(1887ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 31-45 | அத்தியாயம் 46-60 | அத்தியாயம் 61-73
46. சுகுண சுந்தரி கன்னியர் மாடத்தில் சிறையிருத்தல்
சுகுண சுந்தரி சொன்ன நியாயங்களை அரசன் கேள்விப்பட்ட மாத்திரத்தில், அவனுக்குச் சிறிது விவேகம் உதயமாகி, அவளை அவளுடைய ஊருக்கு அனுப்பிவிடலா மென்று யோசித்தான். அவன் மறுபடியும் அவளது அதி ரூபலாவண்ணிய சோபிதத்தை அந்தத் தூதிகள் சொல்லக் கேள்வியுற்று, மதிமயங்கி, அவளை அனுப்பக் கூடாதென்று நிச்சயித்துக்கொண்டான். அவள் இப்போது இருகிற இடந் தவிர, வேறெங்காயினும் இருப்பாளானால் அவளைப் பலவந்த மாய்க் கொண்டுபோயிருப்பான். அவள் பிராஞ்சு துரைத்தனத்தாரால் நியமிக்கப்பட்ட தவப்பெண்க ளுடைய ஆச்சிரமத்தில் அடைக்கலம் புகுந்திருப்பதாலும், அந்த ஆச்சிரமத்தில் தான் ஒரு காலத்திலும் அக்கிரமமாய்ப் பிரவேசிக்கிறதில்லையென்றும், அந்த மடாதிபதிகளுடைய இஷ்டத்துக்கு விரோதமாய் நடக்கிறதில்லை யென்றும் அவன் பிராஞ்சு ராஜாங்கத்தாருடன் உடன்படிக்கை செய்திருப்பதாலும், அந்த உடன்படிக்கையை மீறி நடக்க அவன் துணியவில்லை. காலஞ் செல்லச் செல்ல, சுகுண சுந்தரி மனந்திரும்பி விவாகத்துக்கு இசைவாளென்றும் அதுவரையில் அவளை அவளுடைய ஊருக்கு அனுப்பாமல் அந்த மடத்திலே வைத்திருக்க வேண்டுமென்றும், அரசன் அந்தத் தபோதனர்களுக்கு ஒரு நிருபம் அனுப்பினான்.
அந்த நிருபம் அவர்களுக்கு அதிருப்தியாயும் அசம்மத மாயுமிருந்தாலும், அதை நிராகரிக்கக் கூடாதவர்களாய்ச் சுகுண சுந்தரியை நோக்கிச் சொல்லுகிறார்கள்:-“உம்மை அரசனிடத்தில் அனுப்ப நாங்கள் நிராகரித்த நிமித்தம் அவன் முனிவுற்று, என்ன பிரமாதம் செய்வானோவென்று நாங்கள் அச்சமுள்ளவர்களா யிருந்தோம். தெய்வ கிருபையால் அரசன் இவ்வளவு சாந்தகுணமாயிருப்பது, உமது புண்ணிய விசேஷமென்று நினைக்கிறோம். இப்போது அவன் விரும்புவதெல்லாங்கூடி, நீர் ஊருக்குப் போகாமல் இன்னும் சிலகாலம் எங்களுடன் தங்கியிருக்க வேண்டு மென்பது தான். இதையும் நாம் நிராகரிப்பது விவேக மாகத் தோன்றவில்லை. ஏனென்றால் “கடல் கொதித்தால் விளாவ நீரெங்கே” என்பது போல் அரசன் சினமுற்று அக்கிரமஞ் செய்ய ஆரம்பித்தால். அதை யாரால் தடுக்க முடியும்? நாங்கள் பிராஞ்சு தேசத்துக்கு எழுதிப் பரி காரந் தேடுவதற்குமுன், இவ்விடத்தில் காரியங்களெல்லாம் சீர்கெட்டுத் தலைகீழாய் மாறிப்போகு மல்லவா? “பதறாத காரியம் சிதறாது” என்ற பழமொழியுமிருக்கின்றதே. ஆகையால் நீர் அவசரப்படாமல், இன்னுஞ் சிலகாலம் எங்களுடன் வாசஞ் செய்ய வேண்டியது முக்கியம்” என்றார்கள். உடனே சுகுண சுந்தரி கன்னிப் பெண்களை நோக்கி “நீங்கள் எனக்கு நன்மையான காரியத்தைச் சொல்லும் பொழுது நான் அதை ஆக்ஷேபிக்கலாமா? எனக்கு இவ்வளவு பரமோபகாரஞ் செய்த உங்களுக்குத் தான் என்னாலே யாதொரு தீங்குண்டாக நான் சம்மதிப்பேனா? இப்போது நான் பிரார்த்திப்பதெல்லாம்கூடி, என் தாய் தகப்பனையும் சகல செல்வங்களையும் நான் இழந் தாலும் என் பிராணனையுமே இழந்தாலும் என்னுடைய கற்புக்கு மட்டும் ஒரு குறைவும் வராதபடி, எனக்கு நீங்கள் அபாயஸ்தங் கொடுத்து ரக்ஷிக்க வேண்டும்” என்று இரு கையும் கூப்பிக் கும்பிட்டு மன்றாடினாள். அவர்கள் அந்தப் பிரகாரம் அபயப் பிரதானஞ் செய்ததுமன்றி ஒரு ஏகாந்தமான அறையைச் சிங்காரித்து அதில் அவளையும் அவளுடைய தாதியையும் வசிக்கும்படி செய்து சகல உப சாரங்களும் செய்து வந்தார்கள். இவ்வாறு பஞ்சரத்தில் அடைக்கப்பட்ட பஞ்ச வர்ணக்கிளிபோல் சுகுணசுந்தரி சிறையிலிருக்கலுற்றாள்.
47. நராதிப மகாராஜாவின் படைவீரர்கள் சுகுண சுந்தரியைத் தேடல்
சுகுண சுந்தரி காணாமற்போன சமாசாரம் தெரிந்தவுடனே அவளுடைய பிதாவுக்கும் மற்ற ஜனங்களுக்கும் உண்டான துக்கத்தையே விவரிக்க, கம்பன் காளிதாசன் முதலிய மகாகவிகள் வல்லவர்களே யல்லாது, நாம் எவ்வளவும் சக்தியுடையேம் அல்லேம். கன்றை இழந்த பசுப்போலக் கதறினார்கள். பார்ப்பை இழந்த பட்சி போலப் பதறினார்கள். கண்ணை இழந்த குருடன்போலக் கலங்கினார்கள். மண்ணை யிழந்த அரசன் போல மயங்கி னார்கள். கடலிலே கப்பல் சென்ற வழியையும் ஆகாயத் திலே பக்ஷிகள் பறந்து போன வழியையும் கண்டுபிடிப்பது எப்படி அசாத்தியமோ அப்படியே இரவில் சுகுணசுந்தரி ஏறிப்போன விமானம் இன்ன வழியாய்ச் சென்றதென்று தெரியாமையினால், பல ஊர்களுக்குப் படைவீரர்களை அனுப்பித் தேடினார்கள். எங்கும் சுகுணசுந்தரியைக் காணாமையால் அரசன் முதலியோர் துக்க சாகரத்தில் அமிழ்ந்தினார்கள்.
அந்தச் சமயத்தில் புவனேந்திரனும் போன இடந் தெரியாமல் நீங்கி விட்டதால் குரு சிரேஷ்டர் முதலியோர் பல நாள் தேடியும் அவனும் அகப்படவில்லை. மதுரேசனும் அவன் தகப்பனும் இது தான் சமயமென்றெண்ணி, அக்கினி மலைமேலே கற்பூர பாணம் பிரயோகித்ததுபோல், புவனேந் திரன் மேலே ஒரு அபாண்டமான பழிச்சொல்லை உற்பத்தி செய்தார்கள். எப்படியென்றால், புவனேந்திரனே சுகுண சுந்தரியை வஞ்சகமாய்க் கலைத்து, முகமறியாத தேசத்துக்குக் கொண்டுபோய்விட்டதாக ஒரு பெரும் புரளியைக் கட்டிவிட்டார்கள். அரசன் அந்த வார்த்தையை முதலில் நம்பாவிட்டாலும், ஒரே காலத்தில் அவர்களிருவரையும் காணாமையினால் நாள் செல்லச்செல்ல அந்தப் புரளி நிசமா யிருக்கலாமென்று அரசனும் அநுமானிக்கத் தொடங்கினான். அந்த அநுமானம் அதிகரிக்க அதிகரிக்க, அரசனுக்குப் புவனேந்திரன் மீது கோபம் அதிகரித்து வளர்ந்தது.
