சூனிய இருளிலும் சுடர் விடும் ஒரு சோதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 27, 2024
பார்வையிட்டோர்: 638 
 
 

பின்னோக்கி நகர்கின்ற ஒரு கால கட்டம் அப்படியானது எத்தனை வருடங்களென்று ஞாபகமில்லை. உடலின் ஒரு வார்ப்பாக உருண்டு சிதறிப் போகின்ற மன வோட்டத்தில் சிரஞ்சீவியாக நிலைத்து நிற்கக் கூடியதாய், எதுவுமேயில்லை. எல்லாம் பூரணமாகாத நிறையொளியாகாத அரை குறை வேக்காடுகள் தான் இவற்றிலே முதன்மைப்படுத்திச் சொல்ல முடியாத அளவுக்கு வெற்றிடங்களையே காண்பதாக, மாதுரி உணர்ந்திருந்தாள்.

அவள் ராமநாதன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம் தேர்ட் போம் என்று சொல்வார்கள். தமிழிலே கூறுவதானால், எட்டாம் வகுப்பு எனலாம். எல்லோரும் தமிழ் மாணவிகள் தாம். முழங்காலையும் தாண்டி கணுக்கால் வரை நீண்டு தொங்கிகிற பாவாடைக்கு பொருத்தமாக மேலே தாவணி வேறு. அதுவும் அரைத் தாவணி. இதைக் கட்டி முடிப்பதே பெரும் சவால், உடலைச் சுற்றிக் கட்டிக் கொண்டு வந்து , முதுகுக்குப் பின்னால், தலைப்பைத் தொங்க விட்டுச் செருகுவதே ஒரு தனிக் கலையைப் பயின்ற மாதிரி.

அப்போதெல்லாம் மாதுரி சுமாராகத் தான் தோன்றுவாள். அதிக ஆடம்பரம் அழகு இல்லாத ஒரு வெற்றுப் பெண் தான் அவள். ஆனால் முடி சூடிய பளிங்கு வார்ப்பான, தேவதைகள் என்றே தங்களை நம்புகிற ஏனைய பெண்கள் அதிலும் இந்த மாணவ பருவத்தில் என்னவொரு அபார கற்பனை மயக்கம் அவர்களுக்கு.

அப்படி அவர்கள் ஒளித் தேரேறி வரும் போதெல்லாம் அவள் அதைக் கணக்கில் எடுக்காமல் தன் அகன்று விரிந்த பெரிய கண்களால், பார்வையை, உயர்த்தி வானத்தையே பார்த்துக் கொண்டிருப்பாள். அவர்களுக்கு அது அவள் அப்படி நிற்கிறது தங்களின் வரவுக்கு இடையூறு செய்கிற ஒரு அவமான வெளிப்பாடாகவே மனதில் படும். அதனால், அவர்கள் அவளை வம்புக்கு இழுத்துக் கேலி செய்வதொன்றையே வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் அவள் இதை பெரிதுபடுத்தாமல், சகஜமாகவே இருந்து வந்தாள். அவளுக்குத் தெரியும், எல்லாம் கண் முன்னால் தோன்றி மறைகிற நிழல் ரூபங்களே. நிலையாமை பற்றி, அவள் ஒன்றும் அறியாத பேதையல்ல. சிறு வயதிலிருந்தே அது தான் அவளுக்கு மனப் பாடம். இதனால் இந்த அழிந்து போகிற மாய உடம்பின் மூலம் வருகின்றவெளித் தோற்றமான அழகின் நிமித்தம் எந்த அலங்கார வெளிப்பாடுகளுமின்றி அவள் அப்படி இருப்பதை ஒரு தவமாகவே கொண்டிருந்தாள். இத் தவத்துக்கு இடையூறாக, வருகிற சவால்கலையெல்லாம் புறம் தள்ளியே ஒரு மேலான ஆதர்ஸ தேவதை போலவே அவளின் தெய்வீக இருப்பு இருந்தது.

எனினும் இந்தப் பொய் உலகின் கண்களுக்கு ஒரு வெற்று நிழல், தான் படிக்கிற மாணவ பருவத்தில் அழகை ஆராதனை செய்து வழிபட முன் வருகிற அப்பெண்கள் குறித்து அவளுக்கு சிறு மனவருத்தம் கூட உண்டு. அதைப் பற்றி அவள் பேசத் தொடங்கினால், அவர்கள் கேட்பார்களா என்பது சந்தேகமே. ஏனென்றால், அவர்களின் உலகம் வேறு, கண்ணை மயக்குகிற காட்சி உலகம் ஒன்றைத் தவிர ஆன்மீக விழுமியங்கள் குறித்து சித்தாங்களெல்லாம், அவர்களுக்கு எட்டாக் கானிதான்.

எனினும் மாதுரியின் நிலை வேறு. மாயச் சுழலில் சிக்கினால், சஞ்சலம் தான் வரும். அதனால், அப்படி வருகிற நடப்புகளை வேடிக்கை பார்க்க மட்டுமே அவளால், முடிந்தது. அவள் படித்துக் கொண்டிருக்கிற எட்டாம் வகுப்புக்கு டீச்சராக இருந்தவர், விஜலட்சுமி அக்கா என்பவர். அக்கா முறை போட்டுத் தான் அக்கல்லூரியில் டீச்சர்மாரை அழைப்பர்.

சத்தியதேவி என்பவள் அவளின் சக மாணவி. அவள் படிக்க வரவில்லை, அழகை மையமாக வைத்தே, அவளின் வரவு அங்கு பிரசன்னமாகி இருக்கும். இதை விஜயலட்சுமி அக்காவும் நன்கு அறிந்து வைத்திருந்தார். அழகை மட்டுமே ஆராதனை செய்து வழிபட முன் வருகிற அப் பேய்க் கும்பலின் முன் அதற்கு மாறாக ஒரு துருவநட்சத்திரம் போல் விளங்கிற மாதுரியின் அப்பழுக்கற்ற, தெய்வீக நிலை தூசுக்கு சமமாகவே அவர்கள் கொண்டாடித் தீர்த்ததே ஒரு தனிக் கதை. அதை வைத்து வேதம் சொல்லுகிற ஒரு பளிங்கு வார்ப்பாகவே மாதுரியின் அன்றைய நிலை இருந்தது.

சக்தி படிக்கும் புத்தகங்களை கொண்டு வரத் தவறினால், பேசும்படம் என்ற சினிமா புத்தகதைக் கொண்டு வர, ஒரு போதும் அவள் தவறியதில்லை. காரணம் அதில் உள்ள, அழகு பிரகாசமான நடிகைகளின் படங்கள். குறிப்பாக அந்தக் காலத்து நடிகைகளான, பத்மினி, வையந்திமாலா, இவர்கள் அவளின் உலகம் இதை முன்னிறுத்தி அவள் எந்த எல்லைக்கும் போய் வருவாள். உயிர் வெளி என்று ஒன்று இருப்பதையே அறியாத, மகா பேதை அவள். அதனால் தான் படிப்பு அவள் மண்டைக்குள் ஏறவில்லை. அவளை வெற்றிடமே சூழ்ந்திருக்கிற ஒரு ஞான சூனயமாகவே, விஜயலட்சுமி அக்கா கூடக் கணித்து வைத்திருந்தார். ஒருநாள் இது குறித்து அவர் ஒரு அறிவுரை கூட சக்திக்கு சொல்ல நேர்ந்தது.

சக்தி! சினிமா தான் இல்லை, அழகு தான் உமக்கு உலகமென்றால், ஏன் படிக்க வாறீர்? பேசாமால், சினிமா நடிகையாகவே போய் இரும்.

சக்தி இதைக் கேட்டு அவமானத்தால் முகம் சிவந்து குழம்பி வெறித்தது. எனினும் அவளுக்குப் பேச வரவில்லை. அதன் பிறகு அவள் மாறவுமில்லை. அவளின் அழகு பற்றிய வியாக்கியானமும் விமர்சன உரையும் கனதியாகவே வந்து கொண்டிருந்தாள்.

ஒரு நாள் மாதுரி வகுப்புக்குள் வந்தவுடன் அவள் குரலை உயர்த்தி மிடுக்கோடு சொன்னாள்.

மாதுரி! உமக்கு ஒரு புதினம் தெரியுமே? நேற்று எங்கடை மொனிற்றர ஒரு கதை சொன்னவ, இஞ்சை ஆர் முதல் வடிவு தெரியுமே?

ஆர்?

நான் தான் என்று அவ மார்க் போட்டவா இரண்டாம் அழகி ஜெயபுஷ்பராணியாம், மூன்றாவதாய் ஆரைச் சொன்னவ எண்டு மறந்து போச்சு. நீரும் வடிவு தான், ஆனால் கண் பெரிசு, ஆந்தைக் கண் மாதிரி.

இதைக் கேட்டு விட்டு மாதுரி மனம் நொந்து அழவில்லை. உடல் இருப்பு பற்றி நன்றாகவே அறிந்து வைத்திருந்ததனால், அவளின் குரல், அப்பழுக்கற்ற, ஆத்ம சுத்தியோடு தெளிவாகவே ஒலித்தது.

வேறு வேலை இல்லை போய்ப் படியும் சக்தி! நான் படிக்க நிறைய இருக்கு, என்று கூறி விட்டு அமைதியாகிப் போனாள் அவள். எல்லாம் நிச்சலனமாக வெறித்து இருப்பது போல் பட்டது.

அழகான இந்த உலகம் மறைந்து இருட்டு வெறித்த சூனிய இருப்பில் அனாதையாக் கிடந்த, ஓர் ஒற்றைப் பிணம் மட்டும் கண்ணைக் கீறிக் கொண்டு போனது போல் உணர்கையில் அவளுக்கு சிரிப்புத் தான் வந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *