(பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்.)
அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18
அத்தியாயம்-13
இரண்டு நாட்களுடன் சம்முகத்தின் நோய் குணமாகி விடவில்லை. ஊசி போட்டு, ஒத்தடம் கொடுத்து, பழுத்து அதைக் கீறி வினையை வெளியாக்க ஒரு வாரம் ஆகிறது. டாக்டரம்மா நல்ல கைராசிக்காரி. காலையில் தினமும் பொன்னடியான் வந்து அவரை டாக்டர் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான். சங்கத்து அலுவலகத்தில் ஒரு புறம் பாயை விரித்துப் படுத்தவாறு பல புத்தகங்களைப் படித்துக் கொண்டும் மன உளைச்சல் நினைவு வராமல் வருபவர் போகிறவர்களிடம், பழைய நண்பர்களிடம் பேசிக் கொண்டும் ஆறுதலாகக் கழிகிறது. சோசலிசப் பாதையில், பாரதி பாடல்கள், மாதர் முன்னேற்றம், புதிய சிந்தனைகள், என்ற தலைப்புகளில் சிறு புத்தகங்களை ஆழ்ந்து படிக்க முடிகிறது.
அலுவலகத்துக்குப் பின்னால் ஆறு ஓடுகிறது. கற்களைக் கூட்டி வைத்து, தகர டின்னில் சுடுநீர் போட்டுக் கொடுத்து, டீக்கடையில் இருந்து நாஸ்தா வாங்கிக் கொடுத்துப் பொன்னடியான் மிக அருமையாகப் பணிவிடை செய்கிறான். காலில் பிளவையைக் கீறிவிட்ட அன்று, ஆசுபத்திரி பெஞ்சியிலேயே மாலை வரை படுத்திருக்கிறார். பிறகு ஒரு குதிரை வண்டி வைத்துக்கொண்டு திரும்பி வருகின்றனர். அடுத்து இரண்டு நாட்களில் ஊர் திரும்பும் நம்பிக்கை வந்துவிட்டது. கையிலிருந்த நூறு ரூபாயில் வண்டிச் செலவு, நாஸ்தா, காபிச் செலவே ஐம்பது ரூபாயாகி விட்டன. ஊசி மருந்து பன்னிரண்டு ரூபாய். மற்ற சில்லரைச் செலவு பத்து ரூபாய். மீதிப் பணத்தை எண்ணிப் பார்க்கையில் இருபது ரூபாய் தேறவில்லை. டாக்டருக்குக் கொடுக்கவேண்டுமே?
“நீங்க அதப்பத்திக் கவலப்படாதீங்க காம்ரேட். நீங்க நல்லபடியாகி ஊருக்குத் திரும்பணும்…” என்று அன்பு பாராட்டும் இளைஞனிடம் மனம் ஒன்றிக் கொள்கிறது. அவனிடம் சாடையாகத் தன் மகளைக் கட்டுவது பற்றிக் கூடத் தெரிவித்திருக்கிறார்.
“ஒரு நட வீட்டுக்குப் போயி கவலப்பட வாணாம்னு சொல்லிட்டு வரட்டுமா காம்ரேட்?” என்றான்.
“வாணாம். அவுங்களுக்குத் தெரியும். எதுக்கு வீண் செலவு, நடை?”
அவர் மறுத்ததன் காரணம், அந்த எண்ணம், உள்வினையாக மனசுக்குள் புரையோடிக் கொண்டிருக்கிறது. காந்தி திரும்பி வந்திருக்கக் கூடும் என்றே நம்பிக் கொண்டிருக்கிறார். ஏனெனில், அவர் கெடு வைத்த இரண்டு நாட்கள் தாண்டிவிட்டதால், லட்சுமி பஸ் ஏறி அலுவலகத்துக்கு வந்திருப்பாள். வரவில்லையாதலால், மகள் வந்திருப்பாள் என்று திடம் கொள்கிறார். மறுநாள் இறுதியாக பிளாஸ்திரி போட்டுக் கொண்டு ஊர் திரும்பவேண்டும் என்ற நினைவில், முன்னிரவு பொன்னடியான், தங்கசாமி ஆகியோரிடம் பல விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார்.
விவசாய சங்கத்தின் கிளை அலுவலகம் கிளியந்துறைக் கடைவீதியில் வெறுமே பெயருக்குத்தான் இருக்கிறது. அதை வேறு பக்கம் போட்டு, ஆட்கள் வந்து வசதியாகச் செய்தி படிக்கவும், தங்கள் பிரச்னைகளைப் பேசி முடிவெடுக்கவும், ஓர் ஒழுங்கு செய்யவேண்டும். மேலும் வாரம் ஓரிரு முறை வந்து பொன்னடியான் வகுப்பு நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யவேண்டும்.
காலையில் அவர் எழுந்து பல் துலக்கி முகம் கழுவிக் கொண்டு, வெளியே டீக்கடையில் வந்து தேநீர் அருந்துகையில், பழைய நண்பர் ஒருவர் வருகிறார்.
“யாரு? கிளியந்துற சம்முகமா? ஏம்ப்பா, ஒனக்கு ஒடம்பு சரியில்லன்னு சொன்னாரு தங்கசாமி?”
“ஒண்ணில்ல அண்ணாச்சி. கால்ல ஒரு பொளவ புறப்பட்டு இருந்திச்சி…”
பண்ணக்குடி அண்ணாச்சி என்பார்கள். அந்தக் காலத்தில் இவர் அடியாள்களுக்குக் கிலியூட்டுபவர். கொலைக்குற்றம் சாட்டப்பட்டு ஏழு வருடங்கள் சிறைத்தண்டனை அநுபவித்து விட்டு வந்தவர். அவர் கண்களைச் சுருக்கிக் கொண்டு அருகில் வந்து பார்க்கிறார். நெடுநெடுவென்ற அந்த உயரம் தான் வளையாமல் இருக்கிறது; முடி பொல்லென்று நரைக்க, வற்றிச் சுருங்கி முகமே அடையாளம் தெரியவில்லையே?
“ஆமா. ஒங்கிட்ட ஒண்ணு கேக்கணுமின்னு. உம்மக, படிச்சிட்டிருக்கா, கலியாணம் கட்டிட்டியா?”
சம்முகத்தினால் மனவெழுச்சியை அடக்கிக் கொள்ள முடியவில்லை.
“என்னடா? என்ன விசயம்?”
“ஒண்ணுமில்லிங்க அண்ணாச்சி உள்ள வாருங்க…”
“… நா ஏங்கேட்டன்னா, ஒரு ஏழெட்டு நா மின்ன, உம் பொண்ண கொடிமங்கலம் ஐயர் கிளப்பில பாத்தேன். உம் பொண்ண எனக்குத் தெரியுமே? இங்கதான படிச்சிட்டிருந்திச்சி? அன்னக்கி எதோ சர்ட்டிபிகேட் வாங்கணுமின்னு கூட்டிட்டு வந்திருந்தியே?…”
இதயம் துள்ளி வாய் வழியாக வந்து விடும் போல் துடிக்கிறது.
“ஆறுமுகத்துப் பய, அதா கோனான் மகளக் கட்டிக்கிட்டானே, அவளுக்குப் பெறந்த பய, குருசாவா, ஸ்டாலினா? அவம் பேரு எனக்கு ஞாபகமில்ல, சாலின்னு கூப்பிடுவா. அவம் பின்னோட மோட்டார் சைக்கிள்ள வந்து எறங்கிச்சி. நா. எதுர பஸ்ஸுக்கு நின்னிட்டிருந்தேன். போயி சாப்பிட்டுப் போட்டுப் போறாங்க அட, இதென்ன ஏடா கூடமா இருக்கு சம்முவத்தும் பொண்ணு போல இருக்கேன்னு நினைச்சிட்டுக் கிளப்புப் பக்கம் போயி நின்னே. ஐயிரு எனக்குத் தெரிஞ்சவருதான்.”
சம்முகத்தின் கண்கள் அடக்க முடியாமல் குளம் நிரப்புகின்றன.
“அண்ணாச்சி, பொண்ணுகளுக்குச் சொதந்தரம் குடுக்கணும்னு சொல்றாங்க. நல்லது கெட்டது தெரியாம, நாலு பேரறியக் கலியாணம்னு கெளரவமா முடிக்காம, இப்படிப் பேச்சுக்கிடமாக்கிடிச்சேன்னு தாங்க முடியல…”
“அப்ப… உன்னக் கேக்காமதா ஓடிப்போயிரிச்சா?”
“ஒண்ணுமில்லீங்க. படிக்கணும்னு அதுக்கு ரொம்ப ஆச. தொழில் படிப்புன்னு சேத்துடணும்னுதான் போனேன். அவங்க கூசாம ரெண்டாயிரம் வேணும்னு கேட்டாங்க. நானெங்க போக? அப்ப, இந்தப் பய, வூட்டுக்கே வந்து நாஞ் சிபாரிசு பண்ணுவே, எங்கப்பாரு சொன்னாப் போதும்னு ஆச காட்டினான், நானும் இருந்தேன். சண்ட போட்டு வெரட்டி இதையும் கண்டிச்சேன். காலு உபாத வேற. இவ, ஒடயாரு வீட்டுக்குப் போறன்னு ஓடிப்போயிருக்கா. தெரிஞ்சு போகல அண்ணாச்சி! அப்பன், பொண்ணு வேட்டயாடுறவன்னு பிரசித்தம். இப்ப மகன் தொடர்ந்திட்டிருக்காம் போல. நம்ம குடிலயா கால வைக்கணும்…” வசைகள் தொடருகின்றன.
“ரொம்பச் சல்லியம் பண்றானுவ இதெல்லாம் திட்ட மிட்டுச் செய்யிற வேலை சம்முவம். கட்டுக்கோப்பா இருக்கிற ஓரமைப்ப ரொட்டித் துண்டப் பிக்கிறாப்பல நினைச்சிட்டு ஊடுருவிப் பிச்சிப் போடுறாங்க. நாம் பாரு, நேத்து ஊருல இல்ல. பொண்ணுக்கு ஒரு மாப்பிள தேடுற விசயமா போயிட்டே. போன எடத்தில நினைச்சாப்பல வரமுடியாம தவக்கமாயிடிச்சி. வந்தா, நம்ம மாடு அவுங்க கொல்லையில போயி வாழய மேஞ்சிடிச்சாம். மேய்க்கிற பயலப் போட்டு அடிச்சி கைய முறிச்சிட்டானுவ. வந்ததும் வராததுமா அவனக் கூட்டிட்டு ஆசுபத்திரில போயி காட்டிட்டு இப்ப கேசு குடுக்க வந்தேன்…”
சம்முகத்துக்குத் தலை சுற்றுகிறது.
மனிதர் எல்லோரும் உயிர் தழைக்க அவர்கள் மண்ணில் விளைவு காணப் பாடுபடுகிறார்கள். இந்த உற்பத்தி இல்லை யென்றால் வாழ்க்கையின் அடிநிலையே பெயர்ந்து போகும். இந்த உற்பத்தியில் ஈடுபடும் மக்களை அலைக்கழித்து அவர்களை வாழ விடாமல் செய்வதற்குத்தான் எத்தனை சக்திகள்! மனித வாழ்வின் நல் ஆக்கத்துக்குத் துணை நிற்கவேண்டிய அரசியல் சக்திகள் ஆதிக்க சக்திகளாகப் போட்டிக்களத்தில் இறங்கிப் போராடுவதிலேயே மனித சக்திகள் எல்லாம் விரயமாகின்றன. இந்தப் புதுக்குடிக்கு வரும் கிராம மக்கள் பெரும்பாலும் அடிதடி, ஆசுபத்திரி, வம்பு வழக்கு, கோர்ட்டு கச்சேரிக்குத்தான் வருகிறார்கள். முன்பெல்லாம் இவ்வளவு போக்குவரத்து, இவ்வளவுக்குத் தீவிர விவசாயம், முன்னேற்றம் இல்லைதான். ஆனால் இதெல்லாமும் மனிதர் வாழ்வை உயர்த்துவதைக் காட்டிலும், உடைக்கும் பணிக்கே உதவிக் கொண்டிருக் கின்றனவே?
அவர் சென்றபின் இவனுக்கு நிலை கொள்ளவில்லை. விசுவநாதனிடம் சென்று இந்தப் பெண் ஓடி விட்டதைச் சொல்லி விட வேண்டும் போல் இருக்கிறது. எதுவும் சாப்பிடவுமில்லை. யாருக்காகவும் காத்திருக்கவில்லை. அவராகவே பஸ்ஸைப் பிடித்து ஏறி, ரத வீதிக்குச் சென்று இறங்குகிறார். விசுவநாதன் வாசலில்தான் உட்கார்ந்திருக்கிறார். கண் சரியாகத் தெரியாததால் மகள் பேப்பர் படித்துக் காட்ட வேண்டும் என்று காத்திருக்கிறார்.
“வணக்கம் சாமி.”
“என்னடா, சம்முகம், காலங்காத்தால வந்திட்ட? ஊருக்குப் போகப் போறியா இன்னிக்கு?”
“இன்னிக்குத்தாம் போகணும். உங்ககிட்ட ஒரு விசயம்…”
“என்னடா, பெரிய விசயம். மருந்து – ஊசிக்குத்தான் பணம் குடுத்திட்ட, கட்டுக் கட்டினவனுக்கு அஞ்சு ரூபா குடு. உனக்கோ சர்க்கரை அது இது ஒண்ணுமில்ல. வயல்ல நடக்கிறவனுக்கு அதெல்லாம் ஏன் வருது? டாக்டருக்கெல்லாம் நீ ஒண்ணும் குடுக்கவாணாம், போ!”
உளம் நெகிழ்ந்து போகிறது.
“ரொம்ப நன்றிங்க. இது… இது மட்டுமில்லய்யா, அந்தக் கழுத. அதா மவ, அந்தப் பய மகங்கூட, அதா அன்னக்கி வந்திருந்தானே, அவங்கூட சினிமால வாராப்பல மோட்டார் சைக்கிள் பின்னால் குந்திட்டுச் சுத்துறாப்ல. கொடிமங்கலம் ஐயர் கிளப்பில பாத்தேன்னு பண்ணக்குடி அண்ணாச்சி இப்ப சொன்னாரய்யா. அப்படியே வெட்டிப் போடணும்போல இருக்கு. என் குடில, என் ரத்தத்தில பெறந்து எங்க எனத்துக்கே துரோகம் செஞ்சிட்டாளே? கேட்டதிலேந்து பொறுக்கலய்யா!”
“அட… பாவி. இதுக்கேண்டா நீ இப்பிடி அழுவுறே? அதா மூலையில பாத்தியா…”
திண்ணையின் மேற்கு மூலையில் வைக்கோல் சவுரி கூளம் தொங்க ஒரு குருவி உட்கார்ந்திருக்கிறது.
“என் கண்ணுக்கு நல்லாத் தெரியல இப்ப. ஆனா, அதுங்க விர்விர்ரென்று போறதும் வரதும் குப்பையும் கூளமும் கொண்டு போறதும் நன்னாத் தெரியிறது. ஓடி ஓடிக் கூடு கட்டும். பிறகு மாத்தி மாத்திக் குஞ்சு பொரிச்சதும் சோறு குடுக்கும். சரியா இருபத்தோராம் நாளு, கூட்டவிட்டு குஞ்சு வெளியே வரும். பறந்துபோக அம்மாவும் அப்பாவும் சொல்லிக் கொடுக்கும். பறந்து போயிடும். பிறகு அது வரவே வராது. போயே போயிடும். இதே காரியமா நான் வாட்ச் பண்ணிருக்கேன். அறுப்பான நிலத்த மறுபடி காயப் போட்டு, கிடயவிட்டு தண்ணி வுட்டு உழுது விதக்கிறாப்பல, இதுங்க கூட்டை சீர் பண்ணும். மறுபடி முட்ட வைக்கும். திரும்பிக் குஞ்சு பொரிச்சு ஆகாரம் குடுக்கும். ஒரு ஜோடி, பாரு மூணு தரம் முட்ட வச்சதும் ஆண் என்ன பண்ணிச்சிங்கற? புதுசா ஒரு பெட்டயக் கூட்டி வந்திடுத்து. அந்தக் கிழப் பெட்டைக் குருவி நேத்து தனியா உக்காந்து இருந்தது…”
அவர் சிரிக்கிறார்.
“நீங்க சிரிக்கிறீங்கய்யா…”
“சிரிக்காம என்ன செய்யலாம்ங்கற? இதுல ஒரு தத்துவம் இருக்கு சம்முகம். மனுசனுக்குப் பகுத்தறிவு இருக்குன்னு பேரு, அதுங்களுக்குப் பகுத்தறிவு இல்ல, ஆனா, ‘இன்ஸ்டிங்ட்’ங்கற உணர்வு – இயல்புணர்வு இருக்கு. அததுபடிக்கு அதது நடக்கிறது. எல்லா உயிர்களுக்கும் இனப் பெருக்கம் குறிக்கோள். அதுவே சாவுது, இல்லாட்டி பிற பிராணிகளுக்கு இரையாகுது. ஒரு இனப் பட்சியோடு இன்னொரு இனப்பட்சி அநாவசியமாச் சண்ட போட்டு பாத்திருக்கியா நீ? மனிசன்தான், பகுத்தறிவுங்கறத வச்சிட்டுச் சுயநலம் வளத்திட்டு, அடுத்தவன் வாழணும்ங்கிற எண்ணமில்லாம அழிஞ்சி போறான். இதை அரசியல் சமுதாய அமைப்புக்கள் இன்னும் கூறுபோட்டுக் கோளாறு பண்ணிட்டு வருது. இதை இந்த நிலையில் ஒண்ணுமே செய்யமுடியாது. அதது போக்குலதா வுடணும்…”
“அதெப்படி அய்யா விட்டுட முடியும்…? அந்தப் புள்ளையை எத்தினி கனவோட வளர்த்தேன்? போயி சாணிக் குழில குதிச்சிருக்கிறாளே?…”
“அதெப்படி நீ சாணிக் குழின்னு சொல்ல முடியும்? நானானால், எங்க சாவித்திரி இப்படிப் போயிருந்தால் அலட்டிக்க மாட்டேன். அவம்மாவானா கத்துவ. இப்ப நான் ஒண்ணு கேக்கிறேன். உன் பொண்ணு ஆறுமுகத்தின் பயலுடன் போகாமல், என்னுடைய பயலோ, இல்ல உன் சங்கத்தச் சார்ந்த எந்தப் பயலுவ கூடவோ போயிருந்தால் நீ இப்படிக் கோபிச்சிப்பியா?”
சம்முகத்துக்கு இலேசாகச் சிரிப்பு எட்டிப் பார்க்கிறது.
“அதெப்படிங்க?”
“என்ன அதெப்படி? நீ ஒப்புவியா, மாட்டியா?”
“ஒப்புவேன். இந்தப் பொண்ணு இப்ப நம்ம விட்டுப் போயிடிச்சே, நம்ம கொள்கை நியாயம் எதுவும் இல்லாத இடத்துக்குப் போயிட்டதேன்னுதா வருத்தம்.”
“அப்ப அவ சுதந்தரத்த இது கட்டுப்படுத்தல? அதுக்கு நமக்கு என்ன உரிமை இருக்கு? நினைச்சிப் பாத்தா, ஒரு மதம், அரசியல் கட்சிபோல இருக்கிற சில பெரிய அமைப்புக்கள் எல்லாமும் கூட, சிலருடைய சுயநலத்தை வளர்க்கத்தான் பயன்படுறாப்பல இருக்கு. மனுசனை மேம்படுத்த, மனித தத்துவத்தை மேலாக மதிக்க ஒரு கொள்கைன்னு வகுத்தால், அதற்குன்னு சில நியதிகள், நீதிகள், ஒழுக்கங்கள் எல்லாமே அதைக் கட்டிக்காக்க வேண்டியிருக்கு. மதமெல்லாம்கூட இப்படி வாழ்க்கை முறையைச் சுயநலமில்லாமல் ஒழுக்கம் பாலி க்கணும்னு வற்புறுத்தியிருக்கு. எதுவுமே இன்னிக்கு முக்கியமான குறிக்கோள் இல்லாம போனதுனாலதான் தாறுமாறாயிருக்கு…”
“படிச்ச பொண்ணுதான். ஆனால் படிக்காதவர்களுக்கு இருக்கிற அனுபவம் அவளுக்கு இருக்கல. பேச்சில மயங்கியே போயிருக்கா. அவனுவ கூட்டக் குலைக்கிறாப்பல. அதச் சாதகமாக்கிக் கூட்டிட்டுப் போயிருக்கிறானுவ…”
“இன்னிக்குச் சராசரி படிக்கிற, படிச்ச இளம்பிள்ளைகள் எல்லாரும் எதோ எங்கியோ கானல் நீரைப் பாத்து ஓடுறாப்பல ஓடிட்டிருக்காங்க. வாழ்க்கையிலே அநுபவிக்கணும் பணம் வேணும், அதிகாரம் வேணும். அதற்குக் கவர்ச்சிகள். சினிமா, பத்திரிகை. நீ இதெல்லாம் பாக்க மாட்டே…! உனக்கெங்கே சந்தர்ப்பம்?”
“எனக்கு மானம் போயிடிச்சய்யா, ஊர்ப்பஞ்சாயத்தக் கூட்டி நாயமா அவள விலக்கணும், சொல்லப்போனா…”
“அடபோடா, முட்டாள்! வீட்டுக்கு வந்தாச் சேத்துக்காத! அவ்வளவுதான். இறகு முளச்சிப் பறந்து போயிட்டா?…”
“நிச்சயமாச் சொல்றேன். அவ பறந்து போகல. அப்படி ஒண்ணுந் தெரியாம கால உட்டிருக்கா… நா… இப்ப என்ன நாயம் ஊருக்குச் சொல்லுவே? முத்துக்கருப்பன் மகளுக்கு நொத்துரி லேந்து சம்பந்தம் கொண்டுவந்தா. அந்தப் பய, வேற கட்சிக்குப் போயிட்டா. அந்த சம்பந்தம் வாணாண்டான்னு கருத்துச் சொன்னேன். இப்ப வேற சம்பந்தம் தான் கட்டியிருக்கு. செங்கச் சூளையில வண்டி ஓட்டுறான். குடிச்சிட்டு உதை உதைன்னு உதைக்கிறான். அந்தப் புள்ள அழுதிட்டு வந்திருக்கு. எனக்கு நினைச்சாலே நெஞ்சுக்கு வேதனையா இருக்கு. இப்ப, அவன் சொல்ல மாட்டான்?”
“என்ன செய்யிறதுடா? ஒரு சமுதாயப் பொறுப்புன்னா எப்பவுமே கணக்குச் சரியாகிறதில்ல. தப்புக்கணக்கும் வுழுது? கீதையில, அதா, உன் கடமையச் செய்யி, எது நடந்தாலும் நீ அசையாம இருங்கறது. அதுதாண்டா யோகம்?”
“என்னத்தய்யா ‘யோகம்’ பண்ணுறது! மனசு கெடந்து அல்லாடுது?”
டாக்டரிடம் வந்து பிளாஸ்திரி போட்டுக்கொண்டு திரும்பி வருகையில் அலுவலகத்தில் லட்சுமியும் வடிவும் வந்திருக்கின்றனர்.
அவருடைய கோபம் அவர்களிடத்தில் பாய்கிறது.
“என்னாத்துக்கு இப்ப வெட்டிக்கு பஸ் சார்ச்சுக் குடுத்திட்டு வந்திய?”
லட்சுமி திகைக்கிறாள்.
“நீங்க வந்தவங்க ஒரு பேச்சு சொல்லியனுப்பணுமில்ல? என்ன ஏதுன்னே புரியல. கிளவியானா நேரத்துக்கு நேரம் புடுங்கி எடுக்குது, போயிப் பாத்துட்டு வாடின்னு…”
“அது சரி, இவன என்னாத்துக்குக் கூட்டிட்டு வந்த! உனக்கு எடந் தெரியாதா? ஏண்டா? மேச்சாரி ஒழவு முடிச்சாச்சா? சம்பா நடவாகணுமே?”
லட்சுமியும் அவனும் மெளனம் சாதிக்கின்றனர்.
“ஏண்டால, நா கேக்கிறம் கம்மா இருக்கிற?”
“விருத்தாசலம் பிள்ளையும் பூசாரியும் எங்கவூட்டெல்லாம் அன்னிக்கு நான் போறதுக்குள்ளாற போலீசு வச்சிட்டுப் பிரிச்சுப் போட்டுட்டாங்க முதலாளி!” குண்டைத் தூக்கிப் போட்டாற் போலிருக்கிறது.
“அடப்பாவிங்களா?…”
“இவ அன்னிக்கி ராத்திரி வந்து தங்கிட்டுப் போனவந்தா, காலமதா வந்திருக்கிறான். குப்பன் சாம்பாருதா. பாவம், கீத்து வாங்கி வளச்சிவச்சிருக்கா. அந்தப் பளனிப்பய வெளயாட்டுப்பய. நீங்களே கேளுங்க இவன!”
“இல்ல மொதலாளி, குடிச போட அம்பது ரூபாதான்னு வீரபுத்திரன் குடுக்கிறான். அதுல என்ன ஆகும் மொதலாளி? ஆட்ட வேற அன்னிக்கு ராவில எந்தப் பயலோ பத்திட்டுப் போயிட்டான். அவனத் தேடி லச்சுமாங்குடி போன…”
“புளுகிறான். மட தண்ணிப் பாக்கல, ஒண்ணில்ல. ஆளயே காணோம்.”
சம்முகத்துக்குச் சொல்லொணாக் கோபம் வருகிறது.
“சரி, இந்த சண்டையெல்லாம் இப்ப வானாம். நா என்ன செத்தா பூடுவ? கையில காசில்லாம செத்திட்டிருக்கிற. காருக்கு அஞ்சு ரூபா, காபிக்கு நாலு ரூபான்னு செலவு வச்சிட்டு வாரிங்க…”
“நா இங்க வக்கிலப் பார்க்க வந்தே முதலாளி. அவங்க செஞ்சது அநியாயம். அந்த. ரவுடிப் பய, தங்கச்சிகிட்ட அக்குரமமா நடந்திட்டானாம்…”
“என்னாது?”
“ஆமா முதலாளி, எங்கய்யா, தம்பி, ஆம்பிள ஆருமில்லன்னு அது சொல்லிச்சாம். நல்லதாப் போச்சுடின்னு உள்ளாற துரத்தி வந்து சீலயப் புடிச்சி இழுத்தானாம். பன்னிப்பய, சும்மா வுடுறதா? அவனுவ வேணுன்னு கட்சி கட்டிட்டு வம்புக்கு வரானுவ…”
இது நுட்பமாக வந்து மருமத்தைத் தாக்குகிறது.
உண்மைதான். சாமி கும்பிடுவதும்கூடக் கட்சிகளின் ஆதிக்கத்தைக் காட்டுவதுதான். பலவீனமான இடத்தில் கண்ணியை மாட்டினால் சுருக்கு இறுக்கிவிடும். ஆனால் தொட்டதற்கெல்லாம் வக்கீல் கோர்ட்டு என்று இவன் போனால் அவன் சாமானியமாக விட்டுவிடுவானா? வெட்டு, குத்து, எரிப்பு என்று கடுமையாக தாக்குதல் என்றால் எதிர்த்தாக்குதல் உடனே தொடுக்க, பக்கபலம் சேரும். இது சிறு சிறு பொசுங்கல்கள். சீலையை இழுத்தானா, கற்பழித்தானா என்பதற்குச் சாட்சியங்களைக் கொண்டா என்பான். அந்தப் பெண் முன்பேயே கற்பை இழந்தவளா என்று குறுக்குக் கேள்வி போடுவார்கள். இதுபோல் வம்பு வழக்காடி களைத்துப் போய்விட்டார். ஒருகால் அந்தப் பயல்கூட அவள் ஒடியிருப்பாள் என்ற ஊகம் இருந்தபோது முன்நாளெல்லாம் தன் மகள் சம்மதமின்றி அவளைக் கடத்திப் போனான் என்று வழக்காடலாம் என்று நினைத்தார். அதற்கும் காந்தியின் ஒத்துழைப்பு வேண்டும். அவளை மீண்டும் சந்தித்து ஒப்புதல் வாக்குமூலம் வாங்க வேண்டும் என்று தள்ளினார்.
இப்போதோ இது குளவிக் கொட்டல்கள். எல்லோரும் எதிர்த்து நிமிர்ந்து கூலிச் சலுகை, அடிமை நிலை விட்ட வேலைச் சுதந்திரம், வேலை நேரம் என்று ஒவ்வொன்றாகப் பெற்று வந்திருக்கிறார்கள். இதற்குமேல் முன்னேற்றம் பெற்றால் அது ஆதிக்கம் செலுத்திப் பழக்கப்பட்டவர்களின் கோட்டைக்கே ஆபத்தென்று பல இடைஞ்சல்களைக் கொண்டு வருகிறார்கள்.
“ஆத்திரப்பட்டுப் பிரோசனமில்ல. நாம காலச் சேத்தில வுட்டுப் பழக்கமானவங்கதா. இருந்தாலும் நீ இப்ப சொல்லுறது, இதுக்குன்னு கேசு குடுக்கப்போறது, ஆத்துப் பொத மணல் மாதிரி உள்ளாற இழுத்திட்டுப் போயிடும். முதல்ல அது கோயில் நிலம். நாம குடிச போட்டு ஆக்கிரமிச்சிட்டோம்னு தா பாயுவாங்க. அவங்க நோட்டீசு குடுத்ததும் மெய்; ஆனா பிச்சுப் போட்டிருக்க வானாம். சமரசமாப் போயிருக்கலாம். நாம பொறுப்போம்; சமயம் வரும், செயலில் காட்டலாம். நம்ம பக்கம் நிறைய நியாயம் இருக்கு.”
“நீங்க ரொம்பப் பயப்படுறீங்க முதலாளி: இன்னிக்கு எந்த மயிரானும் அரிசனங்க குடிசயப் பிரிக்கச் சட்டமில்ல?”
“என்னடா, நீ துள்ளுனாப் போதுமா? நான் சொல்லிட்டே இருக்கேன்ல? சட்டம் என்னெல்லாமோதா இருக்கு. அவனுவ சட்டம் தெரியாதவனுவளா?. நான் வந்து எல்லாம் பாக்குறேன். இப்ப எல்லாம் விவரமா விசாரிச்சி தவராறு அத்து மீறல் எல்லாம் குறிச்சிட்டு, பேரணிக்கு மகஜர் தயாரிக்கிறமில்ல, அப்ப வைக்கிறோம். அவங்களே இப்பிடி நடந்திருக்குன்னா விசாரணை பண்ண ஏற்பாடு செய்யிவாங்க…”
அவன் தலையைச் சொறிகிறான், குனிந்துகொண்டு. “தும்ப வுட்டு வாலைப் புடிக்கிறீங்க முதலாளி!”
“சர்த்தாண்டா! பெரிய… விவகாரக்காரந்தா, இப்ப சொன்னதைக் கேளு, அடுத்த பஸ்ஸப் புடிச்சிட்டு வூட்டுக்குப் போலாம்.”
வீச்சம் லேசாக மூக்கில் இழைகிறது. கருவாடா?
“என்னாடா, சாக்குப் பையில?”
கீற்றுப்புன்னகை முகிழ்க்கிறது.
“ஒண்ணில்ல முதலாளி…”
“என்னடா ஒண்ணில்ல? வக்கீல் வூட்டுக்குப் பெரிய கருவாடா கொண்டிட்டுப் போற?”
“இல்ல முதலாளி, நாம் போயிட்டு நிமிட்டுல பஸ்ஸுக்கு வந்திடற. நீங்க போங்க…”
சாக்குப் பையை இடுக்கிக்கொண்டு அவன் நிற்காமல் ஓடுகிறான்.
“…பாம்பு பிடிக்கப் போயிருக்கிறான்… மட்டு மரியாதியே வைக்கிறதில்லிங்க…”
தங்கசாமி லட்சுமியைப் பார்த்து வருகிறார்.
“என்னாமா? வூட்டுக்காரரை அளச்சிட்டுப் போக வந்துட்டீங்களா? நாங்கல்லாம் மனிசங்கல்லியா?”
“ஐயோ, யாருங்க அப்பிடிச் சொன்னது? நீங்கதாம் பாத்துட்டீங்க…!”
“ஏம்மா, உங்க பக்கம் ஆரும் மாதர் சங்கத்துப் போராட்டம் எதிலும் சேர மாட்டேங்கறீங்க? தாசில்தாராபீசு முன்ன குடும்ப கார்ட மாத்தி ஒவ்வொரு ஆளுக்கும்னு கணக்குப் போட்டு அரிசி குடுக்கணும். சர்க்கரை மத்தும் அத்தியாவசியப் பண்டங்கள் குடுக்கணும்னு போராட்டம் நடந்திச்சி. உங்க பக்கம் கிட்டமா சொல்லி அனுப்பினேன்னிச்சி. நீங்க யாரும் எதுக்கும் வாரதில்ல?”
“அவங்கவங்களுக்கு வூட்டுப்பாடு, வெளிப்பாடுன்னு சரியாப் பூடுது. எனக்கும் குடும்பத்துல ஒரே நெருக்கடி..”
“எல்லாரும் பொம்பிளங்க சேந்தாத்தா சங்கத்துக்குப் பலம்னு பேசுறாங்க. ஆன அவனவன் வூட்டுப் பொம்பிளய வெளில விடாம காபந்து பண்ணிக்கிறான்!”
சம்முகத்தைச் சாடையாகப் பார்த்துக் கொண்டுதான் தங்கசாமி குறிப்பிடுகிறார். சம்முகம் சாதாரணமாக இருந்தால் சிரித்திருப்பார். இப்போது சிரிப்பு வரவில்லை.
“எல்லாம் பேசறதுக்குத் தாங்க நல்லா இருக்கு நடமுறக்கி வர முடியாது. இன்னிக்கிருக்கிற நிலமயில, பொம்பிளங்களக் கூட்டிட்டு வரதே லேசான காரியமில்ல…”
இந்தக் கருத்தை உதிர்த்துவிட்டு சம்முகம் கொடியில் இருக்கும் துண்டை பத்திரமாக எடுத்து மடித்துப் பைக்குள் வைத்துக் கொள்கிறார். தன் பையில் டாக்டர் சீட்டு, மருந்து வாங்கின கடை பில் எல்லாவற்றையும் பார்த்து வைத்துக் கொண்டு பணத்தை எண்ணிப் பார்க்கிறார்.
“காம்ரேட், இதொரு வேட்டி இருக்கு, வுட்டுட்டுப் போடாதீங்க!”
பொன்னடியான் பார்த்து எடுத்து வருகிறான்.
“நன்றிப்பா… ஒத்த வேட்டியோட வந்தனா? ஐயரு கொடுத்தாரு…”
“வரேம்ப்பா, பிறகு நான் சொன்னதெல்லாம் ஞாபக மிருக்கில்ல?”
“இருக்கு போயிட்டுவாங்க காம்ரேட் பிறகு பார்த்துக்கலாம்… வணக்கம்!”
எல்லோரிடமும் விடைபெற்றுக்கொள்கிறார். லட்சுமி பையைக் கையில் எடுத்துக் கொண்டு அவருடன் நடக்கிறாள். காலில் செருப்புப் போட்டுக் கொண்டு நடந்தாலும் கூச்சமாக இருக்கிறது அவருக்கு. ரிக்ஷா என்றால் ஒன்று ஒன்றரையாகிவிடும். லட்சுமிக்கு டவுனுக்கு வருவதே அருமை. அதை ஒரு சினிமா பார்த்தோ, கடையில் இரண்டொரு சாமான் வாங்கியோ, கொண்டாட முடியாதபடி சந்தோஷங்களை ஒரேயடியாக மகள் கொண்டு போய்விட்டாளே என்று குமைகிறது.
“நீங்க சின்னய்யருக்கு எழுதி, எப்படியானும் ரெண்டாயிரம் புரட்டித்தாரேன்னு சொல்லியிருக்கலாம். அவளுக்கு அதுதாங் குற. காவாளயப் போட்டுட்டுத் தண்ணிலயும் வுட்டு அது அழுவி, ஒழவோட்ட ஆளில்லாம வீணாப் போன சங்கதியா யிட்டது. அதா அவளுக்கு ஆத்திரம்…”
“வெவரமில்லாம பேசுற! அரிசனம் அரிசனம்ங்கற சலுகையும் கட்சிக்கு ஆள் சேக்கிற துண்டிலப் போலப் பயன்படுத்தறாங்க. நாம இதை எதுத்துப் போராடணுமே ஒழிய நாமே லஞ்சம் குடுக்கிறதா?”
“ஆமா… எல்லாரும் ஒரு நிலையிலதா நிக்கிறாங்களாக்கும்? அன்னிக்கு ஊரே சாமி கும்பிடக் கூடாதுன்னு சொன்னிங்க. ஒங்ககிட்டயே அவன் மொத வசூலுக்கு வந்து பத்து ரூபா வசூல் பண்ணிட்டுப் போறான். கோயில் சொத்து, நிலம், தோப்பு எல்லாம் என்னாச்சின்னு கேக்க யாருக்குத் தெம்பிருக்கு?”
“நாங் குடுத்தேனா? நீதான் என்னமோ ஒடனே கொண்டாந்து வச்சே! இவங்கசாமிகிட்டல்லாம் உனக்குத்தான் பயம்!”
“நீங்கதான் நோட்டில் பேரெழுதினிங்க? பிறகு நான் பொய்யா நிக்கணுமா? இந்த வடிவுக்கு நீங்க காசு குடுத்தது எப்பிடித் தெரிஞ்சிச்சோ? ஒருக்க அவனுவளே சொல்லியிருப்பா னுவ! நேத்தெல்லாம் ஆரும் சாமி கும்பிடக் கூடாதுன்னவரு இப்ப அவங்க கூடச் சேந்திட்டுப் பணம் குடுத்தாராமே முதலாளின்னு ஏங்கிட்ட இப்பக் கேக்கிறான். எதானும் சொன்னா, ‘ரொம்பக் கெடுபிடி பண்ணாதீங்க? எங்கிட்டுப் போனாலும் எங்கக்குக் கூலி இருக்கு. ஒரே எடத்தில்தான் உழைக்கணும்னில்ல’ன்னெல்லாம் பேசுகிறான்.”
“ஒட்டலில் புகுந்து இரண்டு இட்டிலி சாப்பிட இடம் தேடுகின்றனர்.
ஒரு மேசையில் சரகம் சப்-இன்ஸ்பெக்டர் உட்கார்ந்திருக்கிறார்.
சம்முகம் பணிவாக ஒரு மரியாதை தெரிவித்துவிட்டு, அடுத்த முன்பக்கம் காலியாகப் போகும் நாற்காலிக்குக் காத்து நிற்கிறார்.
சாப்பிட்டுவிட்டு வெளியே வந்ததும் பஸ் நிறுத்தத்தில் சம்முகத்தை ஓரிடத்தில் உட்காரச் சொல்லிவிட்டு, ஒரு தேநீர் வடிகட்டியும், பாண்டிச்சேரி லாட்டரிச் சீட்டொன்றும் வாங்குகிறாள் லட்சுமி, டவுனுக்கு வந்துவிட்டு வெறுமே எப்படிச் செல்வது? நாகுவுக்கு ஒரு கடலைமிட்டாய் வாங்கி வைத்துக் கொள்ளுகிறாள். கன்யாஸ்திரி ஒருத்தி அவளைப் பார்த்துக் கொண்டே வருகிறாள். புன்னகை செய்கிறாள்.
“காந்திமதியின் அம்மாளில்ல?”
எப்போதோ பத்தாவது படிக்கையில் பள்ளிக்கூட விழாவுக்குக் கூட்டிப் போனாள். எப்படி நினைவு வைத்துக் கொண்டிருக்கிறாள்!
“காந்தி எலக்ட்ரானிக்ஸ் கோர்ஸ் சேரப்போறேன்னுதே? சேந்திச்சா?”
“இல்ல.”
“ஏ வந்து சர்ட்டிபிகேட் வாங்கிப்போச்சி? நல்லா படிக்கிற பிள்ளையாச்சே?”
“அதொண்ணும் தோதுப்படல… கல்யாணங் கட்டிக் குடுத்திடறதா இருக்கிறோம்.”
அவளிடமிருந்து கத்திரித்துக்கொண்டு வருகிறாள். என்னவெல்லாம் கனவு கண்டிருக்கிறாள்! சமுதாயத்தில் மதிப்பாக அவளுக்குக் கல்யாணம் கட்டி, படித்து வேலை செய்யும் மருமகனைப் பார்த்துப் பெருமைப் படவேண்டும், என்றெல்லாம் எண்ணியிருந்தார்களே! அதொன்றும் இல்லாமல் போய்விட்டது.
ஊரில் தை அறுவடை முடிந்தபின் கொச்சையான விவகாரங்கள் நாய்க்குடைகளாக விரியும். அந்தச் சுவாரசியத்தில் ஆற்றோரம் குளத்தோரம் கூடும்போது, நாயக்கர் வீட்டில் நெல்புழுக்கப் போகும்போது யார் யாரை எல்லாம் பற்றியோ பேசுவார்கள். இப்போது அவள் மகளைப் பற்றி நாயக்கரம்மா காது கிழியப் பேசுவாளே? அதுவும், சேந்தன் பெண் சாதி வள்ளியம்மை சோடிப்பதில் வல்லவள். அவளுக்கு வெறும் வாயையே மெல்லத் தெரியும். இந்தத் தலைமைப் பதவியின் மயில் பீலிகளை உலுக்கிக் கீழே போடுவாள்.
“இவ என்ன முறைப்படி முதலா கட்டினாளா? போலீசுக்காரனுக்கு ஒண்ணப் பெத்து வச்சிருக்கிறவதானே; அம்மயப் போல பொண்ணு!” என்று நொடிப்பாள்.
“யாரு, லட்சுமியா?”
“ஒனக்குத் தெரியாதா?… இவனுவ மிராசு பண்ணைய எதித்துக்கிட்டுக் கவர்மெண்டுக்கு விரோதமா ஆளுவளச் சேர்த்துக்கிட்டுத் தல மறவா ஒளிஞ்சுதான திரிஞ்சானுவ? அப்ப போலீசு ராவில வூடுகளில், சேரில வந்து வலபோடுற மாதிரி ஆளுவளத் தேடுவா. இவனுவதா அம்புடமாட்டானுவளே? பொம்பிளகதா இருப்பா. புடிச்சிக்குவாங்க. இவளுக்கு அப்ப கலியாணம் காட்சி ஆவல. வவுத்துல வந்திட்டது. என்னா செய்யிவா? ஆத்தாகாரி மருந்துமாயம் குடுத்துப் புள்ளயக் கரச்சிடப்பாத்தா, அது கரயல. ஆனா கோளாறாப் போயிட்டுது. மூக்கறையும் மூளை குளம்பியும் பொறந்திடுச்சி. பெறகுல்ல இவுரு வந்து கட்னது? முன்னியே தொடுப்பா இருந்ததுதான், இவுரு புள்ளன்னு சொல்லிக்கிட்டாவ. ஆனா, இவுரு பெருந்தன்ம கட்டிட்டாரு…”
பஸ்ஸில் உட்காந்திருக்கையில் லட்சுமிக்குக் காட்சிகள் படலங்களாக அவிழ்கின்றன. உடல் குலுங்குகிறது.
வயலில் வேலை செய்யும் படிக்காத குமரிப்பெண் கட்டு மீறிவிட்டால் சங்கத்துக்கு ஒவ்வாத சம்பந்தமாக இருந்தால் சாதிவிட்டுத் தள்ளி விடுவார்கள்.
அவள் பின்னர் நடவு, களை என்று வயலில் இறங்க முடியாது. ஏனெனில் அவள் சேற்றில் கால்வைக்க வந்தால் மற்றவர் அனைவரும் அங்கிருந்து வெளியேறி விடுவார்கள். அதனால் எந்தப் பண்ணைக்காரனும் அத்துமீறிய ஆட்களுக்கு வேலை கொடுக்கமாட்டான். இந்தக் கட்டுப்பாட்டினால் தாமாகவே திரும்பி மந்தைக்குள் வந்து சேர்ந்து கொள்வார்கள்.
ராமாயி மகள் இப்படித்தான் எவனோ அயலூர்க்காரன் சேர்வையுடன் ஓடிப்போனாள். திரும்பி வந்துவிட்டாள். இப்போது மூக்கன் மச்சானைக் கட்டி இரண்டு பிள்ளைகளிருக்கின்றன.
குஞ்சிதம்…?
வெளியூர்க்காரி. பள்ளக்குடிப் பெண் தான் என்று சொல்வார்கள். ஓடிவந்தவள். பார்க்கச் சுருட்டை முடியும், புருபுருவென்ற முகமுமாக அழகாக இருக்கிறாள். ஆனால் திரும்ப ஊருக்குப் போகமுடியாமல், இங்கேதான் உயர்ந்தசாதி என்று சொல்லிக்கொண்டு மேற்குடியாரை அண்டி ஊழியம் செய்கிறாள். அவர்களுக்கே உடம்பை விற்றுத் தின்னும் பிழைப்பாயிருக்கிறாள். அக்கிரகாரத்திலும், வேளாளர் தெருவிலும் கோலோச்சும் விடலைகள் ‘அவ என்ன சாதி தெரியுமில்ல?’ என்று கண்ணடிப்பார்கள். தோளைப் போர்த்திக் கொண்டு பவ்வியமாக, ‘நாங்க வெள்ளாழருங்க!’ என்பாள்.
ஒரு பெண் மீறினால், உதிரிப்பூவாகக் காலில் மிதிபட வேண்டும்.
கண்கள் சுரந்து சுரந்து பார்வையை மறைக்கிறது.
சம்முகம் வெளியே பார்த்துக் கொண்டிருக்கிறார்.
நடவான வயல்கள் கண்களிலே தென்படுகின்றன.
சில இடங்களில் கயிறு கட்டிய வரிசைகளாய் பாய் நடவு நட்டிருக்கிறார்கள். திருமணத்தாலி பூட்டிக்கொண்ட மங்கல மகளிர் அணி அணியாக நிற்பது போல் ஒரு காட்சி.
இவர்களுடைய மண்ணில் எதுவும் முடியவில்லை.
மகன், மகள், கட்டாக இருந்த கூட்டாளிகள் எல்லோருமே சிதறிப் போகிறார்கள். சிதறிச் சிதறிப் போகிறார்கள். சின்னா பின்னமாகிப் போய் மானுட உறவின் தொடர்புகள் வறண்டு பொடியாகிப் போய்…
எல்லோரும் வாருங்கள்! ஒன்றாகச் சேருங்கள்!
உரிமைக்காக ஒன்றுபட்டுப் போராடுவோம்!
உரிமைக்காக ஒன்றுபட்டுப் போராடுவோம்!
ஏகோபித்த குரல் முழங்க, ஆயிரம் பதினாயிரமாக நில உரிமைக்காரர்களின் அடியாட்களையும் அடக்குமுறையையும் எதிர்த்து நின்று இரத்தம் சிந்தத் துணை நின்ற சக்திகள் துண்டு துண்டாகச் சிதறிப் போகின்றன.
சம்முகம் கண்களை மூடிக்கொள்கிறார்; தாள முடியவில்லை.
அத்தியாயம்-14
கோகிலம், காந்தியிடம் மிகவும் பிரியமாகவே இருக்கிறாள்.
கன்னங்குழியப் புன்னகை செய்துகொண்டு அவளிடம், “சாப்பிடவேயில்லியே? கூச்சப்படாதே!” என்று சொல்கிறாள். நித்யமல்லிகைப் பூக்களைச் செண்டாகக் கட்டி அவள் கூந்தலில் கொண்டு வந்து வைக்கிறாள். ஏலம் கிராம்பு மணக்கும் பாக்குப்பொடியும் வெற்றிலை கண்ணாம்பும் தட்டத்தில் வைத்து “வா, வெத்தில போட்டுக்க காந்தி!” என்று உபசரிக்கிறாள்.
“…படிக்கிற பொண்ணுன்னு நா வெத்திலை பேர்டுறதேயில்ல…”
காந்திக்கு அவளிடம் சகஜமாகப் பேச இயலாதபடி ஏதோ ஒரு தடை உறுத்திக்கொண்டிருக்கிறது. தீவிரமாக ஏதேனும் பேசிவிடுவாளோ என்று அவளும் அந்தப் புன்னகையுடன் நிறுத்திக் கொள்வதாகத் தோன்றுகிறது.
அவளைப்பற்றி அங்கு வந்த சில நாட்களில் சாலியின் வாயிலாகவே அறிந்து கொள்கிறாள். அவள் இசை வேளாளர் மரபில் வந்தவள்தான். ஆடற்கலை பயின்று அரங்கேறியதும் உண்மைதான்.
நில உடமைக்காரர்களை எதிர்க்கும் கட்சியில் இருந்து ஆறுமுகம் போராடி சதிவழக்கொன்றில் குற்றவாளியாகிச் சிறைத்தண்டனையும் பெற்றவர். இதற்கு முன்பே, அவருக்குச் சொந்த மாமன் மகளுடன் திருமணமாயிருந்தது. சிலகாலம் தலைமறைவாகக் கூத்துாரிலும் மங்கலத்திலும் இருந்த காலத்தில், இட்டிலிக்கடை போட்டிருந்த பொன்னம்மாவின் அழகு மகள் திலகம் அவருக்குக் காதலியானாள். கைவிடாமல் அவளைத் திருமணம் செய்துகொண்டார். முதல் மனைவி இக்காலத்தில் இறந்து போயிருந்தாள்.
சிறையிலிருந்து வந்தபின் அவர் புதிய வாழ்க்கை தொடங்கினார். புதிய அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தபின் அவர் கைக்கொண்ட நெல்வியாபாரம், அவருக்குச் செல்வச் செழிப்பையும் பல தொடர்புகளையும் கொண்டு வந்திருக்கிறது.
கோகிலத்தின் தாயும் பாட்டனாரும் அவள் புகழ் வாழ்க்கையில் கொடிகட்டவேண்டும் என்றுதான் வற்புறுத்தி னார்கள். ஆனால் அவளோ கல்லூரியில் படிக்கவேண்டும், திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்றே பிடிவாதமாக இருந்தாள். தாயும், பாட்டனாரும் இறந்த பிறகு அவள் சொத்துக்களை அநுபவிக்கவும், அவளை ஏமாற்றவுமே ஓர் அந்தண இளைஞன் சிநேகம் கொண்டிருந்தான். அந்த நிலையில் அவளிடம் தம் தொழில் நிமித்தமாகப் பழகும் சந்தர்ப்பம் ஆறுமுகத்துக்கு வாய்த்தது.
இவர் தொடர்பு ஏற்பட்டபிறகு, சொத்துக்கள் பாதுகாப்பாக இருக்கின்றன. அவருக்கு உரியவளாகவே வாழ்ந்து வருகிறாள். இரண்டு முறைகள் கருத்தரித்தும் மகப்பேறு வாய்க்கவில்லை. சென்ற ஆண்டில் தஞ்சை மருத்துவமனையில் சென்று ரணசிகிச்சை செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
காலையில் எழுந்தால் காபி, இட்டிலி, பொங்கல் என்று பலகாரங்கள், மணக்கும் சோப்புத் தேய்த்துக்கொண்டு குளியல்: நல்ல சேலை, படிக்க விதவிதமான கதைப் புத்தகங்கள், பத்திரிகைகள், சினிமா இலக்கியங்கள். வண்டிகட்டிக் கொண்டோ மோட்டார் சைக்கிள் பின்னமர்ந்தோ கொடி மங்கலம் விஜயா டாக்கீசில் சினிமா என்று நாட்கள் சிட்டாக ஒடுகின்றன, காந்திக்கு.
அங்கவஸ்திரம் மாலையாகக் கீழ்வரை தொங்க, ஆறுமுகம் அங்கே முதல்நாள் சந்திக்கையிலே சாலி அவளை அவரைக் கும்பிடச் சொன்னான்.
“அப்பா, இவளுக்கு பாலிடெக்னிக்ல அட்மிசன் வேணுமாம்!”
அவர் சிரித்தார். “அதென்னாத்துக்குமா உன்னப்போல பெண்களுக்கு? ஒரு டீச்சர், இல்லாட்டி டாக்டர்னாலும் கவுரவமாயிருக்கும். பியூசி. பிரவேட்டாப் படிச்சிடேன்! இங்க தஞ்சாவூரிலியே மெடிகல் அட்மிஷன் வாங்கித் தாரேன்!” என்றார்.
காந்திக்கு இது ஆகாயத்தில் பறப்பதாக இருந்தது. பின்னர் தனிமையில் காதலனிடம், “நெறயச் செலவாகும்னு சொல்றாங்களே, டாக்டர் படிக்க?” என்று வியப்புடன் வினவினாள்.
“செலவானா என்ன? எங்கப்பாக்கு நீ டாக்டராகனும்னு ஆசையிருக்காதா என்ன.”
அவளது கற்பனை சிறகடித்துப் பறந்தது. தான் கையில் ஸ்டெத்துடன் ஆசுபத்திரியில் நடப்பது போலும், அங்கே ஒதுங்கிப் பாவங்களாக நிற்கும் கிராமத்துப் பெண்கள் இவளைக் கண்டு வணக்கம் தெரிவிப்பதுபோலும் ஒரு கற்பனை.
“நம்ம கிளியந்துற சம்முக வாய்க்காரு மகதா வூட்டவுட்டுப் போயி, டாக்குட்டரா படிச்சி வந்திருக்கு” என்று அவர்கள் சொல்லிக் கொள்வார்கள். அதிசயிப்பார்கள். சீக்குக் குழந்தைகளையும், கிழவிகளையும் தான் தொட்டுப் பார்த்து வைத்தியம் செய்வதுபோலும், தன் பாட்டியும் அங்கு வந்து நின்று அவளை முகத்தைத் தடவி திருட்டி சொடுக்குவது போலும் ஒரு கற்பனை.
“நீங்க அநாவசியமா விரோதம் பாராட்டிக் கோவிச்சிட்டீங்கப்பா, ஊரிலியே கெடந்திருந்தா நா இப்படி முன்னுக்கு வந்திருக்க முடியுமா?…”
“தப்புதாம்மா, நீ செயிச்சிட்டே!” என்று தந்தை ஒப்புக் கொள்வது போல் ஒரு காட்சி.
“இனிமே என்னாடா சம்முகம்! சம்பந்தியாயிட்டே அவனவின் சவுரியத்துக்குத்தான் எல்லாமே, அந்த குடிசயில நீ என்னாத்துக்கு இருக்கணும் இனிமே? புரட்சி கிரட்சி எல்லாம் வெறும் பம்மாத்துப் பேச்சு. நம்ம முதல்ல கவனிச்சுக்கணும். அதுக்குப் பிறகுதா சமுதாயம், தேசம் எல்லாம். நீ நல்லா சந்தோசமா இருந்தாத்தானே பிறத்தியானுக்கு எதானும் செய்யமுடியும்?…”
இப்படி ஒரு கற்பனை.
ஊஞ்சற்பலகையில் அமர்ந்து காந்தி தனது புகுமுக வகுப்புப் பாடங்கள் பற்றிப் பல்கலைக் கழகத்துக்கு எழுதி விசாரிக்கவேண்டும் என்று சாலியிடம் கேட்பதைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கையில் அவனே வருகிறான்.
“காந்தி. அப்பாக்கு, அம்பேத்கார் முன்னேற்ற சங்ககாரங்க ஒரு பாராட்டு நடத்தறாங்களாம். அவருடைய சேவையைப் பாராட்டி, பலரும் பேசுறாங்க. உன்னையும் மேடையிலேத்தணும்னு எனக்கு ஆசை.”
அவளுக்கு இனம் புரியாததொரு நடுக்கம் பரவுகிறது.
“வாணாங்க…”
“ஃபூல் என்ன வாணாங்க? அம்பேத்கார் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சேவை செய்தார். அந்த வழியில் இவரும் சேவை செய்கிறார்னு பேச வேண்டியதுதான். உனக்கு எப்படிப் பேசுவதுன்னு நான் சொல்லித் தாரேன். நீ பேசினா நல்லா இருக்கும். போஸ்டர்ல பேர் போட்டு, போட்டோ பிடிக்க ஏற்பாடு செய்றேன். கைதட்டி உன்னை உற்சாகப்படுத்த நிறையப் பேர் இருக்காங்க…!”
“எனக்கு வெக்கமா இருக்குங்க…”
“அட, என்ன நீ இப்படிச் சுத்த பயந்தாங்குளியா இருக்க! கூட்டம் திருச்சில, ஒருதரம் வெற்றியா மேடை ஏறிட்ட, பின்னால பிரமாதமான எதிர்காலம் இருக்கு. இப்பெல்லாம் பேச்சுதான் மூச்சு…”
அவன் மாடிக்கு அழைத்துச் சென்று டேப்பைத் தட்டிவிட்டு, தானைத்தலைவர்கள், புலவரேறுகள் தமிழ்க் காவலர்கள் பேசிய பேச்சுக்களைக் கேட்கச் செய்கிறான்.
“இப்ப, பெண்கள் அரசியல் களத்தில புகுந்தால் விருவிரென்று அமைச்சர் பதவி வரை வரமுடியும். நீ படிக்கிறதுபடி, ஆனால் இதுவும் முக்கியமானது காந்தி. எப்படியும் நீ முன்னுக்கு வரணும்ங்கறது என் ஆசை.”
புதிய கிளர்ச்சியில் எதுவுமே புரியவில்லை.
பெரிய அச்சு போஸ்டரைக் கொண்டுவந்து காட்டுகிறான். அவளுடைய பேச்சுப் பயிற்சிக்குத் தொடர்ந்து ஊக்கம் அளிக்கிறான்.
கோகிலமும் மகிழ்ந்து போகிறாள். விழாவுக்கு முன்னாள் மைய அமைச்சர் ஒருவரும் வருகை தருகிறார்.
காரில் அவள், கோகிலம் இருவரும் செல்கையில் சாலி வண்டியை ஒட்டுகிறான்.
திறந்த வெளி மேடையில் யார் யாரோ பேச்சாளர். பிரமுகர்கள் இருக்கின்றனர். ஆறுமுகம் விரல்களில் மோதிரம் மின்ன, மினுமினுத்த சட்டையின் மீது மேல் உத்தரீயம் விளங்க, விழா நாயகராக அமர்ந்திருக்கிறார். அவளைப் பலருக்கு அறிமுகம் செய்விக்கிறான் சாலி.
ஆறுமுகத்தின் தொண்டைப் பற்றி முன்னாள் அமைச்சர் ‘தீனதயாளன்’ என்று புகழ்ந்துரைக்கிறார். பேச்சாளருக்கு சாலி தான் பெரிய மாலையைப் போடுகிறான். பிறகு ஒவ்வொருவராக வந்து புகழ்ந்து ஆறுமுகத்துக்கு மாலை, துண்டு என்று பரிசளிக்கிறார்கள்.
இடையில், செல்வி காந்திமதியை எழுதிக் கொடுத்திருந்த படி தலைவர் அறிமுகம் செய்துவைக்கிறார்.
“இளைய தலைமுறையின் பொற்சுடர், கல்லூரிப் பட்டம் பெற்றவர். தீனதயாளரின் ஆதரவில் முன்னுக்கு வரும் புகழ்த்தென்றல்..” என்று அறிமுகம் அடுக்குகிறார்.
காந்தி உருப்போட்டிருந்த சொற்களை இனிய குரலில் உரையாக ஆற்றும்போது, கையொலி கலகலப்பாக உற்சாக மூட்டுகிறது. புகைப்படங்கள் பளிச் பளிச்சென்று அவளை மெய்சிலிர்க்கச் செய்கின்றன.
ஆறுமுகம் மறுமொழியுரைத்ததும், நன்றி கூறல்களும் கூட அவள் செவிகளில் விழுந்தாலும் மனதில் பதியவில்லை. தனது ஒளிமயமான எதிர்காலம் பற்றிய கனவுகளிலேயே மூழ்கிக் கிடக்கிறாள். தான் மிக நன்றாகப் பேசியதாகப் பெருமை பூரிக்கிறது.
“வெளுத்துக்கட்டிட்ட காந்தி. அப்பாக்கு ரொம்ப சந்தோசம். நாளைக்கு எல்லா பேப்பரிலும் உம் பேச்சுக்கு இம்பார்டன்ஸ் குடுத்து போட்டோ வரணும்னு சொல்லி வச்சிருக்குறேன்!”
இவர்கள் இருவரையும் ஒட்டலில் விட்டுவிட்டு, கோகிலமும் ஆறுமுகமும் காரில் ஊர் திரும்புகின்றனர்.
“காந்தி… எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு. பரிமேலழகன் இல்ல, அவரு ரொம்பப் பாராட்டினாரு அவரு ரொம்பப் பவர்ஃபுல் ஆளு. யாரு எலக்சன்ல ஜயிக்கனும்ங்கறத அவருதான் தீர்மானிக்கறாரு. ரெண்டு தடவையா அப்பாவ ஜயிக்க வச்சவர் அவருதா. இப்ப அப்பாவ நிக்கவானான்னு சொன்னவரும் அவருதா.”
“ஆரு, பெரிய மாலையா போட்டு அப்பாவப் பாராட்டினாரே, பெரிய கொடுவா மீச வச்சிட்டு?”
“உனக்கு அறிமுகம் செய்து வச்சேனே? அவுருதா. அவர் சொல்லிட்டார்னா சொன்னதுதான். உன்ன வார இடைத் தேர்தல்ல நிக்க வக்கலாம்னு அவர் சொன்னாலும் ஆச்சரிய மில்ல, அப்படிப் பாராட்டினாரு…”
எல்லாம் மிக இன்பமாக இருக்கிறது.
ஓட்டல் அறையில் அல்வாவும், தோசையும், பரோட்டாவும், பாலும் பழமும் வரவழைத்துச் சாப்பிடுகின்றனர்.
“நான் கொஞ்சம் வெளியே போயி ஃபிரன்ட்ஸ்கிட்ட பேப்பரில் செய்தி போடுறது சம்பந்தமா பேசிட்டு வாரேன். நீ படுத்துத் தூங்குறியா கண்ணு?…” மென்மையாக முத்த மிடுகிறான்.
“சீக்கிரம் வந்திடுங்க. நான் தூங்கிட்டா எழுந்து கதவைத் திறக்கிறது சிரமம்…!”
“…அப்ப. நா வெளியே பூட்டிட்டுப் போயிடட்டுமா? நீ எந்திரிக்க வேணாம். உள்ளாற வந்து இப்பிடி எழுப்பட்டுமா?…”
“சீ. போங்க…”
“போறேன்… போறேன்…”
சிரித்துக்கொண்டே மென்மையாக அவளை விட்டுக் கதவைச் சாத்திக்கொண்டு போகிறான்.
உறக்கம் உடனே வந்துவிடவில்லை. புதிய கிளர்ச்சிகளில் மனம் அலைபாய்கிறது. பேச்சு… அரசியலுக்கு அதுவே ஆயுதம்.
காந்தி பெரிய பேச்சாளராகி, தேர்தலுக்கு நின்று வெற்றிபெற்று அமைச்சராக வரக்கூடிய எதிர்காலம் இருக்கிறது.
பள்ளர்-பறையர் கட்சி என்று சார்ந்து, கூலிப் போராட்டம், குடிப்போராட்டம் என்று எதிர்ப்புக் கொடியையே தூக்கிக் கொண்டிருந்தால் மக்கள் ஆதரவு ஏது?
விளக்குகள், வசனங்கள், புதிய பகட்டுக்கள், பாராட்டுக்கள் எல்லாவற்றுக்கும்தான் மதிப்பு இருக்கிறது. பத்திரிகையில் பெயர் வரும். பெயரை அப்பா பார்த்தால்? அவர் பார்க்காவிட்டாலும் மற்றவர்கள் பார்த்துச் சொல்வார்கள்.
“துரோகி!” என்று பல்லைக் கடிப்பார். ஆனால் வெற்றிப் படியின் உச்சியிலே அவள் செல்வாக்கான குடைக் கீழ் வீற்றிருந்தால் அப்போதும் துரோகி என்று உதறித் தள்ளுவாரா? உறக்கம் பிடிக்கவில்லை.
வெளியே கதவு தாழ் கிளிக்கென்று விடுபடும் சத்தம் கேட்கிறது. அவள் அவசரமாக விளக்கை அணைத்துவிட்டு முகத்தை மூடிக்கொண்டு உறங்குவதாக பாவனை செய்கிறாள்.
சில விநாடிகளில் அவள் முகத்திரை விலக்கப்பட்டு, ஒரு காட்டு மீசைக்குத்தலின் ஆக்கிரமிப்பில் திடுக்கிட்டுத் திமிறுகிறாள்.
அவளுக்கு இந்நாள் பழக்கமாயிருக்கும் மதுவின் வாசனை சூழ்ந்து நெருக்குகிறது.
பளிரென்று உதயமான சந்தேகம் வலுக்க அவள் தன் பலமனைத்தையும் திரட்டி அந்த முகத்தை விலக்கப் போராடுகிறாள்.
சாலிக்கு இத்தனை பெரிய முகமுமில்லை, இம்மாதிரியான மீசையுமில்ல.
“சி, போ! யாரு நீ?…”
அவன் சிரிப்பு அசிங்கமாக இருக்கிறது.
“தெரியலயாடி உனக்கு இன்னும்?”
“சீ போயிடு! இல்லாட்டி இப்பக் கத்திக் கூச்சலிட்டு ஊரக் கூட்டிடுவேன்!”
“உங்கூச்சலுக்கு இங்க யாரும் வரமாட்டாடி பத்தினித் தங்கம்! ஆனானப்பட்ட மேச்சாதிப் பொண்ணுகளே, இந்த மன்னனுக்கு மசிஞ்சு வருவா. அரிசனச் சிறுக்கி, என்னாடி எகிறற?…”
“அட… பாவி?”
“ச், அழுது ஊரக் கூட்டாத. உன்ன முன்னுக்குக் கொண்டாரணும்னு சாலி சொன்னான். புத்தியா இரு. ஏங்கிட்ட வந்த எந்தச் சிறுக்கியும் நடுத்தெருவில நிக்கமாட்டா…”
அவள் முகத்தை மூடிக்கொண்டு அழுகிறாள்.
அவன் விடவில்லை.
அவளுடைய கனவுகள், கபடமறியாத கற்பனைகள் எல்லாவற்றையும் தகர்த்தெறிந்து தூய்மை என்று போற்றக் கூடியதொரு மரபை உடைத்து அவளைப் படுகுழியில் வீழ்த்தி விட்டதான உணர்வை அளித்துவிட்டுப் போகிறான்.
கண்ணாடியில் தெரியும் தன் முகம் மிகவும் கோரமாக இருக்கிறது அவளுக்கு. விம்மி இதயம் உடைய அழுகிறாள். தனது மாயக் கனவுகள் இப்படிக் குலைக்கப்பட்டதை எண்ணி எண்ணித் தேம்புகிறாள்.
காதலனாகக் காட்சி அளித்தவன் கயவனிலும் கயவன் என்று கண்டு பொங்கிக் குமுறுகிறாள். வெய்துயிர்க்கிறாள்.
அவள் இந்த நாட்களில் படித்த கதைகளில் சினிமாக்களில் வரும் கற்பழிக்கப்பட்ட நாயகிகளில் ஒருத்தியாக ஆகி விட்டாளே?
ஓட்டலில் விஷமுண்டு செத்தவர்கள், ரயில் தண்டவாளத்தில் கிணற்றில், ஆற்றில், கடலில். உயிர்விட்டவர்கள்.
அவளும் உயிர்விடத்தான் வேண்டுமா?
ஐயோ…! காதல், கலியாணம், படிப்பு என்றும் பதவி என்றும் காட்டிய ஆசை வார்த்தைகள்… இதெல்லாம் துாண்டிலில் வைத்த இரைகளா?
ஐயோ, அப்பா…! அம்மா..!
“காந்தி, சட்டை எடுத்து வச்சியா? காந்தி இந்தக் காகிதத்துல என்ன எழுதியிருக்கு பாரு! காந்தி உனக்கு இந்தப் பை வச்சுக்க…”
“எங்க காந்தி கத்திரிச்சி ஒட்டிச்சு, இந்த லெனின் படம் காந்தி படம் அல்லாம்…”
செவிகளைப் பொத்திக் கொண்டாலும் அந்தக் குரல்கள் மண்டையை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.
பாட்டி இதமாகக் கூந்தலைத் தடவிப் பின்னும் குரு குருப்பாய் முடி முழுவதும் பரவி அவளைக் குறுக்குகிறது.
“ஏ காந்தி, என் சர்ட்டத் தோச்சி வச்சியா? உனக்கு லைப்ரரிலேந்து புத்தகம் கொண்டாந்திருக்கிறேன்!” என்று உரிமை கொண்டாடிய அண்ணன், அவன் தான் இவனை வீட்டுக்குக் கூட்டி வந்து அவள் மனசில் ஆசைப் பொறிகளை எழுப்பினான். அவனுக்கு இந்தக் கயவனின் கபடங்கள் தெரிந்திருக்குமோ!
அவளுக்கு அடுத்து என்ன செய்யவேண்டும் என்று உடனே உருப்படியாகச் சிந்திக்கத் தெரியவில்லை என்றாலும் அவன் கயமையைக் கிழித்துக் காட்ட வேண்டுமென்ற ஆத்திரம் மூண்டு நிற்கிறது.
விடியற்காலையில் தலையில் ஒரு துண்டுடன் அறைக்குள் வந்த அவன் சிரித்துக்கொண்டு தன்னை அணுகும்போது எழுந்து நின்று கர்ச்சிக்கிறாள். “சீ! நில்லுங்க அங்க! நீங்க இவ்வளவு மோசமா சதி செய்யிவிங்கன்னு நா கொஞ்சமும் நினைக்கல…!”
அவன் மீசையை வளைத்துப் பல்லால் கடிக்கிறான்.
“இப்ப என்ன வந்திடிச்சி ஒனக்கு?”
“இன்னும் என்ன வரணும்? என்ன ரூமில அடச்சிட்டு ஒரு பன்னிப்பயல வுட்டிருக்கிறீங்க!”
“நா வுட்டனா. நீ என்ன சொல்றன்னே புரியல. நா பத்திரிகை ஆபீசில போயி உக்காந்து பேச்செல்லாம் ஒழுங்காப் பாத்துக் குடுத்திட்டு வந்தேன். இன்னிக்கிச் சாங்கால எடிஷன்ல வருது எல்லாம். முழு சைஸ் போட்டோ!”
“வூட்டவுட்டு வந்ததுக்குச் சரியான பாடம் கத்துக் கிட்டேன். அவம் மீசையும் அவனும் ஐயோ…?”
நெஞ்சு வெடிக்கத் துயரம் பீறிடுகிறது.
“ஷ், அழாதே காந்தி…” என்று அவளை மென்மையாக முகத்தைப் பிடித்துச் சமாதானம் கூற வருகிறான்.
“இப்ப என்ன ஆயிடிச்சி? ஒண்ணில்ல. போயி குளிச்சிட்டு வாடா, கண்ணு. கற்பு கற்புங்கறதெல்லாம் பொண்ணுகளைத் தளைப்படுத்தற வெலங்கு. நீ சுதந்தரமா இருக்கலாம். உனக்கு அடுத்தடுத்து மேடையில நிறையச் சந்தர்ப்பம் வந்து பெரிய புள்ளியாகப் போற…”
அவள் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள்.
“எனக்கு மேடையும் சுதந்தரமும் வாணாம். நீங்க என்னைக் கலியாணம் பண்ணிக்கிடணும்…”
“பண்ணிக்கிட்டாப் போச்சு. இப்பவே நீ என் மிஸஸ்ன்னு தான் எல்லாரிட்டயும் சொல்லியிருக்கிறேன்.”
“சீ…!”
“சீ என்ன சீ? நான் ப்ராட் வியூஸ் உள்ளவன்…”
“நீங்க ஒரு மிக மோசமான ஆளு, பெண் சாதியையே விலைக்கு விக்கிற கீழ்த்தரமான ஆளு… அப்ப…!”
அவன் பொறுமை மீறிக் குரலைக் கடுமையாக்குகிறான்.
“என்னடீ என்னன்னு நினைச்சிட்டு மிஞ்சுற? நா மனசு வச்சா, உன்ன இப்ப விபசார தடைச் சட்டத்துங்கீழ விலங்கு போட்டுக் கூட்டிட்டுப் போக வச்சிடுவேன்! ஜாக்கிரத…! என்ன?”
அத்தியாயம்-15
மண்வெட்டிக்குப் புதிதாகச் சீவி வைத்த கட்டையுடன் வீரபுத்திரன் பெரிய பண்ணை ஐயர் வீட்டுக் கொல்லையில் நுழைகிறான். அக்கிரகாரத்து வீடு, வாயில்புறம் வீட்டின் முன்பகுதி முழுவதும் பல பொருள் சிறப்பங்காடிக்கு விட்டிருக்கிறார்கள். பூமணி ஆற்றுக்கரை வரை நீண்ட கொல்லையில் விருத்தாசலம் பிள்ளை ஆயிரங் காய்ச்சித் தென்னை பயிரிட்டிருக்கிறார். அதற்குத் தண்ணீர் விட்டுப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு குஞ்சிதத்துக்கு. பின் கொல்லைத் தாழ்வரையில் அவள் பொங்கித் தின்று முடங்குவதாகப் பெயர். ஆனால் அருணாசலத்தின் காபிக் கிளப் நாஸ்தாவும், குருக்கள் வீட்டிலோ, பிள்ளைவாள் வீட்டிலோ வேறெங்கோ சோறு கிடைத்துவிடும். இரவுக்கு எங்கிருக்கிறாள், யாருக்கு உடல் தசை தீர்க்கிறாள் என்பதை அறுதியிட்டுச் சொல்லமுடியாது.
பெரிய பண்ணை ஐயர் குஞ்சிதபாதம் இறந்து அவர் குமாரர்கள் வாரிசாக வந்த பிறகு அவர்கள் யாருமே இங்கு இருக்கவில்லை. பண்ணையும் உச்சவரம்பு வந்ததும், பலர் பங்கில் பிரிந்து போயிற்று. விருத்தாசலம்பிள்ளையின் மேற்பார்வையில் தான் இப்போது எல்லாம் இருக்கின்றன. பெரியம்மா இங்கு சிறிது நாட்களுக்குத் தனியாக இருந்தாள். பின்னர் உடல் நலம் கெட்டுப் பெரிய மகனுடன் டில்லிக்குச் சென்று அங்கேயே இறந்து போனாள். அந்தப் பெரிய மகனும் சென்ற இரண்டாம் ஆண்டு மாரடைப்பில் இறந்துபோனார். அவர் மக்களுக்கெல்லாம் இந்த கிராமத்தையே தெரியாது. இரண்டு மைந்தர்களும், மகளும் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் ஊன்றிவிட, அந்தம்மாவும் அங்கேயே போய்விட்டதாகத் தெரிகிறது. இங்கு அப்போதைக்கப்போது மகளின் வழிவந்த மருமகப் பிள்ளை வாசுதேவன் தான் வந்து தொடர்புகொண்டு ஆண்டில் ஒருமுறை பணம் பெற்றுச் செல்பவர். வாசுதேவன் செங்கற்பட்டுப் பக்கத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக இருக்கிறார். மிகவும் பயந்த சுபாவம். அவருக்கே நிலபுலன்கள் இருக்கின்றன. இந்த வீடு வாசல் எல்லாவற்றையும் விற்றுத் தொலைத்துவிட்டு, டவுனில் இரண்டு ஃப்ளாட் வாங்கிப் போட்டாலும் பயனுண்டு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். வீடாவது வீடு மூன்று கட்டு, கூடம், தாழ்வரை, பெரிய முற்றம் முழுவதும் கம்பிவலை அடித்திருக்கிறது. தென்னந்தோப்பிலிருந்து காய்கள் கொண்டு வந்து எண்ணெய் ஆடக் காயப் போடுவதற்காக, அண்மையில்தான் விருத்தாசலம் பிள்ளை வலைபோட்டார். அறைகளுக்குள் தேக்குமர பீரோக்கள், பெட்டிகள் நிறையப் பாத்திரங்கள். பெரும்படிப் பாத்திரங்களைச் சென்ற ஆண்டில்தான் வாசுதேவன் வந்து விற்றுப் பணமாக்கினார். எல்லாம் பிள்ளை மூலமாகத்தான்.
வாசுதேவன் வந்துவிட்டால் அவருக்கு ராஜ உபசாரம் நடக்கும். விருத்தாசலம் தரையில் உட்காரக்கூட மாட்டான். பின்னால் கைகட்டிக்கொண்டு நடப்பான்.
“இவ்வளவு பெரிய வூடு எதுக்குங்க சும்மா கெடக்கிறது? நாந்தா இப்படி அங்காடிக்குக் குடுக்கணும்னு பேசி, தோது பண்ணினேன். ஏதோ நூறு ரூபா வாடகைன்னு வரும். கெடந்துட்டுப் போவுது!” என்று கையெழுத்துக்கு நீட்டியபோது வாசுதேவன் உளம் குளிர்ந்து போனார்.
ஒரு பகுதி நிலம், சிறுகச்சிறுக, அவனுக்கே என்று இந்தப் பத்து வருஷங்களில் தீர்ந்துவிட்டது. அந்த வீட்டின் நடுவறையில் ஒரு நிலவறையும் அதில் சில பாத்திரங்களுடன் ஒரு இரும்புப் பெட்டியும் இருப்பது வாசுதேவனுக்கும் தெரியும்.
“மாரியம்மன் கோயில் சொத்து. இதில நகையெல்லாம் எதோ இருக்கும்பா. எல்லாம் பெரிய மாமிக்குத் தெரியும். சாவியக்கூடத் தேடி எடுக்கணும். இதிலெல்லாம் எனக்கென்ன தலையிலெழுத்து? கிராம விவகாரத்தில் நான் தலையிடணும்னு” என்று வாசுதேவன் பொதுப்படையாகச் சொல்லியிருந்தார்.
நிலவறையைத் திறந்து இருக்கிறார்கள். பெரிய அண்டா, கொப்பரை, கோயில் வழிபாட்டுச் சாமான்களைக் குருக்களும், அவர் மைத்துனன் நடராசனும், ரங்கன் பையனும் பிள்ளையும் பாத்திரங்களை எடுப்பதை மேற்பார்வை செய்வதுபோல் கூடியிருக்கிறார்கள்.
“ஏ குஞ்சிதம்? இங்க வாடி! இதெல்லாம் புளிபோட்டு சுத்தமா விளக்கி வை!”
தென்னைக்கு நீரூற்ற வந்த குஞ்சிதத்தைக் கூப்பிட்டுப் பாத்திரங்களை எடுத்துச் செல்லப் பணிக்கிறார்கள்.
வீரபுத்திரன் குஞ்சிதத்துக்கு உதவியாக ஏற்றி இறக்கி, ஆற்றுக்கரையில் தேய்க்கக் கொண்டு வருகையில் கிட்டம்மா அங்கு வருகிறாள்.
“த, பொழுதோட வூட்டுக்குப் போயிடு! புள்ளங்க தனியாயிருக்கும்…!” என்றவள் குஞ்சிதத்தைக் கண்டதும் ஒரு வசையை உதிர்த்துக் காறி உமிழ்கிறாள்.
வீரபுத்திரன் மறுமொழி கூறவில்லை.
“என்ன? நாம்பாட்டுக்குச் சொல்லிட்டிருக்கிற, நீ பேசாமலிருக்கிற?”
“எல்லாம் வார. நீதாம் போறிய, அப்புறம் இதென்ன?”
“நாம் போயிட்டு நாளக்களிச்சி மக்கியநா சாங்காலமாவும் வாரதுக்கு. ஒழுங்கா பொழுதோட வந்து புள்ளங்கள பாத்திட்டுருங்க. அந்தப் பய, பள்ளிக்கொடத்துக்குப் போவாம டிமிக்கி குடுத்திட்டுத் திரிவா. செவகாமிட்ட சொல்லியிருக்கிற வூட்டப் பாத்துக்குங்க!. என்னா?”
“சரி, சரி. நீ போ…!”
“எல, எங்கடா போறா உம் பொம்பிள?”
விருத்தாசலம் கேட்டுக்கொண்டே வருகிறார். ‘புதிய பெண் பிள்ளை வந்திருக்கிறாள் என்றால் கழுகுக்கு மூக்கில் வேக்கிற மாதிரி வந்திடறாம் பாரு’ என்று நினைத்துக் கொள்கிறான் வீரபுத்திரன்.
“மட்றாசிக்கு…”
“அடி செருப்பால. என்னடா மட்றாசில?”
“பேரணிங்க…!”
“என்னடா பேரணி, ஊரணி, மயிரு? நீங்கதா ஏழு ஒம்பது வாங்குறிங்களே!”
“கூலி ஒண்ணுதாங்களா? என்னா வெல விக்கிது சாமான் சட்டெல்லாம்? மனிசன் செத்தா பொதக்கிறதுக்கு எடமில்ல, பொணத்தைக் கொண்டிட்டுப் போக வழியில்ல, குடியிருக்க எடமில்ல, குடிக்கத் தண்ணியிருக்காது கோட வந்திட்டா!”
“என்னாடா அடுக்கிட்டேப் போற? குடியிருக்க எடமில்லாததா இவ்வளவு பேச்சுப் பேச வாயி வந்திச்சான்னு கேக்குற? இன்னிக்கு உரவில பூச்சி மருந்து வில விக்கிறது தெரியிதா? முன்னப்போலவா நீங்க வேல செய்யிறீங்க!”
“வெலவாசிக் கோரிக்கயுந்தா வைப்பாங்க. உழைச்சிப் பாடுபடுகிறவனுக்கு நெல்லு விக்கிற விலயச் சொல்ல உரிமையில்ல. எவனோ நிர்ணயஞ் செஞ்சு போடுறான். கட்டுப்படியாவுலன்னா எங்க மேல நீங்க பாயுவீங்க. ஒரம், பூச்சி மருந்து அது இதெல்லாம் பண்ணுற தொழிற்சாலைச் செலவெல்லாம் அந்த மொதலாளிக, அதுந் தலயில வச்சு வெவசாயி தலையில கட்டுறாங்க. கூலி அதிகம் சம்பளம் அதிகம்னு சாமான் வெலய ஏத்துறாங்க. நீங்க என்னமோ அஞ்சு ரூபாய ஏழு ரூபாயாக்கிட்டோம், ஏழ ஒன்பதாக்கிட்டோம்னு பெரிசாச் சொல்லிக்கிறீங்க. ஒரு நாயித்துக்கிழமை உண்டா? சம்பளத்தோட லீவு உண்டா? சீக்காப் படுத்தா ஏன்னு கேக்க நாதி உண்டா? என்ன பத்திரம் பாதுகாப்பு? இன்னும் கடன் வாங்கிட்டு வட்டி குடுக்க முடியாம சாவுறோம்…”
“அடி செருப்பால. இந்தப் பய என்ன பேச்சுப் பேசுறாம் பாரு? ஏண்டால, அன்னிக்குப் பண்ண கீழன்னு இருந்தப்ப, மிராசுதார் எல்லாந்தாங் குடுத்தாரு. கலியாணம் கருமாந்தரம், அது இதுன்னா மிராசுதார் குடுத்தாரு. அப்பவும் அடிமைன்னு சொல்லி எகிறினிங்க. சட்டம் கொண்டு வந்துட்டாங்க. இன்னிக்கு வேறயாச் சுதந்தரமா இருக்கிறீங்க. இப்பவும் அழுவயா?”
“என்னா சொதந்தரங்க இப்பவும் இருக்குது, சோத்துக்கு இல்லாத சொதந்தரம்?”
“அடிரா செருப்பால. சொதந்தரம் வந்து உங்களுக்கு என்னடா ஒண்ணும் வரல? வாய்க் கொளுப்பு வந்திருக்கே? போறது, எங்கனாலும் போயி சம்பாதிக்கிறது! அண்டின எடத்தயே துரத்திட்டுத் திரியறது. பெரிய படிப்பு!… சரி சரி, அண்ட கட்டப் போனவ நீ இங்கெங்க வந்த?”
“மம்முட்டி கம்பொடிஞ்சி போச்சி, வந்த இத போறேன்.”
“இன்னிக்கு எல்லாப் பங்கும் சப்ஜாடா முடிச்சுரணும். நாத்துப் பறிக்க ஆரு போனது?”
“சித்தையன் போயிருக்கிறான்…”
“உம் பொம்பிள சொன்னான்னு முடிக்காம போயிடாத, கள்ளுக்குக் காசு தார, இருந்து முடிக்கணும்…”
விருத்தாசலம் மீசையைத் திருகிக் கொள்கிறார். ஒரு கீழ்ப்பார்வை குஞ்சிதத்தின் மீது பதிந்து மீளுகிறது.
புதுக்குடிச் சங்க அலுவலகத்தில் கூட்டம் தேனிக் கூட்டைப்போல் பொங்கி வழிகிறது. உள்ளே தோரணமாகத் தொங்கும் பிரசுரங்களில் மூவண்ணங்களில் டிராக்டரை ஓட்டும் குண்டுப் பெண்ணும், முகம் மட்டும் தெரியும் கூடுபோன்ற விண்வெளி உடையணிந்த வீரனும் கண்கள் இடுங்கப் பற்களைக் காட்டிச் சிரித்துக் கொண்டிருக்கின்றனர். சுவரில் குறுந்தாடி லெனினும், பரந்த அடர்தாடி கார்ல்மார்க்ஸும் புடைப்புச் சித்திர முகங்களைக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். நீண்ட கோட்டில் செருகப் பெற்ற ரோஜாவுடன் முழு வடிவாக நேரு புன்னகை புரிகிறார். சுத்தியல் நட்சத்திரங்களுடனும், சந்தனப்பேலா வடிவில் பொங்கும் நெற்கதிர் செண்டுடனும் கதிர் அரிவாள் தொடர்புகொண்டு சுவர் முழுதும் கோலச் சின்னங் காட்டுகிறது.
நரை திரைகள், பொங்கும் இளமைகள், ஒயர் பைகளில் வெள்ளைத்துணி மற்றும் டிபன் தூக்குகள், சம்புடங்கள் என்று குழுமியிருக்கும் கிராமத்தாரில் பலரும் இரவே நடந்து வந்திருப்பதால் ஆங்காங்கே படுத்து அயர்ந்திருக்கின்றனர். சிலர் கூடி நின்று வாயிலில் பீடி குடித்துக் கொண்டிருக்கின்றனர். எதிரே உள்ள வெற்றிலைப் பாக்குக் கடையில், எண்ணெய் வழியும் கறுத்த சருமம் பளபளக்க, புதிய மினுமினுப்புச் சட்டையும் வேட்டியும் சிவப்புத் துண்டும் கோலத்துக்குப் புதுமையாகவே நிற்க, சில இளைஞர்கள் வண்டி வருகிறதா என்று பார்த்துக் கொண்டிருக்கின்றனர். செவத்தையன் படியில் காலை ஊன்றிக் கொண்டு புட்டம் தரை தோயாமல் குந்தி இருந்து பீடி குடிக்கிறான்.
“மாமா, பணம் கட்டிட்டீங்களா?”
பொன்னடியான் மரியாதையாகவே பலரையும் விசாரித்துக் கொண்டு வருகிறான்.
“என்னாயுசில ஒருதரம் மட்றாசி போய்ப் பாக்கணும். அதா வார…” பற்கள் விழுந்து கண் குழிந்து சுருங்கிப்போன கைத்தடிக் கிழவர் ஒருவரின் ஆசை. “நாகப் பட்ணத்தக் காட்டிலும் பெரிசில்ல…?”
“நாலு நாளக் கூலி போயிடும், நட்டந்தா. ஆனா இது போல சந்தர்ப்பம் வருமா?…” ஒருவரின் நியாயம்.
“நாப்பது ரூபா இப்ப பஸ் சார்ச்சிக்குக் குடுக்கிறமில்ல? அதையும் சேத்துக் கணக்குப் பாத்தா. கூடத் தானாவுது. ஆனா, அதுக்கெல்லாம் பாத்தா ஆவுமா?”
“ஏது நாலு நா? இத இன்னிக்குப் புறப்படுறம். நாளக்கி அமாசி. அமாசியன்னிக்கு வேல இல்ல. முடிச்சுட்டு ராத்திரி கிளம்பி மக்யா நா திரும்பிடப் போறம்.”
“அட இதுக்குனு மட்றாசி போறம். சமுத்திரம், பீச், பெரிய மாடிக்கட்டிடம், லைட்டவுசு, இன்னும் என்னென்னவோ இருக்காமில்ல… எல்லாம் ஒரு நடை பார்க்கணுமில்ல?”
“அதெல்லாம் பாத்திட்டே தான பேரணில நடந்து போறம்?…”
“நா எழுபத்தாறுல ஒரு பேரணில கலந்திட்டேன். குளிக்க கொள்ள முடியாம வெயில் வேற, கட்டமாப் போச்சி…”
“ஆமா உனக்கு மூணு நேரமும் குட்டயில எருமயப்போல கெடக்கணும்!”
“ஏப்பா..? இன்னா விசயம். நம்ம தலவர் மவ ஆறுமுகம் மவன. சொல்லிக்கிறாங்க…? ஆக்சன் ஏதும் எடுத்தாங்களா?…”
“ஓடிட்ட பெறகு என்னாத்த ஆக்சன் எடுக்கறது?”
“அப்ப மைத்த பேருக்கும்.அதே ரூலுதான? பொட்ட புள்ளகளுக்கு ரொம்ப நீளச்சி குடுக்கக் கூடாது. கண்டிசன்னா…”
“ஆமா! பொட்ட புள்ளைங்க இல்லாம நீங்க கிளிச்சிருவீங்க!”
கட்டைக் குரல் அங்கே ஒரு வெட்டு வெட்டிக்கொண்டு பாய்கிறது.
“ஆரு? மாதர் சங்கத்து அம்மாளா? ஏம்மா? பேரணிக்கு உங்கூட்டுக்காரன் வரல?”
“அவரும் வந்தா எப்பிடி? நாந்தான் வாரே…”
“இந்தம்மாதா அஞ்சாம்பிளக்கி சமமாச்சே!…”
“ஆமாய்யா. நானும் பாத்திட்டே வாரேன். இத்தினி பேரு வெள்ளயும் சள்ளயுமா உக்காந்திருக்கிறீங்க. உணிமையா, மாதரை மதிக்கிறவங்களா இருந்தா, நீங்க ஒரு பத்துப் பொண்டுவளன்னாலும் கொண்டாரனுமில்ல? நாம் போயி மல்லுக்கு நின்னு அத, பிரேமாப் பொண்ணையும் சங்கிலியம்மாவையும் கூட்டிட்டு வந்தேன், எல்லாம் பேசுவீங்க!”
“அம்மா, உங்கிட்ட வாய்க் குடுக்க முடியுமா?…”
“இத தலவர் வாராரு. அட என்னங்க, நீங்ககூட அக்காளக் கூட்டிட்டு வரல!…”
சம்முகம் சிரிக்கிறார். முழுச்சிவப்புத் தேங்காய்ப் பூத்துவாலை சட்டைக்குமேல் விளங்க, கையில் வயர் பையில் துண்டு, வேட்டி, இட்லிப் பொட்டலம் சகிதம் பேசாமலே தங்கசாமி பண வசூல் செய்யும் மூலைக்குச் செல்கிறார்.
“பாத்தீங்கல்ல? பேசாமலே போறாரு?… பொண்டுவளுக்குத் தயிரியம் வாரணும்னு மேடையில பேசுவாங்க அல்லாரும்! ஆனா வூட்டுக்குள்ள போனா, கதையே வேற. இத களப்பாள் காரரு வாராரு இந்தத் தோழரும் கம்முனு தா வாராரு. அம்பது அறுபது பேரு வார பக்கத்திலே மூணே பொண்டுவ! நோட்டீசு குடுத்து படிச்சிப் படிச்சி சொல்லிட்டு வந்தே…”
“அட ஏம்மா லவலவன்னு கத்திட்டே இருக்கிற? பொண்டுவ அல்லாரும் உன்னப்போல இருப்பாங்களா? வூடு வாச, புள்ள குட்டின்னு இருக்கில்ல?”
குப்பன் சாம்பார் தொளதொளத்த சட்டையும் சிவப்புக் கரை வேட்டியுமாக நெருங்கி நின்று கிட்டம்மாளுக்குப் பதில் கூறுகிறான்.
“ஆமா, நாம் பேசுனா லவலவன்னு கத்தறது! நீங்க வார பணத்தக் கள்ளுக்கடயில குடுத்திட்டு…”
“ஏங்க? வண்டி என்னமோ பத்து மணிக்கே வந்திடும்னாங்க நான் வேகமா ஓடியாரேன்…” பேச்சை மாற்றுகிறான் ஒருவன் சாதுரியமாக.
“நாங்க குப்புமங்கலத்திலேந்து நடந்தே வாரம். நீங்க எந்துரு?…”
“நாங்க கண்ணங்கோயில். ராவே இங்க வந்திட்டம். காலம ஏழு மணிக்கெல்லாம் வண்டிக்கு ரெடியா இருக்கணும்னு இத… இந்தத் தோழர்தா கண்டிசனாச் சொன்னாரு. சார்ச்சுக் குடுத்திட்டுப் போறதுன்னா பதினேளு ரூபா டிக்கெட்டே ஆயிப்போவுதாம். இப்ப நமுக்கு ஒருவேள சாப்பாடு, நாஷ்தா இதுல அடக்கம்.”
வடிவு அலுவலகத்துக்கு வெளியே நின்று ஏக்கப் பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டிருக்கிறான். புதிய சட்டையும் கிராப் வாரலும் முகச்சவரமுமாகப் பளிச்சென்று சிவப்புத் துண்டு தெரிய பல இளைஞர்கள் பேரணிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். நாற்பது ரூபாய் கொடுத்துக்கொண்டு அவனால் போக இயலாது.
“நீங்கதா முன்னியும் போயிருக்கீங்க. நாந்தா பட்ணம் பாத்ததில்ல. நாம் போறன் பேரணிக்கு!…” என்று கூறிப் பார்த்தான்.
“கெடடா, கம்மா, அவுங்க குப்பன் சாம்பாருன்னு ஆபீசில பொறுக்கி எடுத்திட்டாங்க. நா இன்னும் எத்தினி நா இருக்கப்போறேன்? செறுபய, உனக்கு எத்தினியோ சந்தர்ப்பம் வரும், போவலாம். அவங்க இது செரியில்லன்னா டில்லில தலநகரில போய் பேரணி நடத்துறதா இருக்காங்க. அப்ப உன்னையே அனுப்பச் சொல்றண்டா?” என்று அடித்து விட்டான் அப்பன்.
முதலாளியிடம் குழைந்து கேட்டுப் பார்த்தான்.
“ஒரு வூட்டிலேந்து ரெண்டு பேரும் வர்றதுக்கில்லடா. மேலும் எல்லாரும் போயிட்டா பங்கில மடைபாத்து வுடுறது ஆரு?…”
சம்முகம் அவன் வருவதற்கு இடம் கொடுக்கவில்லை. இருந்தாலும் ஆசை அவனைத் துரத்தி வந்திருக்கிறது.
சினிமாவில் மட்டுமே கண்டிருக்கும் சென்னைப் பட்டினம், மாடி பஸ், பகலைப் போல் இரவிலும் ஒளிரும் சாலைகள், இருபது மாடிக் கட்டிடங்கள், மின்சார ரயில் வண்டி, குளுகுளுவென்று வெய்யிலிலும் குளுமையாக இருக்கும் சினிமாக் கட்டிடங்கள், சிலைகள் எல்லா விந்தைகளையும் பார்க்கும் ஆசை அவனுக்கு அடங்கவில்லை. வண்டி வரும் சமயத்தில் நின்று எப்படியேனும் புகுந்துவிட்டால் முதலாளி இறக்கிவிட மாட்டார் என்று குழந்தைபோல் நம்பிக்கொண்டு நிற்கிறான்.
சம்முகம் வெளியே வருபவர், இவன் அசட்டுச் சிரிப்புடன் நிற்பதைப் பார்த்து விடுகிறார். திடுக்கிட்டாற்போல் விழிக்கிறார்.
“ஏண்டா, நீ எப்ப வந்த?…”
“கொஞ்ச மின்னாடி.”
“நாங்க வந்த பஸ்ஸிலயா வந்த?… நீ எதுக்குடா வந்த, இப்ப?…”
“நானும் வார முதலாளி, நானும் பேரணில கலந்து கோசம் குடுக்கறேன் முதலாளி…!”
தலையைச் சொறிகிறான்.
“அட…ப்பாவி? நீ வரப்போறேன்னே தெரியாது? அதெல்லாம் இப்ப நீயும் வரதுக்கில்ல. ஏண்டாலே, சின்னக் குளந்தபோல ஓடி வந்திருக்கிற? உங்கையாக்குத் தெரியுமா?…”
அவன் தெரியாது என்று தலையாட்டுகிறான்.
“ஒரு தரம் இப்ப கூட்டிட்டுப் போங்க முதலாளி…”
“இப்ப வந்து என்னடால வம்பு குடுக்கற? உன்னையாவது கூட்டிட்டுப் போறதாவது? பேசாம வந்த வழிய திரும்பிப்போ. நாம யாருமில்லன்னா, வயல்ல மாட்டவுட்டு அடிச்சாலும் கேள்வி முறயில்ல. கோவம் வரும்படி நடக்கிற!”
“இல்ல முதலாளி, இந்த ஒரு தடவை…”
சம்முகத்துக்குக் கோபம் வருகிறது. “முதலாளி முதலாளின்னு கழுத்தறுக்கிறடா நீ! இனிமே முதலாளின்னு கூப்பிடக்கூடாது!”
“பின்ன எப்பிடிங்க கூப்பிடுறது?”
இவனைச் சற்று எட்டத் தனியாக அழைத்துச் செல்கிறார்.
“ஏண்டால இப்படி மானத்த வாங்குற? போயி ஊருல வேலயப் பாரு. அடுத்த தடவை எதுன்னாலும் உன்னையே அனுப்பச் சொல்றேன்.”
“இல்ல முதலாளி…”
சிரிப்பு வந்து விடுகிறது. “முதலாளின்னு கூப்பிடலன்னா எப்பிடிங்க கூப்பிடுறது?”
‘தோழரே’ என்று சொல்லிக் கொடுக்க சம்முகத்துக்கும் நா எழவில்லை.
“அண்ணேன்னு கூப்பிடுறது!”
வடிவுக்குச் சிரிப்பு கொள்ளாமல் வழிகிறது.
“அண்ணேன்னு எப்பிடிங்க கூப்பிடுறது? அண்ணேன்னு அளச்சா, அண்ணன் மவள ஆருன்னாலும் கட்டுவாங்களா? மாமான்னு கூப்பிடுறேன் முதலாளி?”
சம்முகத்துக்கு சிரிப்புத்தான் வருகிறது. அவனுடைய கபடமற்ற குழந்தை உள்ளம் கோபிக்கும்படியாக இல்லை.
“அப்ப, இப்ப நான் சொல்றதைக் கேளு! வர பஸ்ஸைப் புடிச்சி ஊருக்குப் போய் வேலையப்பாரு! பொண்ணக் கட்டணும்னா, பொறுப்போட வேலையப் பாக்கணும், நடக்கணும்; உன்ன நம்பித்தா நா எல்லாம் விட்டுப் போறேன்!”
“எனக்குப் பட்டணம் பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு மாமா!”
“பாக்கலாம்டா. கலியாணம் ஆனதும் அனிமூன் அனுப்பி வைக்கிறேன். இப்ப நீ ஊருக்குப் போ!”
திரும்பி அவன் பஸ்ஸில் ஏறிச் செல்லும் வரை பார்த்த பின்னரே சம்முகம் அலுவலகத்துள் செல்கிறார்.
வடிவுக்கு ஒரு ஆறுதல், அவன் மாமா என்று அழைத்து மனதில் உள்ளதை வெளியிட்டு விட்டான். அவர் கோபிக்க வில்லை.
கலியாணம் கட்டி, அவனைப் பட்டணத்துக்கு அனுப்பி வைப்பார்!
அங்கு மச்சான், படித்து வேலை செய்யும் மச்சான், பாப்பாரப் பெண்ணைக் கட்டி இருக்கும் மச்சான் வீட்டில் தங்குவார்கள்.
அவனும் நாகரிகமாக நடப்பான். அம்சுவுடன் பட்டணத்தில் கைகோத்து உலவுவான்! மாடி பஸ்ஸில், எலக்ட்ரிக் வண்டியில் போவார்கள்.
குளுகுளுவென்று சினிமாக் கொட்டகையில் உட்கார்ந்து சினிமா பார்ப்பார்கள். என்ன பேரணி! ஒரு இடமும் பார்க்க முடியாது.
போய்விட்டு உடனே வண்டியேறித் திரும்பி விட வேண்டும்.
போகாததும் நல்லது… மாமா…
அம்சுவிடம் ஓடிப்போய் இதைச் சொல்லப் பரபரக்கிறது மனம்.
பஸ்ஸின் வேகம் போதவில்லை.
– தொடரும்…
– பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்.
– சேற்றில் மனிதர்கள் (நாவல்), முதற் பதிப்பு: 1982, தாகம் பதிப்பகம், சென்னை.