48. குரு சிரேஷ்டர் அரசனுக்குச் சந்தேக நிவாரணம் செய்தல்
குரு சிரேஷ்டருக்கு அது தெரிந்து, அவர் அரசனை நோக்கி, புவனேந்திரன் மேலே தோஷம் நினைப்பது சூரியனுக்குக் குளிர் வாத சுரமென்றும், சந்திரனுக்குத் தாப சுரமென்றும் சொல்வதற்குச் சமானமாயிருக்கின்றது. இரும்புத் தூணைச் செல்லரிக்குமா? புருஷோத்தமனாகிய புவனேந்திரன் இப்படிப்பட்ட துஷ்கிருத்தியத்தைச் செய் திருப்பானென்று எப்படி நம்பக் கூடும்? சுகுணசுந்தரியும் அவளுடைய தாதியும் மட்டும் விமானத்திலேறிச் சென்றதும், அதற்கு மறுநாள் புவனேந்திரன் இங்ஙனமிருந்ததும், சகலருக்கும் பிரசித்தமாய்த் தெரிந்த விஷயம். அப்படியிருக்க, அவன் சுகுணசுந்தரியை அழைத்துக் கொண்டுபோய் விட்டானென்று எப்படிச் சொல்லலாம்? நாம் காரியந் தெரியாமல் கோபத்துக்கு இடங்கொடுக்கக் கூடாது. “கோபம் பாபம் சண்டாளம்” என்று சொல்லப் படுகிறது. பைத்தியங் கொண்டவன் எப்படிக் காரியா காரியங்களை யோசிக்காமல் நடக்கிறானோ, அப்படியே கோபங்கொண்டவனும், அந்தச் சமயத்தில் தாறுமாறாக நடந்து, பாவத்தையும் பழிகளையும் பலருடைய விரோதங் களையும் சம்பாதித்துக் கொள்ளுகிறான். சத்துருக்களை வெல்லுகிறவனைப் பார்க்கிலும் தன்னைத்தானே வெல்லு கிறவன் மகா தீரன். “ஆய்ந்தோய்ந்து பாராதான் தான் சாகக்கடவான்” என்று பெரியோர் வாக்கியமுமிருக் கின்றதே. ஆராய்ந்து பாராமையினால் உலகத்தில் எத்தனையோ விபரீதங்கள் சம்பவித்திருக்கின்றன. தக்க சாக்ஷியம் ஏற்படுகிறவரையில், பெருங் குற்றவாளியைக்கூட நிரபராதி என் று ஊஹிக்க வேண்டுமென்று நியாய சாஸ்திரஞ் சொல்லுகின்றதல்லவா? சுகுண சுந்தரியைப் பலருந் தேடிப் போனதுபோல் புவனேந்திரனுந் தேடிப் பார்ப்பதற்காகப் போயிருக்கலாமென்று தோன்றுகிறது. அப்படியிருக்க, வீணான சமுசயத்துக்கு இடங்கொடுப்பது கிரமமல்ல. புண்ணியவதியாகிய சுகுண சுந்தரி மேலேதான் தோஷம் சொன்னால் வாய் வேகாதா? நெருப்பைப் புழுப் பற்றுமா?” என்று பலவாறாக அரசனுடைய கோபமுஞ் சந்தேகமும் நிவாரணமாகும்படி குரு சிரேஷ்டர் ஹிதோப தேசஞ் செய்தார்.
49. மாறுபாடான மரண உத்தரவு
பாசம் நீங்கின உடனே தண்ணீர் தெளிவதுபோல் குரு சிரேஷ்டருடைய உபதேசத்தால் அரசனுடைய மனந் தெளிவுற்றாலும், “கரைப்பார் கரைத்தால் கல்லுங் கரையும்” என்றபடி முதல் மந்திரியினுடைய துர்ப்போதனை யினால் மீளவும் அரசனுடைய சித்தம் பேதித்து, தன்னுடைய ராஜ்ய எல்லைக்குள் புவனேந்திரன் எங்கே எதிர்ப்பட்டாலும் அவனைப் பிடித்துக் கொள்ளுகிறது என்று சகல அதிகாரிகளுக் கும் நிருபங்கள் அனுப்பும்படி முதல் மந்திரிக்கு உத்தரவு செய்தான். அந்தத் துஷ்ட மந்திரி “புவனேந்திரனைப் பிடித்துக் கொள்ளுகிறது” என்கிற வார்த்தைக்குப் பதிலாய் “பிடித்துக் கொல்லுகிறது” என்று வார்த்தையைப் புரட்டி எழுதி, அதிரகசியமாய்ப் பல அதிகாரிகளுக்கும் உத்தரவு அனுப்பினான். அப்படிப்பட்ட உத்தரவு அனுப்பினதே குரு சிரேஷ்டருக்காவது இதர ஜனங்களுக்காவது பரிச்சேதந் தெரியாது. இது நிற்க.
சுகுண சுந்தரி காணாமற்போன சமாசாரந் தெரிந்த வுடனே புவனேந்திரன் திடுக்கிட்டுத் திகைத்துச் சிந்தாகுல முடையவனாயினன். கற்புக் கணிகலமாயும் கன்னியர் சிரோரத்னமாயும் விளங்காநின்ற சுகுண சுந்தரி, பூனை வாயில் அகப்பட்ட கிளி போலும், புலி வாயிலகப்பட்ட மான்போலும், எந்தத் துஷ்டன் கையில் அகப்பட்டு வருந்துகிறாளோவென்று புவனேந்திரன் மனோவிசாரம் உடையவனாய்த் தானும் அவளைத் தேடிப் போகிறதென்று தீர்மானித்துக் கொண்டான். ஆனால் தன் கருத்தைக் குரு சிரேஷ்டர் அறிந்தால், அவர் தனக்கு உத்தரவு கொடுக்கமாட்டாரென்று நினைத்து, அவரிடத்திலுஞ் சொல்லாமல் ஒரு குதிரையின் மேற்கொண்டு புறப்பட்டு நராதிபனுடைய அரசாக்ஷிக்குட்பட்ட பல ஊர்களைத் தேடி ஆராய்ந்துஞ் சுகுண சுந்தரி அகப்படாமையால், வேறு எந்த இடத்தில் தேடுகிறதென்று புவனேந்திரன் மயங்கிக் கொண்டிருக்கையில், திடீரென்று ஒரு சங்கதி அவனுடைய ஞாபகத்துக்கு வந்தது. அஃதென்னவெனில், ஆதியில் அந்த ஐரோப்பியன் கொண்டு வந்த ஆகாய விமானத்தைக் கொண்டு காலத்தில் அவனை எந்த ஊரிலிருந்து வந்தாயென்று விசாரித்தபோது, அவன் தக்ஷண தேசத்திலிருந்து வந்ததாக வும் அங்கே ஒரு அரசனுடைய போஷணைக்குள் தானிருப்ப தாகவும், அவன் சொன்னது புவனேந்திரனுடைய ஞாபகத் துக்கு வந்தது. அந்த அரசனுடைய பெயரும் ஊரும் அவன் தக்ஷண புவனேந்திரனுக்குத் தெரியாவிட்டாலும், தேசத்தை நோக்கிப் புறப்பட்டுப் பல ஊர்களிலும் விசாரித் துக் கொண்டு, பிறகு தெய்வாதீனமாய்ச் சுகுண சுந்தரியிருக் கிற ஊரில் வந்து சேர்ந்தான்.
50. புவனேந்திரன் பெண் வேஷம் பூண்டு சுகுண சுந்தரியைக் காணல்
ஒவ்வொரு ஊரிலும் புவனேந்திரன் ஏதாவது விசேஷ முண்டாவென்று விசாரிக்கிற வழக்கப்படி, அந்த ஊரிலும் விசாரிக்கத் தொடங்கினான். அந்தத் தேசாதிபதி ஒரு அந்நிய தேசாதிபதி மகளைப் பலாத்காரமாய்க் கொண்டு வந்திருப்பதாகவும், அவள் அவனை விவாகஞ் செய்து கொள்ளச் சம்மதியாத நிமித்தியம், அவளைத் தவப்பெண் களின் மடத்தில் கடுஞ்சிறையில் வைத்திருப்பதாகவும் அந்த மடத்துக்குள் புருஷர்கள் ஒருநாளும் போகக் கூடாதென்றும், புவனேந்திரன் சிலர் மூலமாகக் கேள்வியுற்றான். சிறையி லிருக்கிற அந்தப் பெண்ணுடைய ஊர் பெயர் முதலிய விவரங்கள் ஒருவருக்குந் தெரியாமையினாலும், அவள்சுகுண சுந்தரியா அல்லவாவென்று நிச்சயிப்பதற்குப் புருஷர்கள் அந்த மடத்துக்குட் பிரவேசிக்கக் கூடாமையா யிருப்பதாலும், அந்தரங்கத்தில் உண்மையை அறிவதற்கு என்ன உபாயஞ் செய்யலாமென்று புவனேந்திரன் பலவகை யிலும் ஆலோசித்தான். அந்தச் சிறைப் பெண் வாரத்தில் ஒரு முறை, பிரதி சுக்கிர வாரத்திலும் பல எளிய ஸ்திரீகளுக்கு வஸ்திரம், பொருள் முதலியன தானஞ் செய்கிற வழக்கமென்று புவனேந்திரன் கேள்வியுற்று, தான் ஒரு பிக்ஷைக்காரியைப்போல் வேஷம் பூண்டு கொண்டு, மற்றவர்களுடன்போய் உண்மையை அறிகிறதென்று நிச்ச யித்துக் கொண்டான். தன்னுடைய வஸ்திரத்தைத் தாறு மாறாகக் கிழித்துக் கந்தையாக்கி, இடையில் உடுத்துக் கொண்டு, பிக்ஷைக்காரிபோல் மாறு வேஷந் தரித்தான். குப்பையில் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகாதது போல் புவனேந்திரன் தன்னை எவ்வளவு விகாரப்படுத்திக் கொண்டாலும் அவனுடைய தேக ஒளியும் அழகும் மறைய வில்லை. கந்தைத் துணியானது அவனுடைய தேகத்தைச் சேர்ந்த உடனே பீதாம்பரம் போல் விளங்கிற்று.
அவன் பிக்ஷைக்காரி போல வேஷம் பூண்டு கொண்டு மற்ற எளிய ஸ்திரீகளுக்குச் சமீபித்த உடனே, அவர்கள் எல்லாரும் ஆச்சரியங்கொண்டு, ஒவ்வொருத்தியுந் தனக்குத் தோன்றின பிரகாரம் பேச ஆரம்பித்தாள். ‘ஐயோ! அம்மா! உன்னைப் பார்த்தால் மகாராஜா மகள் போலத் தோன்றுகிறதே! உன் தலையெழுத்து, பிக்ஷை யெடுக்கும்படி யாகவா வந்துவிட்டது?” என்று சிலரும், “கையில் உள்ள பொருளையெல்லாம் மறைத்து வைத்துக்கொண்டு, பிக்ஷை யெடுக்க வந்து விட்டாய்! உனக்கு வெட்கமில்லையா?” என்று சிலரும், “உன்னுடைய அழகுக்குப் புருஷர்களெல்லா ரும் ஆசைப்படுவார்களே! யாராவது புருஷரை யண்டிப் பிழைக்காமல், பிக்ஷைத் தொழிலுக்கு ஏற்பட்டாயே” என்று சிலரும், “பரம தடிச்சியாகிய நீ நாள் ஒன்றுக்குக் கல நெல் குற்றலாமே. நீயும் பிக்ஷைக்கு வரலாமா?” என்று சிலரும் வாயில் வந்தபடி ஏசினார்கள். சுகுண சுந்தரி சிறையிருக்கிற அறை வீட்டின் பின் புறத்திலிருக்கிற விஸ்தாரமான உத்தி. யானத்தின் வழியாய்ப் பிக்ஷைக்காரிகளெல்லாஞ் சென்று, அந்த அறையின் பலகணி வழியாய்ச் சுகுண சுந்தரி கொடுத்த வஸ்திரம், பணம் முதலியவற்றைக் கையேந்தி வாங்கினார்கள். புவனேந்திரன் அந்தப் பிக்ஷைக்காரிகளுடைய வாய்க்குப் பயந்துகொண்டு, அவர்களுடன் சேராமல் தூரத்தில் தனியே நின்றான். மற்ற பிக்ஷைக்காரிகளெல்லாம் போன பிறகு, சுகுண சுந்தரி தூரத்தில் நின்ற புவனேந் திரனைத் தன்னுடைய தாதிக்குக் காண்பித்து “அதோ, அங்கே நிற்கிற எளிய ஸ்திரீ மானமுடையவள் போற் காணப்படுகிறது. அவளுக்கு ஐயமிட அவளை இங்கே அழைத்து வா” என்று ஆக்ஞாபித்தாள்.
அந்தத் தோழி தன்னிடத்தில் நெருங்கினவுடனே, புவனேந்திரன் அவளுக்குத் தன்னை இன்னானென்று தெரி வித்து “சுகுண சுந்தரி அறையில் தனிமையில் இருக்கிறாளா? அல்லது வேறே யாராவது கூட இருக்கிறார்களா?” என்று விசாரித்தான். அவள் தனிமையாயிருக்கிறதாகத் தெரிந்து, தேடு
புவனேந்திரன் ஜன்னலுக்கு நேரே சென்றான். அவர்களிரு வருஞ் சந்தித்தவுடனே அவர்களுக்குண்டான அழுகையும் துக்கமும் அங்கலாய்ப்பும் இவ்வளவென்று யாரால் விவரிக்கக் கூடும்? அவர்கள் சிறிது மனந்தேறின உடனே, சுகுண சுந்தரி தான் விமானத்திலேறினது முதல் தற்காலம் வரையில் நடந்த ஒவ்வொரு சங்கதியையும் ஜன்னல் வழியாய்ப் புவனேந்திரனுக்கு விக்ஞாபித்தாள். புவனேந்திரனும் தான் வந்த வரலாறுகளை யெல்லாம் சுகுண சுந்தரிக்கு அறிவித்தது மன்றி மீளவும் அவளை நோக்கி “நான் தீர்க்காலோசனை செய்து, உன்னைச் சிறை மீட்க வேண்டிய உபாயம் கிறேன். ஆனால் காலதாமசத்துக்கு இடமாகுமென்று தோன்றுகிறது. அதற்காக நீ அணுவளவும் யோசிக்க வேண் டாம், உட்கார்ந்து படுக்க வேண்டுமேயல்லாது, நின்ற நிலையிலே விழுந்தால் இடுப்பொடிந்து போகாதா? முள்ளிலே சேலை மாட்டிக்கொண்டால் மெள்ள மெள்ள எடுக்க வேண்டு மல்லவா? ஆகையால் அவசரப்பட்டுப் பிரயோஜனமென்ன?” என்றான். உடனே சுகுண சுந்தரி புவனேந்திரனை நோக்கி “உங்கள் உத்தரவுப்படி நடக்கக் காத்திருக்கிறேன். எனக்கு எப்படி விமோசனமாகப் போகிறதென்று நான் இதுகாறும் ஏங்கிக்கொண்டிருந்தேன். கடலில் விழுந்து தவிக்கிற வனுக்குக் கப்பல் அகப்பட்டது போலவும், சாகப்போகிறவ னுக்கு சஞ்சீவி கிடைத்ததுபோலவும் வந்து சேர்ந்தீர்கள். இனி எனக்கு என்ன கவலையிருக்கிறது? நீங்கள் பிக்ஷைக்காரி போல் வேஷம் பூணுவது எனக்கு எவ்வளவும் பிரியமில்லை. இனிமேல் நாம் அடிக்கடி சந்திக்கக் கூடாதாகையால், நீங்கள் குறிக்கும் இடத்துக்குத் தாதியை அனுப்புவேன். நாம் அவள் மூலமாகச் சகல சங்கதிகளையும் அப்போதப்போது தெரிந்து கொள்ளலாம்” என்றாள். புவனேந்திரன் சரியென்று ஒப்புக்கொண்டு, தாதி தன்னைக் காண வேண்டிய வாரம், நேரம், இடம் முதலியவைகளைச் சொல்லிய பின்பு விடை பெற்றுக் கொண்டு போய்விட்டான்.
51. புவனேந்திரன் சாமோபாயத்தை அனுசரித்தல்
புவனேந்திரன் வெளியே போன பின்பு, சுகுண சுந்தரியைச் சிறை மீட்கத்தக்க உபாயமென்ன வென்று நெடு நேரம் சிந்தித்தான். தான் தன்னந்தனியே அந்த அரசனு டன் அமர்செய்து சிறை மீட்பது அசாத்தியமான காரியம். அல்லது தான் ஊருக்குத் திரும்பிப் போய் படை சேர்த்துக் கொண்டு வந்து யுத்தம் செய்கிற பக்ஷத்தில் அந்த யுத்த முடிவுக்குமுன் அந்தத் துஷ்ட அரசன் சுகுண சுந்தரியை ஜீவ வதையாவது அல்லது மானபங்கமாவது செய்துவிடுவான். ஆகையால் என்ன செய்கிறதென்று தோன்றாமல் புவனேந் திரன் மயங்கிக் கொண்டிருக்கையில், சில சேவகர்கள் “ராஜ சபையில் சில உத்தியோகங்கள் காலியாயிருப்பதால், வந்து பரீக்ஷைகொடுத்தால் அவரவர்களுக்குத் தகுதியான உத்தி யோகங்கள் கொடுக்கப்படும்” என்று பேரிகை முழக்கிப் பிரசித்தம் செய்தார்கள். அதைக் கேட்டவுடனே புவனேந் திரனுக்குச் சந்தோஷமுண்டாகி தன்னைப் பரீக்ஷை செய்து கொண்டு தனக்குத் தகுதியான உத்தியோகம் கொடுக்க வேண்டுமென்று அரசன் சமூகத்தில் மனுப்பண்ணிக் கொண்டான்.
52. புவனேந்திரனுடைய உத்தியோகத் திறமையும் கியாதியும்
அரசனுடைய உத்தரவுப்படி சில அதிகாரிகள் புவனேந்திரனுடைய திறமையைப் பற்றிப் பரிசோதிக்க ஆரம்பித்தார்கள். அந்தப் பரிசோதனை எப்படியிருந்த தென்றால் சூரியனை ஒரு மின்மினிப் பூச்சி பரிசோதிக்க ஆரம்பித்தது போலிருந்தது.ஏனென்றால் புவனேந்திரனுக்குத் தெரிந்த விஷயங்களில் பதினாயிரத்தில் ஒரு பங்குகூட அந்தப் பரீக்ஷாதிகாரிகள் அறியார்கள். அவனுடைய அபார் சக்தியைப் பரீக்ஷகர்கள் அரசனுக்கு விஞ்ஞாபித்த உடனே இப்படிப்பட்ட அதிமேதாவியை விடக்கூடாதென்று அரசன் கருதிப் புவனேந்திரனுக்கு ஒரு மேலான உத்தியோகங் கொடுத்தான். எந்த உத்தியோகமும் அவனுக்கு அஜக ஜாந்திரமா யிருந்ததால், அவனை அரசன் நாளுக்கு நாள் உத்தியோக வரிசையில் உயர்த்தி, சில சங்களுக்குள் அவனுக்கு மந்திரி உத்தியோகமும் கொடுத்தான். அந்த அரசனுடைய குணம் எத்தன்மையதென்றால், தனக்குச் சமீபத்திலுள்ளவர்களுடைய குணம் எப்படியோ அப்படியே அவனுடைய குணமும் மாறுவது வழக்கமாதலால், பொன் மலையைச் சேர்ந்த காகமும் பொன்னிறமானதுபோல், புவனேந்திரனுடைய சகவாச விசேஷத்தால் அரசனும் நாளுக்கு நாள் நன் மார்க்கத்தில் பிரவர்த்திக்க ஆரம்பித் தான். புவனேந்திரனுடைய மந்திராலோசனையானது அரச னுக்கு ஹிதமாயும் சர்வ ஜன சம்மதமாயுமிருந்தபடியால் புவனேந்திரனுடைய புகழ் தேசமெங்கும் செழித்தோங்கி வளர்ந்தது. சூரியனுடைய ஒளி சந்திரனிடத்திலும் பிரதி விம்பிப்பதுபோல் புவனேந்திரனுடைய கீர்த்தியும் நன்மை யும் அரசனிடத்திலும் பிரதிபலிக்க ஆரம்பித்தன. புவனேந் திரனுடைய அனுமதியின்றி அரசன் ஒரு கருமமும் செய்கிற தில்லை. தன்னுடைய அந்தக்கரணங்களையும் ரகசியங்களையும் கூட அரசன் புவனேந்திரனுக்கு வெளிப்படுத்தாமலிருக்கிறதில்லை.
53. தவப்பெண்களுடைய மடத்தின் ஒழுங்குகளும், சட்டதிட்டங்களும்
தவப் பெண்களுடைய மடத்தில் சிறையிருக்கலுற்ற சுகுண சுந்தரி அந்த மடத்தின் ஒழுங்குகளையும், சட்ட திட்டங்களையும் அவர்களுடைய தெய்வ பக்தி, சுசீலம். அடக்கம், பொறுமை, சாந்தம், ஜீவகாருண்ணியம் முதலிய சற்குணங்களையும், அவர்கள் பூலோக வாழ்வை வெறுத்துப் பரலோக வாழ்வுக்காகப் படும் பிரயாசத்தையும் கண்டு, அற்புதம் அற்புதமென்று வியந்துகொண்டாள். அந்தத் தவப் பெண்களிலே சிலர் தமிழ் படிக்க விரும்பினமையால் அவர்களுக்குச் சுகுண சுந்தரி தமிழைக் கற்பித்து, அவர் களிடத்திலே பிராஞ்சு பாஷையைக் கற்றுக்கொண்டாள்.
54. பாலிகா பாடசாலையின் வருஷோற்சவம்
அந்தத் தவப் பெண்கள் இந்தத் தேசத்துச் சிறுமி களுக்காக ஒரு பாலிகா பாடசாலையை ஸ்தாபித்துப் பரிபாலித்து வந்தார்கள். அந்தப் பாடசாலையில் இரண்டு வயது முதலுள்ள பிராமணப் பெண்களும் இதர ஜாதிப் பெண்களும் வித்தியாப்பியாசம் செய்து வந்தார்கள். அநேகம் சிறு பெண்களுடைய கழுத்தில் தாலி இருக்கக் கண்டு அவர்களெல்லாரும் கலியாணமான பெண்களென்று சுகுண சுந்தரி அறிந்துகொண்டாள். அந்தப் பாடசாலையின் வருஷோற்சவ தினத்தில் ஊரிலுள்ள ஸ்திரீகளெல்லாம் வந்து கூட்டம் கூடினார்கள். அப்போது அதிபாலிய விவாகம் அநுசிதமென்று பிரசங்கிக்கும்படி சுகுணசுந்தரியை அந்த மடத்தின் தலைவி கேட்டுக்கொண்டதினால் அந்தப்படி சுகுணசுந்தரி பின்வருமாறு பிரசங்கித்தாள்.
55. அதிபாலிய விவாக கண்டனம்
இந்தத் தேசத்தில் பிராமணர் முதலானவர்களுக் குள்ளாக நடக்கும் அதி பாலிய விவாகமானது கேவலம் அநுசிதமா யிருக்கின்றது. கலியாணம் செய்து விளையாடுவதுபோல், பெரிய பிள்ளை களாகிய தாய் தந்தைகள் தங்களுடைய பிள்ளைகளுக்கு அதி பாலிய விவாகம் செய்து வேடிக்கை பார்த்து மகிழ்வதாகக் காணப்படுகின்றது. சிறு பிள்ளைகள் பொம்மை களைப் போல அவசரப் பொருள்களா யிருந்தால் தாய் தகப்பன்மார்கள் சிசு விவாகம் செய்து வேடிக்கை பார்ப் பதில் ஆக்ஷேபமிராது. ஜீவதேகத்தோடு கூடிய பிள்ளைகளுக்கு அதி பாலிய விவாகம் செய்வதினால் அநேக விபரீதங்களுக்கு இடமுண்டாகிறது.
இந்தத் தேசந் தவிர வேறெந்த தேசத்திலும் அதி பாலிய விவாகம் செய்கிற வழக்கமே யில்லை ஐரோப்பா, அமெரிக்கா ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா முதலிய தேசங்களில் பக்குவ காலம் வந்த பிறகு கலியாணம் செய்கிறார்களே யல்லாது அதிபாலிய விவாகமென்கிற பிரசக்தியே யில்லை. இந்தத் தேசத்திலும் பிராமணர் முதலிய சிலரைத் தவிர மற்ற எந்தச் சாதியிலும் அதி பாலிய விவாகமே கிடையாது. இந்தத் தேசத்தில் கிறிஸ்தவர்களும் மகமதியர்களும் இன்னும் அநேக ஜாதியாரும் ஆணுக்கும் பெண்ணுக்கும் தக்க பருவம் வந்த பிறகுதான் விவாகம் செய்கிறார்கள்.
தர்ம சாஸ்திரத்தில் அதி பாலிய விவாகம் செய்யும்படி ஆக்ஞாபிக்கப்படவில்லை. பூர்வீகத்தில் ரிஷிகளும் ராஜாக் களும் மற்றவர்களும் ஸ்திரீ புருஷர்களுக்குப் பக்குவகாலம் வந்த பிறகே, கலியாணம் செய்ததாகத் தெரிய வருகிறது. கிருஷ்ணனுடைய பத்தினி ருக்குமணி, ராமருடைய பத்தினி சீதை, நளனுடைய பத்தினி தமயந்தி, தர்மருடைய பத்தினி திரௌபதி, அரிச்சந்திரனுடைய பத்தினி சந்திரமதி முதலிய வர்கள் யௌவன காலம் வந்த பின்பு தங்களுடைய நாயகர்களைத் தாங்களே விரும்பி, ஸ்வயம்வரம் செய்து கொண்டதாகப் புராணங்களிலே சொல்லப்படுகின்றது. ஆகையால் பூர்வத்திலே யில்லாத வழக்கம் இப்போது பிராமணர்களுக்குள்ளாக மட்டும் எப்படி வந்து பிரவேசித்த தென்று கண்டுபிடிப்பது அசாத்தியமா யிருக்கிறது. அதி பாலிய விவாகத்தினாலுண்டாகும் தீமைகளை ஒவ்வொன்றாக அடியில் விவரிப்போம்.
56. பாலிய விவாகத்தினாலுண்டாகும் தீமை
ஆணுக்கும் பெண்ணுக்கும் ஈடுசோடு பார்த்து விவாகம் செய்ய வேண்டியது எவ்வளவோ முக்கியமாயிருக் கிறது. இளமைப் பருவத்தில் ஈடு ஜோடு எப்படிக் கண்டு பிடிக்கக் கூடும்? இளமையில் நெட்டையாய்த் தோன்றுகிற பிள்ளைகள் பிறகு குள்ளமாய்ப் போகின்றன. இளமையிலே குள்ளமாயிருக்கிற பிள்ளைகள், பிறகு நெட்டையாய் விடுகின்றன. இளமையிலே அழகாயும் தேக சௌக்கிய மாயும் தோன்றுகிற பிள்ளைகள் பிறகு விகாரமாய்ப் போகின்றன. ஆனதுபற்றியே அதி பாலியத்தில் விவாகமாகிற சில ஸ்திரீகள், புருஷனுக்கு அக்காள் அல்லது தாயென்று சொல்லும்படியாக அதிக நெட்டையாய் வளர்ந்து விடுகிறார்கள். அவர்களுக்குப் புருஷர்கள் முத்தங் கொடுக்க வேண்டியிருந்தால், மேசை அல்லது நாற்காலியின் மேலே ஏறி நின்று கொண்டு முத்தங் கொடுக்க வேண்டும். சிலசமயங்களில் பெண்சாதிக்குத் தமையன் அல்லது தகப்பனென்று சொல்லும்படியாகப் புருஷன் அதிகமாய் வளர்ந்து விடுகிறான். சில சமயங்களில் ஸ்திரீகளுக்குப் பக்குவகாலம் முந்தி வந்துவிடுகின்றது. புருஷர்களுக்கு யௌவன காலம் வரத் தாமசப்படுகிறபடியால், ஸ்திரீகள் சில காலம் காத் திருக்கும்படி சம்பவிக்கின்றது. அல்லது புருஷர்களுக்குப் பக்குவகாலம் முந்தி வருவதால் அவர்களாவது சிலகாலம் காத்திருக்க வேண்டியதாகிறது. அந்தக் காலத்தில் புருஷர்கள் பரஸ்திரீ கமனம் முதலிய துன்மார்க்கங்களிற் பிரவேசிக்க இடமுண்டாகிறது.
புருஷனுடைய குணம், கல்வி, புத்தி முதலிய யோக்கியதையைத் தெரிந்து கொண்டு, பெண் கொடுக்க வேண்டியதும், அப்படியே விவாகத்துக்குமுன் பெண் களுடைய குணங்களையும் தெரிந்துகொள்ள வேண்டியதும். எவ்வளவு முக்கியமென்பதைச் சகலரும் ஒப்புக்கொள்ளுவார்கள். வயது முதிர்ந்த பிள்ளைகளுடைய குணங்களை மட்டும் நிச்சயிக்கலாமே யல்லாமல், அதி பாலியத்தில் பிள்ளைகளுடைய குணா குணங்களை அறிவது அசாத்திய மல்லவா? ஏனென்றால் சிறு பிள்ளைகளுடைய குணங்களும் தேக ஸ்திதி முதலியவைகளும் நாளுக்கு நாள் மாறிப் போகின்றன. ஆகையால் ஆண் பெண்ணினுடைய குணங்களையும் தேக ஸ்திதி முதலியவைகளையும் அறியாமல் அதி பாலியத்தில் விவாகம் செய்வது ஆழமறியாமல் ஆற்றில் இறங்குவதுபோலும், கண்ணை மூடிக்கொண்டு காட்டில் நடப்பது போலுமிருக்கின்றது. ஆனதுபற்றியே சில ஸ்திரீ புருஷர்களுடைய குணங்கள் ஒன்றுக்கொன்று ஒவ்வாமல் அவர்கள் கீரியும் பாம்புபோல் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வதைக் காண்கிறோம்.
பாலப் பருவமே அம்மை, மாந்தம், கணம் முதலிய வியாதிகளுக்கு உரிய காலமாகையால் அந்தக் காலம் கடக்குமுன் அதிபாலியத்தில் விவாகம் செய்வது ஆபத்தை விலைக்கு வாங்குவதற்குச் சமானமா யிருக்கின்றது. அதி பாலியத்தில் விவாகமாகிற புருஷர்களுக்கும் பெண்களுக்கும் பக்குவகாலம் வரக் குனறந்த பக்ஷம் பத்து வருஷம் அல்லது பன்னிரண்டு வருஷம் செல்ல வேண்டும். அவ்வளவு காலம் சென்ற பிறகுதான் அவர்கள், கலியாணத்தின் பிரயோ ஜனத்தை அடைய வேண்டியதாயிருக்கிறது. அவ்வளவு காலத்துக்குள்ளாகப் பெண்ணுக்கும் புருஷனுக்கும் எவ்வளவோ ஆபத்துக்கள் சம்பவிக்கும்படியா யிருக்குமே. அந்த ஆபத்துக்களுக்கெல்லாம் தப்பியிருப்பார்களென்பது என்ன நிச்சயம்? அந்தக் காரணத்தைப் பற்றியே சிசு விவாகம் செய்கிற வழக்கமுள்ள பிராமணர் முதலானவர் களுக்குள்,பால விதந்துகளும் விதுரர்களும் அதிகமா யிருக் கிறார்கள். மேலே சொல்லியபடி பத்து அல்லது பன்னிரண்டு வருஷத்துக்குப் பிறகு நடக்க வேண்டிய காரியத்துக்கு இப்போது தானே ஏன் அவசரப்பட வேண்டும்? ஆடு மாடு முதலிய மிருகங்களைக்கூட நமக்கு வேண்டும்போது விலைக்கு வாங்குவோமே தவிரப் பத்து வருஷத்துக்குமுன் அவைகள் சிறிய கன்றுகளாயிருக்கும்போது விலை கொடுத்து வாங்குவோமா? அப்படி வாங்கினாலும்கூட, அவைகள் பத்து வருஷம் வரையில் சாவாமலிருந்து பிறகு நமக்கு உபயோகப் படுமென்பதை நாமெப்படி நிச்சயிக்கக்கூடும்? இளங் கன்றுகள் பெரியவைகளான பின்பு, நமக்கு உதவும் உதவா தென்பதை எப்படி முந்தி நிச்சயிக்கக் கூடாதோ, அப்படியே அதிபாலியத்தில் விவாகமாகிற பிள்ளைகள் யௌவன காலத்தில் எப்படியிருக்குமென்று முந்தி நிச்சயிப் பது கூடாத காரியமாயிருக்கிறது. வயது முதிர்ந்து பின்பு விவாகம் செய்கிறதாயிருந்தால் கூடியவரையில் குணம் கல்வி, புத்தி, தேக ஸ்திதி முதலியவைகளை அறிந்து கொள்வது சுலபமாயிருக்கும்.
சில குழந்தைகள் அதி பாலியத்தில் அரோக திடகாத்திர முள்ளவர்களாய்த் தோன்றின போதிலும், யௌவன காலத் தில் அசாத்திய ரோகஸ்தர்களாகி, சமுசாரத்துக்கு உபயோக மில்லாமற் போகிறார்கள். அதி பாலியத்தில் விவாகமான சில பெண்கள், பிற்காலத்தில் ஆணுமல்லாமல் பெண்ணு மல்லாமல் அலியாய்ப் போயிருக்கிறார்கள். சில பெண்கள் வெகு காலம் ருதுவாகாமலே இருந்துவிடுகிறார்கள். கூடிய கூடியவரையில் வயது அதிகரித்த பின்பு விவாகமாகிற பக்ஷத்தில் இப்படிப்பட்ட விபரீதங்களுக்கு இடமில்லையே!
இந்தத் தேசத்தில் சில பெண்கள் பிஞ்சிலே பழுப்பது போல அதிசீக்கிரத்தில் ருதுவாகிப் புருஷன் வீட்டுக்குப் போய்விடுகிறார்கள். வயது அதிகரித்துத் தேகம் உறுதிப்படு வதற்குமுன், அவர்கள் சமுசார வாழ்க்கையிலே பிரவேசித் துப் பிள்ளைகளைப் பெற ஆரம்பிக்கிறபடியால், அவர்கள் வயிற்றிலே பிறக்கிற பிள்ளைகள் தலைமுறை தலைமுறையாய்த் துர்ப்பல முள்ளவர்களா யிருப்பார்களென்று வைத்திய சாஸ்திர பண்டிதர்கள் சொல்லுகிறார்கள். அது உண்மை யென்று அனுபோகத்தினாலும் தெரியவருகிறது. தாங்களே தாய் தகப்பன்மார்கள் சம்ரக்ஷணையிலிருக்கவேண்டிய சிறு பெண்கள் பிள்ளைகளைப் பெற்று நிர்வகிக்கும்படி செய்வது, சிட்டுக் குருவியின் தலைமேலே பனங்காயைக் கட்டி வைப்ப தற்குச் சமானமா யிருக்கின்றது.
கலியாண விஷயத்தில் முக்கியமான ஒரு பெருங்காரி யத்தை நாம் கவனிக்கவேண்டியது அவசியமா யிருக்கிறது. அஃதென்னவெனில் கலியாணமென்பது ஸ்திரீ புருஷர்கள் இருவரும் சேர்ந்து செய்துகொள்ளுகிற உடன்படிக்கையே யல்லாமல் வேறல்ல. அப்போது நடக்கிற சடங்குகளும், கிரியைகளும், மந்திரங்களும் ஸ்திரீ புருஷர்கள் இனிமேல் நடக்க வேண்டிய கிரமங்களைப்பற்றி, அவர்கள் செய்து கொள்ளும் பரஸ்பர நிபந்தனைகளா யிருக்கின்றன. அந்த நிபந்தனைகளின் கருத்தையும் கலியாணத்தினுடைய விசேஷத் தையும் மணமகனும், மணமகளும் கூடியவரையில் அறிந்திருக்க வேண்டியது அத்தியாவசியகமாயிருக்கின்றது. அதி பாலியத்தில் விவாகமாகிற பிள்ளைகளுக்குக் கலியாணத்தின் தன்மை இன்னதென்று எப்படித் தெரியும்? அப்படிப்பட்ட பகுத்தறிவில்லாத பிள்ளைகளைக் கலியாண நிபந்தனைகள் எப்படிக் கட்டுப்படுத்தும்?
57. பாலிய விவாகத்தில் பெண்ணுக்கும் தாய்க்கும் நடந்த சல்லாபம்
ஒரு ஊரில் மூன்று வயதுள்ள ஒரு பெண் குழந்தைக்கு விவாகம் செய்வதாக நிச்சயித்து, அதற்காகப் பந்தல் முதலிய கலியாண முஸ்திப்புகள் செய்தார்கள். அப்போது அந்தப் பெண்ணுக்கும் தாய்க்கும் நடந்த சல்லாபமாவது:
மகள்: நம்முடைய வீட்டில் இவ்வளவு அமர்க்கள மாய்க் கிடக்கிறதே எதுக்கடி யம்மா?
தாய்: உனக்கு நாளைக்குக் கலியாணமடி யம்மா.
மகள் : கலியாணமென்றால் என்ன?
தாய்: கலியாணமென்றால் தாலி கட்டுகிறது.
மகள்: தாலியென்றால் என்ன?
தாய்: இதோ என் கழுத்தில் தாலியிருக்கிறது பார். இந்த மாதிரியாய் உன் கழுத்திலே கட்டுகிறது.
மகள்: உன் கழுத்தில் இருக்கிற தாலியை எடுத்து என் கழுத்தில் ஒரு நிமிஷத்தில் நீயே கட்டிவிடலாமே, இதற்கு இவ்வளவு ஆடம்பரமென்ன?
தாய்: நான் கட்டக்கூடாது. புருஷர்கள் கட்ட வேணும்.
மகள்: அப்படியானால் அப்பா எனக்குத் தாலி கட்டட்டும். அண்ணா கட்டட்டும். பரிசாரக சுப்பு கட்டட்டுமே!
தாய்: அவர்களெல்லோருங் கட்டக்கூடாது! வேறே புருஷன் தான் உனக்குத் தாலி கட்டவேணும்.
மகள்: எந்தப் பயல் எனக்குத் தாலி கட்டுவான்? ஒரு பயல் என்னைத் தொடுவானா?
தாய்: அப்படியெல்லாம் தூஷிக்காதே. புருஷன் மேலே நீ பக்ஷமா யிருக்கவேண்டும். எத்தனையோ பெண்டுகள் புருஷனோடு உடன்கட்டையேறி யிருக்கிறார்களே!
மகள் : ‘உடன்கட்டை’ யென்றால் என்ன அர்த்தம்? தாய் : புருஷன் இறந்துபோனால் அவனோடுகூடப் பெண் சாதியும் அக்கினிப் பிரவேசம் செய்கிறது. இதுதான் உடன் கட்டையேறுதல்.
மகள் : அப்பப்பா! இது என்னாலே யாகாது. எனக்குக் கலியாணமே வேண்டாம்.
தாய் : நீ உடன்கட்டை யேற வேண்டியதில்லை. புருஷன் மேல் அவ்வளவு பக்ஷமாயிருக்க வேண்டு மென்பதற் காகச் சொன்னேன்.
மகள் : புருஷன் மேலே நான்மட்டும் பக்ஷமாயிருக்கிறதா? புருஷனும் என்மேலே பக்ஷமாயிருக்க வேண்டிய தா இல்லையா?
தாய்: புருஷனும் உன்மேலே பக்ஷமாயிருக்க வேண்டியது தான்.
மகள்: அப்படியானால் நான் முந்தி இறந்து போனால் புருஷனும் என்னோடுகூட உடன்கட்டை யேறுவானா?
தாய்: இப்போது ஒருவரும் உடன்கட்டை யேறுகிற வழக்கமில்லை; உன்னுடைய அலப்பு வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்க மாட்டாயா?
மகள்: நான் சும்மா இருக்க மாட்டேன். புருஷன் என்னோடுகூட உடன்கட்டை யேறச் சம்மதித்தால்தான் நான் தாலி கட்டிக் கொள்வேன். அல்லாத போனால் தாலி கட்டிக்கொள்ள மாட்டவே மாட்டேன். அவன் கட்டினாலும் அறுத்து எறிந்து விடுவேன்.
இவ்வகையாய்ச் சொல்லித் தாலி கட்டிக்கொள்ளவே மாட்டேனென்று அந்தப் பெண் குழந்தை பிடிவாதம் செய்ததாம்.
சில சமயங்களில் பால் குடிக்கிற குழந்தைகளுக்குக்கூடக் கலியாணம் செய்கிறார்கள். அந்தக் குழந்தைகளுக்குக் கலியாணத்துக்காக நகைகள் பூட்டி அலங்காரம் செய்யும் பொழுது அந்த உபத்திரவம் பொறுக்கமாட்டாமல், கலியாண ஆரம்ப முதல் முடிவு வரையில் அந்தக் குழந் தைகள் அழுதவண்ணமா யிருக்கின்றன. முகூர்த்த நேரத்தில் அழுகையை நிறுத்துவதற்காகத் தாய்மார்கள் பெண் குழந்தைகளை மடியில் வைத்துப் பால்கொடுத்துக் கொண்டு மணவறையில் உட்காருகிறார்கள். மாப்பிள்ளையும் சிறு குழந்தையானதால் இன்னாருக்குத் தாலி கட்டுகிறதென்று தெரியாமல், சில சமயங்களில் மாமியார் கழுத்திலே தாலி கட்டி விடுகிறான். இது வேடிக்கையும் விநோதமுமல்லவா?
“நான் மேலே சொன்ன நியாயங்களையெல்லாம் புத்தி மான்கள் ஆலோசித்து, அதிபாலியத்தில் விவாகம் செய்கிற வழக்கத்தை நிறுத்தப் பிரயாசப்படுவார்களென்று நம்பு கிறேன்” என்றாள்.
இந்தப் பிரசங்கத்தைக் கேட்ட ஸ்திரீகளெல்லாரும் சிரக் கம்பஞ்செய்து, சிலாகித்துக்கொண்டார்கள். அதைத் தங்களுடைய நாயகர்களுக்குக் காண்பிக்கும் பொருட்டு, லிகித ரூபமாகப் பல பிரதிகள் வாங்கிக்கொண்டு அவர் களுடைய கிரகத்துக்குச் சென்றார்கள்.
58. அரசன் தனது அந்தரங்கத்தைத் தெரிவித்தல்
ஒரு நாள் அரசன் புவனேந்திரனை நோக்கி “உம்மை மந்திரியாகப் பெற்ற எனக்குச் சகல சம்பத்துகளும் குறை வில்லாமலிருந்தபோதிலும், ஸ்திரீ சம்பந்தமான ஒரு பெரும் குறையையுடையவனா யிருக்கிறேன். அந்தக் குறையைப் பரிகரிக்க மார்க்கம் தெரியாமல் மயங்கிக்கொண்டிருக்கிறேன்” என்றான். புவனேந்திரன் ஒன்றும் அறியாதவன் போல் “அந்த ஸ்திரீ யார்?” என்று வினாவினான். உடனே அரசன் சுகுண சுந்தரியினுடைய ஊர், பெயர் முதலிய விபரங்களைத் தெரிவித்து அவள் விஷயத்தில் தான் நடத்திய சகல செய்கைகளையும் விளம்பினான். புவனேந்திரன் இப்படிப்பட்ட சமயத்துக்காக நெடுங்காலம் காத்திருந்த வனாதலால், அரசன் செய்த அக்கிரமங்களை அவனே உணரும்படி நயமாயும் இனிமையாயும் பின்வருமாறு சன்மார்க்க நெறிகளை அவனுக்குப் போதித்தான்.
59. அரசனுக்குப் புவனேந்திரன் புத்தி போதித்தல்
“விவாகத்துக்குச் சம்மதியாத பெண்களைச் சிறை யெடுப்பது போன்ற அக்கிரமம் வேறொன்றுமில்லை. ‘சகல துரோகங்களிலும் பெண் துரோகம் பொல்லாதது. அதனால் உலகத்தில் நடக்கிற கொலைகளும் தீமைகளும் அபரிமிதமாயிருக்கின்றன. எந்த அக்கிரமத்துக்குத் தண்டனையில்லா விட்டாலும், பெண் துரோகத்துக்குத் தண்டனையில்லாமற் போகிறதில்லை. உங்களுடைய வாய்ப் பிறப்பைக்கொண்டே இப்போது சிறையிலிருக்கிற அந்த ஸ்திரியினுடைய தகப்பன் மகா பலவாவென்று தோன்றுகிறது. அவன் உண்மை தெரிந்த உடனே நம்மீது படையெடுத்து வருவானென்ப தற்குச் சந்தேகமில்லை. அவனுக்கு உப பலமாக அநேக அரசர்கள் சேர்ந்து வருவார்களென்பதும் நிச்சயமே. ஒரு பெண் நிமித்தம் கோடானு கோடி ஜனங்கள் மடிவதுமன்றி இன்னும் ராஜாங்க விஷயத்தில் என்னென்ன விபரீதங்களும் கலகங்களும் நடக்குமோவென்று நினைக்கும்போது என்னு டைய சரீரமெல்லாம் நடுநடுங்கிப் போகின்றது. இராவணன், இந்திரன், சந்திரன் முதலியோர் பட்ட பாடுகள் யாவர்க்கும் பிரசித்தமல்லவா? இந்தக் காலத்தில் ஒரு காரியத்தை நாம் முக்கியமாய் ஆலோசிக்க வேண்டியதா யிருக்கிறது. இரைக்காக ஆகாயத்தில் பருந்து வட்டமிடுவதுபோல் சில ஐரோப்பிய அரசர்கள் இந்த ஏசியா கண்டத்தில் எந்த அரசன் அக்கிரமம் செய்வான்? யாருடைய தேசத்தைக் கட்டிக் கொள்ளலாமென்று சதா எதிர்பார்த்துக் கொண்டி ருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் அக்கிரமம் செய்தாலும் செய்வார்களே யல்லாமல், இதரர்கள் அக்கிரமம் செய்யச் சகியார்கள். ஆகையால் அந்த விஷயத்தில் நாம் எப்போதும் எச்சரிக்கையா யிருக்கவேண்டும். ஒரு அற்ப மனுஷன் செய்கிற அக்கிரமத்தையாவது மறைக்கலாம்; அரசன் முதலிய பெரியோர்கள் செய்கிற அக்கிரமங்கள் சந்திரனிடமிருக்கிற களங்கம்போல், சர்வலோகப் பிரசித்தமா யிருக்கின்றன. அரசன் எப்படியோ அப்படியே குடிகளுமாகையால், அரசனைப் பார்த்துக் குடிகளும் அக்கிரமம் செய்யக் கற்றுக்கொள்வார்கள். ஆகையால் அரசனே சகலருடைய பாவத்துக்கும் பழி களுக்கும் உத்திரவாதியாகிறான். அந்நிய ஸ்திரீகளை நாம் ஆலால விஷமாகப் பாவிக்கவேண்டும். விஷமானது உண் கிறவனை மட்டும் கொல்லும். பரஸ்திரீயாகிய விஷம் பார்த் தவர்கள் நினைத்தவர்களை யெல்லாம் கொல்லும். ஆகையால், நாம் பரஸ்திரீகளைப் பாராமலும் ஸ்மரிக்காமலுமிருக்க வேண்டும். சகல ஜயங் களிலும் இந்திரிய நிக்கிரகமே பிரதானம், சத்துருக் களுடைய யுத்தரங்கத்தில் யார் எதிர்த்து நிற்கிறார்களோ அவர்களுக்கே ஜயம் ஸ்திரீகள் விஷயத்திலோ என்றால், அவர்களைப் பாராமல் யார் முதுகு காட்டி யோடு கிறார்களோ அவர்களுக்கே ஜயம். உங்களுடைய அன்னத்தைச் சாப்பிடுகிற நான், உங்களுக்கு நன்மையான காரியத்தைச் சொல்லக் கடமைப்பட்டிருக் கிறேன். வாய்க்கு மதுரம் போலத் தோன்றிப் பின்பு வியாதிகளை விளைவிக்கிற சில உணவுகளைப்போலப் பின்வரும் காரியத்தை யோசிக்காமல் அரசனுக்குச் சந்தோஷம் வரும் படியாகச் சிலர் வெல்லப் பேச்சுப் பேசுவார்கள். அதற்கு நான் அருகன் அல்ல. முந்திக் கசப்பாகத் தோன்றிப் பிந்தி ஆரோக்கியத்தைக் கொடுக்கிற ஔஷத்ங்கள் போல உங்களுக்கு இக பர சாதகமான வார்த்தைகளை நான் பேசாவிட்டால் உங்களுடைய ஊழியத்திற்கு நான் எவ்வளவும் பாத்திரவான் அல்ல. ஒரு அக்கிரமத்தை நாம் தெரியாமல் செய்து விட்டபோதிலும், பிறகு அதற்குத் தக்க பரிகாரம் செய்யவேண்டுவது முக்கியம். சுகுணசுந்தரி இவ்விடமிருக்கிற வரையில் நமக்கு ஆபத்துக்கு இடமாகை யால் அவளுடைய சொந்த ஊருக்கு அனுப்பி விடுவது சர்வோத்தமமாய்க் காணப்படுகிறது” என்றான்.
மறுபடியும் புவனேந்திரன் அரசனை நோக்கி “ஸ்திரீகள் விஷயத்தில் அக்கிரமம் செய்தவர்களைச் சில அரசர்கள், எவ்வளவோ குரூரமாய்ச் சிக்ஷித்திருக்கிறார்கள். அப்படிப் பட்ட ஒரு சரித்திரத்தைச் சொல்லுகிறேன் கேளுங்கள்” என்று சொல்லலுற்றான்.
60. ஸ்திரீகள் விஷயத்தில் அக்கிரமம் செய்தவனைத் தண்டித்த அரசன் கதை
“சில காலத்துக்குமுன் ஒரு அரசனுடைய படை வீரர் களில் ஒருவன் ஒரு அந்நியனுடைய வீட்டுக்குள் பலாத்கார மாய் நுழைந்து, அங்கிருந்த வேலைக்காரி ஒருத்தியைக் கட்டிப் பிடித்துப் பலவந்தம் செய்தான். அதைக் குறித்து அந்த வீட்டின் எசமான் அரசனிடத்தில் முறையிட்டான். அரசன் அவனை நோக்கி “அந்தத் துஷ்டன் மறுபடியும் உன் வீட்டுக்கு எப்போது வருகிறானோ. அந்த க்ஷணமே எனக்கு அறிவி” என்றான். அந்தப் பிரகாரம் மறு நாள் இராத்திரி அந்தப் படைவீரன் தன் வீட்டுக்குள் வந்திருந்த சமயத்தில் அந்த மனிதன் அரசனுக்கு அறிக்கையிட்டான். உடனே அரசன் ஒரு கத்தியைக் கையில் எடுத்துக்கொண்டு அந்த வீட்டுக்குள் நுழைந்து முந்தி விளக்கை அவித்துவிட்டு அந்தத் துஷ்டனைக் கொன்ற பிறகு மறுபடியும் விளக்குக் கொண்டு வரச் சொல்லி, கொலை யுண்டவனுடைய முகத்தை உற்றுப் பார்த்து உடனே ஸ்வாமிக்கு ஸ்தோத்திரம் செய்தான். பிறகு அரசன் அந்த வீட்டு எஜமானனை ஏதாவது சாப்பாடு இருந்தால் கொண்டு வரச் சொல்லி அவன் கொண்டுவந்த சாப்பாட்டை அரசன் ஆவலுடன் புசித்தான். அரசனுடைய அந்தச் செய்கைகளைப் பார்த்து, வீட்டு எஜமான் ஆச்சரியங் கொண்டு அவைகளிள் காரணத்தைத் தெரிவிக்க வேண்டுமென்று அரசனை இரந்து மன்றாடினான். அரசன் சொன்ன மறுமொழியாவது: “இப்படிப்பட்ட துஷ்கிருத்தி யத்தை என்னுடைய மகனைத் தவிர வேறொருவனும் செய்யத் துணியானென்று நினைத்து அவனுடைய முகத்தைப் பார்த் தால், அவனைக் கொல்ல எனக்கு மனம் வராதென்று பயந்து முந்தி விளக்கை நிறுத்தி அவனைப் பாராமலே கொன்றேன். பிறகு விளக்குக் கொளுத்தி அவனுடைய முகத்தைப் பார்த்தபோது என்னுடைய மகன் அல்லவென்று தெரிந்து அதற்காகக் கடவுளுக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்தேன். நீதி செய்யவேண்டு மென்று நீ என்னிடத்தில் மனுப்பண்ணிக்கொண்டபோது அந்தக் குற்றவாளியைப் பிடித்துக் கொல்லுகிறவரையில் நான் சாப்பிடுகிறதில்லை யென்று விரதம் பண்ணிக்கொண்டு நான் பட்டினியாயிருந்தபடியால் உன்னுடைய வீட்டில் ஆவலாய் அகால போஜனம் செய்தேன்” என்றான்.
மோகாந்தகாரத்தில் முழுகிப்போயிருந்த அந்த அரசனுக் குப் புவனேந்திரன் சொன்ன உணர்ச்சிகள் ஞான தீபங்கள் போல விளங்கினமையால், அவன் தன் அக்கிரமத்தைத் தானே உணர்ந்து சொல்லுகிறான். “உடும்பு வேண்டாம் கையை விட்டாற்போதும்” என்பதுபோல் சுகுண சுந்தரியை நாம் அனுப்பிவிட்டாலும் அவள் நடந்த காரியங்களைத் தெரிவிக்கும்பொழுது அவளுடைய தகப்பனுக்கு நம்மிடத் தில் துவேஷம் உண்டாகி அப்பொழுதும் நம்மைப் பழிவாங்க ஆரம்பிப்பானே! இந்தத் தர்ம சங்கடத்துக்கு என்ன செய்கிறது?” என்றான்.
புவனேந்திரன் “அவளுடைய தகப்பனுக்கு முந்திக் கோபம் ஜனித்தாலும், நாம் செய்த அக்கிரமத்துக்கு நாமே பரிகாரம் செய்துவிட்டதால், அவனுடைய கோபம் தணிந்து விடும். நாமும் தக்க சமர்த்தர்களைச் சுகுண சுந்தரிக்குத் துணையாய் அனுப்பி அவனிடத்தில் சமாதானம் பேசும்படி செய்விக்கலாம்” என்றான்.
– தொடரும்…
– சுகுணசுந்தரி சரித்திரம் மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் எழுதிய இரண்டாவது நாவல். 1887ல் இந்நாவலை வெளியிட்டார்.
– சுகுணசுந்தரி (நாவல்), முதற் பதிப்பு: அக்டோபர் 1979, வானவில் பிரசுரம், சென்னை.