செவந்தி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 128 
 
 

இளம் வெயில் சூடு மறைக்க, கிழிந்து தொங்கிய சாக்கு கூடாரத்தின் கீழ், புளியம்பழம் ஓடு தட்டிக்கொண்டிருந்த பாட்டிகளிடம்.. ”வாயிக்கி செத்த பொயலை கொடுங்கடி” பொத்தாம் பொதுவாய் கேட்டு கையேந்தி நின்றாள் செவந்தி.

ஒரு முதியவள் சுருக்குப் பையில் நான்காய் மடித்திருந்த புகையிலை குச்சியின் நுனியில் ஒரு இனுக்கு கிள்ளிக் கொடுக்க, வாங்கி வாயில் போட்டுக்கொண்டு சிட்டாய் பறந்தாள்.

செவந்திக்கு 25 க்கு மேல் மதிப்பிட முடியாது. சற்று பூசின தேகம். மாநிறம். அழுக்கேறிய புடவை, பொருந்தாத ரவிக்கை. நெற்றியில் தலைவலி தைலம் டப்பா அளவுக்கு குங்குமத்தை குழப்பி அப்பியிருப்பாள். இரண்டு கைகளிலும் பிளாஸ்டிக், கண்ணாடி, அலுமினியம். பித்தளை என பாகுபாடிமில்லாமல் ‘டஜன்’ கணக்கில் வளையல்கள் கிடக்கும் வெள்ளிக்கிழமை தியேட்டரில் படம் மாற்றுவது போல, சாமி படங்களில் இருந்து வீசப்படும் காய்ந்த மல்லிகை ‘சரச்’ சருகை, செவ்வாய்பேட்டை பகுதிகளில் சென்று சேகரித்து பிசுபிசுத்த கூந்தலில் தொங்கவிட்டு வருவாள். இதுதான் செவந்தியின் அடையாளம். சில நேரங்களில் அம்மன் கோவில் தூண்களில் இருக்கும் திருநீரை முகத்தில் பூசிக்கொண்டு ஊர் தெருக்களில் ஓட்டமும் நடையுமாக இருப்பாள். சந்து வளைவுகளில் அவளை சற்றென்று பார்க்கும் ஆண்களுக்கே திகிலடித்துவிடும். பொங்கலுக்கு ரேஷனில் வழங்கும் புடவைகள் சிலது இவளுக்கு இனாமாக கிடைக்கும். செவந்தியைப் பொருத்தவரை ஆண்கள் அனைவரும் மாமா. பெண்கள் யாராக இருந்தலும் அவளே இவளேதான்.

பைத்தியாமா..? என்றால் அப்படி சொல்ல முடியாது திருத்தமாய் கேள்வி கேட்பாள். போற போக்கில்… ’ஏண்டி அந்த சிங்காரம் பையனை மகேஸ்வரிதான் வெச்சிருக்காளாமே’ என ஊர்வம்பை வாரி இறைத்துவிட்டுப் போவாள். அதில் 90 % நிஜம் இருக்கும். அதனாலேயே மேல் தெரு. கீழ் தெரு பெண்களுக்கு செவந்தியைப் பிடிக்கும். ஊரில் எந்த தப்புகள் நடந்தாலும் அது செவந்திக்கு தெரியாமல் இருக்க வேண்டும். அப்படி தெரிந்து பல பேர் நடுசாமத்தில் சுவர் ஏறிக்குதித்து மாட்டிக்கொண்டு, சந்தி சிரித்த கதை நிறைய உண்டு.

செவந்தி இந்த ஊருக்கு வந்து மூன்று ஆண்டுகள்தான் இருக்கும். ரெயில்வே கூட்ஸில் மூட்டை தூக்கும் சாமிக்கண்ணு கிழவன்தான் கூட்டி வந்தார். ‘கூட்ஸ்ல சிந்துற அரிசி, பருப்பு, வெல்லத்தை அள்ளி திண்ணுகிட்டு இருந்தா ஐயோ பாவம்னு கூட்டியாந்துட்டேன். நம்ம ஊரு கோயில கூட்டிப் பெருக்கிக்கிட்டு அங்கயே கெடக்கட்டும். தெனம் ஆளுக்கு ஒரு ஊட்டுல கைப்பிடி சோறு குடுத்திங்கன்னா தின்னுகிட்டு போறா.’

’ஏம்பா வயசுப் புள்ளயா இருக்கா. கழுத்துல தாலி வேற கெடக்கு நாளைக்கு வில்லங்கம் வந்தா ’டாணா’காரன் முன்னாடி யாரு கைக்கட்டி நிக்கிறது.’ என்றான் ஒரு இளவட்டம்.

’போடா போக்கத்தவனே. வர்ற அன்னக்கிப் பாத்துக்கலாம். இதோ நம்ம கோயில்ல இருக்கிற மாரியாத்தாளும் பொம்பளைதான் யாரைக் கேட்டு ஊருக்குள்ள வெச்சிருக்கோம். எந்த போலீஸ் வந்து கேட்டான். இந்த புள்ள இருக்கிற வரைக்கும் இருக்கட்டும் எவனாவது வந்து கேட்டா அனுப்பிப்புடுவோம்.’ என்றார் சாமிக்கண்ணு.

’எதுக்கு எதை பெரிசு உதாரணம் காட்டுற சாமியும் இவளும் ஒண்ணா…?’ கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் அங்கிருந்து விலகினார். அதற்குப் பின்னால் கோவில் செவந்தியின் வசிப்பிடமாயிற்று. வந்த ஒரு மாதம்தான் கூட்டி பெருக்கி சுத்தம் பண்ணினாள். அதன்பிறகு கோவிலுக்கு வரும் பெண்களிடம் ’ஏண்டி ஒரு கரண்டி சோத்த போட்டுட்டு எம்புட்டு வேலைடி வாங்குவிங்க…? இது நமக்கு சரிபட்டு வராது,’ என்றுவிட்டு ஒரு நாள் காலை எழுந்ததும் யார் கண்ணுக்கும் படாமல் மேல் தெருவுக்குப் போனாள். அங்கிருப்பவர்கள் செவந்தியின் தோற்றத்தைப் பார்த்து விரட்டியடித்தனர்.

மீண்டும் கீழ் தெருவுக்கு வந்தவள் இங்கேயே இருந்து கொண்டாள். ’ஏண்டி பவுனு. ஒரு சாண் வயிறு சோத்துக்கு எங்கெங்கடி அலையவுடுவிங்க..?’ எழுபது வயது முதியவளிடம் கேட்க, ’வெளக்குமாரு பிஞ்சிப்போயிடும் யாரைடி பேரு சொல்லி கூப்புடுற..?’ என ஊன்றுகோலை ஓங்கிக் கொண்டு வந்தாள்.

’பிஞ்சா வேற வெளக்குமாறு வாங்கித் தர்றேண்டி, ஒரு வெத்தலை இருந்தா குடு. இல்லன்னா அமிக்கிக்கிட்டு ஒக்காரு.’ அந்த பவுனிடமே மீண்டும் மல்லுக்கு நிற்பாள். இப்படி ஊர் வம்பு இழுப்பதிலும், திட்டு வாங்குவதிலும் சளைக்காதவள் செவந்தி

அங்கிருந்த மற்ற பெண்களும் சிரிக்க. ’பொழப்ப பாக்காம ஏதுக்குடி இப்டி இளிக்கிறிங்க..? அடடா நேரமாச்சே’ அங்கிருந்து அரக்கப் பரக்க மேல் தெருவுக்கு ஓடுவாள். ஆரம்பத்தில் விரட்டியடித்துக் கொண்டிருந்த செவந்தியை இப்போது யாரும் அங்கு விரட்டுவதில்லை.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, மேல் தெரு பஞ்சாயத்து தலைவர் தன் மகளை பிரசவத்துக்கு வீட்டுக்கு அழைத்து வந்து வைத்திருந்தார். அன்று..நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென்று பிரசவ வழி. தொடைகளுக்கிடையே கத்தி வைத்து கீரியதுபோல் துடித்துப் போனாள் பிரசவக்காரி. அந்த நேரம் பார்த்து தலைவர் ஊரில் இல்லை. இன்று விட்டால் வேறு நல்ல நாள் கிடையாது என்பதுபோல் மழை கொட்டியது. தலைவரையும் செல்போனில் தொடர்பு கொள்ள முடியாத அவளவுக்கு அலைவரிசை முடங்கிப் போயிருந்ததால் தொடர்பு கொள்ள முடியாமல் போயிற்று. என்ன செய்வதென்று தெறியாமல் அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்த கிழவிகள் சிலரை குடைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு வந்தாள் தலைவர் மனைவி.

இதற்கு மேல் கார் வைத்து துடிக்கிற பிள்ளைத்தாச்சியை முப்பது கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் மருத்துவமனைக்கு கூட்டிப்போவது சாத்தியமில்லை என்பதால் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதுதான் சிறந்தது என்று எண்ணிய அந்த முதியவர்கள் ,பிரசவம் பார்க்கும் அனுபவக்காரியான வேடியம்மாளை நான்காவது தெருவிலிருந்து கூட்டி வந்தார்கள். அவளும் கர்ப்பிணியின் உயிர் நிலையில் கை வைத்துப் பார்த்துவிட்டு ’தலை சுத்தியிருக்கு ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடுச்சின்னா என்ன பண்றது..? என தயங்கி நின்றாள். பிள்ளைத்தாச்சி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாள். சுற்றி நின்றவர்கள் கைகளைப் பிசைவதைத் தவிற வேறு எதுவும் செய்யத் தோண்றவில்லை.

அப்போதுதான் அங்கே வந்திருந்த செவந்தி திடுதிப்பென்று உள்ளே நுழைந்து கத்திக் கதறிய கர்ப்பிணிப் பெண் கால்களை நன்றாக அகற்றி வைத்துக் கொள்ள சொல்லிவிட்டு.. கர்ப்பிணியை முடிந்த மட்டும் வயிற்றுக்கு அழுத்தம் கொடுத்து முக்கச் சொல்லிவிட்டு யோனிக்குள் கைகளைவிட்டு கைதேர்ந்த மருவத்துவச்சி போல மெது மெதுவாக சிசுவை வெளியே எடுத்து தரையில் வைத்துவிட்டு, ’என்னாங்கடி வேடிக்கை பாக்குறிங்க..? போயி புள்ளைய கழுவி பெத்தவ கைல குடுங்க. சுத்தி நின்னுகிட்டு வேடிக்கைப் பாக்குறிங்க… வாழைப்பழமா குடுக்கிறாங்க…?’ என்றுவிட்டு அங்கிருந்து வெளியேறிப் போனாள்.

அன்றிலிருந்து மேல் தெருவில் செவந்தியை யாரும் விரட்டுவதில்லை. தலைவர் வீட்டில் பழையதோ, அஞ்சோ பத்தோ தருவார்கள். அந்த பிரசவம் பார்த்த கதையை கீழ் தெருவில் சொல்லிச் சொல்லி சிரிப்பாள் செவந்தி. அவளின் வெள்ளந்தியான சிரிப்பும், நக்கலும், அதிகார அதட்டலும் ஊர்க்காரர்களுக்கு பிடித்துப் போவதற்கு காரணம் பசித்தால் கையேந்துவாளே தவிர அதை திருடினாள் இதை திருடினாள் என்று இன்று வரை எந்த புகாரும் இல்லை. கிழவிகள் உட்கார்ந்து பலமை பேசின இடத்தில் பணத்தோடு கிடந்த சுறுக்குப் பைகளை, நாக்கு பிடுங்கும்படி நான்கு திட்டு திட்டிவிட்டு பையை உரியவளிடம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறாள்.

அன்று, மகனும், மருமகளும் நெருங்கின சொந்தத்தின் திருமணத்திற்காக வெளியூர் செல்ல, வீட்டில் தனியாக இருக்க பயந்து கொண்டு செவந்திக்கு வயிறார கறியும் சோறும் போட்டு துணைக்காக இரவு தன் வீட்டிலேயே படுக்க வைத்துக் கொண்டாள் சரஸ்வதி கிழவி. செவந்தி ஊரில் நடந்த ஏதேதோ கதைகள் சொன்னாள். ’ரங்கசாமி தாத்தா தன்னோட பசங்களுக்கு தெரியாம வாழப்பாடியில் இருந்த மூணு ஏக்கரு நெலத்த, அவரு வெச்சிருந்த காரிப்பாட்டிக்காரி பேர்ல எழுதிப்புட்டாரு.’ என்றாள். இது தெரிந்தால் வெட்டுக்குத்து நடக்கிற அளவுக்கு ரகசியமான தகவல்தான். அது தெரிந்தோ என்னவோ யாரிடமும் சொல்லாமல் மனசுக்குள் வைத்திருந்த செவந்தி. சரஸ்வதி கிழவியிடம், அந்த இரவு நேர தனிமையை பயன்படுத்தி சொல்லிவிட்டாள்.

’ஏய் கிறுக்கி எங்கிட்ட சொன்ன மாதிரி யார்கிட்டயும் சொல்லிப்புடாத’ எச்சரித்துவிட்டு..

”ஊர் கதைகளுக்கிடையே ’ஆமா செவந்தி, கழுத்துல தாலி கெடக்கே உம் புருஷன் எங்க இருக்கான்.?.’ என்றாள் வார்த்தைப் பிடுங்கும் தந்திரமாக.

”’யாரு ஏ மாமாவா..? அவன் எங்கயோ ஓடிப் போயிட்டான். இல்ல.. இல்ல நான்தான் வெரட்டி விட்டுட்டேன். ஒரு நாளு அடிச்சான் போடா நீயுமாச்சி உன் பொழப்புமாச்சின்னு ஓடி வந்துட்டேன்”, என்றாள்.

”உன் சொந்த ஊரு எது..?”

”அது ரொம்ப தூரம் பஸ்ல போயி, ரெயில்ல போகணும். ஒரு நாளு ரெயில்ல வந்துகிட்டு இருந்தனா ஒரு வெள்ள உடுப்பு போட்ட ஆளு அதோ அங்க இறக்கி விட்டுட்டு ரெயிலை எடுத்துக்கிட்டு போயிட்டான். அதோ..” என்று ரெயில் ஸ்டேஷனைக் காட்டினாள்.

”உனக்கு அப்பா, அம்மா, சொந்தக்காரங்க இருக்காங்களா..?”

”ஏண்டி அவங்க செத்து எவ்ளோ நாளாவுது இப்ப போயி கேக்குறவ. சாவுக்கு சொல்லி விடுலையா..?”

’இல்லைடி செவந்தி. சேதி கேட்டுருந்தா வந்திருப்பேண்டி..’ என்றாள் பரிதாபக் குரலில். இன்னும் சில மணி நேரங்கள் அவளை தூங்க விடப்போவதில்லை. இன்றைக்கு இவள் யார், எந்த ஊர், அனைத்தும் விலாவாரியாக வாங்கிவிடவேண்டும் என்ற முடிவுடன்தான் கேள்விக் கணைகளை தொடுத்தாள் சரஸ்வதி கிழவி. ”சரி புள்ளைங்க ஏதும் இருந்திச்சா…?”

”ஐய்யோ.. அதையேண்டி கேக்குற… ஒரு குஞ்சிக்காரன் பொறந்தான். ஆண் சிசுக்களை அப்படிதான் கூறுவாள். ”நல்ல நெறம்டி. பஞ்சு முட்டாய் மாதிரி புசுபுசுன்னு இருந்தான். மாமன்காரன் மாதிரியே தலைமுடி சுருட்டிகிட்டு இருந்திச்சி… என்னமோ தெரியல திடீர்னு வலுப்பு வந்து கை காலெல்லாம் இழுத்துக்கிட்டு, வாயில நொரை தள்ளி செத்துப் போயிட்டான்” ஒரு சொட்டு கண்ணீரோ, தொண்டைக் கமறலோ, வருத்தமோ எதுவுமின்றி, ’ரேஷன்ல சக்கரை போடுறாங்களாமே’ என்ற தொணியில் சொல்லி முடித்தாள். அதை கேட்ட சரஸ்வதி கிழவிக்குத்தான் சோகம் சூழ்ந்திருந்தது.

”சரிடி ஆயா. தூக்கம் வருது தூங்குடி” மேலும் கிழவி கேள்வி கேட்டு சாகடிப்பாள் என்று பயந்தோ என்னவோ வாயைப் பிளந்து கொட்டாவி விட்டுக் காட்டினாள் செவந்தி.

அயர்ந்த தூக்கத்தில் ஏதோ கிசுகிசுக்கும் சத்தம் கேட்டு செவந்தி அரைத் தூக்கத்தில் எழுந்து உட்கார்ந்தாள். கிழவி பொக்கை வாயில் எச்சில் ஒழுக, ஓசையுடன் கூடிய காற்று வெளியேறிக் கொண்டிருந்தது.

கதவை ஓசைப்படாமல் திறந்து வெளியே வந்தாள். கம்மிருட்டாக இருந்தது. வீட்டு வாசலைத் தாண்டி ஆளுயரத்திற்கு முட்புதர்கள் மண்டிக்கிடந்தன. இருட்டு, தனியாள், பெண் என்ற எந்த பயமும் இருக்கவில்லை செவந்திக்கு.

வாதனாராம் மரத்திற்கு ஒட்டிய புதரில் இருந்துதான் அந்த கிசுகிசுப்பு கேட்டது. அங்கே கிடந்த மண் வெட்டியின் நீளமான கைப்பிடியை வாகாகப் பிடித்துக் கொண்டு புதரை நோக்கி நடந்தாள். ”எவண்டாவன் புதருக்குள்ள..? ஆடு திருட வந்தவனாடா… வாடா வெளியே..”

உள்ளிருந்த உருவம் மேலும் பதுங்குவது நிலவொளியில் தெரிந்தது.

”ஐயய்யோ செவந்தி கண்ணுல பட்டோம். ஊர் முழுக்க தண்டோரா போட்டுருவாளே” என்றாள் அந்த இளம் பெண்.

கொஞ்சம் பொருமையா இரு கொஞ்ச நேரம் கத்திட்டு போயிடுவா” என்றான் பதுக்கியிருந்த இளைஞன்.

”இப்ப வெளிய வரல மண்டை தெரிச்சுப் போகும்” என்றபடியே அவர்களை நோக்கி ஓடி வர, அந்த கிறுக்கி வந்த வேகத்தில் ஒரு போடு போட்டால் என்னாவது என்ற பயத்தில் அந்த இளம் ஜோடிகள் புதரை விட்டு எழுந்து நின்றனர். அவர்கள் முகம் தெளிவாகவே தெரிந்தது.

இளைஞன் கீழ் தெரு பையன். செவந்திக்கு நன்கு பரிச்சயமானவன். ”டேய்..சேகரு புதருக்குள்ள இந்த புள்ளைய வெச்சிக்கிட்டு என்னடா பண்ற..?”

”செவந்தியக்கா யாருகிட்டையும் சொல்லிடாத உனக்கு வேண்டிய வெத்தலை, பொயலை வாங்கித்தாறேன்.” அவன் சொல்வதை காதில் வாங்காமல் அந்த இளம் பெண்ணையே பார்த்தாள்.

”ஏண்டி.. நீ மேலத் தெரு சின்னசாமி மவதான..?” ஆமாம் என்பதுபோல் தலையாட்டினாள்.

“நாங்க ரெண்டு பேரும் பழகறோம். அவங்க வீட்டுக்குத் தெரிஞ்சா போர்க்களாமாயிடும் அதான் இந்த புள்ளைய கூட்டிக்கிட்டு எங்காச்சும் கண்காணாத எடத்துக்குப் போயி பொழச்சிக்கலாம்னு கூட்டிட்டு ஓடி வந்துட்டேன்” என்றான் வறண்டு போன வார்த்தைகளில்…

”அடி நாசமத்த புள்ளிங்களா… சேந்து வாழ ஓடி வரல. சாவறதுக்கு ஓடி வந்திருக்கிங்க. இவளோட அண்ணனுங்க ரெண்டு பேரு கைலையும் சிக்குனிங்கன்னா வெட்டி கூறு போட்டுருவானுங்களே. போன வாரம்கூட சாதி மாறின சோடிய வெட்டி கொன்னாங்கன்னு டிவி பொட்டியில சொன்னாங்களே கேக்குலியா…?”

“ஆமாங்கா ப்ளீஸ். சொல்லிபுடாதிங்க. சாதி வெறி புடிச்ச ஏ அண்ணனுங்க வேற ஊர்ல சாதி மாறி காதலிக்கிறாங்கன்னு தெரிஞ்சாலே ஆத்திரபடுவானுங்க. தன் தங்கச்சியே இப்டி கிழத் தெரு பையனோட இருக்கேன்னு தெரிஞ்சா உசுரோட விடமாட்டானுங்க. இப்ப போதைய வேற ஏத்திக்கிட்டு கொலை வெறியோட தேடுறானுங்க. காட்டிக் கொடுத்துப்புடாதிங்க.” என்று கையெடுத்து கும்பிட்டாள். கூடவே அவனும்.

“அட கைய கீழ போடுங்க. சித்த நேரம் இங்கியே இருங்க. அதோ தெரியுது பாரு ரெயில்வே டேசனு இன்னும் கொஞ்ச நேரத்துல மெட்ராசு போற வண்டி வரும் அதுல போயிருங்க. யாராச்சும் கேட்டா தெரியாதுன்னுபுடறேன்.” என்று தெளிவாக அவர்களுக்கு ஆலோசணை வழங்கினாள்.

அதைத் தொடர்ந்து தூரத்தில் இரண்டு பேர் பெரிய வீச்சருவாலுடன் போதையின் தள்ளாட்டத்துடன் தேடிவருவது தெரிந்தது. அந்த இருட்டிலும் அவர்களின் கோபமும், வெட்டி சாய்க்கிற வேகமும் தெரிந்தது.

“அய்யய்யோ… என் அண்ணனுங்கதான். செவந்தி தூரப்போ இங்க வந்துடப் போறாங்க..” சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் பயந்த மாதிரியே அண்ணன்கள் இருவரும் சற்று தூரத்தில் வந்து நின்றார்கள்.

“ஏ…ய்.. பை… பைத்தியக்காரி. ஒரு பையனும் ஏ… தங்கசிக்காரியும் இந்த பக்கம் வந்தாங்களா..?” என்று செடிகளை விலக்கிப் பார்க்கப் போக… ”டேய்.. குடிகாரப் பசங்களா பொம்பளங்க ஒதுங்கிற எடத்துல போதைல என்னத்தடா தேடுறிங்க. கத்தி ஊரைக் கூட்டவா…?” என்றதும் அவர்கள் ”சனியனே….வாய்லயே வெட்னேன்னு வெச்சிக்க பொளத்துக்குவ. பைத்தியக்காரி….பைத்தியக்காரி..“ என்று திட்ட…

“என்னைய பொளக்கறது இருக்கட்டும் நீங்க போதைல வுழுந்து பொறண்டு எழாம போங்கடா..” என்றதும் இருவரும் அருவாளைத் தூக்கிக் கொண்டு மீண்டும் அங்குமிங்குமாக தேடிக்கொண்டு அலைந்தார்கள்.

மறுநாள் காலையில் ரெயில் தண்டவாளத்தில் இரண்டு உடல்கள் சிதறிக்கிடப்பதாக ஊரே பரபரப்பாக இருந்தது. அங்குமிங்கும் மக்கள் திகிலடித்துப் போனார்கள். போலீஸ் வாகனங்கள், கரை வேட்டிகள் ஊருக்குள் வருவதும் போவதுமாக இருந்தது.

”செவந்தி.. ஓசியில் வாங்கிய வெற்றிலையில் புகையிலை வைத்து மென்று ’புளிச் புளிச்’ என்று துப்பிக்கொண்டிருந்தாள்.

அவ் ஊர்க்கார பெண் ஒருத்தி, இவளுக்கு ஏதேனும் தகவல் தெரியுமோ என்கிற விதத்தில் அருகில் அமர்ந்து ”ஏண்டி செவந்தி ரெண்டு ஆம்பளைங்க பொணம் அடிபட்டி கெடக்குதாமே… ராவுல தண்டவாளம் பக்கம் ஏதும் ஒதுங்க போனியா…?” நைசாக பேச்சுக் கொடுத்தாள்.

“ஆமாண்டி… ராத்திரி வயித்தக் கலக்குதுன்னு ஒதுக்கினேன். யாரோ ரெண்டு ஆம்பளைங்க ”தங்கச்சி வேற சாதிக்கார பையனோட ஓடி போயிட்டா.. விடிஞ்சா சனங்க காரி துப்பும். நம்ம ஊர்காரங்க மொகத்துல எப்டி முழிக்கறதுன்னு தண்டாவாளத்து மேல உக்காந்து ரெண்டு பேரும் ரொம்ப நேரம் போதைல பொழம்பிகிட்டே இருந்தானுங்க. பாவி மவனுங்க இப்டியா தண்டவாளத்துல தலைய குடுத்து செதஞ்சி போவானுங்க தெரிஞ்சிருந்தா காப்பாத்தியிருப்பேண்டி இவளே…” என்று மீண்டும் புகையிலை எச்சிலை துப்பிவிட்டு, அருகில் பார்க்க, ரத்தக்கரை கழுவப்பட்ட மம்பட்டி கைப்பிடி வெயிலில் அமைதியாக உலர்ந்து கொண்டிருந்தது.

– அம்மையார் ஹைநூன்பீவி’ சிறுகதைப் போட்டி 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *