சுதர்சினி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 111 
 
 

மாலை ஐந்து மணி கடந்துவிட்டது. வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பகுதியில் இன்னும் கொஞ்ச நேரம் கழித்து கைதிகளை உள்ளே தள்ளி கதவுகளை மூடிவிடுவார்கள். இன்னும் சிறிது நேரமேனும் திறந்தவெளியில் சற்றே காற்று வாங்கலாம் என்ற எண்ணம் மனதிற்கு சற்று ஆறுதலாக இருந்தது. ஓங்கி வளர்ந்த ஒரு தென்னை மரத்தைவிட உயரமான மதிற்கவரைத் தாண்டி முக்கி முனகி உள்ளே வரும் காற்று முகத்தில் மோதியெல்லாம்

விளையாடுவதில்லை. பகல் பொழுதெல்லாம் சூரியனின் வெம்மையான கதிர்களால், அடுப்புக்கல் போல சூடாகி விட்ட கொங்கிறீட் சுவரின் வெப்பமூச்சாக, உடலை எரித்துவிடுவது போலத்தான் உரசிச் செல்கிறது. அடைக்கப்பட்ட சுவருக்குள்ளே ஒருவரோடொருவர் முகத்தை முட்டிக்கொண்டு புளுங்கி அவியும் நெருக்கத்தில், அழுக்கு மனித மூச்சுக்களை மாறி மாறி சுவாசிப்பதைவிட இது எவ்வளவோ மேல்.

சிறைச் சாலையின் வெளிப்புறம் தார் ஊற்றப்பட்ட சிறிய உள்வீதி. சிறிய மலர்ச் செடிகள், கொடிகள், அவற்றை சுற்றி அழகுக்காக அடுக்கப்பட்ட கற்கள். மிகப்பழமையான பெரிய கட்டடங்களைக் கொண்ட இந்த சிறைச்சாலையின் அமுக்கமான சூழ்நிலையில், திரும்பும் திசைகளிலெல்லாம் ஏதேதோ இரகசியங்களும் புதிர்களும் நிறைந்திருப்பதுபோலவும், ஒரு பயங்கர சூனியக்காரியின் வெறி கொண்ட கண்கள் என்னையே பார்த்துக் கொண்டிருப்பது போலவும் இனம் புரியாத கலக்கம் எப்பொழுதும் எனக்குள் படர்ந்து உறைந்திருந்தது. ஒருவிதமான பொறாமையோடும் குரூரத்தோடும் பசியோடும் ஒரு நிழலுருவம் போல அது அலைந்துகொண்டே திரிவது போன்ற பிரமை சதா என்னைப் பின்தொடர்ந்து வதைத்துக் கொண்டிருந்தது.

எனக்கு ஆறுதல் தரும் தனிமையைக்கூட அதிக நேரம் அனுபவிக்க முடியாதபடி மனித முகங்களை மட்டுமல்ல வெறுமையைக்கூட விழி நிமிர்த்தி பார்க்க முடியாத இருண்மைக்குள் என் காலங்களை சிறை விழுங்கிக் கொண்டிருந்தது. அகப்பட்ட இடத்தில் உட்கார்ந்து கொண் டும் நின்றுகொண்டும், கைதிகளில் சிலர் ஏதாவது பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் யோசித்து அழுதுகொண்டும் இருக்கிறார்கள். எல்லாருக்கும் இரவுச்சோறு கொடுக்கும் வரிசை முடிவுக்கு வந்துவிட்டது. உள்ளே அடைக்கப்படுவதற்கான அழைப்பு இனி எக்கணத்திலும் வரலாம். அதை நினைத்தாலே மூச்சு இறுகுவது போல இருக்கிறது. கடவுளே இன்னும் கொஞ்ச நேரம் கழித்து கூப்பிட மாட்டார்களா என்ற வேண்டுதலோடு, முரண்டு பிடிக்கும் வண்டிக் குதிரை மாதிரி மனசு திமிறித் துடிக்கிறது, தலையை தொங்கப் போட்டபடி செம்மறியாட்டுத் தோரணையில் வரிசைக்கு போயே ஆகவேண்டும். ஒவ்வொருவரையும் தோளிலே தட்டித் தட்டி எண்ணி கவனமாக கணக்கு வைத்துக்கொள்ளுவார்கள். காலம்கூட மனுஷ ஆயுளை இப்படித்தான் கெட்டியாக கணக்கு பண்ணிக் கொள்கிறது போல. என் இதயத்தில் மெலிதாக வெடித்துக்கிளம்பிய விரக்திப் புன்னகை அலட்சியமாக இதழ்களில் நெளிந்தது. இந்த சிறைச்சாலைக்குள் இப்படியே இன்னும் கொஞ்ச காலம் அடைபட்டுக்கிடந்தால், பெரிய கேடியாகவோ மகாஞானியாகவோ மாறிவிடலாம் என எண்ணிக்கொண்டேன். எந்தப் பாவனைகளும் இல்லாமல்,மனித உணர்வுகளை அப்படியே துகிலுரித்து காட்டும் இடமாகவே சிறைச்சாலை அமைந்திருந்தது. பெருமூச்சை வெளியேற்றிக்கொண்டே கண்களை அலைய விடுகிறேன். இரவுக்காவல் தலைமை அதிகாரி, திறப்புக் கோர்வைகள் சப்தமெழ பிரதான வாசலருகில் இருக்கும் அலுவலகத்தின் சாய்வான பகுதியை கடந்து இறங்குகிறாளா என என்னைப் போலவே பலரும் நோட்டமிட்டுக் கொண்டிருந்தனர். அவள் வரும்போதே, ஏய். ஏய். ஒக்கமலா போலிமட்ட யன்ட (எல்லாரும் வரிசைக்கு போங்க) என உரத்துக் கத்திக்கொண்டேதான் வருவாள். குறித்த நேரத்தில் வரிசைக்கு வராமல் தாமதமாக எவராவது வந்துவிட்டால், தனது காக்கி சீருடை கவுணின் இடுப்பு பெல்டை சரக்கென உருவி அடித்து விளாசத் தொடங்கிவிடுவாள். அவள் வருவதற்கு முன்பதாகவே வரிசைக்கு போய்விட வேண்டுமென்ற தவிப்பு எல்லோரைப் போலவே எனக்கும் இருக்கிறது.

அன்றும் வழக்கம்போலவே நாளாந்தம் வழக்குகளுக்காக நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டவர்கள் திருப்பிக் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். அவர்களை பதிவு செய்து பரிசோதனை செய்து உள்ளே அனுப்ப இன்னும் ஒரு மணி நேரமேனுமாகலாம். நீதிமன்றத்திற்கு போனவர்களில் எவராவது விடுதலையாகி சென்றுவிட்டார்களா, புதிதாக எவராவது சிறைக்கு வந்திருக்கிறார்களா என ஆராய்வது அங்கு கைதிகளாக இருப்பவர்களின் ஆர்வமான பொழுதுபோக்குகளில் ஒன்று. தமது கவலைகளை ஒத்திவைத்து விட்டு, அடுத்தவரின் வம்பு தும்புகளை தேடி விசாரிப்பதில் கிடைக்கும் தற்காலிக திருப்திக்காக அலையும் மனது.

திடீரென நாலைந்து பெண்கள் சேர்ந்து நின்றுகொண்டு வாசலைப் பார்க்கிறார்கள். அங்கே “வரேங்பாங். வரேங். வரேங்” (வாடி. வா. வா.) என்ற அட்டகாசமான வரவேற்பு அளிக்கப்படும் சத்தம் பலமாகக் கேட்கிறது. “ம். இங்கிருந்து விடுதலையாகிப் போன ஒண்டு திரும்பவும் வருகுது போல, இங்க சில பேருக்கு போறதும் வாறதும்தானே வேலை.. வெறுப்புடன் அலுத்துக் கொண்டாள். என்னருகில் உட்கார்ந்திருந்த வசந்தி, என்னைப்போலவே பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வருடக்கணக்காக விசாரனைக் கைதியாக இருப்பவள். எனக்கென்னவோ எந்த உணர்ச்சியும் ஏற்படவில்லை. அந்தளவுக்கு சிறை வாழ்வு அலுத்து, வெறுத்துப் போயிருந்தது. சும்மாவா இரண்டு வருடம் முடிந்து மூன்றாவது வருடத்தின் முக்கால் பங்கும் முடித்துவிட்டதே. “அன்ன சுதர்சினி எவில்லா (அதோ சுதர்சினி வந்திட்டாள்..) அனைவருக்கும் ஒரு சுவாரசியமான தகவலாக அது பரவியது. தமது உரையாடல்களிலும் யோசனைகளிலும் மூழ்கியிருந்தவர்கள் ஒருதடவை திடீரென திரும்பிப் பார்த்தார்கள். நான்கு அடிக்கு மேற்படாத உயரம், கறுத்து மெலிந்த தேகம். போதை தேடி உடல் நடுங்கும் பதைபதைப்பான தருணங்களில் கையில் அகப்படும் ஏதாவது கூர் ஆயுதத்தால் தனக்குத்தானே கீறிக் கொண்டதால் ஏற்பட்ட காயங்கள். கைகளிலும் கன்னங்களிலும் தளும்புகளாக பட்டையெழும்பிக் கிடக்கும். எண்ணெய், தண்ணிர் கண்டிராத கழுத்துவரைக்குமான செம்பட்டை கூந்தல், வெற்றிலை குதப்பிக் குதப்பி அவிந்து போன உதடுகள். முன்னிரண்டு மேற்பற்களும் உடைந்துபோன இடைவெளி எப்போதும் முகத்தை மூடிப்படர்ந்து கிடக்கும் சிடுசிடுப்பு, மூச்சுப் பொருக்க உரத்த குரலில் கத்திப்பேசும் இயல்பு. ப்ரா அணியத் தேவையில்லாத தட்டையான உடல்வாகு. எப்போதும் அலைந்து கொண்டேயிருக்கும் பார்வையும் அரக்கப்பரக்கப் பாயும் நடையும்தான் சுதர்சினி.

காலையிலிருந்து மாலைவரை சிறைச்சாலைக்குள் ஒடிக்கொண்டே இருக்கும் அவளுக்கு எப்போதும் செய்வதற்கு வேலைகள் இருந்து கொண்டேயிருக்கும். கைதிகள் குளிக்குமிடத்தில் சிறிய பிளாஸ்ரிக் குடுவையில் தண்ணிர் பிடிப்பதற்கே உயிர் போய் வரும். இழுபறிகள், ஏச்சுப்பேச்சுக்கள் எல்லாவற்றையும் அடக்கி அங்கே ஒலிக்கும் சுதர்சினியின் குரல். “ஏய். அங்வென்ன அங்வென்ன. அங். அங்.” (ஏய். விலகு. விலகு.) ஒரேயொரு குழாயிலிருந்து மட்டுமே தண்ணிர் வடிந்து கொண்டிருக்கும் பெரிய தொட்டியின், உயரமான விளிம்புக் கட்டின் மீது ஒரே தாவிலில் ஏறி நிற்பாள். அதுவரையில் நெருக்குவாரப்பட்டு இரைந்து கொண்டிருந்த கூட்டத்தினர். மூச்சுவிடுவதற்கே பயந்து பார்த்துக் கொண்டிருக்க, மற்றவர்களின் பாத்திரங்களை ஒதுக்கிவிட்டு, தான் கொண்டு வந்த பெரிய வாளியை வைத்து தண்ணிர் பிடிக்கத் தொடங்கி விடுவாள். எல்லாருடைய கோபங்களும் புறுபுறுப்புகளும் வெளியே வர முடியாமல் ஆற்றாமையோடு தொண்டைக்குள்ளே சிக்கி பொங்கிப் பொருமி, நெஞ்சு வெடிக்க விலகி நிற்பார்கள். முதலில் வைத்த ஒரு பெரிய வாளி நிறைந்ததும் அடுத்த பெரிய வாளியை தூக்கி வைப்பாள்.தன்னைச்சுற்றி ஒரு கூட்டம் நிற்பது பற்றியே கவலைப்படாமல், அலட்சியத்துடன் சாவகாசமாக வெற்றிலையை மென்று புளிச்சென துப்பிக்கொண்டு தனது காரியத்தில் கண்ணாயிருப்பாள். இந்த வேலையை விரைவாக முடித்து விட்டு அவள் அடுத்த வேலைக்கு ஒட வேண்டும்.

உடல் பெருத்த தளுக்குமொளுக்கு முதலாளி அக்கா குளிப்புக்கு ஆயத்தமாக வருவாள். சுதர்சினி நிறைத்து வைத்த பெரிய வாளிகளில், தன் வீட்டு குளியலறையில் குளிப்பது போல மிடுக்காக, நீராடத் தொடங்கிவிடுவாள். அவளுக்கு கை கால் முதுகு என சாவாங்கமும் சுதர்சினி தேய்த்துவிட, தண்ணிர் நிறுத்தப்படும் நேரம் வரை அவளின் குளிப்பு முடியாது. காத்து நிற்கும் மற்றவர்களுக்கு உடம்பில் தேய்த்துக் கொண்ட சோப்பு துரை காய்ந்து பொருக்கு வெடிக்கத் தொடங்கிவிடும். சுதர்சினி மனம் வைத்து அரைக் கோப்பை ஒரு கோப்பை தண்ணிர் எடுக்க விட்டால் ஏதோ கொஞ்சம் கழுவித் துடைத்துக்கொண்டு வரலாம். இல்லாவிட்டால் சுடலைப் பொடி பூசியோன் கோலத்தில் திரும்ப வேண்டியதுதான். அவர்களை எதிர்த்து எதுவுமே முடியாது, அதிகாரிகளிடம் புகார் செய்யவும் முடியாது.

உணர்ச்சி வசப்பட்டு யாராவது ஒருவர் இம்மாதிரியான அத்துமீறல்களை தட்டிக்கேட்க முற்பட்டால் அல்லது சிறை காவலர்களிடம் புகார் செய்ய முற்பட்டால், பாதிக்கப்பட்ட ஒருவர்கூட சேர்ந்து வர மாட்டார்கள். அப்படிச் செய்வதன் பிரதிபலனாக ஏற்படக்கூடிய விளைவுகளின் பயங்கரத்தை எண்ணி மெளனமாக வாயை மூடிக்கொண்டு ஒதுங்கிப் போய் விடவே விரும்புவார்கள். சுதர்சினியின் இந்த குளிப்பாட்டும் வேலைக்கு கூலியாக ஒன்றிரண்டு சோப்புகட்டிகள் அவளுக்கு கிடைக்கும். தமது நாளாந்த சம்பாத்தியத்திற்கு பிரச்சனைகள் வராமல் பார்த்துக்கொள்வதில் அவளும் அவளது கூட்டாளிகளும் மிக அவதானமாக செயற்படுவார்கள்.

பெற்றா என்பது ஒரு தாதா பெண்ணின் பெயர். நடுத்தர வயதைத் தாண்டிய, உயர்ந்த கறுத்த இறுகிய தேகம், புன்னகையின் சுவடறியாத முகம், வாய் நிறைய வெற்றிலைக் குதப்பல், கண்களில் இடையறாத போதை மயக்கம், அணிவகுப்பில் செல்லும் இராணுவம் போன்ற வேகநடை. போகிற வழியில் நிறைந்த வயிற்றுடன் கர்ப்பிணிப் பெண் நின்றாலும் தள்ளி விழுத்திக்கொண்டுதான் போவாள். இவளுக்கு சிறைக்காவலர்களே பயப்படுவார்கள். அதிகம் வாய் திறக்காத பெற்றா “ஏய்” என ஒரு குரல் எழுப்பினாள் என்றால் சிறைச்சாலையில் ஊசலாடும் காற்றுக்கூட அசைவதை நிறுத்திவிடும்.

எதனையுமே கணக்கெடுக்காத தோரணையில் எப்பவுமே போதை மயக்கத்திலிருக்கும் பெற்றாவின் உத்தரவுக்காக ஒரு அடியாள் பட்டாளமே கைகட்டி காத்திருக்கும். எங்கேயோ விடுமுறைக்கு போய் வருவது மாதிரி வெளியில் போவதும் போன வேகத்தில் வருவதுமாக இவளின் ஆயுள்காலம் சிறையிலேயே கழிந்து கொண்டிருந்தது.

ஒருநாள் மாலை சிறைக்கதவுகள் மூடப்பட்டு சற்று நேரத்தில், கோழியை அமுக்குவது போல ஒரு பெண்ணை சுவரோடு அமுக்கிவைத்துக் கொண்டு, அடிக்கத் தொடங்கினார்கள் பெற்றாவின் அடியாட்கள். அடிவாங்கும் பெண் உரத்த குரலில் கதறினாள். மற்றவர்கள் தமது கண்விழி பிதுங்கப் புதினம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரே பரபரப்பு சத்தம், இரைச்சல். பெற்றா அந்த மண்டபத்தின் நடுவில் கால்களை பரப்பி நின்றபடி, தனது இடுப்பிலிருந்த பொட்டலத்தை எடுத்துப் பிரித்தாள், வலதுகை கட்டைவிரலையும் ஆட்காட்டிவிரலையும் சேர்த்து மூக்குத்தூளை ஒரு கிள்ளு கிள்ளி எடுத்து நிதானமாக மூக்குக்குள் அடைந்து முகத்தை அப்புறம் இப்புறம் என சுழித்து, கண்களை மூடி அதன் காரத்தை ரசித்து உள்ளெடுத்தவாறு தலையை சரித்து அடிவாங்கிக் கொண்டிருக்கும் பெண்னை பார்த்து மோசமான வார்த்தைகளால் திட்டினாள்.

சத்தங்கள் வெளியேயும் கேட்டிருக்க வேண்டும். இரவுக்காவல் அதிகாரி வெளியிலிருந்தபடியே, “ஏய். அத்துல மொகதே சத்தே” (ஏய். உள்ளுக்கு என்ன சத்தம்) எனக் கேட்டார். உடனடியாக அடி நிறுத்தப்பட்டது. அடிவாங்கிய பெண்ணின் மெலிதான விசும்பலைத்தவிர அனைவரும் நிசப்தமானார்கள். பெற்றா வாசலருகே போய் இதமான குரலில் பணிவான தோரணையுடன் அதிகாரியிடம் பேசினாள்.

“ஒன்றுமில்லை நோனா புதுசா வந்த பைத்தியம் ஒண்னு சத்தம் போடுது.”

“அப்பிடியா கொஞ்சம் பாத்துக் கொள்ளு பெற்றா”

“ஆமாம் நான் பாத்துக் கொள்ளுறேன் நோனா நீங்க கவலைப்படாமல் போங்க” அதிகாரி பொறுப்பை பெற்றாவிடம் கொடுத்துவிட்டு அலுப்புடன் நகர்ந்து செல்லத் தொடங்கினார். பெற்றாவின் குரல் அதிகாரமாக ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.

“ஏய் உங்கட உங்கட வழக்குகளுக்கு வந்தமா போனமா என்றிருக்க வேணும் தேவையில்லாம சிறைச் சாலையை திருத்துற வேலைக்கு வெளிக்கிட வேணாம். இங்க வாலாட்டினா இதுமாதிரிதான் நடக்கும். உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றா எனக்கு சொல்லுங்க, அங்க இங்க சொல்லி பிரச்சனையை ஏற்படுத்தலாம் என்று நினைக்கவேணாம். உங்களுக்கு சிறை புதுசா இருக்கலாம். நான் இங்க பழம் திண்டு கொட்டையும் போட்டுட்டன். புதுசா வாற ஆக்களுக்கு இங்க எப்பிடி நடந்துகொள்ள வேணுமென்னு பழைய ஆக்கள் சொல்லி வையுங்க” என தொடர்ந்த அவளின் கெட்ட வார்த்தைகள், எல்லோரையும் அச்சத்தில் உறையச் செய்தது.

அடிவாங்கிய பெண் புதிதாகவந்தவள்,பெற்றாவின் ஆக்களுடன் ஏதோ முரண்பாடு ஏற்பட்டு எதிர்த்து பேசியது மட்டுமல்லாமல், அலுவலகத்திலும் போய் முறையீடு செய்துவிட்டதாக பேசிக்கொண்டார்கள். இப்படியான தாதா பெண்களுக்கு பணிவுள்ள ஒரு அடியாளாக ஒடியோடி வேலை செய்யும் சுதர்சினி ஒரு சிறிய முடிச்சு தூளுக்காக உயிரையே கொடுக்கக்கூடியவள். எனது அவதானிப்பில் இவள் மற்றவர்களைவிட அதிகம் ஆபத்தில்லாதவள். கொஞ்சமென்றாலும் இதயத்தில் ஈரமுள்ளவள். சிறைச்சாலையில் தூள் குடிப்பவர்கள் எல்லாரும் ஒரு கூட்டமாகவே சேர்ந்திருந்து கொள்ளுவார்கள். அது மழை ஒழுக்கும், மல சல கூடத்தின் அழுக்குத் தண்ணிரும் தெறிக்கும் ஒதுக்குப்புறமான பகுதி. அங்கேதான் மனநிலை சரியில்லாத பெண்களையும்கூட ஒதுக்கிவிடுவார்கள். எவருமே கண் கொண்டு பார்க்கக்கூட விருப்பப்படாத அந்த சீவன்களுக்கு, சுதர்சினி உணவு கொடுத்துக் கொண்டிருப்பதையும், உருட்டி மிரட்டி குளிக்க வைப்பதையும் கண்டிருக்கிறேன். உரத்த குரலில் கத்தி ஏசிக் கொண்டேதான் இவைகளை செய்வாள். எப்போதாவது ஒரு குணம் வரும் தருணத்தில் தனது மனத்திருப்திக்காக இப்படி ஏதாவது நல்ல காரியங்களில் ஈடுபடுவாள். மற்றபடி அவள் தனது நாளாந்த சம்பாத்தியத்திலேயே குறியாயிருப்பாள்.

முதலாளி அக்காமாருக்கு உடுப்புகள் தோய்த்துக் கொடுப்பாள். அவர்களுக்கு தினசரி வீட்டு வேலைக்காரர்கள் கொண்டுவரும் பொருட்களை, உணவுகளை வாசலிலிருந்து காவிச் சென்று கொடுப்பாள். அவர்கள் பாவிப்பதற்கு முன்பாக மலசல கூடத்தை கழுவி சுத்தம் பண்ணி அவர்கள் வெளியில் வரும் வரை வாசலில் காவலிருப்பாள். அக்காமாருக்கு கைகால் அமுக்கி, தலைக்கு எண்ணெய் மசாஜ் பண்ணி விடுவாள். சோறு எடுக்கும் வரிசைக்கு போக வெட்கப்படும் மரியாதைக்குரிய அக்காமாருக்கு அடிபட்டு, நெரிபட்டு சாப்பாடு எடுத்துக் கொடுப்பாள். எல்லா வேலைகளுக்கும் ஒன்றோ இரண்டோ சோப்புக் கட்டிகள்தான் அவள் எதிர்பார்க்கும் கூலி. சில பேர் தாங்கள் உண்டு மிச்சமான வீட்டு உணவுகளையும் கொடுப்பார்கள்.

சிறைச்சாலைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களான தூள், கைத்தொலைபேசி, அதன் உதிரிப்பாகங்கள் எல்லாமே வெளியிலிருந்து உயர்ந்த மதிலுக்கும் மேலாக வீசப்பட்டு உள்ளுக்கு வந்து விழும். இது ஒரு இராணுவ நடவடிக்கை போல தூள் முதலாளி அக்காமாரின் ஒழுங்கு படுத்தலில் மேற்கொள்ளப்படும். பெரும்பாலும் பெற்றாவின் ஆட்கள்தான் வந்துவிழும் பொதிகளை அதிகாரிகளின் கண்களில் பட்டுவிடாமல் குருவிபோல கொத்திக்கொண்டு ஓடிவந்து விடுவார்கள். இப்படியான தருணங்களில் கடமையில் இருக்கும் காவலாளி அதிகாரிகளின் கவனத்தை திருப்புவதில் சுதர்சினி திறமைசாலி. கதிரையில் சோர்வோடு நீண்ட நேரமாக அமர்ந்து கொண்டிருக்கும் அவர்களை அணுகி நைசாக கதை கொடுத்து, கைகால் அமுக்கி தலையில் பேன் பார்த்து, சிரிக்க சிரிக்க ஏதாவது கதை சொல்லி, ஒருமாதிரி தமது வேலை முடியும் வரை அந்த அதிகாரியின் கவனத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுவாள்.

பெற்றாவுக்கு விசுவாசமான அடியாளாக சுதர்சினியும் இப்படியான வேலைகளில் ஒடித் திரிவாள். அதிகாரிகளிடம் அகப்பட்டுக்கொண்டால் அடி உதை, இருட்டு தனியறைக்குள் அடைப்பு. இதுபோன்ற தண்டனைகள் எல்லாம் அவளுக்கு பழகிப்போன விடயங்கள்.

மழைக் காலங்களில் சிறைச்சாலையின் மலக்குழிகள் நிரம்பி மலஅழுக்கு கழிவுவாய்க்கால்களில் சிதறிக் காணப்படும். அப்படியான நாட்களில் என்னைப் போன்ற பலர் வாயையும் மூக்கையும் மூடி கைக்குட்டையால் கட்டிக்கொண்டு சாப்பாடு தண்ணி இல்லாமல் கிடப்போம். சுவாசிக்கக்கூட முடியாமல் தலையிடியுடன் படும்பாடு வாழ்க்கையே வெறுக்கச்செய்யும்.

அந்த மலக் குழியை சுத்தப்படுத்தும் வேலைக்கு கைதிகளைத்தான் கூப்பிடுவார்கள். போக விரும்பாதவர்கள் தமது பங்களிப்பாக ஒரு சோப்பு கொடுக்க வேண்டும். இந்த வேலைக்கு முதல் ஆளாக போய் நிற்பாள் சுதர்சினி. எந்த அருவருப்பும் இல்லாமல் ஏதோ மண் கிணறு இறைப்பது போல வேலைசெய்து முடிப்பாள். இதனால் அதிகமான சோப்புக் கட்டிகளை அவளால் சம்பாதித்துக் கொள்ளமுடியம். இதற்காக இவளைப் போன்றவர்களே கற்களை போட்டு மலக்கூடக்குழிகளை அடைக்கச்செய்வதும் உண்டு என பலர் பேசிக்கொள்வதையும் கேட்டிருக்கிறேன்.

போதையில் கண் செருகிக் கிடக்கும் சுகத்தைவிட வெறெந்த சுரனையும் இல்லாத சுதர்சினியின் வாழ்க்கையில் எந்த அழகையும் நான் காணவில்லை. ஆனால், பசுமையற்றுப் போயிருந்த அவளின் விழிகளில் ஒரு ஆத்மாவின் ஏக்கமும் விசும்பலும் தேங்கியிருந்ததை என்னால் உணர முடிந்தது.

கண் விழித்த நேரத்திலிருந்து மாலையாகும் வரை ஒட்டமும் நடையுமாக திரிந்து சம்பாதிக்கும் சுதர்சினி, கதவு மூடப்பட்டதும் சோப்புக்கட்டிகள் ஐந்தை அடுக்கிக் கொண்டு, சபாங் சியாய் சபாங் சியாய் (சவர்க்காரம் நூறு ரூபா) என கூவிக்கூவி காசாக்கி விட முயற்சிப்பாள்.

ஒரு நூறு ரூபா தாள் அவளது கைகளுக்கு வந்ததும் கண்களில் தென்படும் மலர்ச்சி, பரபரப்பு, துள்ளல் நடை, அப்பப்பா அதற்குப்பிறகு சுதர்சினியை எவரும் எந்த உயிர்போகிற வேலைக்கும் கூப்பிட முடியாது. இனி அவளுக்கான நேரம். தூள் விற்கும் பெண்ணிடம் கைப் பொத்தலாக காசைக்கொடுத்துவிட்டு, தனக்கான தூள் முடிச்சு கிடைக்கும் வரை வாசற்படியில் நாக்குத் தொங்க நிற்கும் நாய்போல காத்துக் கிடப்பாள். பொலித்தினில் முடியப்பட்ட ஒரு சிட்டிகை அல்லது அதற்கும் குறைவான தூள் பொட்டலம் அவள் கைக்கு வந்ததும் தனது இடத்திற்கு பாய்ந்தோடுவாள்.

அங்கே அவளின் கூட்டாளிகள் ஏற்கனவே ஒரு சுட்டி விளக்கை கொழுத்தி மறைத்து வைத்துக்கொண்டு, அதனைச் சுற்றி ஏதோ பிரார்த்தனையில் கூடியிருப்பவர்களைப் போல குத்தங்காலிட்டுக் குந்திக் கொண்டிருப்பார்கள். சுற்றுக் காவல் அதிகாரிகளின் கண்களுக்கு மாட்டுப்படாமல் தூளடிக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். பகல் முழுவதும் அட்டகாசமெழுப்பிக்கொண்டு திரியும் இவர்கள் இப்போது சாந்த பதுமைகளாக தமது முறைவரும்வரை துள் சரைகளை கைகளுக்குள் பொத்திக் கொண்டு பதவிசாக காத்திருப்பார்கள்.

ஒரு வெள்ளிப் பேப்பரில் தங்கத்தை விட கவனமாக துளை கொட்டி, எரிந்து கொண்டிருக்கும் சுட்டி நெருப்புக்கு மேலே பிடித்து, ஒரு குழல் மூலமாக அதன் புகையை இழுத்து விழுங்குவார்கள்.

விடிய விடிய நோய் பிடித்த கோழிமாதிரி கழுத்து மடிந்த நிலையில் கடைவாய் வழிய அலங்கோலமாக மயக்கிக் கிடப்பார்கள். இப்படி மயங்கிக் கிடக்கும் தாயொருத்தியின் முலையை அவளது குழந்தை பசியுடன் சப்பிக் கொண்டிருக்கும் காட்சியை முதன் முதலாக கண்ட மாத்திரத்தில், குருடாய்ப் போகாதிருந்த என் கண்களை நானே சபித்துக்கொண்டேன்.

“இப்படி பாலூட்டுவது குழந்தைக்கு கூடாது.” போதை தெளிந்திருந்த ஒருநேரத்தில் அந்த தாய்க்கு புத்தி சொல்ல முயற்சித்தேன்.

“நான் தூள் குடிக்காட்டில் இவன் என்னில பாலே குடிக்கமாட்டான்.”

ஒரு வார்த்தை விளக்கத்தில் என்னை வீழ்த்திவிட்டு, இடுப்பில் இடுக்கிய குழந்தையுடன் அவள் விசுக் விசுக் என நடந்து போய்விட்டாள். எனது இதயத்திற்கான இரத்த ஒட்டம் நின்று போனது போல ஒரு விறைப்பு உடலெங்கும் பரவிச்சென்றது.

கண்ணுக்கு முன்னால் சாவு தினந்தோறும் சப்பித் தின்னும் இந்த மனிதர்களின் வாழ்வை எண்ணியெண்ணி எத்தனையோ இரவுகள் எனது நித்திரை பொய்த்துப்போனது. அவர்கள் அழுதார்கள், சிரித்தார்கள், கிடைப்பதை உண்டார்கள், பெண்களோடு பெண்களே உடற் பசியுமாறினார்கள். தமக்குள்ளே ஒரு உலகத்தை ஸ்தாபித்துக் கொண்டு தூள் குடிப்பதற்காகவே உயிர் வாழ்ந்தார்கள்.

சுதர்சினியின் மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த தூள் வழக்குக்காக நீதிமன்றத்தில் மூவாயிரம் ருபா தண்டப்பணம் செலுத்தவேண்டுமென தீர்ப்பாகியிருந்தது. அவளுக்காக எவரும் அப்படியொரு தொகையை செலுத்துவது நடவாத காரியம் என்பது அவளுக்கும் தெரியும். அதைப்பற்றி அவளுக்கும் கவலை இருந்திருக்கலாம். ஆனால், அதற்காக அவள் கவலைப்பட்டு அலட்டிக்கொண்டதாக நான் அறியவில்லை. அவளிடம் எடுபிடி வேலைவாங்கிய பல முதலாளி அக்காமார், “நான் போனதும் உன்னை வெளியில எடுக்கிறன்” என நம்பிக்கை ஊட்டி செமத்தியாக அவளை தம் வேலைகளுக்கு பயன்படுத்திவிட்டு வெளியில் போனதும் அவளை மறந்தே போயிருந்தார்கள். எப்போதாவது, “இப்படியான கதைகள் உண்மையா சுதர்சினி” என எவராவது கேட்டால், “மனுசர் என்றால் அப்பிடித்தானே” என அலட்சியமாக தலையாட்டி விட்டு போய்விடுவாள்.

திடீரென ஒருநாள் சுதர்சினி அழகாக தலைவாரி, நேர்த்தியான வெள்ளை பாவாடை சட்டை உடுத்து, சிரித்த முகமாக எல்லாரிடத்தலும் விடைபெற்றுக் கொண்டு திரிவதை கண்டேன். ஒரு ஏஜன்சி வழக்கில் இருந்த வயதான அம்மாவுக்கு கொஞ்ச நாளாகவே ஒடியோடி வேலை செய்துகொண்டு திரிந்தாள். அவர்தான் இவளின் தண்டப்பணத்தை செலுத்தி வெளியில் போக உதவிசெய்ததாக கதைத்துக் கொண்டார்கள்.

எனக்கும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. இந்த உலகத்தில் இன்னும் சில மனிதர்களின் இதயங்களிலும் ஈரம் இருக்கிறதே என எண்ணிக்கொண்டேன். அன்று மிகவும் அழகாக இருந்தாள் சுதர்சினி. என்னையும் தேடி வந்து இதமான குரலில், நான் போகிறேன் அக்கா” என்று கூறிச் சென்றாள்.

இப்படி தினசரி யாராவது கூறிச் செல்லுவது வழக்கம்தான். இருந்தாலும் நான் சிறைக்கு வந்த நாளிலிருந்து தினசரி பார்த்துக்கொண்ட முகமாயிருந்தபடியால் மனதுக்கு கொஞ்சம் நெருக்கமாக மாறியிருந்தாள். இதன்பின் சில நாட்களில் நானும் அவளை மறந்தே போனேன்.

இன்றைக்கு மீண்டும் திரும்பி வந்துவிட்டாள். முன்னர் இருந்ததைவிட கறுத்து மெலிந்து, புதிதாக கிழித்துக்கொண்ட காயங்களுடன் பார்க்கவே ஒரு மாதிரி பயங்கர தோற்றமாயிருந்தாள். யாருமே இப்படியானவர்களை பெரிதாக கணக்கெடுப்பதில்லை. ஏதோ ஐந்துக்களை கண்ட மாதிரி விலகிச் செல்லுவார்கள். ஏன் நானும்கூட அப்படித்தான்.

மாலை கணகெடுப்பு முடிந்து கைதிகளை உள்ளே அடைத்து கதவு மூடப்பட்டாயிற்று. தூள் குடிக்கும் பகுதியில் சுட்டி விளக்கு மினுங்கத் தொடங்கியது. வழக்கம் போல எல்லோரும் சுற்றிவர குந்திக் கொண்டிருக்கிறார்கள். மீண்டும் வந்த முதல் நாளாகையால் அவளின் கூட்டாளிகள் இலவசமாக அவளுக்கும் தூளை பகிர்ந்துகொள்வார்கள் போல, சுதர்சினியும் அந்த வட்டத்தில் குந்திக் கொண்டிருக்கிறாள். பசி கிடந்தவன் சோற்றைப் பார்ப்பது போல அவளது முகத்தில் அப்படியொரு ஆவல். காய்ந்த உதடுகளை நாக்கினால் தடவிக்கொண்டு தனது முறைக்காக காத்திருக்கிறாள்.

நான் எனது இடத்தில் படுத்துக்கிடந்தபடி வாசிப்பதற்கு கையிலெடுத்த புத்தகத்தை வெறுமனே புரட்டிக்கொண்டு தூரத்தில் குவிந்திருந்த அவர்களின் மீதே நோட்டமாயிந்தேன். ஏனோ மனது சுதர்சினியைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அன்று அவள் விடைபெற்றுச் சென்ற சிரித்த கோலம் மனதை அலைக்கழித்தது.

சற்று முன் மாலை வரிசையில் நின்றபோது, தனக்குத் தெரிந்த பழைய முகங்களை தேடிக்கொண்டே வந்தவள் என்னருகில் வந்து நின்றாள்.

“ஐயோ அக்கா நீ இன்னும் போகவில்லையா?”

இரக்கப் பார்வையுடன் கேட்டாள். அவள் திரும்பி வந்ததில் எனக்கு உள்ளுக்கு கோபமிருந்தாலும் காட்டிக்கொள்ளாம்ல், “சரி நான் போவது இருக்கட்டும் நீ ஏன் திருப்பி வந்தாய்?” என இயல்பாகவே கேட்டேன். உடனே கண்களை உருட்டி அக்கம் பார்த்தவள் என்னருகே தலையை சாய்த்து மெல்லிய குரலில் குசுகுசுத்தாள்.

“வெளியால வாழுறது சரியான கஸ்டம் அக்கா, சாப்பாடு இல்லை, குடியிருக்க இடமில்லை. தூளும் குடிக்க முடியாது. எனக்கு வெளியால இருக்கிறதவிட உள்ளுக்கு இருக்கிறதுதானக்கா நல்லது.”

எனது பதிலுக்கு காத்திருக்காமல் தனது கூட்டாளிகளை நோக்கி சென்று விட்டாள். அவள் சொல்லிச்சென்ற வார்த்தைகளின் உண்மை கூர்மையான கத்தியைப்போல என் இதயத்தை ஊடுருவிக் கிழித்தது. இறுக்கமாக மூடப்பட்டிருக்கும் இந்த சிறைச்சாலையின் இரும்புக் கதவுகளுக்குப்பின்னே, சாவின் மயக்கத்தில் வாழ்வைச் சுகிக்கும் எத்தனை சுதர்சினிகளின் வாழ்க்கை மீதான நம்பிக்கையின் கதவுகளும்மூடப்பட்டுக் கிடக்கிறது.

என்னைத் தொடரும் பயங்கர சூனியக்காரியின் முகம் இப்போது மிகவும் அருவருக்கத்தக்கதாக ஏளனமான சிரிப்புடன் என்னையே உறுத்துப் பார்ப்பது போல இருக்கிறது. கண்களை இறுக்கி முடிக் கொள்கிறேன். ச்சீ. இப்போதும் அந்த முகம் என் கண்களுக்கு நேராகவே வருகிறது. சட்டென எழும்பிக் குந்திக்கொள்கிறேன். தலையை அசைத்து நினைவுகளை உதற முனைகிறேன்.

“என்னக்கா நாளைக்கு உங்கட வழக்கெல்லே, அதைப்பற்றி யோசிக்கிறிங்கள் போல” என்கிறாள் வசந்தி, பக்கத்திலிருப்பவள் என்னை அவதானித்துக் கொண்டேயிருந்திருக்கிறாள்.

“ம்..ம்ம்” என்று அவசரமாக தலையசைத்து இயல்புக்கு வர முயற்சிக்கிறேன்.

தூள் குடிக்கும் இடத்தில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடைவாய் வழிய சுதர்சினி மயக்கத்தில் சிரிக்கிறாள். அச்சிரிப்பு ஒலியினூடே கதறியழும் அவளின் ஆத்மாவின் ஒலம் ஒரு பிரளயம் போல எழுகிறது.

– 2014 ஓகஸ்ட் அம்ருதா இதழில் எழுதியிருந்த சிறுகதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *