கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: September 11, 2021
பார்வையிட்டோர்: 19,826 
 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

இந்த நேரம் யார்? இப்படித் தட்டுவது?

வீட்டில் இருந்த எங்கள் எல்லோரது மனதுக்குள்ளும் தூண்டி லில் செருகிய புழுவாய் துடித்து நெளிந்து கொண்டிருந்தது இந்த ஒரே கேள்விதான்.

இந்த நேரம் யார்… இப்படித் தட்டுவது…!

போலீஸ் ரிப்போர்ட், அடையாள அட்டை இத்தியாதிகளை மனம் நினைவுபடுத்திக் கொள்கின்றது.

இரவு பத்துப் பதினொரு மணிக்கு மேல், இப்படி ஒரு அதிகாரத் துடன் கேட் ஆட்டப்படுகிறது என்றால் யாராக இருக்க முடியும்.

ஆர்மியாக இருக்கும். அல்லது போலீசாக இருக்கும். அல்லது ஆர்மியும் போலீசுமாக இணைந்து வந்திருக்கும்.

நாங்கள் தயாராகவேதான் இருக்கின்றோம்.

இரவு என்றில்லை, பகல் என்றில்லை. இப்படி வந்து வந்து எங்களை சோதனை செய்வோர் அத்தனை பேருக்கும் அடையாள அட்டைகளையும் போலீசில் பதிந்த துண்டுகளையும் காட்டிக் காட் டியே நாங்கள் களைத்துப் போய்விட்டோம். அலுத்தும் போய்விட்டோம்.

பஸ் லேட் அல்லது ட்ரெயின் லேட் என்று யாராவது உறவி னர்கள் அல்லது நண்பர்கள் இப்படி நேரம் கெட்ட நேரத்தில் வந்து கேட்டைத் தட்டினாலும் முதலில் இந்தக் கடுதாசிகளைத் தேடி வைத்துக் கொண்டு பிறகுதான் கதவைத் திறந்து எட்டிப் பார்ப்போம்.

தமிழர் தம் குடும்ப வாழ்வில் இது ஒரு பண்பாட்டு அம்சமாகி விட்டது இன்று.

நட்பென்றும் உறவென்றும் இப்போதெல்லாம் யார் வருகிறார்கள் நம்மைத் தேடி… அதுவும் இருட்டிவிட்ட பிறகு.

வந்து சேரும்வரை அவர்களுக்குத் தொல்லை… றோட்டில்!

வந்து சேர்ந்தபின் நமக்குத் தொல்லை… வீட்டில்!

தோலிருக்கவே சுளை விழுங்குதல் போல் நாசுக்காக நாங்கள் இப்படித் தனிமைப்படுத்தப்படுவதும் அவர்களுக்கு ஒரு தனியான குஷிதான்.

முன் கதவைத் திறக்கின்றேன்.

வெட்டவெளிபோல் இருக்கின்றது.

பக்கத்து வீட்டுச் சுவர் மூலையில் சாரத்தைச் சுருட்டித் தூக்கிக் கொண்டு இருட்டுக்குள் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுப் பையன் கதவு திறந்த அரவம் கேட்டதும் முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டான்.

பூனை கண்ணை மூடிக் கொள்வதைப் போல. எனக்கு மிகவும் அசௌகர்யமாக இருக்கிறது.

நல்லவேளை எப்போதும் போல், இதுபோன்ற வேளைகளில் நான் முன் கதவைத் திறக்கும்போது எனது தோளுக்கு மேலாக

எட்டிப் பார்க்கும் மனைவி என் அருகே இருக்கவில்லை.

இருந்திருந்தால் “இந்த எழவையெல்லாம் பாக்கணும்னு தலை எழுத்து… செவத்தைக் கட்டுங்க… செவத்தைக் கட்டுங்கன்னு எத்தனை வாட்டி தலையால அடிச்சுக்கிட்டேன்…அதுக்குவக்கில்லை…” என்று எனது பொருளாதார பலவீனப் புண்ணை வார்த்தைகளால் கீறிக் கிளறியிருப்பாள்.

முன்பெல்லாம் கதவைத் திறந்ததும் பக்கத்து வீட்டுக் கூரை மாத் திரமே தெரியும். இப்படியான அடி விஷயங்கள் ஒன்றும் கண்ணில் படாது.

இரண்டு வீடுகளுக்கும் மத்தியில் ஆறடி உயரத்தில் கம்பீரமாக எழுந்து சீனப்பெருஞ்சுவர்போல் நின்ற மதில் மூன்று மாதமாகப் பெய்த தொடர் மழையில் போன மாதம் உடைந்து விழுந்துவிட்டது.

யானை இறந்த கதைதான். உடைந்து கொட்டிய மதிலை அள்ளிக்குவித்து அப்புறப்படுத்தி இடத்தை துப்பரவு செய்யவே ஆயிரத்துக்கு மேல் போய்விட்டது.

போதாதற்கு பக்கத்து வீட்டுக்காரனின் பைசிக்கிள் சிக்கி வளைந்து கிடந்தது.

வீட்டுப்பெண்களின் எதிர்ப்புகளின் மத்தியில் “இது உங்களுக்குத் தேவையில்லாத வேலை” என்னும் வீட்டுச் சொந்தக்காரரின் கேலிக்கு மத்தியில் சைக்கிளையும் சரிக்கட்டிக் கொடுத்தேன். அதற்கொரு எண்ணூற்றுக்கு மேல் ஆயிற்று… என்ன செய்வது?

தென்னைக்குத் தண்ணீர் ஊற்றியதாக எண்ணிக் கொண்டேன். அதற்குப் பிறகு இப்படித்தான்.

முன்கதவைத் திறந்தால் பக்கத்து வீட்டுச் சில்லறைச் சமாச்சா ரங்கள் ஏதாவதொன்று நேராக முகத்தில் அடிக்கும்.

ஓவென்று திறந்து விடப்பட்ட மைதானம் மாதிரி!

அந்தரங்கம் பறிபோய்விட்ட ஒரு அசௌகரியம் எங்களை உலுப்பி எடுக்கின்றது. ஓட்டுக்குள்ளேயே சுருங்கிவிடும் ஊரிகள் போல் வேலி களுக்குள்ளேயே வாழ்ந்து பழகிவிட்ட அந்தப் பண்பு.

இழக்கக்கூடாத ஏதோவொன்றைப் பெரிதாக இழந்து விட்ட தைப் போல….

றோட்டில் திரியும் நாய் ஒன்று பக்கத்து வீட்டுக்குள்ளாக வந்து உடைந்த மதில் வழியாக எங்கள் தோட்டத்துக்குள் நுழைந்து சமயல றைப் பக்கமாக எதையாவது தேடித்தின்று, கதவு திறப்படும் சத்தம் கேட்டதும் காதைத் தூக்கியபடி விறைத்து நின்று பார்த்து உறுமி விட்டுப் பிறகு ஓடிவிடும்.

தெருவில் திரியும் நாய் கூட உள்ளே வந்து உறுமுகிறதே என்னும் தாழ்வுச் சிக்கல்.

எதையும் எதிர்கொள்ள மனமின்றி ஒதுங்கியே இருந்துவிட்ட பழக்கம். பக்கத்துவீடு சிங்களம். அன்றாடம் காய்ச்சிகள் வேறு. எங்கே சுவர் உடைந்துவிட்ட சுகத்தில் அத்துமீறி உள் நுழைந்து உறவு கொண்டாட வந்து விடுவார்களோ என்னும் அச்சம் வேறு. இருந்த மதில் அவர்களை பிரித்தும் வைத்திருந்தது! மறைத்தும் வைத்திருந்தது!

பாஸ் ஒருவனைக் கூட்டிவந்து பார்க்கச் சொன்னேன். அளந்தான், நின்றான், நிமிர்ந்தான். “அடுகான… தாஹட்டக்வத் யய்…!” என்றான். கப்சிப் என்றாகி விட்டது.

பதினெட்டாயிரத்துக்கு நான் எங்கே போக?

வீட்டுக்காரரோ… “இப்போது எங்கே இருக்கிறது அவ்வளவு பெரிய தொகை? நீங்கள் வேண்டுமானால் கட்டிக் கொள்ளுங்கள். வாடகையில் கழித்துக் கொள்ளலாம்!” என்று கூறிவிட்டார்.

பக்கத்துவீட்டுச் சுவர் மூலையில் சாரத்தை உயர்த்தியபடி இருட் டுக்குள் நின்றவனை பார்க்காததுபோல் பாவனை செய்து கொண்டு முன்பக்கம் திரும்பி கேட்டை நோக்கினேன்.

கேட்டுக்கு மேலாக இருட்டுக்குள் ஏழெட்டு இரும்புத் தொப் பிகள் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தன.

எனக்குத் திடீரென்று ஒரு ஞானோதயம் பிறந்தது.

நூல் விற்கவரும் பதுளைக்காரர் முன்தினம் கூடக் கூறினார்.

“ஐயா ஜாக்கிரதையாய் இருங்கள்…. யாராவது கதவைத் தட்டி னால் தொறந்துறாதீங்க… உள்ளுக்கு வந்தப்பறம் உங்களுக்கே வேலை யைக் குடுத்துறுவானுக..! போன கிழமை இப்படித்தான் எங்க வீட்டுப் பக்கம் ஒரு வீட்டில், கேட்டத் தட்டி போலீஸ்ன்னு கூறி உள்ளே நொழைஞ்சிருக்கானுக… வீட்டுல இருந்த அத்தனை பேரையும் கட்டிப் போட்டுட்டு ஒன்னுவிடாம கொள்ளையடிச்சிட்டானுக…. வீட்டுக் காரரூட்டு வேன்லேயே அத்தனை சாமான்களையும் ஏத்திக்கிட்டு வீட்டுக்காரரையே ஓட்டவும் சொல்லி வசதியான ஒரு இடத்தில் எறங்கிக்கிட்டு வேனைத்திருப்பி அனுப்பி இருக்கானுக. அவராலை என்ன செய்ய முடியும். நம்ம நெலமை அப்படி… அதுனால அய்யா வும் கவனமாக இருங்க…”

கேட்டுக்கு வெளியே இருட்டுக்குள் மிதந்த தொப்பிகள் தாங்கள் பட்டாளத்துக்காரர்கள் தான் என்பதை சத்தியம் செய்து கொண்டி ருந்தன.

“நீங்கள்…”

“பார்த்தால் தெரியவில்லை… இன்னும் கொஞ்சம் விட்டால் ஐடென் டிட்டி கார்ட் கேட்பாய் போலிருக்கிறதே…. ம்… ம்… கேட்டைத்திற…” என்று தடித்த குரலில் கடித்தான் ஒருவன்.

இவர்களிடம் எப்படி “நீங்கள் நிஜப்போலிஸா இல்லை போலிப் போலிஸா என்று கேட்பது? பார்த்தால் ஆர்மிக்காரர்கள் போலவும் இருக்கிறது. ஜீப் வேறு நிற்கிறது… மிகவும் குழம்பிக் கொள்கிறேன்.

“திறக்கப் போகின்றாயா அல்லது நாங்களே பலவந்தமாக உள்ளே வரவா” என்று அதட்டினான் ஒருவன்.

“உள்ளே ஏதோ நடக்கிறது போல் இருக்கிறது. அதுதான் அவன் நம்மை கேட்டுக்கு வெளியே தாமதப் படுத்துகின்றான்” என்று யூகம் சொன்னான் இன்னொருவன்.

“இருக்கும்… இருக்கும், ஒளித்து வைத்திருக்கும் ‘கொட்டி’களை பின் பக்கமாக அப்புறப்படுத்திவிட்டு அப்புறமாகத் திறக்கலாம் என்றிருப்பார்கள்… அப்பி பணிமு…” என்று கூறியபடி சுவரில் தாவ முயல்கின்றான் ஒருவன்.

நானாகவே கேட்டைத் திறக்காவிட்டாலும் அவர்களாகவே சுவறேரிக் குதித்து உள்ளே வந்துவிடுவார்கள் போல் இருந்தது. அப்படி ஏதும் நடக்க விட்டால் உள்ளே வந்ததும் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள். ஆகவே நானாகவே கேட்டைத் திறந்து அவர்களை உள்ளே எடுப்பதே உசிதமானது என்று எண்ணிய படி….

“நே… நே… ஏம மொக்குத் நே…… கௌத கியல அப்பித் தென கண்ட ஓன நே…” என்று எனக்குச் சிங்களமும் நன்றாகப் பேச வரும் என்பதையும் சுட்டிக் காட்டி கொஞ்சம் போல் அவர்களுடைய அனுதா பத்தைப் பெற்றுக் கொள்ளும் உத்தியுடன் பூட்டைத்திறக்கின்றேன்.

திறந்து முடிப்பதற்குள் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்த அவர் களது காட்டுமிராண்டித்தனம் என்னுடைய சிங்களம் அவர்களுடைய அனுதாபத்தைப் பெறத் தவறிவிட்டது என்பதைக் காட்டியது.

உள்ளே நுழைந்தவர்கள் இரண்டு மூன்றாகப் பிரிந்து வீட்டைச் சுற்றி ஓடினார்கள். பிறகு உள்ளே நுழைந்து ஒவ்வொரு அறையாக நுழைந்து நுழைந்து வெளியே வந்தார்கள்.

“எத்தனை பேர் இருக்கின்றீர்கள்… சொந்த ஊர் எது… அடையாள அட்டை இருக்கிறதா… போலீஸில் பதிந்த துண்டு இருக்கிறதா…” போன்ற வழமையான கேள்விகளைக் காணவில்லை. சாப்பாடு மேசையைச் சுற்றி இருந்த கதிரைகளில் எங்களை ஒவ்வொருவராக வந்து அமரச் சொன்னார்கள்.

நீட்டிய துப்பாக்கிகளுடன் இருவர் மேசையிடம் காவல் நின்றனர். மற்றவர்கள் அறைக்குள் நுழைந்தனர்.

எதையோ தேடினார்கள். பிறகு திரும்பிவந்து “வேறு ஆட்கள் யாரும் இல்லையா….கட்டிலினடியில் அலுமாரிகளுக்குள்…யாரை யாவது ஒளித்து வைத்திருக்கிறீர்களா…?”

“இங்கே புலிகள் வந்திருப்பதாகவும் நீங்கள் அவர்களுக்கு அடைக்களம் கொடுத்து ஏதோ சதித்திட்டம் போடுவதாகவும் எங்களுக்கு கம்பிளேய்ண்ட் வந்திருக்கிறது”

“இரவுகளில் சந்தேகத்துகிடமான விதத்தில் ஏதேதோ நடப்பதாக இங்குள்ள மக்களே எழுதியிருக்கின்றார்கள்”

“கோப்றல் அற சார்ஜ் ஷீட்டெக்க கேண்ட” என்று ஒருவனிடம் பணித்தபடி கேட்டான்.

“நீங்கள் இத்தனை பேர் தானா… வேறு யாரும் இல்லையே..?”

நடு இரவில் இப்படி வந்து தமிழர் வீடுகளை சோதனை இடும் போது எங்கோ ஒரு வீட்டில் வசமாக வாங்கிக் கட்டிக் கொண்ட அச்சம் அவனுடைய வினாவின் உச்சமாக இருந்தது

“வேறு யாரும் இல்லை. நாங்கள் ஆறுபேர் மட்டும்தான்” என்றேன் எரிச்சலுடன் .

“வெரிகுட்… நீங்களும் ஆறுபேர்…நாங்களும் ஆறுபேர்… ஆனால் ஒரு வித்தியாசம். நாங்கள் எல்லோரும் ஆண்கள் ! இங்கே ஐந்து பெண்கள் ! ஆறுபேருக்கு ஐந்து பெண்கள் போதாதுதான் …!”

அவனுடைய பேச்சின் திசை என்னைக் கோபம் கொள்ளச் செய்தது.

“நீ என்ன பேசுகின்றாய்..?” என்றபடி கோபமாக எழுந்தேன்.

“ஆணின் பாஷையில்தான் பேசுகின்றேன்! எங்கள் ஆறுபேருக்கு இந்த ஐந்து பெண்கள் போதாது என்று. ஆனால் உன்னைப் பிடித்துக் கொள்ள ஒருவன் வேண்டும் என்பதால் ஐவருக்கு ஐவர்தான்….” என்றபடி கைகளைப் பின்புறமாகத் திருகிப் பிடித்துக் கொண்டான்!

கறுத்த அவனது கைத்துப்பாக்கி எனது கழுத்தில் அழுந்திக் கொண்டிருந்தது.

இதை சற்றும் எதிர்பார்க்காத பெண்கள் விருட் விருட்டென்று எழுந்து நின்றனர்.

மேசையைச் சுற்றி நின்ற இருவரில் ஒருவன் எனது மனைவியின் பின்னால் நின்று கொண்டிருந்தான். விருட்டென எழுந்த அவளது தோளைப் பிடித்து அழுத்தி கதிரையில் அமர்த்தியபடி மற்றப் பெண்களையும் அமரச் சொன்னான்.

அவன் கையிலிருந்த துப்பாக்கிமுனை மனைவியின் மார்பில் தடவிக் கொண்டிருந்தது.

எனது துடிப்பின் ஆக்ரோஷம் அவன் பிடிக்குள் இருந்த எனது கரங்களின் திமிர்ச்சியில் தெரிந்திருக்க வேண்டும். கைத்துப்பாக்கி சற்றே ஆழமாகக் கழுத்தில் அழுத்தியது.

“எல்லோரும் ஜாக்கிரதையாக இருங்கள். யாராவது கத்த முயன்றால் இவன் தொலைந்தான்… தெரிகிறதா..!?” என்றான்.

கம்பிளேய்ண்ட் ரிப்போர்ட் எடுத்து வரச் சென்றவன் ஒரு கயிற்றுக் கட்டுடன் உள்ளே வந்தான்….. முன் கதவை மூடிப் பூட்டினான். ஒருவரும் மூச்சுவிடக் கூடாது. அமைதியாக இருந்து ஒத்துழைத்தால் உங்களுக்கும் நல்லது. எங்களுக்கும் நல்லது…. என்றபடி நேராக மேசையிடம் வந்து அம்மாவின் பின்னால் நின்று கொண்டான்.

அவன் ஏன் அப்படி அவ்வளவு நெருங்கி நிற்க வேண்டும்.

அம்மாவுக்கு எத்தனை வயதாகிறது! ஐம்பதுக்கும் மேலல்லவா. ஆனால் தோற்றம் அப்படியா தெரிகிறது. இன்னும் ஒரு வாலிபப் பெண்ணைப் போல! எனது மகளுடன் பாதையில் நடக்கும் போது பார்க்கிறவர்கள் பாட்டியும் பேத்தியும் என்றா நினைப்பார்கள். அம்மாவும் பிள்ளையும் என்றுதான் நினைப்பார்கள். அப்படி ஒரு உடல்வாகு, அப்படி ஒரு அழகு.

எங்கள் குடும்பத்துக்கு இது ஒரு கொடையா? அல்லது கொடுமையா? அவன் அம்மாவை உரசியபடி நிற்கின்றான். அம்மா நெளிகின்றார்கள்.

முறுக்கிப் பிடித்துள்ள எனது கைகள் துடிக்கின்றன. கழுத்தில் துப்பாக்கி அழுத்திக் குத்துகிறது.

ஆண்டவனே எங்களைக் காப்பாற்று மனதால் கத்தியதும் புராணங்களில் வருவதுபோல் விரல் நுனியில் சுழலும் தர்மசக்கரத்துடனும் ஓங்கிய வாளுடனும் ஓடிவந்து காப்பாற்ற தேவதூதர்களா இருக்கின்றார்கள்?

நாங்கள்தான் ஆண்டவர்கள்… நாங்களே எங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியதுதான்.

சமையல் அறைக்குள் ‘தடாபுடா’ என்று ஏதோ உருளும் சத்தம் கேட்கிறது.

அது வானதூதன் அல்ல என்பது எங்களுக்குத் தெரியும்.

புகைபோக்கி வழியாக உள்ளே குதிக்கும் பக்கத்து வீட்டு கொழுத்த பூனை அது! ஆனால் அவர்கள் உசாரானார்கள். உள்ளே யாரோ இருப்பதாகப் பதட்டப்படுகின்றார்கள்.

“மியாவ்” என்ற சத்தத்துடன் சமையல் அறையின் உள்ளிருந்து ஓடி வந்த பூனை ஒரு விநாடி திகைத்து நின்றது. மறுவிநாடி கதறிக் கொண்டு எகிறி விழுந்து… ஒருமுறை சுருண்டு விரிந்து… பிறகு செத்து விரைத்தது….!

விலகிய துப்பாக்கியை மறுபடியும் கழுத்தில் அழுத்தியபடி “வெடி சத்தம் ஏதாவது கேட்டதா….பார்த்தீர்கள்தானே. அப்படித்தான் சத்தமே கேட்காது. ஆனால் இவன் சுருண்டு விழுந்து விடுவான் அந்தப் பூனை மாதிரி…. ஆகவே ஜாக்கிரதையாக இருங்கள். சத்தம் காட்டாமல் அமர்ந்திருங்கள்….” என்றான் அவன். அல் அமர்ந்திருக்கும் அவர்களைப் பார்க்க எனக்கு பரிதாபமாக இருக்கிறது. அம்மா, மனைவி, மகள், தங்கை, மனைவியின் சகோதரி என்று அத்தனை பேரும் பெண்கள். திமிரி நிற்கும் கூந்தலும், சீப்புமாக, பூத்துக்குலுங்கும் மலர்த்தோட்ட நடுவில் நிற்கும் பெண்களைப் போல துப்பாக்கியும் தாங்களுமாகத் திமிர்விட்டுக் கொண்டு நிற்கும் இத்துட்டர்கள் மத்தியில் இவர்கள் பூந்தோட்டத்து மலர்களைப் போல

எப்போது பறிப்பேன் எப்போது சூடுவேன் என்னும் அதே நினைவுடன் இத்துட்டர்கள்!

எனக்கென்றால் பயமே இல்லை. என்னை என்ன செய்துவிட முடியும் இவர்களால்!

கொன்று விடமுடியும்… அவ்வளவு தானே…!

ஆனால் நான் பயப்படுவதெல்லாம் இவர்களுக்காகத்தான். இந்தப் பெண்களுகக்காகத்தான். இழந்துவிட இவர்களிடம் உயிர் மட்டுமா இருக்கிறது!

பேப்பர்களில் தீவிரமாக பெண்ணியம் பேசுகிறவர்கள் வேண்டுமென்றால் “இழப்பதற்கு இவர்களிடமும் உயிர் மட்டும் தான் இருக்கிறது” என்று எண்ணலாம். என்னால் அப்படி எண்ண முடியவில்லை.

கைகளில், காதுகளில், கழுத்தில் கிடக்கும் நகைகளை வேண்டு மென்றால் இழக்கட்டும்…ஆனால்… “கடவுளே கருணை காட்டு…” என்று மன்றாடுகிறேன்.

நாங்களே ஆண்டவர்கள். நாங்களே எங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று எண்ணியது எத்தனை மடத்தனமானது.

நாங்கள் ஆண்டவர்கள் இல்லை. என்பது மட்டுமல்ல. ஆளுகிறவர்கள் கூட இல்லைத்தான்.

மூக்கை விட்டு, ஐந்து பெண்களின் அதரங்களிலும் வாயை மறைத்து வெள்ளையாகப் பிளாஸ்டர்களை ஒட்டுகிறார்கள். கதிரையுடன் சேர்த்துக் கட்டி வைக்கிறார்கள்.

ஒன்றுமே செய்ய முடியாத ஒரு கொடுமைக்குள் நான் சித்தரவதைப்படுகின்றேன்.

“ம் ம்… என்னுடன் வா” என்று என்னை உள்ளே அழைத்துப் போகின்றான் அவன்.

அல்மாரியைத் திறக்கச் சொன்னான். கூடவே வந்த இன்னொருவன் உள்ளே இருப்பவற்றை இழுத்திழுத்து வீசுகின்றான். கிண்டிக் கிளறி உதறுகின்றான். என்னைப் பிடித்திருப்பவனோ கழுத்தில் அழுத்திய துப்பாக்கியை எடுப்பதாக இல்லை.

“போலீஸ் ரிப்போர்ட் தேடுகின்றேன் என்று நினைத்தாயா? பொக்கிஷத்தைத் தேடுகின்றோம்… பணத்தை…காசை… தங்க நகைகளை!” என்றான்.

“காசு இல்லாவிட்டால் என்ன செய்வீர்கள்” என்றேன்.

“அந்தப் பூனையைப் போல்தான் ஆவீர்கள். மரியாதையாக இருபபவற்றைக் கொடுத்துவிட்டால் பேசாமல் போய்விடுவோம். உயிருடன் இருந்தால் மீண்டும் சம்பாதித்துக் கொள்ளலாம்…”

அவன் சொல்வதிலும் ஓரளவு நியாயம் இருக்கவே செய்கிறது!

லொக்கரைத் திறந்தேன். காட்டினேன். எடுத்துக் கொள்ளச் சொன்னேன். அப்படியே வழித்து ஒரு பையில் கொட்டிக் கொண்டான் . நூல் விற்க வந்த கிழவரே என் மனக்கண் முன் வந்து வந்து போனார்.

“நகைகள்” என்றான்.

“என்னுடன் வா…” என்றவாறு அம்மாவும் மற்றவர்களும் படுக்கும் அறைக்குச் சென்றேன்.

கூடத்தைக் கடந்து செல்கையில் உட்கார வைத்திருக்கும் பெண்களையும் காவல் நிற்கும் துஷ்டர்களையும் கவனித்துக் கொண்டேன்.

பட்டபகலில் கூட பஸ்களில் நிற்பதுபோல பெண்களை நெருக்கிக் கொண்டு யாரும் நிற்கவில்லை.

கருமமே கண்ணாக நின்ற அவர்களின் நிலை எனக்குத் திருப்தி தந்தது. அல்மாரியைத் திறந்து காட்டினேன். அப்படியே வழித்துப் போட்டுக் கொண்டார்கள்.

கண்களுக்குள் மின்னலடிக்கும் நாலைந்து பட்டுச் சேலைகளையும் உருவிச் சுருட்டிப் போட்டுக் கொண்டார்கள். சேலைகள் பற்றியும் நன்றாகவே தெரிந்திருக்கிறது அவர்களுக்கு. விலை மதிப்புள்ள வைகளையே சுருட்டி எடுத்துக் கொண்டனர். என்னையும் இழுத்துக் கொண்டு மறுபடியும் ஹோலுக்கு வந்தார்கள்.

ஏதோ கண்ணால் பேசிக் கொண்டார்கள்.

எனக்குப் பயமாக இருந்தது. என் கண் முன்னாலேயே துரியோதன துச்சாதன செயல்களில் இறங்கி விட்டார்கள் என்றால்…மிகவும் சங்கடப்பட்டேன். ஆனால் அப்படியொன்றும் நடக்கவில்லை. பெண்களின் கழுத்தில், கையில் இருந்தவைகள் பற்றித்தான் அந்தச் சமிஞ்சைகள்.

“நானே கழட்டித் தருகின்றேன்” என்றேன்.

“ஏன் உங்கள் பெண்கள் மேல் எங்கள் கைகள் பட்டுவிடக் கூடாதோ…கழுத்தில் மட்டுமில்லை ஓய்…” என்று பேசத் தொடங்கியவனை உதட்டின் மேல் விரல் வைத்து “வாயை மூடிக் கொண்டு இரு” என்று சாடை காட்டினான் என்னருகே நின்றவன். என்னைப் பார்த்துத் தலையை ஆட்டினான்.

அம்மாவின் கழுத்திலிருந்து, கையிலிருந்து, காதிலிருந்து கழற்றிக் கழற்றி நீட்டினேன்.

எல்லா நகைகளையும் நான் ஒவ்வொன்றாகக் கழற்றி அவர்களிடம் நீட்டியபோது ஒரு கற்சிலைபோல் இருந்தவள் கழுத்தில் கை வைத்ததும் கண்ணீர் நிறைந்த கண்களுடன் என்னைக் கெஞ்சினாள்.

“தாலிக் கொடியை மட்டும் விட்டு விடவா…..” என்று வினவினேன். “நோ… நோ… அதுதான் முக்கியம்” என்றான் .

“தமிழ்ப் பெண்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பதே அதைத்தானே” என்றான். எனக்கு வேறு வழி தெரியவில்லை . பார் “ஐந்து பவுண்… ஏழு பவுண்…ஒன்பது பவுண் என்று கூட்டிக் கூட்டிக் கட்டிக் கொள்ளும் உங்களுக்கு இது வேண்டும்.” என்று எரிச்சல் பட்டுக் கொண்டேன்.

கொடி கைமாறியது!

என்னையும் ஒரு கதிரையில் அமரச் செய்தான். வாயில் பிளாஸ் டரை ஒட்டினான். கைகளைப் பின்புறமாகச் சேர்த்து நாற்காலியுடன் கட்டினான். “நாங்கள் போனபிறகு மெதுமெதுவாக் கட்டவிழ்த்துக் கொள்ளுங்கள்….” என்றபடி கிளம்பினார்கள்.

சப்தம் கேட்காத துப்பாக்கியால் முடித்துவிட்டுப் போகாமல் உயிருடன் விட்டுவிட்டுப் போகிறார்களே என்று நான் மகிழ்ந்து கொள்ளும்போது எனது தங்கையை முத்தமிட முயற்சிக்கின்றான் ஒருவன்.

முகத்தை அங்குமிங்கும் திருப்பி அவள் திமிற அவன் முயற்சிகள் அந்தப் போராட்டத்தில் கதிரை புரண்டு கீழே விழ முன்னால் நடந்து கொண்டிருந்தவன் திரும்பிவந்து “வறேம் பாங்…” என்று அவனை இழுத்துக் கொண்டு போனான்.

“மூ கேனு பிஸ்ஸெ….” என்று கோபப்பட்டான் இன்னொருவன்.

மூட்டையும் முடிச்சுமாக அவர்கள் பூட்டிக் கிடந்த முன் கதவைத் திறந்ததுதான் தாமதம்…..சினிமாத் தியேட்டரில் இருட்டுக்குள் திரைநோக்கி ஒளி வெள்ளம் பாய்வதுபோல் கண்களைக் கூச வைக்கும் வெளிச்சம் ‘டக்’கெனப் பாய்ந்தது.

பிரமாண்டமான ஒளிக்கற்றை திடீரெனப் பாய்ந்ததால் திடுக்கிட்டு திக்குமுக்காடிப்போன போலி ஆமிக்காரர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டது போலீஸ் கூட்டம். எங்களை நோக்கி பரிதாபத்துடன் ஓடிவந்த பக்கத்துவீட்டு சுதுமாத்தியா எனது கட்டுக்களை அவிழ்த்து விட்டபடி.

“உள்ளே ஏதோ நடக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட நான் மெதுவாக இந்தப் பக்கம் வந்தேன். சுவரும் இல்லைத்தானே. தாண்டி வர லேசாக இருந்தது. வந்திருப்பவர்கள் திருடர்கள் என்பது தெரிந்து விட்டது. கதவைத் தட்டினால் உங்கள் உயிர்களுக்கு ஏதும் ஆபத்து வரலாம் என்ற பயத்தில் முன்வீட்டு றோயையும் அடுத்தவீட்டு சுனிலையும் எழுப்பிக் கூட்டிவந்து, எனது மனைவியையும் உசார் படுத்தி இருட்டுக்குள் நிறுத்தி விட்டு போலிசுக்கு ஓடினேன். நல்ல வேளை எனது சைக்கிளையும் சரிபண்ணிக் கொடுத்தீர்கள்…” என்று பேசியவாறு எனது வாயில் ஒட்டப்பட்டிருந்த பிளாஸ்டரைக் கழற்றினான்.

இடுப்பில் தொங்கும் குழந்தையுடன் மெதுவாகத் தயங்கித் தயங்கி பெண்களை நோக்கி வருகின்றாள் அவன் மனைவி.

பிளாஸ்டர் கழற்றப்பட்ட பிறகும் எனக்குப் பேச நா எழ வில்லை. பேசுவதற்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.

(இனவிவகார நல்லிணக்க அமைச்சு “நிலையான இன ஒற்றுமையை வலியுறுத்தல்” என்னும் தொனியில் நடத்திய அகில இலங்கைச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற சிறுகதை. ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு இனவிவகார நல்லிணக்க அமைச்சு வெளியிட்டுள்ள “ஒரு தாய் மக்கள்” என்னும் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.)

– ஞானம் 2001.

– தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2014, பாக்யா பதிப்பகம், ஹட்டன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *