செக்குமாடுகள்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 13, 2014
பார்வையிட்டோர்: 6,958 
 

‘டொக்டர் மே ஐ கம் இன்’

ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த நான் திடுக்கிட்டு நிமிர்ந்தேன். இரவு ஆரம்பித்த மழை இன்னும் தூறிக்கொண்டிருப்பது ஆஸ்பத்திரி கண்ணாடி யன்னலினூடாக மழுப்பலாகத் தெரிந்தது. மழையினாலோ என்னவோ ஓபீடீ வெறிச்சோடியிருக்க தூறல் மழையின் மெல்லிய ரீங்காரத் தாலாட்டிலே தூக்கம் கண்ணைச் சுழற்றிய போதுதான் இந்த ஆங்கில இடையூறு.

‘யெஸ் கம் இன்’ என்ற எனது பதிலை ஏற்கனவே எதிர்பார்த்துக் காத்திருந்தவன் போல உள்ளே நுழைந்தான் ஓர் இளைஞன். அவனுக்கு இருபத்தி ஐந்து வயதிருக்கலாம். நவீனரக ஆடைகளை மிக நேர்த்தியாக அணிந்து மிடுக்காக இருந்தான் அவன். பளபளப்பான சப்பாத்துக்கள், குளிர்க்கண்ணாடி, கையில் செல்போன், தோளில் பெரிய தோல்பை சகிதம் உள்ளே வந்தவன் தனது கனமான பையைத் தரையில் வைத்துவிட்டுச் சிறிது நேரம் என்னைப் பார்த்தவாறு நின்றிருந்தான். நோயாளிகளை அமர்த்தும் இருக்கையை காட்டி உட்காருமாறு சைகை செய்து விட்டு ‘யெஸ்’ என்றேன். கழுத்துப்பட்டியைத் தளர்த்திக் கொண்டு என்னைச் சந்திக்க வந்த விடயத்தைப்பற்றி அவன் பேசத் தொடங்கிய போது வெளியே மழை உரத்துப் பெய்ய ஆரம்பித்தது.

இந்தக் கதை அவன் பேசப்போகும் விடயத்தைப் பற்றியதல்ல என்பதால், அவன் பேசுவதற்கிடையிலே நான் யார் என்பதைச் சொல்லி முடித்து விடுகின்றேன்.

இன்றைய திகதிக்கு இந்த திருகோணமலை நகரிலே இருக்கும் தலைசிறந்த வைத்தியர்களின் பட்டியல் என்று ஏதாவது ஒன்று உங்கள் கையிலிருந்தால் அதிலே எனது பெயர் இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தைத் தாண்டாது. சொந்தவீடு, பணக்கார மனைவி, நவீனரக ஏசீ கார், விலையுயர்ந்த செல்போன், மடிக்கணணி என்று சுகபோக வாழ்கைதான். இருந்தாலும் சுமார் 16 வருடங்களுக்கு முன்பு இதே திருகோணமலையின் தூசுபடிந்த தெருக்களிலே அப்பாவின் துருப்பிடித்த சைக்கிளில் பாடசாலைக்கும் டியூசனுக்கும் அலைந்து திரிந்த பழைய வாழ்க்கையை இன்னும் நான் மறந்துவிடவில்லை.

என்னோடு ஒன்றாகப் படித்தவர்களிலே நானும் அலஸ்தோட்டம் சின்னையா மெக்கானிக்கின் மகன் சின்னத்தம்பாவும்தான் மருத்துவத்துறைக்கு எடுபட்டோம். மற்றவர்கள் ஆளுக்கொரு துறையிலும் திசையிலும் சென்றுவிட்டார்கள். இரண்டொருவர் இயக்கத்துக்குப் போனதுமுண்டு. ஆனால் போய் என்னவானார்கள் என்று தெரியவில்லை. அநேகமாகச் செத்திருப்பார்கள். சிலபேர் சுவிஸ், கனடா, அவுஸ்திரேலியா என்று புலம்பெயர்ந்து வாழ்வதாகக் கேள்வி. இங்கே இருப்பவர்களில் எங்கள் முன்வீட்டு பவானி அக்காவின் தம்பி ரதீஸ் மட்டும் நிலாவெளியில் ஒரு பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியராக இருக்கின்றான.; எப்போதாவது இருந்துவிட்டு ஒருநாள் என்னைக் காண வருவான். அப்படி வந்தால் பாடசாலைக்காலத்தில் பழகிய மாதிரியே தோழமையோடு பேசுவான். தவிர, எனக்கு படிக்கின்ற காலத்திலே நெருக்கமான நண்பர்கள் என்று யாருமே இருக்கவில்லை. ஓ! ‘இருக்கவில்லை’ என்றா சொன்னேன்? ‘இருக்கவிடவில்லை’ என்றுதான் சொல்லியிருக்க வேண்டும்.

பாடசாலை விட்டதும் அஜந்தன,; ஜிகான், மயூரன், இஜாஸ், பார்த்தீபன், ஸன்பர், ஸ்ரனிஸ்லாஸ் (உச்சரிப்பதற்குக் கடினம் என்பதால் பட்டப்பெயர்: தண்ணிக்கிளாஸ்), சின்னத்தம்பா உட்பட ஒரு குழு ஃபுட்போல் விளையாடப் போய்விடும். மெத்தடிஸ் பெண்கள் பாடசாலைக்கு முன்னாலுள்ள மைதானம்தான் அவர்களது சொர்க்க பூமி. எல்லோரும் ஓடித் துரத்தி பந்தை உதைத்து விளையாடுவதைப் பார்க்கவே ஆசையாக இருக்கும் எனக்கு. ஆனால,; தினமும் மூன்று மணிக்கு ஆரம்பிக்கும் ஸ்கொலஷிப் டியூசன் க்ளாஸ் நினைவுக்கு வந்து ஆட்டத்தில் சேரவிடாமல் பயமுறுத்தும். விளையாடிக் குதூகலிக்க வேண்டிய மாலைவேளை முழுவதும் ஓரே இடத்தில் குந்திக்கொண்டிருக்கும் கொடுமை அது.

பாடசாலை இரண்டு மணிக்கு விடும் காலம் அது. வீடு சென்று சாப்பிட்டதுதான் தாமதம் டியூசன் கொப்பியைத் தூக்கிக்கொண்டு ஒரே ஓட்டமாய் ஓடிவிடுவேன். மூன்று மணிக்கு ஆரம்பிக்கும் டியுசனுக்கு 2.30க்கே ஓடும் ஆர்வம் புரியாமல் திகைப்பாள் அம்மா. அவவுக்குத் தெரியாது, மூன்று மணிவரை நான் நிற்கப்போவது ஃபுட்போல மைதானத்தில்தான் என்பது.

மைதானத்தில் டீம் பிரித்து விளையாடும்போது என்னை மட்டும் சேர்க்கவே மாட்டான்கள். விளையாட்டை நடுவிலே விட்டு டியுசனுக்கு ஓடுபவனை யார்தான் சேர்த்துக் கொள்வார்கள்? பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் மட்டும் பந்தடித்துவிட்டு வேர்க்க விறுவிறுக்க டியூசனுக்கு க்கு ஓடிப்போனால் மாஸ்டர் திட்டுவார். இதனால், டியூசனுக்கும் போக முடியாமல் பந்தடிக்கும் நண்பர்களின் குதூகலக்களிப்பை விட்டு நகரவும் மனமில்லாமல், நிழல்வாகை மரத்தின் கீழே சாத்தியிருக்கும் சைக்கிள் பாரில் அமர்ந்து ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருப்பேன்.

‘டேய்! இந்தாடா வந்து விளையாடு..!’ என்று நடுமைதானத்தில் நின்று நான் இருக்கும் மரத்தடியை நோக்கிப் பந்தை உயர்த்தியடிப்பான், சின்னத்தம்பா. பந்து என்னை நோக்கிப் பாய்ந்து வர, ஏதோ சொர்க்கத் திரவியம் கிடைத்தது போல இறங்கி ஓடிச்சென்று அவனைக்குறி வைத்து ஓங்கியடிப்பேன். பந்து மிகச்சரியாக தம்பாவின் கால்களுக்குள் போய் இறங்கும். அதைப் பார்த்து சில கணங்கள் திகைத்து நின்றுவிட்டு, ‘ அடேய்! இந்தா நல்லாத்தானே ஷுட் பண்ணுகிறாய்..பிறகு ஏண்டா டீமுக்கு கூப்பிட்டா வர மாட்டேன்கிறாய்?’ என்று வியந்து போய் கேட்பான் சின்னத்தம்பா. அவன் படிப்பிலும் நல்ல திறமைசாலி. கால்பந்து விளையாட்டிலும் சூரன். பந்து அவன் கால்களுக்குள் சென்று விட்டால் கோல் போடாமல் திரும்ப மாட்டான். பந்து அவனிடம் சும்மா நின்று பேசும்.

‘டேய், வாடா விளையாட!’ என்று எத்தனையோ முறை அவன் அழைத்திருக்கின்றான். அவன் வீட்டில் படிப்பதற்கும் விளையாடுவதற்கும் விடுவார்கள். ஆனால் என் வீட்டிலோ விளையாட்டு என்ற அந்தப் பேச்சையே எடுக்க முடியாது. கால்பந்தை பார்த்தால் ஏறத்தாழ கால்பந்து போன்ற அப்பாவின் கோபமுகம்தான் நினைவுக்கு வரும். ஏஜீஏ ஒபிஸில் சீஃப் க்ளார்க்காக வேலைசெய்யும் அப்பாவின் மொத்த கௌரவமுமே நான் பெறவிருந்த ஸ்கொலஷிப் புள்ளிகளில்தான் உள்ளதாம். அதுவும் அவரது சக ஊழியர்களின் பிள்ளைகளை விட அதிக புள்ளிகள் பெற்றால்தான் மேலும் மதிப்பாம். அதற்காகவே விளையாடும் உரிமையைப் பறித்து பாடசாலை, வீடு, டியூசன் என்ற மூன்று முனைகளுக்குள் மட்டுமே சுற்றிவரும் செக்குமாடாக வளர்ததெடுத்தவர்கள் எனது பெற்றோர்கள்.

ஸ்கொலஷிப் என்பது திறமையான ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்காக அரசு நடாத்துகின்ற ஒரு போட்டிப் பரீட்சை. அதிலே சித்தியடைந்தாலும் அரசாங்க உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு அந்த உதவித்தொகை கிடைப்பதில்லை. ஆயினும், பாவிகளின் பாவங்களை பாரமுள்ள சிலுவையாக முதுகில் சுமந்த இயேசு பாலனைப்போல பெற்றவர்களின் வரட்டுக் கௌரவங்களையெல்லாம் மூளையில் சுமக்கின்றார்கள் நமது பாலகர்கள். இதனை நினைக்கும்போது வேதனையும் வெறுப்பும் மனதிலே மண்டும்.

அறிவுக்குத் தேடிக்கற்பது வேறு அடையமுடியாத வெகுமதிக்காக வருத்தித் திணிப்பது வேறு. இதனைப் புரியாமல் சின்னஞ்சிறு வண்ணத்துப் பூச்சிகளின் செட்டைகளிலே செங்கற்களைக் கட்டிப் பறக்கத் துரத்தும் நமது பெற்றோர்களின் அறியாமையை யாரிடம் சொல்லிப் புலம்புவது?

மாலையில் எனது பணி முடித்து காரில் வீடு திரும்புவேன். முன்பு எனது நண்பர்கள் விளையாடிய மெத்தடிஸ் மைதானம் சிறுவர்களின்றி வெறிச்சோடிக் கிடக்கும். ஆனால் அதே தெருவிலுள்ள டியூட்டரிகளிலே பாலகர்கள் கூட்டம் அலைமோதும். அப்போதெல்லாம் விளையாடும் உரிமை மறுக்கப்பட்ட எனது பிள்ளைப்பருவமும் டியூட்டரிக் கொட்டில்களிலே அடைபட்டுக்கிடந்த வரட்சியான வாலிபப்பருவமும் நினைவுக்கு வர இதயத்தின் ஓரத்திலே மெல்லிய கசப்புணர்வு தோன்றி மறையும். அதேவேளை சின்னஞ்சிறுவர்கள் எங்காவது மைதானத்திலோ கடற்கரை மணலிலோ விளையாடுவதைப் பார்த்தால் என்மனம் ஆனந்தச் சிறகடிக்கும். எத்தனை அவசர வேலை இருந்தாலும் காரை நிறுத்தி அவர்களின்; குதூகலக் களிப்பை கண்களிரண்டால் அள்ளிப்பருகிவிட்டுத்தான் நகர்வேன்.

இப்போது நினைத்துப் பார்த்தால் அன்றைய எனது கால்பந்து நண்பர்களைப் போல, கல்வியை வாழ்வின் பல்வேறு அம்சங்களில் ஒன்றாக மட்டும் நினைத்துக் கற்றவர்;கள்தான் என்னை விடவும் கொடுத்து வைத்தவர்கள். இன்னும் சொல்லப்போனால் தமக்குக் கிடைத்த வாழ்க்கை என்ற அற்புத ரசத்தை அதன் ஒவ்வொரு துளியிலும் அனுபவித்தவர்களும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்களும் அவர்கள்தானே தவிர என்னைப்போல படிப்பே வாழ்க்கையாய் வாழ்ந்த பணக்காரச் செக்குமாடுகளல்ல.

‘டொக்டர், ஷேலை ஷோ த ட்ரக்ஸ்?’ மருந்து நிறுவன இளைஞன் மீண்டும் என்னை அழைத்தபோது வெளியே மழை விட்டிருந்தது.

‘ஓக்கே யூ ப்ரொஸீட்!’

‘இதோ இருக்கு நான் சொன்ன ஸேம்பிள் ட்ரக்ஸ். இது இப்பதான் புதுசா மாக்கெட்டுக்கு வந்தது. ஆனா இதுல ஸைட் எபெக்ட்ஸ் குறைவு’ என்று ஆங்கிலத்திலும் தமிழிலுமாக மாறிமாறிப் பேசிக் கொண்டு தனது மருந்துகளையும் மாத்திரைப் பட்டைகளையும் மேசையிலே அள்ளிப்பரப்பத் தொடங்கினான்.

அவனது ஒவ்வொரு அசைவும் வெகு நாசூக்காகவும் இலாவகமாகவும் இருந்தன. மருந்துப் பொருட்களோடு சேர்த்துத் தனது மருந்து நிறுவனத்தின் அடையாளக் குறிகளுள்ள ஸ்டிக்கர்களையும் வைத்தான். பின்பு சற்றுத் தயங்கியபடி, ‘டொக்டர்; திஸ் ஈஸ் எ ஸ்மோல் கிப்ஃட் ப்ரம் அவர் ட்ரக்ஸ் கம்பெனி’ என்று ஒரு பெரிய பொதியை எனது மேசையின் ஓரமாக வைத்தான். அதிலே தொகையான சொக்லேட்டுக்கள், சத்துணவுகள், பால்மா வகைகள் உட்பட பல வகையான பொருட்கள் இருந்தன. அவை எல்லாமே நானும் என்னைப் போன்ற பிற வைத்தியர்களும் அவனது மருந்து நிறுவனத்தின் தயாரிப்புக்களை நோயாளிகளுக்குச் சிபாரிசு செய்வதற்காகத் தரப்படுவதுதான்.

இப்படியான மருந்துகள் எவ்வளவு தூரம் சரியானவை என்பது பொதுவாக யாருக்குமே தெரியாது. எல்லா மருந்து நிறுவனங்களும் ஏறத்தாழ ஒரே இரசாயன மூலப்பொருட்களைத்தான் பயன்படுத்துகின்றன. வர்த்தகப் பெயர்கள் மட்டுமே வேறுபடும். அவற்றைத் தயாரிக்கும்போது கடைப்பிடிக்கப்படும் பாதுகாப்புச் செயன்முறைகளில் இருக்கும் குறைபாடுகளினால் கூட விபரீதங்கள் நிகழலாம். புகழ்பெற்ற நிறுவனங்களும் இதிலே சறுக்குவதுண்டு.

சில ஆண்டுகளுக்கு முன்னர் தேங்காய் எண்ணெய்யில் ஆபத்தான கொழுப்பு இருப்பதாக நாட்டிலே செய்தி பரவிய வேளையிலே கேவலம் அந்தச் செய்தியின் உண்மையை மக்களுக்கு எடுத்துக் கூறக்கூட எங்களைப் போன்றவர்களால் முடியாதிருந்தது. உண்மையில் தேங்காய் எண்ணெய்யில் ஆபத்தற்ற அவசியமான கொழுப்புகள்தான் உள்ளன என்ற உண்மைகூட பின்பு வெளிநாடுகளிலிருந்துதான் உறுதிப்படுத்தப்பட்டது.

அது போலத்தான் இப்போது இந்த மருந்துகளை மறுப்பதா அல்லது ஏற்பதா என்பதை என்னால் தீர்மானிக்க முடியவில்லை. எனது கல்வித் தரமோ சமூக அந்தஸ்தோ இதற்கு உதவப்போவதில்லை. ஏனென்றால், நான் சிறுவயதிலிருந்து கற்றதெல்லாம் எதை? தேடலே இல்லாத வெறும் மூளையை நிரப்பும் கல்வியையும் பரீட்சை மேசையிலே அதை வாந்தியெடுக்கும் மதிப்பீட்டையும்தானே? இவையெல்லாம் இயல்பான சிந்தனைத் திறனையும் சுயமான தேடலையும் கற்றுத்தரவில்லை. மாறாக, எல்லோரையும் பல்தேசிய கம்பனி வியாபாரிகளின் எடுபிடிகளாகத்தான் மாற்றியுள்ளன.

நான், இந்த மருந்து விற்கும் இளைஞன், ஆஸ்பத்திரி ஊழியர்கள், பாமஸிக்காரன் முதல் ஏறத்தாழ எல்லோருமே மெல்ல மெல்ல பல்தேசியக்கம்பனிகள் எனும் மகா இயந்திரத்தின் மாற்றவே முடியாத பற்சக்கரங்களாகி விட்டோம். நாற்பது நாட்களிலே வியாபாரத்திற்குத் தயாராகும் இறைச்சிக்கோழிகளுக்கும் ஐந்து வருடத்தில் யுனிவசிட்டி முடித்து வரும் எங்களைப் போன்றவர்களுக்கும் அதிக வித்தியாசங்கள் கிடையாது. யாராவது ஓரிருவர் விதிவிலக்காக இருக்கக்கூடும். ஆனால் அவர்களெல்லாம் இந்த நிர்வாண தேசத்தின் கோவணதாரிகளாக மட்டுமே வாழமுடியும்.

‘கேன் ஐ மேக் மை மூவ் டொக்டர்?’ என்று கேட்டவன் மீது கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ‘ஹேய் வாட் யு திங்க் ஒப்ஃ மீ.. நீ என்ன நினைச்சிட்டிருக்கிறாய்..? வில்யூ டேக் எண்ட் கெட் லொஸ்ட் ஓல் தீஸ் ரப்பிஷ்.. போ! எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் போ! போ! லீவ் மீ எலோன்!’ என்று அவனது மருந்துகளையும் அன்பளிப்புகளையும் கற்பனையில் அள்ளி அவன் முகத்தில் வீசியெறிந்து துரத்தி விட்டேன்.

ஆனால் நிஜத்தில், ‘தேங்க்யூ வெரிமச் டொக்டர்’ என்று புன்னகைத்து விடைபெற்ற அந்த மருந்து விற்கும் இளைஞனை கைகுலுக்கி வழியனுப்பி வைத்தேன்.

மேசையிலே அவன் வைத்துவிட்டுப் போன அன்பளிப்புப் பொதி என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது.

– மார்ச் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *