சேற்றில் மனிதர்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 18, 2024
பார்வையிட்டோர்: 1,150 
 
 

(பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்.)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம்-7

வயிரச் சுடராகச் சூரியனின் கதிர்கள் நாற்றுக்கட்டைச் சுமந்து வரும் வடிவேலுவின் மேனியில் விழுகின்றன. கருங்காலி போன்று முறுக்கேறிய கறுத்த உடலில் அரைக்கச்சு தவிர உடையில்லை. மார்பிலும் முகத்திலும் வாலிப வீச்சின் ரோமங்கள் நாற்றுக்கட்டிலிருந்து வடியும் நீரில் நனைந்திருக்கின்றன.

கரையில் நின்று முடிகளை வீசுகிறான். சளக்சளக்கென்று நடவு நட்டுக் கொண்டிருக்கும் பெண்களிடையே அந்தப் பச்சை முடிக்கட்டு வீழ்ந்த சேற்றைச் சந்தனமாகத் தெளிக்கிறது.

அம்சுவின் பக்கம் அது வந்ததும் அவள் வேண்டுமென்று லபக்கென்று பிடித்துக் கொள்கிறாள்.

ஒரு கவடற்ற சிரிப்பொலி அங்கே வெட்ட வெளியெங்கும் ஓர் இரகசியச் சேதியை அலைகளாக்கிக் கொண்டு செல்கிறது.

“பாத்துக்கடி…! என்ன தயிரியம்?…”

“தயிரியம் என்ன! நாத்துக்கட்ட இன்னக்கி வாங்கினா நாளக்கிப் புள்ளய வாங்கிக்கறா…”

மறுபடியும் ஒரு குபீர்ச் சிரிப்பொலி. சேற்றுக் குழம்பில் வண்ண மலர்க் கைகள் பச்சைப் புள்ளிகளை வைத்துப் பூமியன்னைக்குப் பசும் பட்டாடை உடுத்துகிறார்கள். இதற்குப் பிரதிபலனாக அம்மை பொன்மணிகளாய் நெல் மணிகளைக் கொண்டு வந்து குவிப்பாள். குடிசை இருட்டுக்குள் இல்லாமை, இருப்பு, புருசனிடம் சிறுமை, பெண்ணாய்ப் பிறந்துவிட்டதன் பொறுப்பினால் விழும் சுமைகள், வெளிக்குக் காட்டமுடியாத வேதனைகள் எல்லாம் குமைந்தாலும், இந்த வெட்டவெளியில் விரிந்த பசுமையில், அந்தத் தளைகள் கட்டறுத்துக் கொண்டு போகின்றன. லட்சுமி ஓரமாக நாற்றுப் பதிய வைத்துக் கொண்டு போகிறாள். இது அவர்கள் சொந்த மண். ஐயர் பூமியில் தாளடி நட வேண்டும் என்று முன்னதாகவே தண்ணிர் வருவதற்கு முன் பம்ப் வைத்து நீர் இறைத்து நடவு முடித்திருக்கிறார்கள். இதுவும் குறுவைப் பயிர்தான். மழை வந்து கெடுக்காமல் நல்ல படியாக விளைவெடுத்தால் உடனே அடுத்த பயிரையும் வைக்கலாம்.

“ஒ…” என்று சாம்பாரின் பெண்சாதி மாரியம்மா பாடக் குரலெடுக்கிறாள். வாழ்க்கையின் மேடு பள்ளங்களில் அடிபட்டு, கண் குழிந்து கன்னங்கள் தேய்ந்து, முடிகொழிந்து அவளை உருமாற்றி விட்டாலும், குரலின் வளமை அப்படியே இருக்கிறது. தேம்பாகு விழுவதுபோல் தொய்யாமல் துவளாமல் அந்த வெட்டவெளியைத் தனக்கென்று சொந்தமாக்கிக் கொள்ளும் குரல்.

“ஓ… ஓ… தங்கத்தால் வீடு கட்டி…” இவள் முறை வைத்ததும் அத்தனை குரல்களும் சேர்ந்து தங்கத்தால் வீடு கட்டுகின்றன.

“தங்கத்தால் தொட்டி கட்டீ…
அங்கே தங்கக்கிளி பாடுதய்யா…”

குரல் வானவெளியிலே தங்கக் கிளிகளைப் பறக்கச் செய்கின்றன.

“வெள்ளியால வீடு கட்டி…
வெள்ளியால தொட்டி கட்டீ… அங்கே
வெள்ளிக்கிளி களிக்குதையா…”

இந்தக் குரலின் அலைகள் நெளிந்து மின்னி நீண்டு ஓயும்போது சோகம் இழையும் தனிமையைக் கோடாக்கு கையில் வண்ண வண்ணமாய்ப் பூவாய்ப் பசுமையாய் பாவாடையும் தாவணியும் பின்னல்களும் கூந்தல் நெளி பூசிகளும் பொட்டும் வளையல்களுமாக அந்தச் சேற்றில் பசுமை நாற்றுக்களுடன் பூப்பூவாய்க் கொஞ்சும் விரல்களில், அது இசையவில்லை. குபீரென்று மடலவிழ்ந்த தாழை மணமாகச் சிரிப்பொலி பரவுகிறது.

சளக் சளக் கென்று சேற்றில் கால்கள் உறவாட, டப்டிப்பென்று சேற்றுத்துளிகள் மேல் தெளிக்க, நாற்றுக் கட்டுக்கள் வந்துவிழ, பரிகாசங்கள் கலக்க… அந்த இன்பலயத்தில் குத்தலும் கூடப் பாயாது “என்னாடி சிரிப்பு, நெளிப்பு?” என்று லட்சுமியின் அதட்டலுக்கு ஒரு பவிசும் இல்லை.

“தங்கத்தால தொட்டிகட்டி, வெள்ளித் தொட்டிகட்டி, பகளத்தாலே தொட்டி கட்டின்னு இந்தாயா இழுத்துக்கிட்டே இருக்காங்க. அல்லாம் கட்டி, கிளியும் குஞ்சமும் தொங்கவுடனும் பேரப்புள்ளய எப்பப்போட்டு ஆட்டுறது?” என்று சொல்லிக் கேட்டுவிட்டு அம்சுவைப் பார்த்துக் கண்ணடிக்கிறாள். “அதுக்கு மொதலாளி அம்மா தயவு வைக்கணுமில்லே…?”

வடிவு மீசையைப் பல்லில் இழுத்துக் கொண்டு மெதுவாக உதிர்க்கும் பூக்கள், வானத்து இறுக்கம் தளர்ந்து பன்னிர் விசிறும் காற்று மெல்ல நீர்பரப்பைச் சிலிர்க்கச் செய்கிறது. அம்சுவின் மொழுமொழுத்த கையில் பச்சையும் சிவப்புமாக வளையல்கள். லட்சுமியின் கண்கள் அங்கேயே நிலைக்கின்றன. பதியப்பதிய வளையல்கள். இவளுக்கு எத்தனை நாட்களானாலும் என்ன வேலை செய்தாலும் வளையல்கள் உடையா. பழைய வளையல்களைக் கழற்றித்தான் புதியவை அணியவேண்டும். ஆனால் காந்திக்கோ, முண்டுக்கை, இரண்டு வளை ஏற்ற நான்கு வளைகள் உடைக்கவேண்டும். துணி துவைத்தால் உடையும், மாவாட்டினால் உடையும், அடுக்கி நான்கு நாட்கள் தங்காத கை.

அம்சுவின் நாற்றுகள் பதியவில்லை.

“யாரடிவ? மேத் தண்ணில மெதக்குது? அம்மாடி பொண்டுவளா? ஒளுங்கா ஊனிவையுங்கடீ! சினிமால்ல!”

லட்சுமியின் குரலில் அம்சு புரிந்து கொள்கிறாள்.

“யக்கோ. வார மாசம் மாரியம்மனுக்கு விழா எடுக்கப் போறாங்களாம். மூலையா வந்து குடிசய எடுக்கணுமுன்னு மெரட்டிட்டுப் போறா…”

லட்சுமி தலை நிமிரவில்லை. விரைந்து நட்டுக் கொண்டு செல்கிறாள்.

“பத்து வருசமா எடுக்கல ஒரு வரிசயும், அப்பல்லா சாமியில்ல ஒண்ணில்லன்னு மெரட்டினானுவ…”

“ஆமா, பச்சு பச்சுனு வெளுஞ்சாலும் பக்கு பக்குனு கும்பி எரிஞ்சிட்டுத்தா இருக்கு. எங்க பாத்தாலும் அடிதடி சண்டை, சும்மனாலும் டேசனுக்கு வாடான்னு கூட்டிப் போறானுவ…”

மாரியம்மாவின் சுருங்கிய விழிகளில் இருந்து ஒரு பொட்டுக் கண்ணிர் அந்தச் சேற்றில் விழுகிறது.

“இளவட்டம் பேசிப் பிடுறானுவ அதுக்கு அநுபவிக்கிறோம். மின்ன போலீசு அடிச்சாவ, பிடிச்சாவ மனிசன மனிசனா நடத்தணும், கூலி வேணும்னு போராடினோம். ஆனா அப்ப இப்பிடி வெலவாசியா வித்திச்சி! அன்னிக்கு அரமரக்காலும் காமரக்காலும் கூலி வந்தப்பவும் ஒரே கணக்காவும் இப்பவும் ஒரே கணக்காவுமில்ல போவுது?…”

“இவனுவ சாமி கும்பிட்டுட்டா அல்லாம் நல்லாப் போயிடுமாக்கும்!”

வடிவு முணமுணத்துக் கொண்டு வரப்பில் ஓடிப்போகிறான்.

லட்சுமிக்கு எதுவும் சொல்ல நா எழவில்லை. விருத்தாசலம் பிள்ளையின் அப்பா அந்தக் காலத்தில் மிகச் சாமானியமாகத் தான் இருந்தார். பெரிய உடையார் பண்ணையில் ஒரு காரியக்காரர். அப்போது கோவில் சாமியில்லை என்று தீவிரமாக எதிர்த்து இவர்களிடையே எந்தச் சாமி கும்பிடுதலிலும் சேரக்கூடாது என்று கட்டுப்பாடு செய்த வாலிபப் பிள்ளைகளில் விருத்தாசலம் பிள்ளையும் இருந்தான். சம்முகத்துக்கு அந்த நாட்களில் தோழன் தான். ஆனால் சாமி கும்பிடுதலுக்கு அப்பால் இவர்கள் நிலவுடமைக்காரர்களையும் அடக்குமுறைகளையும் எதிர்த்துப் போராட்டங்கள் நிகழ்த்தியபோது, அவர்கள் உயர்சாதிக்காரர்களாக, தனியாகவே நின்றுவிட்டார்கள். இப்போது, அந்தப் பண்ணைக் கட்டுமானமெல்லாம் ஆட்டம் கண்ட பிறகு, புதிய குத்தகைதாரராகவும் வியாபாரியாகவும் தலையெடுத்துச் செழித்து வரும் வருக்கத்தில் விருத்தாசலம் பிள்ளை, மளிகைக்கடை, ரைஸ்மில், வியாபாரம் என்று ஊரில் பெரிய அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார். முதல் மனைவிக்கு இரண்டு பிள்ளைகள். இரண்டாவது மனைவிக்கு மூன்று பெண்கள், ஒரு பையன். முதல் மனைவி இருக்கும்போதே மறுமணம் செய்துகொண்டாலும், அவள் இப்போது இல்லை. மூன்று பெண்களையும் கட்டிக்கொடுத்திருக்கிறார். வீரமங்கலத்தில் ஒரு பையன் மளிகைக் கடையைப் பார்த்துக் கொள்கிறான். இரண்டாவது பையன் டிராக்டர் ஓட்டுகிறான். இளையதாரத்தின் பையன் மைனராகத் திரிந்து கொண்டிருக்கிறான். இப்போது, இவர் அம்மன் கோயிலில் விழா எடுக்க வேண்டும் என்று திடீர் சாமி பக்தியைக் காட்டுகிறார். தை அறுவடைக்கு முன் இவர்கள் ஐந்து குடும்பத்தாரும் கோயில் எல்லையை விட்டுப் பெயர்ந்து போகவேண்டும் என்று திட்டமிட்டு நெருக்கடி செய்வது எதற்காக?

இரண்டொரு விதையூன்றி அவை கொடியேறத் தொடங்கியிருக்கையில், ஆடு கோழிகளைப்போல் அவற்றைப் பெயர்த்துப் போகமுடியுமா?

அந்த அறுவடைக்குப் பிறகு கோயில் விழாவை வைத்துக்கொள்ளக் கூடாதா? இப்போது மழைநெருக்கம் என்று சொல்லமுடியாது. இப்போது ஊன்றும் பயிர் பூச்சி பிடிக்காமல், புகையான் அண்டாமல் கதிர் பிடித்து, வெயில் புழுக்க மணிபழுத்து மழைக்கு முன் அரிந்தெடுக்கவேண்டும்.

எல்லாம் கண்டங்கள். பிறகு உடனே மறுநடவு, மூச்சுப் பிடிக்கும் நெருக்கடியில் உழைக்க வேண்டும். எல்லாம் நிறைவேறி வயிறும் மனமும் குளிர்ந்தால் தானே சாமிக்கும் சந்தோஷமாகப் படைக்க முடியும்?

அன்று வீடுவீடாக வந்து சாமி கும்பிடக்கூடாது என்று சட்டமிட்டவன், இன்று நெருக்கடியில் கும்பிட வேண்டும் என்று குடிசையைப் பெயர்க்கச் சொல்வது எப்படி நியாயமாகும் என்று உணரவில்லையே?

லட்சுமி கால் வரப்பில் தட்டத் திடுக்கிட்டாற் போல் நிமிர்ந்து பார்க்கிறாள். எல்லோரும் கையில் கடிகாரம் கட்டிக் கொண்டாற்போல் கரையேறி விட்டார்கள். அம்சு தான் முதல். அவளுக்குக் கணக்காக வயிற்றில் மணி அடித்துவிடும். அவள் கரையேறினால் மற்றவர்கள் ஒரு விநாடி தாமதிக்கமாட்டார்கள். வடிவையும் காணவில்லை.

தொலைவில் கருவேல மரத்தடியில் அவர்கள் செல்வது தெரிகிறது.

கால்வாயில் சேற்றைக் கழுவிக் கொள்கிறாள். கைப்பிள்ளைக்காரிகள் ருக்மணியும் செல்வியும் விடுவிடென்று வீட்டுக்கே சென்றிருப்பார்கள். மாரியம்மா ஒடுங்கிச் சுருங்கிய உருவமாக வரப்பில் இவளுக்குப் பின்னே நடக்கிறாள்.

“ரெண்டு வெத்தில இருந்தாக் குடேன் லட்சுமி. சோறொண்ணும் எடுத்தார இல்ல. மேலிக்குப் போயிதா எதுனாலும் வாங்கியாந்து ஒல வைக்கணும்.”

லட்சுமி இடுப்புச் சுருக்குப் பையைத் தளர்த்தி உள்ளிருந்து இரண்டு வாடிய வெற்றிலையையும் பாக்கையும் எடுத்துக் கொடுக்கிறாள்.

நடை விரைவாக மறுக்கிறது. வடிவுக்குச் சாப்பாடு ஒன்றும் இன்று இருந்திருக்காது. கையில் காசிருந்தால் டிக்கடைக்குப் போயிருப்பான். கருவேல மரத்தடியில் அம்சு காலையில் கொண்டுவந்த நீர்ச்சோறும் காரத்துவையலும் மண்டுகிறான் என்பது புரிகிறது.

அம்மை இரண்டு வெற்றிலையும் பாக்கும் துண்டுப் புகையிலையும் கொண்டு பசியை அடக்கி விடுவாள். அம்சு தங்கள் சோற்றில் அவனுக்கு ஒரு பங்கைக் கொடுப்பதில் தாயான அவளுக்கு வாட்டமில்லை. அவளும் தலையாரியின் தலைமகளாக, அந்தப் பருவத்தில் வாழ்வின் இனிமைகளையே எண்ணிக் கனவு கண்டிருந்த காலத்தில் பசி பட்டினி தெரியாமல் தொண்ட ருக்குத் தொண்டனாய் இருட்டிலும் வயக்காட்டிலும் வழித் துணைவனாகச் செல்லும் ஓர் ஆண் மகனின் நினைவிலேயே உருகியிருக்கிறாள். இந்த நீர்ச்சகதியில் கீறினாலும் பசுமை பூரித்துச் சிரிக்கும். வான்கொடையில் மனிதச் சிறுமைகள் ஒருபுறம் அழுத்தினாலும் இயற்கையின் மலர்ச்சியின் சுவடே படிவதில்லை. உழைப்புக்கும் இயற்கையின் அரவணைப்புக்கும் எப்போதும் நெருக்கம். சிரித்து சிரித்து விகசிக்கும் பெண்மையின் கவர்ச்சியில், கருகருவென்று மின்னிக்கொண்டு பசிய நாற்றுக் கட்டைத் தூக்கி வரும் எந்த ஆண்மகனும் கிறங்காமல் இருக்க மாட்டான். மடைதிறந்து வரும் பெருக்கில் எந்த அரணுக்கும் காவல் இல்லையெனில் அடித்துக்கொண்டு போய்விடும். இவள் கால்வாய் கடக்குமுன் அவளே சோற்றுத் தூக்கை மூடிவைத்து விட்டு கை கழுவ வருகிறாள். வடிவு சற்று எட்ட நின்று பீடி புகைக்கிறான்.

அம்சுவின் முகம் எப்போதும்போல் பூரிப்பாக இல்லை.

“ஏண்டி சோறு தின்னாச்சா?”

“அது வீட்ல சோறொண்ணும் ஆக்கலியா நேத்து. நா நம்மூட்டுச் சோறு கொஞ்சம் வச்சுக் குடுத்தே.”

லட்சுமி எதுவும் பேசவில்லை. மீதியிருந்த சோற்றைக் கரைத்துக் குடித்துவிட்டு கால்வாயில் தூக்கைக் கழுவுகிறாள்.

மாலை நான்கு மணிக்குள் அந்தப் பங்கின் நடவு முடிந்து விடுகிறது. வீட்டுப்பக்கம் வந்த பின்னரே கூலியைக் கணக்கிட்டுக் கொடுப்பாள். அம்சுவுக்குப் பசியாறவில்லை. சாதாரணமாக வயிறு நிரம்பவில்லையானால் முன்னதாகவே வீட்டுக்குச் சென்று ஏதேனும் இருக்கிறதாவென்று குடைவாள். ஒன்றுமில்லையெனில் பொழுதோடு உலையேற்றிவிடுவாள். இன்று தன் பங்குக்குக் காசை வாங்கிக்கொள்ள ஓடிவரவில்லை. கூடையில் வழியில் கிடைக்கும் கள்ளி, மட்டை என்று பொறுக்கிப் போட்டுக் கொண்டு நாயக்கர் வீட்டுக்குப் போகிறாள். தாழம் புதர்கள் செறிந்த காவாய்க்கரை. இனி நோன்புக்காலத்தில் குப்பென்று மணம் கமழும் குலைகளை வடிவு பறித்தெடுப்பான். பாம்பைப்பற்றி அவனுக்கு அச்சமில்லை. வாலைப்பற்றி லாவகமாகக் கரகரவென்று சுழற்றி அடிப்பான். அம்சுவுக்கு அவனை அப்போது காண்கையில் உடல் சிலிர்க்கும். வயற்காட்டில் அவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து வடிவு இணைந்த தோழன். அவன் பள்ளியில் படித்த நாட்கள் அவளுக்கு நினைவில்லை. ஏர்கட்டி உழுவான். மடைச்சீர்நோக்கி, நாற்றுப் பறித்து, அரிகொய்து, அடித்து, வைக்கோல் பிரித்து, எல்லாப் பணிகளிலும் அவன் இருக்கிறான். சட்டை போட்டுக்கொண்டு அவன் டவுனுக்குச் செல்லும் கோலம் மனதில் நிலைப்பதில்லை.

வானை நோக்கி யாரோ பூவிதழ்களை வீசினாற்போன்று உடை மரத்திலிருந்து கும்பலாகக் குருவிகள் பறந்துசெல்கின்றன.

தெற்குத் தெருவின் பெரிய பெரிய பாழடைந்த கொட்டில்களும் குட்டிச்சுவர்களும் ஒருகாலத்தில் பண்ணைவீடுகளின் சீர்குலைவை விள்ளும் கொல்லைகளாக மாறியிருக்கின்றன. கண்காணிப்பில்லாமல் ஆங்காங்கு நிற்கும் தென்னை மரங்களும் கூடப் புதிய சீரழிவைக் காட்டக் கள்வடியும் பானைகளைக் கவிழ்த்துக் கொண்டிருக்கின்றன. எதிர்ச்சாரியில் புதிய தெரு வாகச் சீராக வைக்கோற் போர்வை போர்த்த கூரைக் குடிசைகள் துப்புரவாகக் கிளி கொஞ்சுகின்றன. சிறிய விவசாயிகளான மேல் சாதிக்காரர்களின் வீடுகள் அவை. குஞ்சிதம் குளத்தில் பட்டுச் சேலை ஒன்றை அலசிக் கொண்டிருக்கிறாள். குளத்தில் குளிக்கவரும் வேலம்மா, “ஏண்டி, ஆரு வந்திருக்காவ ஐயரு வீட்டில?” என்று விசாரிக்கிறாள். “பெரியம்மா வந்திருக்கு…”

“பத்து நா இருக்குமா?”

“இருப்பாவ போலதா இருக்கு. ஐயரு சொன்னாவ. குஞ்சிதம் அம்மாளுக்கு மின்னிப்போல முடியல, நீ வந்து தண்ணி இளுத்துக்குடு, கூடமாட ஒத்தாச பண்ணுன்னாவ.”

அம்சு இதற்கு மேல் பேச்சைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

நாயக்கர் வீட்டுக் கொட்டில் சாணியை வாரிப்போட்டு விட்டு, கிணற்று நீரிறைத்துத் தொட்டியை நிரப்புகிறாள்.

சத்தம் கேட்டுப் பெரியம்மா வருகிறாள்.

“என்னடி அம்சு? நேத்து கடவீதில கலாட்டாவாமே?” அம்சு தலை நிமிர மாட்டாள்.

“எனக்குத் தெரியாதுங்கம்மா!”

“என்னடி தெரியாது? வடிவப் போலீசுக்காரன் கூட்டிப் போயி நாலு தட்டு தட்டி அனுப்புனானாமே?”

“ஆரு சொன்னது பெரியம்மா?”

“ஆரு சொல்றது? ஊரேதாஞ் சொல்லுது! அருணாசலம் கடைக்குப் போனேன்.”

நாயக்கர் வீட்டம்மாவுக்கு வம்பு பிடிக்கும். இந்தம்மாவின் புருசர் உயிரோடு இருந்த காலத்தில், அவர்களுக்காகக் கொடி பிடிக்கும் தலைவர்களில் ஒருவராக இருந்தார். அவர் மறைந்த பிறகு தலைமுறைகளில் எவரும் ஊர் மண்ணில் ஒட்டவில்லை. நிலங்களை எல்லாம் விற்று விட்டார்கள். பெரிய பங்களாவில் வெளவால்கள் குடியிருக்கின்றன. பளபளக்கும் கல்பாவிய கூடங்களும், முற்றங்களும், முகப்புக் கட்டிய மாடியும் பாழடைந்து கிடக்கின்றன. பெரியம்மா மட்டும் வெள்ளைச் சீலையை உடுத்துக் கொண்டு பின்கட்டு வீட்டில் புழங்கிக் கொண்டிருக்கிறாள். இவள் வாழ்க்கைக்கு மகன்கள் எதுவும் பணம் கொடுப்பதாகத் தெரியவில்லை. கள் குத்தகைப் பணம், அற்பமான நிலத்தின் விளைவு என்று காலம் தள்ளுகிறாள். கடைசி மகன் கண்ணனும் இவள் அண்ணனும் சம வயசுத் தோழர்கள். கண்ணனுக்குக் கல்யாணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறதாம். ஆனால் அவன் மனைவி இங்கு வந்து அம்சு பார்த்ததில்லை. பெரியம்மா மட்டும் அடிக்கடி அவலிடித்துக் கொண்டும், மாவிடித்துப் பணியாரம் சுட்டுக்கொண்டும் பேரப் பிள்ளையைப் பார்க்கப்போவாள்.

அம்மாளுக்கு வம்பு என்றால் சீனி லட்டுதான்.

“கோயில் சுத்துல குடிசயப் போட்டுட்டு அங்கியே கூச்ச நாச்சமில்லாம கன்னுக்குட்டியத் தோலுரிச்சிக் கண்டம் போடுறானுவன்னு விருத்தாசலம் கத்தினானாம். எங்கிட்டக்கூட முன்ன வக்கீலையரு சம்சாரம் வந்தப்ப சொன்னா. எங்க பார்த்தாலும் சண்டையும் கறுப்புமாயிருக்கு. பத்து வருசமா முடக்கிப்போட்ட கோயிலைப் பார்க்கணும். அவ ஊர்த் தேவதை. நான் கூட்டு வுருத்தாலத்துக்கிட்டச் சொன்னேன்னாங்க. இந்த அம்மனுக்கு அந்த நாள்ள, எங்க மாமனார் நாள்ள திருவிழா எடுப்பாங்க. காசுமாலை, சரப்பளி ஒட்டியாணம், பதக்கம், ஜடை மொக்கு, முத்துப் பதிச்ச தலைசாமான், எல்லா நகையும் போட்டு, பத்து நா விதவிதமா அலங்காரம் பண்ணுவாரு, குருக்கள். இப்ப இருக்கிறாரே, இவருக்கு மாமா. அதெல்லாம் ஒழுங்கு பண்ணணும்னுதா வந்தேன்னா. அதா, உங்க தலையாரி தானே சம்முகம், கூப்பிட்டுச் சொல்லுங்கன்னா. உங்கப்பன் எங்க ஆளயே காணம்டீ?”

“ஐயாவுக்கு உடம்பு நல்லால்ல பெரியம்மா…”

“என்னாடி ஒடம்புக்கு? அன்னிக்குக் கோபாலு சொன்னா, அப்பா டவுனுக்குப் போயிருக்காருன்னு?”

“அன்னிக்கும் உடம்பு சரியில்லதா, அக்காள் காலேஜில சேக்கணும்னு லட்டர் வந்திச்சி, போனா…”

“அடி சக்கை, என்னாடி காலேஜி, இனியும்? அதாம் பத்து பதினொண்ணுன்னு படிச்சாச்சே? பொட்டப் புள்ளங்களக் காலத்துல கட்டிக்குடுக்காம என்னாடி படிப்பு? உங்கப்பனுக்கே தன் நிலை தெரியாமப்பூடும் சில சமயம்…”

அம்சு தலை நிமிரவில்லை. “ஏற்கனவே உங்கக்கா ஆளமதிக்கமாட்டா, உடயார் வீட்டுல மக பெத்து தொட்டில்ல போட்டாங்க, கூப்பிட்டனுப்பினாங்கன்னு போனே, இவ வந்திருந்தா. திரும்பி எங்கூடத்தா வண்டில வந்தா. அடுப்பு இடிஞ்சி கெடக்கு. குளத்துமண்ணு கெடக்கு ஒரு கூட அள்ளிட்டு வாடி மம்முட்டிய எடுத்திட்டுப் போயின்னேன். நாளக்கி வந்து தாரேன். இப்ப நேரமாச்சின்னு போனா, போனவதா. ஒங்கிட்ட சொல்லலான்னா நீ காலில கஞ்சிய வடிச்சிட்டு வருவ. மக்யா நா உங்கம்மா வந்து மண்ணுரெண்டுகூட போட்டிட்டுப்போனா. அவ்வளவு கருவம், கவுரெத இப்பவே காலேஜிலப் படிக்கப் போட்டுட்டு எங்கேந்து புருசன் தேடறது? ஏரோட்டுற பயலே மோதிரம், வாட்சுன்னு கேக்கறான். சாமான்லாம் உச்சிக்குப் போயிருக்கு. இதில என்ன எடுப்பு காலேசி, கையேசின்னு?”

தொட்டி நிரம்பியாயிற்று. “போய் வரட்டுமா” என்ற பாவனையில் நிற்கிறாள்.

“உன் தாத்தா மாமன் லாம் இந்த வீட்டு உப்பைத் தின்னவங்கதா. இப்ப சங்கம் அது இதுன்னு பவராயிட்டான் உங்கப்பன். கள்ளுக்குக் காசில்லன்னு உங்க தாத்தா தலயச் சொறிஞ்சிட்டு நிப்பான். ஒருத்தன் எட்டிப் பார்க்கிறதில்ல. நானும் ஒரு முருங்கப்போத்துக் கொண்டாந்து இப்பிடி நட்டுவைக்கச் சொல்லுன்னு எத்தினி நாளா சொல்லிருக்கிறேன். தேஞ்சா பூடுவானுவ? விசுவாசமே இல்லாம பூட்டுது? எங்கையால்லாம் இல்லாம நீங்க இன்னிக்கி இப்பிடித் தலையெடுத்திருப்பீங்களா?”

இது ஒரு பெரிய தொணதொணப்பு. கத்திரித்துக் கொண்டுவர முடியாமல் தேனிக்குளவி போல் கொட்டும்.

அம்சுவுக்கு நேரமாகி இருட்டிவிட்டால் குளிக்கமுடியாது. சேலை நனைந்துவிட்டது. ஒரு வழியாகக் கத்திரித்துக்கொண்டு குளத்துக்கு வருகிறாள்.

கூடையைக் கரையில் வைத்துவிட்டுச் சேலையை ஒரு பகுதியை மாராப்பாகச் சுற்றிக்கொண்டு மற்ற ஆடைகளைக் கசக்குகிறாள். மேற்கே வானில் செம்மை பரவி, கீழ்த்திசையில் செறிந்த கருமையுடன் முத்தமிடுகிறது. குளத்தில் அமிழ்ந்து அந்த நீர்ச்சுகத்தில் ஆழ்ந்து போகிறாள்.

சற்று எட்ட திடுதிடுவென்று குளத்தின் அமைதியையே கலக்கும் வண்ணம் கோவணத்துடன் ஒருவன் பாய்ந்து முழுகுகிறான்.

இவள் சட்டென்று கரையேறிச் சேலையை இழுக்கையில் அவன் குரல் இனிமையாய்ப் பாய்கிறது.

“ஏ அதுக்குள்ளாற ஏறிட்ட? நா வந்திட்டேன்னா?”

“பின்ன, பொம்பிள குளிக்கையில வந்து எருமகணக்கா வுழுந்தா?”

குளத்தில் நெளியும் ஈரச்சேலையைப் பற்றி உதடுகளில் அழுத்திக்கொள்ளும் குறும்பில் இன்னும் கோபம் ஏறுகிறது அவளுக்கு.

“சீ…”

சேலையைப் பிடுங்கும் கோபத்தில் இனிமை கொப்புளிக்கிறது.

ஏறி நெருங்கி வந்து அவள் எதிரே விழிகளைக் கூர்மையாக்கி, பார்த்துக்கொண்டே நிற்கிறான். வானின் செம்மையைக் கருமை முழுதுமாகத் துடைத்துவிடுகிறது.

ஒற்றை நட்சத்திரம் கீழ்வானில் தோன்றுகிறது.

“அம்சு…”

ஈரச்சேலை மீது வளையும் கையை அகற்றுகிறாள்.

“உங்கம்மா என்னமே நினைச்சிட்டாங்களா அம்சு?”

“என்னாத்துக்கு?”

“நீ… நீ எனக்கும் சோறுவச்சியே அதுக்கு!”

“இனிமே வீட்டுக்குப் போனாதா தெரியும். கோச்சிட்டா, அதுக்கு நீ என்ன செய்யப்போற?”

“நா… நாளக்கி எங்கூட்டந்து சோறு கொண்டாந்து குடுப்பே…!”

இடுப்பைப் பற்றி வளைத்து நீருள் இழுக்கிறான். இனிமைச் சிலிர்ப்புக்கள் உடலெங்கும் மின் துகளாய்ப் பரவுகின்றன. புதிய கன்றுக்குட்டியைத் தொட்டால் அது சிலிர்ப்பது போல் அவள் நெளிகிறாள்.

“அம்சு, நாம் போயி, உங்கையாகிட்ட, முதலாளி, அம்சுவ நாங் கட்டிக்கிறேன். நா வேற பொண்ண நினைச்சிப் பாக்கமாட்டேன்னு சொல்லப்போறேன்.”

“ஐயோ, அவுசரப்பட்டா, எப்பிடி? எங்கக்கா கல்யாணம் ஆகாம என்ன பத்திப் பேசுறதா…?”

“உங்கக்கா கலியாணம் எப்ப ஆவும்…?”

“அதெப்படி எனக்குத் தெரியும்?”

“அதுவரைக்கும் நாம் பொறுக்கமுடியாது அம்சு…”

“…எங்கையா, ஒருமான்னாலும் சொந்தமா நிலம் வச்சிருக்கிற ஆளா பாத்துதா கட்டிக் குடுக்கிறதாச் சொல்லிட்டிருக்காரு. ஏன்னா ஒரு நா சோறில்லாம மக இருக்கமாட்டான்னு அவருக்குத் தெரியும்.”

“பொஞ்சாதியவச்சிச் சோறுபோட்டுக் காப்பாத்தாத பயன்னு நினைச்சிருக்கிறாரா அவுரு?… எனக்குக் காலும் கையும் இருக்கு ஒரு மான்ன, வேலி வேலியா நெலம் இருந்திச்சி எங்களுக்கு மின்ன. ஒனக்குத் தெரியுமா?”

“எங்க?”

“அதா, நாகப்பட்ணத்துக்குக் கெளக்க. அம்புட்டும் எங்க நெலந்தா…”

“நாகப்பட்ணத்துக்குக் கெளக்க… அப்பிடீன்னா கடலில்ல?”

“ஆமா. அதெல்லா நம்ம நெலந்தா. தண்ணியாப் போச்சு.”

ஒரே சிரிப்பு. “நாம ஒருக்க நாகபட்ணம் போவணும். கப்பல் பார்க்கணும்.”

“என்னா பெரி…ய கப்பல்? நாம மானத்தில போற ஏரோபிளேனில பறக்கணும்னு சொல்லு அம்சு…”

நீருக்குள் அவளை இறுக அணைத்துக் கொள்கிறான். காதோடு கேட்கிறான்.

“இப்ப மானத்தில் போறாப்பில, பறக்கிறாப்பல இல்லை?”

அத்தியாயம்-8

விளையாட்டுப் போல ஒருவாரத்துக்கு மேலாகிவிட்டது. சம்முகத்தால் நடக்க முடியவில்லை. வீக்கம் இருக்கிறது; மஞ்சளாகிப் பழுக்கவுமில்லை. காலையும் மாலையும் வரப்பிலும் வாய்க்காலிலும் நடக்கவேண்டிய ஒருவருக்கு முடங்கிக் கிடப்பதும் மிகக் கடினமாக இருக்கிறது.

ஒருநடை டவுனுக்குப் போகலாம் என்றால்கூட, பஸ் நிற்குமிடம் வரையிலும் நடக்கமுடியாது. யாரிடமேனும் வண்டி கேட்க வேண்டும். யார் கொடுப்பார்கள்!

பழைய வேம்பு ஒன்று ஐயர் நிலத்தில் இருக்கிறது. அதை வெட்டி ஒரு வண்டி செய்து வைத்துக்கொண்டால் மிக உதவியாக இருக்கும். ஆனால் எத்தனையோ எண்ணங்களைப் போன்று அதுவும் முதிர்ந்து பலன்கொடுக்கும் என்ற நம்பிக்கை இல்லாமல் மங்குகிறது.

அன்றுமாலை விளக்குவைக்கும் நேரம், லட்சுமி சாமான் வாங்கக் கடைக்குச் சென்றிருக்கிறாள். காந்தி திண்ணையில் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருக்கிறாள்.

வெள்ளையாக இருட்டில் தெரிகிறது. அந்த நேரத்தில் குடித்துவிட்டு வரும் ஆண்களில் யாரும் அத்தனை வெள்ளைத் துணிக்குரியவராக இருக்க மாட்டார்கள். ஏதோ ஓர் ஆர்வத்தில் உந்தப்பட்டவளாகக் காந்தி எழுந்து வாயிலில் வந்து நிற்கிறாள்.

“ஏம்மா, காந்தி? சம்முகம் இருக்கிறானா?”

“இருக்காரு!… அப்பா!” என்று உள்ளே நோக்கிக் காந்தி மெதுவாகக் குரல் கொடுக்கிறாள்.

“விருத்தாசலம் பிள்ளையும் மூலையாரும் வாராங்க…”

சம்முகம் மெள்ள எழுந்திருக்கிறார். “வெளக்க ஏத்தி வாசல்ல வை” என்று கூறிவிட்டு வாயிலில் வந்து நின்று கை கூப்புகிறார்.

“வாங்க வாங்க…”

திண்ணையில் வந்து உட்காருகின்றனர்.

“என்னப்பா? ஒடம்புக்கென்ன?”

காந்தி சுவரொட்டி விளக்கொன்றை ஏற்றிக்கொண்டு வந்து ஓரமாக வைக்கிறாள்.

“கால்ல முள் குத்தினாப்பல இருந்திச்சு. இப்ப என்னன்னே புரியல. குத்துவலி ஒரு வாரமா மஞ்சக் குழச்சிப் போட்டு, அந்தி மந்தாரை இலை, ஊமத்தை இலை கொண்டாந்து வாட்டிப் போட்டு, புளி குழச்சிக் காச்சிச் சூடா தேச்சி வச்சு எல்லாம் பாத்தாச்சி. பளுக்கவுமில்ல, உடையவுமில்ல.”

“அட? டாக்டரிட்ட யார்ட்டன்னாலும் காட்டக்கூடாது?”

“அதான் வீரமங்கலம் போறதுன்னாலும் வண்டிவேணும், இங்கதா டாக்டர் யாருமில்ல. டவுனுக்குப் போயிக் காட்டலான்னாலும் வண்டியில்ல.”

“இது பாத்தா வாதக் கோளாறாட்டும்லா தோணுது? சுக்கு வேலிப்பருத்திய அரச்சிப் போட்டுப் பாரு. கப்புனு அமுங்கிடும்.”

மூலையாரின் வைத்தியம் இது.

“நடவு, உழவு, பூச்சிமருந்து வாங்கிட்டு வந்து அடிக்கணும். நான் நின்ன எடத்தில் நிக்காம சுத்தினாத்தா முடியும். வீட்டில பொம்பிளயே முழுசும் அங்க இங்கே போயிப்பாக்கணும்னா எப்பிடி? ரொம்பச் சங்கட்டமாயிருக்கு.”

“அதெல்லாம் சரியாப்பூடும். இதெல்லாம் ஒரு நேரம் பத்தாத கோளாறுதான். பத்து வருசமா அம்மனுக்கு ஒண்ணும் செய்யாம போட்டுட்டம். இப்ப விட்டிடக்கூடாது. போன வருசம் பாரு, மழவந்து குறுவபூரா பாழாப் போச்சி, கோடயில மாடு கன்னெல்லாம் சீக்கு வந்து அதும் கோளாறாப் போச்சி. இதுக்கெல்லாம் என்ன காரணம்?… நாம இன்னிக்கு ஊருல ஒரு மதிப்பா தலையெடுத்த பிறகு நாமதா முன்ன நின்னு நடத்தணும். வக்கீலையரு சம்சாரம் வந்து ‘அப்பவே எல்லாம் செய்யிங்க, வீட்டு இரும்புப் பொட்டில நவ நட்டெல்லாம் இப்பவும் பூதம் காக்குற மாதிரி எதுக்கு வச்சிருக்கிறது. சாமிக்கின்னு இருக்கிறத சாமிக்குச் செய்யணும்’னு சொன்னாங்க அந்தக் காலத்தில ஊரில எல்லாம் சேந்து அம்மனுக்குன்னு ஒதுக்கி வச்ச சொத்து… அதனால, விழா எடுக்கிறதுன்னு தீருமானமாயிட்டது.”

“அதா மின்னயே சொல்லிட்டீங்களே?”

“சொன்னேன், ஆனா நீ ஒரு ஆக்ஷனும் எடுக்கலியே? கோயில் வளவில இந்த அஞ்சு பேருதா குடிசய வச்சிட்டு, கோளி ஆடுன்னு குடியேறி ஸ்திரமாயிட்டாங்க! போன தை அறுப்பும் போதே இப்படி ஒரு உத்தேசம் இருக்குன்னேன். சாடையா வேற எடம் போகட்டும்னு. போனானுவளா? உன்ன ஆளயே காணுறதுக்கில்ல. நீ வெவசாய சங்கம், மாநாடு, பேரணின்னு எப்ப பார்த்தாலும் அங்க இங்க போயிட்டிருக்கிற, விழா எடுக்கிறதுன்னா முதல்ல வளவு முச்சூடும் துப்புரவாக்கி, கோயிலப் புதுப்பிக்கணும். முன்னாடி ஒரு மண்டபம் மாதிரி போடலான்னு மணிகாரரு, சொன்னாரு…”

“அதுக்கெல்லாம் நாங்க ஒண்ணும் இப்ப தடை சொல்லலீங்க. ஆனா, ஆளுவ எல்லோரும் இப்ப உழவு நடவுன்னு இருக்கயில, எப்பிடி இதச் சொல்லுறது. நீங்க யோசிச்சிப் பாருங்க…”

“அதா தலக்கி அம்பது ரூபா குடுத்துடறேன்னு சொன்னனே?”

“அது சரிதாங்க, இப்ப வேலை இருக்கறப்ப அவங்க நாலு காசு சம்பாதிச்சாதா உண்டு. அவனுவங்க குடிசயப் பேத்திட்டுப் போவணுமின்னா அஞ்சாறு நா தவக்கமாகும். ஏதோ புடல் பாகல்னு போட்டிருக்காங்க. அதனால நீங்க ஒரு ரெண்டு மாசம் பொறுங்க. புரட்டாசி அப்பிசில…”

“அப்ப மட்டும் நெருக்கடி இல்லையா? அப்பதா குறுவ அறுப்பு, தாளடின்னு பறப்பீங்க.”

“அது சரிதா, தை அறுப்பு ஆன பிறகு விழா வச்சிக்குங்க.”

“அப்ப மட்டும் சால்ஜாப்பு சொல்ல மாட்டானுவளா? வருஷம் பூராத்தா இப்பல்லா வேலையிருக்கு. ஒண்ணு தீர்மானம் செஞ்சா பிறகு மாறக்கூடாது. இது அம்மன் காரியம். அதுனால ஒரு ரசாபாசமில்லாம இந்த வெவகாரம் முடியணும். இவங்க குடிசையைக் கூட, அங்கொண்ணு இங்கொண்ணா இஷ்டத்துக்குப் போட்டிருக்கானுவ. சுத்தமா எடுத்தாத்தா, பொண்டுவ வந்து பொங்கல் வைக்க, அடுப்புக் கோடு இழுக்க, ஒரு நாடகம் அது இதுன்னு வச்சா அல்லாம் உக்காந்து பாக்க பந்தல் போட முடியும். ஒந்தலயாரிமெவ அந்த வடிவு பய…”

குரல் இறங்கி, தீவிரத்துள் நுழைகிறது.

“அந்த தேவேந்திரன் பய இருக்கானில்ல?… அதாம்பா? உங்க ஆளுதா, இத வேட்டுவனூரு வண்ணார்குளம் சேரிலேந்து லா படிச்சிட்டு வந்திருக்கான்ல?”

“ஆமா?…”

“அவ நடப்பொண்ணும் சரியில்ல சம்முகம், உம் மனசில கெடக்கட்டும். பயனுக்கு அப்பன் வெட்டுப்பழி குத்துப்பழி வாங்கி செயிலுக்குப் போனான். பின்னால எலக்சன் சமயத்தில எதிராளுவளே இவன வெட்டிப் பழி வாங்கிட்டானுவ. அம்மாக்காரி ஆந்தக்குடியா நாடகக்காரனோடு ஒடிப்போனா.”

“அதெல்லாம் தெரிஞ்சதுதா. இவன் படிச்சதெல்லாம் தெரியுமே? கெட்டிக்காரப்பய. இப்பக்கூட பத்துநா மின்ன பாத்தேன், அவனுக்கென்ன?”

அடி மனதில் ஒரு சமயம் காந்தி படித்து முடித்து, கட்டுவதற்கு ஏற்ற இளைஞன் என்ற எண்ணம் முளை விட்டிருந்தது. அவனைக் கூப்பிட்டுப் பேசவேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். ஆனால்…

“அதா… இப்பதா தீவிரவாதிங்க நிறையத் தலையெடுத்திருக்காங்களே? அஞ்சாறு மாசத்துக்கு முன்ன, ஆம்பூர் பக்கத்திலேந்து ரெண்டாளுவ இவன் வூட்டிலதா தலமறவாத் தங்கியிருந்தானுவன்னு எனக்குச் சேதி கெடச்சிச்சி. அவனுவ வெடிகுண்டை வச்சிட்டு வெளயாடுறானுவ. அந்த காலத்தில இதெல்லாம் இருந்ததுதா. நம்ம கீழ்த்தஞ்சைப் போராட்டம் நாடறிஞ்சது. இன்னிக்கு ஆண்டான் அடிமையில்ல, அரிசன மக்களுக்கு எல்லா அந்தசும் வந்தாச்சு. அடிமைப்பட்டிருந்ததும் அடிபட்டதும், பழய கதை. இப்ப, இவங்க நடமுறைய உடக்கிறாங்களாம். அப்ப நம்ம குமரேசன் வந்து சொன்னா, கிட வுட்டிருந்த நிலத்தில, காவலுக்குப் போயிட்டிருக்கயில பாத்தானாம். கோவில் வளவில உன்னோட ஆளுவள வச்சித் தூண்டிக்குடுக்கிறான்னு…”

சம்முகம் அதிர்ச்சியுற்றாற்போல் பார்க்கிறார்.

“இல்லாட்டி இந்த வடிவுப்பயல் இவ்வளவு எகிற மாட்டான். ஏங்கிட்ட இங்க ஏட்டய்யா சொன்னாரு சரகம் சபின்ஸ்பெட்டரு கூடச் சொன்னாரு. இந்தப் பக்கத்துல கூட அவனுவ புரயோடிட்டு வாரானுவ. அத்தப் பாத்துக்கிட்டே இருக்கிறம். தேவேந்திரன் பயதா இங்க சந்தேகப்படுற பேர்வழி. ஆனா, ஒண்ணும் சட்டுனு பண்ணறதுக்கில்ல. எதானும் கேட்டா, ஜனநாயகம், அநுமதிச்சி இருக்கிற பார்ட்டி, காட் வச்சிருக்கேம்பா. ஆனா வாட்ச் பண்ணுறம்னு.”

“அப்பிடியா? அந்தமாதிரி எனக்குத் தெரியாம எதும் நடக்கிறதுக்கில்லியே?”

“அட ஒனக்குத் தெரிஞ்சா நடத்துவானுவ? இப்ப ஐயனார் கொளத்துக்காரங்ககிட்ட தூண்டிவுடுறான். வயலுக்கு நடுவ குடிசயப் போட்டுக்கிடறா. தரிசாக் கெடந்திச்சி, அப்ப சரி. இப்ப செட்டியாரு கைமாறினதும் இவன் தீவிர வெவசாயம்னு பண்ணிட்டா. வயல்ல நடவாயிட்ட பிற்பாடு மிதிச்சிட்டுப் போறதுக்கென்னன்னு கேட்டானாம். வடிவுப்பய ராவில போறான். தலவன்னு பேரு வச்சிட்டவன் இன்னிக்கு ஏண்டா போராட்டத்துக்கு எறங்காம பொண்ணு படிப்புன்னு போறான்? இவன் இன்னிக்கு மேலே போனான், பூர்ஷ்வா வாறான், அப்பிடி இப்பிடின்னு பேசுறாப்பல. நீ ஒழச்சி நாலுகாசு சேத்திருக்கிற. இவனுவளுக்காக எத்தினியோ தியாகம் பண்ணி மின்னுக்கு வந்த உன் பையன் இன்னிக்குக் கவுரவமா படிச்சான், மேல் சாதிப் பொண்ணக் கட்டிட்டான். எதோ வூடு கட்டிருக்கே…”

“எங்கங்க? வீட்டுக் கடன் அப்பிடியே நிக்கிது. வாரதும் சாப்பிடறதும் சரியாப் போவுது…”

“அது சரி, உழுதவங்க கணக்குப் பாத்தால்ல அது தெரியும்? இவனுவளுக்கென்ன? பயிரு தீஞ்சாலும் அழுவினாலும் மழபெஞ்சாலும் பெய்யாட்டியும் கூலி வாங்கிட்டுப் போறானுவ. பொறுப்பா இருந்து என்ன செய்றானுவ? அன்னன்னிக்குக் கிடக்கிறத அன்னன்னிக்கே கள்ளுக்கட, சாராயக் கட, சினிமான்னு தொலச்சிடறான். பண்ணையாள் பாதுகாப்பு சட்டம்னு எப்பவே ராஜாஜி கொண்டாந்து, அடிமை ஆண்டானில்லன்னு ஆக்கி, கூலிய ஒசத்தியாச்சு. ஆனா, இப்பவும் இவனுவ கலியாணம், கரு மாந்திரம் எல்லாத்துக்கும் முதலாளின்னு தானே குழயிறானுவ?…”

சம்முகத்துக்குக் குறுக்கிட நா எழவில்லை.

“அரசு பாலர் பள்ளி வச்சிருக்கா, உணவுத் திட்டம் இருக்கு எத்தினி பேரு தொடச்சியா பள்ளிக்கு அனுப்புறானுவ? கணக்கெடுத்துப்பாரு? மதகடில நண்டு பிடிச்சிட்டும், தெருப் பொறுக்கிட்டும் திரியுதுங்க. கேட்டா அதில்ல, இதில்ல, எப்பிடிப் பள்ளிக்கொடத்துக்கு அனுப்புறதுன்னு பேசுறானுவ. நாம முன்ன போவணும்னு ஒரு எழுச்சி வாணாம்? சும்மா வாழுறவனப் பாத்துப் பொறாமை பட்டாப் போதுமா?”

நாயம், நாயம் என்று சம்முகத்துக்குத் தோன்றுகிறது.

“அதா, உம் பொண்ணு சின்னக்குட்டி இருக்கிறால்ல? அத்த இவன் வளச்சிட்டிருக்கிறான். இது நாயக்கர் வூட்டுக்கு வந்து எதோ கழுவி மெழுவி சீலகீல தோச்சிக் குடுக்கறாப்பல. இந்தப் பய போறப்ப வரப்ப, அத்த வளச்சிட்டுப் போறான்.”

“ஆரு… வடிவையா சொல்றீங்க?”

“ஆமா. நீ கவுரவமா இருக்கிறவன். என்ன ஒண்ணுன்னாலும் நீ பள்ளர்குடி வாய்க்காரு, அவன் மாடு திங்கிற பறப்பயதானே? நாளக்கி எதுனாலும், ஆச்சின்னா ஆ ஊன்னு அப்ப கத்தி பிரயோசனமில்ல. இப்ப உம் பய்யன் கவுரவமா வேலை செஞ்சான். மேச் சாதியக் கட்டியிருக்கிறான். அதுமேல போற வழி. ஆனா, இது… சரியில்ல பாரு? அட நடவுக்குப் போறாங்க, பொண்டுவ. இப்ப காலம் ரொம்பக் கருப்பா இருக்கு. மேச்சாதிப் பொண்டுவ அல்லாருமே நடவுக்குப் போறாங்க. ஆனா இங்க ஒளுக்கம் கொறயக் கூடாது பாரு?”

இவர் நிறுத்தும் நேரத்தில் லட்சுமி கூடையில் சாமான்களுடன் கொல்லை வழியாக உள்ளே நுழைந்திருக்கிறாள். சம்முகம் எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொள்கிறார்.

“என்ன லட்சுமி! நடவா?”

அவள் தோளைப் போர்த்துக்கொண்டு வாயிற்படியில் சார்ந்து “ஆமாம், வாங்க, அம்மால்லாம் சொகமா?” என்று கேட்கிறாள்.

“எல்லாம் சொகம். எங்க சின்னக்குட்டி? அதும் நடவுக்குப் போயிருக்கா?”

“ஆமாங்க. நாயக்கர் வூட்டுக்குப் போயிட்டு வருவா…”

“கொஞ்சம் எச்சரிச்சி வையி. இப்ப, கோயில் விசயமா வந்தோம். எல்லாம் புதுப்பிச்சி, விழாவ நல்லபடியா எடுக்கணும்னு ஏற்பாடு. சம்முகத்துக்கிட்டச் சொல்லியிருக்கிறேன். என்ன சாமியில்லன்னு பேசுனப்ப கூட, பொண்டுவ வுட மாட்டீங்க. நீங்க போயி கும்பிட்டு வந்து ஆம்புளகளுக்குத் திருநீறு குங்குமம் கொண்டாந்து கொடுப்பீங்க. இப்ப இத்தினி வருசத்துக்குப் பெறகு விழா விமரிசயா எடுக்கணும்னிருக்கு. பொண்டுவ எல்லாரிட்டையும் சொல்லிடு. மகிலெடுத்திட்டு விமரிசயா குலவ இட்டுட்டு வந்து பொங்கல் வய்க்கணும். பொண்டுவ இல்லாம அம்மன் விழா சிறப்பு இல்ல.”

“வச்சிட்டாப் போச்சி…”

உள்ளே சென்று தட்டில் வெற்றிலை பாக்கு வைத்துக் கொண்டு வருகிறாள்.

“வெத்தில போடுங்க…!” விருத்தாசலம் பிள்ளை மகிழ்ந்து வெற்றிலை போடுகிறார்; மூலையானுக்கு நகர்த்துகிறார்.

“இவருக்கு, காலுதா இப்பிடி வீங்கிக்கெடக்கு. வண்டி எதுனாலும் கிடச்சா, ஆசுபத்திரிக்கின்னாலும் கூட்டிட்டுப் போயி பாக்கலாம். காச்சலும் இருக்கு. கெடந்து அவதிப்படுறாங்க…”

“அதா…” புளிச்சென்று வாயிலில் வெற்றிலைச் சாற்றை உமிழ்ந்து வருகிறார். “வண்டி இருக்கு, ஆனா மாடெல்லாம் ஒழவுக்குப் போயிருக்கு. இல்லாட்டி ஒரு வில்லங்கமும் இல்ல, தாரதுக்கு. இவனுக்கு ஒண்ணில்ல. மூலையாரு சொன்னாப்பல வாதக் கோளாறு, இது இப்பிடித்தா இழுத்தடிக்கும். இஞ்சிக்குடி வைத்தியரு ஒரு எண்ண வடிச்சிக் குடுப்பாரு. நான் சொல்லி அனுப்புறேன். அம்மனுக்கு வேண்டிக்க ஒரு கொறயும் வராது.”

“இவங்க படுத்திட்டதே ஒண்ணும் ஓடலிங்க…”

“ஒண்ணும் வராது. நான் சொல்றம் பாரு உங்கை ராசியான கை சம்முகம். முதல்ல உங்கையால பத்து ரூபா அம்மன் விழாவுக்குன்னு எளுதிக் குடு…”

மூலையான் இத்தனை நேரமும் தயாராக வைத்திருக்கும் நோட்டுப் புத்தகத்தை நீட்டுகிறார்.

“பத்து ரூபாயிங்களா?… என்னங்க அவ்வளவு போட்டுட்டீங்க?”

சம்முகம் குழப்பத்தையும் எரிச்சலையும் காட்டாமல் சிரிக்கிறார்.

“பின்னென்னப்பா? சொந்தமா அஞ்சு மா வாங்கிட்ட, வீடு கட்டிட்டே, விவசாய சங்கத் தலைவன். புள்ள, பொண்ணு படிச்சு கவுரமாயிட்டிங்க. இதெல்லாம் அம்மன் குடுத்தது தான? பத்து வருசத்துக்கு, வருசத்துக்கு ஒரொரு ரூபாவச்சாக் கூட பத்து ரூபாதான்? நாயமா உன் அந்தசுக்கு நூறுருபா போடலாம். நா. கஷ்ட நஷ்டம் ஒனந்தவன். அதான் பத்தோட நிறுத்திட்டேன்…”

சம்முகம் நோட்டுப் புத்தகத்தை வாங்கிக்கொண்டு அவர் கொடுத்த பேனாவாலேயே பத்து ரூபாய் என்று எழுதியதற்கு நேராகக் கையெழுத்துப் போடுகிறார்.

“முதல்ல கடஞ்சொல்ல மாட்டே குடுத்திடுவேன்னுதா இங்க வந்தோம்.”

சமூக மதிப்பைக் குறிப்பாக்கி உயர்த்தி வைக்கும்போது மனம் மயங்காமலே இருப்பதில்லை. லட்சுமி அவனைக் கேட்காமலே உள்ளிருந்து பத்து ரூபாய் கொண்டுவந்து கொடுக்கிறாள்.

அவர்களிருவரும் படியிறங்கிச் செல்கின்றனர்.

“காந்தி, நாகு எங்கடீ; அவம்பாட்டுல எங்கனாலும் போயிடப் போறான்!”

லட்சுமிக்கு அவனைப் பற்றிய உணர்வு ஒரு நொடியில் கூடச் சாவதில்லை.

“ல்லாம் பாட்டியோடதா உக்காந்திருப்பா, புள்ளங்க ஆடுறதப் பாத்திட்டு!”

தாத்தா குடித்துவிட்டு வருகிறார்.

பின்னால் அம்சு ஈரச்சேலையுடன் வீடு சுற்றிக் கொல்லை வழி நுழைகிறாள்.

சம்முகம் உள்ளே நடுவிட்டில் வந்து அமரும்போது அவள் உலர்ந்த துணி எடுக்க வருகிறாள்.

“இங்க வாடி! இந்நேரம் என்னடீ உனக்கு? வெளக்கு வச்சி எந்நேரம் ஆவுது? இனிமே நாயக்கர் வீட்டுக்கு நீ போக வானாம். காந்தி இருக்கிறா. பொழுதோட போயி தொழுவத்தக் கூட்டிட்டு வரட்டும்… தே…வடியா!…”

அம்சு நடுங்கிப் போகிறாள்.

“அந்த வடிவுப் பயகூட இளிக்கிறதும் பேசுறதும் நாலுபேரு பாத்து பேசும்படியா… சீச்சீ! வெக்கங்கெட்ட தனம்…! எனக்கு அவுரு கேக்கறப்ப தல நிமித்த முடியல. நம்ம நடத்தயப் பாத்து ஒரு சொல்லு கெளம்பிச்சின்னா, அது உனக்கோ எனக்கோ இந்த வீட்டுக்கோ மட்டும் கெட்ட பேரில்ல. நாம ஒரு பெரிய அமைப்பைச் சாந்திருக்கிறோம். நமக்குன்னு ஒரு நாயம் கேக்குற ஒழுங்கும் சுத்தமும் இருக்கணும். அதுக்கு ஒரு கெட்டபேரு வந்திடிச்சின்னா நாம சார்ந்திருக்கிற ஒரு அமைப்பே சரிஞ்சி போயிடும். இன்னாடா இவன் பெரிய சங்கத் தலைவன். இவம் பொண்ணு புள்ளங்களே ஒழுங்கு நடத்தயில்லாம இருக்குன்னு ஒரு பேச்சு வந்திச்சின்னா எல்லாக் கட்டுக்கோப்பும் போயிடும். இன்னிக்கு நாம ஒரு மனிசன்னு நிமிர்ந்து நிக்கிற தயிரியம் வந்திருக்குன்னா அது அந்தக் கட்டுக்கோப்பினாலதா. பெரியவங்க இருக்காங்க, உனக்கு எது எப்படிச் செய்யணும்னு அவங்களுக்குத் தெரியும். அதுக்குள்ள அசிங்கம் பண்ணிடக் கூடாது. ஏண்டி?”

அம்சுவின் முகம் தொங்கிப் போகிறது. குற்றவாளியாகக் கால் நிலத்தைச் சீண்டுகிறது.

“அந்தக் காலத்தில் பொம்பிள நடவு செய்யிறப்ப குனிஞ்சதல நிமுந்தா மணிகாரன் கூப்பிட்டு அடிப்பான். இப்பவும் அது மாதிரி ஒரு ஒழுங்கு இருக்கணும் போ…!”

காந்தி இது தனக்கில்லை என்பதுபோல் வாயிற்படியில் போய் நிற்கிறாள்.

“இந்தப் பொட்டங்களக் கட்டிக் குடுக்கிற வரய்க்கும் வயித்துல நெருப்புத்தா, வூட்டுக்குள்ள குந்த வச்சிச் சோறுபோட முடியல…” என்று கிழவி முணுமுணுக்கிறாள்.

அத்தியாயம்-9

காலையில் கோழி கூவும் குரல் எதுவும் கேட்குமுன்பே விழித்தெழுந்து விட்டாள். வழக்கமாக அம்சு சாணம் தெளிப்பாள். இன்று அவளுக்காகக் காத்திராமல் காந்தி அவளே சாணம் தெளித்துப் பெருக்கிவிட்டு, முகத்தைக் கழுவிக் கொள்கிறாள். தாத்தாவுக்கு நீராகாரம் எடுத்து வைத்துவிட்டு, இவளும் சிறிது சோறும் நீரும் அருந்துகிறாள். பின்னர் கூந்தலை வாரிக்கொள்ள அவிழ்க்கிறாள்.

செவிகளிலே அகலமான தங்கத்தோடு, போன மூன்றாம் வருசம் நாயக்கரம்மா மூலமாக அம்மா வாங்கியிருக்கிறாள். அப்போதே இது நானுற்று சொச்சம் ஆயிற்று. மாசாமாசம் பத்தும் இருபதுமாகக் கொடுத்து கடனடைத்தார்கள். இவளுக்கு நீண்ட மென்மையான கூந்தல். அதை நீண்ட விரல்களால் கோதி ஒரு இழை மற்ற இழையோடு ஒட்டாமல் குளுகுளுவென்று சரியவிட்டுக் கொள்வதில்தான் பாதிப் பொழுதையும் இப்போதெல்லாம் கழித்துக் கொண்டிருக்கிறாள். எண்ணெய் நிறைய வைக்காமல், மென்மையாகச் சீவி, காதுகள் மூடும் வகையில் தளர்த்திப் பின்னல் போட்டபிறகு இரண்டு கிளிப் ஊசிகள் கொண்டு காதுகளில் தோடுகள் தெரியச் சற்றே தூக்கி இறுக்கமாகப் பின்னலுக்கடியில் செருகிச் சிங்காரித்துக் கொள்கிறாள்.

“ஏண்டி? எங்க போப்போற காலங்காத்தால?”

“எங்க போக? வீரமங்கலந்தா. உடயாரு சொன்னாங்க அங்க பால்வாடி ஸ்கூல் ஒண்ணு வரப்போவுதாம். வேலை விசயமா விசாரிச்சு வைக்கிறேன்னாரு. காலம எதுக்கும் வா, இருபத்தாறாந்தேதி. இங்க அந்தம்மா ஆபீசர் வாரான்னு சொன்னாரு. போலான்னு கெளம்பினேன்…”

அப்பாவுக்கும் கேட்கவேண்டும் என்றுதான் பேசுகிறாள்.

“இன்னிக்குத்தான் சொல்ற?…”

“இன்னிக்குக் கூடச் சொல்ல வாணான்னு பாத்தேன். எல்லாம் கிட்ட வாரமாதிரி வந்துதான தட்டிப்போவுது? நடக்கட்டும் பாப்போம்னு நினைச்சிருந்தேன். அதுக்குள்ளாற எங்க போறன்னு கேக்குறிங்க…”

“பாபு ஊரிலதா இருக்கா?”

“பாபு இங்கெங்க இருக்கு? அதுக்கு பி.எச்.இ.எல்ல வேல கெடச்சி எப்பவோ போயிட்டுது. வடக்க எங்கியோ இருக்கிறதாச் சொன்னா. சரோஜா கூட வீடு இருக்கு, போயிருக்கும். குழந்தை ரொம்பச் சின்னது. ஆறுமாசம் கழிச்சி அங்கேந்து மாத்தல் வாங்கிடலாம்னு சொல்லிட்டிருக்காங்க…”

“நீ ஒரு காரியம் செய்யிறியா?”

“சொல்லுங்கப்பா…!”

“ஆசுபத்திரில டாக்டர் இருப்பாரில்ல? அப்பாக்கு இப்படி வீங்கியிருக்குன்னு சொல்லி, உள்ளுக்கு ஏதானும் மருந்தோ, மேலுக்குத் தடவிக்க ஏதானும் தயிலமோ வாங்கிட்டு வாரியா?”

“வாரேம்பா. டாக்டர் பாதி நாளும் மாங்கொல்லை போயிடுறார்ன்னு அன்னிக்குச் சொல்லிச்சி சரோஜா. நா, இருந்தாருன்னா பாத்து வாங்கிட்டு வரேன்.”

வீட்டை விட்டுக் கிளம்புவது உறைத்தபின் உற்சாகமும் பரபரப்பும் ஒன்றை ஒன்று விஞ்சுகின்றன. வீரமங்கலத்தில் யார் நிற்கப் போகிறார்கள்? அது வெறும் சாக்கு. இவள் வீரமங்கலம் எல்லையைக் கூட மிதிக்காமல் மருள் நீக்கி ஊரைப் பார்க்க விரைந்து பஸ்ஸைப் பிடிப்பாள். சாலியின் அப்பா ஆறுமுகம் இருக்கும் கிராமம் அவளுக்கு நன்றாகத் தெரியும். பஸ்ஸில் போகும்போது பல முறைகள் நெல் புழுக்கி அரைக்கும் ஆலையின் சிம்னியும், டிராக்டர் மற்றும் டெலிபோன் கம்பிகள் செல்லும் வரிசையும் மாவூரின் புதிய மதிப்பை எடுத்துக் கூறும். ஆறுமுகம் இரண்டு முறைகள் தேர்தலில் வென்று, அதிகாரமும் செல்வாக்கும் பெருக்கிக் கொண்டவர். அண்மையில் சென்ற தேர்தலில் அவர் நிற்கவில்லை. அதற்குப் பல காரணங்கள் கூறிக்கொண்டார்கள். ஆனால் அதெல்லாம் இப்போது அவளுக்குத் தேவையில்லை. அவருக்கு இப்போது செல்வாக்கு இருக்கிறது. அவர் மகனே வந்து அழைத்திருக்கிறார். ஒருமுறை பார்த்துவிட்டால் எப்படியும் வேலையோ அல்லது மேற்படிப்பு உதவியோ நிச்சயம் கிடைக்கும் என்று நம்புகிறாள். ஒரு நல்ல முயற்சியில் நம்பிக்கை வைத்துச் செல்கையில் பொய் சொல்வது குற்றமில்லை.

அந்தச் சேலையைத் தவிர்த்து நீல உடலில் பெரிய பச்சைக்கொடிகள் ஒடும் இன்னொரு சேலையை அணிந்து கொள்கிறாள்.

லட்சுமி குதிரிலிருந்து நெல் எடுத்துக் கொண்டிருக்கிறாள்.

“போனா போன எடம்னு உக்காந்திடாதே. பொழுதோட வந்திடு!”

“சரிம்மா!”

தாத்தா பாட்டி எவரையும் பாராமல் அவள் செருப்பை மாட்டிக்கொண்டு விரைந்து கிழக்கே செல்கிறாள்.

இக்கரையுடன் சென்றால் தெரிந்தவர் அறிந்தவர் கடைத்தெருவில் கூடுபவர் எல்லோருக்கும் வெளிச்சமாய்த் தெரியும்.

கிழக்கே சிறிது தொலைவு சென்று ஆலமரத்தடியில் கள்ளுக்கடைக்காரன் போட்டிருக்கும் மூங்கிற் பாலத்தின் வழியாகச் சென்று இரண்டு கிலோ மீட்டருக்கு மேலுள்ள தொலைவைக் கடக்கிறாள்.

மகிழ்ச்சியுடன் அச்சமுமான பரபரப்பு ஓர் இனிய கிளர்ச்சியின் கலவையாக இருக்கிறது. காலைப் பொழுதின் கவர்ச்சிகளனைத்தும் வாழ்வின் முயற்சிக்குக் கட்டியம் கூறுவதாகத் தோன்றுகின்றன. நெடிய வயல்கள், உழுது போட்டிருப்பவை, உழவுக்காக ஊறிக் கொண்டிருப்பவை; நடவு முடிந்த வயல்கள்; பச்சை வெல்வெட்டுப் பாய் விரித்த நாற்றங்கால்கள், எல்லைக் கோயில்கள், குளங்கள்…

பவழ மல்லிகையோ, மர மல்லிகையோ தம் கடைசிச் சுவாசங்களைக் காற்றில் கலக்கும் மண இழைகள். குளித்துவிட்டு மடியாக நீர் சுமந்து செல்லும் மேற்குல ஆடவர், பெண்டிர், உழவுக்கும் நடவுக்கும் செல்லும் பெண்கள்… ஒன்றிரண்டு போக்குவண்டிகள்… இவளை இனம் கண்டு கொள்பவர் யாருமில்லை என்று நடக்கிறாள்.

மருள் நீக்கி கிராமத்தில் பளிச்சென்று வெயில் அடிக்கிறது. டீக்கடையில் நாலைந்து பேரிருக்கின்றனர். பஸ் நிறுத்தம் இங்கு பாதுகாப்பாக மழை வெயில் பாராமல் கட்டப்பட்டிருக்கிறது. ஆண்கள் பகுதியில் யாரோ ஒரு நகரத்துக்காரர் மூக்குக் கண்ணாடி தோல் பையுடன் நிற்கிறார். பெண்கள் பகுதியில் ஒரு கிராமத்துப் பெண். அவள் தாயைவிட மூத்தவளாக இருப்பவள் நிற்கிறாள்.

“டவுன் பஸ் போயிடிச்சா?”

“எட்டா நெம்பர்தான? இன்னும் வரஇல்ல…”

அவள் நெஞ்சு படபடக்க நிற்கிறாள். எவரேனும் பார்த்துவிட்டால், மருள் நீக்கி அப்படி எட்டாத இடமில்லை. வீரமங்கலம் செல்வதாகச் சொல்லிவிட்டு, வேறெங்கோ வந்து நிற்பது அப்பாவுக்குத் தெரிந்துவிட்டால், என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது.

நல்லவேளையாக டவுன் பஸ் வந்துவிடுகிறது.

அதிக நேரம் நிற்க வேண்டியில்லை. இந்த பஸ்ஸில் வேறு எவரேனும் தெரிந்தவர்கள் இருந்து, எங்கே போறம்மா என்று கேட்டுத் தொலைக்கக் கூடாதே?

விடுவிடென்று ஏறி முன்னேறிச் செல்கிறாள். உட்கார இடமில்லாத கூட்டம். பெண்கள் பக்கத்தில் ஒரு கிழவியின் மீது சாய்ந்தாற்போல நின்றுகொள்கிறாள். கிழவி ஆசனத்துக் கடியில் ஒரு சாக்கு மூட்டை வைத்திருக்கிறாள். அதிலிருந்து கறிவாட்டு வீச்சம் எல்லோருடைய சுவாசங்களைப் பற்றியும் நலம் விசாரிக்கிறது.

கண்டக்டர் அவளிடம் சீட்டு வாங்க வருமுன் கிழவியிடம் வருகிறான்.

“என்ன ஆயா?… மூட்டையிலே என்ன?”

“அட ஒண்ணுமில்ல. முருங்கைக்கீரயும் சுக்காக்கீரயும் கொண்டிட்டுப் போற…?”

அவன் குறும்புச் சிரிப்புடன் மூட்டையை உலுக்குகிறான்.

“ஏம்மா, எங்க, புதுக்குடியா?”

காந்திக்குக் குரல் தடுமாறுகிறது.

“இல்ல மாவூரு…”

“அறுபது பைசா குடு…!”

ஒற்றை ரூபாய்த் தாள் ஐந்து அவள் மறைத்து எடுத்து வந்திருக்கிறாள். கைப்பையிலிருந்து ஒரு ரூபாய் நோட்டைக் கொடுக்கிறாள். நாற்பது பைசாவைக் கொடுத்துவிட்டு அவன் கிழவியின் மூட்டையை மீண்டும் பற்றி இழுக்கிறான். “ஏனாயா? முருங்கக் கீரையா வச்சிருக்க?” எல்லாருக்குமே சிரிப்பு வருகிறது. கிழவியும் சிரிப்பை அடக்க முடியாமலே பொய்யை உறுதி செய்யப் பார்க்கிறாள். “முரங்கக் கீரதா ஆட்டுக்கு…”

“ஆட்டுக்கு முருங்கக்கீரயா? அதுக்கு மூட்ட என்னாத்துக்கு? இந்த வீச்ச சமாசாரமெல்லாம் பஸ்ல தூக்கிட்டுப் போகக்கூடாது தெரியுமில்ல?”

“பஸ்ஸில தூக்கிட்டுப் போகக்கூடாதுன்னா முதுவிலியா தூக்கிட்டுப் போக?”

“போ…! வாசம் உன்னோடயே வரும்!… இங்க பாரு… எடு மூட்டய கெளவீ!…”

“அட போய்யா! சும்மா ஆட்டுக்குத் தழ கொண்டிட்டுப் போற… வாசம் வருதா?”

“தழவாசனயா இது?… சரி சரி ஒரு ரூபா எடு!”

“எதுக்கு?”

“வாசம் வருதில்ல? அதுக்கு!”

“ஒரு ரூவா குடுத்தா வாசம் போயிடுமா…?”

“ஏ கெளவீ! என்னா எதிர்த்துப் பேசுற! இல்லாட்டி உம் மூட்டையோட எறக்கி விட்டிருவேன்! கறிவாட்டு மூட்டய வச்சிட்டு… மூக்கத் துளக்கிது!”

கிழவி மடியில் சுருக்குப் பையிலிருந்து எண்ணி இரண்டுகால் ரூபாய்களை எடுத்துக் கொடுக்கிறாள்.

“என்னா? இன்னும் அம்பது பைசா குடு!”

“இல்ல ராசா, இதா இருக்கு.”

“அட அவுராதம் ஒரு ரூவாய்க்கிக் குறஞ்சி இல்ல கெளவி. இதென்ன வம்மாப் போச்சி!”

இந்த விவகாரத்தில் மாவூர் நிறுத்தத்தில் பஸ் வந்து நின்றதே தெரியவில்லை. மாவூர் என்ற பெயர்ப் பலகையைப் பார்த்துவிட்டு காந்தி பரபரப்புடன் இறங்குகிறாள்.

கிருஷ்ண விலாஸ் காபி ஹோட்டல் பெரியதாகவே இருக்கிறது. அருகில் ஒரு மிட்டாய்க் கடை. ஆப்பிள் சரம் குத்தித் தொங்க விட்டிருக்கும் வெற்றிலைப் பாக்குக்கடை. இடப்பக்கம் முத்தாறு ஓடிக் கொண்டிருக்கிறது. ஆற்றுக்கப்பால் வயல்களில் பயிர் நன்கு வளர்ந்து கதிர் பிடிக்கும் செழிப்பு.

எல்லா இடங்களிலும் நடவாகவே இருக்கையில் இங்கு அதற்கு முன் பயிர் கதிர்காணத் தொடங்கிவிட்டதே!

பசுமையினிடையே ஆங்காங்கு காணும் அறிவிப்புப் பலகைகள் மாவூர் கிராமத்தின் மாதிரி விவசாயப் பண்ணை அது என்பதைத் தெரிவிக்கிறது. வயல்களிடையே செல்லும் கப்பிச் சாலையில் சென்றுதான் ஊருக்குள் வீட்டைக் கண்டுபிடிக்க வேண்டும். ஆறுமுகம் என்றால் அங்கு தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். அவள் பள்ளியில் ஒன்பதாவது படித்துக் கொண்டிருக்கையில் அவர் ஆண்டு விழாவுக்குத் தலைமை தாங்கினார். பாதையில் நடந்து சென்றதும் புராதனமான கோயிலும், குளமும் வருகின்றன. செம்மண் சுண்ணாம்புப் பட்டை அடிக்கப்பட்ட மதில் சுவர்கள். மேற்குலத்தார் வசிக்கும் வீடுகள். யாரிடமேனும் கேட்டால் சொல்வார்களாக இருக்கும்.

யாரிடமும் கேட்கவும் தயக்கமாக இருக்கிறது.

மூட்டைகளை அடுக்கிக்கொண்டு சல்சல்லென்று ஒரு மாட்டுவண்டி வருகிறது.

நின்று அவனைக் கேட்கலாம் என்று சற்று ஒதுங்குகிறாள்.

அவனிடம் கேட்கவே அவசியம் இல்லாதபடி, பின்னால் ஒரு மோட்டார் சைக்கிள் வருகிறது.

நெஞ்சு துடிக்க மறந்து போகிறது; அந்தக் காலையின் ஏறும் வெயிலில், தொப்பி போன்ற முடியும், கறுப்புக் கண்ணாடியுமாக சாலிதான். மோட்டார் சைக்கிள் அவளைக் கண்டதும் நிற்கிறது.

“அட நிசந்தானா? பொய்யில்லையே?”

கவர்ச்சியாக ஒரு சிரிப்பு.

அவளுக்கு என்ன பேசுவதென்று புரியவில்லை. “வந்து அப்பாவப் பாத்திட்டுப் போலான்னு…”

“என்னால நம்ப முடியவில்லை. உங்கப்பா – எப்படிச் சம்மதிச்சாரு?”

“அவுரு சம்மதிச்சு வந்ததாச் சொல்லலியே நான்?”

இளநகை அவள் இதழ்களில் எட்டிப் பார்க்கிறது.

“சபாஷ்… நா நீ தயிரியசாலின்னு நினைச்சேன். அது கணக்கு சரிதான்னு நிரூபிச்சிட்ட…”

“அப்பா வீட்ல இருக்காரில்ல?”

ஒரு கணம் சூரியனின் வெளிச்சம் குன்றுகிறது.

“இல்லியே? நாகபட்ணம் போயிருக்காரு.”

“அடடா. அப்ப. இப்ப பாக்க முடியாதா?”

“முடியாதுன்னு ஆரு சொன்னது? நாகபட்ணம் போயி அவரப் பாக்குறது?”

“எப்படிங்க? இப்ப பஸ்ஸிருக்குதா?”

“ம்…? பஸ்ஸாலதாம் போவணுமா காந்தி?”

“பின்ன எப்படிங்க போறது?”

“பின்னாடி உக்காந்தேன்னா அரமணில போயிடலாம். அப்பாவப் பாத்ததும் திரும்பிடலாம். பஸ்ஸுன்னா இங்கேந்து புதுக்குடி போயி வேற பஸ் புடிச்சிப் போவணும். சொல்லப் போனா, நானே அவரப் பாக்கத்தா இப்ப கிளம்பிட்டிருந்தேன்.”

‘பின்னாடி உட்காருதா. யாருனாச்சியும் பாத்துட்டா’ என்ற அச்சத்தில் அடி வயிறு இலைபோல் ஒட்டிக்கொள்கிறது.

“நா… நா… எங்கப்பா, அம்மாட்டப் பொய் சொல்லிட்டு வந்திருக்கிறேன். அதுனால…”

“என்ன பொய் சொன்ன?…”

இதழ்களில் குறும்பு கொப்பளிக்க அவளைக் கவ்வி விடுபவன்போல் பார்க்கிறான். குறுகுறுப்பு நாடி நரம்பெல்லாம் பாய்கிறது.

“வீரமங்கலம் போயி சிநேகிதியப் பாக்கிறதா ச் சொன்னேன்.”

“அவ்வளவுதானே? சும்மா பின்னாடி உக்காந்துக்க?”

“எனக்கு அப்படியெல்லாம் உக்காந்து பழக்கமில்லிங்க பயமாயிருக்கு…”

“பழக்கம் எப்பிடி வரும்? உக்காந்தாத்தான வரும்? சும்மா உக்காந்துக்க?”

அவளுக்குச் சொல்லொணாப் பிரபரப்பு. இருந்தாலும் தயக்கமும் தடைபோடுகிறது. தெருவில் யாரோ ஒரு ஆள் பார்த்துக் கொண்டே போகிறான். நின்று பேசுவது சரியல்ல சட்டென்று பின்புறத்து ஆசனத்தில் தாவி அமர்ந்து கொள்கிறாள். ஒரு பக்கமாகவே இரு கால்களையும் தொங்கவிட்டுக்கொண்டு கைகளால் ஆசனத்தைப் பற்றிக்கொள்கிறாள். நெஞ்சுத் துடிப்பு மிக விரைவாகிறது.

“கெட்டிமாப் புடிச்சிக்க…”

“புடிச்சிட்டிருக்கிறேன்.”

“எங்க?”

“சீட்டப் புடிச்சிட்டிருக்கிறேன்.”

“அவன் சிரிக்கிறான், திரும்பி.

சட்டை தோளில் உராய்கிறது. மிக நெருக்கத்தில் மென்மையான (பவுடர் மணம் என்று நினைக்கிறாள்) வாசனை இழைகிறது.

முகத்தில் சிலிர்ப்போடுகிறது.

வண்டியை அவன் கிளப்புகையில் தூக்கிப் போடுவது போல் அதிர்ச்சி குலுக்குகிறது. சட்டென்று அவன் தோளைப் பற்றிக்கொள்கிறாள்.

அந்த நிலையிலேயே வண்டி தடதடவென்று செல்கிறது. பாலத்தில் ஏறி ஆற்றைக் கடக்கிறது.

‘தும் தும்’ என்று உடலுக்குள் ஒரு குலுக்கம் புதுமையான உணர்வுகளை வாரி இறைக்கிறது. அவன் தோளை அழுத்தமாகப் பற்றிக் கொள்கிறாள். ஆற்றோரமான சாலைப் புளிய மரங்களில் பட்டுத் துளிர்கள் வெயிலில் பளபளக்கின்றன. புதுக்குடிப் பெரிய கோயில் உற்சவத்தின் போது சுவாமிக்குக் குடை பிடிப்பார்கள். அந்தப் பட்டுக்குடையின் தங்கத் தொங்கட்டான்கள் இப்படித்தான் பளபளக்கும்.

வாழ்க்கையின் இருண்ட ஏடுகள் போய், ஓர் ஒளிமயமான திருப்பத்துக்கு அவள் போய்க்கொண்டிருக்கிறாளோ?

அவள் ஆறுமுகத்தைச் சென்று பார்ப்பதைக் குறித்து எத்தனை விதமாகவோ கற்பனை செய்திருக்கிறாள். ஆனால் இந்த உண்மை நடப்பின் கனவாகக்கூட அவள் எண்ணங்கள் படியவில்லை.

காலைச் சூரியன் மேலுக்கு விரைந்து அவளை நோக்கி நம்பிக்கையூட்டுகிறான்.

அவள் கண்களை மூடிக்கொள்கிறாள். வண்டி சட்டென்று நிற்கிறது. எதிரே பத்ம விலாஸ் என்ற பெரிய ஓட்டல்.

“எறங்கு. எதுனாலும் சாப்பிடலாம்…”

“நாகபட்ணம் வந்திட்டமா?”

“எதானும் சாப்பிட்டுப் போகலாம். பதினஞ்சி நிமிசத்தில நாகபட்ணந்தா…”

“…வாணாங்க…”

“என்ன வாணாம். காலம என்ன சாப்பிட்ட?”

“…இட்லி…”

“பொய்யி, உம்முகத்தப் பாத்தா நீ ஒண்ணுமே சாப்பிடாம வந்திருக்கிறேன்னு தெரியிது. எறங்கிடு கண்ணு வந்து எதுனாலும் சாப்பிடலாம்…”

தள்ளவும் முடியவில்லை; கொள்ளவும் பயமாக இருக்கிறது.

“இந்த ஒட்டல்ல எல்லாம் ஏ ஒண்ணா இருக்கும். நா இங்கதா சாப்பிடுவேன், எப்பவும். சும்மா வா…”

“எனக்குப் பயமா இருக்குங்க…”

“என்ன பயம்? இங்க ஒங்கப் பாரு இப்ப வந்து குதிக்கமாட்டாரு நம் ஆளுங்கதா எல்லாம். சும்மா வந்து சாப்பிடு, பாப்பாக் கண்ணு…”

கல்லாவில் உட்கார்ந்திருக்கும் ஐயரிடம் இவனுக்கு விஷேச மரியாதை கிடைக்கிறது. ஒரு சிரிப்பு, கை உயர்ந்த வணக்கம். தடுக்கப்பட்ட அறைக்குள் சென்று மேசை முன் அமருகின்றனர்.

இட்லி, பொங்கல் என்று ஆணை கொடுக்கிறான்.

தேங்காய்ச் சட்டினி, சாம்பாருடன் எல்லாம் இசைந்து வயிற்றை நிரப்புகின்றன. காபி கள்ளிச் சொட்டாக நாவைவிட்டுப் பிரியவில்லை. ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொள்கிறான். பில்லைக் கொடுத்த பிறகு வெளியே வருகின்றனர்.

“…நாகப்பட்ணம் போயிட்டுச் சாயங்கால மாத் திரும்பிடலாங்களா?”

அவன் அவளைத் தாழ்ந்த பார்வையால் ஊடுருவுகிறான்.

“ஊஹூம். உன்னைத் திருப்பி அங்க அனுப்புற எண்ணங் கிடையாது.” குளிர் சிலிர்ப்பில் குலுங்குகிறான்.

“ஐயோ? அப்ப…”

“ஐயோ ஆட்டுக்குட்டி உங்கப்பாவுக்கு தெரிஞ்சி போகாம இருக்குமா? அசட்டுத்தனமா திரும்பிப் போகலாங்கிறியே?… எங்கூட வந்து அப்பாவப் பாரு. பத்திரமா உங்கண்ணங்கிட்ட அனுப்பி வைக்கிறேன்.” அவளுக்குக் கண்கள் துளிர்த்து விடும்போல் நெகிழ்ச்சி உண்டாகிறது.

“ரொம்ப நன்றிங்க.. ஆனா. ஆனா, நா மாத்துச் சேலை கூட இல்லாம வந்திருக்கிறேனே? சர்ட்டிபிகேட் மட்டுந்தா பையில வைச்சிருக்கிறேன்…”

“சரியான பாப்பாக்கண்ணுதா நீ அவ்வளவு பெரிய வீட்டில் நீ வந்துட்டா, அப்பிடியேவா அனுப்புவாங்க? சும்மா உக்காரு…”

அவள் இப்போது அவன் பின் அமருகையில் அவன் அவள் கையைத் தோளில் இருந்து எடுத்து இடுப்பைச் சுற்றி வைத்துக் கொள்ளச் செய்கிறான்.

காந்தி சேற்றில் கால்பட இறங்கியதேயில்லை. ஒரு தடவை அப்பாவுக்குச் சோறு கொண்டு போனாள். வரப்பெல்லாம் சகதி காலைப் புதையச் செய்தது. கூடையை இடுப்பில் வைத்துக் கொண்டு பாவாடையை முழங்காலுக்குத் தூக்கியவளாய் அவள் வாய்க்காலில் இறங்கிய போது, கால் நழுவிக் கூடையோடு வாய்க்காலில் விழுந்துவிட்டாள்.

அருகில் களை பறித்துக் கொண்டிருந்த பாட்டி விரைந்து வந்து கூடையை மீட்டு, அவளையும் கைபிடித்துக் கரையேற்றினாள்.

“கால ஊனி வச்சி எடுக்கறதில்ல, களுத? பள்ளக்குடில பெறந்திட்டு, வயக்காட்டுல நடக்கத் தெரியல…?” என்றாள்.

அதற்குப் பிறகு அவள் சோறுகொண்டு செல்லவே மாட்டாள். வாய்க்காலுக்கு இக்கரையிலேயே நின்று யாரையேனும் பிள்ளைகளை விட்டுச் செய்தி கூறி வரச் சொல்வாள். அவள் படிப்பும் பழக்கமும் மறுமலர்ச்சியும் அரிசனக்குடியில் இருந்து வந்தவள் என்று நம்ப முடியாதபடி மாற்றியிருக்கின்றன.

அவள் விடுதியில் இருந்தபோது, பரிமளா என்ற ஐயங்கார் வகுப்பில் பிறந்த தோழி ஒருநாள், “ஏன் காந்தி? உங்கூட்டில் நண்டு, நத்தை எல்லாம் குழம்பு வைப்பாங்களாமே?” என்று கேட்டாள்.

“சீ நாங்க சாப்பிட மாட்டோம் அதெல்லாம்; எங்க வீடுங்கள்ள, மீனு, ஆட்டுக்கறி இது தவிர எதுவும் செய்ய மாட்டாங்க! அது கூட எனக்குப் பிடிக்காது. எனக்குப் பருப்புக் குழம்பு, சாம்பாரு இதெல்லாந்தான் இஷ்டம்” என்றாள். தாழ்த்தப்பட்டவர்கள் என்றே ஊருக்கு வெளியே குடியேறி வாழும் மக்கள் சூழலில், எண்ணெய் வடியும் தலையும் கருகருமேனியில் அழுக்குக் கச்சையும் வெற்றிலையால் சிவந்த வாயுமாக இருக்கும் இளைஞர்கள் யாரும் தன்னை நினைத்துப் பார்க்கக் கூடத் தகுதியில்லாதவர்கள் என்று அவள் இறுமாந்திருக்கிறாள். இப்போது சாலியின் இடுப்பைச் சுற்றிக் கையை வளைத்துக் கொண்டு, சூழலைப் பார்க்கத் துணிவில்லாத சுய சிந்தனைகளுடன் குலுங்கிக் குலுங்கிச் செல்கிறாள்.

வண்டி தென்னையும் மாவும் கிளி கொஞ்சும் சோலை களுக்கு நடுவே பெரிய கோயில் கோபுரம் தெரியும் ஒர் ஊரில் செல்கிறது.

கிளைவழியில் திரும்பி ஒரு தெருவில் நாயகமாக விளங்கும் பெரிய மாடி வீட்டின் முன் நிற்கிறது. வாயிலில் சிமிட்டித் திண்ணைக்குக் கீழ் ஒரு வில் வண்டி கூண்டு சரிந்த நிலையில் காட்சி தருகிறது. அருகில் மாடுகள் செல்லும் சிமிட்டித் தளமிட்ட சந்து. திண்ணையின் முகப்பில் புதிய காவி வண்ண பெயிண்ட் துலங்க, சிமிட்டியின் சிவப்பும் பச்சை வரம்பும் பளிச்சென்றிருக்கின்றன.

தூண்களின் பித்தளைப் பட்டங்களும், வாயிற்படி மரவேலைப்பாடுகளும், வீட்டின் செல்வச் செழிப்பை விள்ளுகின்றன.

மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டுச் சந்திலிருந்து முண்டாசும் அரைக் கச்சையுமாக ஒரு ஆள் வருகிறான். பார்த்துவிட்டு, “வாங்க சின்ன முதலாளி” என்று கூறிவிட்டு நிற்கிறான். அவன் வண்டியை நகர்த்தி ஓர் ஓரத்தில் இறங்குகிறான்.

“வா காந்தி.”

அவளுக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. இயல்பாக இருக்க முயன்றவளாக அவனைத் தொடர்ந்து முன்பட்டக சாலைக்கு வருகிறாள்.

உடையார் வீட்டுக் கூடத்தைப்போல் அத்தனை பெரிதில்லை. எனினும் நாகரிகமாக முற்றத்தைச் சுற்றி இரும்பு வலை அழிபோட்டு பச்சை வண்ணம் அடித்திருக்கிறார்கள். கீழே சிவப்பு சிமிட்டி பளபளவென்று துலங்குகிறது. முற்றத்தில் வழவழவென்று மின்னும் தேக்கு மர ஊஞ்சலில், சங்கிலியின் நடுவே கைபிடிக்க பளபளவென்று பித்தளைக் குழல்கள் அணி செய்கின்றன. கூடத்தின் ஒரு மூலையில் பெரிய பத்தாயம் தேக்குமரம்தான் அதுவும்.

“இப்படி வா, காந்தி!” என்று அழைத்துவிட்டு அவன் விடுவிடென்று கூடத்தின் அறைக்குள் நுழைந்து செல்கிறான் அவள் சுவரில் இருக்கும் பெரிய வண்ணப்படங்களைப் பார்க்கிறாள்.

ஒன்றில் சரிகை வேட்டியும் கழுத்தில் ஒன்றை உருத்திராக்கமும் விளங்க, ஒரு பெரியவர் விரல்களில் மோதிரங்களுடன் நாதசுரத்தைப் பற்றிக் கொண்டிருக்கிறார். இன்னொன்றில் பரத நாட்டியக் கோலத்தில் ஒரு பெண்மணி புன்னகை செய்கிறாள். இடையே சில சிறிய புகைப்படங்கள் மாட்டப் பெற்றிருக்கின்றன. நேருவின் அருகில் அதே நாட்டியப் பெண் சதங்கையுடன் நிற்கிறாள். இன்னொன்றில் அந்த நாதசுரக் கலைஞருக்கு யாரோ மாலையிடுகிறார்கள்.

காந்திக்கு மருட்சியாக இருக்கிறது.

நாதசுரம், நாட்டியம், சின்ன மேளம், நாகப்பட்டினத்துப் பொதுமகளிரைக் குறிக்கும் சில ஈனச்சொற்கள் எல்லாம் சிந்தையில் மோதுகின்றன. நாற்று நடவு, மருந்துத் தெளிப்பு, உரமிடுதல், களைபிடுங்குதல் என்று வெயில் மழையில் அலைந்து பாடுபடாது போனாலும், மேல்சாதிக்கார ஆண்கள் வண்டி கட்டிக்கொண்டு, திருவாரூர், நாகப்பட்டினம் என்று பொதுமகளிரை நாடிச் சென்றால்தான் கெளரவம் என்று சொல்லிக் கேட்டிருக்கிறாள். இதை எல்லாம் பற்றிக் கொச்சையாக அவள் அப்பா கூட பேசியதுண்டு.

இந்த இவன் யார் வீட்டுக்கு அவளைக் கூட்டி வந்திருக்கிறான்?

அந்த அப்பா இங்கே யார் வீட்டில் இருக்கிறார்?

அவளுக்கு பொருந்தவேயில்லை. இனந்தெரியாத பயம் ஆட்கொள்ளுகிறது.

உள்ளிருந்து சற்றே பருமனாக, சிவந்த மேனியில் ஊட்டத்தின் மினுமினுப்பு இளமைக்கட்டும் மேவியிருக்க ஓரம்மாள் – நாற்பது வயசுக்கு மதிக்கக்கூடிய பெண்மணி வருகிறாள். நேர்வகிடுடன் கருகருவென்ற கூந்தலைக் கோடாலி முடிச்சாக முடிந்திருக்கிறாள். அந்த முடிச்சு சிறிய தேங்காயளவுக்கு இறுகியிருக்கிறது. வளைந்த புருவங்களுக்கிடையே நீண்ட குங்குமத்திலகம். இரண்டு மூக்கிலும், சுடர் விடும் வயிரப் பொட்டுக்கள். செவிகளில் சிவப்புப் பிரபை சூடிய வயிரத் தோடுகள். அரக்கும் மஞ்சளுமானதொரு சின்னாளப்பட்டுப் புடவையில் மிக எடுப்பாக இருக்கிறாள். புன்னகை செய்கையில் கன்னங்கள் குழிகின்றன. அந்தப் படத்தில் இருக்கும் பெண்மணி தான் அவள்.

“வாம்மா? உக்காந்துக்கோ…”

“இவுங்க சின்னம்மா, காந்தி. அப்பா செத்தமின்னதா கார்ல திருச்சிக்குப் போனாராம். நைட்டுக்குத் திரும்பிடுவாராம்.”

“ஆமா. அங்க என்னமோ மீட்டிங்னு சொன்னாரு. நாங்கூட, ரெண்டுநாளா உடம்பு சரியில்லாம இருந்திருக்கு ரெஸ்ட் எடுத்துக்குங்களேன்னேன், ஆனா வந்த வங்க கேக்கிறாங்களா?. உட்காரம்மா? உம் பேரென்ன?”

“காந்திமதி…”

“நல்ல பேரு.”

புன்னகையும் கண்களும் சொக்கவைக்கும் கவர்ச்சி.

“என்ன சாப்பிடறே?. ரோஸ் மில்க் சாப்பிடுறியா பாபு?…”

கேட்ட குரலுடன் “அடி பூவாயி! பூவாயி!” என்று விளிக்கிறாள்.

கட்டுக்குட்டென்று ஒரு பாவாடை தாவணிப் பெண் வருகிறாள். அசப்பில் அம்சுவைப் போல் இருக்கிறாள். பித்தளை ஜிமிக்கியும், வளையலும் அவள் வேலைக்காரப் பெண் என்று பறைசாற்றுகின்றன.

“தக்காளி போட்டு, வெங்காயம் நெறய அரிஞ்சு போட்டு முருங்கக்கா சாம்பார் வச்சிடு, புளிய ரொம்பக் கரச்சி ஊத்தாத, பக்குவமாயிருக்கட்டும். தாத்தா எங்கே?”

“அது குளிக்கச் போயிருக்கும்.”

“மரத்திலேந்து நீட்டக்காயா நாலு முருங்கக்கா அறுத்துக் குடுக்கச் சொல்லு, மருதுகிட்ட.”

“சரிம்மா!”

அவள் சென்றபின் சின்னம்மா எதிர்புறமுள்ள அறைக்குச் சென்று குளிரலமாரியைத் திறக்கிறாள். சற்றைக்கெல்லாம் இரண்டு கண்ணாடித் தம்ளர்களில் குளிர்ந்த ‘ரோஸ்மில்க்’ ஊற்றிக்கொண்டு வருகிறாள்.

சாலி கூடத்தில் இருந்த அலமாரியைத் திறந்து பத்திரிகைக் கட்டுகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறான்.

“இந்தா பாபு.” அவன் ஒன்றை வாங்கிக் காந்தியிடம் நீட்டுகிறான்.

“…வாணாங்க. இப்பத்தான் காபி எல்லாம் குடிச்சிட்டு வரோம்.”

“அட கூச்சப்படாதே காந்தி, இது உங்கூடுன்னு நினைச்சிக்க…”

“…இல்லிங்க… இப்ப.”

“சும்மா அதும் இதும் சொல்லாத, சின்னம்மா ரோஸ் மில்க்தா குடுப்பாங்க. அப்பதா அவங்களுக்குத் திருப்தி சாப்பிடு…”

உதட்டில் வைத்தால் அந்தச் சில்லிப்பு பற்களைக் கொட்டுகிறது. காந்தி எல்லாக் குழந்தைகளும் வாங்கும் இனிப்பு ஐஸ் குச்சி கூட வாங்க மாட்டாள்.

ஆனால் சில்லிப்பு சிறிது பழகி விட்டதால் கூச்சம் விட்டுப் போய்விடும் போலிருக்கிறது. குடித்துவிட்டு டம்ளரைக் கழுவும் எண்ணத்துடன் கையிலேயே வைத்துக் கொண்டிருக்கிறாள்.

“அப்படியே வச்சிடும்மா. பூவு வந்து கழுவி வய்ப்பா!”

“மாடி ரூம் திறந்திருக்குதா சின்னம்மா?”

“துறந்துதா இருக்கு. லச்சு நேத்தெல்லாம் வந்து புது டேப்பெல்லாம் போட்டுட்டிருந்திச்சி. எல்லாம் அப்படி அப்படியே வச்சிருக்கிறான்னு காலம ஐயா கோவிச்சிட்டுப் போனாரு…”

“என்னென்ன டேப்பு புதிசாருக்கு?”

“அதா, ஐயா கோலாலும்பூர் போயிருந்தப்ப பேசினதெல்லாம் நேத்து கொண்டிட்டு வந்திருந்திச்சி. பெறகு புதிசா குன்னக்குடி வயலின் டேப் ஒண்ணு போட்டிச்சி, என்னா அருமை! வெறும் வயலின்ல, காவேரி உற்பத்திலேந்து சங்கமம் வரைக்கும். அது சொல்லி முடியாது; ஐயாவுக்கு ரொம்பப் புடிச்சிருந்திச்சி. வானொலிலேந்து டேப் பண்ணிருக்கு…”

“அட, அப்ப போட்டுப் பார்க்கணுமே!… வா காந்தி. மாடில ரேடியோ கிராம் இருக்கு. ஸ்டீரியோ டேப் போட்டுக் காட்டுகிறேன்.”

காந்திக்குக் கூட்டைக் கீழே வைத்துவிட்டு ஏதோ ஒன்றை பற்றிக் கொண்டு ஆகாயத்தில் பறக்க எழும்பினாற் போன்று அச்சம் மேலிடுகிறது.

கால்கள் பின்னிக்கொள்கின்றன.

“வா காந்தி! என்ன பயம்?…”

நடுப்படியில் தயங்குபவளை மேலே கைப்பற்றி அழைக்கிறான்.

மாடி அறை பெரிதாக இருக்கிறது. மெத்தை போட்ட இரட்டைக் கட்டிலில் பச்சைப் பூப்போட்ட விரிப்பு. குட்டையான நீண்ட மேசைமேல் கண்ணாடிப் பெட்டிக்குள் ரேடியோவைப் போலிருக்கிறது.

அவளுக்குப் பரிச்சயமேயில்லாத பல பொருள்கள் பெரிய கண்ணாடி பதித்த மெருகு மின்னும் அலமாரி, சுவரில் இவனுடைய தந்தையின் முழு உருவ வண்ணப்படம் அதில் சரிகை மாலை விளங்குகிறது.

சாலி கண்ணாடிப் பெட்டி மூடியைத் திறந்து டேப்பை எடுத்து ஒவ்வொன்றாகப் பார்க்கிறான். டக்டக்கென்று ஒசையிட, ஒவ்வொன்றாகப் பொருத்திச் சுழலவிட்டுப் பரிசீலனை செய்கிறான்.

“உனக்கு என்ன பாட்டுப் பிடிக்கும் காந்தி? புதிசா இப்ப வந்திருக்கே, அந்த சினிமாப் பாட்டு வைக்கட்டுமா?”

குமிழ்களைத் திருகி அடித்து, சுழல விடுகிறான்.

சந்தனக்கிண்ணம், தேனின் பலா… என்று காதற்பாட்டு சுருள் அவிழ்கிறது.

அவன் அவள் அருகில் வந்து தோளைத் தொட்டு விழுங்குபவனைப் போல் பார்க்கிறான். அவள் அவன் கைகளை விலக்க முயலுகிறாள்.

“காந்தி நீ ஏன் பயப்படுற?… நா… நா… உன்னைக் காதலிக்கிறேன். உன்ன பாத்ததிலேந்து என்னால் அமைதியா இருக்க முடியல காந்தி, ஐ லவ் யூ… எங்கப்பாவிடம் சொல்லி சம்மதத்தோட கூட்டி வந்தாப்போல நினச்சிக்க. காந்தி. ஏன் பேசமாட்டேங்கற?…”

காந்தியினால் பேசத்தான் முடியவில்லை.

ஏதோ ஒரு பேரலை மோதினாற்போல் பரவசமாகும் சிலிர்ப்பாகத் தோன்றுகிறது.

“காந்தி… ஐ லவ் யூ, நீ ஏன் பேசாமலிருக்கிற?. காந்தி காந்தி!…”

தனது வாழ்க்கையில் இப்படி ஒரு திருப்பம் வரப்போகிறதென்று அன்று காலையில் கூட நினைவு இல்லை. ஆனால் அவள் அவனுடைய ஆக்கிரமிப்பில் இருந்து திமிறவில்லை. திமிறும் மறுவினை கூட அவள் உடலில் நிகழவில்லை. எத்தனையோ நாட்கள் காத்திருந்தாற் போன்று அவனைச் சுவீகரித்துக் கொள்ளும் உணர்வுகளே அவள் தடைக் குரல்களை அமுக்கி விடுகின்றன.

கட்டிக்காக்கும் மிகையில்லாமல் இயல்பாகவே காக்கப்பட்டிருந்த மெல்லிய இழைகள் ஆரவாரம் இன்றி கரைந்து போகின்றன.

– தொடரும்…

– பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்.

– சேற்றில் மனிதர்கள் (நாவல்), முதற் பதிப்பு: 1982, தாகம் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *