ராமு..ராமு எங்கடா இருக்க? சீக்கிரம் வாடா.. ஸ்கூலுக்கு நேரமாச்சு என்றாள் கீதா.
இருக்கா வரேன். நான் முக்கியமான வேலையில இருக்கேன் என்றான் ராமு.
ஸ்கூலுக்கு போறத விட உனக்கு என்னடா அவ்வளவு பெரிய வேலை?
அக்கா, நான் என்னோட உண்டியலை எண்ணிக்கிட்டு இருக்கேன் என்றான் ராமு.
இதைக் கேட்ட கீதாவுக்கு சுர்ரென்று கோபம் வந்தது. ஏன்டா உனக்கு உண்டியலை எண்றது தான் இப்ப ரொம்ப முக்கியமா!
அக்கா சேமிப்புங்கறது ரொம்ப முக்கியம். என்ன தொந்தரவு பண்ணாத…
ஏன்டா சொல்லமாட்ட! உனக்கு செல்லம் கொடுத்தது ரொம்ப தப்பா போச்சு. நானே மளிகைக் கடைக்கு 500 ரூபாய் கொடுக்கணும். யார்கிட்ட போய் கேட்கறதுன்னு தெரியாம முழிக்கிறேன். நீ ஸ்கூலுக்கு போன பிறகு தான் செட்டியார்கிட்ட போய் கைமாத்தா 500 ரூபாய் கேட்கணும். நீ வேற ஏன்டா என்ன டென்ஷனாக்குற!
அதுக்கு அவசியமே இல்ல அக்கா. கொஞ்ச நேரம் உன் வாயை மூடு. சும்மா லொட லொடன்னு புலம்பாத.
ஏன்டா? நீ தரப் போறியா? என்றாள் கீதா.
தரலாம்…. என்னோட உண்டியல்ல எவ்வளவு சேர்ந்திருக்குன்னு சொல்லு என்றான் ராமு.
என்னடா 5 ரூ இல்லன்னா 10 ரூ. அதுக்கு மேல என்ன சேர்ந்திருக்கப் போவுது.
அதான் இல்ல. எவ்வளவுன்னு சொன்னவுடனே ஆச்சர்யப்பட்டு மயக்கம் எதுவும் போட்டு கீழ விழுந்துடாத என்றான் ராமு.
உடனே கீதா, சும்மா ஆடம்பரம் பண்ணிக்காதடா!
அக்கா, சொல்லப் போறேன்…..
சொல்லித் தொலடா! என்றாள் கீதா.
600 ரூபாய் என்றான் ராமு.
என்னடா சொல்ற! என்னால முடியாதது எப்படிடா உன்னால முடிஞ்சுது.
எங்க ஸ்கூல்ல சேமிப்பை பத்தியும் அதோட பயனை பத்தியும் டீச்சர் சொன்னாங்க. மேலும் நம்மளால முடிஞ்சதை தபால் நிலையத்திலோ, இல்லன்னா வங்கிகளிலோ போட்டு வச்சம்னா அவசரத்திற்கு யார்கிட்டேயும் போய் கேட்கத் தேவையில்லைன்னும் நம்மோட சேமிப்பே நமக்கு உதவும்னு சொன்னாங்க. அதே மாதிரி நானும் செஞ்சேன். நீ தினம் பத்து ரூபாய் கொடுக்கறதுல 7 ரூபாயை தினம் வந்து உண்டியல்ல போட்டுடுவேன். அதனால தான் நம்மளுடைய செலவுக்கு இப்ப என்னோட சேமிப்பு உதவுது.
இந்தாக்கா, 500 ரூகாய். என்னால முடிஞ்சது என்றான் ராமு.
இதைக் கேட்ட கீதாவுக்கு அழுகையே வந்துவிட்டது.
எனக்கு சேமிப்பை பத்தி தெரியாம போயிடுச்சு. படிச்சிருந்தா தான இதை பத்தியெல்லாம் தெரியும். நீ சின்ன பையனா இருந்தாலும் எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்க. நாளையிலிருந்து என்ன… இன்னிக்கே நானும் என்னால முடிஞ்சதை சேமிக்கப்போறேன்.