சுந்தரி சொன்னாள் ஒரு சேதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 26, 2024
பார்வையிட்டோர்: 348 
 
 

(2017ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“கீதா மேடம்…”

“என்ன வேணும் சொல்லும்மா சுந்தரி.”

“மேடம் ஒங்களெப் பாத்தா எனக்குப் பொறாமையா இருக்கு மேடம்.

“என்னெப் பாத்து பொறாமெப் படுற மொத ஆளு நீ தாம்மா. எனெக்குக் கூடதான் ஒன்னெப் பாத்தா பொறாமையா இருக்கு என்ன அழகு பேருக்கு ஏத்தாப்புளே, என்ன கலரு, எப்பிடி ஒடெம்பெ ஸ்லிம்மா வெச்சிண்டு இருக்கா பாரூன்னு. நீ சொல்லு என்னெப் பாத்து எதுக்குப் பொறாமெப் படுறே?”

“நீங்க கொடுத்து வெச்சவங்க மேடம்.”

“நான் யாரு கிட்டெயும் எதுவும் குடுத்து வைக்கலெ யேம்மா. புதிரு போடாமெ நேரா விஷயத்தெச் சொல்லு.”

“போன வாரம் நான் சென்னை பாக்கணும்னு சொன்னேன்னு கூட்டீண்டு போனீங்க இல்லியா?’

“ஆமாம் அதுக்கென்ன இப்போ? ஒன்னெ மட்டும் கூட்டிண்டு போகலையே. இன்னும் ரெண்டு பேரை சேத்துதானே கூட்டிண்டு போனேன்.”

“ஒங்க அப்பா அம்மா விட்டுலெ தங்க வெச்சீங்க இல்லே.”

“ஆமாம். அவுங்களுக்கு வீடு இருக்கு அங்கெ. அதுனாலெ ஒன்னெயும் கூட வந்த இன்னும் ரெண்டு பொண்ணுங்களையும் எங்கூட தங்க வெச்சிண்டேன்.”

“ஒங்க அப்பா அம்மவெப் பாத்தாலும் பொறாமையா இருக்குங்க மேடம்,” “போச்சுடா. மொதலுலெ எம்மேலே பொறாமையா இருக்கூன்னே. இப்போ என்னோட அப்பா அம்மா மேலெ பொறாமையா? பொறாமெப் படறதுக்கூன்னே பொறந்த ஜென்மமா நீ?”

“கிண்டலடிக்காதீங்க மேடம். என் மனசுலெ இருக்குற துக்கத்தெ யாரு கிட்டெயாவது கொட்டி ‘ஓ’ ன்னு ஒரு கொரல் அழணும் போல இருந்தீச்சு அதான்….”

“சாரீம்மா சுந்தரி. நீ சொல்ல வந்ததெச் சொல்லு.’

“மேடம் ஒங்க வீட்டுலெ போய் இறங்கினதும் என்னாச்சு?” “நாம காரெ விட்டு இறங்கினதும் மொத மாடி ஃப்ளேட்டுலெ இருக்குற ஒங்க அப்பா என்ன பண்ணாரு?”

“என்ன பண்ணாரு”

“வாசக் கதெவெத் தெறந்து வெச்சுக்கிட்டு. வாசல் வெராண்டாவுலேயே நின்னுக் கிட்டு இருந்த அவரு வாம்மான்னு சிரிச்ச மொகத்தோட நம்ம எல்லாரையும் வரவேத்தாரு. ஒங்க அம்மா என்ன பண்ணாங்க?”

“என்னம்மா இத்தெனெ நாழியாயிடித்து? வண்டி லேட்டா? சரி கை காலெ அலம்பிண்டு சாப்பிட வாங்கோன்னாங்க.”

“இதுக்குப் போயி என் மேலெயும் அவுங்க மேலெயும் ஏன் பொறாமெப்படணூம்?”

“சொல்றேன் மேடம். மறு நாளு என்னாச்சு?”

“நாம ஊர் சுத்திப் பாக்கப் போனோம்”.

“கெளெம்பற போது அப்பா என்ன சொன்னாரு?”

“என்ன சொன்னாரு?”

“எங்கெ போறதா இருந்தாலும் நாலு பேரும் ஒண்ணாப் போங்கோ. செல் போனுங்களே கையிலெ வெச்சுக் கிட்டோ அல்லது அதுலெ பேசிக் கிட்டோ நடந்து போயீட்டு இருக்காதீங்கோ. ஹேண்ட் பேகும் பத்திரமா வெச்சுக் கோங்கோன்னாரு. கூடவே நடந்து வருவாங்க சில பேரு. நீங்க அசந்த சமயம் பாத்து செல் போனையோ இல்லெ ஹேண்ட் பேகையோ புடுங்கீட்டு ஓடீடுவாங்க. சங்கிலியெ அறுத்துக் கிட்டு போறவங்களும் உண்டு. அதுனாலே தான் அப்பா அப்பிடி சொன்னாரு. “இது எல்லார் வீட்டுலெ இருக்குற பெரியவங்களும் சொல்றது தானேம்மா?”

“சரி அதெ உடுங்க மேடம். நாம் ஊரு சுத்தினப்போ எத்தினி வாட்டி போனு பண்ணாரு ஒங்க அப்பா? அப்பொ அவரு என்ன கேட்டாரு? காபீ டீ எதுனா குடிச்சீங்களா? டிபன் சாப்டீங்களா? அடிக்கடி தண்ணியோ ஜூசோ குடிங்க. மதிய உணவு சாப்டீங்களா? எப்பொ கெளம்புவீங்க மகாபலிபுரத்துலேந்து? அப்பொப்பொ போனு பண்ணிக் கிட்டு இரும்மான்னு சொன்னரில்லெ?”.

“அது சரி அவரு பேசினது என்னான்னு ஒனக்கெப்படித் தெரியும்?”

“நீங்க சொன்ன பதிலுங்களுலெ இருந்து தான் மேடம்.”

“ஒங்க அப்பா அம்மா இப்படி இருக்க மாட்டாங்களா?”

“இதுலெ நூத்துலெ ஒரு பங்கு இருந்தாக் கூட நான் சந்தோஷப் படுவேங்க. அவுங்களே அப்பா அம்மான்னு சொல்லிக்கவே வெக்கமா இருக்குங்க மேடம்.”

“அப்பிடி என்ன கொடுமை பண்ணீட்டாங்க அவுங்க?”

வந்த அழுகையை அடக்கிக் கொண்டு, “ஒண்ணா ரெண்டா மேடம்? சொல்றேன் கேளுங்க” ஆரம்பித்தாள் சுந்தரி தன் சோகக் கதையை.

“நான் பி.டெக். முடிச்சதும் மாலெத் தீவுக்குப் போனேன் வேலைக்கு. அங்கெ ரெண்டு வருசம் வேலெ செஞ்சேன். மாசா மாசம் வீட்டுக்கு நெறெய பணம் அனுப்புவேன். அதுலெ வீட்டு செலவு போக மிச்சத்தெ பேங்குலெ டெபாசிட்டா போட்டு வையுங்கன்னு சொல்லுவேன்”.

“ஒன் செலவும். வீட்டு செலவும் போக பேங்குலெ டெபாசிட்டும் போடும்படியா இருந்துதுன்னா நெறெயவே தான் சம்பாதிச்சிருப்பே. அந்த வேலெயெ ஏன் உட்டூட வந்தே?”

“எங்கூட வேலெ செய்யுறவங்க எங்கிட்டெ நடந்துக்கிட்ட விதமும், எனக்கு அங்கு கெடெச்ச சாப்பாடும் புடிக்கலே. அதுனாலே அந்த வேலையெ உட்டூட்டேன். திரும்பி வந்து எம்.சி.ஏ. படீக்க சேந்தேன். உடனே அப்பா அம்மா ஆரம்பிச்சூட்டாங்க எனக்குக் கல்யாணம் பண்ணனும்னு. எவ்வொளோ சொல்லியும் கேக்காமெ எனக்குக் கல்யாணமும் பண்ணி வெச்சூட்டாங்க.”

“ஒனக்கு நல்லது பண்ணணும்னு தானே அப்பிடி செஞ்சாங்க?”

“நல்லது பண்ணணும்னா? அன்னிக்கி புடிச்சிது என் வாழ்க்கைலெ சனியன். என்னெக் கல்யாணம் பண்ணிண்டவன் என்ன படிச்சிருக்கான், எங்கெ வேலெ செய்யுறான் எதுவுமே விசாரிக்காமெ, அவனோட அப்பா அம்மாக்கு நெலமிருக்கூன்னு எனக்கு அவனெக் கட்டி வெச்சூட்டாங்க. தினோம் நாள் பூரா எங்கெயாவது சுத்தீட்டு, குடிச்சூட்டு ராத்திரி பத்து பதினோரு மணிக்கு வருவான், வந்ததும் கர கரன்னு என்னெ படுக்கெ உள்ளுக்கு இழுத்திண்டு போயி, கொடூர பாலியல் வக்ரம் எத்தினி உண்டோ அத்தனையும் செய்வான்.

படிக்கவே உட மாட்டான் என்னெ. அதுனாலெ அது வரெயிலும் க்ளாசிலெ மொத இடத்துலெ வந்துண்டு இருந்த நான் ஃபைனல் எக்சேம்லெ ஒரு சப்ஜெக்ட்டுல பெயிலாயிட்டேன். அதெ என் கூடப் படிச்சவங்களாலெ நம்பவே முடீலெ. இதுலெ கர்ப்பமும் ஆயிட்டேன். பிரசவத்துக்கு எங்க வீட்டுக்கு வந்த போது மறுபடி படிச்சு, பரீட்சை எழுதிப் பாஸ் பண்ணேன்.”

“அப்புறம் என்ன? பாஸ் பண்ணீட்டே இப்போ நல்ல வேலேலெயும் இருக்கே. இன்னுன் என்ன வேணும்?”

“கீதா மேடம் நான் இன்னும் என் கதெயெ முடிக்கலே மேடம். என் பையனுக்கு எட்டு மாசம் இருக்கும். ஒரு நாளு வெளிலெ போயிட்டு வீடு திரும்பினா கொழெந்தெயெக் காணும். கேட்டதுக்கு அப்பா சொன்னாரு அது எங்கெ போய்ச் சேரணுமோ அங்கெ சேத்தூட்டேன். நீயும் போய்ச் சேருன்னு. இடிஞ்சு போயிட்டேன். ஆனாலும் போகமுடியாதுன்னு பிடிவாதமா சொல்லீட்டேன். தினோம் நீ கெளெம்பிப் போ கெளெம்பிப் போ. நீ போகலேன்னா நான் எப்படி உன் தங்கெய்க்குக் கல்யாணம் பண்ணுவேன்? ஒன் தம்பிக்கு யாரு பொண்ணு குடுக்க வருவாம்பாங்க அப்பாவும் அம்மாவும்.

ஒரு நாளு அப்பாவெக் கேட்டேன், “அச்சா நான் பேங்க் எக்சேம் எழுதலாம்னு இருக்கேன். அதுக்கு கோச்சிங் கிளாசுலெ சேரணும். ஒரு ஐயாயிரம் வேணும்னு. என் கையிலெ நயா பைசா கெடெயாது. வேணும்னா இந்த காகிதங்களே எடுத்துண்டு போயி பேங்குலெ வெச்சு பணம் வாங்கிக்கோன்னு எம் மூஞ்சிலெ உட்டு எறிஞ்சாரு ரெண்டு மூணு காகிதங்களெ.”

“லோன் கெடெச்சுதா?”

“இல்லெ மேடம். மேனேஜர் கேட்டாரு, ஒன்னெப் பாத்தா படிச்சவளாட்டம் இருக்கே. யாரு பேரிலேயோ இருக்குற டெபாசிட் ரசீதெக் கொண்டு வந்து லோனு வேணும்னா யாரும்மா குடுப்பாங்க லோனுன்னு. ரசீதுங்களெ வாங்கிப் பாத்தா எல்லாம் அப்பா பேரிலெயும் அம்மா பேரிலெயும் இருக்கு. அப்போ நான் கையெழுத்துப் போட்டு அனுப்பின ஃபாரம் எல்லம் என்னாச்சு?”

“அப்புறம் என்ன பண்ணே? சின்ன சின்ன வேலெ பாத்து கொஞ்சம் பணம் சேத்து கோச்சிங்க் கிளாசுலெ சேந்து பரீட்செ எழுதி இப்பொ ஒங்க முன்னாலெ நான் இருக்கேன்.”

“பையன் என்ன ஆனான்?”

“பையன் அவுங்க வீட்டுலேயேதான் இருக்கான். தினோம் போனுலெ அவங்கூட பேசுவேன். சில சமயம் அவன் கேப்பாம் அம்மா எனக்கு இது வேணும் அது வேணும்னு. நானும் உடனே வாங்கி அனுப்புவேன் அவன் கேட்டதெ.அவன் பொறந்த நாளுக்கும் கிஃப்டுங்க வாங்கி அனுப்புவேன். என் கையிலே கொஞ்சம் காசு சேந்ததும், விவாகரத்துக்கும், பையனோட கஸ்டடிக்கும் கேசு போடறதா இருக்கேன் மேடம்.

“மேடம் அன்னிக்கி நீங்க கடேலெ ரெண்டு ஜோடி செருப்பு வாங்கினீங்க பல ஜோடிங்களெக் கையிலெ எடுத்துப் பாத்து. அப்பொ நான் கேட்டேன் காலுலெ போட்டுப் பாக்காமே வாங்குறீங்களே செருப்பு.போட்டுப் பாருங்க மேடம்னேன். நீங்க சொன்னீங்க செருப்பு எனக்கில்லே அப்பாக்கூன்னு. வீட்டுக்குப் போனதும் அப்பாவெ போட்டுப் பாக்கச் சொன்னீங்க. அப்பாவும் போட்டுப் பாத்தூட்டு நன்னா இருக்கும்மான்னாரு. மறு நாளு ஒங்க செருப்பு பிஞ்சிருக்க, அப்பாவெக் கேட்டீங்க ‘அப்பா ரப்பர் சொல்யூஷன் இருக்கான்னு. ஓடனே அப்பா ஒரு டிராயரெத் திறந்து ரப்பர் சொலூஷனெ எடுத்து அதெ எப்பிடி உபயோகிக்கணும்னு சொல்லிக் கொடுத்தாரு. அப்பொ எனக்கு ஒங்களுக்குள்ள இருக்குற பாசத்தெப் பாத்து பொறாமையா இருந்தது மேடம்.”

“ஏன் நீ செய்ய மாட்டியா இதெல்லாம்?”

“நானுந்தான் செய்வேன் மேடம். இப்பொவும் அவுங்களுக்கு செலவுக்கு பணம் அனுப்பிக் கிட்டுதான் இருக்கேன் மேடம். ஆனா அவுங்க கிட்டேந்து எனக்குக் கடுகளவு பாசம் கூட்க் கெடெய்க்குறது இல்லே மேடம். அவுங்களெப் பொறுத்த வரெ நான் ஒரு நடமாடுற ஏடீயெம் மேடம்.

போன வருஷம் அம்மாக்கு திடீர்னு முதுகெலும்புலெ ஒரு ப்ராப்ளம் வந்து அதுனாலெ கால் மொடங்கிப் போச்சு. நாந்தான் ஏகப் பட்ட பணம் செலவழிச்சு வைத்தியம் பாத்தேன். இப்பொ நல்லா இருக்காங்க. கேனடாவுலெ புருசனோட இருக்குற என் தங்கெ எங்களாலெ வரமுடியாது. டிக்கெட்டுக்கே ஏகப் பட்ட பணம் ஆகும்னூட்டா, கல்யாணகி டெல்லிலெ இருக்குற தம்பி நான் இப்பொதான் புது வேலெலெ சேந்திருக்கேன். என்னாலே வர முடியாதூன்னுட்டான். ரெண்டு பேரும் பணமும் அனுப்பலே.

இப்போ சொல்லுங்க மேடம் ஒங்களெயும் ஒங்க அப்பா அம்மாவையும் பாத்தா எனக்குப் பொறாமையா இருக்குமா இருக்காதான்னு.?”

“சுந்தரீ நீ போன வாரம் ஒனக்குக் கல்யாணம் ஆயிடிச்சான்னு கேட்ட போது இல்லைனு சொன்னே. பேங்குக்கு பயோ டாட்டா குடுக்குற போதும் அப்பிடியே தான் குடுத்திருக்கையா? பின்னாடி பேங்குக்கு உண்மெ தெரிஞ்சா ஒன் வேலெயே போயிடுமேம்மா.”

“இல்லே மேடம். அதுலெ கரெக்ட்டா தான் கொடுத்திருக்கேன்.”

“பின்னெ ஏன் கல்யாணம் ஆகலேன்னு சொன்னே?”

“அப்பிடிச் சொல்லலேன்னா ஹஸ்பெண்டு எங்கெ இருக்காரு? என்ன வேலெ பண்ணுறாரு? நீ ஏன் அவரு கூட போகலேன்னு கேப்பாங்க. ஒவ்வொருத்தரு கிட்டெயும் என் சோகக் கதெயெச் சொல்லணுமா மேடம்?”

“அது சரிதான். ஆனா ஒனக்குக் கல்யாணம் ஆகலேன்னு நெனெச்சு யாராவது ஜொள்ளு உட ஆரம்பிச்சா….?”

“பாலம் வர போது அதெத் தாண்டுவோம்னு சொல்லுவாங்களே மேடம், அது போல ஜொள்ளு விடற போது பாத்துப்போம் மேடம்.”

“எதிர் நீச்சல் போடுற தன்மெ ஒங்கிட்டெ ரொம்பவே இருக்கும்மா.”

“மேடம்.”

“என்னம்மா?”

“ஒங்களெ நான் அம்மான்னு கூப்பிடலாமா மேடம்?”

“ஒனக்கு எப்பிடிக் கூப்பிடணும்னு தோணுதோ அப்பிடிக் கூப்பிட்டுக்கோ. ஆனா தனியா இருக்குற போது அப்பிடிக் கூப்பிடு. இல்லாட்டி அடுத்த வருஷம் ஜாயின் பண்ணுற வங்க யாராவது என்னெ கீதாப் பாட்டின்னு கூப்பிட ஆரம்பிச்சூடுவாங்க.”

இருவரும் சிரித்தோம். சுந்தரி கிளம்பிச் சென்றாள் தன் இடத்திற்கு.

“சுந்தரி சொன்னாள் ஒரு சேதி
நொந்ததே உள்ளம் அது கேட்டு”

முணு முணுத்த தெந்தன் வாய்

(கதையல்ல இது. நிஜம்.)

– அபலைகள், முதற் பதிப்பு: ஜூலை 2017, மின்னூலாக்கம்: தனசேகர் (tddhanasekar@gmail.com), மின்னூல் வெளியீடு: http://FreeTamilEBooks.com.

என்னைப் பற்றி சில (பல?) வரிகள்: எழுதும்படியாக ஒன்றுமே இல்லை. இருப்பினும் எழுதுகிறேன். பிறந்தது சிதம்பரத்தில், 1929 ஜூன் 15 அன்று. தந்தை தென் இந்திய ரயில்வேயில் அதிகாரியாக இருந்தார். நான்கு அண்ணன்கள். நால்வரும் இன்று இல்லை. மூன்று தங்கைகளில் இருவர் இன்று இல்லை. பெற்றோர்கள் நரசிம்மன், ராஜலக்ஷ்மி - படம் கீழே சாந்த ஸ்வ்ரூபிகள். சுற்றத்தாரையும் அரவணைத்துக் கொண்டு, குழந்தைகளையும் வளர்த்து முன்னுக்குக் கொண்டுவர தனக்கென ஒரு சுகமும்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *