கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 11, 2024
பார்வையிட்டோர்: 283 
 
 

(1887ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 46-60 | அத்தியாயம் 61-73

61. புத்தி போதம் சித்தியாதல்

அரசன் “அதற்குத் தக்க சமர்த்தர்கள் உம்மைத் தவிர ஒருவருமில்லை. ஆனால் உம்மைப் பிரிய எனக்கு மனமில்லை. அன்றியும் உமது இஷ்டம் எப்படியோ அறியேன்” என்றான். 

புவனேந்திரன் “நான் போக ஆக்ஷேபமில்லை. என்னால் கூடியமட்டும் அந்த அரசனைச் சமாதானப்படுத்தப் பிரயாசப் படுவேன்” என்றான். 

அரசன் “நீர் போவதில் இன்னொரு பெரிய சாதகமு மிருக்கின்றது அதிசயிக்கத்தக்க உம்முடைய வாக்கு வல்லமையால் அந்த அரசனை என்னுடைய விவாகத்துக்கு இசையச் செய்தாலும் செய்யலாம்” என்றான். 

புவனேந்திரன் “அந்த விஷயத்தில் நான் உங்களுக்கு யாதொரு வாக்குத் தத்தமும் செய்யமாட்டேன். ஆனால் உங்களுடைய அபிப்பிராயத்தை அந்த அரசனுக்குத் தெரி விப்பேன். அவனுடைய சித்தம் எப்படியோ!” என்றான். 

அரசன் “உம்முடைய நாவசைத்தால் நாடு அசையுமே; நீர் எனக்காகப் பேசினால் அதுவே போதும்” என்று சொல்லி சுகுண சுந்தரியும் அவளுடைய தாதியும் ஊருக்குப் போக முஸ்திப்புச் செய்யும்படி அந்தத் தூதிகள் மூலமாய்ச் சொல்லி அனுப்பினான். 

62. சுகுண சுந்தரியின் சிறைமீட்சி. ஊருக்குத் திரும்புதல் 

புவனேந்திரனுடைய முயற்சியால் இவ்வளவு அனுகூலங் கிடைத்ததென்று, சுகுண சுந்தரி அகங்களித்துக் கடவுளுக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரஞ் செய்தாள். கன்னிகா ஸ்திரீ மடத்தில் தபோதனர்களெல்லாம் இந்தச் சமாச்சாரம் கேள்வியுற்றுச் சந்தோஷித்தார்கள். புவனேஸ்வர னுக்குச் சகாயமாய்ச் சில படைவீரர்களை அனுப்புவதாக அரசன் சொல்ல, அன்னிய ராஜாங்கத்தில் படைவீரர் களுடன் செல்லுவது அயுக்தமென்று புவனேந்திரன் மறுத்து விட்டான். புவனேந்திரனும் சுகுண சுந்தரியும் அவளுடைய தோழியும் பிரத்தியேகமான வாகனங்களின் மேல் ஏறிக் கொண்டு, பயண சந்நாகமாய்ப் புறப்பட்டார்கள். சில தினங்களுக்குள் அந்த அரசனுடைய இராஜ்ஜிய எல்லையைக் கடந்து, தங்களுடைய சுதேச எல்லைக்குட் பிரவேசித்தார்கள். பிரவேசித்தவுடனே அந்த ஸ்தல அதிகாரிகள் நராதிப னுடைய உத்தரவுப்படி புவனேந்திரனைப் பிடிக்க யத்தனித் தார்கள். புவனேந்திரன் பிடிபடாமல் அவர்களை எதிர்க்க ஆரம்பித்தபோது அவர்கள் “அரசனுடைய உத்தரவுப்படி பிடிக்கிறோம்” என்று சொன்னதினால் அரசனுடைய ஆணையை அவமதிக்கக் கூடாதென்று புவனேந்திரன் அவர்களுடைய கைவசமானான். உடனே அந்த அதிகாரிகள் புவனேந்திரனைப் பிடித்துக் கடுஞ்சிறையில் வைத்தார்கள். சுகுண சுந்தரி இனம் பிரிந்த மான்போலவும் மயில்போலவும் திகைப்புற்று, அதிசீக்கிரத்தில் அரசனிடம் போய்த் தெரிவித்துப் புவனேந் திரனை விடுவிக்க வேண்டுமென்று பயணம் புறப்பட்டாள். 

அவள் வழியில் செல்லும்பொழுது எண்ணிறந்த ஜனங்கள் சூழ்ந்துகொண்டு “எங்களுடைய மனோன்மணி வந்துவிட்டாள்” என்று வாழ்த்திக்கொண்டு, சந்தோஷ ஆரவாரத்துடன் அவளுடைய வாகனத்துக்கு முன்னும் பின்னும் சென்றார்கள். 

சுகுண சுந்தரி பலநாள் இரவும் பகலுஞ் சென்று, புவன சேகர புரியை அணுகினாள். அவளுடைய தந்தை முதலி யோர் மார்க்கத்தில் வெகுதூரம் எதிர்கொண்டு வந்து, மகா சம்பிரமத்துடன் பட்டணப் பிரவேசஞ் செய்தார்கள். அந்த நகர வாசிகள் வாழை கமுகுகள் நாட்டி, மகர தோர ணங்கள் கட்டி வீதிகளை அலங்கரித்து, நானாபேத வாத்திய முழக்கத்துடன் சுகுண சுந்தரி சுகமாய் வந்து சேர்ந்ததற்காக ஆனந்த மகோற்சவங் கொண்டாடினார்கள். ஜனங்களுடைய தன்மையே இப்படியானால், அவளுடைய தந்தை முதலானவர்களின் சந்தோஷ மிகுதியை எங்ஙனம் விவரிக்கப்போகிறோம்? இறந்து போன உயிர் மீண்டது போலவும், பசியினால் வருந்துகிறவனுக்குப் பஞ்ச கச்சாய பரமான்னங் கிடைத்தது போலவும் ஆனந்த சாகரத்தில் மூழ்கினார்கள். 

63. அநியாயக் கொலை. குரு சிரேஷ்டருடைய துக்கம். 

அந்தச் சந்தோஷ அமர்க்களம் சிறிது தணிந்தவுடனே, சுகுண சுந்தரியினுடைய வரலாறுகளைத் தெரிவிக்கும்படி அரசன் ஆக்ஞாபிக்க, அவள் சகல சங்கதிகளையும் சவிஸ் தாரமாய்த் தெரிவித்ததுமன்றிக் கடைசியாய்ப் புவனேந்திர னுடைய புத்தி சாதுரியத்தினாலும், தளரா முயற்சியினாலும் தான் தப்பி வந்த சமாச்சாரத்தை விரித்துரைத்தாள், அதைக் கேட்டவுடனே அரசன் தாரை தாரையாய்க் கண்ணீர் சொரிந்து, தன் தலைமேலேயடித்துக் கொண்டு, “ஐயோ! மகளே, நான் அநியாயஞ் செய்து விட்டேனே! நீ காணாமற் போனவுடனே புவனேந்திரன் மேலே சந்தேகம் நினைத்து, அவனை எங்கே கண்டாலும் பிடித்துக் கொல்லும்படி உத்தரவுபோய், அந்தப் பிரகாரம் உன் முன்பாகவே அவன் பிடிபட்டதாகவும், நீ வந்த பிறகு அவனைக் கொன்று விட்டதாகவும் இன்று காலையில் விஞ்ஞாபனப் பத்திரிக்கை வந்து சேர்ந்தது. அந்தக் கொலைக்கு நான் உத்திரவாதியல்ல. இராயசகாரனுடைய கைப்பிசகினால் இவ்வளவு பிரமாதம் நடந்து விட்டது. இந்த அநியாயத்துக்கு நான் என்ன செய்வேன்?” என்று தேம்பித் தேம்பி அழுதான். அதைக் கேட்டவுடனே சுகுண சுந்தரி மூர்ச்சையாகி ஜீவனற்ற சரீரம் போல் கீழே விழுந்து விட்டாள். ஏனென்றால் உலகத்தில் யார் துன்பப் பட்டாலுஞ் சகியாத இரக்க சுபாவமுள்ள சுகுண சுந்தரி, தனக்கு இவ்வளவு உபகாரஞ் செய்த புவனேந்திரன் தன்னிமித்தமாகவே கொலை யுண்டானென்று கேட்க எப்படிச் சகிப்பாள்? அப்போது குரு சிரேஷ்டரும் கூட இருந்தார். அரசன் அந்தக் குரூர உத்தரவை அனுப் பினதும், புவனேந்திரன் கொலையுண்டதும் அந்த நிமிஷம் வரையில் அவருக்குத் தெரியாது. மலை கலங்கினாலும், மனங் கலங்காத திடச்சித்தமுடைய குரு சிரேஷ்டர் திடீர் என்று அந்தச் சமாச்சாரத்தைக் கேட்டவுடனே மனமயங்கிக் கீழே விழுந்து. புரண்டு புரண்டு அழுதார். அரமனை முழுவதும் அழுகைக் குரல் கிளம்பிற்று. 

64. ஜனங்களின் பிரலாபம் 

இந்தச் சமாச்சாரம் நகர முழுதும் ஒரு நிமிஷத்திற் பரவி, திரும்பிவந்த உயிர் மறுபடியும் போய் விட்டது போல. எங்கே பார்த்தாலும் அழுகையும் பிரலாபமும் நிறைந்தன. ஏனென்றால், புவனேந்திரனுடைய சற்குணத்தை அறியாதவர்கள் ஒருவருமில்லை. “ஐயோ அப்பா! நீ யார் பெற்ற பிள்ளையோ? அற்ப ஆயுசாய் மாண்டு போனாயே” என்பாரும், “இவ்வளவு அற்ப ஆயு சுள்ள உனக்கு அசாத்தியமான புத்தியையும் சக்தியையும் அழகையும் கல்வியையும் கடவுள் ஏன் கொடுத்தார்?” என்பாரும், “ஆகாயத்தில் இந்திர வில் அழகாகத் தோன்றி, ஒரு நிமிஷத்தில் மறைவதுபோல் மறைந்துபோனாயே” என்பரும், “விருக்ஷம் வைத்து வளர்த்துப் பலன் கொடுக்கிற காலத்தில் வெட்டுண்ட துபோல், நல்ல யௌவன காலத்தில் மாண்டாயே” என்பாரும், “பஞ்ச முதலிய துர்ப்பிக்ஷ காலத்தில் எத்தனையோ குடும்பங்களை ரக்ஷித்தாயே! இனி அப்படிப்பட்ட காலத்தில் யாரை அடுப்போம்?” என்பாரும் “சுகுண சுந்தரியாவது தப்பியிருந்தால் அவள் எங்களைச் சமய த்தில் ரக்ஷிப்பாளே; நீ போன பிறகு அவள் பிராணனை வைத் திருப்பாளா?” என்பாரும், “எங்களுடைய துக்கமே இவ்வளவு பெரிதாயிருக்கும் போது, உன்னைத் தொட்டு வளர்த்துச் சகல சுகங்களையும் அநுபவித்த குரு சிரேஷ்டரும் அவருடைய பத்தினியும் இனிமேல் பிராணனை வைத்திருப்பார்களா?’ என்பாரும், “உபகாரத்துக்கு அபகாரஞ் செய்த இந்த அரசனைப் போலக் கொடுங்கோலர்கள் உலகத்தில் உளரா?” என்பாரும், “இராவணனுக்கு மந்திரியாக மகோதரனும் துரியோதனனுக்குச் சகுனியும் வாய்த்தது போல் எங்கள் ராஜாவுக்குத் துர்மந்திரி வாய்த்தானே” என்பாரும், “இனி மேல் இந்த ஊரில் அக்கினி மழை பெய்யும்” என்பாரும் இவ்வாறு பலரும் பல வகையாய்ச் சொல்லிப் புலம்பினார்கள். 

65. நராதிபனுடைய மனோவியாதியும் மரணமும் 

குரு சிரேஷ்டர் மயக்கம் தெளிந்து எழுந்தவுடனே “இனி ஒருநாளும் இந்தத் துஷ்ட ராஜனுடைய முகத்தில் விழியேன்” என்று சங்கல்பஞ் செய்துகொண்டு, தமதர மனைக்குப் போய் விட்டார். சுகுண சுந்தரி மூர்ச்சை தெளிந்து பிழைத்தது ஒரு புநர்ஜன்மம் போலாயிற்று. நராதிபன் மகளைப் பிரிந்திருந்த ஏக்கத்தினால் சரியான அன்னம் ஆகாரமில்லாமல் வியாதி மேலிட்டு, முன்னமே துரும்புபோல் இளைப்புற்றிருந்தான். இப்பொழுது தன் மகளுக்குப் பரமோபகாரஞ் செய்து, சிறைமீட்டு வந்த புவனேந்திரனை அநியாயமாய்க் கொலை செய்வித்துச் சாந்த மூர்த்தியாகிய குரு சிரேஷ்டருடைய துவேஷத்தைச் சம்பாதித்துக் கொண்டோமே என்கிற மனோவியாதியினால் அவனுக்குத் தேக வியாதி அதிகரித்து, சிலமாதம் படுத்த படுக்கையிலே யிருந்தான். அந்தக் காலத்தில் சுகுண சுந்தரி தந்தைக்காகப் பட்டபாடுகள் சாமானியமல்ல. எண்ணிக்கை யில்லாத ஊழியக்காரர்கள் இருந்தாலும் அவளே தன் கையால் பத்திய பாகங்களும், சகல பக்குவங்களும், பணி விடைகளும் செய்து வந்தாள். வைத்தியத்தினால் ஒன்றும் பலிதமில்லாமல் அரசன் தேகவியோகமானான். அதற்காகச் சிலர் அநுதாபப்பட்ட போதிலும் அநேக ஜனங்கள் ‘புவனேந்திரனை ‘அநியாயமாய்க் கொலை செய்த அரசன் இருந்தென்ன? போயென்ன? இனி நம்மை ரக்ஷிக்கச் சுகுண சுந்தரி யிருக்கும்போது நமக்கு யாது குறை?” என்று நிர் விசாரமாயிருந்தார்கள். 

66. அநியாய மரண சாசனம். 

இறந்து போன அரசனுக்கு அபரக் கிரியைகள் யாவும் முடிந்த பிறகு, முதல் மந்திரி சுகுண சுந்தரியை நோக்கி, ‘இனி நடக்க வேண்டிய ஏற்பாடுகளைப்பற்றி மகாராஜா இராயசகாரனைக் கொண்டு ஒரு மரண சாஸனம் எழுதுவித்து, அதில் தமது கையெழுத்தும் முத்திரையும் வைத்து, லிகித பீடத்துக்குள் வைத்திருப்ப தாகச் சிலர் மூலமாக நான் கேள்விப்பட்டேன். அந்த மரண சாஸனத்தின் உட்பொருள் இன்னதென்று எனக்குத் தெரி யாது. லிகிதபீடத்தைத் திறந்து பார்க்கவேண்டும்” என்றான். உடனே சுகுண சுந்தரி ஆச்சரியங் கொண்டு “என் தந்தை யார் நான் நடக்க வேண்டிய கிரமங்களைப்பற்றி எனக்கு வாய் மொழியாக உத்தரவு கொடுத்தாரேயன்றி, அவர் யாதொரு மரண சாஸனம் எழுதி வைத்திருப்பதாக, எனக்குத் தெரிவிக்கவில்லை. ஆயினும் லிகிதபீடத்தைத் திறந்து பார்ப்போம்’” என்று சொல்லி அந்தப் பிரகாரம் திறந்து பார்க்க, ஒரு மரண சாஸனம் அகப்பட்டது. அதன் சாரசங்கிரகம் என்னவென்றால், சுகுண சுந்தரியை விவாகஞ் செய்யத்தக்க மன்னர்கள் ஒருவருமில்லாத படியால் அவள் முதலாவது மந்திரி குமாரன் மதுரேசனை மணஞ் செய்து கொண்டு. அவர்களிருவரும் ராஜ்ஜிய பரிபாலனஞ் செய்ய வேண்டு மென்றும், அவளுக்கு அவனை மணஞ் செய்யச் சம்மதமில்லாத பக்ஷத்தில் மதுரேசன் மட்டும் பட்டாபிஷேகத்துக்கு யோக்கியனே யன்றிச் சுகுண சுந்தரி ராஜாதிகார பாத்தியத்தை இழந்து விட வேண்டும் என்றும் எழுதப்பட்டிருந்தது. அதைக் கண்ணுற்ற உடனே சுகுண சுந்தரி பாம்பைத் தீண்டினவள் போல அலமலந்து பிரமித்து, அகமறுகினாள். உடனே முதல் மந்திரி “மரண சாஸனத்தில் என்ன எழுதப்பட்டிருக்கின்றது?” என்று வினவ, “அதை நீங்களே பார்த்துக்கொள்ளலாம்” என்று அவன் கையிலே கொடுத்தாள். முதல் மந்திரி அதை வாசித்துப் பார்த்து, “மகாராஜா செய்திருக்கிற ஏற்பாடு நல்ல ஏற்பாடு” என, சுகுண சுந்தரி “அது மகாராஜா செய்த ஏற்பாடு என்பதும் அல்லவென்பதும் கடவுளுக் குத்தான் தெரியும். அது வாஸ்தவமாயிருந்தாலும் கூட, மகாராஜா அவருடைய இராஜ்ஜியத்தை யாருக்கு வேண்டுமானாலும் யதேச்சா விநியோகஞ் செய்யலாமேயல்லாது, என்னுடைய சரீரத்தையும்  அவரிஷ்டப்படி யாருக்காவது தத்தஞ் செய்ய அவருக்கு யாதொரு அதிகாரமுமில்லை. இந்தத் தேசாதி பத்தியத்தை யார் வேண்டுமானாலுங் கைக்கொள்ளட்டும்” என்று சொல்லித் திடீரென்று எழுந்து, மரண சாஸனத் தையுந் தன்னகையில் வாங்கிக்கொண்டு, அந்தப்புரத் துக்குட் போய்விட்டாள். சுகுண சுந்தரியை இனிக் காணச் சந்தர்ப்பப் படாதென்று முதல் மந்திரி கேள்வியுற்று, அவனுடைய கிரகத்துக்குத் திரும்பிப் போய் விட்டான். 

67. சுகுண சுந்தரியின் பட்டாபிஷேகத் துக்கு விக்கினம். ஏழைகள் புலம்பல். 

மரண சாஸனத்தின் சங்கதி ஊரெங்கும் தெரிந்த உடனே பட்டணம் அல்லோல கல்லோலமாய்ப் போய் விட்டது. ஏனென்றால், சுகுண சுந்தரிக்குப் பட்டாபிஷேக மாகுமென்றும் அவளால் அநேக நன்மைகளைப் பெறலா மென்றும் எதிர்பார்த்த ஜனங்கள், இப்போது அந்தப் பட்டாபிஷேகத்துக்கு இடையூறு சம்பவித்த தென்று கேள்விப்பட்ட மாத்திரத்தில் அதை எங்ஙனஞ் சகிப்பார் கள்? ஊரில் வியாபாரங்களெல்லாம் நின்றுபோயின கடைகளெல்லாங் கபாட பந்தனம் செய்யப்பட்டன. தேவாலயங்களில் பூஜை முதலிய ஆராதனையில்லாமலும், நியாயஸ்தலங்களில் நியாய பரிபாலனம் நடவாமலும், வித்தியா சாலைகளில் வித்தியாப்பியாசமில்லாமலும், வீடு களில் சுபசோபனாதிகளில்லாமலும் சகலமும் அமங்கலமாய்ப் போய்விட்டன. எங்கணும் துக்கமும் பிரலாபமுமேயல்லாமல் சந்தோஷ மென்பதைச் சகலரும் கை விட்டார்கள். 

“புவனேந்திரனும் இறைவனும் இறந்துபோன துக்கமே நமக்கு மாறவில்லையே! அதுவும் போதாதென்று சுகுண சுந்தரியும் பட்டத்தை இழக்க வேண்டுமா? இடிமேல் இடி யிடித்ததுபோல் இது என்ன அநியாயம்?” என்பாரும், ‘கொள்ளித் தேளுக்கு மணியங் கொடுத்ததுபோல் மதுரேசன் பட்டத்துக்கு யோக்கியனா?’ என்பாரும், “இப்படிப்பட்ட துர்மரண சாசனத்தை எழுதிவைக்க அரசன் புத்திகெட்டுப் போனானே’ என்பாரும், “அரசன் என்ன செய்வான்? சகலமும் மந்திரியினுடைய LOTW வித்தை” என்பாரும், “சுகுண சுந்தரி பட்டத்தை இழந்து தேசாந்தரம் போய் விட்டால், லக்ஷ்மியும் குடிபோய்விடுவாள்; பிறகு அவளு டைய அக்காள்தான் இந்த ஊரில் வசிப்பாள்” என்பாரும், “நாமெல்லோருஞ் சுகுண சுந்தரியுடனே போய்விட்டால் பிறகு மதுரேசனும் அவனுடைய அப்பனும் யாரை ஆள் வார்கள்?” என்பாரும், “மதுரேசனுக்குப் பட்டம் ஆகுமுன் அநேகம் உயிர் நஷ்டமாகுமே” என்பாரும், “அவனுடைய பட்டாபிஷேகத் திருமஞ்சனத்துக்கு, இப்போது ரணகளத் தில் சிந்தப்போகிற இரத்தமே உரியது” என்பாரும், இவ்வாறு பலவிதமாய்ச் சொல்லிப் பரிதபித்தார்கள். 

புவனேந்திரனுடைய அகால மரணத்தால் விசனமுற்று, வெளிக் காரியங்களிலே பிரவேசிக்காதிருந்த குரு சிரேஷ்டர் ஊரில் உண்டாகிய அமளியைக் கேள்வியுற்று, அதன் உண் மையை அறிவதற்காக அரசனுடைய அரமனைக்குச் சென்றார். அங்கே துக்கமே உருவெடுத்ததுபோன்ற சுகுணசுந்தரியைக் கண்டு “என்ன விசேஷம்?” என்று விசாரிக்க, அவள் அந்த மரணசாஸனத்தை அவர் கையிலேகொடுத்தாள். குரு சிரேஷ்டர் அந்த மரண சாஸனத்தை மிக்க சாவதானத் துடன் வாசித்துப் பார்த்துப் பிரமிப்படைந்து, அதன் உண்மையைக் குலாங்கிஷமாய் விசாரிப்பதற்காக, அதை எழுதின இராயசகாரனை அழைத்து வரும்படி சில சேவகர்களை அனுப்பினார். அவர்கள் போய் விசாரித்து அந்த இராயசகாரன் தேசாந்திரம் போய்விட்டதாகவும் அவன் போனவிடந் தெரியவில்லையென்றும் அறிவித்தார்கள். உடனே குரு சிரேஷ்டர் சுகுண சுந்தரியை நோக்கி “இந்தச் சாஸனம் சுத்தக் கற்பிதமென்று அநேக அநுமானப் பிரமாணங்களால் தோன்றுகிறது. ஒரு அரசன் இறந்து போய் மறு அரசனுக்கு மகுடாபிஷேகம் ஆவதற்கு முன் யாதொரு சங்கடம் நேரிட்டால். அதை அரசனுடைய குலகுரு பரிசீலனை செய்து தீர்மானிக்கவேண்டுமென்று இன்ன சட்டத்தில் சொல்லப்படுகின்றது. நான் அந்தப் பிரகாரம் சகலரையும் சபை கூட்டுவித்து, இந்தச் சங்கதியை விசாரிக்கப் போகிறேன் என்று சொல்லி, மந்திரிகள், பிரதானிகள், நியாயாதிபதிகள், மற்ற அதிகாரிகள், மகாஜன சங்கத் தலைவர்கள் முதலிய யாவரும் இன்ன கிழமையில் இன்ன நேரத்தில், கொலுமண்டபத்தில் வந்து கூடவேண்டும் என்று உத்தரவு அனுப்பினார். 

68. அசேஷ மகாஜனசபை சபாநாயகருடைய நியாயவாதம். 

குரு சிரேஷ்டருடைய உத்தரவுப் பிரகாரம் முதல் மந்திரி ஒருவன் தவிர மற்ற யாவரும் வந்து சபை கூடினார்கள். அவர்களுடைய மத்தியில் சபாநாயகராய் வீற்றிருந்த குரு சிரேஷ்டர் எழுந்து நின்று கொண்டு, அந்த மரண சாஸனத்தை யாவரும் அறியும்படி வாசித்துக் காட்டினார். அதைக்  கேட்டவுடனே சபையாரில் அநேகர் எழுந்து ‘அது சுத்தத் தப்பிதமாயிருக்க வேண்டும்” என்று மொழிந்து மறுபடியும் உட்கார்ந்தார்கள். குரு சிரேஷ்டர் சபையாரை நோக்கிச் சொல்லுகிறார்; “உலகத்தில் பல அதிசயங்களைப் பற்றி நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் இந்த மரண சாஸனத்தைப் போன்ற அதிசயத்தை நாம் எங்கும் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. • விவாகத்துக்கும் பட்டாபிஷேகத்துக்கும் யாதொரு சம்பந்தமுமில்லாதிருக்க, அவைகளிரண்டையும்
சம்பந்தப்படுத்தி ஒன்றையொன்று தழுவிக்கொண்டிருக்கும் படியாக இந்த மரண சாஸனத்தில் அபூர்வ நிபந்தனை கண்டிருக்கிறது. நராதிப மகாராஜா தன்னுடைய ஏக குமாரத்தி யிடத்தில் எவ்வளவோ அன்பும் பிரியமும் வைத்திருந்தா ரென்பதும் அவளைச் சில நாள் பிரிந்திருந்த நிமித்தியம் அவருடைய தேகம் எவ்வளவு இளைத்துப்போய் விட்டதென்பதும் நமக்கெல்லாம் தெரிந்த காரியமே. அப்படிப்பட்ட பக்ஷமுள்ள தகப்பனார் தமது மகளுக்குப் பிரியமில்லாத ஒரு மாப்பிள்ளையை விவாகம் செய்துகொள்ள வேண்டுமென்றும், அதற்கு இசையாத பக்ஷத்தில் தேசாதி பத்தியத்தை இழந்துபோக வேண்டியதென்றும் இப்படிப் பட்ட குரூரமான நிபந்தனையுடன் மரண சாஸனம் எழுதி வைத்திருப்பாரென்று நீங்கள் நம்புகிறீர்களா? (“நாங்கள் நம்பவில்லை, நம்பவில்லை” யென்று மத்தியில் சபையார் கூவினார்கள்.) இப்படிப்பட்ட மரண சாஸனத்தை நீங்கள் நம்புகிறதாயிருந்தால் உலகத்திலுள்ள தாய் தகப்பன்மார் எல்லாரும் தங்களுடைய பிள்ளைகளை விஷம் வைத்துக் கொல்லுவார்களென்கிற வார்த்தையையும் நீங்கள் நம்ப வேண்டியிருக்கும். அற்ப விஷயத்தில் பிறக்கிற ஆதரவுகள் கூடத் தக்க சாக்ஷிகள் முன்னிலையில் பிறக்கிறது வழக்கமா யிருக்கிறது. பெரிய தேசாதிபத்தியத்தைப் பற்றிப் பிறந்த தாகச் சொல்லப்பட்ட இந்த முக்கிய ஆதரவு நம்மவர்களில் ஒருவருக்கும் தெரியாமல் ரகசியத்தில் பிறந்திருக்கக் கூடுமா? அதை எழுதின இராயசகாரனைத் தவிர அதற்கு வேறே சாக்ஷியில்லை. அந்த இராயசகாரனும் போன இடந் தெரியாமல் எங்கேயோ ஓடி ஒளிந்துகொண்டான். அவனு டைய மனச் சாக்ஷியே அவனை ஒருவர் கண்ணிலும் படாமல் இழுத்துக்கொண்டு ஓடியதாகத் தெரியவருகிறது. “புவனேந் திரனைப் பிடித்துக்கொள்ளுகிறது” என்று மகாராஜா சொன்ன வாக்கியத்தைப் புரட்டி “பிடித்துக் கொல்லு கிறது” என்று எழுதிய மகாபாதகன் இந்த இராயசகாரனே. இவனுடைய லிகிதம் எவ்வளவு நம்பிக்கைக்குப் பாத்திர மென்பதை நீங்களே கவனிக்க வேண்டும். இந்த மரண சாஸனத்தைப்பற்றி முதல் மந்திரி, தான் கேள்விப்பட்ட தாகக் சுகுண சுந்தரிக்குச் சொன்னாராம். அப்படியிருந்தால் முதல் மந்திரி இந்தச் சபையிலே வந்து, இன்னார் மூலமாய்த் தான் கேள்விப்பட்டே னென்று அவர்களைக் கொண்டு ரூபித் திருக்கலாம். அப்படி அவர் நிரூபணம் செய்தாலுங்கூட அவருடைய மகன் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் அவரு டைய இந்த வார்த்தையை நம்பும்படி யிராது. இச்சபை யிலே வராதபடி அவரது மனோசாக்ஷி தகைந்துவிட்டதாகக் காணப்படுகின்றது. 

இந்த மரண சாஸனத்தில் மகாராஜாவினுடைய கையெழுத்தும் முத்திரையும் எப்படி வந்திருக்கக்கூடுமென்று நீங்கள் மலைப்பீர்கள். அந்த இராயசகாரனே சர்வலோகப் புரட்ட னென்றும், அவன் சகலருடைய கையெழுத்தைப் போலவும் எழுத வல்லவனென்றும் நான் பலர் மூலமாய்க் கேள்விப்பட்டிருக்கிறேன். அவன் மகாராஜாவினுடைய கையொப்பம் போல அடியில் எழுதியிருக்கிறானென்பதற்குச் சந்தேகமில்லை. அவன் அந்த மரண சாஸன முழுமையும் மகாராஜா எழுதினதுபோல எழுதாமல், இவ்வளவோடே விட்டதற்காக நாம் சந்தோஷிக்க வேண்டியதாயிருக்கிறது. எழுத்து மூலமான பல உத்தரவுகளில் ராஜ முத்திரை பதிப்பிக்க வேண்டியதற்காகப் பகல் முழுதும் முத்திரைக் கோல் அந்த இராயசகாரன் கையிலிருப்பது வழக்கமாயிருக் கின்றது. ஆகையால் இந்த மரண சாஸனத்தில் ராஜ முத்திரை இருப்பதற்காக நாம் ஆச்சரியப்பட வேண்டுவ தில்லை. இனி அந்த இராயசகாரனுக்கு ‘சமஸ்தானப் புரட்டன்’ என்கிற பட்டப் பெயரே தகுதியானது. பதுமைக் கூடத்தைப் போல அவனை உள்ளேயிருந்து ஆட்டி வைத்த கபட நாடக சூத்திரதாரிகள் இன்னார் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். (“ஆம் அறிவோம், அறிவோம்” என்று ஆரவாரித்தார்கள்.) இந்த மரண சாஸனம் பொய் என்பதற்கு இன்னும் பல திருஷ்டாந்தங்கள் உள. அவற்றுள் முக்கியமான இரண்டொரு திருஷ்டாந்தங்களை விளம்புவேன். மகாராஜா கடின வியாதியாயிருந்த காலத்தில் நான் ஆயாசமாயிருக்கிறேனென்று நினைத்து, என்னைச் சமாதானப்படுத்துவதற்காக அவர் என்னைத் தம்மிடத்துக்கு வரவழைத்தார். எனக்கு ஆதியில் அவரிடத்திலிருந்த மனஸ்தாபம் மாறிவிட்டதென்று, அவருக்கு ஹித வசனங் கள் நான் கூறியபோது, தாமிறந்த பிறகு சீக்கிரத்தில் சுகுண சுந்தரிக்கு மகுடாபிஷேகம் சூட்ட வேண்டுமென்றும், தக்க வரன் தேடி விவாகம் செய்விக்க வேண்டுமென்றும், அவர் என்னைக் கேட்டுக் கொண்டாரேயன்றி, மதுரேசனைப் பற்றி யாதொரு வார்த்தையும் சொல்லவில்லை. அவ் வண்ணமே சுகுண சுந்தரியிடத்திலும் ராஜ நீதிகளைப்பற்றி மகாராஜா அடிக்கடி பேசினாரேயன்றி மதுரேசனைக் குறித்து ஒரு வார்த்தையும் சொல்லவில்லையென்று அந்த மாதரசியும் சொல்லுகிறாள். எங்கள் இருவருடைய வார்த்தையை நீங்கள் நம்புகிறீர்களா? இல்லையா? [சபையார் ” நம்பு கிறோம்” என்றார்கள்.] இப்போது நான் எடுத்துக்காட்டிய நியாயங்களினாலும் இன்னும் அநேக காரணங்களினாலும் இந்த மரண சாஸனம் சர்வாபத்தமென்று பட்டப் பகல்போல வெட்ட வெளியாய்த் தோன்று கிறது. ஆகையால் இன்னும் பதினைந்து தினத்துக்குள் சுகுண சுந்தரிக்கு மகுடாபிஷேகம் செய்விக்க யோசித்திருக்கிறேன். உங்களுடைய சம்மதம் தெரிய வேண்டும்” என்றார். உடனே சபையாரெல்லாரும் “பூரண சம்மதம்” “சம்மதம்” என்று கைகொட்டி ஆனந்த கோஷம் செய்தார்கள். சந்திரோதயம் கண்ட சமுத்திரம்போல இந்தச் சமாசாரங் கேட்ட சகல ஜனங்களும் சந்தோஷித்துச் சரீரம் புளகித்தார்கள். 

69. முதல் மந்திரி கோட்டையை வளைத்து முத்திக்கை போடல் 

சுத்த அபாண்டமாய் மரண சாசனத்தை உண்டு பண்ணின முதல் மந்திரியையும் அவனுடைய மகனையும் எங்கே பார்த்தாலும் ஜனங்கள் தூஷிக்க ஆரம்பித்தார்கள். 

இனிமேல் நகரத்துக்குள்ளிருந்தால் தனக்கு அவமானம் நேரிடு மென்று நினைத்து, முதல் மந்திரி இராக்காலத்தில் குடும்ப சகிதமாய் புறப்பட்டு, நகரத்துக்கு வெளியே இராணுவங்கள் வசிக்கிற இடத்துக்குப் போய்விட்டான். சுகுண சுந்தரிக்கு மகுடாபிஷேகம் ஆகாதபடி முதல் மந்திரியும் அவனுடைய மகனும் அனேக படைவீரர்களை ஸ்வா தீனப்படுத்திக் கொண்டு, கோட்டையை வளைத்து முத்திக்கை போடும்படி ஜாக்கிரதை செய்தார்கள். உடனே கோட்டை வாயில் களெல்லாம் மூடப்பட்டபடியால் உள்ளேயிருக்கிற ஜனங்கள் வெளியே போகக்கூடாமலும், வெளியே யிருக்கிறவர்கள் உள்ளே வரக்கூடாமலும் சகலருடைய போக்கு வரவுகளும் நின்று போய்விட்டன. உணவுக்குரிய நவதானியங்களும், காய்கறி பதார்த்தங்களும், இன்னும் மற்றச் சரக்குகளும் வெளியே யிருந்து வராமல் நின்றுவிட்டமையால் நகரவாசிகள் அன்னபானாதிகளுக்கு வழியில்லாமல் அவஸ்தைப் படும்படி சம்பவித்தது. சுகுண சுந்தரியின் மகுடாபிஷேகத் துக்கு வேண்டிய சாமக்கிரியைகளும் இல்லாமையால், மகுடா பிஷேககத்தையும் நிறுத்தும்படி சம்பவித்தது. ஆனதுபற்றி நகரத்தார்களுக்கும் நகரத்தில் வசித்த படை வீரர்களுக்கும் ஆக்கிரகம் உண்டாகி, கோட்டையை வளைத்துக்கொண்ட வெளிப்படைகளோடு யுத்தம் செய்ய யத்தனித்தார்கள். யுத்தத்தில் எண்ணிக்கை யில்லாத ஜனங்கள் மடியுமே யென்று குரு சிரேஷ்டர் அனுதாபப்பட்டு, முதல் மந்திரி யோடு சந்தி செய்து சமாதானம் பேசுவதற்காகச் சில ஸ்தானாதிபதிகளை அனுப்பினார். அவர் சமாதானத்துக்கு இசையாமையினால் யுத்தத்தைத் தவிர வேறு வழியில்லாமற் போய்விட்டது. 

70. பிரமாத யுத்தம் 

கோட்டைக்குள்ளிருந்த படைவீரர்களும் நாகரீகர் களும் சுகுண சுந்தரி பக்ஷத்தில் சேர்ந்தார்கள். பெண்டுகளும் பிள்ளைகளுங்கூடச் சுகுண சுந்தரிக்காகப் பிராணனைக் கொடுக்கச் சித்தமாயிருந்தார்கள். வெளியே யிருந்த படைகளை யெல்லாம் முதல் மந்திரி ஸ்வாதீனப் படுத்திக் கொண் டான். அவ்விரு படைகளும் சுதேசப் படைகளாதலால், தகப்பன் ஒரு படையிலும், பிள்ளை ஒரு படையிலும், தமையன் ஒரு படையிலும், தம்பி ஒரு படையிலும். மாமன் ஒரு படையிலும், மருமகன் ஒரு படையிலும் சேர்ந்தார்கள். அவ்விரண்டு படைகளும் ஆலகால விஷம் போல் சீறிக் கொண்டு கோடையிடிபோல் கர்ஜித்துக் கொண்டு, ஒருவரோ டொருவர் யுத்தம் செய்தார்கள். மலையும் மலையும் தாக்கியது போலும், மேகமும் மேகமும் பொருந்தியதுபோலும், சமுத் திரமும் சமுத்திரமும் எதிர்த்ததுபோலும், யானைப் படைக ளோடு யானைப் படைகளும், அசுவப் படைகளும் அசுவப் படைகளும், காலாட் படைகளோடு காலாட் படைகளும் கலந்து யுத்தம் செய்தார்கள். சிரமற்றவர்களும், கரமற்றவர்களும், தாளற்றவர்களும், தோளற்ற வர்களும், இடையற்றவர்களும், தொடை யற்றவர்களும் இவ்வாறு கண்ட துண்டமாய் ரணகளமெங்கும் பிண மலைகள் குவிந்தன. சோரிப் பிரவாகம் வாரிப் பிரவாகம்போல் ஓடியது. கழுகு, பருந்து, காகம் முதலிய பக்ஷிகள் ஆகாய மெங்கும் பந்தலிட்டது போல வட்டமிட்டுப் பறந்தன. இவ்வாறு பத்து நாள் வரையில் ஒரு பக்ஷத்திலும் ஜயமில் லாமல் அகோர யுத்தம் நடந்தது. 

71. செத்தவன் பிழைத்தல், தர்மமே ஜெயம் 

பத்து நாளைக்குமேல் யுத்தம் செய்யப் போதுமான வஸ்துக்கள் சுகுண சுந்தரியின் படைகளுக்குக் குறைவா யிருந்தபடியால், அவர்கள் சோர்வடைந்து தோற்கிற சமயமா யிருந்தது. அந்தச் சமயத்தில் மேற்குத் திசையிலிருந்து சப்த சாகரமும் கரைபுரண்டு வருவதுபோல எண்ணிக்கையில்லாத ரத கஜ துரக பதாதிகளுடன் புவனேந்திரன் வந்து, முதல் மந்திரி படையை எதிர்த்துப் போர் செய்தான். அந்தப் படை களுடன் எதிர்த்து நிற்க மாட்டாமல், இராமாயண யுத்தத் தில் மூல பலங்களைக் கண்டவுடனே வானரப்படைகள் போல் முதல் மந்திரி படைகள் பின்னிட்டு ஓட ஆரம்பித்தன. அவர்களை வெகுதூரம் வரையில் புவனேந்திரன் துரத்திக் கொண்டுபோய், கொக்குக் கூட்டங்களை இராசாளி சாடினது போல் சாடினான். புவனேந்திரனைக் கண்டவுடனே முதல் மந்திரிப் படைகள் ஆயுதங்களை எறிந்துவிட்டு “இனி நாங்கள் யுத்தம் செய்கிறதில்லை. எங்களுக்குப் பிராண பிக்ஷை கொடுத்துக் காப்பாற்ற வேண்டும்” என்று இரந்து மன்றாடி னார்கள். உடனே “சுகுண சுந்தரி பக்ஷம் ஜயம், ஜயம்” என்று ஜயபேரி முழக்கப்பட்டது. முதல் மந்திரியும் அவனுடைய மகனும் போன இடம் தெரியாமல் ஒளிந்து கொண் டார்கள். புவனேந்திரனைக் கண்டவர்கள் “இதென்ன புதுமையா யிருக்கிறது? இறந்து போனவன் தேவலோகம் போய்த் தேவர்களைப் படை சேர்த்துக்கொண்டு வந்தான் போலும்!” என்று அதிசயித்தார்கள். இந்தச் சமாச்சாரங்க ளெல்லாம் கோட்டைக்குள் அரமனையிலிருந்த குருசிரேஷ் டரும் சுகுண சுந்தரியும் கேள்வியுற்று, உடனே கடவுளுக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்து, புவனேந்திரனுடைய வரலாறுகளை அறிவதற்காக அளவற்ற ஆவலுடன் காத்திருந் தார்கள். புவனேந்திரனும் அவனுடைய முகச்சாயலை யுடைய வேறொரு முதிய அரசரும் தங்களுடைய படைகளை யெல்லாம் கோட்டைக்கு வெளியே கூடாரங்களில் முகாம் செய்யும்படி உத்தரவு கொடுத்துவிட்டு வாகனாரூடராய்ச் சுகுண சுந்தரியின் திருமாளிகையை அடைந்தார்கள். புவனேந்திரனைக் கண்டவுடனே குரு சிரேஷ்டர் அவனைக் கட்டித் தழுவி முத்தமிட்டு மிக்க அங்கலாய்ப்புடனே ஆனந்த பாஷ்பம் சொரிந்தார். சுகுண சுந்தரியும் முத்து முத்தாய்க் கண்ணீர் வடித்துச் சந்தோஷ மேலீட்டினால் தேக பரவசமானாள். பிறகு அவர்களிரு வர்களுக்கும் சுகுண சுந்தரியும் குரு சிரேஷ்டரும் மிக்க அன்போடு தக்க உபசாரங்கள் செய்து, உயர்ந்த பீடங்களில் வீற்றிருக்கச் செய்தார்கள். உடனே புவனேந்திரனோடு வந்த பெரிய அரசர் குரு சிரேஷ்டரை நோக்கித் தன்னு டைய சரித்திரத்தைச் சொல்லத் தொடங்கினார். அந்தச் சரித்திரத்தை அடுத்த அதிகாரத்தில் காணலாம். 

72. ஆரிய தேசாதிபதியின் சரித்திரம் 

நான் சீரிய வளங்களை யுடைய ஆரிய தேசாதிபதி. தங்களால் அருமையாய் வளர்க்கப்பட்ட புவனேந்திரன் என்னுடைய தவப் புத்திரன். இவனை நான் இளமையிலே பிரியும்படி நேரிட்ட காரணம் மகா துயரத்துக்குரியது. என்னுடைய ஆளுகைக்கு உட்பட்டவர்களில் சரிபாதி ஜனங்கள் இந்துக்களாயும் மற்றொரு பாதி மகமது மதஸ்தர் களாயு மிருக்கிறார்கள். என்னுடைய படை வீரர்களில் அநேகர் மகமதியர்களா யிருந்தார்கள். நான் இந்து மதாபி மானியாயினும் என்னுடைய பிரஜைகளுக்குள் உண்டாகும் மத சம்பந்தமான கலகங்களை நான் நீதியாயும் நிஷ்பக்ஷபாத மாயும் தீர்த்து வந்ததால், மகமது மதஸ்தர்களும் அதிருப்தி யில்லாமல் என்னுடைய கோலின் கீழ் அமைந்து வாழ்ந் தார்கள். சத்துருக்கள் என்கிற பிரசக்தியே யில்லாமல், என்னுடைய தேசமெல்லாம் சமாதானத்தை நாடியிருந்த மையால் நான் ஐரோப்பா கண்டத்துக்குப்போய், அவ் விடத்திலுள்ள நாகரீகங்களையும் ராஜரீக தர்மங்களையும் நான் சுயமே கண்டறிந்து, அந்தப் பிரகாரம் என்னுடைய தேசத்திலும் அநுஷ்டிக்க வேண்டுமென்பது என்னுடைய அத்தியந்த அபேக்ஷையா யிருந்தது. புவனேந்திரன் ஆறு மாதக் குழந்தையாயிருக்கும்போது, அவனுடைய மாதாவும் என்னுடைய ஏக பத்தினியுமான கோகிலாம்பாள் தேச பரிபாலன நிர்வாக சக்தியுள்ளவளா யிருந்தபடியால் அவளை எனக்குப் பிரதிநிதியாக நியமித்து, அவளுடைய உத்தரவுப் பிரகாரம் மந்திரி முதலானவர்கள் நடக்கும்படி ஆக்ஞாபித்த பிறகு, நான் வேண்டிய பரிவாரங்களுடன் ஐரோப்பாவுக்குக் கடல் வழியாய்யாத் திரை புறப்பட்டேன். அந்தக் காலத்தில் நீராவிக் கப்பல், தந்தித் தபால் முதலிய சௌகரியங்கள் இல்லாமலிருந்தமையால், நான் சாதாரண மான கப்பலின் மேல் யாத்திரை செய்து, அநேக மாதங் களுக்குப் பிறகு ஜரோப்பாவை அடைந்தேன். அங்கே பிரான்சு, இங்கிலாந்து, இத்தாலி ஜெர்மனி முதலிய தேசங்களைச் சுற்றிக்கொண்டு, ஒவ்வொரு ராஜதானியிலும் நான் சில மாதகாலம் தங்கியிருந்து, ஆங்காங்குள்ள அதிசயங்களைப் பார்த்துக்கொண்டு ஊரூராகச் சஞ்சரித்தேன். 

நான் இல்லாத காலத்தில் என்னுடைய தேசத்தில் நடந்த விபரீதங்களை நான் கேள்விப்பட்ட பிரகாரம் தெரிவிக்கிறேன். மகமதியருக்குள்ளாக வழக்கப்படி ஒரு பிரபலமான வருஷோற்சவம் நடந்தபோது, ஆப்கானிஸ் தான் (Afghanistan), பெர்சியா (Persia) முதலான தேசங் களிலிருந்து எண்ணிக்கையில்லாத மகமதியர்கள் திருவிழாப் பார்க்க வந்தார்கள். அப்போது இந்துக்களுக்கும் மகமதியர் களுக்கும் பெரும் கலக முண்டாகி, இரு கக்ஷியாரும் ஒருவரை யொருவர் தாக்கி, உபத்திரவம் செய்ய ஆரம்பித்தார்கள். காபூல் (Kabul), காந்தஹார் (Kandahar) முதலிய ஊர்களில் இருந்து வந்த மகமதியர்கள் பரம துஷ்டர்களும் சமயோன் மத்தர்களுமாதலால், என்னுடைய தேசத்தில் இந்து ராஜாங்கத்தை ஒழித்து, மகமது மதஸ்தாபனம் செய்ய வேண்டுமென்று கருதி, இந்துக்களைக் கண்டவிடங்களிலெல் லாம் நிர்மூலம் செய்ய ஆரம்பித்தார்கள். இந்து ராஜாங்கப் பூண்டு என்பதே இல்லாதபடி என்னுடைய பிள்ளையைக் கொல்வதற்காக அந்த மூர்க்கர்கள் அரமனையில் பிரவேசிக்க யத்தனமாயிருந்தபோது பிள்ளையைக் காப்பாற்றுவதற்கு வேறே மார்க்கமில்லாதபடியால், அந்தப் பிள்ளையின் பாற் காரி தான் ரகசியத்தில் கொண்டுபோய்க் காப்பாற்றுவதாகச் சொல்லிப் பிள்ளையை வாங்கிக்கொண்டு போய்விட்டாள். என்னுடைய பத்தினியும் சில தாதிகளுடன் இராக்காலத்தில் அரமனையை விட்டு வெளிப்பட்டுப் போய்விட்டாள். அதற்குப் பின்பு அந்தக் கொடியர்கள் அரமனையிற் பிரவேசித்துப் பிள்ளையைக் காணாமையால் எப்படியாயினும் பிள்ளையைத் தேடிக்  கண்டுபிடித்துக் கொலை செய்ய வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டார்களாம். அந்தக் கலகத்தை அடக்க மந்திரி முதலானவர்கள் அவர்களாற் கூடியமட்டும் பிரயாசப்பட்டும் பயன்படாமல் மகமதியர் கக்ஷியே மேற்கொண்டு, பழைய நவாபு வம்சத்தில் ஒருவனுக்குப் பட்டமாகி இந்து ராஜாங்கம் மகமதிய ராஜாங்கமாக மாறிவிட்டது. 

இந்தச் சமாச்சாரங்களைக் குறித்து என்னுடைய பத்தினி முதலானவர்கள் ஐரோப்பாவிலிருந்த எனக்குப் பல கடிதங் கள் அனுப்பினபோதிலும், நான் மேலே சொல்லியபடி நீராவிக் கப்பல், தந்தித் தபால் முதலிய சாதனங்கள் இல்லா மையால் அந்தக் கடிதங்கள் என் கையில் வந்து சேர அதிக கால தாமசமாகிவிட்டது. அந்தக் கடிதங்களைப் பார்த்த உடனே, மட்டு மிதமில்லாத மனமடிவோடு நான் ஐரோப் பாவை விட்டுப் புறப்பட்டு, பல மாத காலம் கடல் யாத் திரை செய்து இந்தியாவில் வந்து சேர்ந்தேன். இந்தியாவில் நாடு நகரங்களெல்லாம் இழந்து, இருக்க இடமில்லாமல், சுழற் காற்றில் அகப்பட்ட துரும்பு போலவும், ஆகாயத்தில் அலையும் பக்ஷிபோலவும் பல நாள் அலைந்து திரிந்து, பின்பு இங்கிலீஷ் ராஜாங்கத்தில் சில நாள் வசித்தேன். என்னுடைய மந்திரி பிரதானி முதலிய பழைய உத்தியோகஸ்தர்களில் தப்பியிருந்தவர்கள் நான் ஐரோப்பாவை விட்டுத் திரும்பி வந்த சமாச்சாரம் கேள்வியுற்று, ஒவ்வொருவராய் வந்து என்னைக் கண்டு கொண்டார்கள். என்னுடைய மனைவி தூரதேசத்தில் ஒரு ஏழைக் குடியாவனன் வீட்டில் வெகு காலம் ஒளிந்திருந்து பிறகு என்னிடம் வந்து சேர்ந்தாள். என்னுடைய பிள்ளையும் பாற்காரியும் அவள் புருஷனும் போன இடம் தெரியாமையினால், அம் மூவரும் மகமதியர் கத்திக்கு இரையாய் விட்டார்களென்று நினைத்து நினைத்து நெஞ்சம் புண்ணாகி உலை மெழுகு போல் உருகினோம். என்னு டைய ஹிந்துப்பிரைஜைகளில் அனேகர் எனக்காக மகமதியர் களோடு யுத்தம் செய்யச் சித்தமாயிருந்துமன்றி, இங்கிலீஷ் துரைத்தனத்தாரும் அனேக சைனியங்களை எனக்கு உப பலமாகக் கொடுத்தபடியால் நாங்கள் எல்லாரும் மகமதிய ரோடு வெகுகாலம் பிரமாத யுத்தம் செய்தோம். ஆறு வருஷம் யுத்தம் செய்த பின்பு என் பக்ஷத்தில் வெற்றி உண் டாகி. இங்கிலீஷ் துரைத்தனத்தாருடைய சகாயத்தால் என் னுடைய தேசாதிபத்தியம் மறுபடியும் எனக்குச் சித்தித்தது அங்ஙனம் சித்தித்து சில வருஷங்களுக்குப் பின்பு, தூர தேசத்தில் ஒளிந்திருந்த பாற்காரி புருஷன் என்னிடம் வந்து, புவனேந்திரனுடைய விருத்தாந்தங்களையெல்லாம் எனக்குத் தெரிவித்தான். 

இதற்கு இருபத்து ஐந்து வருஷத்துக்கு முன் குழந்தைப் பருவத்தில் புவனேந்திரனை இந்த நகரத்துக்கு வெளியே ஒரு நாள் அதிகாலையில் உங்கள் கையிலே கொடுத்தவன் அந்தப் பாற்காரி புருஷனே. பிள்ளையைக் கொல்வதற்காக அந்தத் துஷ்டர்கள் எங்கெங்கும் தேடிக்கொண்டு திரிந்ததால் அதற்குப் பயந்து கொண்டு பாற்காரியும் அவள் புருஷனும் பிள்ளையைத் தூரதேசத்துக்குக் கொண்டுவந்து விட்டார்கள்; பிறகு அதை வளர்க்க நிர்வாகமில்லாமையால் தக்க பிரபுக் களிடத்தில் கொடுத்து வளர்ப்பிக்கவேண்டுமென்று நினைத்து இந்த ஊர் வழியாய்ப் பாற்காரி புருஷன் பிள்ளையைக் கொண்டு செல்லும் பொழுது, தங்களை வழியிலே கண்டு பிள்ளையைத் தங்கள் கையிலே கொடுத்துவிட்டானாம். இதற்கு ஐங்காதவழி தூரமுள்ள அவனுடைய மாமனார் வீட்டில் அவனும் அவன் பெண்சாதியும் வசித்தபோதிலும், புவனேந்திரனைத் தாங்கள் அருமையாய் வளர்த்ததும் வித்தியா போதஞ் செய்தது முதலான சகல சங்கதிகளையும், பாற்காரியும் அவன் புருஷனும் ரகசியத்தில் விசாரித்துத் தெரிந்துகொண்டே யிருந்தார்களாம். எனக்கு மறுபடியும் ராஜாங்கம் கிடைத்துச் சகல கலகங்களும் நிவிருத்தியான பின்புதான் பாற்காரியும் அவள் புருஷனும் என்னிடம் வந்து, புவனேந்திரனைப்பற்றி ஆதியந்தமாகச் சகல சங்கதிகளையும் தெரிவித்தார்கள். அப்போது சுகுண சுந்தரியும், புவனேந் திரனும் காணாமற் போயிருக்கிற சமாச்சாரம் எனக்குத் தெரிந்து, அவர்களைப் பலவிடங்களில் தேடிப் பார்க்கும்படி அநேக படைவீரர்களைப் பாற்காரி புருஷனோடு அனுப்பினேன். 

சுகுண சுந்தரியைச் சிறைமீட்டுக் கொண்டுபோன புவனேந்திரனை நராதிப மகாராஜா உத்தரவுப்படி எல்லை அதிகாரிகள் பிடித்துச் சிறையில் வைத்தபோதிலும், பிறகு அவன் நிரபராதியென்று தெரிந்து அவனைக் கொல்லாமல், அந்நிய ராஜாங்கத்திற் போய்த் தப்பிக்கொள்ளும்படி அவர்கள் உத்தரவு கொடுத்து, அவன் அந்தப் பிரகாரம் அந்நிய ராஜாங்கத்திற் செல்லும் பொழுதுதான், என்னு டைய படைவீரர்களும் பாற்காரி புருஷனும் புவனேந் திரனைக் கண்டார்கள். முதல்மந்திரியினுடைய உத்தரவுக்குப் பயந்து, புவனேந்திரனைக் கொன்று விட்டதாக நராதிப மகாராஜாவுக்கு எல்லை அதிகாரிகள் எழுதிய போதிலும், கடவுளுடைய விசேஷ கிருபையால் அவனைக் கொல்லாமலே விட்டு விட்டார்கள். அவன் வழியிலே செல்லும்பொழுது என்னுடைய படைவீரர்களும் பாற்காரி புருஷனும் அவனைக் கண்டு என்னிடம் அழைத்துவந்தார்கள். என் பிள்ளையைக் கண்டவுடனே, எனக்கும் என் பத்தினிக்கும் எவ்வளவு ஆனந்தம் உண்டாயிருக்கு மென்று மானச் காக்ஷியாய் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமே யல்லாது, நான் அதை விவரிக்கும் தரமுடையன் அல்லேன். நான் இழந்துபோன என்னுடைய அரசாக்ஷி முதலிய ஐசுவரியங்கள் எனக்கு மறுபடியும் கிடைத்த உடனே எனக்குண்டான சந்தோஷத்தைப் பார்க்கிலும், என் பிள்ளையைக் கண்டபோது எனக்குண் டான சந்தோஷம் ஆயிரம் பங்கு அதிகமாயிருக்கிறது. ஆனால் சகலமும் தங்களால் வந்த பாக்கியமே யல்லாமல் என்னாலே யாதொன்றுமில்லை. என் பிள்ளையை இளம் பருவமுதல் வளர்த்து அவனைச் சகல கலா வல்லவனாகவும் தர்மவானாகவும் ஆக்கிவிட்ட தங்களுடைய ஒப்பற்ற பேருபகாரத்துக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? கடவுளது ஆஞ்ஞைப்படி மன்னுயிர்களையெல்லாம் தாங்கி ரக்ஷிக்கா நின்ற பூமிக்கும், மழை பொழிந்து நம்மைக் காப்பாற்றுகிற மேகத்துக்கும் நாம் செய்யத் தக்க பிரதி உபகாரம் யாது? புவனேந்திரன் என்னிடம் வந்து சேர்ந்த பிறகு, இந்த நகரத்தில் என்ன விசேஷ மென்று அப்போதைக்கப்போது சாரணர்களை வைத்து விசாரித்துக் கொண்டு வந்தோம். நராதிப மகாராஜா இறந்து போனதும் சுகுண சுந்தரியின் மகுடாபிஷேகத்துக்கு முதல் மந்திரி விக்கினம் செய்து யுத்தத்துக்கு யத்தனமா யிருந்தும், நாங்கள் வேவுகாரர் மூலமாய் அறிந்து, சமயத்தில் உங்களுக்கு உதவி செய்யும் பொருட்டு நாங்கள் அதி துரித மாய்ப் படைகளைச் சேர்த்துக் கொண்டு இவ்விடத்துக்கு வந்தோம். இதுதான் எங்களுடைய வரலாறு” என்று ஆரிய தேசத்து அரசன் சொல்லி முடித்தார். 

73. சுகுண சுந்தரியின் பட்டாபிஷேகமும் விவாக மகோற்சவமும். 

பிறகு ஆரிய தேசாதிபதி தம்மோடு வந்த பாற்காரி புருஷனைக் குரு சிரேஷ்டர் முன்பாகக் கொண்டுவந்து விடுத்து “இவனை இன்னானென்று தெரிகிறதா? பாருங்கள்” என்றார். குரு சிரேஷ்டர் அவனை உற்றுப் பார்த்து “ஆம் ஆம், இந்த மனிதன்தான் ஆதியில் புவனேந்திரனை என் கையிலே கொடுத்து விட்டுக் கம்பி நீட்டி விட்டான். இப்போது அதிக வயசு சென்றவனாயிருந்த போதிலும் இவன்தான் சந்தேக மில்லை’ என்றார். பிறகு குரு சிரேஷ்டர் ஆரிய தேசாதி பதியை நோக்கிப் “புவனேந்திரன் உங்கள் பிள்ளை என்ப தற்கு வேறு சாக்ஷி வேண்டுவதில்லை. நீங்கள் இருவரும் தற் சொரூபம் ஒரே சாயலாக இருக்கிறீர்கள். உங்களை அறியாத வர்கள் கூட உங்களைப் பார்த்த உடனே தகப்பனும் பிள்ளையு மென்று சந்தேகமில்லாமல் சொல்லுவார்கள். இப்படிப்பட்ட பிரத்தியக்ஷமான ருசு இல்லாவிட்டால், நான் வளர்த்த பாத்தியத்தைக் கொண்டு புவனேந்திரனை என் பிள்ளை யென்றே ஸ்தாபித்து, அவனை விடமாட்டேன். இப்படிப் பட்ட சற்புத்திர மாணிக்கம் யாருக்குக் கிடைக்கும்? களைப் பிதாவாக உடைய புவனேந்திரனும் மகா பாக்கிய சாலியே. சுடச் சுடப் பிரகாசிக்கும் தங்கம் போலக் கடவுள் உங்களிருவருக்கும் துன்பத்தின் மேல் துன்பத்தைக் கொடுத்து, உங்களை மேன்மைப்படுத்தியிருக்கிறார். இப்படிப் பட்ட பாக்கியம் ஒருவருக்குங் கிடையாது. உங்கள் மூல மாய்க் கடவுள் எங்களுக்கும் பெரிய உபகாரஞ் செய்திருக் கிறார். நீங்கள் படை சேர்த்துக்கொண்டு, சமயத்தில் வந்து எங்களுக்கு உதவாவிட்டால், நாங்கள் அபஜயப்பட்டு, இந்நேரம் பட்டணம் அதல குதலமாய்ப் போயிருக்கும், ஆகையால் உங்களுடைய பேருபகாரத்துக்கு நாங்கள் என்ன பிரதியுபகாரஞ் செய்யப்போகிறோம்?” என்றார். 

பிறகு எல்லாரும் நீராடி, நித்திய கருமங்களை முடித்துப் போஜனஞ் செய்த பிறகு சுகுண சுந்தரியின் மகுடாபிஷேகத் துக்காக ஒரு மங்கள தினம் குறிக்கப்பட்டது. அந்தத் தினத் துக்கு முன் தங்களுக்கு நட்புள்ள அரசர்களுக்கெல்லாம் திருமுகம் அனுப்பி வரவழைத்து, சூரியனும் நாணும்படி அரமனையை அதிசோபிதமாய்ச்சிங்காரித்துத் தெய்வலோகம் போல ஊரெல்லாம் அலங்கரித்து, சகல ஜனங்களுடைய கண்ணும் மனமுங் களிக்க சுகுணசுந்தரியின் மகுடாபிஷேகம் நிறைவேறியது. 

மகுடாபிஷேகமான தினத்தில் சகலரும் கேட்டுக் கொண்டபடி சுகுண சுந்தரி சிங்காசனத்தில் வீற்றிருந்து, நியாய பரிபாலனம் செய்யும்பொழுது அநேக ஸ்திரீகள் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய் வந்து, “மகா மண்ட லேச்வரியே! எங்களுக்கு மங்கலியப் பிக்ஷை கொடுக்க வேண்டும்” என்று பிரார்த்தித்தார்கள். அவர்கள் யாரென்று சுகுண சுந்தரி வினவ, அவர்கள் சொல்லுகிறார்கள்: “அம்மணீ! அறியாப் புத்தியினால் உங்களுடன் எதிர்த்து யுத்தஞ் செய்த படை வீரர்களின் மனைவிகள் நாங்களே. எங்களுடைய நாயகர்கள் முதல் மந்திரியின் துர்ப்புத்தியைக் கேட்டுக் கெட்டுப் போய்விட்டார்கள். அவர்கள் தங்க ளுடைய பிசகை இப்போது நன்றாயுணர்ந்து, மனஸ்தாபப் படுகிறார்கள்; நீங்கள் தண்டிப்பீர்களென்று பயந்துகொண்டு அநேகர் தேசாந்தரம் போக யத்தனமா யிருக்கிறார்கள். எங்களுடைய கணவர்கள் தேசாந்தரம் போய்விட்டால் நாங்களும் எங்களுடைய பிள்ளைகளும் என்ன செய்வோம்?” என்று சொல்லித் தேம்பித் தேம்பி யழுதார்கள். உடனே சுகுண சுந்தரி “உங்களுடைய கணவர்கள் செய்த குற்றத்தை இந்தத் தடவை மன்னித்திருக்கிறோம். அந்தப்படி ஊரெங்கும் ஒரு விளம்பரப் பத்திரிகை மூலமாய்ப் பிரசித்தஞ்செய்ய யோசித்திருக்கிறோம். ஆகையால், உங்களுடைய நாயகர்கள் தேசாந்தரம் போக வேண்டுவதில்லை. யாராவது முன்னமே போயிருந்தால் அவர்களை நீங்கள் வரவழைத்துக் கொள்ள லாம்” என்றாள். இதைக் கேட்டவுடனே அந்த ஸ்திரீகள் ஆனந்த பாஷ்பம் சொரிந்து சிங்காசனத்தின் அடியில் விழுந்து விழுந்து கும்பிட்டார்கள். 

மற்ற மந்திரிகள் பிரதானிகளெல்லாரும் “இதென்ன அந்நியா திருசயமா யிருக்கிறது? ராஜாங்கத்துடன் எதிர்த்த வர்களை எப்படி மன்னிக்கலாம்?” என்றார்கள். சுகுண சுந்தரி அவர்களை நோக்கிச் சொல்லுகிறாள்:-“அவர்கள் ராஜாங் கத்துடன் எதிர்க்கவில்லை. என்னுடைய பிதா இறந்துபோய் வேறொருவருக்கும் ம் பட்டமாகாமல் அராஜரீகமாயிருந்த காலத்தில் அவர்கள் யுத்தஞ் செய்தார்களே யல்லாது மற்ற படி யல்ல. அவர்களுக்குத் துர்ப்போதனை செய்து, சண்டை யைத் தூண்டிவிட்டவர்கள் சந்தேகமில்லாமல் தண் டனைக்குப் பாத்திரர்களா யிருக்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டு, இவர்களைத் தண்டிப்பது ஆயுதத்தைப் பிரயோகித்தவனைக் கோபிக்காமல் ஆயுதத்தைக் கோபிக்கிறதற்குச் சமானமா யிருக்கிறது. இந்த ஸ்திரீகளுடைய கணவர்கள் தோஷக்கிரஸ்தர்களா யிருந்தாலும்கூட அவர்களை மன்னிக்கும்படியான ராஜ சுதந்தரம் எப்போதும் எனக்கு இயல்பாகவே சொந்தமா யிருக்கிறது. இந்தக் குற்றத்தில் ஒருவரல்ல, இருவ ரல்ல. பல பெயர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். இத்தனை பெயரையும் ஏக காலத்தில் தண்டிப்பது நீதியாய்த் தோன்ற வில்லை. அவர்களைத் தண்டிப்பது அவர்களுடைய பெண் சாதிகள் பிள்ளைகளையும் தண்டிப்பதற்குச் சமானமல்லவா? அவர்கள் தான் நமக்கு அபராதஞ் செய்தார்கள். அவர் களுடைய பெண்சாதிகளும் பிள்ளைகளும் நமக்கு என்ன துரோகம் செய்தார்கள்? கடவுள் ஒருவர் தவிர மற்ற எல்லாருந் தோஷக்கிரஸ்தர்களாகவே யிருக்கிறார்கள். நம்முடைய மனத்தினாலும், வாக்கினாலும், கிரியைகளினாலும் நாம் தினந்தோறுஞ் செய்கிற தோஷங்களுக்குக் கணக் குண்டா? நம்முடைய தலைமயிர்களை எண்ணினாலும் நம்முடைய தோஷங்களை எண்ணி முடியுமா? அவ்வளவு தோஷங்களையும் இந்த உலகத்தில்கடவுள் க்ஷமிக்கவில்லையா? நல்லவர்களுக்கும் பொல்லாதவர்களுக்கும் சமானமாய் மழை பெய்யவும், சமானமாய்ச் சூரியன் பிரகாசிக்கவும், பஞ்ச பூதங்கள் அவற்றின் தொழில்களைச் செய்யவும் கடவுள் அநுக் கிரகிக்கவில்லையா? நம்மால் கூடியமட்டும் கடவுளுடைய கிருபையையும், இரக்கத்தையும் ஜீவகாருண்யத்தை யும் பின்பற்றி நடக்கவேண்டாமா? நாம் பிறருடைய குற்றங் களைப் பொறுக்காவிட்டால் கடவுள் நம்முடைய குற்றங்களை எப்படிப் பொறுப்பார்? நாம் தினந்தோறும் கடவுளுடைய தயாப் பிரசாதத்துக்காகக் கையேந்திப் பிரார்த்திக்கிறோம். நாம் ஒருவர்க்கொருவர் தயை செய்யாவிட்டால் கடவுளு டைய கிருபை நமக்கு எப்படிக் கிடைக்கும்? ஒரு துஷ்டன் நமக்குத் தீங்கு செய்தானென்று அவனுக்கு நாமும் தீங்கு செய்வோமானால், அவனும் நாமும் சமானமாகிறோமே யல்லாமல், அவனுக்கும் நமக்கும் என்ன பேதமிருக்கிறது? ஒருவன் செய்த தீங்கை உடனே நாம் பொறுத்துக்கொள்வோ மானால், அது நமக்கே நன்மையாய் முடியும். அப்படி யில்லாமல் அவன் செய்த தீங்குக்குப் பதிலாக நாமும் தீங்கு செய்வோமானால், அதற்குமேல் அவனொன்று செய்ய, நாமொன்று செய்ய, இவ்வாறு தீங்குகளும் துன்பங்களும் வளர்ந்துகொண்டே யிருக்கும். இது நான் சகல ஜனங் களுக்கும் பொதுவாகச்சொல்லுகிறேனே யல்லாது ராஜாங்க விஷயத்தில் சொல்லவில்லை ஏனென்றால் துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம் செய்யவேண்டியது ராஜாக்களுடைய கடமையா யிருக்கிறது. இந்த ஸ்திரீகளுடைய புருஷர்கள் எனக்குச் செய்தது போல இதரர்களுக்கு இடர் செய்திருப் பார்களானால், அவர்களை நான் மன்னிக்கும்படியா யிராது. அவர்கள் எனக்குமட்டும் துரோகம் செய்திருப்பதால் அந்தக் குற்றத்தை இந்தத் தடவை க்ஷமிக்கிறேன். மகுடாபிஷேகம், கலியாணம் முதலிய சந்தோஷ காலங்களில் எப்படிப்பட்ட குற்றவாளிகளையும் மன்னிப்பது எந்த ராஜாங்கத்திலும் வழக்கமாயிருக்கிறது. அப்படியே நானும் க்ஷமிக்கிறேன்” என்றாள். 

இதைக் கேட்டவுடனே அந்த ஸ்திரீகளும், இதர ஜனங் களும் பிரமானந்தமடைந்து “தர்மமே அவதரித்ததுபோன்ற சுகுண சுந்தரி நீடுழிகாலந் தீர்க்காயுளா யிருக்கவேண்டும்” என்று கோயிலுக்குக் கோயில் கும்பிட்டுப் பிரார்த்தனை செய்தார்கள். 

சில நாள் சென்ற பின்பு, ஆரிய தேசாதிபதி குரு சிரேஷ்டரை நோக்கி “ஐயா! இந்த ஏசியா (Asia) கண்டத்தி லும் ஐரேப்பாவிலும் (Europe) அநேக ஸ்திரீகளை நேரே நான் பார்த்துமிருக்கிறேன், கேள்விப்பட்டு மிருக்கிறேன். அழகிருந்தால் கல்வியில்லை; கல்வியிருந்தால் குணமில்லை; குணமிருந்தால் அழகில்லை; இவ்வாறு ஒவ்வொரு குறைவுள்ள வர்களா யிருக்கிறார்கள். சகல சற்குணங்களும், திவ்விய சுலக்ஷணமும், வித்தையும், புத்தியும் சம்பூரணமாய் நிறைந்த சுகுண சுந்தரியைப் போன்ற பெண்களை நான் எங்கும் காண வில்லை. இப்படிப்பட்ட மகோத்தமியை எனக்கு மருமக ளாக்கிக்கொள்ள வேண்டுமென்கிற ஆசை அளவற்றதாயிருக் கிறது. சுகுண சுந்தரிக்கும் புவனேந்திரனுக்கும் பிதுர் ஸ்தானமாகிய நீங்கள், என்னுடைய ஆசையின்படி நிறை வேற்றி வைக்கவேண்டும்” என்று பிரார்த்தித்தார். உடனே குரு சிரேஷ்டர் ஆரிய தேசாதிபதியை நோக்கி “இன்று நேற்றல்ல, நெடு நாளாய் எனக்குண்டாகிய அபேக்ஷையும் அதுவே. சுகுண சுந்தரிக்குச் சமான மானபெண்கள் எப்படியில்லையோ, அப்படியே புவனேந்திரனுக்குச் சமானமான புருஷர்களுமில்லை. அவர்களிருவரையும் ஒருவருக்காக ஒருவரை இந்த உலகத்தில் கடவுள் அமைத்திருக்கிறா ரென்பது என்னுடைய சித்தாந்தம். அவர்களிருவரையும் நாம் ஒன்று சேர்க்காவிட்டால், அது தெய்வ சம்மதமா யிராது. ஊராருக்கும் திருப்தியாயிராது” என்றார். 

பிறகு குரு சிரேஷ்டரும் ஆரிய தேசாதிபதியும் புவனேந்திரனை வரவழைத்து, தங்களுடைய அபேக்ஷையைத் தெரிவித்தார்கள். உடனே புவனேந்திரன் அவர்களை நோக்கி “என் பிரிய பிதாக்களே! சிந்தித்ததெல்லாந் தரும் சிந்தாமணி யாருக்காவது கிடைத்தால், அதை வேண்டாமென்பார்களா? அப்படியே சுகுண சுந்தரியை வேண்டாமென்கிற புருஷர்கள் உலகத்திலிருப்பார்களா? ஆனால் எனக்கு ஒரு பெருந் தடை யிருக்கிறது. நான் தக்ஷண தேசாதிபதி யிடத்திலிருந்து சுகுண சுந்தரியைச் சிறை மீட்டுக்கொண்டு வந்தபோது, அந்த அரசர் தமக்காக நராதிப மகாராஜாவிடத்தில் விவாகம் பேசும்படி என்னைக் கேட்டுக் கொண்டு, நானும் அதற்கு உடன்பட்டேன். நராதிப மகாராஜா இறந்து போய்விட்டதால், இப்போது இன்னது செய்கிறதென்று தெரியாமல் மயங்கிக் கொண்டிருக்கிறேன்” என்றான். உடனே குரு சிரேஷ்டர் புவனேந்திரனை நோக்கி “நீ நராதிப மகாராஜாவிடத்தில் மணத் தூது பேசுவதாக ஒப்புக்கொண்டபடியால், அந்த அரசர் இறந்தபோதே உன்னுடைய கடமை நீங்கிவிட்டது. தக்ஷண தேசாதிபதி ஆதியில் மணத்தூது அனுப்பியபோது நராதிப மகாராஜா சையாமையினால் அவரோடு யுத்தம் செய்து பார்த்தான். அதினாலும் லாபமில்லாமையினால் அந்த அரசன் சுகுண சுந்தரியை வஞ்சகமாய்ச் சிறை எடுத்துக் கொண்டு போனான். அப்போழுதும் சுகுண சுந்தரி கூடா தென்று மறுத்து விட்டாள். இவ்வளவு நடந்த பிறகு அவன் மறுபடியும் உன்னைத் தூது பேசும்படி கேட்டுக் கொள்ள என்ன நியாயமிருக்கிறது?” என்றார். 

புவனேந்திரன் குரு சிரேஷ்டர் சொன்ன நியாயங்களை அங்கீகரணம் செய்து கொண்டதால், குரு சிரேஷ்டர் சுகுண சுந்தரியினுடைய மனோ பாவத்தை அறியத் தக்க முயற்சிகள் செய்தார். அவளுடைய சம்மதத்தை அவள் வாயால் தெரிவிக்க விட்டாலும் “அகத்தின் அழகு முகத்திலே தெரியும்” என்பதுபோல அவளுடைய சம்மதத்தை அவளுடைய முக மலர்ச்சியே வெளிப்படுத்தியபடியால், புவனேந்திரனுக்கும் சுகுண சுந்தரிக்கும் விவாக மகோற்சவம் அதிசம்பிரமமாய் நிறைவேறியது. 

(முற்றும்)

இந்த நூல் 

சமூகத்தில் காணப்படும் குறைபாடுகளை இந்த நாவலில் ஆசிரியர் வேதநாயகம் பிள்ளை யவர்கள் நன்கு விளக்குகிறார். 

தமது அநுபவ ஞானத்தைக் கொண்டு மக்களுக்கு நல்ல பல நீதிகளையும் போதனைகளையும் நாவலின் இடையிடையே நாவலாசிரியர் விளக்கும் பாங்கு மிக ரசமானது. 

சுகாதாரத்தின் இன்றியமையாமை இள வயதில் திருமணம் செய்வது, தேகப் பயிற்சியின் தேவை – போன்ற அறநெறி போதனை நிறைந்த நீதிக் களஞ்சியமாகவும் இந்த நூல் திகழ்கிறது. 

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், மனித இயல்பின் பல்வேறு கோணங்களையும், பல்வேறு அறநெறிக் கொள்கைகளையும் வாசக நேயர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டாகவே இந்த நாவல் எழுதப்பட்டது எனலாம். 

நூலாசிரியர் எழுதிய வடிவில் அதே நடையில் பல ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் பிரசுரம் மீண்டும் செய்யப்பட்டுள்ளது. 

– சுகுணசுந்தரி சரித்திரம் மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் எழுதிய இரண்டாவது நாவல். 1887ல் இந்நாவலை வெளியிட்டார்.

– சுகுணசுந்தரி (நாவல்), முதற் பதிப்பு: அக்டோபர் 1979, வானவில் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *