சத்தமும் சந்தடியுமாய் இருந்த மெரீனா பீச்…..நானும் என் மனைவியும் இது வரை கடலை பார்த்ததில்லை. இந்த வாய்ப்பு அகஸ்மாத்தமாய் என் பையன் மூலமாய் எங்களுக்கு கிடைத்திருக்கிறது.
பொள்ளாச்சியில் இருந்து பத்து கிலோ மீட்டர் தள்ளி ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியனாய் உத்தியோகம் பார்த்து கொண்டிருக்கிறேன். அவ்வப்பொழுது மாற்றல் வந்தாலும் பத்திருபது கிலோ மீட்டர் அளவிலேயே மாற்றல் வந்து பணி செய்து கொண்டிருந்ததால், கோயமுத்தூருக்கு செல்வது கூட எப்பொழுதோ ஒரு முறைதான். அப்படியே வாழ்ந்து கொண்டிருந்தவனுக்கு இப்பொழுதுதான் அதுவும் ஓய்வு வயது அருகில் வரும் நேரத்தில் சென்னையை பார்க்கும் யோகம் கிடைத்திருக்கிறது.
பையனுக்கு சென்னையில் ஒரு வேலைக்கு நேர்முகத்திற்கு அழைத்திருந்தார்கள். அவனுக்கும் இது வரை கோயமுத்தூர் நகரம் வரைக்கும் பயணமும், தங்குதலும் நடந்திருக்கிறது. அதனால் அவனுடன் நானும் கிளம்புவதாக முடிவு செய்து கிளம்ப மனைவி நான் மட்டும் தனியாக இங்கு எதற்கு என்று அவளும் கிளம்பி விட்டாள்.
சென்னை பிரமாண்டமான நகரம் என்பது இங்கு வந்த பின் நன்றாக உணர முடிகிறது. அப்பப்பா எத்தனை மனிதர்கள், எத்தனை வகையான வாகனங்கள், எனக்கு இதை பார்த்தவுடன் அந்த கால படமொன்றில் நாகேஷ் சென்னையை பற்றி பாடி வரும் காட்சிதான் ஞாபகம் வந்தது.
பையனுக்கு நேர்முக தேர்வு முடிந்தவுடன் அந்த தேர்வுக்கு அவனுடன் படித்த நண்பர்கள் வந்திருந்ததால், அவர்களுடன் கூட்டணி சேர்த்து சென்னையை சுற்றி பார்க்க கிளம்பி விட்டான். வாலிப பையன்களாய் ஊர் சுற்ற போகும்போது நாம் அவர்களுடன் போக முடியுமா.? அதனால் அவர்களை அனுப்பி விட்டு நாங்கள் இருவரும் பஸ் மாற்றி கடற்கரைக்கு வந்து விட்டோம்.
வந்த பின்னால்..அப்பா..,கடலை பார்ப்பதா? இல்லை கடலை பார்க்க வந்த கடலை பார்ப்பதா? அவ்வளவு கூட்டம், விதம் விதமான உடைகளுடன் ஆண்களும், பெண்களும், எங்களுக்கு நேரம் போவதே தெரியவில்லை. அந்த கூட்டத்திலும் எங்களுக்கு கிடைத்த ஒரு ஓரமான இடத்தில் உட்கார்ந்து கொண்டு கடலையும், மனிதர்களின், ஆட்ட ஓட்டங்களை, கையில் அவ்வப்பொழுது சுண்டல் பாக்கெட்டுகளையும் காலி செய்து கொண்டு, மனவெழுச்சியுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.
ஆயிற்று இருட்டு பரவ ஆரம்பித்து விட்டது. மணி என்னவென்று செல் போனில் பார்க்க ஏழு மணிக்கு மேல் காட்டியது. இனி நடந்து சென்று பஸ் ஏறலாம், இருவரும் முடிவு செய்து நடக்க ஆரம்பித்தோம்.
நாங்கள் தங்கும் ஹோட்டலை அடைய இன்னும் கொஞ்ச தூரம்தான் இருக்கும், அப்பொழுது ஒரு பெரியவர் கண்ணில் பட்டார். அவருக்கு அறுபது வயது மதிக்கலாம், பளிச்சென்று இல்லாவிட்டாலும் வெண்மையாக காட்டிய ஓர் வேட்டியையும் சட்டையையும் அணிந்திருந்தார். கையில் ஏதும் இல்லை. ஆனால் அவர் கண்களில்..!
அந்த கண்களில் ஒரு திகைப்பு? அடுத்து என்ன என்பதை போல நின்றிருந்தார் போவோர் வருவோரை மிரண்டு மிரண்டு பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு பாவமாய் இருந்தது. விசாரிக்கலாமா? என்று. இருந்தாலும் இந்த பரபரப்பான கூட்டத்தில் விசாரிப்பது என்பது தவறாக போய் விட்டால்?
