சுடாத தோண்டி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 26, 2019
பார்வையிட்டோர்: 5,860 
 
 

ஏய்,மாப்ள! வா,வா..

என தனது நண்பன் ரவியை ஏகமாய் அழைத்தான் ராஜா.

எல்லாரும் ஊருலே எப்படி இருக்காங்க!

நல்லா இருக்காங்க!

என்ன வேலைனு சொன்னே?

இங்கதான் கட்டிட வேலை, சூபர்வைசரா, என்றான் டிப்ளமோ வரை படித்த ரவி, சுமாரான நடுத்தரக் குடும்பம்.

ஒன்றும் பிரச்சினை இல்லை ,மாப்ள! நீ இங்கேயே தங்கிக்க,
எனக்குத் துணையாச்சு என்று மகிழ்வுடன் அழைத்த ராஜாவுக்கு
பெயின்டிங் வேலை.

பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்து அனுபவத்தில் வேலை பெற்று சென்னைக்கு முன்பே வந்தவன்.

இருவரும் ஊரில் ஒன்றாய் ஊர் சுற்றியவர்கள்.நெடுநாள் பிறகு இவர்களது கூடல் இருவரின் வாழ்க்கையையும் மாற்றிப் போடவுள்ளது என அறியாமல் காலம் ஒரு கணக்கு போட்டு இவர்களை இனைத்துள்ளது.

மதியம் ரவி,வேலைக்குச் சேர்ந்து விட்டு இன்று மட்டும் மதியம் அனுமதி கேட்டு அறைக்கு வந்தான். ராஜா,அங்கே மது பாட்டிலோடு, அமர்ந்து இருக்க,

ஏய்,என்னாடா? வேலைக்குப் போகல, என்றான் ரவி.

அதேதான் நானும் கேட்கிறேன்.என்றான் ராஜா.

நான் கொஞ்சம் பொருள் எல்லாம் வாங்கனும், அதானால அனுமதி கேட்டு வந்திட்டேன்.

நீ என்ன பண்ற? இங்க? என்றான்.

வா உட்காரு, அந்த கிளாஸ் எடு.என்றான்.ராஜா.

ஐயோ, இந்த பழக்கம் எல்லாம் இல்லை. என்னை விடு.

உன்னை யாரு பழக சொல்றா? சும்மா ஒரு ரவுண்ட், வா என்றான்.

இல்ல,இல்ல,என மறுத்து முரண்டு பிடித்தான்.

நல்லதுதான் ,விடு.என்னோட போகட்டும் எல்லாம் என்றான்.

உனக்கு ஒன்னு தெரியுமா? நான் வேலைக்கே போறதில்லடா!

ஏன் ராஜா? என்ன சொல்றே?

என்னோட உடம்பு உழைப்பை விட்டு மூன்று மாதமாகிறது.

என்னடா சொல்றே? தெளிவா சொல்லு.

நான் இன்னும் குடிக்கலைடா! தெளிவாகத்தான் சொல்றேன்.

நான் வேலைக்குப் போய் மூன்று மாதமாகிறதுடா! என்றான்.

ஏன்?

இதோ பாரு! என சட்டையை தூக்கிக் காட்டினான். ராஜா.

தையல் தழும்புகள் பறைசாற்றின, அவனுக்கு நடந்த அறுவை சிகிச்சையை.

என்னோட சிறுநீரகம் ஒன்று என்கிட்டே இல்ல,

உண்மையான வழிபாடும், இறையருள் துணையுடன் அவனின் திருவடி அடைதலே உயிரைத் தாங்கியுள்ள சுட்டத் தோண்டியாகிய உடலின் பயன்.

நீ என்னடான்னா இப்படி குடிச்சு உடலை கெடுத்து வச்சு இருக்கே ?

அட குடிகார நாயே! எனத் திட்டினான்.ரவி.

திட்டுடா! திட்டு.. உரிமை நண்பனுக்கு மட்டும் உண்டு. இன்னும் எவ்வளவு நாள் திட்டுவே? என்றான்.

டேய் என்னடா? பயம் காட்டுறே?

ஒன்னுமில்லேடா!

சட்டியெல்லாம் பண்ணுவது என்னமோ ஒரே மண்ணில்தான் யாருக்கும் பயன் படாத இந்த சுடாத சட்டியில் உயிர் இன்னும் மூன்று மாதம் மட்டுமே தங்க வாய்ப்பு இருப்பதாக சொல்றாருடா! டாக்டர்.

என்ன விவரமா சொல்லுடா!

எனக்கு யாரு இருக்கா? ஊரிலே என் ஆத்தாவும், கட்டிக்கொடுத்த ஒரே அக்காவும்தானே,என்றான்.

ஆமான்டா..அது தெரிஞ்சே இப்படி குடிச்சு உடலை கெடுத்துக்கிட்டியே?

குடியாலத்தான் போச்சு!

ஆனா நான் குடிச்சதினாலே இல்லடா!

அத்தானுக்கு இரண்டு சிறுநீரகமும் கோளாறு வந்து, உயிருக்கு போராடியபோது அக்காவின் வாழ்க்கைக்காக நானே ஒன்றைத் தானமாக கொடுக்க நேரிட்டது.

இது எதுவும் ஆத்தாவுக்கு கூடத் தெரியாது. நீயும் சொல்லிடாதே!

மீதம் ஒன்றில் தொற்று ஏற்பட்டு விட்டதாகவும், தேறுவது கடினம் என சொல்லிவிட்டார்கள். நானும் நாட்களை எண்ணிக் கொண்டு அமர்ந்துள்ளேன்.

அப்போது ஆரம்பித்தது தான் இந்த குடிப் பழக்கம்.

இது போதைக்காக அல்ல. சாகிற நாளை எதிர்பார்க்கும் இந்த சுடாத தோண்டி, தன்வலியை குறைப்பதற்கு.

தன்னுயிர் தந்து, இன்னொரு உயிரைக் காப்பாற்றி இருக்கியே இதை விட யார் என்னடா செய்வா,?

நீயும் சுட்டத் தோண்டிதான்டா என ஆறுதல் கூறினான். ரவி.

எனக்கு ஒரே ஒரு ஆசைதான். என் இறப்பு என் வீட்டாருக்கு தெரியக் கூடாது. குறிப்பா என் ஆத்தாவுக்கு!

என்னோட வங்கி கணக்கிலே சில ஆயிரங்கள் இருக்கு, அதை கொஞ்சம் கொஞ்சமா நான் அனுப்புற மாதிரி நீயே என் வீட்டுக்கு அனுப்பிடு!

என்னோட உடலை தானமாக அரசு மருத்துவமனையிலே ஒப்படைத்து விடு! எனக் கூறி அவனையும் கலங்க வைத்தான்.

சிறிது காலம் சென்றது, காலமே வென்றது.

இந்த சுட்டத் தோண்டி அவன் விருப்பபடியே மீண்டும் சுடாமல் அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்ட்டது.

Print Friendly, PDF & Email
பா.அய்யாசாமி தந்தை பெயர்: கி.பாலசுப்ரமணியன். பிறந்த ஊர்: சீர்காழி. நான் 15/10/1969 ஆம் ஆண்டு சீர்காழி எனும் ஊரிலே பிறந்தவன் என்னுடைய இளங்கலை இயற்பியல் படிப்பினை பூம்புகார் பேரவைக் கல்லூரியிலே 1989 ஆம் ஆண்டு முடித்து , தற்போது முதுகலை தமிழ் படித்துக்கொண்டு இருக்கின்றேன். தில்லி, உத்தர் பிரதேஷ் ,சென்னை என பல இடங்களில் பணிபுரிந்து தற்போது மயிலாடுதுறையிலே வசித்துக் கொண்டு இருக்கின்றேன்.2015 ஆம் ஆண்டு முதல் என்னை ரோட்டரியில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *