(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அந்த நட்சத்திர ஹோட்டலில் இரண்டாவது மாடியில், கால் பகுதியை ஆக்கிரமித்திருக்கும் கான்பரன்ஸ் ரூம்’ எனப்படும் ஆலோசனைக் கூடம். திகில் திரைப்படங்களில் காட்டப்படுவது போன்ற ஒரு சதி ஆலோசனை அறை போலவே தோன்றியது. அங்கேதான், தென்னக அரசு அதிகாரிகள் எப்படி எப்படி சிக்கனத்தைக் கடைப்பிடிக்க லாம் என்று ஆலோசிப்பதற்கு மாநாடு போட்டிருக்கிறார்கள்.
அந்த ஆலோசனைக் கூடத்தை எவரும் எளிதில் கண்டு பிடிக்க முடியாது. அதன் வெளிப்பகுதி , அப்போது தான் வார்னிஷ் செய்யப்பட்டது போன்ற வரைவரையான தேக்குச் சுவராய் எழுந்திருந்தது. அதன் மேல் தேக்குக் கோடுகளும், அந்தக் கோடுகளுக்கு இடைப்பட்ட பள்ளத்தாக்கு வெள் ளைப் பலகைகளாலும் கலையழகுடன் காட்சி காட்டியது. இப்படிப்பட்ட இந்தத் தேக்குச் சுவரில் ஒரு மத்திய இடத்தில் ஒரு சின்ன எவர்சில்வர் பொம்மை. பழகாதவர்களுக்கு அது ஒ கலைப்படைப்பாக சும்மா ஒரு அழகிற்காய் வைப்பது போல் தோன்றும். ஆனால், பழகியவர்களோ, அதை ஒரு பிடி பிடித்தால், அந்த இடத்திலேயே தேக்குச் சுவர் வாய் திறக்கும். கதவு, நாக்கு மாதிரி வளைந்து உள்ளே பற்கள் மாதிரியான மின்சார பல்புகளை காட்டும்.
இப்படிப்பட்ட இந்த அறையின் வாய்க்குள் பலர் விழுந்து கொண்டிருந்தார்கள். உள்ளே சைபர் வடிவத்தில் இரு பக்கமும் நாற்பதடி நீளத்தில் வளைந்துள்ள மேஜை போடப்பட்டு, இரு முனைகளிலும் அது ஒட்டிக் கொண்டிருந் தது. அவற்றிற்குப் பின்னால் இருபுறமும் நாற்காலிகள். இரும்போ மரமோ இல்லாதது போல், இலவம் பஞ்சு சுகம் கொடுக்கும் லெதர் நாற்காலிகள். மேஜைகள் பருவப்பெண் போல் சன்மைக்காவில் மின்னின. பல இடங்களில் பல்வேறு மைக்குகள். அவற்றின் அடிவாரத்தில் பச்சை , சிவப்பு கண் ணாடிக் கோளங்கள். மேலே பிரபஞ்சமே தரிசனம் கொடுப் பதுபோல் விதவிதமான மின்சார விளக்குகள். நட்சத்திர பல்புகள் ….. நிலா பல்புகள் . கேலெக்ஸி பல்புகள் ….
இப்படிப்பட்ட இந்த அறைக்குள் முன் பகுதியில் போடப் பட்ட மூன்று நாற்காலிகளில் மூன்று கிளாஸ் ஒன் தலைகள் உட்கார்ந்திருந்தன. அவர்களுக்கு எதிர்த்தாற் போல் பத்து பன்னிரண்டு கெஜடெட் தலைகள். அத்தனை பேரும், நடுவில் உட்கார்ந்திருக்கும் ஜாயிண்ட் டைரக்டர் ராமானுஜத் தின் வாயையே கண்களால் கொத்தினார்கள். அந்த ஐம் பத்தி நான்கு ஜாயிண்டோ , அவசரத்தில் டை அடித்த தனது மீசையின் இரு நுனிகளும் அணில் வால் மாதிரி வெள்ளையாய் கொசுறு முடிகளை காட்டிக் கொண்டிருப் பதை, ‘ஜென்டில்மென் அறையில் போய் கண்டு பிடித்த தால், இப்போது அந்த மீசையின் இரண்டு பக்கத்தையும் இரண்டு கைகளாலும் மறைத்தார். அதை ஒரு சிந்தனைச் செயலாக இதர அதிகாரிகள், நினைத்தபோது, அஸிஸ்ட் டெண்ட் டைரக்டர் சுந்தரம் லேசாக இருமினார். அதாவது, நேரம் ஆகிக் கொண்டே இருக்கிறதாம். இதனால், கவனம் கலைந்த ராமானுஜம் மீசையை மறைத்தபடியே வாயை வட்டவடிவமாக்கிக் கொண்டு பேசினார்.
“உங்களோட திறமையை எடுத்துக்காட்ட இது ஒரு சந்தர்ப்பம். இந்த மாநாட்டுக்கு வரக்கூடியவர்கள் நமது விருந்தாளிகள் என்பதை மறந்துவிடக்கூடாது பெரிய பெரிய அதிகாரிகள் என்பதையும் மறந்துவிடக்கூடாது. அரசாங்கமே நம்மை நம்பியிருக்கு. அதுக்கு நாம் இப்போது பக்கபலமாய் நிற்க வேண்டும். நிர்வாகத்தில் எப்படி சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது என்பதை ஆலோசிக்கும் இந்த மாநாடு வெற்றி பெற நாம் ஒவ்வொருவரும் சபதம் ஏற்றுக்கொள்ளணும். இதுக்கு எவ்வளவு செலவானாலும் சரி.”
“இந்தச் சந்தர்ப்பத்தில், மாநாட்டின் பூர்வாங்க பணி களுக்கு பொறுப்பேற்றிருக்கும் டெபுடி டைரக்டர் மிஸஸ் காயத்திரி மகாதேவன் ஒரு பைலை எடுத்து ஜாயிண்ட் டைரக்டரிடம் நீட்டினாள். அதைப் புரட்டிக்கொண்டே ராமானுஜம் கேள்விக் கணைகளைத் தொடுத்தார்.
“அதிகாரிகளுடைய ஹாஸ்பிட்டாலிட்டிக்கு ஓவர் ஆல் இன்சார்ஜ் பாமாதானே? சொல்லும்மா – மொத்தம் எத்தனை ஆபீஸர்ஸ் வாராங்க?”
பாமா, தனக்குக் கொடுத்திருக்கும் புதிய பொறுப்பால் பூரிப்படைந்தது போல், கன்னங்களை பூரிபோல் உப்ப வைத்தபடி எழுந்து, உபசரிப்புக் குரலில் பதிலளித்தாள்.
“கேரளாவிலிருந்து முப்பது பேர் 20 கெஜட்டட் ; பத்து கிளாஸ் ஒன். கர்நாடகாவிலிருந்து 33 பேர்; ஆந்திராவி லிருந்து 35 பேர்; நம்ம ஸ்டேட்டிலிருந்து 33 பேர்; பாண்டிச் சேரியிலிருந்து ஒன்பது பேர்….ஆக மொத்தம் 117 பேர்”
“இருக்காதே….. கூட வருமே…… எதுக்கும் கால்குலேட் டரை வைத்து கணக்குப் பாரு.”
பாமா, இடுப்புக்குள் மணிபர்ஸ் மாதிரி வைத்திருந்த கால்குலேட்டரை வைத்துக் கணக்குப் போட்டபோது, புரோகிராம் அதிகாரியான லிங்கன், ஒரு யோசனை சொன்னார்.
“இனிமேல் சிக்கனம் எவ்வளவு பிடிக்கிறோம்னு அடிக்கடி மானிட்டர் பண்ணணும் ஸார். அதனால நம்ம அலுவலகத்திலிருக்கிற 2000 ஊழியர்களுக்கும் 2000 கால் குலேட்டர்கள் வாங்கிக் கொடுத்துடணும். அப்பதான் சிக்கனத்தை சரியாக் கணக்கிட முடியும்.”
ஜாயிண்ட் டைரக்டர் ராமானுஜம் அதை ஒப்புக் கொள்வதுபோல் தலையாட்டிவிட்டு, பேச்சைத் தொடங்கினார்.
“அப்புறம்…. அக்காமடேஷனுக்கு ஏ.ஓ. தானே இன் சார்ஜ்? சொல்லுங்க மிஸ்டர் – யார் யாரை எங்கெங்கே போட்டிருக்கீங்க.”
வயிறு முட்டிய நிர்வாக அதிகாரி, ‘பணிவன்போடு’ பதிலளித்தார்.
“கிளாஸ் ஒன் அதிகாரிகள் நாற்பத்தெட்டு பேர் இவங் களை நுங்கம்பாக்கத்திலுள்ள ஸ்டேட் பாங்க் கெஸ்ட் ஹவுசி லேயும், அண்ணா சாலையிலுள்ள உணவு கார்ப்பரேஷன் கெஸ்ட் ஹவுசிலேயும், சென்னை துறைமுக டிரஸ்ட் கெஸ்ட் ஹவுசிலேயும் புக் பண்ணியிருக்கேன். கெஜட்டட் ஆபீ ஸருங்களுக்கு தமிழ்நாடு கூட்டுறவு யூனியன்ல புக் பண்ணி யிருக்கேன். பட்….”
“இப்பும் வேண்டாம். பட்டும் வேண்டாம். விஷயத்தைச் சொல்லுங்க….”
“கிளாஸ் ஒன் ஆபீஸர் எல்லோருக்கும் ஏஸி ரூம்… வாடகை நூறு ரூபாய்க்கு மேல ….”
“என்னப்பா நீ உன் வீட்டிலே இருந்து படியளக்கற மாதிரி பேசுறே — இதென்ன சாதாரண மாநாடா? சிக்கனம் பற்றிய மாநாடு — எக்கானமி இன் கவர்ன்மெண்ட் எக்ஸ் பெண்டிச்சர் கான்பரன்சுக்கு வருகிற அதிகாரிங்களுக்கு , நல்ல நல்ல வசதி செய்தி கொடுத்து, நல்லதோர் அட்மாஸ் பியர் கொடுக்கிறது நம்ம பொறுப்பாச்சே. செலவப் பார்த்தா முடியுமா? ஓ.கே . இந்த மகாநாட்டில் கலந்து கொண்டு கெய்டு பண்ண வருகிற நம்முடைய செகரட்டரி , அடிஷனல் செகரட்டா, ஜாயிண்ட் செகரட்டரி , டெப்டி செகரட்டரிகள் எல்லோருக்கும் மேல நம்ம டைரக்டர் – ஜெனரல் – இவங்களுக்கு சேப்பாக்கம் கெஸ்ட் ஹவுசிலதான் புக் பண்ணியிருக்கு …?”
யெஸ் சார் – பட்ட எல்லோரையும் சேப்பாக்கத்துல அக்காமடேட் செய்ய முடியாது. அதனால், சிந்தாதிரிப்பேட் டையில் இருக்கிற கெஸ்ட் ஹவுசில் மூன்று பேரைப் போட்டா கணும் .ஆனால் அங்க ஒரே கொசு சார். பேசாமல் டெப்டி செகரட்டரிகள் போட்டிடலாமா?
“அவங்கதாய்யா சித்ரகுப்தங்க- சிந்தாதிரிப்பேட்டை தேவையில்ல….. காரணம், நம்ம செகரட்டரி , சிக்கனத்தை மேலும் எப்படிச் செம்மைப்படுத்தலாம்னு பயிற்சி பெறதுக் காக நியூயார்க் போயிருக்கார்….. அடிஷனல் செகரட்டரி மிஸ்டர் ராமலிங்கம் இதே காரணத்துக்காக டோக்கியோவுக்கு போயிருக்கார். ரெண்டு பேரும் வரமாட்டாங்க.”
“அப்போ …. நம்ம டைரக்டர் ஜெனரல் மட்டும் இளிச்சவாயரா?”
“இல்ல .. அவரு போன வாரம் பெர்லின் போய்ச் சிக்க னத்தைப் பற்றி ஆறு நாளாய்த தெரிஞ்சுட்டு வந்திருக்கார். அப்படிப்பட்டவர் இந்த மாநாட்டுக்கு வாரது நம்மோட பாக் கியம் – பாமா, இன்னுமா கணக்கு பண்ணுறே.”
“இந்தக் கால்குலேட்டர் ஒர்க் பண்ண யோசிக்குது சார். ஒரு பேப்பர்ல எழுதி கணக்குப் பார்த்து இதோ சொல்லிடறேன் சார்….”
பாமா பேப்பர் கிடைக்காமல் தனது உள்ளங்கையிலேயே பச்சை குத்திய போது, ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்த அஸிஸ் டெண்ட் டைரக்டர் சுந்தரம், தன்பாட்டுக்கு பேசினார்.
“கொட்டேஷன்ஸ் வாங்குற பொருட்கள் எல்லாம் இப் படித்தான் இருக்கும். இதனால் சிக்கனம் பிடிக்க முடியாது. மாமூல் தான் வசூலிக்க முடியும்.”
இந்தச் சமயத்தில் என் ஜீனியர் மோகன் எழுந்து நின்றே ஒரு யோசனை சொன்னார்.
“ஏ.டி. சொல்றது கரெக்ட் ஸார். இனிமேல் எந்த பொருள் வாங்கினாலும் மார்க்கெட்ல வாங்கணும். நம்மோட டிஸ்கிரிஷனரி பவர்ல வாங்கறதுக்கு பெர்மிஷன் கேக்கணும்.”
நாற்காலியின் பின்பக்கமாக சாய்ந்திருந்த ராமானுஜம், முன்பக்கமாகச் சரிந்து எரிந்து விழுந்தார். அதோ இருக்கிற அஸிஸ்டெண்ட் டைரக்டர் சுந்தரத்தை அவர் எதுவும் செய்ய முடியாது. காரணம், கடவுளே வந்தாலும் இனிமேல் அவருக்குப் புரோமோஷன் கொடுக்க முடியாது அந்த அள வுக்கு அவரது அந்தரங்க குறிப்பேடுகள் பழுது பட்டுப்போனது பகிரங்க ரகசியம். அதோடு, ஒரு காலத்தில் தனக்கே அதிகாரியாக இருந்தவர் இந்த சுந்தரம். இப்படி எல்லோ ரிடமும் ஏடாகூடமாகப் பேசி தண்ணியில்லாத காடுகளைப் பார்த்துவிட்டு, இப்போது தான் சென்னைப் பக்கம் வந்திருக்கிறார். ஆனால் இந்த மோகனுக்கு என்ன வந்தது?
“இந்த மாதிரி ஸில்லியாப் பேசப்படாது மோகன். மாநாடு விவாதிக்கப் போவது மாமூலைப் பற்றி இல்ல…. கொட்டேஷன் முக்கியமா , முக்கியம் இல்லையா என்கிறதும் இல்ல…… இன்று நம் நாட்டுக்கு மிகத் தேவையான சிக்கனத் தைப் பற்றி ஆலோசிக்கவே மாநாடு கூடுது – அப்புறம் சோமாஜுலு – நீதானே டிரான்ஸ்போர்ட்டுக்கு இன்சார்ஜ் …. செப்பு ..”
சோமாஜுலு பித்தளை மாதிரி இளித்துக்கொண்டே செப்பினார் . செகரட்டரி, அடிஷனல் செகரட்டரி, ஜாயிண்ட் செகரட்டரி , டெப்டி செகரட்டரிங்க , நம்மோட டைரக்டர் ஜெனரல் இவங்களுக்கு தனித்தனியா ஏழு ஏசி கார் புக் செய்திருக்கேன் அதோட இவங்களுக்காக ரெண்டு ஸ்பேர் கார் புக் செய்திருக்கேன்… அப்புறம் எழும்பூர்ல இறங்குற ஆபீஸர் களை பிக் அப் செய்ய ஆறு கார்… சென்ட்ரலுக்கு ஏழு கார் நமக்கு மூணு கார் எமெர்ஜின் ஸிக்கு ரெண்டு கார்…. அப்புறம் ஒரு விஷயம் சார்….. நம்ம கிட்ட காண்ட்ராக்ட் எடுத்திருக்கிற கம்பெனிக்காரங்ககிட்ட , நீங்க கண்டிப்பா சொல்லிடணும்….. இந்த மாதிரி சமயங்களிலே பத்து லிட்டர் பெட்ரோலோட காருங்களை அம்போன்னு விட்டுடறான்… ரெண்டு ஹெட்லைட்ல ஒண்ணு எரியாது. ரெண்டு கதவுல ஒண்ணு திறக்காது.”
கார் கம்பெனியோடு , ‘ இஸ்குனி தொஸ்து’ வைத்திருக் கும் ஜாயிண்ட் டைரக்டர் பேசாமல் இருந்தபோது, பாமா நெளிந்தாள் …. “அதுதான் செகரெட்டரியும் அடிஷன் செகரட்டரியும் வரலையே…… அவங்களுக்கு எதுக்கு கார்” என்று சொல்லப் போனவள், அப்படிக் கேட்பது ஒழுங்கீன மாக கருதப்பட்டு, தமிழ் புத்தாண்டிற்கு ரீலிஸா வதாக எதிர் பார்க்கப்படும் தனது புரோமோஷன் பொங்கலாகிவிடக் கூடாது என்று பயந்தவள் போல், எல்லோரையும் போல் பலமாகத் தலையாட்டினாள். அப்போது, ஜாயிண்ட் டைரக்டர் லேசாய் முதுகை வளைத்தபடியே பொதுப் படையாய் கேட்டார்.
“இந்த மாநாட்டில், மூக்கிலே விரல் வைக்கிறது மாதிரி சிக்கனத்திற்கு யாராவது ஒரு தீவிர வழி சொல்ல முடியுமா?யாராயிருந்தாலும் சரி….”
அஸிஸ்டெண்ட் டைரக்டர் சுந்தரம் நல்ல சந்தர்ப்பத்தை நழுவவிட விரும்பவில்லை . எழுந்தார். இயல்பாய் பேசுவது போல எங்கேயோ போனார்.
“இந்த மாநாடே ஒரு வேஸ்ட். இருந்தாலும் இதிலயும் சிக்கனத்தை மேற்கொள்ளலாம் … தில்லியிலிருந்து பெரிய அதிகாரிகள் ஒரே பிளைட்லதான் வராங்க. ஒரே கெஸ்ட் ஹவுசிலதான் தங்குறாங்க. அவங்களை ஒரு காரிலேயோ, ரெண்டு காரிலேயோ பிக்கப் செய்யலாம். மீதி நாலு கார் வேஸ்ட். ரயில்வே ஸ்டேஷன்களில் கெஜட்டட் அதிகாரிகள் ரஷ் இல்லாத காலையிலேயே வந்துடறாங்க. அவங்கள் பஸ்ஸிலேயே கொண்டு வந்துடலாம். அதோட , இந்த கான்பரன்ஸ இங்க போடறதவிட நம்ம ஆபீசுலேயே ஒரு ஷாமியானா பந்தல் போட்டு நடத்திருக்கலாம். மெட்ராஸ்ல சொந்த வீடுகளிலும், சொந்தக்கார வீடுகளிலேயும் தங்கப் போற அதிகாரிங்களுக்கு ரூம் புக் பண்ணியிருக்க வேண்டாம். அவங்களும் போலி ரசீது கொடுத்து ரூம் வாடகையை வசூலிக்கப் போறாங்க. எனக்குத் தெரிஞ்ச நிர்வாகச் சிக்கனம் இது தான்.”
ஜாயிண்ட் டைரக்டர் ராமானுஜத்தின் ரத்த அழுத்தம் கூடியது. ஏற்கனவே அந்த வியாதி உள்ளவர். சுந்தரத்தைப் பார்த்து கத்தப் போனார். வாய்தான் திறந்ததே தவிர வார்த்தைகள் வரவில்லை . உடனே அவரது வலது பக்கமி மிருந்த டெப்பு. டைரக்டர் கோபம் கோபமாய் கத்தினார். ஜாயிண்ட் , ஒரு மாத்திரையை எடுத்து போட்டுக் கொண்டார்.
“நாம யோசிக்க வேண்டியது மாநாட்டின் விவாதம் பற்றித்தான்…. மாநாட்டிற்கான பணிகளைப் பற்றி இல்ல .. அதோட சிக்கனத்துக்கான , இன்றைய செலவு நாளைய நாட்டின் சேமிப்பு…. நாம விருந்தோம்பல் செய்யுறவங்க. பாவம் ….. பிள்ள குட்டியை விட்டுட்டு பஸ்ட் கிளாசில் வருகிற சகாக்களை நாம கவனிக்காட்டி யாரு கவனிப்பாங்க…… அவங் களுக்கில்லாத ஏஸி ரூம் இருந்தெனை, போயென்ன? சிக்கனத்துக்கான உடடிைச் செலவுக்குப் பயந்தால் நம் எதிர் காலம் ஊதாரிக் காலமாயிடும்.”
ஜாயிண்ட் டைரக்டரால் இதுவரை ஓரம் கட்டப்பட்ட அந்த ஆண் டெப்டி டைரக்டர் பெருமிதமாகப் பேசியதை, முகர்வது போல் மூக்கை உறிஞ்சினார். இறுதியாய் ஆலோசனைக் கூட்டம் விமான நிலையத்திற்கும், ரயில்வே நிலையத்திற்கும், விருந்தினர் விடுதிக்குமாய் சிதறியது.
***
பிற்பகல் மூன்று மணி அளவில், தென்னக அரசு அதிகாரிகளின் நிர்வாகச் சிக்கன மாநாடு துவங்கி விட்டது. அந்த மாநாட்டின் பெயர்ப் பலகையை பல்வேறு வண்ண பல்புகள் சிக்கனமில்லாமல் மின்னி மின்னிக் கட்டின…. மேடையில் முதலில் உள்ள இரண்டு நாற்காலிகளில் ஜாயிண்ட் செகரட்டரி எஸ். பி. லாலும், இயக்குநர் திலகம், (அதாவது டைரக்டர் ஜெனரல்) சுரேஷ் குப்தாவும் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார்கள். அந்த இரண்டு நாற்காலிகளுக்கும் பின்னால் போடப்பட்டிருந்த ஒரு நாற்காலியில், ராமானுஜம் நெளிந்து கொண்டிருந்தார். முன்னால் இருப்பவர்கள் இரண்டு பேருமே அவரது பதவியின் தலைவிதியை எழுது கிறவர்கள். ஏற்கனவே அவர்கள் கீரியும், பாம்பும் மாதிரி . இவர்களில் ஒருவருக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மற்றவர் கடித்து விடுவார். என்ன செய்யலாம் என்று ராமானுஜம் தலையைப் பிய்த்தபோது. ஜாயிண்ட் செகரட்டரி, இயக்குநர் திலகத்திற்கு சந்தர்ப்பம் கொடுக்காமல் மேடை ஓரமாக உள்ள மைக் முன்னால் போய் பேசத் துவங்கினார்.
“இன்று நம் நாடு திருப்புமுனையில் இருக்கிறது. வெளி செலாவணியை நிலைப்படுத்த வேண்டும். விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை, உற்பத்தியை நோக்கி இட்டுச் செல்ல வேண்டும். இதற்கு முக்கியமான ஒரே வழி சிக்கனம். சிக்கனம் – சிக்கனமே …”
ஜாயிண்ட் செகரட்டரி இப்படிப் பேசிக் கொண்டிருந்த போது, இலாகா தலைவரான டைரக்டர் ஜெனரல் பின்புற மாய் திரும்பி ராமானுஜத்திடம் ஒரு சந்தேகம் கேட்டார்.
“திருப்பதி கோயில் நிர்வாகத்தினர், ரொம்ப சிக்கனம் கடைப்பிடிக்காங்களாமே! சீப் அன்ட் பெஸ்ட் என்கிற மாதிரி செலவையும் குறைத்து, சேமிப்பையும் கூட்டி சேவையின் தரத்தையும் உயர்த்தியிருக்காங்களாமே… இஸிட்.”
ராமானுஜம் புரிந்து கொண்டார். நேரிடையாகவே பதிலளித்தார்.
“எஸ் ஸார்…… நீங்க கூட திருப்பதிக்கு போய் நிர்வாகச் சிக்கனத்தைப் பத்தி தெரிஞ்சுட்டு வரலாம் .. இதனால நாடே பலன் பெறும்…. ஏற்பாடு செய்யட்டுங்களா?”
இயக்குநர் திலகம், ஆமோதிப்பதாய் தலையாட்டிய போது பேச்சை முடித்த ஜாயிண்ட் செகரட்டரி , தனது இருக் கையில் வந்து உட்கார்ந்து ராமானுஜத்திடம் ஒரு கேள்வி கேட்டார்.
“திருப்பதிக்கு காஞ்சிபுரம் வழியாப்போகலாம் இல்ல….”
“ஆமா ஸார். காஞ்சிபுரம் போய் அரசாங்கத்தோட சிக்கனம் வெற்றி பெற சங்கராச்சாரியார் சுவாமிகள் கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு அப்படியே கோயில் குளங்களையும் பார்த்துட்டு திருப்பதி போய் சிக்கனத்தைப் பத்தி தெரிஞ்சுக் கிட்டு வரலாம். இன்னைக்கே போயிடலாம் ஸார்”
இலாகா தலைவரான டைரக்டர் ஜெனரல் பாம்புக் காதனான ஜாயிண்ட் செகரட்டரி, தன்னோடு ஒட்டிக் கொண்டதில் அதிருப்திப்பட்டார். அந்த அதிருப்தியை மறைக்கும் வகையில் மேடை முன்னால் போனார். பொதுப் படையாகக் கேட்டார்.
“இந்த சிக்கன மாநாட்டில் ஆக்க பூர்வமான யோசனை கள் இருந்தால் யாரும் சொல்லலாம்….. ஆனாலும் அது, சிக்கனத்தை சீர்படுத்துறதா மட்டுமே இருக்கணும் ஓ.கே. ஒன் பை ஒன்”
ஆடியன்ஸ் – அதிகாரிகள், ஒருவர் ஒருவராய் எழுந்து, சிக்கனத்திற்கான சீரிய யோசனைகளைச் சொன்னார்கள்.
“இனிமே சிக்கனமே நமது உயிர் மூச்சு – இதைக்கடை பிடிக்க உங்களோட கெய்டன்ஸ் அவசியம். அதனால், ஹெட் குவார்ட்டர்ஸோடு சிக்கனம் பற்றி தெரிவிக்கவும், தெரிந்து கொள்ளவும் ஒவ்வொரு பிராஞ்ச் ஆபீஸிலயும் ஒரு பேக்ஸ் மிஷன் வைக்கணும்… அதை கட்டிக்காக்க ஏஸியும் இருக்கணும் ….”
“சிக்கனத்தைக் கண்காணிக்க ஒவ்வொரு ஆபீஸிலேயும் ஒரு கம்ப்யூட்டர் வைக்கணும்… இந்த கம்ப்யூட்டரை தேசிய சர்க்யூட்ல இணைக்கணும்.”
“ஊழியர்கள் எப்படி சிக்கன நடவடிக்கையில் ஈடுபட்டி ருக்காங்க என்பதை கண்காணிக்க இனிமேல் புரோகிராம் ஆபீஸர்களுக்கும் வீட்டுக்கு டெலிபோன் கொடுக்கணும்.”
இயக்குகர் திலகம், அவர்கள் சொன்னதை ஒப்புக் கொண்டது போல், தலையாட்டினார். பிறகு ஜாயிண்ட் செகரட்டரியை விட தான் பெரிது என்பதைக் காட்டும் வகையில் பேசினார்
“உங்க ஆலோசனைகளை செயல்படுத்துவோம். எனக் கென்னவோ இந்த மாதிரி மூச்சு முட்டுற அறையில் இந்த முக்கிய பிரச்சினையை விவாதிக்கக்கூடாது என்று நினைக் கிறேன். அதனால், நாளைக்கு நீங்க மகாபலிபுரம் போய் நல்ல சுற்றுப்புறச் சூழலில் சிக்கனத்தைப் பற்றி தெளிவான முடிவுக்கு வரணும். இதுக்காக ஐந்து டீலக்ஸ் பஸ்களை அரேஞ் செய்யும்படி ஜாயிண்ட் டைரக்டருக்கு இப்பவே இங் கேயே உத்தரவிடறேன்.”
ஆடியன்ஸ் அதிகாரிகள், பலமாக கைதட்டினார்கள். இந்த கைதட்டலுக்கு மத்தியில், பின் வரிசையில் உட்கார்ந்திருந்த நமது அஸிஸ்டெண்ட் டைரக்டர் சுந்தரம், முன்வரிசைக்கு வந்து இன்னொரு யோசனை சொன்னார்.
“மகாபலிபுரத்துக்குப் பக்கத்திலேயே திருக்கழுக்குன்றம் என்ற திருத்தலம் இருக்குது – அங்கே ஒரு மகா புருஷர். கழுகு வடிவத்தில் அந்த கோயிலுக்கு தினமும் சென்று குருக் கள் கொடுக்கிற எண்ணெயை அலகால் தேய்த்து, அவர் நீட்டுகிற பஞ்சாமிர்தத்தை உண்டுவிட்டு போகிறார். இந்த திருக்கழுகு பஞ்சுவாலிட்டிக்கு பேர் போனது. இதையும் நமது அதிகாரிகள் அங்க போய் பார்க்கணும். இதனால, லேட்டா வந்து பழக்கப்பட்ட நமக்கு ஒரு இன்ஸ் பரேஷன கிடைக்கும். இந்த இன்ஸ்பிரேஷன்ஸ் சிக்கனத்தை சிக்க னப் பிடித்துக் கொள்ளலாம்…. பஞ்சுவாலிட்டியை பற்றிக் கொள்ளலாம்…..”
கிண்டலாகச் சொன்னதை, சீரியஸாக எடுத்துக் கொண்ட கூட்டம், மீண்டும் பலமாகக் கைதட்டியது. இப்போது ஜாயிண்ட் செகரட்டரி தான் டைரக்டர் ஜெனரலுக்கு இளைத்தவரில்லை என்பதைக் காட்டும் வகையில், மைக் கிற்கு வந்து சிறிது கடுகடுப்பாக உபதேசித்தார்.
“நான் சொல்றதை நீங்க எல்லோரும் கண்டிப்பாக கடைப் பிடிக்கணும். இனிமேல் உங்க டிரைவர்களுக்கு ஓட்டி கொடுக்கப்படாது … கிளாஸ் போர் பியூன்களுக்கும் நோ ஓட்டி. இந்த ரெண்டு தரப்பையும் ஷிப்ட் டூட்டியில் போடுங்க. விடுமுறை நாள்ல வேலை பார்க்கிறதுக்கு, இன் னொரு வேலை நாளில் லீவு கொடுங்க…. இனிமே இவங்களுக்கு ஓ.டி. என்ற பேச்சே இல்லை. அண்டர்ஸ்டாண்ட்….? அதோட பெட்ரோல்ல சிக்கனம் வேணும்…… கூடுமானவரை ஆபீஸ் காருங்களை அதிகமாப் பயன்படுத்தக்கூடாது. நோ…. பெர்ஷனல் யூஸ்!”
ஜாயிண்ட் செகரட்டரி பேசி முடித்துவிட்டு , தமது இருக் கையில் உட்கார்ந்தார். அவர் பிரமாதமாய் பேசியதாய், டைரக்டர் ஜெனரல் அவருக்கு கைகொடுத்தபோது, இருவரின் தோள்களுக்கும் இடையில் மூக்கை நீட்டிக்கொண்டு ஜாயிண்ட் டைரக்டர் ராமானுஜம் குழைவாய் பேசினார். பக்கத்தில் தலையை சொரிந்து கொண்டு நிற்கிற ஒருவரை சுட்டிக்காட்டியபடியே பேசினார்.
“ஸார்.. ஸார்….. (இரண்டு பேராச்சே…. அதனால ரெண்டு ஸார்), காஞ்சிபுரம் வழியாக திருப்பதி போறதுக்கு கார் ரெடியா இருக்கு…. அதோ நிக்காரே அவர் ஸ்பேர் கார்ல வந்து எல்லா ஏற்பாடுகளையும் கவனிச்சுக்குவார்…..புறப்பட லாம் ஸார்….இருட்டிடப் போகுது.”
– பூநாகம் (சிறுகதைகள் தொகுப்பு), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1993, கங்கை புத்தக நிலையம், சென்னை.