(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அசோகவனத்தில் சீதை புகையுண்ட ஓவியமாய் இருக்கிறாள். அவள் பசியென்ற ஒன்றை மறந்துபோன பிறவி. அவள்முன் திரிசடை அவளுக்கு ஏதாவது ஊட்டிவிட வேண்டும் என்ற ஆவலில் வட்டிலில் அறுசுவையுடன் அமுது கொண்டுவந்திருந்தாள்.
சீதைக்கு அவற்றைப் பார்த்தபோது நஞ்சு தேவையில்லைப் போல் பட்டது. அருவருப்பால் அவள் உயிரின் உட்குருத்து நடுங்கிற்று.
“தேவி” என்கிறாள் திரிசடை, அவளை ஆவலுடன் பார்த்து.
தூர எறிந்த பார்வையிலிருந்து அவள் மீளவில்லை.
“தேவி” மீண்டும் திரிசடையின் அழைப்பு.
சீதையின் தூர எறிந்த பார்வை வெளியில், அந்த மாயமான் ஓடுகிறது.
அதைத் துரத்திக்கொண்டு முட்பற்றைகளைத் தாண்டித் தாண்டிப் பாய்ந்தோடும் இராகவன் கானல்வெளியில் கரைந்து போவதுபோல். அவள் கண்களில் நீர்முட்டுகிறது. முட்டிய நீரைக் கொட்டிவிடக்கூடாதென்பதற்காய் இதழ்களைப் பற்களால் கடித்து விழிநீரை விழிகளே விழுங்கவைக்கும் பிரயத்தனம்.
“அம்மா சாப்பிடுங்கள். இப்படியே இருந்தால் இராமர் வரும் வரை உங்களால் தாக்குப்பிடிக்கமுடியாது.”
சீதையின் இதழ்களில் ஒரு வரண்ட புன்னகை.
“என் உயிரைப் பிடித்துவைப்பது அவர் நினைவுதான்; சாப்பாடல்ல.”
“இருக்கலாம், ஆனால், உயிர்வாழ உணவு கொஞ்சமாவது வேணும். எனக்காக இதைக் கொஞ்சம் சாப்பிடுங்கள்.” திரிசடை அங்கிருந்த தண்ணீர்க் குவளையை சீதையிடம் எடுத்து நீட்டுகிறாள்.
சீதை அதை வாங்கி, ஒரு மிடறு நீர் பருகுகிறாள். பளபளக்கும் அவள் கண்முன்னே மீண்டும் ஒரு காட்சி.
இலக்குவன் தோளில் தொங்கும் அம்பறாத் தூணியுடன், மூரி விற்கையோடு அவளிருந்த குடிலின்முன்னே அங்கும் இங்கு மாய் நடந்து காவல்புரிந்துகொண்டிருக்கிறான்.
அப்போது, “இலக்குமணா, இலக்குமணா!” என்று ஆபத்தில் உதவிகோரும் இராமரின் அழைப்பு, அவர் சென்ற திக்கிலிருந்து ஒலிக்கிறது. அடிவான் தொலைவிலிருந்து புறப்பட்டு, அவள் காலடியில் வந்துவிழுந்து கணீரிடுவதுபோல் கேட்கும் ஓர் துயர் இழையும் இராமரின் அழைப்பு.
அந்த அழைப்பு இலக்குவனையும் ஒரு கணம் உலுக்கிற்று.
அவன் அந்த அழைப்பு வந்த திசையை நோக்கி ஒரு கணம் தலையைச் சாய்த்து, செவிப்புலனை ஓடவிட்டவன் மீண்டும் ஏதும் நடக்காதவன்போல் தனது காவல் சேவையில் ஈடுபட்டவனாய் முன்னும் பின்னும் நடக்கத் தொடங்குகிறான்.
சீதைக்கு அவன் செயல் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. “இலக்குமணா, என்ன பேசாமல் நிற்கிறாய்? அவருக்கு ஏதோ ஆபத்து போலிருக்கு. இல்லாவிட்டால் அவர் இப்படிக் கூப்பிடமாட்டார்.”
“அப்படி அவருக்கு எந்த ஆபத்தும் வராது. என்னை அவர் ஒருநாளும் அப்படிக் கூப்பிட்டதில்லை. அந்தக் குரல் எனக்கு அவர் குரல்போல் படவில்லை.”
“ஏன் அப்படிச் சொல்கிறாய்?”
“அந்தக் குரலில் பயம் தெரிகிறது. இராமர் ஒருகாலமும் அப்படிப் பயப்படுபவர் இல்லை. இது அரக்கர் திரியும் காடு, நாம் அவதானமாக இருக்க வேண்டும்.”
“எல்லா நேரமும் ஒரேமாதிரி இருக்காது. எனக்கென்றால் பயமாக இருக்கு. நீ தாமதிக்கிற ஒவ்வொரு கணமும் அவர் உயிருக்கு ஆபத்தாகவே முடியலாம். சீக்கிரம் அவரைப் போய்ப் பார்.”
“இந்த இடத்தை விட்டு நகரக்கூடாதென்பது அவரது கட்டளை. நான் அவர் கட்டளையை மீறிப் போகமாட்டேன்.”
இப்படிக் கூறி, உறுதியோடு காவலுக்கு நின்ற இலக்குவனை அவள் எவ்வளவுதூரம் சொற்களால் குத்திக்குதறி, அங்கிருந்து அகல வைத்தாள்.
அவன் அந்த நேரத்திலும் பயந்து பயந்து வேதனையோடு திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு சென்றது அவள் கண்முன் மீண்டும் தோன்றுகிறது. பெண்புத்தி பின்புத்தியா? அப்படித்தான் இருக்க வேண்டும். மீண்டும் அவள் கண்களில் நீர்த்தளும்பல்.
“அம்மா இப்படி அழுதழுது பசியோடு கிடக்கக்கூடாது. கொஞ்சம் சாப்பிடுங்கள்.” திரிசடை சீதையைத் தேற்றியவாறு தான் கொண்டுவந்திருந்த அமுதில் சிறிதெடுத்து, திரணையாக்கி சீதைமுன் நீட்டுகிறாள்.
சீதை விரக்தியோடு சிரிக்கிறாள்.
“எனக்கு உணவூட்ட நீ இருக்கிறாய்…”
“அதற்கென்னம்மா, இது என் கடமையென்று நான் செய்ய வில்லை. எனக்குக் கிடைத்த பாக்கியம் என்று செய்கிறேன்.” திரிசடை அமைதியாகக் கூறுகிறாள்.
“ஆனால்…” சீதை இழுக்கிறாள்.
“ஆனால் என்னம்மா?” திரிசடையின் குரலில் ஓர் ஆவல்.
“நான் இங்கே உன்னிடம் சாப்பிடுகிறேன். ஆனால், அவருக்கு அங்கே மெல்லடகு அருந்திட ஆர் கொடுப்பார்? அவர் இருப்பி டத்திற்கு ரிஷிகள் விருந்துண்ண வந்தால் என்ன செய்வார்?”
“நீங்கள் வீணாகக் கவலைப்படுகிறீர்கள். அவருக்கு, அவரை இமைபோல் காக்கும் தம்பியுண்டு. அதுமட்டுமல்ல, எல்லா வற்றையும் சமாளித்துக்கொள்ளும் தெய்வசக்தியும் அவருக்குண்டு. ஆனால், நீங்கள்தான் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க வேணும்.”
“எனக்கென்ன ஆரோக்கியம் வேண்டிக்கிடக்கு; அவரில்லாமல்?”
“அப்படிச் சொல்லக்கூடாதம்மா. அவர், உங்களையும் எங்களையும் விடுவிக்க விரைவில் வருவார். அப்போது நாம் ஆரோக்கியமாக இருக்கவேணும்.”
“ஏன்?”
“அப்போதுதான் அந்த விடுதலை இன்பத்தை நம்மால் பூரணமாக அனுபவிக்கமுடியும் அம்மா.”
“பைத்தியம், எனக்கு அவர் நினைவே விடுதலைதான். என்றாலும் அவர் பிரிவை என்னால் தாங்கமுடியவில்லையே! ஐயோ, என்னை வாட்டும் இந்த நோய்க்கு மருந்துண்டா சொல்? திரிசடை, மருந்துண்டு கொல் யான் கொண்ட நோய்க்கு?” என்று கூறி சீதை திடீரென்று மூர்ச்சித்து, தடால் என திரிசடையின் தோளில் சாய்கிறாள்.
மங்கிவரும் மாலைப்பொழுது.
வேங்கைமர நிழலின் கீழ் முகத்தை முழங்கால்களில் ஏந்தியவாறு கைகளால் கால்களைக் கோர்த்துக்கட்டியபடி, தூர எறிந்த பார்வையோடு ஓர் இளமங்கை குந்தியிருக்கிறாள்.
தனித்திருந்த அவள்பின்னே அவளையொத்த வயதுடைய இன்னொருத்தி வந்து அவள் கண்களைப் பொத்துகிறாள்.
பொத்தியவளின் கைகளைத் தடுக்கவோ, கையை எடு என்று சொல்லவோகூட முனைப்பற்றவளாய் முன்னவள் இருக்க, பொத்தி யவளே அலுப்புத்தட்டிய நிலையில் பொத்திய கையைத் தானே விடுவித்துக்கொண்டு முன்னால் வருகிறாள்.
“மைவிழி, என்ன அசோகவனத்தில் சீதை இருந்தமாதிரி… நான் உனக்கு எத்தனை தடவை சொல்லிவிட்டேன், இப்படி இருக்காதே என்று.” கண்களைப் பொத்தியவள் மற்றவள் நிலையை பொருட்படுத்தாதவள்போல் கூறினாள்.
மற்றவள் இன்னும் பேசாது அப்படியே இருந்தாள்.
“மைவிழி, நீ இந்தக் கோலத்தில் இருந்து விடுபடமாட்டாயா?” தொடர்ந்து கண்களைப் பொத்தியவளே கேட்டாள்.
“என்னால் முடியவில்லையே, குழலி.” மைவிழி தொண்டைக் குள் ஏதோ அடைத்துக்கொண்டதுபோன்ற மெல்லிய குரலில் பதில் கூறினாள்.
“ஏன் அப்படிச் சொல்கிறாய்? நான் உனக்குப் பலமுறை சொல்லிவிட்டேன். போர்வயிற் பிரிந்த உன்னவர் விரைவில் திரும்புவார் என்று. நீ கேட்கிறாய் இல்லை.”
“நீ மிக எளிதாய்ச் சொல்லிவிடுகிறாய், குழலி. ஆனால், என் மனம் ஆயிரம் எண்ணி அலை பாயுதே!”
“தேவையில்லாத எண்ணங்களுக்கேன் இடம் கொடுக்கிறாய்? அவற்றை ஒதுக்கிவிடு. உன்னவர் விரைவில் உன்னிடம் வருவார்.”
“என்னவர் பொருள்வயிற் பிரிந்து சென்றிருந்தால், நான் பொறுத்திருப்பேன். ஆனால், அவர் சென்றதோ போர்க்களம். என்னால் எப்படிப் பொறுக்கமுடியும், குழலி?”
“போர்க்களம் உன்னவருக்குப் புதிசா? எத்தனை களம் கண்டவர் அவர்? வெள்ளாற்றுப் போருக்கு அவர் சென்றிருந்த போதும் நீ இப்படித்தான் கலங்கினாய். பின்னால், அவர் வெற்றி வாகை சூடி வரவில்லையா?”
“எப்போதும் ஒன்றுபோல் இருக்குமா? எங்கள் ஆநிரை கவர்ந்து சென்ற ஏதிலர், சீதையைக் கவர்ந்துசென்ற இராவணர் போன்றவர். நெறியற்றுப் போர் புரிவோர்…”
“நெறியற்று எம் நிலங்கவர வந்த பகைவர்க்கு நல்ல நெறிபுகட்டி நம் மறவர் வீடு திரும்புவர். கவலை விடு, மைவிழி.”
குழலி அப்படிக் கூறியபோது, மைவிழியின் முன்னே கானல் தகிக்கும் போர்க்களம் விரிகிறது. அங்கே கொலையுண்டும் காயமுற்றும் கிடக்கும் மறவர்கள். ஒரே குருதி வாடை. அவள் காதலன் விழுப்புண்ணோடு, போர்க்களத்தில் உயிருக்காகப் போராடும் நிலையில்.. அவன் நா வரண்டு, தாகத்தால் சுருள்கிறது. கொளுத்தும் வெயிலில் கிடந்த அவன், “தண்ணீர், தண்ணீர்” என அரற்றுகிறான்.
“ஐயோ என்னால் தாங்கமுடியவில்லையே, குழலி” என்று வாய்விட்டுக் கூறித் தேம்புகிறாள் மைவிழி.
“ஏன் மைவிழி இப்படி அழுகிறாய்? என்ன நடந்துவிட்டது இப்போ?”
“ஐயோ, போர்க்களத்தில் அவருக்கு என்ன நடந்ததோ, என்னென்ன கொடுமைகளை எதிரிகள் அவருக்கு இழைத்தாரோ.!” என்று கூறியவாறு மைவிழி மீண்டும் தன் முகத்தை முழங்கால் களில் புதைக்கிறாள்.
அவள் மூடிய விழிகளுக்குள்ளே நெடிய ஒளிக்கீற்றென அவன் அழகிய தோற்றம் நிற்கிறது. ஒருமுறை இப்படிக் கோடை காய்ந்த காலத்தில்தான் தண்ணீர் கேட்டு அவன் அவள் வீட்டுக்கு வந்தான். தண்ணீர் மொண்டுவந்து அவள் செம்பை அவனிடம் நீட்டியபோது அவன் செம்பைப் பற்றுவதுபோல், அவள் கையைப் பற்றுகிறான். திடுக்கிட்டுப்போன அவள், “இங்கே பார், அம்மா” என்று தன் தாயைக் கூப்பிடுகிறாள். “என்ன? என்ன?” என்றவளாய் அவளின் தாயார் அங்கே விரைந்து வந்தபோது, “இவருக்குத் தண்ணீர் விக்கிற்று” என்று கதையை மாற்றி அவனைக் காப்பாற்றுகிறாள்.
அப்படித்தான் அவர்கள் காதல் ஆரம்பமாயிற்று.
அற்றை வெயிற்பொழுதில் தண்ணீர்த் தாகத்தோடு ஆரம்பித்த அவர்கள் காதல், இன்று பிரிவு என்னும் நீளும் பாலையால் தாக்குண்டது. அவள் துடித்தாள்.
“முட்டுவேன் கொல்? மோதுவேன் கொல்?” என்று அரற்றத் தொடங்கிய மைவிழி, குழலியை அணைத்தவாறு தேம்பித்தேம்பி அழுகிறாள்.
“கலங்காதே மைவிழி பகைவரிடம் இருந்து எம் நிலத்தை விடுவிக்கச் சென்ற உன்னவர் உன்னை, உன் பிரிவுத் துயரில் இருந்து விடுவிக்க விரைவில் வருவார்.” குழலி மைவிழியைத் தேற்றுகிறாள்.
“வராவிட்டால்…?” என்று தனக்குத் தானே கேள்வி எழுப்பிய மைவிழி தொடர்ந்து, “அவர் வராவிட்டால் வடக்கிருந்து உயிர் துறப்பேன்” என்றாள் அழுத்தமாக.
அதைக் கேட்ட குழலி, “நானும் உன்கூட வருவேன். அயலா ரின் கீழ் அடிமையாய் இருப்பதைவிட, உயிர்விடுவது மேலானது” என்றாள் இன்னும் அழுத்தமாக.
தமிழினி யோசனையில் ஆழ்ந்திருக்கிறாள்.
அவளைச் சுற்றிக் கும்மாளமிடும் சிறுவர் சிறுமியரின் இரைச் சல்கூட அவள் நிலையைக் கலைக்கவில்லை.
“ரீச்சர், ரீச்சர், எனக்கு ரஞ்சன் அடிக்கிறேர் ரீச்சர்”
“குமார் என்னை மூதேவியாம், ரீச்சர்.”
“கமலினிக்கு வயித்து வலியாம், ரீச்சர்.”
இப்படி நிமிஷத்துக்கு ஒருதரம் அந்தச் சிறுசுகளிடம் இருந்து வந்த முறைப்பாடுகள்கூட அவளை உசுப்பிவிடுவதாய் இல்லை.
குட்டிச்சுவர்களால் அமைந்திருந்தது அந்தச் சிறு கட்டடம். அது தென்னங்கிடுகுகளால்தான் வேயப்பட்டிருந்தது. அது நகர்ப்புற வாசனையில்லாத காட்டுப் பகுதி. மரங்கள் அடர்ந் திருந்தன. அப்பகுதியின் மாட்டு ‘வண்டில்’ பிரதான பாதை யோரமாக அந்தப் பாடசாலை அமைந்திருந்தது. பிரதான பாதையிலிருந்து வேறுபல ஒற்றையடிப் பாதைகள் மரங்கள் அடர்ந்த உட்பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தன.
தமிழினியைச் சுற்றிச் சிறுசுகள் அளவுக்குமீறிக் கும்மாளமிடு வதைப் பார்த்துக்கொண்டிருந்த, அடுத்த எதிர்த்தொங்கலில் இன்னொரு சிறுவர் பட்டாளத்தோடு நின்றிருந்த பொன்மதி, தமிழினி அருகே வந்து, அவள் தோளை உலுக்குகிறாள்.
“நான் உனக்கு எத்தனை முறை சொல்லிறது, இப்படி யோசிச்சுக்கொண்டு இருக்காதேயெண்டு! அசோகவனத்தில் சீதைகூட இப்படி இருந்திருப்பாளோ, தெரியாது.”
பொன்மதியின் வார்த்தைகள் சிறு சினங்கலந்து வெளிவந்தன. “நான் என்ன செய்யப் பொன்மதி, என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியயேல்லையே?” தமிழினி மன்னிப்புக் கோரும் பாவனையில் கதைத்தாள்.
“கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? கட்டுப்பாடில்லாமல் விடுதலை வராது. பெரிய இலட்சியங்களை அடையச் சிறிய ஆசைகளைக் கட்டுப்படுத்தத்தானே வேணும்.” பொன்மதி பதிலிறுத்தாள்.
அவளை அடிக்கடி யோசனையில் மூழ்கவைக்கும் அந்தக் காதலுணர்வு சிறிய ஆசையா? அல்லது தேவையான இலட்சிய உணர்வா? அது எத்தகையது? அவள் கொண்ட விடுதலை இலட் சியத்தில் அதன் முக்கியத்துவம் என்ன?
மீண்டும் அவளை யோசனைகள் மூழ்கடிக்கின்றன.
அன்று அவன் அந்தச் சிறுவர் பள்ளிக்கூடத்தின் குட்டிச் சுவர் ஓரமாக வந்து சைக்கிளில் இருந்தபடியே அவளோடு கதைத்தது அவளுக்கு ஞாபகம் வந்தது. அவன் தோள்களுக்கு மேலாக ஏ.கே. 47 துப்பாக்கி துருத்திக்கொண்டு நின்றது. கழுத்தில் தொங்கிய சயனைட் குப்பியின் ஒரு பகுதி நெஞ்சுச்சட்டைக்கு மேலால் எட்டிப் பார்த்தது. அப்பகுதி மக்களின் விடுதலை உணர்வாய் வெண்முறுவல் பூத்தது.
அங்கே அவன் அதிக நேரம் நிற்கவில்லை.
என்றாலும் அவன் அவளுக்குக் கூறிச்சென்ற இரண்டு விடயங்கள், அவள் மனதைவிட்டு ஏனோ அகல மறுத்தன. அடிக்கடி அவள் நெஞ்சில் மோதிக் குருதிவழியச்செய்யும் வேதனை. “நான் மணலாற்றுக்குப் போறன். திரும்பி வந்தால் உன்னைப் பார்க்க வருவன்.”
அவன் கூறிச்சென்ற விடயங்கள் அவைதான்.
மணலாறுபற்றிய நினைவு சோற்றுக்குள் மணல் கரகரப்பது போல் ஒரு அசௌகரியத்தையும் அந்தரத்தையும் அவளுக்கு ஏற்படுத்திற்று.
மணலாறு, ‘வெலி ஒயா’ என்று பெயர் மாற்றப்பட்டு ஈழத் தமிழர் பிரதேசங்களான வடக்கையும் கிழக்கையும் பிரிக்கும் நோக்கோடு சிங்கள ராணுவப் பிரதேசமாகத் திணிக்கப்பட்ட தமிழர் நிலம்.
அது எத்தனை போராளிகளைக் காவுகொண்ட களமாயிற்று!
தமிழினியோடு ஒன்றாய்ப் படித்த தமயந்தி, ஒன்றாய்ப் பயிற்சிபெற்ற ஊர்மிளா, ஒன்றுவிட்ட சகோதரர்களான அழகு, இளங்குமரன் என, மணலாறு பலியெடுத்த முகங்கள் அவள் முன் மிதந்துவந்தன.
அவள் நெஞ்சைக் குடைந்துகொண்டிருந்த இந்தத் துயர் தூர்ந்துபோவதற்குள் அவள் நெஞ்சோடு கலந்துவிட்ட சுபாஷ் போனவாரம்தான் அங்கே போயிருக்கிறான்!
சுபாஷ் திரும்பி வருவானா?
காதலும் விடுதலையும் இடைவெளியற்று ஒன்றாய்ச் சங்க மிக்கின்ற ஒரு புதுத் தரிசனத்துள் அவள் திடீரென மூழ்கிக் கொண்டிருந்தபோது, “என்ன பிறகும் அசோகவனச் சீதை மாதிரி” என்றவளாய்ப் பொன்மதி அவளை உலுக்கிவிட்டுச் சிரித்தாள்.
இப்போ தமிழினி பொன்மதியின் உலுக்கலால் பாதிக்கப்படா தவளாய்த் திடீரென, புதுவித மாற்றத்துக்குள்ளான ஒருவித உறுதியோடு சிரித்தாள்.
“ஏன் சிரிக்கிற, தமிழினி?” பொன்மதி கேட்டாள்.
“நான் சீதையுமல்ல, சுபாஷ் ராமருமல்ல.”
“அப்போ புறநாநூற்றுக் காதலர் எண்டு சொல்லவா?”
“அதுவும் இல்லை.”
“ஏன்?”
“அக்காலக் காதலிகள் எல்லோரும் காதலனைக் களத்திற்கு அனுப்பிப்போட்டு, வீட்டில் வேதனையோடு காத்திருந்தார்கள். இப்போ அப்படி இல்லையெண்டு உனக்குத் தெரியும். இது விடுதலைக் காலம். விடுதலைக்குப் பால்நிலைப் பிரிவு கிடையாது, இல்லையா?”
“யார் இல்லையெண்டது?” பொன்மதியின் பதிலிலும் அதே உறுதி தெரிந்தது.
“சுபாஷ் திரும்பி வராட்டி” தமிழினி தொடர்ந்தாள். “இன்னொரு சுபாஷாக மாறத் தமிழினி இருக்கிறாள், பொன்மதி இருக்கிறாள், இல்லையா?” என்று கேட்டுவிட்டுத் தமிழினி மீண்டும் லேசாகச் சிரித்தாள்.
“உண்மைதான் தமிழினி. இந்த உணர்வு எங்களுக்கு இப்ப எங்க வாழ்கையோடு கலந்துபோச்சு, இல்லையா? தெரியாமலா சொன்னார்கள், காதலையும் சரி, எந்தச் சுகத்தையும் சரி விடுதலை. யிருந்தால்தான் உண்மையாக அனுபவிக்கமுடியுமெண்டு? என்று கூறி முடிப்பதற்குள் தூரத்தே ஒரு போராளி வேகமாக சைக்கிளில் வந்துகொண்டிருந்தான்.
வந்தவன் பாடசாலைக்குள் நுழைந்து, அவர்களை நெருங்கி, “மணலாற்றில் 53 போராளிகள் வீரச்சாவு அடைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு துக்கம் அனுஷ்டிக்கிறோம். எல்லா இடமும் கறுத்தக் கொடி பறக்கவிடுங்க” என்று சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து போகிறான்.
ஒரு கணம் சிலையாக ஸ்தம்பித்திருந்த தமிழினி, தன்னருகே தனக்குரிய முக்கிய சொத்தாக இதுகாலவரை பேணி வைத்திருந்த அந்தச் சிறிய கறுத்தக் குடையை எடுத்துக் கிழிக்கிறாள். துணி கிழிக்கப்பட்ட குடையின் உட்பகுதி எலும்புக்கூடாய் தூரப்போய் விழுகிறது.
பள்ளிக்கூடத்தின் வாசலில் கறுப்புக் கொடிகள் பறக்கின்றன.
சுபாஷ் திரும்பி வரவேணுமா?
– முடிந்து போன தசையாடல் பற்றிய கதை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2009, தமிழியல், லண்டன்.