இன்று எனக்கு திருமண நாள். வழக்கம்போல காலையில் எழுந்து, தலைக்கு குளித்து, வேட்டி சட்டை உடுத்தி, மனைவியை அழைத்துக் கொண்டு அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று வந்து, காலை டிபன் முடித்து, புது சட்டை, பேன்ட் மற்றும் மனைவி வற்புறுத்தி வாங்கிக் கொடுத்த குளிர் கண்ணாடி அணிந்து, மனைவியை முத்தமிட்டு வீட்டை விட்டு கிளம்பும் வரை எல்லாமே நன்றாகத்தான் நடந்தது.
வண்டியை கிளப்பும்போதுதான் முதல் சோதனை. டயர் பங்ச்சர்.
“போறப்ப மெக்கானிக் கிட்ட சொல்லிட்டு போறேன். வந்து கழட்டிடு போய் சரி பண்ணி கொண்டாந்து மாட்டிடுவான். காசு கொடுத்துடு” என்று சொல்லிவிட்டு ஓட்டமும், நடையுமாக கிளம்பினேன். கடந்த 2 நாள் மழைக்குப் பிறகு லேசாக தூறிக் கொண்டிருந்தது.
மெக்கானிக் ஒரு டி.வி.எஸ் 50ன் பின் டயரை சீரியஸாக கழட்டிக்கொண்டிருந்தான். எப்போதும் தூரமாக பார்த்தாலே எல்லா பல்லும் தெரிய சிரிப்பவன், இன்று அருகிலேயே நின்று கொண்டிருப்பது தெரிந்தும், தலையை தூக்கமலேயே “சொல்லுங்க சார்” என்றான். “எல்லாம் வளர்ந்துட்டானுங்க” என்று மனதிலேயே நினைத்துக் கொண்டு, வண்டியை சரி செய்ய சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தேன்.
எதிரில் நடராஜன் சார் வந்து கொண்டிருந்தார். ரிடயரட் அரசு அலுவலர். அவரது மகனும் நானும், சிறு வயது நண்பர்கள் என்பதால், எங்கே பார்த்தாலும் விசாரிப்பார். பார்த்தவுடன் புன்னகைத்தேன். அவசர அவசரமாக நடந்து கொண்டிருந்தவர், “ஒரு முக்கியமான வேலை, அப்புறம் பேசறேனே” என்று வேகமாக விலகி நடந்தார். பேருந்தில் ஏறி உட்கார்ந்தால், கண்டக்டரும், முறைப்பது போலவே தெரிந்தது. “எல்லாரும் ஒரு மார்க்கமாத்தான் இருக்காங்க” என்று நினைத்துக் கொண்டேன்.
அலுவலகம் சென்றால், வாட்ச்மேனும் வணக்கம் வைக்காமல் திரும்பிக் கொள்வதாகவே பட்டது. பியூன் ராமசாமியும் ஒரு மாதிரி பார்த்துவிட்டு சென்றான். பக்கத்து டெஸ்க் பார்த்தசாரதியும் வணக்கம் கூட சொல்லாமல் உர் என்று பார்த்தான். ஏதோ புரிவது போல் இருந்தது – ப்ரோமசன் ரிசல்ட் வந்திருக்கும். ரெகமண்டேசன் லிஸ்டில் நானும் எனக்கு சீனியரான முருகேசன் சார் பேரும் இருந்தது, அனேகமாக எனக்கு மட்டும் வந்திருக்கும், அதனால எல்லாம் கடுப்புல இருக்கானுங்க!
கண்ணாடியை கழற்றிவிட்டு முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டு யோசித்தேன். ம்ம்ம் எப்படி இதையெல்லாம் சமாளிப்பது? ஏற்கனவே எனக்கு நண்பர்கள் கம்மி, இதுல ஆபிஸ்ல வேற எல்லாம் எதிரி மாதிரி ஆனா என்ன செய்வது?
ஒன்றுமே தோணாமல், மேஜை மேலிருந்த ஃபைல்களை எடுத்து பார்க்க ஆரம்பித்தேன். ராமசாமி மெல்ல அருகில் வந்தான் “சார், நீங்க நல்லா இருக்கீங்களா? ஒண்ணும் பிரச்சனை இல்லையே?” என்றான். “ஏன் ராமசாமி அப்படி கேக்குறீங்க?” என்றேன். அவன் சொன்ன பதிலில் எல்லாம் புரிந்தது – “இல்ல கூலிங் கிளாஸ் போட்டிருந்தீங்க, ‘மெட்ராஸ் ஐ’ன்னு நெனச்சேன்”
– ஜூன் 2008