இதே நம்ம ஊராய் இருந்தால் நான்கைந்து பேர் விசாரித்திருப்பார்கள் என்ன ஐயா? எங்க போகணும்? யார் வேணும்? இப்படி விசாரிப்புகளை இந்த சென்னையில் கேட்க முடியுமா? மனைவியிடம் அவரை காட்டி பார் நம்மை மாதிரி அவரும் விழிக்கறாரு, நானாவது நீ கூட வர்றதுனால கொஞ்சம் தைரியமா வர்றேன். இவரு பாவம் இந்த சென்னையில மாட்டிகிட்டு வழி தெரியாம நிக்கறாருன்னு நினைக்கிறேன்.
மனைவியும் ஆமோதிப்பது போல சொன்னாலும் அவருடன் பேச போலாம் என்ற யோசனையை நிராகரித்தாள், நமக்கெதற்கு வம்பு என்பது போல பார்த்தாள். எனக்கு மனசு கேட்கவில்லை, மெதுவாக அவரிடம் நெருங்கினேன்.
ஐயா நீங்க எங்க போகணும்? திடீரென்ற என் கேள்வி அவரை சற்று திகைப்பூட்டினாலும், நான் வழி மாறிட்டேன்னு நினைக்கிறேன். தடுமாறியவாறு சொன்னார். நீங்க எங்க போகணும்?
நான் என் பொண்ணு வீட்டுக்கு வந்திருக்கேன், எல்லோரும் வீட்டுல இருந்தாங்க, நான் அப்படியே நடந்து ஒரு வாக் போயிட்டு வர்றேன்னு கிளம்பினேன், ஆனா வழி எப்படி மாறிட்டேன்னு தெரியலை, பயத்துடன் குழறினார்.
எவ்வளவு தூரம் நடந்து வந்திருப்பீங்க, அவரை மெல்ல ஆசுவாசப்படுத்த கேட்டேன், தெரியலை, அரை மணி நேரமா நடந்தேன், அதுக்கப்புறம் வந்த இடம் மறந்து திரும்ப திரும்ப அரை மணி நேரமா மாறி மாறி நடக்கறேன், வழி மட்டும் ஞாபகம் வர மாட்டேங்குது.
உங்க கிட்டே செல் போன் இருக்கா?
இல்லையே, அதை வீட்டுலயே வச்சுட்டு வந்துட்டேன், குரலில் பரிதாபம்.ஒலித்தது.
உங்க வீட்டு ஆளுங்க நம்பர் யாருதாவது தெரியுமா?
என் நம்பர் ஞாபகம் இருக்கு, ஆனா பதட்டத்துல ஒண்ணும் ஞாபகம் வரமாட்டேங்குது,
நான் மெல்ல ஆதுரத்துடன் அவர் தோளில் கை வைத்து, வாங்க என் கூட அவரை நான் தங்கியிருந்த ஹோட்டலின் வரவேற்பறையில் கூட்டி சென்று உட்காரவைத்தேன். மெல்ல ரிலாக்ஸ் ஆகுங்க, அவரை விட்டு தள்ளி உட்கார்ந்தேன். பத்து நிமிடம் அப்படியே உட்கார்ந்தவர் சார் இந்த நம்பரை சொல்றேன் என்றவர் நம்பர் சொல்ல நான் என் செல்லில் அழுத்தினேன்.
ரிங்க் போய்க்கொண்டே இருந்தது, கடவுளே யாராவது எடுக்க வேண்டுமே என்று நான் வேண்டிக்கொண்டிருக்க, அவர் முகம் முழுக்க பூத்திருந்த வேர்வையுடன் படபடப்பாய் என் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தார். ஹலோ..ஒலித்த குரல் எனக்கு ஆறுதலாகவும், சார் நீங்க பேசுங்க, லைன்ல வந்துட்டாங்க,
அவர் கன்னடத்தில் ஏதோ சொல்ல, பதில் வந்து விட்டது போலும், முகம் கொஞ்சம் பிரகாசமாக, என் முகத்தை பார்த்தவர் சார் எடுத்தது என் பேரன்தான், எந்த இடம் அப்படீன்னு கேட்கிறான், நான் போனை வாங்கி தம்பி பேரை குறிச்சுக்கோ, வரவேற்பரை பெண்ணிடம் ஹோட்டலின் பெயரையும், அடையாளத்தையும் கேட்டு வாங்கி சொன்னேன். நன்றி சார், அவரை அப்படியே பாத்துக்குங்க, கொஞ்ச நேரத்துல வந்து கூட்டிகிட்டு போயிடறேன்.
இப்பொழுது பெரியவர் முகம் தெளிவடைந்திருந்தது, ரொம்ப நன்றி சார், நாங்க கிருஷ்ணகிரி பக்கம் பொம்மிபட்டி கிராமத்தை சேர்ந்தவங்க, சென்னைக்கு இரண்டாவது முறையா வர்றேன்.. பொண்ணை கட்டி கொடுத்தப்ப ஒருக்கா வந்தது, வருசம் இருபதாயிடுச்சு, அதுக்கப்புறம் இப்பத்தான் வந்திருக்கேன்.
நான் சிரித்துக்கொண்டு நீங்களாவது இரண்டாவது முறை, நான் இதுதான் முதல் முறை, சொன்னவுடன் ஆச்சர்யத்துடன் பரவாயில்லை சார், அதுக்குள்ள ஓரளவு தெரிஞ்சுகிட்டீங்க, சொல்லவும், அதெல்லாம் ஒண்ணூமில்லை, எனக்கும் திடீருன்னு ஞாபக மறதி வந்துட்டா உங்களை மாதிரிதான் அல்லாடியிருப்பேன். அதுக்குத்தான் கூட யாரையாவது கூட்டிகிட்டு போறது. என்ன நான் சொல்றது சரிதானே? அவர் சரி என்று தலையாட்டியவர், சார் உங்க முகவரியை எழுதி கொடுங்க சார், என்று கேட்டார்.
நான் அதெல்லாம் எதுக்குங்க சார், எவ்வளவு மறுத்தும் அவர் கண்டிப்பாய் கொடுங்க என்று வாங்கி வைத்துக்கொண்டார்.
சற்று நேரத்தில் ஒரு காரில் இளைஞன் ஒருவன் வந்து இவரை கூட்டி சென்றான். போகும் முன் எங்களுக்கு மிகுந்த நன்றியை சொல்லிவிட்டு சென்றான்.
ஆறு மாதம் ஓடியிருந்தது, அன்று மாலையுடன் ஓய்வு பெற்று நாளை விடிந்தால் நான் ஓய்வு பெற்ற மனிதனாய் விழிக்க வேண்டும், இந்த எண்ணம் ஒரு பக்கம் மகிழ்ச்சியும், ஒரு பக்கம் எப்படி பொழுதை போக்குவோம்? என்ற கவலையுடனும் வீட்டுக்கு வந்தேன். வீட்டு வாசலில் ஒரு கார் நின்று கொண்டிருக்க..
வியப்புடன் உள்ளே சென்றேன். வயதான பெரியவரும், அவர் ,மனைவியும் உள்ளே உட்கார்ந்திருந்தவர்கள், சட்டென எழுந்து வணக்கம் சொன்னார்கள்.
யார் இவர்கள்? இரண்டு நிமிடம் யோசித்தவனுக்கு அட..சென்னையில் அன்று பார்த்தவர் அல்லவா? வியப்புடன் வாங்க வாங்க சார்..நட்புடன் அவர் கையை பற்றிக்கொண்டேன். என் மனைவி அப்பொழுதுதான் கையில் காப்பி தட்டுடன் சமையலறையில் இருந்து வெளியே வந்தாள்.
இவர்கள் ஒரு தாம்பாள தட்டை எடுத்து அதில் கொஞ்சம் பூ, பழங்களை வைத்து அதில் ஒரு பத்திரிக்கை வைத்து சார் என்னோட மகனுக்கு கல்யாணம் வச்சிருக்கேன், கண்டிப்பாய் வரணும், அன்புடன் சொன்னார்.
நான் மகிழ்ச்சியுடன் கண்டிப்பாய் வர்றேன், அப்புறம் எப்ப சென்னைய விட்டு வந்தீங்க?
மறு வாரமே கிளம்பிட்டேன், எனக்கு உங்க ஞாபகமாகவே இருந்துச்சு, அந்த கூட்டத்துல, நான் அடுத்து என்ன பண்ணறதுன்னு முழிச்சுகிட்டிருக்கும்போது, நீங்க வந்து உதவி பண்ணுனது எனக்கு இன்னும் மனசுல நிக்குது, உங்களை பாக்கறதுக்கு இந்த கல்யாண அழைப்பு எனக்கு ஒரு சாக்கு,..வெள்ளெந்தியாய் சொல்லி சிரித்தார். உங்க வூட்ல சொன்னாங்க, இன்னையோட ஓய்வுன்னு, கவலைப்படாதீங்க, எங்க ஊருக்கு வந்து பத்திருபது நாள் தங்கி நாங்க எப்படி விவசாயம் பண்ணறோம், பாத்துட்டு,அங்கிருக்கற கோயில் குளமெல்லாம் பாத்துட்டு வரலாம். கண்டிப்பாய் வர்றேன் மன நிறைவாய் சொன்னேன்.
நான் ஓய்வு பெற்ற மாலை விருந்தில் பலர் பாராட்டி பேசியதை விட இதுதான் எனக்கு மன நிறைவை கொடுத்தது.
இரவு தங்க சொன்னதை அன்புடன் மறுத்தவர்கள், அப்படியே ஈரோடு சென்று அங்கு அழைப்பை வைத்து விட்டு இரவே ஊருக்கு கிளம்புவதாக தெரிவித்தார்கள்.
நான் ஓய்வு காலத்தை புதியவர்கள் நட்பு, புதிய ஊர் சுற்றல், இப்படி ஆரம்பிக்கலாமே என்று நினைத்துக்கொண்டேன்.