுக்கிறதுக்கென்ன? ஏம்போட்டு இளுத்திட்டிருக்கிய? அவுரு வயசுக்கு அவரு கஷ்டம் ஆரும் பட்டிருக்கமாட்டா. நீராரம் தான கேக்கிறாரு?”

“நேத்து சோறொண்ணும் மிஞ்சல. இப்பதா இட்லி ஊத்தி வச்சிருக்கு. டீத்தூள் போட்டு சூடாக் கொண்டு வாரனே? வாங்குவாரா?”

லட்சுமியின் குரல் கேட்க வேண்டியதுதான் தாமதம். மேலும் வசைகள் பொலபொலக்கின்றன.

அம்சு குவளையை எடுத்துக் கொண்டு ருக்குமணியின் வீட்டுக்குச் சென்றாள். காந்திக்குக் கோபமாக வருகிறது.

“போலாம்பா, பஸ் வந்திடும்…!”

“சரி, வாரேன், லட்சுமி… எல்லாம் பத்திரமாப் பாத்துக்க. நா சாங்கால பஸ்ஸுக்காகக் கூடக் காத்திருக்க மாட்டே முடிஞ்சா அக்கரக்கி வந்து முன்னதா வந்திடுவேன்…”

வீட்டை விட்டிறங்கி, ஆற்றுக்கரை மேட்டோடு, ஒரு பத்து நிமிடம் நடக்க வேண்டும்.

இவர்கள் தெருவைத் தாண்டவில்லை வடிவு, அவன் தம்பி சுருளிப்பயல், செவத்தையன், அம்மாசி, பழனி எல்லோரும் கும்பலாக வருகின்றனர். சில பெண்பிள்ளைகள், முடிபரக்க சில பொடிசுகள்.

“மொதலாளி!”

சம்முகத்துக்குக் கால் தடுக்குவது போலிருக்கிறது. அவருக்குச் சகுனத்தில் எல்லாம் நம்பிக்கை என்பதில்லை. மூடநம்பிக்கைகளைப் பிடித்துத் தள்ளவேண்டும் என்ற முற்போக்குக் கோட்டில் நிற்பவர் தாம்.

“நேத்தே வந்தமுங்க. முதலாளி வந்து சொல்லுங்க, காரியக்காரன் படலய வச்சுத் தோப்ப வளச்சிருக்கிறா, நடவு நட்டாச்சு. வயல்ல எறங்கக் கூடாதுங்கறா…”

இந்த முறையீட்டைக் கேட்ட பின்னரே சம்முகத்துக்கு பளிச்சென்று நிலைமை புலனாகிறது.

ஐயனார் குளத்துக் குடியிருப்பில் இருந்து இறந்து போனவரின் சடலத்தை ஆற்றுக்கரைக் காட்டுக்குக் கொண்டு வர வழியில்லை! இந்தப் பிரச்னைகளை எடுத்துக் கொண்டு பல தடவைகள் கோரிக்கை மனு கொடுத்து விட்டார்கள். ஐயனார் குளம் மட்டும் இத்தகைய பிரச்னைக்குரிய இடம் அல்ல. பல குடியிருப்புகளின் நிலையும் இதுவே.

“நேத்து வந்தம் முதலாளி. நீங்க இல்ல. நாங்கல்லாமும் தோப்புக் குத்தவைக்காரங்ககிட்ட பொணங் கொண்டு போக வழி வுடணும்னு கேட்டோம். பண்ணக்காரரில்ல, அவுரு சொல்லாம நான் துறந்து வுடறதுக்கில்லன்னு மணிகாரன் பிச்சமுத்து ஒரு புடியா படலயப் போட்டுக் கெட்டி வச்சிட்ட்டான்.”

“ஏண்டா, இதுக்குப் போயி அழுவுறீங்க? படலயப் பிச்செறிய முடியாது உங்களால? பிச்செறிஞ்சிட்டுப் பொணத்தத் தூக்கிட்டுப் போங்கடா? நா இப்ப அவசரமாப் போறே. வந்ததும் மத்ததப் பேசிக்கலாம்!”

நெற்றியில் வியர்வை பூக்கிறது. காலில் ஊமை வலி முனகுகிறது. அவர்கள் கரையோடு நடக்கின்றனர்.

அத்தியாயம்-2

தஞ்சையிலிருந்து புதுக்குடி வழியாகக் கிளியந்துறைக்கு வரும் பஸ் அது ஒன்று தான். காலையில் ஏழு மணிக்கு வந்து, ஏழரை மணிக்குத் திரும்பி விடும். பத்து மணிக்குத் தஞ்சை செல்லும். கிளியந்துறைக்கு மறுபடியும் மாலை ஐந்து மணியளவில் புதுக்குடியில் இருந்து ஒரு பஸ் வந்து எட்டிப் பார்க்கும். பல நாட்களில் அது சோம்பலாக வராமலும் இருந்து விடும்.

கிளியந்துறைக் கடை வீதிதான் பஸ் நிறுத்தம். பூமணியாற்றின் கால்வாய் மதகோரம் வளைந்து திரும்பி ‘ரைஸ்மில்’லின் வாசலில் பஸ் நின்றால் பாதையில் நடக்கும் போதே கண்களில் படும்.

பஸ் இன்னமும் வரவில்லை. ஆசுவாசமாக இருக்கிறது.

ஆற்றுக் கரையைச் சார்ந்த முத்தூரு நாயக்கரின் வயல்களில் நீர் தேங்கிக் காவாளைச் செடிகளுக்கு அந்திம காலம் வந்துவிட்டதைத் தெரிவிக்கின்றன. பச்சைக் கம்பளமாக நாற்றங்கால்… அப்பால் வரப்பினூடே வண்ணப் புள்ளிகளாக நடவுக்குச் செல்லும் பெண்கள்; இரையுண்ட நாகமென நீர் நிரம்பி ஓடுவது தெரியாமல் செல்லும் ஆறு; பளிச்சென்று அன்றையப் பொழுதுக்குக் கட்டியம் கூறும் நீலவானம். எல்லாம் நம்பிக்கையளிக்கின்றன.

காந்தி, அவர்கள் குடியிலேயே ஒரு புதிய பரம்பரையைத் துவக்கி வைக்க முன்னோடியாக நடக்கிறாள்.

விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர் என்று மட்டுமின்றி, சம்முகம் பொதுவாகக் கிராமத்தாரிடம் மதிப்புப் பெற்றிருப்பவர். சுற்றுவட்டமுள்ள எல்லா அரிசன மக்களுக்குமே பலவகைகளிலும் மேலான மதிப்புக்குரிய சிறப்பைப் பெற்றிருப்பவர்.

உழவுத் தொழிலாளர் வாழ்க்கைகளைப் பாதிக்கும் எந்தப் பிரச்னைக்கும், சொந்தத் தகராறுகளுக்கும் கூட அவரிடம் வந்து நியாயம் கோருவார்கள். இவருக்குத் தெரியாமல் அந்தக் குடிகளிலிருந்து பெரிய படிப்புப் படிக்கச் சென்றவர், உத்தியோகம் பார்க்கச் சென்றவர், மேற்குடி சம்பந்தம் வைத்துக் கொண்டவர் என்று அதுகாறும் இல்லை.

கிளியந்துறைக் கடைவீதி காலை நேரச் சுறுசுறுப்புடன் விளங்குகிறது. அருணாசலத்தின் காபிக் கடையில் சூடான இட்டிலியும் சட்டினியுமாக வியாபாரம் நடக்கிறது. சைக்கிள் கடையில் மாலை நேரத்தில் தான் வியாபார நெரிசல் என்றாலும் இப்போது அங்கு குந்தியிருக்கும் ஆட்கள் இருக்கின்றனர். ராமசாமி இப்போதுதான் கடை திறந்து முன்பக்கம் கயிறு வகைகள், வாளிகள் எல்லாம் எடுத்துத் தொங்கவிடுகிறான். பஸ்ஸுக்காகச் சுற்றுப்புறங்களில் இருந்து வரும் மக்களில் கோஷாப் பெண்கள் கூட்டம் ஒன்று இன்னமும் திறக்கப்பட்டிராத மிட்டாய்க்கடை வாயிலில் நிற்கிறது.

நீலச்சட்டையும் அரும்பு மீசையுமாக, நாகரிக மெருகும் படிப்புக்குரிய அடக்கமான களையுமாக ஓர் இளைஞன் சைக்கிள் கடைப்பக்கம் வந்து நிற்கிறான். அவரையும் காந்தியையும் கண்டதும் மரியாதையாக ‘ஹலோ’ என்று முகமன் கூறுகையில் சம்முகம் உள்ளூறப் பூரித்துப் போகிறார்.

“தேவுதான, தம்பி; எப்ப வந்தாப்பல?”

“இங்கதான இருக்கிறேன்? ரெண்டு மாசமாச்சி!”

“அப்படியா? படிப்பு முடிஞ்சி போச்சா?”

“லா படிச்சுருக்கேன்… இன்னும் முடிக்கல… பரீட்சை எழுதணும்.”

“அப்பிடியா? ஒண்ணுந் தெரியறதில்ல. வீட்டுப்பக்கம் வரக்கூடாதா? ஆமாம், ஊரிலே ஆரிருக்காங்க?”

அவன் புன்னகை செய்கிறான். “ஆரு, நாந்தானிருக்கிறேன். இப்படி வந்திட்டுப் போவேன்…”

பஸ் வந்ததும் தங்களருகில் அவன் உட்கார்ந்து பேசுவதை விரும்புவான் என்று அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை. இவர்கள் ஏறி முன்பக்கம் இறங்கத் தோதாக அமர்ந்து கொண்டு அவனுக்காக ஓர் இடத்தை ஒதுக்கினாற் போலும் கூட நினைத்து அவனைத் திரும்பிப் பார்க்கின்றனர். ஆனால் தேவு, வேண்டாம் என்பது போல் வேறு பக்கம் அமர்ந்து கொள்கிறான்.

பஸ்ஸில் இவர் அமர்ந்திருப்பதை நடவுக்குச் செல்லும் வேட்டுவனூர் நாட்டாமை பார்த்து விடுகிறான்.

“டவுன் போறீங்களா, முதலாளி? ஐயா அம்மா எல்லாம் சொகந்தானா?”

“சொகந்தா, எங்க நடவு?”

“இங்கதா, கெழக்கால கரந்தக்குடி பண்ண…”

“கூலி எல்லாம்… எப்படி? சட்டபடிதான?”

“ஆமாம். ஏழு… ஒம்பதுதா…”

“ஒண்ணுந் தகராறில்லியே?”

“அதெல்லாமில்ல…”

சட்டென்று ஓடிப்போய், வெற்றிலை பாக்கு வாங்கி வந்து எம்பிக்கொண்டு நீட்டுகிறான்.

“என்னாத்துக்கு இதெல்லாம்? போ போ…”

“வெத்தில போடுங்க முதலாளி?”

“நா வெத்தில போடுறத வுட்டுப்புட்டே. பல்லு வலி வந்திச்சி. எடுத்திட்டுப் போ.”

“சும்மா போடுங்க முதலாளி! நம்ம புள்ளதாங்களே?”

“ஆமாம். அதும் போடாது, படிக்கிற புள்ள…”

இதற்கு மேல் அவள் புதிய தொழிற் கல்வியைக் கற்று, மேல் வருக்கத்தினருக்கும் மேலாகப் படி ஏறப் போவதைப் பற்றிச் சொல்லிக் கொண்டாலும் அவர்களுக்குப் புரியாது…

மேலும் மேலும் கோஷாப் பெண்கள்.

கம்மென்று அத்தர், சென்ட் வாசனைகள், மேலே போர்த்திருக்கும் போர்வையிலேயே எத்தனை பூ வேலைகள்! ஒவ்வொருத்தியும் முழங்கை வரையிலும் தங்க வளையல்கள் அணிந்திருக்கின்றனர். முன்பெல்லாம் எங்கு திரும்பினாலும் இவர்கள் செழிப்பு இவ்வளவுக்குக் கண்களில் பட்டிருக்கவில்லை.

பஸ் கடைவீதியை விட்டுப் புறப்பட்டு, ஆற்றோரமாகவே சென்று பெருமாள் கோயிலுக்கு நேராக நிற்கிறது. மேல் சாதி அக்கிரகாரம், வேளாளர் தெரு மக்கள் ஏறிக்கொள்ளும் நிறுத்தம் இது. குருக்கள் ஆற்றில் நீராடிவிட்டுப் பளபளவென்று துலக்கிய குடத்தில் நீர் முகர்ந்து செல்கிறார். நந்தவனத்தில் நடராசு மலர் கொய்கிறான்.

“என்ன, சம்முகம், டவுனுக்கா?” என்று விசாரித்துக் கொண்டு வரதராஜன் முதல் பக்கத்து ஆசனத்தில் அமருகிறான். புதுக்குடியில் பள்ளி ஆசிரியர். இங்கே நடவுக்கு வந்து செல்கிறான் போலிருக்கிறது.

“ஆமாம். நடவாயிட்டுதா?”

“இல்ல, ரெண்டொரு பெரும்படிப் பாத்திரம் கல்யாணத்துக்கு எடுத்திட்டுப் போயிருந்தேன். உம் பொண்ணுதான இவ?… படிச்சிண்டிருந்தா இல்ல, மிஷன் ஸ்கூல்ல?”

“ஆமாம், மூணு வருஷமாச்சி. எஸ்.எஸ்.எல்.ஸி. பண்ணி. மேல படிக்க வைக்க முடியல. இப்பதா, பாலிடெக்னிக்லேந்து இன்டர்வியூ வந்திருக்கு. கூட்டிட்டுப் போறேன்.”

“அப்படியா? படிக்க வையி. உங்களுக்கெல்லாந்தான் அரசு எல்லாம் செய்யக் காத்திண்டிருக்கே? உம் பையன் கூட பி.ஏ. படிச்சான் போல இருக்கு? வேலை பண்றானா?”

தெரிந்து கொண்டே கேட்கும் கேள்விதான் என்று படுகிறது.

“மெட்ராசில இருக்கிறான். ஹான்ட்லூம் போர்ட் ஆபீசில…”

“கல்யாணம் காட்சி பண்ணிருக்கியா?”

“எல்லாம் அவனே பண்ணிக்கிட்டான். என்னத்தப் பேசறதுங்க…”

“ஓ… கேள்விப்பட்டேன் போலிருக்கே… எல்லாம் ஒண்ணாப் போச்சு இப்ப. இங்க கூட்டிட்டு வந்தானா?”

“இல்ல, இப்ப ஊருக்கு வந்திருக்கிறான். எங்களுக்கு ஒண்ணுமில்லன்னாலும், பட்டணத்தில் பழக்கப்பட்டவங்க, கிராமத்தில எப்படி வந்திருப்பா?”

“பட்டணத்துல பழக்கப்பட்ட பிறகு யாரு வரது. இப்ப உம் பொண்ணே நாளக்கிப் படிச்சு பெரிய பதவில வந்த பெறகு கிராமத்தில வந்து குடிசயில இருப்பாளா? உன்ன அப்பன்னு சொல்லிக்கவே வெக்கப்படுவா!… முன்னப் போல கிராமத்துல யாரு இருக்கப் போறாங்க? ஏழும் ஒம்பதும் கூலி குடுத்து ஆருக்குக் கட்டுப்படியாவும்?”

இவருக்கு முகம் சிவக்கிறது. “ஏழு ஒன்பது கூலிலதா எல்லாம் பாயுறாங்க. சேத்தில உழலுறவன் இந்த வெலவாசில அரவயித்துக் கஞ்சி குடிக்க வாணாமா?”

“யாரு வாணாங்கறாங்க? வரியையும் உசத்திப் போட்டான். உரவெல, பூச்சி மருந்துவெல, ஆள் கூலி இதெல்லாம் கணக்குப் பாத்தா யாருக்கு விவசாயம் பண்ணனும்னு இருக்கு? உழுதவன் கணக்குப் பாத்தா உழக்கு மிச்சமில்லங்கறது அன்னிக்கு இல்ல, இன்னிக்குத்தா மெய்யாயிருக்கு…”

இவர் பேசவில்லை.

சட்டென்று யாரும் தொழிலாளியின் கூலியில்தான் பாய்கிறார்கள். ஒரு அலுவலகக் கடை நிலை ஊழியன் வாங்கும் சம்பளம் கூட இந்தத் தொழிலாளிக்குக் கிடைக்கவில்லை என்பதை யாரிடம் சொல்வது?

புதுக்குடி பஸ் நிறுத்தத்தில் அநேகமாகப் பஸ்ஸே காலியாகிவிடுகிறது. தேவு இறங்கிச் செல்வதை ஓரத்திலமர்ந்திருக்கும் காந்தி பார்த்துக் கொண்டிருக்கையில் சிவப்புக் கட்டத் துண்டுடன் சின்னராசு ஏறி வருகிறான். “காம்ரேட் எங்க? தஞ்சாவூருக்கா?”

“ஆமாம், நேத்து ஊருக்குப் போன பிறகுதான் தெரியிது. இதுக்கு இண்டர்வியூக்கு வந்திருக்கு. நான் சொன்னனில்ல நேத்து?”

“அப்படியா மகிழ்ச்சி. மார்க்கெல்லாம் நல்லா இருக்கில்ல?”

“இருக்கு, இருந்தாலும் தேர்வு செலக்ஷனாகி, ஆஸ்டல் பாத்து சேத்துவர வரய்க்கும் கவலதான?”

“அதொண்ணும் தொந்தரவு இல்ல காம்ரேட். நம்ம… கிள்ளிவளவன் இருக்காரு அந்த போர்டிலன்னு சொல்லிக்கிட்டா. உங்களுக்குத்தா அந்த நாளிலேந்து தெரியுமே?…”

“அப்படியா? கிள்ளிவளவனத் தெரியுமாவது? ஒண்ணா எத்தினி போராட்டத்தில் போயிருக்கிறோம்? நம்ம சுந்தரமூர்த்தி வீட்ல அவர முதல்ல திராவிட இயக்கம் ஆரம்பிச்ச நாள்ளந்து பழக்கம். ‘அக்கிரகாரத்தில மாட்ட ஓட்டிட்டுப் போடா’ம்பாரு… வளவந்தா மீட்டிங்கில பேச வருவாரு…”

“பின்னென்ன? இடம் கிடச்சாச்சின்னு வச்சிக்க!”

மிகவும் தெம்பாக, உற்சாகமாக இருக்கிறது. தாழ்த்தப்பட்ட இனத்தினருக்கான கல்விச்சலுகை; விடுதியிலிருந்து படிக்கவும் கூட உதவி பெறலாம்… பிறகு… வேலை… இவர்கள் கொள்கை வழியிலே நிற்கும் முற்போக்கு இளைஞனாகப் பார்த்துத் திருமணம்…

பையனைப் போல் இவளை விட்டு விடக் கூடாது. இவளைத் தம் ஆளுகையில் இருத்திக் கொள்ள, ஒரே கொள்கையாளாகப் பார்த்துச் சம்பந்தம் செய்து கொள்ள வேண்டும். அது அப்படி அசாத்தியமல்ல.

பஸ் நிறுத்தத்திலிறங்கி நடக்கிறார்கள். கால் வலி கூடத் தெரியவில்லை.

பழைய நாளைய அரண்மனைக் கட்டிடம் வெளியே சைக்கிள்கள் நிற்கின்றன. பெஞ்சியில் பெண்கள், தந்தையர், சகோதரர்கள் என்று கூட்டம் குறையவில்லை.

இவர்களில் யாரோ தாழ்த்தப்பட்டவராகத் தம்மினத்தை சார்த்திருக்க முடியும் என்று சம்முகம் பார்க்கிறார்.

யாருமே தம்மினம் இல்லை என்று நினைக்கும்படியாக இருக்கிறது.

ஒரு வெள்ளைக்கார், அம்பாஸடர் வந்து நிற்கிறது. அதிலிருந்து ஒரு முன் வழுக்கைக்காரரும் ஓர் இளம்பெண்ணும் இறங்கிச் செல்கின்றனர். சம்முகம் அவரை நினைவு கூறுகிறார்.

அவர் ஒரு ஆலை அதிபர்.

கிள்ளிவளவனை முன்னதாகக் கண்டு ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். அரசியல் கட்சி என்று வேறு ஒரு பக்கம் சார்ந்து விட்ட பிறகு இவருக்குத் தொடர்பே விட்டு விட்டது, என்றாலும் பழைய தோழமையை மறந்து விடமாட்டான்.

இவள் விண்ணப்பம் பார்த்து யாரோ நினைவு வைத்துக் கொள்ள முடியும்? மனம் உழம்புகிறது. தாழ்த்தப்பட்ட இனம் என்ற ஒரு துரும்பையே பற்றிக் கொண்டு சுழலுகிறது.

பொழுது கிடுகிடென்று ஏறிப் பன்னிரண்டரையாகிறது. பசி உணர்வு தலைதூக்குகிறது. பிறகுதான் அவள் பெயரைக் கூப்பிடுகிறார்கள். இவள் தான் கடைசி என்று தோன்றுகிறது.

உள்ளே சென்று முன்னறையில் இவர் தங்க, காந்தி தள்ளு கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே செல்கிறாள். அடியிலும் மேலும் வெளிச்சம் இருந்தாலும் கால்கள் மட்டும் தெரிந்தாலும், பேச்சுக் குரல்களும், நலிந்த காந்தியின் மொழிகளும் செவிகளில் விழுந்தாலும் ஒன்றும் தெளிவாகத் துலங்காமல், மிகப்பெரிய மலை ஏற்றத்தின் முண்டு முடிச்சுக் கட்டத்தில் நிற்பது போல் இலேசானதொரு கலக்கம் ஆட்கொள்கிறது.

அவருடைய வாலிபப் பருவம், வாழக்கூடிய நாட்களெல்லாம் போராட்டம், போலீசு, கோர்ட்டு, வயல், அடிதடி, வழக்கு, காத்திருப்பு என்று கண்ணாடிச் சில்லுகளில் குத்திக் கொண்டு நடப்பாகவே மோதிக் கொண்டு கழிந்திருக்கிறது. இதே ஊரில் வக்கீல் ஐயங்கார் வீட்டில் எத்தனை நாட்கள் காத்துக் கிடந்திருக்கிறார்? பசி, பட்டினிக்கு எல்லையே கிடையாது. கால் கால் ரூபாயாகக் காசு சேர்க்கும் தொல்லை, கஞ்சுக்கில்லா ஏழைகளிடம் வக்கீலுக்குக் கொடுக்கக் காசு பறிக்கும் தொல்லையை அளவிடுவதற்கில்லை.

ஆனால் அப்போதெல்லாம் கூட இந்தத் தொய்வும் அவநம்பிக்கை நிழல் காட்டும் தளர்ச்சியும் இல்லை போலிருக்கிறதே? வாழ்க்கையில் பற்றும் பசுமையும் பெருமிதமும் இப்போதுதான் தலைக்காட்டத் தொடங்கியிருக்கின்றன. காந்தி மிகுந்த சூடிகையுள்ள பெண். என்றேனும் அவளோடு சங்க அலுவலகத்தில் தங்க நேர்ந்தால் கூட, பத்திரிகை புத்தகங்கள் என்றுதான் கண்கள் நோட்டமிடும். மூன்று வருட காலம் அவளை முடக்க வேண்டி வந்து விட்டது. அவளுக்காக நூலகத்திலிருந்து புத்தகங்கள் வாங்கி வர வேண்டும். இல்லையேல் தானே செல்வதாக நிற்பாள். இவள் தகுதி – தாழ்த்தப்பட்ட இனம் – அம்பேத்கார் பேரைக் கொண்ட கல்விக் கொடை நிறுவனம். கிள்ளிவளவன்… மூன்று கால்களும் உறுதியானவை.

இந்தக் கால்களில் மாடமாளிகை எழுப்ப முடியும். ‘எலக்ட்ரானிக்ஸ்’ அது இது என்றெல்லாம் அவள் சொல்லும் சொற்கள் இவருக்கு அவ்வளவு புரியவில்லைதான். இவர் படித்ததெல்லாம் ஐந்தாவது வரையிலுமே. பின்னர் விசுவநாதனும், இராமச்சந்திரனும் நெடுங்காடியும் பாசறையில் கற்பித்த பாடங்களே அவரை ஒரு சங்கத் தலைவனாக்கியிருக்கின்றன.

உள்ளே இறுக்கம் தாங்கவில்லை. துண்டால் விசிறிக் கொள்கிறார். காந்தி வெளியே வருகிறாள்.

அப்பாடா…!

“என்னம்மா? எல்லாம் நல்லபடியாச் சொன்னியா?”

“இருங்கப்பா, உங்களை அவரு பார்க்கச் சொன்னாரு…”

“யாரு…?”

“அதா, உயரமா முடிய இந்த பக்கமா வாரிட்டு இருந்தாரு. போறதுக்கு முன்ன அரைமணி கழிச்சிப் பார்க்கச் சொல்லுன்னு சொன்னாரு…”

“கிள்ளிவளவனா? போர்டில இருக்காருன்னாங்க. உங்கிட்ட ஞாபகமாக் கேட்டாரா?”

ஆவல் அடுக்கடுக்காக விரிகிறது.

“அவுருதாம்போல இருக்கு. மூணு பேரு இருந்தாங்க. ‘எந்த ஸ்கூலில் படிச்சே? ஏ மூணு வருஷமா சும்மா இருந்தே’ன்னுதாங் கேட்டா. நான் ‘வசதியில்ல. ஊரை விட்டு வரமுடியல’ன்னேன். தாத்தா பேரச் சொன்னாரு அவுரு. ‘ராமசாமி வாய்க்கார் மகன் சம்முகமா உங்கப்பா’ன்னாரு…”

அரைமணி காத்திருப்பதாகவே இல்லை. பொற்சிறகுகளுடன் பறந்து போகிறது. அறையில் கிள்ளிவளவன் மட்டுமே அமர்ந்திருக்கிறான். அதே கறுப்புத் துண்டுத் தோழமை.

“வணக்கமுங்க, நம்ம பொண்ணுதா…”

உட்கார்ந்தவாறே புன்னகை செய்கிறான். ‘உட்காருங்க’ என்று ஆசனம் காட்டுகிறான்.

“எப்படி சவுக்கியமெல்லாம்? அப்பா நல்லாயிருக்காரா?”

“இருக்காருங்க நல்லபடியா…”

“இது ஒரே மகதானா?”

“இன்னொண்ணு இருக்கு. அது படிக்கல ரொம்ப. குடும்பமா வச்சிட்டேன். விவசாயக் குடும்பத்தில வீட்டுக்கும் ஆளு வேண்டியிருக்குங்களே!”

“இவ மதிப்பெண், மற்ற தகுதி எல்லாம் திருப்தியாகவே இருக்கு. உங்க மகளுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. வாழ்த்துக்கள்” என்று காந்தியைப் பார்த்துப் புன்னகை செய்கிறான். அவள் தலையைக் குனிந்து கொள்கிறாள்.

“ரொம்ப நன்றிங்க…” என்று சம்முகம் உணர்ச்சி வசப்பட்டுப் போகிறார்.

“இந்த நிறுவனமே பின் தங்கிய இனத்தினருக்காக தொழிற்கல்வி என்று தொடங்கப்பட்டிருக்கிறது…”

“சொன்னாங்க…”

“இது ஒரு புதிய சகாப்தத்தை நோக்கிச் செல்லும் நுழைவாயில். எலக்ட்ரானிக்ஸ், சிவில் இன்ஜினியரிங், பிசினஸ் மானேஜ்மென்ட் என்ற பல துறைகளும் தொடங்குகிறார்கள். இன்னும் விரிவுபடுத்தப் பல திட்டங்களிருக்கின்றன…”

வளவன் மேசையிலிருக்கும் கண்ணாடிக் குண்டைக் கையில் வைத்துக் கொண்டு திட்டங்களை விவரிக்கிறான். அதெல்லாம் புரியாது போனாலும் மகிழ்ச்சியுடன் ஆமோதிக்கிறார் சம்முகம்.

“அதனாலே, சம்முகம், உங்க மகள் ஓர் அதிர்ஷ்டப் பாதையில் கால் வைக்க அனுமதி கிடைச்சாச்சு. நீங்க ஓர் இரண்டாயிரம் முதலில் கட்டிடணும்…” திக்கென்று கண்ணாடிக் குண்டைத் தம் மீது எறிந்து விட்டாற் போல் அவர் அதிர்ச்சியுறுகிறார்.

“உங்க மகன்னில்ல. செலக்ஷன் ஆகும் மாணவியர் யாராக இருந்தாலும் டொனேஷன் கட்டணும் என்று விதி.”

கண்ணாடிக் குண்டு சிதில் சிதிலாக வெடித்து விழுந்தாற் போலிருக்கிறது.

“இரண்டாயிரமா? அவ்வளவு தொகைக்கு என்னப் போல் ஓர் ஏழை விவசாயி எங்க போக முடியுமுங்க?”

வளவன் புன்னகை செய்கிறான். பல் வரிசைகள் ஒழுங்காக அழகாகத் தோன்றிய தோற்றம். இப்போது நரிப்பற்களின் நினைப்பைக் கொண்டு வருகிறது.

“அதெல்லாம் அந்தக் காலம். இன்னைக்கி உங்களால் இரண்டாயிரம் திரட்ட முடியாதுன்னு நான் சொல்ல மாட்டேன். இது இந்தக் கல்விக் கூடத்தின் வளர்ச்சிக்கு மட்டுமே. உங்க மகளுக்குப் பல்வேறு சலுகைகள் கிடைக்க இருக்கின்றன. தாழ்த்தப்பட்ட வகுப்பிலிருந்து, உங்க மகள் வந்து கட்டாயம் படிக்கணும்னு நினைப்பதால், நான் உங்ககிட்ட வற்புறுத்த வேண்டியிருக்கு. ஒரு இரண்டாயிரம் புரட்டிக் கட்டிடுங்க… இது மட்டும் யாருக்கும் விலக்கு இல்லை…”

மலையாக இருக்கிறது.

இரண்டாயிரம்! பட்டாமனையில் வீடு கட்ட இருநூற்றைம்பது செலவு செய்து மூவாயிரம் கடன் வாங்கினார். அரை வேக்காட்டுச் செங்கல்லை வைத்து, மண்ணையும், சுண்ணாம்பையும் குழைத்துக் கட்டிய அந்த வீட்டுக்கு மேலும் ‘நான்கு’ செலவாயிருக்கிறது. அந்தக் கடனுக்கு வட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். உரம் வாங்க, கூலி கொடுக்க, உழவு மாடு வாங்க என்று கடன் கொடுக்கிறார்கள். ஆனால் வீட்டுச் செலவும் பயிர்ச் செலவும் கடனும் வட்டியும் அடைக்க முடியாமல் துண்டாகத் தங்கித் தங்கி பூதாகாரமாக வளர்ந்து வருவதை எங்கே போய்ச் சொல்வது?

பையனைப் படிக்க வைத்தார். அவன் பெற்ற சலுகையைக் காட்டிலும் அவன் ஆடம்பரச் செலவுகளே அதிகமாயிருந்தன. எப்படியோ ஏதோ வேலை என்று பற்றிக் கொண்டு நம்மை விட்டால் போதும் என்று அவன் வளர்ந்திருக்கிறான். உயர் சாதிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட பிறகே எழுதினான். இப்போது அவன் ஊருக்கு வந்திருப்பது லட்சுமிக்குத்தான் பூரிப்பு. ஆனால் இவருக்கு உள்ளூர அவன் பணம் கேட்டு வந்திருப்பானோ என்ற அச்சம் தான்.

“இரண்டாயிரமெல்லாம் நினைக்கக் கூட முடியாதுங்க…”

“கொஞ்சம் குறைச்சிக்குங்க…” என்று சொல்ல எழுந்த நா உடனே சுய மரியாதையில் அடங்கிப் போகிறது.

இவனிடம் இதற்குப் பேரமா?

“அதான், பிரத்தியேகமாக உங்களுக்குச் சொன்னேன். எப்படியானும் முதல்ல கட்டிடுங்க, உங்க பெண்ணுக்கு மட்டுமல்ல, சமுதாயத்துக்கே பெருமை.”

“சரிங்க, பார்க்கிறேன்.”

“வணக்கம்…”

காந்தியும் கும்பிடுகிறாள்.

வெளியே படி கடந்து வந்த பின்னரும் இருளடித்துப் போனாற் போலிருக்கிறது.

அத்தியாயம்-3

வயிற்றுப் பசி புதிய எரிச்சலில் தெரியவில்லை.

எங்கே போகிறார்கள் என்பது உறைக்காமலேயே பஸ் நிறுத்தத்துக்கு நடக்கின்றனர்.

“எனக்கு மட்டுமில்லாம எல்லாருக்குமே நல்ல எதிர்காலம்னு நினைச்சேன். நடுவில் மூணு வருசம் நிக்காம மூச்சப் புடிச்சிடிருந்தா… இதுக்குள்ள பி.காம்னாலும் மூணாம் வருசம் வந்திருக்கலாம். அப்ப பி.யூ.ஸி. எனக்கு ஈஸியா ஸீட் கிடைச்சிருக்கும்…”

“அதுதா முடியலியே? இப்ப அதைச் சொல்லி என்ன பிரயோசனம்? ஏதோ இருநூறு முந்நூறுன்னா ஒழிஞ்சி போவுதுன்னு சமாளிச்சுக் குடுத்துடலாம். ஒரேமுட்டா ரெண்டாயிரம்னா எங்கே போக?”

“அறுப்பானதும் திருப்பிடறதாச் சொல்லி யாரிட்டன்னாலும் புரட்ட முடியாதாப்பா?” அவளுக்கு எப்படியேனும் இடத்தைப் பிடித்து விட வேண்டும் என்ற துடிப்பாக இருக்கிறது.

விவசாயத்துக்கே அறுப்பை நம்பிக் கடன் வாங்கியிருக்கும் நிலை. அதுவும் குறுவை ஒரு சூதாட்டம் தான். வந்தால் வந்தது; வராவிட்டால் போச்சு. பச்சை நெல்லைக் களத்திலேயே விற்றுத் தொலைக்க வேண்டும். அந்தக் கெடுபிடியைத் தெரிந்து கொண்டு வியாபாரி கொள்ளா விலைக்குப் பேசுவான். எங்கே போய்ச் சொல்லி அழ!

தந்தையின் மௌனம் அவளுக்குச் சங்கடமாக இருக்கிறது போலும்?

“ஏம்பா, நீங்க உங்க சங்கத்துக்கு கட்சிக்கின்னு எத்தினியோ உழக்கிறீங்க. எத்தினியோ பேர் உங்களுக்குத் தெரிஞ்சவங்க நல்லநிலையில் இருப்பாங்க. பதவியில் இருக்கிறவங்க கூடத்தான் யாரானாலும் இந்த ஒத்தாசை செய்ய மாட்டாங்களா? கேட்டுப்பாருங்கப்பா…”

“எங்கம்மா? எஸ்.எம். இருக்காரு? டெல்லில போயிப் பார்க்க முடியுமா?”

“இயக்கத்தில் சம்பந்தப்பட்டவங்க. எத்தினியோ பேர் தா அன்னிக்குத் தெரிஞ்சவங்க. ஆனா, எவ்வளவோ நல்லாத் தெரிஞ்ச வளவனே, இதுல சம்பந்தப்பட்டவரே, கட்டாயமா குடுக்கணும்னு சொல்லிட்ட பிறகு யார நம்பிம்மா போறது?…”

“இந்த வருசமும் வீணாப் போகக் கூடாதுப்பா…”

“பார்ப்பம். ஷார்ட் ஹான்ட் டைப்ரைட்டிங் படிக்கலாம். வேலை வாய்ப்புப் பத்தி ரேடியோவில கூடச் சொன்னாங்க, நாலு நா முன்ன. எதுக்கும் இப்ப புதுக்குடில விசுவநாதனப் போயிப் பார்ப்பம். அவருடைய அண்ணன் மகதான பெரிய டாக்டருக்குப் படிச்சி ஆஸ்பத்திரி வச்சிருக்காங்க. உனக்கு ஏதானும் நர்ஸ் வேலை, இல்லாட்டி அம்மை குத்துர சுகாதார இனிஸ்பெட்டரு வேலை முயற்சி செய்யச் சொல்ற…”

“போங்கப்பா, எனக்கு சீக்கு அழுகைன்னாலே புடிக்கல…”

புதுக்குடி பஸ் கிளம்பத் தயாராக இருக்கிறது. மணி இரண்டரையாகி விட்டது.

அந்தக் காலத்தில் இந்த விசுவநாதன், பெரிய வீட்டுப் பிள்ளையாக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. படித்துக் கொண்டிருந்தவர். இளம் புரட்சியாளராக இவர்களிடையே கனல் மூட்ட வந்தார். ஒவ்வொரு அமாவாசை இரவிலும் அவர்களைத் தேடிக் கூட்டம் நடத்த வருவார். கூட்டம் முடிந்ததும் அவரைப் பத்திரமான இடத்தில் கூட்டிக் கொண்டு விடுவது அந்நாள் பதினான்கு வயதுப் பையனாக இருந்த சம்முகத்தின் பொறுப்பு. கிராமம் கிராமமாகச் செல்வதும், தலைமறைவுத் தலைவர்களுக்கு உணவு கொண்டு செல்வதும், இரகசியக் கூட்டங்களுக்குச் செய்தி கொண்டு செல்வதும் அந்த நாட்களில் இவருடைய முக்கியப் பணிகள். உயர் வகுப்பில் பிறந்த தலைவர்களுக்கு அவருடைய அம்மா சோறு சமைத்துக் கொடுத்துக் கொண்டு போக வேண்டிய சந்தர்ப்பங்கள் பல. “எல, நீ கையால தொடாம தூக்கோட குடுத்திடு, நமக்குப் பாவம்…” என்பாள்.

வெயில் ஊமைப் புழுக்கத்தைத் தோற்றுவிக்கிறது. பஸ் நிறுத்தம் செல்லுமுன், சன்னிதித் தெருவிலேயே இறங்கி விடுகிறார்கள்.

காந்திக்குப் பஸ் நிறுத்தத்தில் இறங்கி ஓட்டலில் ஏதேனும் சாப்பிட்ட பின்னர் ஐயரைப் பார்க்கச் செல்லலாம் என்று எண்ணம். ஆனால் அப்போதைய நிலையில் தந்தையிடம் எதையும் சொல்ல அச்சமாக இருக்கிறது.

பழைய தெருவானாலும் வீடுகள் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன. இவர் வீடு மட்டும் என்றோ அடிக்கப்பட்ட பச்சை வண்ணம் மங்க, மெருகின்றித் தனியாகத் தெரிகிறது. அடுத்த வீடும் இதே போன்ற மூன்று கட்டு வீடுதான். ஆனால் அது முற்றிலும் புதுமையாக்கப்பட்டு, வாசலில் பெரிய எழுத்தில் ‘ரங்க மன்னார் ஆஸ்பத்திரி’ என்று எழுதப் பெற்ற பலகை தொங்குகிறது. டாக்டர் கீதா ரத்னம் எம்.பி.பி.எஸ். டி.ஜி.ஓ. டாக்டர் ரத்னம் எம்.எஸ். என்ற பெயர்களும் கண்களைக் கவருகின்றன.

‘இவர்களெல்லாம் உயர்சாதிக்காரர்கள்; வசதியுடையவர்கள். இந்த வசதி எனக்கு இருந்தால் நானும் இப்படி காந்திமதி எம்.பி.பி.எஸ். என்று போட்டுக்கொள்ள முடியாதா’ என்று ஒருகணம் நினைத்துக் காந்தி பெருமூச்செறிகிறாள்.

வாயில் வழியை ஒரு சாக்குப்படுதா மறைக்கிறது. சாக்குப்படுதா மறைப்பில் சாய்வு நாற்காலியில் கைகளை நீட்டிக்கொண்டு சாய்ந்து விசுவநாதன் புகை குடித்துக் கொண்டிருக்கிறார்.

கருகருவென்ற கிராப்பு முடியும், அந்தச் சிவப்பு நிறமும் ராஜ கம்பீரமும் எங்கே போயின? அந்த விசுவநாதனா?

முடி முழுதும் நரைத்து, முன் மண்டை வழுக்கையாகி சருமம் வறண்டு கண்கள் குழிவிழுந்து, ஒற்றைப் பல் மட்டும் முன்பக்கம் தெரிய, அவரை அடையாளம் கண்டுகொள்வதே சிரமமாக இருக்கிறது.

“வணக்கம் ஐயா…”

கையிலிருந்த பீடித்துண்டைப் பக்கத்துப் பீங்கான் கிண்ணத்தில் போட்டுவிட்டு விழிகளை நிமிர்த்துகிறார்.

“ஆரு? அட… அட? கிளியந்துற சம்முகமா?” குரலில் உற்காசம் பீறிடுகிறது. “உக்காரு, உக்காரப்பா.”

பெஞ்சியில் உட்காருகிறார். “உட்காரம்மா… நம்ப மக காந்திமதி.”

“தெரியுமே? இங்க படிச்சிட்டிருந்தாளே? இப்ப என்ன கோர்ஸ் படிக்கிறா?”

“எஸ்.எஸ்.எல்.சி.யோட நிறுத்திட்டமே? அதுக்குதா இன்னிக்கு வந்தது. உடம்பு ரொம்ப மெலிஞ்சி போயிட்டீங்களேய்யா?”

ஒற்றைப் பல் தெரியச் சிரிப்பு.

“அறுபதுக்கப்புறம் உடம்பு மெலியணும். கூடவே ஏழெட்டு ஆயிருக்குமே!”

“ஆமா! உன் மூத்த பையன் என்ன பண்ணறான்? முன்ன ஒருகா அவன் வேலை சம்பந்தமா வந்த. நான் கூட இங்க சுப்புசாமி வந்தான், சொன்னேன்…!”

இவர் முகம் சுருங்குகிறது.

“வேலையாயிருக்கிறான், மட்றாசில, கைத்தறி போர்டில..?”

“பணம் ஒழுங்கா அனுப்புறானா?”

“ஏதுங்க? கலியாணம் கட்டிக்கிட்டானே?”

“அப்பிடியா? அதென்ன, கட்டிக்கிட்டானேங்கற? நீங்க பார்த்துப் பண்ணலியா?”

“கண்காட்சி வேலை செய்ய ஒரு பிராமணப் பொண்ணு வந்து பழகிருக்கு. கட்டிக்கிட்டேன்னு கம்முனு எழுதிட்டான். எனக்கு அந்தப் பய பேரில எப்பவோ நம்பிக்கை விட்டுப் போச்சு. ஆனா, அம்மாகாரிக்குத்தா மனசில ரொம்ப வருத்தம். ஒரு கவுரதியா படிச்ச பையனுக்குக் கலியாணம் காட்சி செய்ய முடியாமப் போச்சேன்னு…”

“அப்படியா சமாசாரம்…? பிராமணப் பொண்ணுகதா பெரும்பாலும் அரிசனங்களைக் கட்டுகிறதெல்லாம்.” சிரித்துக் கொள்கிறார்.

“ராமசாமி எப்பிடி இருக்கிறான்? உங்கப்பாவுக்கு எழுபத்தஞ்சு வயசுக்கு மேல இருக்குமேடா?”

“ஆமாங்க, கண்ணு சுத்தமாத் தெரியல…”

“கள்ளுக்கடதா தொறந்தாச்சி. பொஞ்சாதிய இப்பவும் அடிக்கிறானா?”

“அடிக்க மாட்டாரு. ஆனா எதானும் பே சிட்டே இருப்பாரு.”

“அந்தக் காலத்தில் உங்கம்மா நல்ல உசரமா செவேல்னு எப்படி இருப்பா? இவன் சொல்லுவான். ஐயரே, இவ மட்டும் ஏனிப்படி நெறமா இருக்கா தெரியுமா? இவொ இந்த சேத்தில உழலுற அடிமப் பய ரெத்தத்தில வந்தவ இல்ல. கோட்டியூருபண்ண, தேவதானம், நூறுவேலி, பசுமடம், சத்திரம் கோயில்லாம் ஒரு ஐயிரு பாத்திட்டிருந்தாரு செவேல்னு ரோசாகணக்க… கடுக்கன் ரெத்தமாட்டுச் செவப்பு. கருகருன்னு பெரிய முடி இவாயி தொடுப்பாயிடிச்சி. புள்ள பொறந்ததும் இவப்பன் வூட்டம்மா கிட்டப் போயி நின்னானாம். துணி, கஞ்சிக்கு நொய்யரிசி, வெளக்கெண்ண, எல்லாம் குடுத்திட்டு, ‘ஏண்டா சங்கிலி பொட்டப் புள்ளன்னியே, கறுப்பா இருக்குதா, சேப்பா’ன்னு கேட்டாங்களாம். இது இங்க வெள்ளிக் குஞ்சாட்டம் இருக்குதுன்னு எப்படிச் சொல்லன்னு நின்னாராம்…”

சம்முகம் இப்போது சிரித்துக் கொள்கிறார். ஆனால் காந்தி இதே கதையைத் தாத்தா சொல்லிச் சீண்டக் கேட்டிருக்கிறாள். பாட்டிக்குக் கோபம் வரும்.

“ஆமா, ஒங்கிட்டத்தா வந்து சொன்னாரு சும்மா பச்ச புள்ள கள வச்சிட்டு என்னா பினாத்தற…” என்பாள்.

“ஆனா சம்முகம், உங்கம்மா அந்தக் காலத்தில் கம்பீரமாத்தான் இருப்பா. மிராசு ஆளெல்லாம் திமுதிமுன்னு அரிவாளும் தடியும் கம்பும் எடுத்திட்டு வர போலீசு ஒருபக்கம் வளைச்சிக்க, மடியில கல்லக் கட்டிக்கிட்டு ஆம்பிளகளுக்குக் கவண் எறியக் குடுத்தவல்ல உங்கம்மா?… அவ சாயல உம் பொண்ணுக்கு இருக்கு!”

சம்முகத்துக்குப் பெருமையாக இருக்கிறது.

“அதொரு காலம். சாட்டையடி வாங்கிட்டு சாணிப்பால் குடிச்சிட்டு ஏன்னு கேக்கத் தெரியாம இருந்தவங்கள மனிசங்கன்னு சொல்லித் தட்டி எளுப்பவே ரத்தம் குடுக்க வேண்டி இருந்திச்சு. இப்ப அதெல்லாம் சொன்னாப் புரியாது. ரமேசு எங்க இருக்கு இப்ப? வேலையாயிட்டுதா?”

“அவன் துபாய்க்குப் போயிட்டான். அவன் பணம் அனுப்பித்தான் இப்ப குடும்பம் நடக்குது சம்முகம்…?”

“அடாடா? ரமேசு துபாய்க்கா போயிருக்கு? எப்ப?…”

“ஆச்சே, ஒருவருசமாகப் போவுது. அவம்மா ஆன மட்டும் போகக்கூடாதுன்னு தடுத்துப் பார்த்தா. அதுக்காகவே ஒரு கலியாணத்தையும் கட்டிவச்சா. நான் வேண்டான்டின்னேன். பெண்சாதி முகத்தப் பாத்திட்டு இருந்திடுவான்னு அவ கணக்குப் போட்டா. அது தப்புக்கணக்காப் போச்சி. அவளே இவனப் போங்க, திரைக்கடலோடியும் திரவியம் தேடணும்னிட்டா. இளமையில் விரகம்ங்கறது தொடர்ந்து வருது. நீங்க அந்தக் காலத்திலே குடும்பம் பொஞ்சாதின்னு பாராம, குண்டக் கையில வச்சிட்டு விளையாடி எதிர்க்கட்சி கட்டினிங்க. பின்னால அதும் போதாதுன்னு புடுங்கி எடுத்திட்டிருக்கா. கலியாணம் பண்ணி மூணாம் மாசமே போயிருக்கிறான். அவளுக்குப் பணம் வரும். இங்கயும் எதோ பிச்சை போடுறான்.”

சம்முகத்துக்கு நா எழவில்லை.

“பொண் குழந்தைங்க…!”

“சாவித்திரியக் கேக்குறியா? டாக்டருக்கு ஸீட் கிடைக்கல. ஃபார்வர்ட் கம்யூனிட்டின்னு ஒரு பிசுக்கு இருக்கே! ஸீட் கிடைச்சா வீட்டை வித்தாலும் படிக்க வச்சிடலான்னு பார்த்தேன். ஊஹும்… பி.எஸ்.ஸி. ஜூவாலஜி படிச்சிட்டு கிண்டர்கார்டனில் எழுபது ரூபா கொண்டாரா. கல்யாணம் பண்ணணும். காலங்கழிச்சுப் பெத்த ஒரு பொண்ணும், ஆணும் இதுக்கே ஒண்ணும் செய்ய முடியலேன்னு வயிசு காலத்தில தாபப்பட்டுப் புடுங்கி எடுக்கறா. இந்தக் கத கிடக்கட்டும். நீ எங்க, பொண்ணக் கூட்டிட்டு வந்தே!”

“அத ஏங் கேக்கிறீங்கையா! நீங்க என்னமோ ஃபார்வர்ட் கம்யூனிட்டி. எடம் கிடைக்கலன்னிங்க. தாழ்த்தப்பட்ட இனம், இங்கயும் ரெண்டாயிரம் குடுத்தாதா ஸீட்னு பச்சையாக் கேட்டுட்டானுவ. எங்க போயிச் சொல்லி அழ?”

“எம்.பி.பி.எஸ்.ஸுக்கு செலக்ஷனுக்கா போயிட்டு வர?”

“டாக்டருக்கில்லீங்க! பாலிடெக்னிக், மூணு வருஷம் எலெக்ட்ரானிக்ஸ். வளவனைத் தெரியாதுங்களா? அவனே தான் கூசாம ரெண்டாயிரம் கொண்டாந்து டொனேசன் குடுத்திடுங்கன்னா கண்டிசனா! இது நல்ல மார்க் எல்லா தகுதியும் இருக்கு. ஆனா உள்ள பாருங்க, இப்பிடி…”

“ரெண்டாயிரம் புரட்டிக் குடுத்திட்டா, படிச்சி முடிச்சிடுவ. பிறகு வேலைக்குச் சில ஆயிரங்கள். மூணு வருசத்தில் இன்ஃப்ளேஷன் கணக்குப் போடணும். பிறகு புரோபேசன் அப்படி இப்படின்னு ஆயிரங்களைக் குடுத்து ஆயிரங்களை வாங்கிச் சேர்க்கணும். இதுக்குப் போயி ஏன் அழுவுற? இப்ப புருசன் பொஞ்சாதி வெவகாரத்திலேந்து எல்லாம் வியாபாரம் தான். லாபத்தை முன்னிட்டு அடிபிடிப் போட்டிதான்…”

“மனசுக்கு ரொம்பக் கஷ்டமாயிருக்கு. இப்ப என்ன பண்ணுவம்னு தெரியல. உங்ககிட்ட எதானும் கேட்டுட்டுப் போகலான்னுதா வந்தது. யோசனைதா. நாம ஒரு கொள்கை, சித்தாந்த வழி நிக்கறவங்க, பகிரங்கமா கேக்கறதுக்கு உடன்பட்டுடறது சரியில்லன்னு தோணுது…”

“போடா, உன் சித்தாந்தத்தையும், கொள்கையையும் கொண்டு உடப்பில போடு…”

அவர் உள்ளே எழுந்து செல்கிறார்.

காந்தி முகத்தைச் சுளித்துக்கொண்டு நெளிகிறாள்.

சம்முகமோ சுவரில் வரிசையாக மாட்டியிருக்கும் பழைய நாளையப் படங்களைப் பார்வையிடுகிறார்.

இளமை பொங்கும் நேரு விஜயலக்ஷ்மி, கமலா நேரு, சுபாஷ் போஸ்; காந்தி…

“அந்தக் காலத்துல இவரு எப்படி இருப்பார் தெரியுமா? இவுரு பாடினா அப்படியே மந்திரத்தால கட்டுப்போட்டாப்பல அதிலியே நிலச்சிப் போவோம். அரிகேன் விளக்கொளியில் எத்தனை அமாவாசைக் கூட்டங்கள்! இவருக்கு… இந்த கதின்னா… இவங்கப்பா அந்தக் காலத்துல வக்கீல் படிச்சிட்டு காங்கிரசில் சேந்தாரு, பின்னாலே விட்டுட்டாரு. அப்பாக்கும் மகனுக்குமே எதிர்க்கட்சி, சண்டை. நாப்பது வேலி குடித்தனம்…”

‘இதெல்லாம் எதற்கு சொல்லுறீங்க?’ என்று கேட்க முடியாமல் காந்தி தலையைப் பிடித்துக் கொண்டிருக்கையில் அவர் முகக் கடுப்புடன் திரும்பி வருகிறார். பிறகு வாசற்படியில் நின்று அடுத்த சுவர் ஆஸ்பத்திரி பக்கம் எட்டிப் பார்த்து, “சிங்காரம்?… டே சிங்காரம்…?” என்று குரல் கொடுக்கிறார்.

“என்ன வேணுங்கையா, நான் செய்யிறேனே?”

“ஒண்ணுமில்ல. நீ உக்காந்துக்க.”

சிங்காரம் ஆஸ்பத்திரிக்குரிய வெள்ளை உடுப்புடன் வருகிறான்.

“அங்க யாரிருக்கா? பழனி, இல்லாட்ட. ஆருமில்ல?”

அவர் முணுமுணுவென்று பேசுவது யார் காதிலும் விழவில்லை.

ஆனால் ஒட்டலிலிருந்து சாப்பாடோ எதுவோ வாங்கிவரச் சொல்கிறார் என்று சம்முகத்துக்குப் புரிந்துவிட்டது.

பிறகு வந்து உட்காருகிறார். “என்ன சொல்லிட்டிருந்தேன்…”

“ஆமாப்பா, எல்லாரும் மதம் மாறுறாங்களாமே? என்ன கேலிக் கூத்து பாரு? அஞ்சு நா முன்ன, சீனுவாசன் வந்திருந்தான். பூதலூரு, அவன் தாம்பா, சட்டப்படி 35-65க்கு ஒத்துக்காம சண்டியன் கோனாரு இழுக்கடிச்சி இவனும் விட்டேனா பாருன்னு கேசு நடத்தி ஜயிச்சான். உனக்குத் தெரியும்…”

“ம், சொல்லுங்க?”

“அவன் சொல்லிட்டிருந்தான். என்னங்க போராட்டம் போராடுகிறது? இன்னும் எங்க சேரில கோடை வந்தா குடி தண்ணி இல்ல. மனிதன் செத்தா புதைக்கச் சுடுகாடு இல்ல. ஒட்டுமொத்தமா மதம் மாறுறோம்னு அறிக்கை வுடலாம்னு பார்க்கிறேன்னு…!”

சொல்லிவிட்டு ஆஹாஹா என்று சிரிக்கிறார்.

சம்முகத்துக்குச் சுருக்கென்று ஊசி குத்துகிறது. படலையைத் தூக்கி எறிஞ்சிட்டுத் தோப்பு வழி பொணத்தைக் கொண்டு போங்கடா என்றாரே, என்ன செய்தார்களோ? இந்த நெருக்கடிகளில் கூட விட்டுக் கொடுக்காத சண்டியர்கள் இருக்கிறார்கள்.

“நீங்க சிரிக்கறீங்க. அன்னிக்குப் போராடித் தலைதூக்கியது உண்மைதான். ஆனா, இன்னும் போராடுற நிலையிலேயே இருக்கிறோம்ங்கிறத நினைச்சா எதுவும் தோணல. முன்ன வெளியாளுக்கு இருந்த அநுதாபம் ஆதரவுகூட இன்னிக்கி இல்ல. உண்மை இதுன்னா நம்பக்கூட மாட்டாங்க.”

உள்ளிருந்து அம்மாள் தலை நீட்டுகிறாள்.

“எல போட்டிருக்கு. வரச்சொல்லுங்க!”

“எல இருக்கா? நா ஆளனுப்பிச்சேனே!”

“வாப்பா, சம்முகம், கால் கை கழுவிவிட்டு வா! போம்மா உள்ள!”

கொல்லைக் கிணற்றடியில் சென்று கை கால் கழுவிக்கொண்டு வருகையில் கூடத்தில் இரண்டு தையல் இலைகளைப் போட்டு சோறும் குழம்பும் பரிமாறி இருக்கிறாள் அம்மாள்.

காந்திக்குப் பசிதானென்றாலும் இப்படிச் சாப்பிட உட்காரப் பிடிக்கவில்லை.

“வெறும் சோறும் குழம்பும்தானோ? ஏண்டி? ஒரு அப்பளம் பொரிக்கக்கூடாது?”

“எண்ணெயில்ல!” என்று மறுமொழி வருகிறது.

“என்னடி எதைக் கேட்டாலும் இல்ல இல்லன்னிண்டு! சம்முகம் எனக்கு எத்தனை நாளைச் சாப்பாட்டைக் கையில் தொடாமல் கயிற்றைக் கட்டி எடுத்துண்டு ஓடி வந்திருக்கிறான்? என் உசிரைக் காப்பாத்தியிருக்காண்டி! துப்பாக்கியால போகாத உசிர், பசில போயிடாதபடி காப்பாத்தினவண்டி!”

“இப்ப நா என்ன வச்சிண்டா மாட்டெங்கறேன், அஞ்சும் பத்தும் பாத்து சாமான் வாங்கிப் போடறது தட்டுகெட்டுப் போறது.”

சம்முகத்துக்கு உண்மையிலேயே வந்து அகப்பட்டுக் கொண்டோமே என்று இருக்கிறது. சாப்பிட்டு முடித்து இலையைச் சுருட்டிக்கொண்டு எழுந்திருக்கிறார். அவருக்கு முன்பே காந்தி முடித்துவிட்டாள்.

“ஏண்டா, மோர் ஊத்திக்காம அதக்குள்ள?”

“வாணாங்க, இதுவே வயிறு நிரம்பிடுச்சி…”

அவருக்குக் குரல் கம்மிப் போகிறது.

“சம்முகம், புருசன் சம்பாதிக்கல, அவனால ஒரு ஆதாயமுமில்லன்னா, கட்டின பெண்சாதி கூட மதிக்கிறதில்ல…”

அந்த வீடு பெண்கள் குடும்பம் குடித்தனம் என்றில்லாமல் வருபவர்களும் போகிறவர்களும் தங்குபவர்களுமாக இருந்திருக் கிறது. பல முறை போலீசார் சோதனை போட்டதுண்டு. இவரைக் குடும்பத்திலிருந்து விலக்கியே வைத்திருந்தார்கள். வக்கீலைப் பார்க்க வந்தாலும், ஓடி ஒளிய வந்தாலும் இந்த இடம் சொந்தம். டிபன் காரியரில் விறைத்துக் கிடக்கும் மிச்சச் சோற்றை உண்டு, அக்கிணற்றில் நீரிறைத்துத் தேய்த்து வைத்துவிட்டு நடையாகவே கிராமத்துக்கு ஓடிய நாட்கள் எத்தனை!

இப்போது கிணற்றைத் தொடலாமோ என்ற கூச்சம் ஏன் வருகிறது? தாம் இங்கே வந்திருக்க வேண்டாம். அநாவசியமான உளைச்சல்கள்.

மீண்டும் வாயிலுக்கு வருகையில் வாசலில் ஒரு சிவப்பு, கறுப்பு வண்ணம் இசைந்த கார் நிற்கிறது.

வெளியே வரவே பிடிக்காமல் அட்டையாக மனம் சுருங்கிக் கொள்கிறது.

காந்தி பெஞ்சியோரம் நிற்கிறாள்.

தொப்பி போட்டாற் போன்று தலைமுடியும் பெரிய நிழற் கண்ணாடியுமாகச் சவடாலாக நிற்பவன் ஆறுமுகத்தின் மகன் என்று உடனே புரிந்து கொள்கிறார்.

“என்ன மாமா? ரமேஷ்கிட்டேந்து லெட்டர் வருதா? நம்ம ப்ரஃண்ட் ஒருத்தரு சில விவரம் கேட்டிருந்தாரு போயி எழுதறேன்னு சொன்னான். நிதம் இந்தப் பக்கம் வரதுதான் விசாரிக்க மறந்திடுவேன்…”

“ஒண்ணும் வரலியே? உனக்கே போடுவான். ஏம்பா நா உங்கப்பாவப் பாக்கணுமின்னேன். ஆளைக் காணவேயில்லை. பெரிய மனுசங்களாயிட்டீங்க…!”

“ஓ, அதெல்லாம் இல்ல மாமா. அப்பா சிங்கப்பூர் மலேயால்லாம் போயிட்டு போன வாரந்தா வந்தாரு. அதோட, ரைஸ்மில்ல மார்டனைஸ் பண்ணுறது சம்பந்தமா அலஞ்சிட்டி ருக்காரு. ஒருதரம் முன்ன அட்டாக் வந்ததிலேருந்து எச்சரிக்கையா வேற இருக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்காரு…”
“சொல்ற மாமா, நா வரட்டுமா? விசாரிச்சிட்டுப் போலான்னு வந்தேன்.”

திரும்பும் போது காந்தியின் பக்கம் அவன் பார்வை நிலைக்கிறது.

“பை த பை… நீங்க, கோபாலு ஸிஸ்டர்ல்ல?”

அவள் கண்கள் அகலுகின்றன. “ஆமாம், அண்ணனத் தெரியுமா?”

“தெரியாம? காலேஜில ஒண்ணாப் படிச்சமில்ல?”

கறுப்புக் கண்ணாடியைக் கழற்றிக் கைகளில் தட்டிக் கொண்டே அவளைப் பார்த்து முறுவலித்து “வரேன்” என்று விடை பெறுகிறான்.

அடுத்த நிமிடம் கார் கிளம்பிச் செல்கிறது.

“சம்முகம்! ஏன் அங்கியே நின்னிட்ட?”

“நிக்காம என்ன செய்யிறது.”

“பயலத் தெரியிதல்ல? ப…லே… எமகாதகன். அப்பனின் சாமர்த்தியத்தில் மூணு பங்குகூட இருக்கும். இவம் பேரு தெரியுமா? நினைப்பு இருக்கா?”

“ஏன் இல்ல, இவந்தா புல்கானின்…”

“அடுத்த பையன் ஜவஹர், பிறகு காமராஜு, கடசிப் பையனுக்கு என்ன பேரு தெரியுமா சம்முகம்?”

அவர் சிரிக்கிறார். இவருக்கு சிரிப்பு வரவில்லை.

“வுடுங்கையா அந்தப் பேச்சை. நன்றி கொன்ற ஆளுங்களப் பத்தி என்ன பேச்சு? நாயவுடக் கேவலம். இது மாதிரி ஆளுங்களாலதா இந்த நாடே கெட்டுப் போச்சு. தலைன்னு ஒண்னு ஒழுங்கால்லாம…”

“தலை நிறைய ஆயிட்டது. அதான் ஆபத்து. இந்த பிரும்மா, நாலு முகத்தை திக்குக்கொண்ணா வச்சிட்டு படச்சிப் போடுறாரு அதான் ஒருத்தன் போற வழி ஒருத்தன் போறதில்ல…”

“உங்களப் பாக்கணும்னு நினைச்சேன். பார்த்தாச்சி, நா வரேன் ஐயா…”

“இரு, போகலாம், நா ஒண்ணு சொல்ற, உனக்கு இரண்டாயிரம் இந்தப் பயகிட்ட ஒரு வார்த்த வுட்டாப் போதும். பேசாம வாங்கி, பெண்ணைச் சேரு. இப்ப இவனுகளுக்கு ஒரு பொருட்டில்ல அது.”

சம்முகத்துக்குக் கோபம் கொள்ளவில்லை.

“என்னையா! நீங்க ஒண்ணு, வெளயாடுறீங்க… காந்தி வாம்மா, போவலாம்!”

“என்னடா, கோபிச்சிட்டுப் போற? இப்படி எல்லாம் பாத்திட்டு உக்காந்திருக்கிறேன். பிடுங்கல் மென்மையான உணர்ச்சிகள், தன்மானம், இல்லே நேராகப் பார்க்கும் வீரம் எதுவுமே இப்ப செல்லுபடியாகப் போறதில்ல… அதென்ன, கால்ல, நானும் அப்பவே புடிச்சிப் பார்க்கிறேன். வீங்கிருக்கிதா என்ன?”

“தெரியலய்யா, ஒரே வலி, வரணுமேங்ற ஒரு நிர்ப்பந்தம், வந்தேன்…” அருகில் அழைத்துக் குதிகாலைத் தொட்டுப் பார்க்கிறார்.

“…கீதா ஆறு மணிக்கு மேலதா வருவா. இரேன் போகலாம்?”

“டாக்டர் இங்க இல்லையாய்யா? என்னால இருக்கிறதுக்கில்ல. நடவு வேற.”

“அவுங்க தஞ்சாவூர்லல்ல இருக்காங்க. இங்க வந்து போவாங்க. இங்கேயே சிங்காரம்தான் குட்டி டாக்டர். பிரசவ கேசெல்லாம் துரையம்மா பாத்திடுவா. சிங்காரத்துக்கிட்ட போயிக்காட்டி மருந்து வாங்கிட்டுப்போ. சிறங்கா வருமோ என்னமோ? எனக்குன்னா, சித்தப்பா, நீங்க அது சாப்பிடக் கூடாது. இது சாப்பிடக்கூடாது, ஸ்மோக் கூடாதுன்னு ஒரே தடையுத்தரவு. சக்கரை உனக்கொண்ணும் இருக்காது. உப்பெண்ணெய் காச்சி ஒத்தடம் கொடு.”

சம்முகம் கடைசியில் சிங்காரத்தையும் பார்க்கவில்லை.

– தொடரும்…

– பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்.

– சேற்றில் மனிதர்கள் (நாவல்), முதற் பதிப்பு: 1982, தாகம் பதிப்பகம், சென்னை.

நன்றி: https://www.projectmadurai.org/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *