செம்மண்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 29, 2013
பார்வையிட்டோர்: 13,568 
 
 

யுக மாற்றங்களைக் காணத் துடிக்கும் புதிய சமுதாயப் பிரதிநிதிகளைப் போல கண்ணையனும், கோபாலும் அந்த வண்டிப்பாதையில் கால்களை வீசிப்போட்டு நடந்து கொண்டிருந்தனர் பாதையின் இருபுறங்களிலும் சங்கம் புதர்களும், கற்றாழைகளும், திருகு கள்ளிகளும் வரிசை வரிசையாக நின்று தனி மனித உடமைகளைக் காவல் செய்து கொண்டிருந்தன. வேலிச் சிட்டுக்கள் “”””க்விச்… க்விச்… “” என ரகசியக் குரலெலுப்பியபடி புதர்களுக்குள் விநோதமாகப் பார்த்தபடி கண்ணையன் நடந்து கொண்டிருந்தான். ஒரு கையில் அன்றைய தினசரியும் கார்க்கியின் நாவலும் இருந்தன. மறுகை ஜிப்பாவின் இடது பாக்கெட்டுக்குள் ஊன்றிக் கிடந்தது. அவனுடைய தொழிலுக்கேற்ற காக்கி உடைகளை அணிந்திருந்தான் கோபால். காக்கிப் பையில் முடங்கிக் கிடந்த ‘ஸ்பானர் செட்’ ‘டணங்… டணங்…’ என்ற நாதத்தைக் கிளப்பிக் கொண்டிருந்தது. மௌனம் அவர்களை இறுக அணைத்து கொண்டதால் இருவரும் அமைதியாக நடந்து கொண்டிருந்தனர்.

சில மனிதக் குரல்கள் மௌனத்தைக் கலைத்தன. தலைப்பாகையும், கோவணமுமே மேனியை மறைக்க சில கறுத்த மனித உருவங்கள் நாறொன்றை விரட்டுவது தெரிந்தது. சிலர் குனிந்து குனிந்து கற்களைப் பொறுக்கி நாயின் மீது விட்டெறிந்தனர். இன்னும் சிலர் கம்புகளை அதன் மீது வீசினர். சில நாயைத் தாக்கிவிட்டுக் கீழே சாய்ந்தன. சில படாமலே பரிதாபமாக விழுந்தன. நாய் தனது பாதையை மாற்றி வேறு திசையில் போக்குக் காட்டியது. நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, நாய் நினைவிழந்து தரையில் சாய்ந்தது. விழிகள் பிதுங்கிவிட இறுதியாக ஒருமுறை சிலிர்த்துவிட்டு அசைவில்லாமல் கிடந்தது அந்த நாய்.

எல்லோரும் பூரித்துப் போனார்கள். நாயைத்துரத்திய போது ஏற்பட்ட வேடிக்கையான அனுபவங்களை சொல்லிச் சொல்லிச் சிரித்தார்கள். சிறுவனொருவன் ஒருக்களித்து உட்கார்ந்து கொண்டு காலில் தைத்த முள்ளை வருடிப் பார்த்தான். விரலை எச்சிலில் நனைத்து வலிதோன்றிய இடத்திற்குப் ‘பாலிஷ்’ போட்டான். இடுப்புக் கயிற்றில் கட்டியிருந்த பின்னை எடுத்து முள்ளைக் களையத் தொடங்கினான். அந்தக் கூட்டத்தை நோக்கிக் கண்ணையனும் கோபாலும் நெருங்கினர். அவர்களுடைய சிரிப்பொலி அணைந்தது.

“”””நாயை ஏன் துரத்தித் துரத்தி அடிச்சீங்க? அடடா! செத்துப் போச்சுப் போல இருக்கே”” கோபாலன் நாயைப் பார்த்துக் கொண்டே கேட்டான்.

‘இந்த நாய்க்கு மசை புடிச்சுப் போச்சுங்க என்ர கொழந்தீயக் கடிச்சுப் போட்டுதுங்க. உட்டு வெச்சா எத்தென பேரைக் கடிக்குமோன்னு அடிச்சுப்போட்டமுங்க’ மரியாதையுடன் ஒருவன் சொன்னான். நாயின் கண்களிலிருந்தும், வாயிலிருந்தும் கசிந்த ரத்தம் செம்மண்ணில் விழுந்து கரைந்து அதை மேலும் சிவப்பாக்கியது. “”””டேய் சுப்பணா? ஓடிப்போய் கடப்பாரையெத் தூக்கி கிட்டு வா. பொதைச்சுப் போடலாம்”” இன்னொருவன் குரலெழுப்பினான். கரடு முரடான செம்மண்ணில் வில்லரணைப் பாம்பு போல ஓடினான் சுப்பண்ணன். “”””நீங்க ஆருங்க?”” மற்றொருவன் கேட்டான். “”””என்னெ தெரியாதா?”” ஒரு குறுஞ்சிரிப்பைச் சிந்திவிட்டு தொடர்ந்தான். “”””ஃபிட்டர் கோபாலன்னு சொன்னா இங்கெ நல்லாத் தெரியுமே! மோட்டார் பம்ப்செட் கெட்டுப்போனா நாந்தானே ரிப்பேர் செய்யறவன். சொந்த ஊரு கோயமுத்தூர். நம்ம பெரியக்காவைக் கோணாபாளையத்துக்குக் கொடுத்திருக்கு. அவுங்க மூலமா இந்தப்பக்கம் கொஞ்சம் கிராக்கி ரெண்டு மாசத்துக்கு ஒருவாட்டி இந்தப் பக்கம் வருவேன்.””

“”””அப்பிடீனா தம்பியவுங்க சின்னப்பனோட மச்சானுங்களா?”” பெரியவர் சந்தேகத்தைத் தீர்க்க முயன்றார். ‘ஆமாங்க!’ “”””பாவமா இருக்கு, சின்னப்பனெ நெனச்சா. அஞ்சும் பசங்க. ராவு பவலாச் சம்பாதிக்குது.””

“”””என்ன செய்யறதுங்க. பசங்களெப் பெத்துட்டாப் போதுங்களா? நாலு காசு சம்பாரிச்சு வெச்சாத்தானுங்க பின்னாலெ ஒருத்தன் ஒதவாட்டி இன்னொருத்தன் ஒதவுவான்”” என்று சமாளித்தான் கோபால். அரட்டைக்கு ஆள் கிடைத்துவிட்டால் எதற்கும் கவலைப்படமாட்டான். “”””சவ அடக்கத்துக்கு கிளம்பினால் கருமாதிக்குப் போய்ச் சேருபவன்”” என்று நண்பர்கள் அவனைக் கேலி செய்வதுண்டு.

“”””சரி, போகலாமா?”” அலுப்புடன் கேட்டான் கண்ணையன். “”””ஆமா, அந்தத் தம்பி ஆருன்னு சொல்லவேல்யே.”” “”””இவரு நமக்குத் தெரிஞ்சவரு. வாத்தியாரா இருக்கிறார்.”” கோபால் சுருக்கமாகச் சொன்னான்.

முள்ளைக் களைந்து கொண்டிருந்த சிறுவன் திடீரென எழுந்து கொண்டான். தலையில் கட்டியிருந்த துண்டுகளை தோளுக்கு இறக்கிக் கொண்டு எல்லோரும் மரியாதையோடு கண்ணையனைப் பார்த்தார்கள். அவன் புளகாகிதம் அடைந்தான்.

அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு இருவரும் பயணத்தைத் தொடர்ந்தனர். விரிக்கப்பட்ட காவித்துணியின் மீது சிதறிக் கிடக்கும் முத்துகளைப் போல கற்கள் சிதறிக் கிடந்தன. இடையில் அறுந்து போன அவர்களுடைய பேச்சுக்கள் மீண்டும் இணைந்தன.

“”””கோபால்! இதென்ன பூமி எல்லாம் ஒரே கல்லாக் கிடக்குது? இதில் என்ன விளையப் போகுது? நம்ம நாட்டிலெ எத்தென நிலங்கள் வீணாக் கிடக்குது பார்த்தியா?”” மனத்தில் அழுத்திய வேதனையை வெளிக்காட்டினான் கண்ணையன். “”””அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே! மெயினா கடலை போடுவாங்க அதுதான் இங்கெ அதிகம். மீறிபோனா காட்டுப்பருத்தி. அதோட பனை ஏறி கருப்பட்டி காய்ச்சு வாங்க. எல்லாமே சீசன் விவகாரம்!”” ‘அப்படியா! எல்லா பூமியுமே இப்படித்தானா? பாலைவனம் மாதிரி இருக்குதே!’

“”””இந்த மேட்டைத் தாண்டினா… அப்புறம் பாரு.”” இருவரும் மேட்டின் உச்சியை அடையும் முன்முறை திரும்பிப் பார்த்தனர். வண்டிகளின் நடமாட்டம் காரணமாக அந்தப் பாதை ஒரே அளவில் இடைவெளி விட்டு வரையப்பட்ட நேர்கோடுகள் போலத் தோன்றியன. தொலைவில் ஒருவன் கடப்பாரையை நிலத்தில் இறக்கிக் குழிதோண்டிக் கொண்டிருந்தான். மற்றவர்கள் அவனுக்கு உதவிக் கொண்டிருந்தனர். அவர்கள் மீண்டும் பயணத்தைத் தொடங்கினர்.

மேட்டைக் கடந்து சரிவில் இறங்கிய போது கண்ணையனின் கண்கள் மலர்ந்தன. இரண்டு தலைமுறைகளைச் சந்தித்துவிட்ட கரிய பனைகள் சராசரியாக தொங்கிக் கொண்டிருந்த மண் கலயங்களைக் காற்று தாலாட்டிக் கொண்டிருந்தது. அதனை அடுத்துக் காட்டாறு ஒன்று வளைந்து நெளிந்து கிடந்தது. இரண்டு கரைகளும் பசுமையாகக் காட்சியளித்தன. “”””சர்”” என்ற ஓசையைக் கிளப்பியபடி குந்தா மின்சாரம் அந்த வழியாகத்தான் பாய்ந்து செல்கிறது. தொலைவில் அறுபதுக்கும் மேலான ஓலைக் குடிசைகளிருந்தன. அவற்றின் நடுவே ஒரு சில வீடுகளும் தென்பட்டன.

வழியின் இடது பக்கத்தில் கோவிலொன்று இருந்தது. இருபதடி உயரமுள்ள கோவிலின் முன்புறத்தில் இரண்டு பெரிய முனீசுவர்களின் மண் கிலைகளிருந்தன. சற்றுத்தள்ளி புளியமரமொன்றின் அருகில் இன்னொரு மண்சிலை அது முரசன் சிலை.

முனீசுவர்களின் சிலை ஏறத்தாழப் பத்தடி உயரமிருக்கும். அந்தச் சிலைகளின் வலதுகால்கள் மடிக்கப்பட்டு அமர்ந்த நிலையில் இருந்தன. வலது கைகளில் நீண்ட வாள்கள் இருந்தன. முன் வாயிலில் கரிய வேல்கள் நடப்பட்டிருந்தன. அவற்றிற்குப் பக்கத்தில் ஒரு ஊஞ்சலும் இருந்தது. நான்கு மண்குதிரைகள் முனீசுவரர்களை நோக்கியபடி நின்று கொண்டிருந்தன. முனீசுவரர்களின் கண்கள் கர்ண கடூரத்தைச் சிந்தின. முரசனின் சிலை நின்றபடி இருந்தது. அருகில் கூடை சுமந்தபடி நிற்கும் பெண்ணின் குட்டையான சிலையும் இருந்தது. முரசனின் இடதுகரம், கூடைக்குள்ளிருந்து எதையோ எடுப்பது போலத் தோன்றியது. முரசனுடைய வலது கையிலும் ஒரு நீண்ட வாள். அருகில் மாடு மேய்க்கும் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். கோவில் பூட்டிக்கிடந்தது. கண்ணையனுக்கு ஒரே வியப்பு. அவன் இப்படிப்பட்ட சூழ்நிலையை அதுவரை அனுபவித்ததில்லை.

ஒரு காலத்தில் காடாய்க் கிடந்த அந்த பூமி பச்சை ஆடை உடுத்திருந்தது. அறுவடை செய்யப்பட்ட நிலங்களையும் சேர்த்துப் பார்க்கும் பொழுது ஒட்டுப் போட்ட துணியின் நினைவு வந்தது கண்ணையனுக்கு. அழுக்குத் துணிகளை அணிந்த மூன்று கறுப்புக் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தன.

சரிவில், தென்னை மரங்கள் நிறைந்த தோட்டமொன்றில் கோபாலன் நுழைந்தான். கண்ணையன் அவனைப் பின் தொடர்ந்தான். இருபதோ, முப்பதோ எண்ணிக்கையுள்ள தென்னை மரங்களின் நிழல்கள் மேனியைச் சில்லிடச் செய்தன. அங்கிருந்த குடிசைக்குள்ளிருந்து கோவணமும், தலைப்பாகையும் அணிந்து இடைக்கயிறு தோளில் ஊசலாட, ஒரு கறுத்த மனிதன், வெளிவந்து கூரையில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த ஏணியை எடுத்துக் கொண்டு திரும்பியவன், “”””ஓ… வாங்க! வாங்க!! ஒரம்பர இப்பத்தா வருதா! காத்தாலிருந்து காக்கா கத்தீட்டிருந்தது. ஆரு வருவாங்களோன்னு நெனச்சே… நீங்களே வந்துட்டீங்க. ஊர்லெல்லாம் சௌக்கிமா?

“”””சௌக்யத்துக் கென்ன? எல்லாரும் நல்லா இருக்கறாங்க”” என்றான். அவருடைய மனைவி பொன்னம்மாள் குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்து புன்னகையோடு வரவேற்றாள். “”””டே முனீப்பா! இங்கே வா! போய் கட்லெ எடுத்தா. இவுங்க உக்காரட்டு”” அந்த அம்மாள் கூவினாள்.

“”””இன்னொ நாலு பன மிச்சமிருக்குதுங்க. நீங்க இருங்க. காபி குடிக்கறதுக்குள்ளெ வந்தர்றேன்”” அந்தக் கறுத்த மனிதன் நகர்ந்து வரப்பில் தாவி ஏறினான். “”””அதுக்கென்ன போய்ட்டு வாங்க. அவசரம் ஒண்ணுமில்லே”” என்றான் கோபால். இருவரும் முனியப்பன் கொண்டுவந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தனர். பொன்னம்மாள் குடிசைக்குள் நுழைந்தாள்.

அப்பொழுது ஒரு பழத்த கிழம் கூன்போட்டுக் கொண்டு குழந்தையைப்போல தத்தித்தத்தி மெதுவாக நடந்துவந்து அவர்களுக்கு முன்பு கிடந்த குத்துக் கல்லில் அமர்ந்து கொண்டு இருவரைப் பற்றியும் விசாரித்துவிட்டு, அருகில் கிடந்த முருங்கை மரத்துண்டை எடுத்து முன்னே போட்டு, காகிதத்தில் மடித்து வைத்திருந்த கல் பொடியை அதன் மீது தூவி நீரைத் தெளித்துக் கம்பரக் கத்தியைத் தீட்டத் தொடங்கியது. இருவரும் அவருடைய உடல் அசைவுகளையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

“”””இவரு வயசுக்கு நாம உயிரோட இருப்பதே சந்தேகம். இருந்தாலும் இப்படியெல்லாம் வேலை செய்யமுடியாது”” என்றான் கண்ணையன். “”””இதெல்லாம் வௌஞ்ச கட்டை. இதுக எங்கே, நாம எங்கே!”” காதோடு காதாகக் கூறினான் கோபால். பொன்னம்மாள் பித்தளைப் பாத்திரமொன்றில், காபியை நிரப்பிக் கொடுத்தாள். அவர்கள் பருகத் தொடங்கினர்.

“”””இங்கெல்லா சக்கரெக் காபி கெடைக்காதுங்க. கருப்புட்டிக் காபிதானுங்க. இது உங்களுக்குப் புடிக்குதோ என்னமோ கடைகண்ணி ஒண்ணுமில்லே. சந்தச் சாமானம் வாங்கறன்னிக் காச்சும் கொஞ்ச சக்கர வாங்கி வெச்சுக் கோணும். நாவரீமா இருக்கறவங்களுக்கு இதொன்னூம் புடிக்காது, தனது பலவீனத்தைப் பலமாகக் காட்டினாள் பொன்னம்மாள். பரவாயில்லீங்க இதெல்லாம் எங்களுக்குப் பழக்கமூங்க இல்லையா கண்ணையா?””

கோபாலன் சமாளித்தான். காலியான ஈயத்தம்ளர்களை எடுத்துக்கொண்டு கிணற்றை நோக்கி நடந்தாள் பொன்னம்மாள். கோபாலன் எழுந்து வேலிப்பக்கம் போனான். கட்டிலில் அமர்ந்தபடியே, பார்வையைச் சுழற்றினான் கண்ணையன்.

அருகிலிருந்த கூரைச் சாலையில் இரண்டு ஜதைக் காளை மாடுகள் கட்டப்பட்டிருந்தன. அவைகளில் ஒன்று தரையில் கிடந்து அசைபோட்டுக் கொண்டுடிருந்தது. இன்னொன்று நறுக்கிப்போட்ட சோளத் தட்டயை மென்று கொண்டிருந்தது. அடுத்தது மிகுந்த சிரமத்துடன் இன்னொன்றை ‘சரக் சரக்’ என்று நக்கிக்கொண்டிருந்தது. மற்றொன்று வாலை பல கோணங்களில் சுழற்றி உடலில் ஒட்ட முயலும் ஈக்களையும் கொசுக்களையும் விரட்டிக் கொண்டிருந்தது. வெளிக்காடியில் கட்டப் பட்டிருந்த மாடு ‘அம்மா’ என்று ஒரு முறை கத்தியது அதனுடைய கன்று. மாரில் முகத்தை இடித்து இடித்துக் காம்பைச் சப்பியது. புங்கமர நிழலில் நான்கைந்து ஆடுகள் படுத்து கிடந்தன. ஆட்டுக் குட்டிகள் இரண்டு, பந்தைப்போல நிலத்தில் எம்பிக் குதித்துக் கொண்டிருந்தன.

சற்றுத் தொலைவில் ராகிக்கதிர்கள் காற்றில் நர்த்தனமாடிக் கொண்டிருந்தன. “”””ஏங்க தாத்தா? மேட்டுக்கந்தப் பக்கமெல்லா பூமி ரொம்ப மோசமா இருக்குதே.

இங்கெ மட்டும் எப்படி?”” “”””அது பெரிய கதெ தம்பி! இருவது வருஷத்துக்கு முன்னாலே நானூ என்ரெ பசங்களுஞ் சேந்து வண்டீக்கட்டீட்டு போய்… தோ! தெரிதே பள்ளம், அங்கிருந்து மவுளியே வெட்டீட்டு வந்து போட்டோம். கல்லுப்பொறுக்கி எறியறதுக்குள்ள பிராணம் போயி பிராணம் வந்தது. முன்னூறு நானூறு வண்டியிக்குமுங்க. கவளத் தண்ணியெ வெச்சு எதயாவது வெதச்சு சீவனஞ்செஞ்சோம். அந்த முனீசுவரம் புண்ணியத்துலெ இப்ப மோட்டாரு வெச்சு ஒரு வழியாப் பொழைக்கறமுங்க.””

அவனுடைய அடிமனத்தில் வேதனை திரண்டு வேகமாக ஒருமுறை உருண்டது.

சாப்பாடு தயாராகிவிட்டதாகக் கூற, எல்லோரும் சாப்பிடக் கிளம்பினார்கள். முகக்கோணல்கள் ஏதுமில்லாமல் கோபாலன் சாப்பாட்டை விழுங்கினான். அவன்தான் இதெற்கெல்லாம் பழக்கப்பட்டவனாயிற்றே! கண்ணையனுக்கு உணவு கீழிறங்க மறுத்தது. கண்களில் நீர்மணிகள் துளிர்த்தன. ஒரு வழியாகச் சாப்பிட்டு முடித்தான். மீண்டும் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தனர். வெற்றிலை பாக்கு சகிதம் பரிமாறப்பட்டது. அவற்றையும் மென்று அரைத்துத் துப்பினார்கள். “”””இப்ப காலமெல்லா மாறிப்போச்சுங்க””. வியப்பும் வேதனையும் நிறைந்த தொனியில் கூறினார் பெரியவரின் இளையமகன். அதனைத் தொடர்ந்தார் பெரியவர். அப்ப “”””நம்பியூர்கிட்டே தெனமும் ஏராப்ளான் பறக்குதுன்னு சொன்னாங்க. சோத்தக் கட்டீட்டு ஊரே போச்சு அதெல்லா பெரீய கதைங்க. கரண்டு வந்தப்பவூ அப்படித்தானுங்க. அதென்னப்பா பொட்டுனு சுச்சுப் போட்டா பட்டுனு வௌக்குகெரீது. காலமே மாறிப் போச்சு”” பழைய தலைமுறையின் முதிர்ந்த இலை விஞ்ஞானக் காற்றில் படபடத்தது.

அப்போது – “”””வெள்ளீஞ் சொல்லீமா எவண்டா என்ரெ தோட்டத்துக்குள்ளெ? அடே! கொலாய்க்காரா! இங்கெதுக்குடா வந்தே? எல்லாத்தீஞ் சுருட்டீட்டு போவவா வந்தே? டே வேட்டிக்காரா! மூஞ்சிப்பாரு மொவறக்கட்டெயெ கொரங்கு மாதிரி என்ரெ கட்டல்லெ ஒக்காந்துட்டீங்களாடா. ஓடுங்கடா. இல்லீன்னா தோலெ உரிச்சுப் போடுவே! டே கேடு கெட்டகெழவா! அட உன்னீந்தாண்டா தடிமாடே அந்தச் சிறுக்கி வேறே, அவனுகளோட ஆட்டம் போடறா. அம்மா! ராசாத்தி நீ இருந்தா இப்படி நடக்குமா? டேய் முனீஸ்வரா! பாத்தியாடா இந்த அக்கிரமத்தெ…

அருவருப்பான சொல் மழை தொடர்ந்து விழுந்தது. இருவருக்கும் ‘கிலி’ கண்டுவிட்டது. குரல் வந்த திக்கில் எல்லோரும் திரும்பினர். முப்பது அடிகளுக்கு அப்பாலிருந்து கூரைச் சாளையின் சன்னல் வழியாகக் குரல் வந்து கொண்டிருந்தது.

சதுரெமன்றோ வட்டமென்றோ கணிக்கமுடியாத கம்பிகளில்லாத சன்னலின் வழியே பஞ்சடைந்த கண்களும், மஞ்சியாய்க் கலைந்து போன தலைமுடியும், கோர முகமுமாக மார்புக்கு மேல் ஒரு மனிதனின் உருவம் தெரிந்தது. “”””பேச்சு வாக்லெ அண்ணணுக்குச் சோறு குடுக்க மறந்துட்டோம். பொன்னம்மா சீக்கிரமாம சீக்கிரமா சோத்தப் பெணஞ்சு குடு. அப்போவ், அதெ வாங்கீட்டு போய்க்குடு”” இளையமகன் குரலெழுப்பினான். பொன்னம்மாள் அலறிப் புடைத்துக் கொண்டு குடிசைக்குள் ஓடினாள். “”””அண்ணனுக்குக் கொஞ்ச நாளாப் பயித்தீமுங்க. நங்கையாக்காரிக்கு ஆத்தா வாத்துக் கெடையா கெடந்தா. மகமாயி நெற கொடமா வெளையாட்னா. பதினேழு நாள்லெ அவீளெயெ வாரீட்டு போயிட்டா. அதுக்குப் பின்னாலெ அண்ணெ இப்படியாயிப் போச்சு. அப்பங்கிட்ட மட்டும் பிரியமுங்க. வேறெ ஆளு பக்கத்துல போவமுடியாதுங்க”” சுருக்கமாகச் சொல்லி முடித்தான் இளையமகன் மாரியப்பன்.

ஈயத்தட்டில் பிசைந்த சாதத்தை எடுத்துச் சென்று சன்னலின் வழியே நீட்டினார் கிழவர். அந்த மனிதன் தட்டை கிழவரின் முகத்தில் விட்டெறிந்தான். சோற்றுப் பருக்கைகள் கிழவரின் முகத்திலும், கருத்த மேனியிலும் ஒட்டிக்கிடந்தன. அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. இவற்றிற்குப் பழக்கப்பட்டுப்போன கிழவர் அமைதியாக இருக்கும்படி கெஞ்சிக் கொண்டிருந்தார். மவனோ, தொடர்ந்து கேவலமான வார்த்தைகளைப் பிரயோகித்துக் கொண்டிருந்தான். இளையமகன் மாரியப்பனுக்கு கோபம் கோபாய் வந்தது. கம்பொன்றை
எடுத்து வந்து பயமுறுத்தினான். வசைமாரி வெள்ளப் பிரவாகமெடுத்தது.

“”””சலங்… சலங்…”” கனத்த சங்கிலி சப்தமிட, பித்துப் பிடித்த மனிதன் சன்னலை விட்டு நகர்ந்தான்.

உட்புறம் கதவோரமாக நின்று கொண்டு பலங்கொண்ட மட்டும் கதவைத் தட்டிக் கொண்டிருந்தான். ஒலி காதைப் பிளந்தது. எல்லோரும் வெளியே நின்றபடி அமைதியாய் இருக்கக் கெஞ்சினர்.

வந்த வேலையை முடித்துக் கொண்டு விடைபெற்ற பொழுது மாலை மயங்கிக் கொண்டிருந்தது. கறுத்த மனிதர்களின் வெள்ளை உள்ளங்களின் நினைவுகள் கண்ணையனின் மனதில் இனம்புரியாத உணர்வுகளைக் கிளப்பின. உறங்கிக் கிடந்த சிந்தனை கொட்டாவி விட்ட படி மெல்ல எழுந்து உட்கார்ந்தது. அன்று நடந்த நிகழ்ச்சிகளை அசைபோட்டது.

வெறி நாய்!
வெறி மனிதன்!

நோயின் வேதனையால் துடிக்கும் கன்றைக் காணச் சகியாது அதைக் கொன்று விடச் சொன்னாராம் மகாத்மா.

அவர் மகாத்மா! இவர்கள் மனிதர்கள்.

“”””மனிதர்கள்! வெறிகள்! மனிதர்கள்! வெறி! வெறி! வெறி!”” அவனுடைய சிந்தனை ஒரு வட்டவடிவ நாணயமாக உருண்டு கொண்டிருந்தது.

சற்று முன்பாக நடந்து கொண்டிருக்கும் கோபாலோடு சேர்ந்து கொள்ளக் கால்களை வீசிப் போட்டு நடந்தான்.

செவ்வானத்தின் கீழ் விரிந்து கிடந்த சிவப்பு மண்ணின் புழுதிப் படிவுகளில் அந்த இளைஞர்களின் காலடிச் சுவடுகள் பதிந்து கொண்டிருந்தன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *