சூரியனும் சூரியகாந்திகளும்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 21, 2019
பார்வையிட்டோர்: 5,272 
 

‘என் முடிவு நடப்பு சரியா ?’ எனக்குள் யோசனை உறுத்தல். நடந்து கொண்டே நடந்தது நினைத்தேன்.

நேற்று மாலை மணி ஆறு. நானும் எதிர் வீட்டு நண்பரும் என் வீட்டு வராந்தாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். உள்ளே பையன்கள் படித்துக் கொண்டிருந்தாhர்கள். பெரியவன் நிர்மல் எட்டாம் வகுப்பு. அடுத்தவன் விமல் ஐந்தாம் வகுப்பு.

பக்கத்துப் பேட்டையில் வசிக்கும் பெண்மணி. பரட்டைத் தலை, அழுக்கு உடை தோற்றம் வாசல் கேட்டருகே வந்தவள் நாங்கள் அமர்ந்திருப்பதைப் பார்த்து உள்ளே வரத் தயங்கி அங்கேயே நின்றாள்.

‘‘என்னம்மா ?’’ இருந்த இடத்திலிருந்தே ஏறிட்டேன்.

‘‘நி……நிர்மல்…’’ தட்டுத்தடுமாறி என் பெரிய பையன் பெயரைச் சொன்னாள்.

‘‘அவனுக்கென்ன ?’’

‘‘பா…பார்க்கனும்…..’’

‘‘நிர்மல் ! ’’ திரும்பி உள்ளே குரல் கொடுத்தேன்.

‘‘என்னப்பா ?’’ வெளியே வந்தான்.

‘‘அவுங்க உன்னைத் தேடி வந்திருக்காங்க.’’ காட்டினேன்.

அடுத்த வினாடி அவள்; இவனைப் பார்த்து, ‘‘என் பையன் பிச்சை இங்கே வந்தானா தம்பி ?’’ கேட்டாள்.

‘‘இல்லே !’’ இவன் சொன்னான்.

‘‘கடைசியாய் இங்கதான் வந்து நிப்பான்னு நெனைச்சேன். காணலை. எங்கே போனான் தெரியலையே…!’’ அவள் கலவராமாய் – முணுமுணுத்துக் கையைப் பிசைந்தாள்.

பேட்டைப்பையன்களுக்கு என் மகன்கள் தோழர்கள். கிரிக்கெட் மட்டை பந்து என்று எல்லாம் இவர்களுக்குச் சொந்தமாக இருக்க…. விடுமுறையானால் கூடிவிடுவார்கள். சவுக்குத் தோப்பை தாண்டி ஒரு பொட்டல் வெளியில் பொழுதுக்கும் கூச்சலும் கும்மாளமுமாக விளையாட்டு களேபரமாக நடக்கும்.

அவள் கலக்கம். எனக்குப் பரிதாபமாக இருந்தது.

‘‘ஏம்மா என்னாச்சு ?’’ என்றேன்.

‘‘பையன் நாலு நாளா படிக்கலைஇ பள்ளிக்கூடம் போகலை. என் கண்ணுல அகப்படாம ஊர் சுத்திக்கிட்டு இருக்கான் சார். நான் சம்பாதிச்சாதான் வீட்டுல உளை. அதனால இவனைக் கவனிக்க முடியலை. பொழுதுக்கும் கூலி வேலை செய்த களைப்பு, அடாவடியினால இவன் மேல கோபம். வயிறு பசிச்சா வீட்டுக்கு வந்துதானே ஆகனும்; தொறக்ககூடாது, புடிச்சி நசுக்கனும்ன்னு நெனைச்சி ராத்திரி விளக்கை அணைச்சி கதவைச் சாத்திக்கிட்டு படுத்துட்டேன். எங்கேயோ டி.வி பார்த்துட்டு ஒன்பதரை மணிக்கு மேல வந்து ‘அம்மா ! அம்மா !’ன்னு சத்தம் போட்டு கதவைத் தட்டினான். நான் எழுந்திருக்கலை கத்தட்டும்ன்னு பிடிவாதமாய்ப் படுத்திருந்தேன். ஐயாவுக்கு நான் கதவு திறக்காத கோபம் சடக்குன்னு என் மேல ஆத்திரம் ரோட்டுல நின்னு கல்லெடுத்து கதவு தட்டியில அடிச்சி அடாவடி பண்ணினான். கதவு உடைஞ்சாலும் சரி திமிர் அடங்கனும் திறக்கலை. நாலைஞ்சு கல்லுக்குப் பிறகு சத்தம் இல்லே. நம்ம பிடிவாதம் புரிஞ்சி பசி சுருண்டு படுத்துட்டான்இ அரை மணி நேரம் கழிச்சு கதவு தொறந்து ரெண்டு போட்டு கண்டிச்சுஇ சோத்தையும் போட்டு படுக்க வைப்போம்ன்னு நெனைச்சி பத்தரை மணிக்கு வந்து கதவைத் திறந்தேன். வாசல்ல ஆள் இல்லே. சொரக்குன்னிச்சு. அக்கம் பக்கம் தேடினேன். இல்லே. அர்த்த ராத்திரியில கதவைத் தட்டி எழுப்பி என் புள்ளை வந்தானான்னு யாரைக் கேட்க முடியும் ? எங்கேயாவது ஒதுங்கி காலையில வரும் பேசிக்கலாம்ன்னு இருந்தேன் சார். காணோம். ஊர் முழுக்க தேடிப் பார்த்தேன் காணோம். கடைசியாய் இங்கே வந்தேன். கோவிச்சுக்கிட்டு எங்கே போனான் தெரியலையே…..!’’ தாய்ப் பாசம் கலங்கினாள்.

‘ஒழுங்காய் இல்லாமல் சிறுவயதில் என்ன அடாவடித்தனம் !’ அந்த பையன் மீது கோபம் வந்தது.

‘‘கவலைப்படாதேம்மா. கண்டதையும் நெனைச்சி கலங்காம இங்கேதான் எங்கேயாவது இருப்பான். பொறுமையாhத் தேடிப் பாரு கெடைப்பான்.’’ என்றேன்.

‘‘சரி சார். ’’அவள் விழியோரக் கசிவைப் புடவைத் தலைப்பால் துடைத்துக் கொண்டு நகர்ந்தாள். நிர்மல் உள்ளே சென்றான்.

அவள் தலை மறைந்த அடுத்த வினாடி நண்பா, ‘‘பையன் யாரு தெரியுதா ?’’ என்னைக் கேட்டார்.

‘‘தெரியலை சார்.’’ என்றேன்.

‘‘ஒனசலா உசரமா சிகப்பா இருப்பான் சார்.’’

பார்த்த ஞாபகம் வந்தது.

‘‘இந்த அம்மாவைத் தெரியுமா ?’’

‘‘தெரியாது’’

‘‘சொல்றேன். பாவம்…அஞ்சு வயசுலேயே அம்மா அப்பா இல்லாத அனாதையாகிட்டாள். சித்தப்பா வீட்டுல ஒண்டினாள். அங்கே சித்திக் கொடுமை. படிக்க விடாம வீட்டு வேலை வாங்கி, வயசுக்கு வந்ததும் சம்பாதிக்க சித்தாள் வேலைக்கு அனுப்பினாள். அங்கே ஒரு பையனோட தொடர்பு. வயித்துப் புள்ளைத்தாச்சியோட இருந்தவளை அடிச்சி உதைச்சி அந்த பையனுக்கே முடிச்சி சித்தி வீட்டை விட்டு வெளியே அனுப்பினாள். அந்த வயித்துப் புள்ளைதான் இப்போ தேடிக்கிட்டு வந்த புள்ளை. இப்போ இவ புருசன் தாயும் புள்ளையையும் தனியே விட்டுட்டு வேறொருத்தியோட ஓடிப்போய் எங்கேயோ அஞ்சு வருசத்துக்கு மேல குடும்பம் நடத்துறான். பாவம் இவள் பழையபடி சித்தாள் வேலைக்குப் போய் வயித்தைக் கழுவி புள்ளையைப் படிக்க வைக்கிறாள். அது படிக்காம தறுதலையாய் நிக்குது.’’ முடித்தார்.

எனக்கு மனசு கனத்தது. பையனின் போக்கிரித்தனம் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

ஒழுங்காகப் படிக்கப்போகாமல் தான்தோன்றித்தனமாக ஊர் சுற்றி தாயையே கல்லால் அடிப்பவனை யாருக்குத்தான் பிடிக்கும் ? அதேசமயம் இன்னொரு இடி. ஒரு தத்தாரி பையனா நம் பிள்ளைகளுடன் சேர்கிறான், விளையாடுகிறான் ! நினைக்கச் சொரக்கென்றது.

பன்றியோடு சேர்ந்த கன்றும் நாறுமே ! கலக்கியது.

என் முக மாறுதலைக் கண்ட நண்பர், ‘‘என்ன சார் ?’’ என்றான்.

‘‘இனிமே அவன் என் பையன்களோட சேரக்கூடாது’’ என்றேன்.

‘‘ஏன் சார் ?’’ புரியாமல் பார்த்தார்.

‘‘அவன் நடப்பு சரி இல்லே சார் ! கெட்டவர்கள் பழக்கவழக்கங்களை உடனே வெட்டனும். இல்லேன்னா பின்னால நமக்கு ஆபத்து. புள்ளைங்களுக்கும் கேடு.’’ என்றேன்.

‘‘ரொம்ப சரி சார்.’’ என்று ஆமோதித்து தலையசைத்த நண்பர், ‘‘அப்படின்னா இன்னொரு பையனையும் நீங்க இங்கே வர விடாம தடுக்கனும்.’’ என்றார்.

‘‘ யார் ?’’ துணுக்குற்றேன்.

‘‘காத்தான். இவனும் அதே பேட்டை. பிச்சையைவிட பல மடங்கு மோசம். வாயைத் திறந்தா வண்டி வண்டியாய் கெட்ட வார்த்தை. இப்பவே அம்மா அப்பாவுக்குத் தெரியாம வீட்டுல காசு எடுக்குற பழக்கம் வைச்சிருக்கான். இவன் பிற்காலத்துல என்னவாகப்போறானோன்னு அவன் அம்மாவுக்குக் கவலை. என்கிட்ட சொல்லி அழுவுது.’’ என்றார்.

‘‘நறுக்க வேண்டிவன்தான் ! ஆள் அடையாளம் ?’’

‘‘கறுப்பா கட்டையா முன் பல் தூக்கி இருக்கும்.’’ சொல்லி கிளம்பினார்.

‘பேட்டைப் பையன்கள் ஏழைகள். விளையாட்டுப் பொருட்களிருக்கும் நம் பையன்களோடு சேர்ந்துவிளையாடுவதால் யாருக்கும் நஷ்டமில்லை அது அவர்களுக்குத்தான் லாபம், உதவி என்று நினைத்தது தவறு. அவர்களுக்குப் படிப்பைத் தவர வேறு எல்லாவற்றிலும் புத்தி. நாளைக்கு அவர்கள் அதிரடியாய்ப் படிப்பை நிறுத்திவிட்டு கூசாமல் கூலி வேலைக்குப் போய் சம்பாதிக்கலாம். கார் வைத்துக் கொண்டு வசதி, வாய்ப்பாய் சமூகத்தில் மதிப்பாக வாழும் நம் பிள்ளைகள் சட்டென்று அப்படி கீழிறங்க முடியாது. அப்படி ஆவது கேவலம். பெற்றவர்களுக்கு அவமானம். கூடாது. வெட்ட வேண்டும். நாளைக்கு அவர்கள் இங்கே தலை காட்டினால் விரட்டி வேண்டும்.’ முடிவிற்கு வந்தேன்.

மறுநாள் காலை அலுவலகம் பள்ளி விடுப்பு. காலை எட்டு மணிக்கே பிச்சையும்இ இன்னொரு பையனும்; என் வீட்டு வாசலுக்கு வந்தார்கள்.

வாசலில் நின்ற நான், ‘‘தம்பிகளா ! இங்கே வாங்க.’’ அழைத்தேன்.

வந்தார்கள்.

‘‘பிச்சை யாரு ?’’

‘‘நான் சார். ’’

‘‘நேத்து உன் அம்மா உன்னை இங்கு தேடி வந்தாங்க. எங்கே போனே ?’’ விசாரணையில் இறங்கினேன்.

‘‘அப்பாக்கிட்ட சார்.’’ என்றான் தயக்கமில்லாமல்.

‘‘அவர் எங்கே இருக்கார் ?’’

‘‘திருவாரூர்லேர்ந்து வடக்கே ஐந்து கிலோ மீட்டர் கிராமம் சார்.’’

‘‘எப்படிப் போனே ?’’

‘‘பஸ் ஏறி.’’

‘‘ராத்திரி ஒன்பரை மணிக்கு மேலேயா ?’’

‘‘ஆமா’’

‘‘காசு ?’’

‘‘வைச்சிருந்தேன்.’’

‘‘ஏது ?’’

‘‘புத்தகம் வாங்க அம்மா குடுத்தாங்க.’’

‘‘வாங்கலையா ?’’

‘‘இல்லே சார். அம்மா மேல கோபம். பஸ் ஏறிட்டேன்.’’

‘‘அம்மா மேல என்ன கோபம் ?’’

பதில் சொல்ல விருப்பப்படாதவன்போல் மௌனமாய் இருந்தான்.

அதிகம் சங்கடப்படுத்த விரும்பாமல் அடுத்த கேள்விக்குத் தாவினேன். ‘‘புத்தகம் ?’’

‘‘அப்பா வாங்கித்தந்தார்.’’

‘‘அப்பா அங்கே யாரோட இருக்கார் ?’’

‘‘சித்தியோட.’’

‘‘எதிர்வீட்டு நண்பர் சொன்னது சரி. ஊர்ஜிதமாயிற்று.’’

‘‘அப்பா ஏன் உங்க கூட இல்லே ?’’

‘‘தெரியலை’’

‘‘சித்தி உன் மேல பிரியமா இருப்பாளா ?’’

‘‘ம்ம்…’’

‘‘அவளுக்கு எத்தனைக் குழந்தைங்க ?’’

‘‘ரெண்டு.’’

‘‘நிர்மலோடதான் படிக்கிறீயா ?’’

‘‘ஆமா. இவனும் எங்ககூட படிக்கிறான்.’’ பிச்சை தன்னுடன் நின்றவனைக் காட்டினான்.

‘‘உன் பேர் என்னப்பா ?’’

‘‘காத்;தான்.’’

‘‘நீயும் பிச்சை ஊர்தானா ?’’

‘‘ஆமா சார்.’’

‘‘உங்க பழக்க வழக்கம் சரி இல்லேன்னு கேள்விப்பட்டேனே ?!’’

அவர்கள் முகம் மாறியது. விழித்தார்கள்.

‘‘எனக்கு நல்ல பையன்கள் பழக்க வழக்கம்தான் வேணும். நீங்க தேவை இல்லே. இனி இங்கு வரக்கூடாது. போகலாம்.‘‘ அதிரடியாய் அறிவித்தேன்.

அவர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. முகத்தில் ஓங்கி குத்து வாங்கின உணர்வு. விநாடி நேரம் திகைத்து விழித்தார்கள்.

‘‘நெசமாத்தான் சொல்றேன். இது என் முடிவு. நிர்மல் விமலோட உங்களைப் பாத்தேன்…. எல்லாருக்கும் அடி!’’ முகத்தில் கடுமை ஏற…எச்சரித்தேன்.

பையன்கள் முகத்தில் பயம் வந்து கலவரம் வந்தது, அதற்கு மேல் நிற்காமல் பம்மி வேகமாய் நடந்தார்கள். திரும்பினேன். வாசலில் நிர்மல், விமல். நான் அவர்களை விசாரிக்கும்போதே வந்தவர்கள்.

இவர்களிடம், ‘‘இனி நீங்க அவனுங்களோடு சேரக்கூடாது.’’ கண்டித்தேன்.

‘‘ச….சரிப்பா.’’ தலையாட்டி தயக்கமாய் வீட்டிற்குள் திரும்பினார்கள்.

அதற்கு மேல் நிறாகாமல் வேலையாய் வெளியே புறப்பட்டேன். கொஞ்ச தூரம் நடந்ததும் மனசுக்குள் அவர்களை அப்படி அனுப்பியது. சரியா தவறா ? கேள்வி எழுந்தது. அதுவே உறுத்தலாகி ………………..

சுய சோதனையில் இறங்கினேன்.

‘வயசுஇ ஆர்வம், இல்லாதப்பட்டவர்கள் இருப்பவர்களுடன் விளையாட வருகிறார்கள். அவர்களை வராதே, போ விரட்டும் வலி கண்டிப்பாய் அவர்கள் மனதில் தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்தும். அது மட்டுமில்லாமல் நம்மீது கோபம், வெறுப்பையும் உண்டாக்கும். இந்த வலியும் கோபமும் சமூக விரோத போக்கை தோற்றுவிக்கும். படித்த பண்பாளர்களாய் அரவணைப்புக் காட்டாமல் இது என்ன செயல் ?’

‘கீழ்சாதிக்காரருக்குப் பாரதி எந்த துணிச்சலில் துண்டைப் போட்டு அவன் மார்பில் பூணூலையும் போட்டார். இவன் ஒதுக்கப்பட்டவன் கிடையாது. இவனும் நம்மைப் போல் ஒரு மனிதன் என்கிற நம்பிக்கை தெரிவு.’ விளங்கியது. அவ்வளவுதான் எனக்குள்ளே மத்தாப்பாய் ஒரு வெளிச்சம். வீடு திரும்பினேன்.

வாசலில் நிர்மல்இ விமல் நின்றார்கள்.

பெரியவன்இ ‘‘அப்பா !’’ அழைத்தான்.

‘‘என்ன ?’’

‘‘ஒரு விசயம்ப்பா.’’

‘‘சொல்லு ?’’

‘‘காலையில உங்க நடப்பு சரி இல்லேப்பா. வீட்டுக்கு வந்தவங்களை விரட்டி அடிச்சது எனக்கு வலி.’’

துணுக்குற்று அவன் முகத்தைப் பார்த்தேன்.

தொடர்ந்தான்.

‘‘பிச்சை வீட்டுக்கு அடங்காதவன்இ ஊர் சுத்தி, கெட்டவன்னு எனக்குத் தெரியாது. பள்ளிக்கூடத்துல என்னோட வகுப்புத் தோழன் முறையில விளையாட்டுக்கு அழைக்க முதன் முதலா அவன் வீட்டுக்குப் போனேன். அப்போ அவன் அம்மா இருந்து, ‘தம்பி உன்னைப் பார்த்தா நல்ல புள்ளையாத் தெரியறே…என் சொல் கேட்காம கண்டமேனிக்குத் திரியறான். நீயாவது இவனுக்கு நல்ல புத்தி சொல்லி கொஞ்சம் படிக்க வையேன். இவனை நம்பித்தான் இந்த ஒத்த உசுரு இருக்குது, உடல் உழைக்குது.’ சொன்னாங்க. அவுங்க பாவமா சொன்னது என் மனசுல ஆழமா பதிஞ்சுது. ஆகட்டும்ன்னேன். அன்னையிலேர்ந்து பாடத்துல அவனுக்குத் தெரியாதது சொல்லிக் குடுத்தேன். அவனுக்குப் படிப்புல ஆர்வம் வந்து சந்தேகம் இருந்தாலும் கேட்பான். இவனோட காத்தானும் சேர்ந்தான். இவுங்களுக்கு என்னோட சேர்றதுதான் பலம்இ பலன். அதனாலதான் விளையாட்டுக்குக்கூட அடுத்த இடம் போகாம என்னோடேயும் தம்பியோடேயும் விளையாட வருவாங்க இவுங்க பழைய புத்தி எப்போதாவது தப்பு பண்ண வைக்கும் அதை நான் தட்டி சரி பண்ணுவேன். அதன் பலன் இப்போ ரொம்ப திருந்திட்டாங்க. இன்னும் திருந்தனும்.’’ நிறுத்தினான்.

‘அட………!’ எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

‘‘ஏன் இதை நீ அப்பவே சொல்லலை ?’’ ஏறிட்டேன்.

‘‘கோபமா இருந்தீங்க. சொன்னா ஏத்துக்க மாட்டீங்க.’’ என்றான்.

ஆகா.! அந்த புத்திசாலித்தனம் எனக்குள் மலர்ச்சியை ஏற்படுத்தியது. இவன் சூரியன் அவர்கள் சூரியகாந்திப் பூக்கள் பளிச்சென்று மனதில் பட்டது.

‘‘நல்லது. என் தவறை நான் திருத்திக்கிறேன். அவுங்களோடு நீங்க சேர்ந்து வெளையாடலாம்.’’ சொன்னேன்

நிர்மல், விமல் முகம் மலர்ந்தார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *