சுதந்திரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 22, 2024
பார்வையிட்டோர்: 430 
 
 

(2017ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

Full many a gem of purest ray serene,
The dark unfathom’d caves of ocean bear:
Full many a flower is born to blush unseen,
And waste its sweetness on the desert air
– Thomas Gray

Our Sweetest Songs are those that tell us the saddest thoughts.
-Shelley

“அப்பா இப்பொ கல்யாணத்துக்கு என்னப்பா அவசரம்? இப்பொதான் எனக்கு பதினாறு வயசாகுது. நான் காலேஜுக்குப் போயி படிச்சு பட்டம் வாங்கணும்பா. சங்கீதத்துலெ இன்னும் நெறய கத்துக்க வேண்டியது இருக்குப்பா. பல மேடேலெ ஏறிக் கச்சேரி பண்ணணும். பத்து பேரு சொல்லணும், “மீனாட்சி கச்சேரியா? மிஸ் பண்ணக் கூடாதுப்பா” ன்னு. சித்திரம் நெறெய வரையணும். சிறுகதையும் எழுதணும்பா.’

“அவ்வொளோ தானா இன்னும் எதுனா பாக்கி இருக்குதா?”

“தோணுற போது அப்பொப்போ சொல்லறேம்ப்பா.” சிரித்துக் கொண்டே ஓடுகிறாள் மினாட்சி.

சுந்தரத்தின் மனம் ஐந்தாண்டுகள் பின்னே செல்கிறது. மனைவி மரணப் படுக்கையில். அவன் கையைப் பிடித்துக் கொண்டு சன்னக் குரலில் கெஞ்சுகிறாள், “நாளெக் கடத்தாமெ என் அண்ணன் மவன் மதியழகன் கையிலெ நம்ம பொண்ணெப் புடிச்சுக் கொடுத்துடுங்க. அதான் அவளுக்கு வாள்க்கெ பூரா காவலா இருக்கும்.’ கண்களைத் துடைத்தபடி, “சரி சரி” என்கிறார் அவர். அவளும் கண்களை மூடினாள் நிரந்தரமாய்.

கொடுத்த வாக்கெக் காப்பாத்த வாணாம் சுந்தரம்? அதனால் தான் மீனாட்ச்சி ‘வாணாம்பா”ன்னு சொன்னாலும் கேக்காமெ கல்யாண்த்தெ நடத்தி முடித்தார்.

மீனாட்சி புகுந்த வீடு சென்றடைந்தாள். வீடு சிறிய ஓட்டு வீடுதான். பக்கம் பக்கமாகப் பல வீடுகள் அந்தத் தெருவில். விட்டிலே மதியழகனைத் தவிற வேறு யாரும் கிடையாது

அவன் ஆத்தா போய் இரண்டு வருடங்களுக்குள்ளேயே அப்பனும் போய்விட்டான். கூடப் பிறந்தவர்கள் யாரும் இல்லை. தனிக் கட்டை அவன்.

மதி சுய தொழில் செய்பவன். வீடுகளுக்கு வெள்ளை, பெயின்டு அடிப்பவன். காலை எட்டு மணிக்குக் கிளம்பிப் போனால் இரவு ஒன்பது மணிக்கோ பத்து மணிக்கோதான் திரும்புவான், தனியாக அல்ல உடலுக்குள்ளே சில பாட்டில்கள் சாராயத் தண்ணியோடு.

மணமாகி ஒரு வாரம் கழிந்தது. வாசலில் வந்த மல்லிகைப்பூவில் இரு முழம் வாங்கி வீட்டில் இருந்த ஒரே சாமி படத்துக்கு ஒரு முழம் வைத்துத் தானும் வைத்துக் கொண்டாள் தலையில் மிச்சத்தை மீனாட்சி,.

இரவு வந்த மதி கத்தினான் வீட்டிற்குள் காலடி வத்ததும், “என்னடீ இது வீடு பூரா பொண நாத்தம்?”

“மல்லிகெ நல்லா இருந்தீச்சு வாசமா இருக்குமேன்னு நாந்தான் வாங்கினேன்.”

“மல்லிகெயுமாச்சு மண்ணாங் கட்டிய மாச்சு. இதெப் பாகுறப்போல்லாம் எங்க ஆத்தா நெப்புதான் வருது. அவொ மஞ்சளோடே போய்ட்டான்னு மல்லிகெப் பூவெ மாலெ மாலெயா வாங்கி சாத்தி இருந்தாங்க. தூக்கி எறிடீ வாசல்லே.”, என்று கத்தினான் மதி எட்டு வீட்டிற்குக் கேட்கும் படியாக.

கண்களில் இருந்து வழிந்த நீரைத் துடைத்தபடி தலையிலும் படத்திலும் இருந்த மல்லிகைப் பூசரத்தை எடுத்து வாசலில் வீசினாள் மீனாட்சி.

வீட்டில் தனிமையில் வாடிய மீனாட்சி தன்னுடன் கொண்டு வந்திருந்த சுருதிப் பெட்டியை வைத்துக் கொண்டு தான் கற்ற சில பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பாள் தன் பொழுதைப் போக்கிட தான் பாடுவதை சுவர்கள் தான் கேட்டுக் கொண்டிருக்கின்றன என்று எண்ணிவந்த மீனாட்சிக்கு ஒரு அதிர்ச்சி.

ஒரு நாள் அவள் பாடிக் கொண்டிருந்த போது ஜன்னலருகே ஒரு உருவம் நகர்ந்தது போல் தெரியவே வாசல் கதவைத் திறந்து பார்த்தாள். அங்கு ஒரு பத்து பன்னிரெண்டு வயதுள்ள சிறுவன் நின்று கொண்டிருந்தான்.

“யாரு நீ? எதுக்கு எங்க வீட்டு ஜன்னல் கிட்டெ நிக்கிறெ?”

“அக்கா எம் பேரு பாலு. பக்கத்து ஊட்டுலெதான் இருக்கேன். எனக்கு பாட்டுன்னா ரொம்பப் புடிக்கும். எங்கெ பாட்டு வந்தாலும் நின்னு கேட்டு கிட்டு இருப்பேன். எங்கூடப் படிக்குற பசங்களெல்லாம் என்னெ ‘ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் வந்திடுச்சிடா’ ம்பாங்க.

தினோம் நீங்க பாடும் போது வாசல்லெதான் நின்னு கேட்டுகிட்டு இருப்பேன். இன்னிக்கித்தான் இவ்வொளோ நல்லாப்

நல்லாப் பாடுறாங்களே யாரு பாடுறதுன்னு பாக்கலாம்னு சன்னல் வழியே எட்டிப் பாத்தேன். தப்பு தாங்கா.

நீங்க சின்னஞ்சிறு கிளியேன்னு ஒரு பாட்டு பாடினீங்களே அதெ இன்னோரு வாட்டி பாடுங்க அக்கா. அதெக் கேக்குற போதெல்லாம் என் செத்துப் போன அக்கா ஞாபகம் வரும். கண்ணுலெ தண்ணி தானா வரும். ஆனாலும் அந்தப் பாட்டு எனக்கு ரொம்பப் புடிக்கும்.”

“சரி பாடறேன். வா உள்ளெ வந்து ஒக்காரு”, என்று சொல்லியபடி சுருதிப் பெட்டியை மீண்டும் இயக்க ஆரம்பித்தாள் மீனாட்சி.

“சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா” என்று மீனாட்சி ஆரம்பித்த உடனேயே கண்கள் குளமுடைக்க தலையைத் திருப்பிக்க் கொண்டான் பாலு. அழுவது மீனாட்சிக்குத் தெரியக் கூடாது என்ற எண்ணமோ என்னவோ தெரியவில்லை. அப்படியே திரும்பிய தலையை ஒரு 360 டிகிரி சுற்றி வீட்டின் சுவர்களை ஒரு நோட்டம் விட்டான். ஆங்காங்கே காகிதத்தில் வரைந்து ஒட்டப் பட்ட ஓவியங்கள். ஒன்றை விட ஒன்று அழகு.

அமுத கானம் வந்து கொண்டிருந்தது மீனாட்சியின் வாயில் இருந்து.

“உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில்
உதிரம் கொட்டுதடி
என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ?”

என்று மீனாட்சி பாடியபோது பாலுவின் நெஞ்சில் உதிரம் கொட்டாததுதான் பாக்கி. அவன் கண் முன்னே படுக்கையில் அவன் அக்கா, பேச இயலாத நிலையில். அவன் கைகளை அவளருகே நீட்ட மெல்ல முயற்சி செய்து அவன் கைகளைத் தொட்டாள். இருவர் கண்களிலும் கண்ணீர். அதுதான் அவர்கள் கடைசியாகப் பேசிக் கொண்ட மவுன வார்த்தைகள்.

பாட்டு முடிந்தது.

நினைவுகளை மாற்ற எண்ணி, பாலு கேட்டான், “அக்கா இதெல்லாம் நீங்க வரெஞ்சதா?”

“ஆமாம். எனக்குப் போது போகலேன்னா படம் வரைவேன். இல்லேன்னா குட்டி குட்டி கதெய்ங்கெ எழுதுவேன்.”

“கதெ கூட எழுதுவீங்களா? பத்திரிகைகள்லெ ஒங்க ஓவியங்களே, கதெய்ங்களைப் போட்டதுண்டா அக்கா?”

“போடலாந்தான். யாரு அனுப்பறது?”

“அக்கா எங்கிட்டெ குடுங்கக்கா. நான் நம்மூர்லே இருக்குற பத்திரிகெ ஆபீசுலெ கொண்டு சேக்குறேன்.”

ஒரு வாரம் கழிந்தது. ஒரு சனிக்கிழமை.

கையில் ஒரு வாரப் பத்திரிகையை வைத்துக்கொண்டு மூச்சிறைக்க தாழ்ப்பாள் போடாதிருந்த கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்த பாலு கத்தினான், “அக்கா ஒங்களோட படமும், கதெயும் இந்த வாரம் வந்துருக்கக்கா ” என்று.

வேலைக்குத் செல்லாமல் வீட்டில் படுத்திருந்த மதி கத்தினான், “எவண்டா அவன் எனக்குப் புதுசா மொளெச்ச மச்சான்? நான் ஊட்டுலெ இல்லதபோது ரெண்டு பேருமா கொஞ்சிக் கும்மாளம் அடிக்கிறீங்களா?”

பேச்சோடு நிற்கவில்லை மதி. எழுந்து பளார் என்று பாலுவின் கன்னத்தில் அறைந்தான்.

“சின்னப் பையனைப் போய்…” சொல்ல வந்ததை பூராவுமாகச் சொல்லி முடிக்க வில்லை அவள். மீனாட்சியின் கன்னத்தில் விழுந்தது அடுத்த அறை.

“என்னடி? சின்னப் பையன் கேக்குதோ ஒனக்கு? நான் கௌவனாயிட்டேனோ?” பாலு ஒன்றும் பேசாது வெளியே சென்றான். மீனாட்சியும் ஒன்றும் பதில் பேசவில்லை. குடிகாரனிடம் நியாயமா பேச முடியும்?

மறு நாள் காலை ஏழு மணிக்கு எழுந்த மதி பல் துலக்கி விட்டு “ஏய் மீனாச்சி டீ கொண்டாடி நான் வேலெக்கு போவணும்” என்றான். ஐந்து நிமிஷம் ஆயிற்று.

மீனாட்சியைக் காணோம்.

சமயல் அறைக்குள் சென்று பார்த்தான். அங்கும் அவளைக் காண வில்லை. பக்கத்து வீட்டு வாசலில் நின்று கத்தினான், “ஏய் பாலூ வாடா வெளியே”, என்று.

பாலுவின் அம்மா வந்து சொன்னாள் “பாலு காலெலெயே வெளிலெ கெளம்பிப் போயிட்டானுங்களே.”

“எங்கெ போனான் அந்த ராஸ்கல்?”

“சொல்லீட்டு போகலீங்களே.”

‘அவங்கூட ஓடிப் போயிருப்பாளோ? இருக்காது. எங்க போயிருக்கப் போறா களுதெ. அப்பன் ஊட்டுக்குப் போயிருப்பா. ராவிக்கு வந்துருவா. நாம போவலாம் வேலெக்கு’ என்று மனதிற்குள் சொல்லியபடி வீட்டைப் பூட்டி சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டுக் கிளம்பினான்.

இரவு மதி வீடு திரும்பியபோது வீடு பூட்டியபடி இருந்தது. பக்கத்து வீட்டில் இருந்து சாவியை வாங்கிக் கொண்டு பூட்டை திறந்து ஊள்ளே சென்றான். வயிற்றில் பசி கொல்ல அடுப்பங்கரைக்குச் சென்றால் அங்கு பாத்திரங்கள் எல்லம் கவிழ்த்தபடி இருந்தன. களுதெ வரட்டும். “நாளெக்கி அவளுக்கு வெச்சுக்கறேன் கச்சேரி”, என்றபடி தரையில் படுத்தான்.

மறு நாள் காலை வீட்டுக் கதவை யாரோ தட்ட, மதி கதவைத் திறக்க, வாசலில் இரு போலீஸ்காரர்கள். அவர்களில் ஒருவர் கையில் இருந்த கடிதத்தை மதியிடம் நீட்டி, “நேத்து கடற்கரைலெ ரெண்டு பாடி ஒதுங்கீச்சு. ஒண்ணு சுமார் அம்புது வயசு ஆம்பிளே. இன்னோணு பதினாறு, பதினேளு வயசுப் பொண்ணு. அக்கம் பக்கத்துலெ விசாரிச்சதுலெ இந்தப் பொண்ணு இந்த ஊட்டுலெதான் இருந்தீச்சுன்னு சொன்னாங்க. இதெப் படிச்சுப் பாருங்க” என்றார்.

கடிதத்தை வாங்கிப் படித்தான் மதி.

“நான் எண்ணியபடி வாழத்தான் சுதந்திரம் இல்லை எனக்கு. சாகவுமா இருக்காது அது எனக்கு? என்னை பிறர் கண் படாதபடி வைத்து, விஷமென மனம் நோக வார்த்தைகளைக் கக்கி, உடல் நோக அடித்து வளர்த்த என் புருசனின் கைகளுக்கு காப்புகள்தான் போட வேண்டும். நானும் அப்பாவும் செல்கிறோம் இவ்வுலகை விட்டு. இப்படிக்கு மீனாட்சி”.

கடிதத்தைப் படித்த மதி, “அடிப்பாவி, இப்படிப் பண்ணீட்டெயெடி” என்று கத்தியபடி ஓடப் பார்த்தான். அவனைத் தாவிச்சென்று பிடித்த போலீஸ்காரர், “நான் போடுறேன் காப்பு ஒங்க கைக்கு. இ.பி.கோ. செக்ஷன் 306 ன் கீழே கேசும் ஏற்கெனவே பதிவு பண்ணி வெச்சிருக்காரு இன்ஸ்பெக்டர் ஐயா” என்றபடி மதியை போலீச் வண்டியில் ஏற்றினார்.

தெருக் கோடியில் இருந்த பூங்காவில் வானொலியில் டி.கே. பட்டம்மாள் பாடிய

“ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்
என்று ஆடுவோமே”

என்ற பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது.

மதியழகன் என்று அழகாகப் பெயர் வைத்தார்களே யொழிய அவன் மதி அழகில்லாமல் போய் விட்டதே என்ன செய்ய? பெயர்வைக்கும் போது அவன் குணம் எப்படி இருக்கும் என்று தெரியாதே.

“என்று வரும் நாட்டுக்கு உண்மை சுதந்திரம்
இந்த சாராயக் கடைகள் தானோ நிரந்தரம்”

– அபலைகள், முதற் பதிப்பு: ஜூலை 2017, மின்னூலாக்கம்: தனசேகர் (tddhanasekar@gmail.com), மின்னூல் வெளியீடு: http://FreeTamilEBooks.com.

என்னைப் பற்றி சில (பல?) வரிகள்: எழுதும்படியாக ஒன்றுமே இல்லை. இருப்பினும் எழுதுகிறேன். பிறந்தது சிதம்பரத்தில், 1929 ஜூன் 15 அன்று. தந்தை தென் இந்திய ரயில்வேயில் அதிகாரியாக இருந்தார். நான்கு அண்ணன்கள். நால்வரும் இன்று இல்லை. மூன்று தங்கைகளில் இருவர் இன்று இல்லை. பெற்றோர்கள் நரசிம்மன், ராஜலக்ஷ்மி - படம் கீழே சாந்த ஸ்வ்ரூபிகள். சுற்றத்தாரையும் அரவணைத்துக் கொண்டு, குழந்தைகளையும் வளர்த்து முன்னுக்குக் கொண்டுவர தனக்கென ஒரு சுகமும்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *