கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 11, 2024
பார்வையிட்டோர்: 1,578 
 
 

(1887ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-15 | அத்தியாயம் 16-30

முதற் பதிப்பில் ஆசிரியரின் முன்னுரை

எனது முதல் நாவலான ‘பிரதாப முதலியார் சரித்திரத்’துக்குக் கிடைத்த சுமுகமான வரவேற்பே, இந்த இரண்டாவது நாவலை எழுத எனக்கு ஊக்க மளித்தது. இந்த நாவல் அதைப் போல நீண்டதாக இல்லாவிட்டாலும், இதில் பல்வேறு காட்சிகளும் சம்பவங்களும் இடம் பெற்றிருக்கின்றன. இவை மூலம் னி த இயல்பின் பல்வேறு கோணங்களையும், பல்வேறு அறநெறிக் கொள்கைகளையும் வாசகர்கள் அறிந்து கொள்ளலாம். 

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, சுகாதாரத்தையும், இளவயதில் திருமணம் செய்வது போன்ற சமூகப் பழக்கங்களினால் விளையும்தீமைகளையும் எடுத்துக் காட்டியுள்ளேன். இந்து யுவர்களுக்கு அற நெறி போதனை செய்யவேண்டும் என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்ளும் இந்நாளில், இந்த நவீனமும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ள அநுபந்தங் களும் பயன்படும் என நம்புகிறேன். 

மௌனம் சில சமயங்களில் சர்வார்த்த சாதகம் எனும் முதுமொழியைப் பின்பற்றி, இம் முன்னுரை யில் மேற்கொண்டு ஏதும் கூறாமல் நிறுத்திக் கொள்ளு கிறேன். இந்த மூதுரையைப் பின்பற்றுவதில், ஒரு துருக்கி மதப் பிரசாரகர் கையாண்டதையே உதாரண மாகக் கொண்டுள்ளேன். 

அவர் ஒருநாள் மசூதியில் மதபோதனை மேடையில் ஏறிக் கூடியிருந்த பக்தர்களைப் பார்த்து, “ஏ ஞானிகளே! நான் இப்பொழுது உங்களுக்கு என்ன சொல்லப்போகிறேன் என்பதை அறிவீர்களா?” என்று கேட்டார். “தெரியாது” எனச் சபையினர் பதிலளித்தனர். ‘அப்படியானால் உங்களிடம் சொல்லிப் பயனில்லை” என்று கூறி மேடையைவிட்டு இறங்கி விட்டார். 

இரண்டாவது தடவை அந்தப் பிரசாரகர் சொற் பொழிவு நிகழ்த்த மேடைமேல் ஏறியதும் “உண்மையான ஞானிகளே! நான் என்ன சொல்லப் போகிறேன் என்பதை அறிவீர்களா?” என்று சபையைப் பார்த்துக் கேட்டார். “எங்களுக்குத் தெரியும்” எனச் சபையினர் பதில் கூறினர். அவர் “நான் சொல்லப்போவதை நீங்கள் அறிவீர்கள்; ஆகையால் நான் ஏன் சிரமப்பட்டு உங்களுக்குப் போதனை செய்யவேண்டும்?” என்று கூறி இறங்கிச் சென்றார். 

மறுமுறை அங்கே அந்தப் பிரசாரகர் போதனை செய்ய வந்ததும், தனது வழக்கமான அந்தக் கேள்வியைக் கேட்டார். அவருடைய சாமர்த்தியத்தைச் சோதனை செய்யும் நோக்கத்துடன் பக்தர்கள் “நீங்கள் சொல்லப்போவது எங்களில் சிலருக்குத் தெரியும்; சிலருக்குத் தெரியாது” எனக் கூறினர். உடனே அந்தப் பிரசாரகரும் விட்டுக்கொடுக்காமல் “அப்படியானால் உங்களில் தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்குச் சொல்லுங்கள்” என்று கூறி மேடையை விட்டு இறங்கி விட்டார். 

– மாயூரம் ச.வேத நாயகம், 1887. 


1. சுகுண சுந்தரியின் ஜனனம் 

கடலை மேகலையாக உடுத்த பூமிதேவியின் திருமுக மண்டலம் போன்ற புவனசேகர மென்னும் நகரத்தை ராஜதானியாக உடைய திராவிட தேச முழுமையும் நராதிபன் என்னு ம் அரசன் துஷ்ட நிக்ரகம் சிஷ்ட பரிபாலனஞ் செய்து மநுநீதி தவறாமல் அரசாக்ஷி செய்து வந்தான். அவனுக்கு வெகுகாலம் பிள்ளையில்லாமலிருந்து பிறகு கடவுளது அனுக்கிரகத்தால் அதிரூப சௌந்தரியமான ஒரு பெண் குழந்தை பிறந்தது. அழகு தானே ஒரு பெண்ணாக வந்து அவதாரஞ் செய்ததுபோல் அதி அற்புதமான சுந்தர மும் அதற்கேற்ற சுகுணங்களும் பொருந்தியிருந்தமையால் அந்தக் குழந்தைக்குச் சுகுண சுந்தரி யென்று பெயரிட்டார் கள். அரசனும் ராஜ மஹிஷியும் அந்தக் குழந்தையை மிக்க அருமை பெருமையாக வளர்த்துக் கல்வி கற்கத்தக்க பருவம் கலைக்கியானங் வந்தவுடனே வித்தியாரம்பஞ் செய்து, சகல களையும் போதிப்பித்தார்கள். 

2. சுகுண சுந்தரியின் வித்தியாப்பியாசம்

அரசனுக்கு வேறே புருஷ சந்ததி யில்லாதபடியால் தனக்குப் பிற்காலம் அந்தப் பெண்ணே பட்டாபிஷேகத் துக்கு யோக்கியமாகும்படி அவளுக்குச் சகல ராஜரீக தர்மங்களும் நீதி சாஸ்திரங்களும் நியாயப் பிரமாணங்களும் சன்மார்க்க நெறிகளும் போதிக்கப்பட்டன. அவள் கல்வியைக் கற்கண்டினும் இனிதாக விரும்பி, ஒருகணப் பொழுதாயினும் வறிதேயிராமல் எப்பொழுதும் ஓதிய நாவும் எழுதிய கையுமாயிருப்பாள். நித்திய பாடங்களை முற்றிலும் உணருமுன், அவளுடைய மனம் வேறொன்றையும் நாடாது. அவள் தினந்தோறும் சாயரக்ஷையில் தன்னுடைய படிப்பைத் தானே பரிசோதிப்பாள். முந்திய நாளினும் அந்த நாளில் கல்வியில் அபிவிர்த்தியடையாமலிருந்தால் அவள் ஒருநாளை இழந்துவிட்டோமே யென்று துக்கித்து அவள் மறுபடியும் விளக்கு வெளிச்சத்தில் பாடம் படித்துத் தனக்குள்ள குறைவைப் பரிகரிப்பாள். அவள் இவ்வாறு கல்வியில் முயன்று தன்னைச் சாரதா பீடமென்று யாவரும் சொல்லும்படி சகல கலைக்கியானங்களையும் ஐயந்திரிபற அதிசீக்கிரத்தில் கற்றுக்கொண்டாள். சுகுண சுந்தரி குழந்தைப் பருவமாயிருக்கும்போதே அவளுடைய மாதா இறந்து போய்விட்ட தால், அவளுடைய பிதா அதிக கரிசனத்தோடும் உருக்கத்தோடும் மகளைப் போஷித்து வந்தார். 

3. சோம்பலே சுகத்திற்குக் கேடு 

அவளுக்கு வேலை செய்யப் பல தாதிமார்களிருந் தாலும், அவள் தன்னைச் சேர்ந்த வேலைகளை யெல்லாம் தானே செய்து கொள்ளுகிறதே யல்லாது, பிறருக்குத் தொந்தரவு கொடுக்கிறதில்லை. வித்தியா விஷயத்தில் அவளுக்குத் தெரியாத காரியம் எப்படியில்லையோ அப்படியே வீட்டு வேலைகளிலும் அவளுக்குத் தெரியாத வேலைகள் ஒன்றுமில்லை. அவள் கையாலே வேலை செய்கிறதைப் பார்த்துச் சதிக்காமல் தாதிமார்கள் ஓடிவந்து அந்த வேலையைத் தாங்கள் செய்ய முயலுவார்கள். அப்பொழுது சுகுண சுந்தரி அவர்களை நோக்கி “வேலை செய்யக் கை கால் முதலிய அவயவங்கள் உங்களுக்கிருப்பன போலவே எனக்கும் இருக்கின்றன. வேலை செய்தற் பொருட்டே அந்த அவயவங் களைக் கடவுள் கொடுத்திருப்பதால், அவருடைய சித்தத் துக்கு விரோதமாய் நான் வேலை செய்யாமலிருப்பேனானால் அந்த அவயவங்கள் மரத்து விறைத்து உபயோகமில்லாமற் போவனவுமன்றித் தேக செளக்கியமுங் கெட்டுப்போகாதா? நாற்காலிகள் பீடங்கள் வாகனங்கள் மற்றப் பாத்திரங்கள் முதலியவைகள் எந்த உபயோகத்துக்காகச் செய்யப் பட்டனவோ, அந்த உபயோகமில்லாமலிருக்குமானால் அவைகள் துருவேறிக் கெட்டுப் போவனபோல, வேலை செய்வதற்காக உண்டாக்கப்பட்டிருக்கிற நமது தேகம், ஒரு வேலையுஞ் செய்யாமல் சும்மா இருந்தால் கெட்டுப் போகாதா? யானை முதல் எறும்பு கடையாக உள்ள சமஸ்த ஜீவகோடிகளையும் பாருங்கள்! அவற்றுள் எந்தப் பிராணி யாவது தன்னுடைய ஜீவனத்துக்காகப் பாடுபடாம் லிருக்கின்றதா? நான் மட்டுந் தேகம் அசையாமல் சும்மா இருப்பது கிரமமா? சோம்பலே பல வியாதிகளுக்குந் துன்மார்க்கங்களுக்கும் ஆஸ்பதமல்லவா?” என்பாள். 

4. குரு சிரேஷ்டரின் இல்லற இயல்பு 

சுகுண சுந்தரி பல உபாத்தியாயர்களிடத்தில் பல கலைக்கியானங்களைக் கற்றுக்கொண்டாலும், முக்கியமாய் அரசனுடைய குலகுருவாகிய குரு சிரேஷ்டர் என்பவரிடத் தில் பல நீதிகளையுந் தர்மங்களையும், ஞான சாஸ்திரங்களை யும் கரதலாமலகம் போலச் கற்றுக்கொண்டாள். ஞான சொரூபியாகிய அந்தக் குரு சிரேஷ்டர் இல்வாழ்க்கையிலே யொழுகி. இல்லறம் துறவறமென்னும் இரண்டு அறங்களை யும் வழுவாது நடத்தி வந்தார். அவரும் அவருடைய பத்தினியும் புத்திரசந்தானமில்லாத ஒரு பெருங்குறைவை யுடையவர்களா யிருந்தமையால் அந்தக் குறைவைப் பரிகரிக்கிறதற்காக அடிக்கடி தேவதாப் பிரார்த்தனைகளுந் தான தர்மங்களும் செய்து வந்தும் அவர்களுக்குப் புத்திரோற்பத்தியாகவில்லை. அந்தக் குரு சிரேஷ்டர் பிரதி தினமும் காலையிலும் மாலையிலும் வெளியே உலாவப் போகிற வழக்கப்படி அவர் ஒரு நாள் வைகறையிலெழுந்து நகரத்தை விட்டுப் புறப்பட்டுப் பாதசாரியாய் மேற்கு ர ஸ்தாவழியாய்ச் செல்லும்பொழுது, அந்நிய தேசத்தான் ஒருவன் ஒரு அழகான சிறிய ஆண் குழந்தையைக் கையிலே ஏந்திக்கொண்டு, அவருக்கு எதிரே வந்தான். அப்போது கீழ்த்திசையில் சூரியோதயமாகிற சமயமானதால் அதற்கு நேராக மேற்குத் திசையில் ஒரு இளஞ்சூரியன் உதயமானது போல் அந்தக் குழவி விளங்கிற்று. 

5. புவனேந்திரன் என்னும் ஒரு அநாதப் பிள்ளையின் வரலாறு 

அந்த அன்னியன் குரு சிரேஷ்டரை நோக்கி “ஐயா! து ராஜாதி ராஜனுடைய குழந்தை. சில துஷ்டர்கள் இந்தப் பாலனையும் என்னையும் வதை செய்வதற்காகத் தொடர்ந்து வருகிறார்கள். இது இரா முழுவதும் ஸ்தன்னிய பானமில்லாமல் மிகுந்த பசிக் களையாயிருக்கிறது. இந்தப் பாலனுக்கு எவ்வகையிலாவது தாங்கள் உடனே ஸ்தன்னிய பானத்துக்கு மார்க்கஞ் செய்ய வேண்டும். நான் சற்றுநேரங் கண்மறைவாயிருந்து. பின்பு தங்களிடம் வந்து இந்தக் குழந்தையின் சரித்திரத்தைச் சவிஸ்தாரமாகத் தெரிவிக்கிறேன்” என்றான். அந்தக் குழந்தை பசிக் களை யினால் கண்ணை மூடிக்கொண்டு இளங்கொடி போலத் துவண்டு, அசைவற்றிருந்தபடியால் குரு சிரேஷ்டருக்கு இரக்கமுண்டாகி, அந்தக் குழந்தையைக் கையிலே வாங்கிக் கொண்டு, உடனே தம்முடைய அரமனைக்குத் திரும்பிப் போய், சில முலைத் தாயார்களைக்கொண்டு அந்தக் குழந் தைக்குப் பாலூட்டுவித்து. அது பிழைக்கும்படியான பல சிகிச்சைகளுஞ் செய்தார். அது கொஞ்சம் கொஞ்சமாய்ப் பாலருந்தி, வெகு நேரத்திற்குப் பிற்பாடு பசிக் களை தீர்ந்து கண்ணை விழித்துப் பார்த்தது. செந்தாமரைப் புஷ்பம் விகசிதமானது போல் அந்தக் குழந்தை கண் திறந்தவுடனே அதனுடைய அழகைப் பார்த்து எல்லாரும் அகமகிழ்ச்சி யடைந்தார்கள். அந்தப் பாலன் சரித்திரத்தை விசாரித் தறியும் பொருட்டு, அதைக் கொண்டுவந்தவன் தமது அர மனையில் வந்திருக்கிறானாவென்று குரு சிரேஷ்டர் விசாரித் தார். அவன் வரவில்லையென்று தெரிந்த உடனே பல இடங்களுக்கு ஆள் அனுப்பித் தேடியும் அவன் அகப்பட வில்லை. அவன் எப்படியும் வருவானென்று பலநாள் எதிர் பார்த்தும், அவன் வராதபடியால், அந்தக் குழந்தையி னுடைய சரித்திரத்தை அறிவதற்கு மார்க்கமில்லாமற் போய்விட்டது. 

அந்தப் பாலன் திவ்வியமான வஸ்திராபரணங்களைத் தரித்துக் கொண்டிருக்கிறவர்களிடத்திற் போகப் பிரியப் படுகிறதே யல்லாது, சாதாரணமான மனுஷர் களிடத்திற் போகிறதில்லை. ஸ்தன்னிய பானங் கொடுக்கிற வர்கள்கூடத் தூய்மையான வஸ்திரங்களைத் தரித்துக் கொண்டு சுசிகரமாயிருந்தால் மட்டும் அவர்களிடத்திற் போகிறதே யன்றி, அசுத்தமாயிருக்கிறவர்களிடத்தில் போகிறதேயில்லை. இப்படிப்பட்ட பல திருஷ்டாந்தங்களால் அது ராஜ கிரகத்தில் வசித்த குழந்தையென்று அநுமானிக் கும்படியா யிருந்தது. அந்தப் பிள்ளையைக் கொண்டு வந்தவன் ராஜாதிராஜனுடைய பிள்ளையென்று செப்பினதாலும், சகல ராஜ லக்ஷணங்களும் பொருந்திப் புவன முழுமையும் ஆளத்தக்க பிள்ளையாயிருந்ததாலும் அந்தப் பிள்ளைக்குப் புவனேந்திரன் என்று பெயரிட்டார்கள். புத்திர பாக்கிய மில்லாத குரு சிரேஷ்டரும் அவர் பத்தினியும் அந்தப் பிள்ளையைக் கண்டவுடனே பிறவிக் குருடனுக்குக் கண் கிடைத்தது போலவும் பரம தரித்திரனுக்குப் புதையல் அகப்பட்டது போலவும் பரமானந்தமடைந்து, தங்கள் சொந்தப் பிள்ளையைப் போலவே அதிக பாச நேசத்துடன் வளர்த்தார்கள். அவர்கள் அந்தப் பிள்ளையை வளர்த்த அருமையினாலும் அவனுடைய நற்குண நற்செய்கைகளி னாலும் அவனை எல்லாரும் குரு சிரேஷ்டருடைய சொந்தப் பிள்ளையாகப் பாவித்தார்களே யொழிய, அவன் அநாதப் பிள்ளையென்பதை அனேகர் சுத்தமாய் மறந்துவிட்டார்கள். அந்த உண்மையைத் தெரிந்தவர்கள்கூட அதைப் பற்றிப் பிரஸ்தாபித்தால் குரு சிரேஷ்டருக்கு மனஸ்தாபமாயிருக்கு மென்று கருதி, ஒருவரும் அதைப்பற்றிப் பிரஸ்தாபிக்கிறதில்லை. புவனேந்திரன் குரு சிரேஷ்டரைத் தன் சொந்தப் பிதாவென்றே நினைத்து, அவரிடத்தில் அத்தியந்த விசு வாசமும் அன்பும் பாராட்டி வந்தான். சுகுண சுந்தரியும் அவனைக் குரு புத்திரனென்றே நினைத்து, அவன் தனக்கு மூத்தவனென்றே நினைத்து, அவன் தனக்கு மூத்தவனானதால் அவன் சாக்ஷாது தமையனுந் தான் தங்கையும் போல அதிக நேசமாய் நடந்து வந்தாள். புவனேந்திரன் மற்ற வித்தை களோடு கூடத் தனுர்வேதமாகிய ஆயுத பரீக்ஷை முதலிய யுத்தாப்பியாசத்துக்கடுத்தவைகளையும் குரு சிரேஷ்டரிடத்தில் விசேஷமாய்க் கற்றுக்கொண்டான். மற்றபடி, வித்தையிலும், புத்தியிலும், குணத்திலும், அழகிலும் புவனேந்திரனும் சுகுண சுந்தரியும் ஒருவருக்கொருவர் ஏற்றங்குறைவில்லாமல் சரிசமானமாயிருந்தார்கள். கடவுள் தனது சிருஷ்டித் தொழிலின் சாமர்த்தியத்தைக் காட்டு வதற்காகவும் ஆணுக்குரிய அழகு இவ்வளவென்றும், பெண்ணுக்குரிய அழகு இவ்வளவென்றும் வரையறுத்துக் காட்டுவதற்காகவும், புவனேந்திரனையும் சுகுணசுந்தரி யையும் பூமியில் உண்டாக்கின தாகக் காணப்பட்டது. 

6. மதுரேசனுடைய துர்ச்சரிதமும், புவனேந்திரனுடைய நற்சரிதமும் 

புவனேந்திரனோடுகூட ராஜாவினுடைய முதல் மந்திரி மகனாகிய மதுரேசன் என்பவனும் குரு சிரேஷ்டரிடத்தில் கல்வி கற்று வந்தான். அவனும் புவனேந்திரனும் சற்றேறக் குறையச் சமமான வயதுள்ளவர்களா யிருந்தார்கள். அந்த ஒரு விஷயந்தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் அவர்க ளொருவருக்கொருவர் பாரதூர வித்தியாச முள்ளவர்களா யிருந்தார்கள். பிரகாசத்துக்கும் அந்தகாரத்துக்கும், புண்ணி யத்துக்கும் பாவத்துக்கும் எவ்வளவு வித்தியாசமோ அவ்வளவு வித்தியாச முள்ளவர்களா யிருந்தார்கள்.வாய்மை, பொறை, ஈகை, ஜீவகாருண்ணியம், பரோபகாரம் முதலிய சற்குணங்களுக்குப் புவனேந்திரன் உறையுளாயிருந்தது போல, அவைகளுக் கெதிரிடையான துர்க்குணங்களெல்லாம் மதுரேசனிடத்திற் குடிகொண்டிருந்தன. அவனைத் திருத்தி நன்மார்க்கத்திற் கொண்டுவருகிறதற்குக் குரு சிரேஷ்டர் அவராலியன்ற மட்டும் பிரயாசைப்பட்டும் பயன் படவில்லை. 

“ஜென்மக் குணத்தைச் செருப்பாலடித்தாலும் போகாது” என்கிற பழமொழிக்கேற்ப அவன் திருந்தாமலே யிருந்து விட்டான். புவனேந்திரன் பிறருக்கு உபகாரஞ் செய்வதில் எப்படி முயற்சியுள்ளவனாயிருந்தானோ அப்படியே மதுரேசன் பிறருக்குத் தீங்கு செய்வதிலே நோக்கமுள்ள வனாயிருந்தான்.துஷ்டப் பிள்ளைகள் மானிடரை உபத்திரவஞ் செய்யக் கற்றுக் கொள்ளுமுன் வாயில்லாப் பூச்சிகளையும் பக்ஷி மிருகங்களையும் பிடித்து உபாதித்துக் குரூர குணத்தைப் பயிலுவது போலவே, மதுரேசன் சிறு பிராயத்திலே பூச்சி களைப் பிடித்துக் கொல்லுகிறதும், குருவிக் கூண்டுகளைக் கோலாலே கலைக்கிறதும், பக்ஷிகளையும் ஆடு மாடுகளையும் அவற்றின் கன்றுகளையும் கல்லாலும் வில்லாலும் அடிக் கிறதும், இவ்வகையான கொடுஞ் செய்கைகளைச் செய்து வருவான். இந்தச் செய்கைகளைப் புவனேந்திரன் காணும் போதெல்லாம் அந்தப் பக்ஷி மிருகங்களுக்குத் தானொரு இரக்ஷா பந்தனம் போலிருந்து, அவைகளைக் காப்பாற்று வான். மதுரேசன் பக்ஷிகளைக் கல்லாலும் வில்லுண்டை யாலும் அடிக்க யத்தனப்படும்போது புவனேந்திரன் கையைக் கொட்டிக் கொட்டிச் சப்தஞ் செய்து, அவை களைத் துரத்திவிடுவான். அப்படியே தெருவில் விளையாடுகிற பிள்ளைகளையும் மதுரேசன் உபத்திரவஞ் செய்யாதபடி புவனேந்திரன் எப்போதும் அவர்களுக்குச் சகாயபரனா யிருப்பான்.இத்தன்மையான பல காரணங்களால் மதுரேசன் புவனேந்திரனைத் தனக்கு ஜன்ம சத்துருவாகப் பாவிக்கத் தொடங்கினான். அவனுக்குப் புவனேந்திரன் மீது எவ்வளவு க்ஷாத்திர மிருந்தாலும் அவன் குரு புத்திரனென்கிற எண்ணத்தினாலும் அவன் தன்னிலும் மிக்க பலசாலியா யிருப்பதாலும், அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய மதுரேசன் துணியவில்லை. 

7. இளமைப் பருவத்தில் புவனேந்திரனின் தீரத்துவமும் பரோபகாரமும் 

இளமைப் பருவத்திலே புவனேந்திரனுடைய தீரத்துவ மும் பராக்கிரமமுந் தெரியும் பொருட்டு வாஸ்தவமாய் நடந்த ஒரு சங்கதியை விவரிப்போம். புவனேந்திரனும் சுகுண சுந்தரியும் யானையேற்றம், குதிரையேற்றம் முதலிய வாகனப் பரீக்ஷை கற்றுக் கொள்வதற்காக, அவர்கள் அடிக் கடி யானையின் மீதும் குதிரையின் மீதும் ஏறிச்செல்வது வழக்கமாக இருந்தது. அந்த வழக்கப்படி ஒரு நாள் புவனேந் திரனும் சுகுண சுந்தரியும் ஒரு யானையின் மேல் அம்பாரி வைத்து, அதன் மேல் ஏறிக்கொண்டு, வீதியிற் செல்லும் பொழுது அந்த யானை திடீரென்று மதங்கொண்டு, தன் பிடரியின் மேலிருந்த பாகனைத் துதிக்கையால் பற்றி இழுத்துக் கீழே தள்ளித் தன் காலின்கீழ் வைத்துத் தேய்த்ததுமன்றி, அம்பாரியிலிருந்தவர்களையும் தன் கையினால் இழுக்க ஆரம்பித்தது. அவர்கள் தன் கைக்கு எட்டாமையினால் அம்பாரியை வீதியிலுள்ள ஒரு பெரிய கல் மண்டபத்தோடு சேர்த்து மோதி உடைக்க ஆரம்பித்தது. அந்தச் சமயத்தில் புவனேந்திரன் சுகுண சுந்தரியை மிருதுவாய்த் தூக்கி, அந்த மண்டபத்தின்மேல் வைத்து விட்டுத் தானும் ஒரே தாண்டாய்த் தாண்டி, அந்த மண்ட பத்தின் மேலேறித் தப்பித்துக்கொண்டான். அப்படி யவன் செய்யாவிட்டால், அவர்களிருவரும் யானையின் கையில் அகப் பட்டு மாண்டு போயிருப்பார்கள். இந்த வீரச் செய்கையைக் கேள்வியுற்ற அரசன், தன் புத்திரிக்குப் பிராணப் பிரதிஷ்டை செய்த புவனேந்திரனிடத்தில் அளவற்ற அன்பும் விசுவாச முள்ளவனாயிருந்தான். 

பின்னும் ஒரு சமயத்தில் புவனேந்திரனும் வேறு சிலரும் ஒரு பெரிய நதியின் பூரண பிரவாகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, அக்கரையிலிருந்து இக்கரைக்கு நீந்தி வந்த ஒரு எளியவன் நடு ஆற்றிலே கை சோர்ந்து, வெள்ளத் தில் முழுகி இறக்கிற சமயமாயிருந்தது. அப்பொழுது அவனை ரக்ஷிக்கிறதற்குச் சிறு பிராயமுள்ள புவனேந்திரன் அசக்தனா யிருந்தபடியால் தன்கூட இருந்தவர்களை ஆற்றிலிறங்கி, அந்த மனுஷனைக் கரையேற்றும்படி கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். அவர்கள் “நீசனாகிய அவனை நாங்கள் தொட மாட்டோம்” என்று சும்மா இருந்தார்கள். உடனே புவனேந் திரன் தன்னுடைய பிராணனை லக்ஷ்யஞ் செய்யாமல், அந்த ஏழையைக் காப்பாற்றுவதற்காக ஆற்றில் விழ ஓடினான். அப்போது கூட இருந்தவர்கள் இந்தச் சங்கதியை அரசனும் குருசிரேஷ்டரும் கேள்விப்பட்டால் தங்களைச் சிரசாக்கினை செய்வார்களென்று பயந்துகொண்டு, புவனேந்திரனை ஆற்றில் விழாதபடி தடுத்துத் தாங்களே ஆற்றிலே குதித்து, அந்த ஏழையைக் கரையேற்றி ரக்ஷித்தார்கள். அவர்களுக்குப் புவனேந்திரன் தக்க சம்மானஞ் செய்து, அவர்களைச் சந்தோஷப்படுத்தினான். இவ்வாறு புவனேந்திரன் தன்னா லியன்ற மட்டும் பிறருக்குச் சரீரசகாயமாவது திரவிய சகாய மாவது அல்லது வாக்குச் சகாயமாவது செய்து வருவான். 

8. சுகுண சுந்தரியின் குணாதிசயங்கள் 

புவனேந்திரனுக்குச் சமானமான புருஷர்கள் எப்படி யில்லையோ அப்படியே சுகுண சுந்தரிக்குச் சமானமான பெண்கள் ஒருவருமில்லை. அவள் உத்தம குணங்களையெல்லாம் ஆபரணமாக உடையவள். அவளுடைய கற்பு நெறியும், சீலமும், அடக்கமும், பொறுமையும், வாய்மையும், தூய்மை யும், வாசாம கோசரம். அவள் மண்டலாதிபனுடைய மகளா யிருந்தும் ஏழைகளுடைய கஷ்ட நிஷ்டூரங்களை யெல்லாம் அறிவாள். அழுவாரோடு அழுவாள், துக்கிப்பாரோடு துக்கிப்பாள். மன்னுயிரெல்லாந் தன்னுயிர்போலப் பாவிப் பாள். அவள் யாருக்காவது சந்தோஷம் நேரிட்டால் தனக்கே நேரிட்டதுபோல் சந்தோஷிப்பாள். யாருக்கு ஒரு விசனம் நேரிட்டாலும் தனக்கே நேரிட்டது போலெண்ணி, உடனே அதற்குப் பரிகாரஞ் செய்வாள். அவள் அழகு குடிகொண்ட முகத்தை யுடையவள்; கருணை குடி கொண்ட கண்களை யுடையவள்; சத்தியமும் இன் சொல்லும் குடிகொண்ட நாவை யுடையவள்; ஈகை குடிகொண்ட கரத்தை யுடையவள்; தெய்வபக்தி குடிகொண்ட சிந்தையை யுடையவள். அவளுடைய அக அழகை முக அழகு காட்டும். அவளுடைய ஹிருதய சுத்தத்தைத் தேக கத்தங் காட்டும். அவளுடைய மங்கள குணங்களை வர்ணிப்பது அசாத்தியமாகையால் இவ்வளவோடே நிறுத்தினோம். 

9. ஒரு ஏழைப் பிள்ளை கல்வி கற்ற விதம் 

ஒரு நாள் அரசனுடைய இரண்டாவது மந்திரி ஏதோ ராஜாங்க காரிய நிமித்தம் அரசனுடைய அரமனைக்கு வந்திருந்தார். அவர் சகல சாஸ்திர பண்டிதராயும் சற்குண சீலராயுமிருந்தார். அவர் வந்த காரியம் முடிந்த உடனே, அரமனையில் பாடம் படித்துக்கொண்டிருந்த புவனேந் திரனையும் மதுரேசனையும் வித்தியா பரீக்ஷை செய்து புவனேந்திரனுடைய கல்வித் திறமையை வியந்து கொண்டார். மதுரேசன்  கல்வியிற் குறைவாயிருக்கக் கண்டு அவனுக்குப் புத்தி வரும்படி அவர் சொன்னதாவது:- “சில பிள்ளைகள் எவ்வளவோ பிரயாசைப்பட்டுக் கல்வி கற்றுக்கொள்ளுகிறார்கள். உனக்குச் சரஸ்வதி பீடமாகிய குரு சிரேஷ்டரே குருவாகக் கிடைத்திருந்தும் நீ கல்வியிலே குறைவாயிருப்பது அதிக ஆச்சரியமாயிருக்கிறது. இதற்கு ஐம்பது வருஷத்துக்கு முன் ஒரு ஏழைப் பையன் எவ்வளவு சிரமப்பட்டுக் கல்வி கற்றுக் கொண்டானென்பதை உனக்குத் தெரிவிக்க அபேக்ஷிக்கிறேன். அவன் பரம ஏழையாயிருந் தாலும் வித்தியாப்பியாசஞ் செய்ய வேண்டுமென்று அளவற்ற அவா உள்ளவனாயிருந்தான். அவனுடைய தகப்பன் கைப்பாடு பட்டுக் கஷ்ட ஜீவனஞ் செய் கிறவனாதலால் உபாத்தியாயர்களுக்குச் சம்பளங் கொடுக்க அசக்தனாயிருந்தான். அந்தச் சிறுவன் உபாத்தியாயர் களுக்குக் கைங்கரியஞ் செய்தாவது கல்வி கற்கலாமென்று முயற்சி செய்தான். அவன் அதி பால்யனா யிருந்ததால் அவனை ஒருவரும் வேலையில் வைத்துக்கொள்ளச் சம்மதிக்கவில்லை. அப்பொழுது ஒரு உபாத்தியாயருக்குப் பொன்னாங் கண்ணிக் கீரையின் மேலே பிரிய மென்றும், அது சில – நாளாய் அகப்படாமையினால் அவர் அதிருப்தியாயிருப்ப தாகவும் கேள்விப்பட்டு, அந்தக் கீரையை எப்படியாவது சம்பாதித்துக் கொடுத்து, அந்த உபாத்தியாயருடைய பிரியத்தைச் சம்பாதிக்கவேண்டுமென்று, அந்தப் பையன் தீர்மானத்துக் கொண்டான். அவன் வெகு தூரம் அலைந்து தேடி அந்தக் கீரையைப் பறித்துக்கொண்டுவந்து சில நாள் வரையில் அந்த உபாத்தியாயருடைய பத்தினி கையிலே கொடுத்துக் கொண்டு வந்தான். அதற்கு அவள் விலை கொடுப்பதாகச் சொல்லியும் அவன் அங்கீகரிக்கவில்லை. இரண்டு மூன்று தினங்களுக்குப் பிறகு உபாத்தியாயர் தன் பாரியை நோக்கி, “இந்தக் காலத்தில் நம்முடைய ஊரில் இந்தக் கீரை அகப்படாதே. இது எப்படிக் கிடைத்தது?” என்று வினாவினார். அவள் அந்தப் பையனுடைய சங்கதி யைக் குறித்துப் புருஷனுக்குத் தெரிவித்தாள். மறு நாள் அந்தப் பையன் வந்த உடனே உபாத்தியாயர் அவனைக் கண்டு “இந்தக் கீரைக்கு நீ ஏன் விலை வாங்கமாட்டேனென் கிறாய்?” என்றார். உடனே அந்தப் பையன் உபாத்தியாயர் பாதத்தில் சாஷ்டாங்கமாய் விழுந்து “ஐயா! நான் ஏழை யிலும் ஏழை. என்னைப் போல் ஏழைகள் எங்குமிரார்கள். நான் கல்வி கற்கவேண்டுமென்று அளவற்ற ஆசையுள்ளவனா யிருக்கிறேன். ஆனால் சம்பளம் கொடுத்துப் படிக்க நிர்வாக மில்லை. என்ன செய்வேன்?” என்று சொல்லி அழுதான். உடனே உபாத்தியாயருக்குப் பரிபூரண கிருபை உண்டாகி, அவனுக்கு இலவசமாய்க் கல்வி போதிக்க ஆரம்பித்தார். அந்தப் பையன் அகோராத்திரங் கல்வியில் முயன்று, அநேக வித்தியா பட்டங்கள் பெற்று, ஒரு அரசருடைய தயவைச் சம்பாதித்தான். அரசர் அவனுக்குப் பல உத்தியோகங்கள் கொடுத்துக் கடைசியாய் அவனுக்கு மந்திரி உத்தியோகம் கொடுத்தார். அந்தப் பையன் யார் என்றால் நான்தான். நம்முடைய நராதிப மகாராஜாவின் தகப்பனார் தான் எனக்கு மந்திரி உத்தியோகம் கொடுத்தவர்” என்றார். அப்போது மகோன்னத பதவியிலிருக்கிற அந்த இரண் டாவது மந்திரி தன்னுடைய பூர்வ தரித்திர ஸ்திதியைக் குறித்துப் பகிரங்கமாய்ப் பேசின உடனே அதைக் கேட்ட எல்லாரும் அவருடைய அபூர்வமான அடக்கத்தையும் பொறுமையையும் புகழ்ந்து கொண்டாடினார்கள். ஆனால் மதுரேசனுக்குமட்டும் யாதொரு பிரயோசனமு மில்லாமற் போய்விட்டது. 

10. மதுரேசனுடைய பொறாமைக் குணம் 

புவனேந்திரனுக்கு மதுரேசனுக்கு எங்கும் அபகீர்த்தியுமுண்டாயிருப்பதற்கும் அரசன், சுகுண சுந்தரி முதலானவர்களுக்குப் புவனேந்திர னிடத்தில் அதிக பிரியமும் மதுரேசனிடத்தில் அப்பிரிய மும் உண்டாவதற்கும் தன்னுடைய செய்கையே காரண மென்று மதுரேசன் நினையாமல், அதற்காகப் புவனேந்திரனை அதிகம் அதிகமாக மனத்துக்குள்ளே பகைத்து வந்தான். அதை அறிந்த குரு சிரேஷ்டர் அசூயைக் குணத்தைப்பற்றிப் பின்வருமாறு பிரசங்கித்தார். 

11. பொறாமையைப்பற்றி ஒரு உபந்நியாசம் 

பொறாமையானது இகபரமிரண்டையுங் கெடுக்கிற கொடிய பாதகமா யிருக்கிறது. எல்லாரும் க்ஷேமமா யிருக்க வேண்டுமென்றும் ஒருவருந் துன்பப்படக் கூடாதென்றும் ம் விரும்ப வேண்டியது நம்முடைய கடமையா யிருக்க, அதற்கு விரோதமாகத் தானொருவன் மட்டும் க்ஷேமமா யிருக்க வேண்டுமென்றும் மற்ற யாவருங் கெட்டுப்போக வேண்டு மென்றும் நினைக்கும்படி செய்கிற பொறாமையைப்போல் விகுணம் வேறொன்றுமில்லை. பிறருடைய நல்வாழ்வைக் கண்டு சந்தோஷிக்கிறதை விட்டு, அதற்காக நாம் துக்கப்படு கிறதும், பிறருடைய துக்கத்தைக் கண்டு நாம் சந்தோஷிக் கிறதும் எவ்வளவு கெட்ட செய்கையாயிருக்கின்றது? அசூயை யானது பொய், பரதூஷணை, பரஹிம்ஸை முதலிய துர்க் குணங்களை  விளைவிக்கின்ற வித்தாயிருக்கின்றது. எப்படியென்றால், அசூயை யுள்ளவன் குணவான்களிடத்திற்கூடக் குணதோஷமிருப்பதாக எப்போதுங் கூறுவான். பிறருடைய சுகவாழ்வைக் கெடுக்கத் தன்னாலே சாத்தியமான மட்டும் பிரயாசைப்படுவான். பிறருக்குண்டாகிய நன்மையெல்லாம் தனக்குக் கேடாக நினைப்பான். அவர்களுக்குண்டாகிற தீங்கெல்லாம் தனக்கு நன்மையாக நினைப்பான். உலகத்தில் நடக்கிற பல அக்கிரமங்களுக்கும் அவதூறுகளுக்கும் அழுக் காறே முக்கிய காரணமாயிருக்கிறது. ஒருவன் எந்தத் துர்க்குணத்தை ஒப்புக்கொண்டாலும் அழுக்காறு தன்னிடத் திலிருப்பதாக ஒப்புக்கொள்ளுகிறவன் ஒருவனுமில்லை. அதைக்கொண்டே அது எவ்வளவு இழிவான துர்க்குண மென்று நன்றாய் விளங்குகின்றது. அசூயை யுள்ளவன் வயிற்று வலியை விலைக்கு வாங்கினது போலவும், கொள்ளித் தேளை மடியில் வைத்துக் கட்டிக் கொண்டது போலவும் தானே எப்போதும் உபத்திரப்படுவான். அவனுக்கு ஒரு நிமிஷங்கூட ஆறுதலுக்கு இடமில்லை. நாம் அந்நியர் மேலே பிரயோகிக்கிற குண்டுகள் சில சமயங்களில் நம்முடைய தேகத்தின் மேலே பாய்ந்து காயப்படுத்துவது போலப் பொறாமை நம்மைத்தானே உபாதிக்கின்றது. 

அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடு ஈன்பது.  (திருக்குறள் 165) 

“அழுக்காறுடையார்க்குக்  கேடு விளைவிக்க அதுவே போதும். வேறு பகைவர் வேண்டுவதில்லை” யென்று திருவள்ளுவர் சொல்வது உண்மைதானே? நல்லோர்களைப் பார்த்தும் கல்விமான்களைப் பார்த்தும் நாமும் அவர்கள் போலாக வேண்டுமென்று பிரயாசைப்படுவது உத்தமந்தான். அங்ஙனம் பிரயாசைப்படாமல் அவர்களையும் ஆஸ்திவந்தர்களையும் பார்த்துப் பார்த்து, நாம் வருஷ முழுமையும் பொறாமைப்பட்டாலும் நம்முடைய மனம் வேகிறதேயன்றி வேறு பிரயோஜனம் யாது?” என்று பிரசங்கித்தார். 

12. பாசாங்குக்காரப் படுநீலி 

மதுரேசனுக்கு நற்புத்தி யுண்டாவதற்காகவே குரு சிரேஷ்டர் இவ்வண்ணம் பிரசங்கித்தார் குருடனுக்கு முன் பந்தம் பிடித்தது போலவும், செவிடன் காதில் சங்கீதம் வாசித்ததுபோலவும் அந்த உபந்நியாசம் நிருபயோகமாய்ப் போய்விட்டது. மதுரேசன் பொறாமைக் குணத்தை விடவேயில்லை.இப்படி நிகழுங் காலத்தில் ஒருநாள் புவனேந் திரன் காற்றுக்காகத் தெருவில் உலாவிக் கொண்டிருக்கும் பொழுது, சாதாரணமான ஒரு எளிய ஸ்திரீ ஓடி வந்து புவனேந்திரனைக் கட்டித் தழுவிக்கொண்டு, “அப்பா மகனே! இதுகாறும் என்னைவிட்டுப் பிரிந்திருந்தாயே! உன்னை நான் ஊர்கள் தோறுந் தேடிக்கொண்டு திரிந்தேன். இப்போது சுவாமி கிருபையால் அகப்பட்டாயே!” என்று பலவிதமாகச் சொல்லி அழுதாள். அவள் பைத்தியங் கொண்டவளென்று புவனேந்திரன் எண்ணி, அவள் பிடித்த பிடியைத் திமிறிக் கொண்டு அப்பால் விலகினான். அப்போது கூடஇருந்தவர்கள் அந்த ஸ்திரீயை நோக்கி, “எங்கள் குரு சிரேஷ்டருடைய சற்புத்திரனை நீச ஸ்திரீயாகிய நீ உன் பிள்ளையென்று சொல்ல எப்படித் துணிந்தாய்?’ என்று சொல்லி, அவளைப் பிடித்து அடிக்க ஆரம்பித்தார்கள். அப்பொழுது புவனேந் திரன் அவர்களைத் தடுத்து, “அந்த ஸ்திரீ சித்த ஸ்வாதீன மில்லாதவள் போலத் தோன்றுகிறது; அவளை ஒருவரும் அடிக்க வேண்டாம்” என்று விலக்கினான். உடனே அவள் அவர்களை நோக்கி, “உங்கள் குரு சிரேஷ்டரிடத்திலே என்னுடைய நியாயத்தைச் சொல்லுகிறேன். அவரே உண்மையை விளக்கட்டும்” என்று சொல்லி, குரு சிரேஷ்ட ரிடஞ் சென்றாள். அவள் பைத்தியம் பிடித்தவளென்று எல்லாரும் அவளைப் பின்தொடர்ந்தார்கள். 

அவள் குரு சிரேஷ்டருடைய அரமனையை அடைந்து, அவரை நோக்கி “ஐயா! இந்தப் பிள்ளை என்னுடைய பிள்ளை. என்னுடைய வாசஸ்தலம் மதுராபுரி. என்னுடைய புருஷன் சொற்ப முதல் வைத்துக் கொண்டு வர்த்தகஞ் செய்து வந்தார். இந்தக் குழந்தை அதிபால்லியமாயிருக்கும் போது நாங்கள் அழகர் கோயில் உற்சவம் பார்க்கப் போயிருந்தோம். அங்கே திரளான ஜனக்கூட்டத்தில் இவன் கை தப்பிப் போய் விட்டான். இவனைப் பல இடங்களில் தேடியும் அகப்படாமையினால், என் புருஷன் அந்த வியசனத் தினால் இறந்து போய் விட்டார். நானும் இத்தனை காலமாய், இவனை ஊரூராய்த் தேடிக் கொண்டு திரிந்தேன். இப்பொழுது தான் அகப்பட்டான். இந்தச் சங்கதி மதுரை யிலுள்ள சகல ஜனங்களுக்குந் தெரியும்” என்றாள். அவளு டைய வார்த்தைகள் பூரணமாய் முடியுமுன் அவளைப் பேச வேண்டாமென்று கையமர்த்தி, குரு சிரேஷ்டர் அவளை ஒரு தனி அறைக்குள்ளே அழைத்துக்கொண்டு போய், விசாரிக்கத் தொடங்கினார். இதைப் பார்த்த உடனே ஜனங்கள் ஆச்சரிய மடைந்து சொல்லுகிறதாவது: “இதென்ன விபரீதமா யிருக்கிறது? இந்தப் பைத்தியக்காரியை அடித்துத் துரத்தா மல், அவள் தாறுமாறாய்ப் பிதற்றுவதைக் குரு சிரேஷ்டர் மிகுந்த கவனமாய்க் காது கொடுத்துக் கேட்கிறாரே. அவளைப் பிடித்த பைத்தியங் குரு சிரேஷ்டரையும் பிடித்துக் கொண்டதாய்க் காணப்படுகிறது. அவர் பிள்ளையை அந்த அற்ப மனுஷி தன் பிள்ளையென்று பைத்தியத்தில் உளறினால் அதையுங் காது கொடுத்துக் கேட்பாருண்டோ?” என்று பல விதமாய்ப் பேசிக் கொண்டார்கள். புவனேந்திரன் குரு சிரேஷ்டருடைய சொந்தப் பிள்ளையல்லவென்று உண்மை தெரிந்தவர்கள், சில விசை அந்த மனுஷியே அவனுக்குத் தாயாயிருந்தாலுமிருக்கலாமென்று சந்தேகித்து, ஒன்றும் பேசாமல் மௌனமாயிருந்தார்கள். புவனேந்திரனுக்கு அப்படிப்பட்ட சந்தேகம் கடுகளவு மில்லாதபடியால் குரு சிரேஷ்டர் அந்த ஸ்திரீயினுடைய பைத்தியம் எத்தன்மைய தென்று நிச்சயிக்கும் பொருட்டு, அவளிடத்திலே தனியே சம்பாஷிக் கிறாரென்று புவனேந்திரன் எண்ணிக்கொண்டு யாதொரு கவலையுமில்லாமல் தன் பாட்டில் புஸ்தகம் வாசித்துக் கொண்டிருந்தான். 

13. பூட்டகம் வெளியாதல் 

குரு சிரேஷ்டர் அந்த ஸ்திரீயினுடைய ஊர், பெயர் அவளுடைய புருஷன் பெயர், ஜாதி, மதம், தொழில், அவர் கள் குடியிருக்கும் தெருப் பெயர், வீட்டின் இலக்கம், அண்டை அயல் வீட்டுக்காரர்களுடைய பெயர் முதலிய விவரங்களை யெல்லாம் அவள் மூலமாய் ரகசியத்தில் தெரிந்து கொண்டு அவளைப் பார்த்து, “நீ இந்தச் சங்கதிகளைக் குறித்து இனிமேல் ஒருவரிடத்திலும் ஒரு வார்த்தை கூடப் பேச வேண்டாம். நம்முடைய அன்னசத்திரத்திலே சாப் பிட்டுக் கொண்டு சும்மா இரு. ஒரு வாரத்துக்குள்ளாக உனக்கு முடிவு சொல்லுகிறோம். இப்போது நீ ஒருவருங் காணாதபடி கொல்லை வழியாய்ப் போய்விடு என்று ரகசிய மாய்ச் சொல்லி, அவளை அனுப்பி விட்டார். பிறகு குரு சிரேஷ்டர் மதுரையில் தமக்குப் பழக்கமான ஸ்தல அதிகாரி களுக்கு மேற்படி சங்கதிகளைப் பரிஷ்காரமாய் விசாரித்து, உண்மையைத் தெரிவிக்கும்படி அந்தரங்கமாய்க் கடிதம் அனுப்பினார். அவர்கள் குலாங்கிஷமாய் விசாரித்து, அந்த ஸ்திரீ சொல்லுகிற பெயருள்ள ஆணாவது பெண்ணாவது அந்த இலக்கமுள்ள வீடாவது, அயல் அகங்களாவது அந்தத் தெருவிலே இல்லையென்றும் அவள் சொல்வது சர்வாபத்த மென்றும் மறுமொழி யனுப்பினார்கள். புவனேந்திரன் ராஜ கிரகத்துப் பிள்ளையாயிருக்க வேண்டுமேயல்லாது சாமானிய மாயிருக்கக் கூடாதென்பது குரு சிரேஷ்டருடைய சித்தாந்த மாயிருந்த போதிலும், அவர் நீதிமானாதலால் ஒருக்கால் அந்தப் பெண்பிள்ளை சொல்வது வாஸ்தவமாயிருக்குமோ என்னவோவென்று சந்தேகித்து, மேலே விவரித்தபடி பரி சீலனை செய்தார். அவளுடைய வாக்கு மூலம் சுத்தப் பொய் யென்று தெரிந்த மாத்திரத்தில் குரு சிரேஷ்டருக்கு உண்டான சந்தோஷம் இவ்வளவென்று விவரிக்க ஒருவரா லுங் கூடாது. உடனே அவர் அந்த ஸ்திரீயைக் கொண்டு வரும்படி ஏவலாளர்களை அனுப்பினார். அவள் ஒருவருக்கும் அகப்படாமல் ஊரை விட்டு ஓடிப் போய் விட்டாள். 

14. முதல் மந்திரியின் துராசையும் துர்ப்போதனையும் 

சிலருடைய துர்ப் போதனையினால் இப்படிப்பட்ட அகாதமான கட்டு விசேஷத்தை அந்த ஸ்திரீ உண்டுபண்ணிக் கொண்டு வந்திருக்கவேண்டுமே யல்லாமல் அவள் ஸ்வேச்சை யாய்க் கொண்டு வந்ததல்லவென்றும் புவனேந்திரனுக்கு மதுரேசனையும் அவனுடைய தந்தையாகிய முதல் மந்திரியை யும் தவிர வேறு விரோதிகளில்லாதபடியால் அவர்களே அந்த ஸ்திரீயை ஏவி விட்டிருக்க வேண்டுமென்றும் குரு சிரேஷ்டர் அநுமானித்தார். அவர் அநுமானித்த விஷயம் வாஸ்தவமே. ஏனென்றால், அரசனுக்கு ஆண் சந்ததியில்லாத படியால், சுகுண சுந்தரியைத் தன் மகனுக்கு மணஞ் செய் வித்து, தேசாதிபத்தியமும் அவனுக்குச் சித்திக்கும்படி செய்ய வேண்டுமென்கிற ஒரு பெரிய துராசையை முதல் மந்திரி உடைத்தாயிருந்தான். மதுரேசனுடைய துர்க்குணத்தால் அவனிடத்தில் சுகுண சுந்தரி வெறுப்பும் புவனேந்திரனிடத் தில் பிரியமுமுள்ளவளா யிருப்பதால் புவனேந்திரன் ஒரு அற்ப மனுஷியினுடைய புத்திரனென்று ஸ்தாபித்து, அவனிடத்தில் அரசனுக்கும் சுகுண சுந்தரிக்குமுள்ள மதிப்பைக் கெடுக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் முதல் மந்திரியும் அவனுடைய மகனும் அந்த அபாண்டமான பொய்யை அதிரகசியமாய் அந்த ஸ்திரீக்குப் போதித்து, அவளை ஏவிவிட்டார்கள். குரு சிரேஷ்டர் ஒரு விசாரணையுஞ் செய்யாமல் அவளுடைய வார்த்தையை நம்பினாலும் நம்புவார்; அல்லது அவர் நம்பாவிட்டாலும் புவனேந்திரன் அவருடைய புத்திரன் அல்லவென்கிற உண்மையாவது சகலருக்கும் வெளியாகட்டுமென்கிற நோக்கத்துடன் அந்தக் கட்டுக்கதையைக் கட்டிவிட்டார்கள். புவனேந்திரன் தாய் தகப்பன் அற்ற அநாதப் பிள்ளையென்கிற உண்மையை மறந்திருந்தவர்கள்கூட இட்போது ஞாபகப்படுத்திக் கொள்ளவும்,அதைப்பற்றி ஒருவர்க்கொருவர் கசுகுசென்று அந்தரங்கமாய்ப் பேசிக்கொள்ளவும் இடமுண்டாயிற்று. 

அந் நீசத் தன்மையான ஸ்திரீக்கு குரு சிரேஷ்டர் எட்டுநாள் தவணை கொடுத்து அனுப்பினதும், அவள் வார்த்தை உண்மையா பொய்யா வென்று அவர் மதுரையில் அந்தரங்க விசாரணை செய்வித்ததும், புவனேந்திரனுக்கு அப்போது தெரியாமலிருந்து, பிறகு பலர் மூலமாய் நாளா வட்டத்தில் அவனுக்கு வெளியாயிற்று. அந்தப் பெண்ணினுடைய அசந்தர்ப்பமான வாய்மொழியைக் குறித்து, குரு சிரேஷ்டர் அவ்வளவு சிரத்தையாய் விசாரிக்க வேண்டிய காரண மென்னவென்று புவனேந்திரன் மன மயங்கிக் கொண்டி ருக்கையில், எழுதினவன் இன்னானென்று தெரியாத ஒரு அநாமதேயக் கடிதம் தபால் மார்க்கமாய் அவனிடம் வந்து சேர்ந்தது. அது வருமாறு:- 

15. அநாமதேயக் கடிதம் 

புவனேந்திரனுக்கு, நீ குரு சிரேஷ்டருடைய வளர்ப்புப் புத்திரனே யல்லாது, சொந்தப் பிள்ளையல்ல வென்பது நிச்சயம். அப்படியிருக்க நீ அவர் புத்திரனென் றெண்ணி மனோராஜ்ஜியஞ் செய்வது தகுமா? எளிய தாய் தந்தையரைக் கைவிட்டுவிட்டு, ஆஸ்திவந்தர்களை அன்னை பிதாவென்று சொல்லிக் கொள்வது வெட்கத்துக்குரிய காரியமல்லவா? நல்ல பிள்ளைகளாயிருக்கிறவர்கள் தேசங்கள் தோறுந் திரிந்து தங்கள் தாய் தந்தைகள் இன்னாரென்று அறிந்து கொள்ளப் பிரயாசைப்படுவார்கள். நீ அங்ஙனம் பிரயாசைப்படாமல் வாளாயிருப்பதால் “மாதா பிதாவுக்குத் துரோகி” என்கிற காரணப் பெயர் உனக்குக் கிடைத்திருக்கிறது என்று வரையப்பட்டிருந்தது. 

– தொடரும்…

– சுகுணசுந்தரி சரித்திரம் மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் எழுதிய இரண்டாவது நாவல். 1887ல் இந்நாவலை வெளியிட்டார்.

– சுகுணசுந்தரி (நாவல்), முதற் பதிப்பு: அக்டோபர் 1979, வானவில் பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *