கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 28, 2019
பார்வையிட்டோர்: 95,239 
 

(1935ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

மலையில் தொடங்கிக் கடலில் முடிந்த அந்தப் பெரிய ஆற்றின் நடுவில் ஒரு சிறு தீவு இருந்தது. ஆறு தீவைச் சுற்றி ஒடியது; சிலசமயம் அதன் கரைகளை அரித்தது; ஆனால் ஒருபோதும் தீவின் மேலாக ஒடியதில்லை. அத் தீவில் ஒரு சிறு குடிசை இருந்தது. மண்சுவரும் சாய்வான ஒலைக் கூரையும் கொண்ட குடிசை பெரிய பாறை ஒன்றை ஒட்டி அது கட்டப்பட்டிருந்தது. எனவே மூன்று சுவர்கள் தான் மண்ணாலானவை. பாறையே நாலாவது சுவர்.

சில வெள்ளாடுகள் தீவில் முளைத்த புல்லை மேய்ந்தன. பெட்டைக் கோழிகள் சில அவற்றைச் சுற்றித் திரிந்தன. முலாம் செடிப் பாத்தியும், காய்கறிப் பாத்தியும் அங்கிருந்தன.

தீவின் மத்தியில் ஒரு அரச மரம் நின்றது.

அது மிகப் பழைய மரம். பல வருடங்களுக்கு முன்பு, வலிய காற்று ஒன்று ஒரு விதையைத் தீவில் கொண்டு சேர்த்தது. இரண்டு பாறைகளுக்கிடையே சிக்கிய அது அங்கேயே வேர்விட்டு வளர்ந்தது. பெரிய மரமாகி ஒரு சிறு குடும்பத்துக்குப் பாதுகாப்பும் நிழலும் அளித்தது.

தாத்தா மீன் வலையைப் பழுது பார்த்தார். ஆற்றில் பத்து வருட காலம் அவர் மீன் பிடித்திருக்கிறார். அவர் நல்ல மீனவர். மெலிந்த வெள்ளிய சில்வா மீன், அழகான பெரிய மாவுநீர், நீண்ட மீசைக்கார சிங்காரா மீன் வகைகள் அங்கே அகப்படும் என அவர் அறிவார். ஆறு எங்கே அதிக ஆழம், எங்கே ஆழமில்லை என்பது அவருக்குத் தெரியும். எந்தத் தூண்டில் இரை உபயோகிப்பது-எந்த மீன் புழுக்களை விரும்பும், எது பயறுகளை நாடும் என அறிவார். அவர் தன் மகனுக்கு மீன் பிடிக்கக் கற்றுத்தந்தார். ஆனால் அவர் மகன் நூறு மைல்களுக்கு அப்பால் இருந்த ஒரு நகரில் தொழிற்சாலையில் பணிபுரியப் போய்விட்டான். அவருக்கு பேரன் இல்லை. சீதா என்று ஒரு பேத்தி இருந்தாள். ஒரு பையன் செய்யக் கூடிய எல்லா வேலைகளையும் அவள் செய்தாள். சில சமயம் சிறப்பாகவே செய்தாள். அவள் மிகச் சின்னவளாக இருந்த போதே அவள் அம்மா இறந்து போனாள். பாட்டி, ஒரு பெண் அறிய வேண்டிய அனைத்தையும் அவளுக்குக் கற்றுக் கொடுத்தாள். தாத்தாவுக்கும் பாட்டிக்கும் எழுதப் படிக்கத் தெரியாது. ஆகவே சீதாவுக்கும் படிக்கவோ எழுதவோ தெரியாது.

ஆற்றுக்கு அப்பால் ஒரு ஊரில் ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. ஆனால் சீதா அதைப் பார்த்ததேயில்லை. தீவில் அவளுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருந்தன.

தாத்தா தனது வலையைச் சீர்படுத்திக்கொண்டிருந்த போது, சீதா குடிசைக்குள் இருந்தாள். பாட்டியின் நெற்றியைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தாள். பாட்டியின் உடல் சுரத்தால் கொதித்தது. மூன்று நாட்களாகவே பாட்டிக்கு நோய்; எதுவும் சாப்பிட முடியவில்லை. முன்பும் அவள் சீக்காக இருந்திருக்கிறாள்; ஆனால் இவ்வளவு மோசமாக இல்லை. பாட்டி தூங்கியதும் சீதா மெதுவாக அறைக்குள்ளிருந்து வெளியே வந்து நின்றாள்.

மழைக்கால மேகங்களால் வானம் இருண்டிருந்தது. இரவு முழுவதும் மழை பெய்திருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் மீண்டும் மழைபெய்யும். அந்த வருடம் பருவ மழை சீக்கிரமாகவே, ஜூன் இறுதியிலேயே, வந்துவிட்டது. இப்போது ஜூலை கடைசி. ஏற்கெனவே ஆறு பொங்கிப் புரண்டது. அது பாய்ந்து வரும் ஓசை மிக நெருங்கியும், வழக்கத்தைவிட மிக அச்சம் தருவதாகவும் இருந்தது.

சீதா தாத்தா அருகில் சென்றாள். அரசமரத்தின் கீழே அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்தாள்.

“உனக்குப் பசிக்கிற போது சொல். ரொட்டி சுட்டுத் தருவேன்” என்றான் அவன்.

“உன் பாட்டி தூங்கிவிட்டாளா?”

“அவள் தூங்குகிறாள். ஆனால் சீக்கிரம் விழித்து விடுவாள். அவளுக்கு நோவு அதிகம்.”

கிழவர் ஆற்றுக்கும் அப்பால், காட்டின் இருண்ட பசுமையையும், சாம்பல் நிற வானத்தையும், உற்று நோக்கினார். “நாளைக்கு அவள் குணம் அடையாவிட்டால், ஷாகன்ஞ் நகர ஆஸ்பத்திரிக்கு அவளை இட்டுப் போவேன். அவளை எப்படிக் குணப்படுத்துவது என்பது அங்கு இருப்பவர்களுக்குத் தெரியும். நீ சில தினங்கள் தனியாக இருக்க வேண்டும்.”

சீதா சிரத்தையாகத் தலையாட்டினாள். பாட்டி குணம் அடைய வேண்டும். ஆற்றில் நீரோட்டம் வேகமாக இருக்கையிலும் சிறு படகை வலித்துச் செல்லும் சக்தி தாத்தாவுக்கு இருந்தது. இதை அவள் அறிவாள். வீட்டில் உள்ள தங்கள் சிறிது உடைமைகளைக் கண்காணிக்க யாராவது ஒருவர் அங்கு இருந்தாக வேண்டும்.

தனித்து இருப்பதற்கு சீதா அஞ்சவில்லை. ஆனால் ஆற்றின் போக்கு அவளுக்குப் பிடிக்கவில்லை. அன்று காலை, தண்ணிர் எடுத்து வரப் போனபோது, ஆற்றில் தண்ணர் அதிகரித்திருந்ததை அவள் கவனித்தாள். வழக்கமாய் பறவைகளின் எச்சங்கள் சிதறிக் கிடக்கும் பாறைகள் திடீரென்று மறைந்து விட்டன.

“தாத்தா, ஆறு பெருகி வந்தால் நான் என்ன செய்வேன்?”

மேடான பகுதியில் நின்றுகொள்.”

மேட்டுப் பகுதிக்கும் தண்ணிர் வந்துவிட்டால்?”

கோழிகளைக் குடிசைக்குள் கொண்டு போ. நீயும் உள்ளேயே இரு.”

“குடிசைக்குள் தண்ணிர் வந்தால்?”

“அரசமரத்தின் மேலே ஏறு. அது வலிமையான மரம். கீழே விழாது. தண்ணிரும் அவ்வளவு உயரம் வராது.” .

“ஆடுகள், தாத்தா?”

“ஆடுகளை நான் கொண்டு போவேன், சீதா. அவற்றை விற்க நேரலாம், உன் பாட்டிக்கு உணவுக்கும் மருத்துக்கும் செலவுபண்ண. கோழிகளை, அவசியப்பட்டால், கூரை மேலே விட்டுவை. ஆனால் அதி கமாகக் கவலைப்படாதே. தண்ணிர் அவ்வளவு அதிகம் வராது” என்று, அவர் சீதாவின் தலையைத் தடவிக் கொடுத்தார்.

*⁠*⁠*

அன்று மாலை மீண்டும் மழை பெய்தது. பெரிய பெரிய துளிகள் ஆற்றின் பர்ப்பை வகுப்படுத்தின. ஆனால் கதகதப்பான மழை. சீதா அதில் சஞ்சரித்தாள். நனைவது பற்றி அவள் பயப்படவில்லை. அது அவளுக்குப் பிடித்திருந்தது. குடிசைக்குள் புழுக்கமாக இருந்தது. அடுப்புத் தீயின் வெப்பத்தில் அவளுடைய மெல்லிய ஆடை சீக்கிரம் உலர்ந்து விடும்.

அவள் கொட்டுகிற மழையில் திரிந்து, கோழிகளைத் துரத்தி, குடிசைக்குப் பின்னால் இருந்த ஒரு கூண்டுக்குள் அடைத்தாள். தீங்கற்ற கபிலநிறப்பாம்பு ஒன்று, வளைக்குள் வெள்ளம் புகுந்ததால் வெளிப் பட்டு, திறந்த வெளியில் ஒடியது. சீதா ஒரு கம்பை எடுத்து, பாம்பைத் துாக்கி, பாறைக் குவியல்களுக்கு இடையில் போட்டாள். பாம்புகளிடம் அவளுக்கு விரோதம் இல்லை. அவை எலிகளும் தவளைகளும் பெருகி விடாது தடுத்தன.

முடிவில் சீதா குடிசைக்குள் போனபோது, அவளுக்குப் பசித்தது. வறுத்த பயறை அவள் தின்றாள். சிறிது ஆட்டுப் பாலைக் காய்ச்சினாள்.

பாட்டி ஒருதரம் கண் விழித்தாள். தண்ணீர் கேட்டாள். தாத்தா பித்தளைத் தம்ளரில் நீர் கொடுத்தார்

*⁠*⁠*

இரவு முழுவதும் மழை பெய்தது.

கூரை ஒழுகியது. தரையில் சிறிது நீர் தேங்கிநின்றது. தாத்தா மண்ணெண்ணெய் விளக்கை எரிய விட்டிருந்தார். அவர்களுக்கு வெளிச்சம் தேவையில்லை. இருப்பினும் அது பாதுகாப்பாகத் தோன்றியது.

ஆற்றின் ஒசை சதா அவர்களோடுதான் இருந்தது. ஆயினும் அதை அவர்கள் கவனிப்பதில்லை. ஆனால் அன்று இரவு அதன் ஒசையில் ஒரு மாற்றம் தெரிந்தது. ஒரு புலம்பல் போல, நெட்டை மரங்களின் உச்சியில் காற்று சரசரப்பது போல், ஏதோ ஒன்று. பாறைகளைச் சுற்றி ஒடி சிறு கற்களை அடித்துச் செல்கையில் ஒரு வேக இரைச்சல் எழுந்தது. சில சமயம் மண் சரிந்து நீருக்குள் விழுந்த போது பேரோசை கேட்டது.

சீதாவால் தூங்க முடியவில்லை.

கூரையின் சிறு வெளியின் ஊடாக விடிவின் ஒளி எட்டிப் பார்த்ததுமே, அவள் எழுந்து வெளியே போனாள். பெரும் மழை இல்லை. துாறிக் கொண்டிருந்தது. ஆனால் நாட்கணக்கில் சிணுங்கக்கூடிய தூறல் அது. மலைகளில் ஆறு தொடங்கும் இடத்தில் கனத்த மழை பெய்து கொண்டிருக்கும் என்று தோன்றியது.

சீதா தண்ணீர் ஒரத்துக்குப் போனாள். அவளுக்குப் பிரியமான பாறை தென்படவில்லை. அதன் மீது அவள் அடிக்கடி உட்கார்ந்து கால்களைத் தொங்கவிட்டு நீரை அளைந்து, நீந்திச் செல்லும் சிறு சில்வா மீன்களை வேடிக்கை பார்ப்பதுண்டு. பாறை இப்பவும் அங்கு தான் இருந்தது, சந்தேகமில்லை, ஆனால் ஆறு அதுக்கு மேல் ஒடியது.

அவள் மணலில் நின்றாள். அவளது பாதங்களுக்கு அடியில் நீர் சுரந்து குமிழியிடுவதை அவள் உணரமுடிந்தது.

சூரியன் உதயமாகும் வேளையில், தாத்தா படகை ஒட்டிச் சென்றார். பாட்டி படகின் முன் பகுதியில் படுத்திருந்தாள். அவள் சீதாவை உறுத்துப் பார்த்தாள். ஏதோ சொல்ல முயன்றாள். ஆனால் வார்த்தை வரவில்லை. கையை உயர்த்தி ஆசியளித்தாள்.

சீதா குனிந்து, பாட்டியின் பாதங்களைத் தொட்டாள். உடனே தாத்தா படகை வலித்தார். அந்தச் சிறு படகு-இரு முதியவர்களோடும் மூன்று ஆடுகளுடனும்-ஆற்றின் மேலே வேகமாக நகர்ந்து, மறுகரை நோக்கி முன்னேறியது.

நீர் மீது துள்ளிச் சென்ற அது, சிறிது சிறிதாகி, முடிவில் விசாலமான ஆற்றின் மேலே ஒரு புள்ளியெனத் தோன்றியது.

திடீரென்று சீதா தனிமையில் விடப்பட்டாள்.

காற்று வீசியது. அது மழைத்துளிகளை அவள் முகத்தில் அறைந்தது. தண்ணீர் தீவைக் கடந்து பாய்ந்து சென்றது. தூரக் கரை இருந்தது. அது மழையினால் மறைக்கப்பட்டது. சிறு குடிசை இருந்தது; மரமும் இருந்தது.

அவள் சுறுசுறுப்பானாள்.கோழிகளுக்குத் தீனி போட வேண்டும். அவை தீனி தவிர வேறு எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. சிறிது தானியம், உருளைக்கிழங்குத் தோல், வேர்க்கடலைத் தோல் ஆகியவற்றை அவள் அவற்றிடம் வீசினாள்.

பிறகு அவள் துடைப்பம் எடுத்து குடிசையைப் பெருக்கினாள். கரி அடுப்பைப் பற்ற வைத்தாள். நாளை பால் இராது,” என்று நினைத்தாள்.

மலைகளிலிருந்து இடி உருண்டு இறங்கியது. பூம்-பூம்-பூம்…

சீதா நெடுநேரம் உள்ளே இருக்க முடியவில்லை. வெளியே போனாள். ஆற்றை ஊடுருவிப் பார்த்தாள். இப்போது அது அதிக அகலமாகத் தோன்றியது. அது கரைகளைத் தாண்டி, சமவெளியினூடே வெகு தூரம் பரவியிருந்தது. வெகு தூரத்தில், மக்கள் நீர் நிறைந்த, வெள்ளம் பரவிய வயல்கள் ஊடாகத் தங்கள் மாடுகளை ஒட்டிச் சென்றார்கள். தங்கள் உடைமைகளை மூட்டைகட்டித்தலைகளில் அல்லது தோள்களில் சுமந்தபடி, தங்கள் வீடுகளை விடுத்து, மேட்டு நிலம் தேடிப் போனார்கள்.

எங்கும் தண்ணிர் மயம். உலகமே ஒரு பெரிய ஆறு ஆகிவிட்டது. ஆற்றின் வனப்பகுதியில் நின்ற மரங்கள் கூட, நீரிலேயே முளைத்தெழுந்த சதுப்புநில மரங்கள் போல் தோன்றின.

சிறிது நேரத்தில் மரப்பலகைகள், சிறு மரங்கள் செடிகள், பிறகு ஒரு மரக் கட்டில் முதலியன தீவைக் கடந்து மிதந்து செல்வதை அவள் கண்டாள். சீதாவின் பயம் உறுதிப்பட்டது.

அவள் தனக்கு உணவு தயாரித்துக்கொள்ளத் தீர்மானித்தாள். வெளியே பார்த்தபோது, பாறைகளிடையே நீர் தேங்கிக்கிடப்பதை அவள் கண்டாள். அது மழைத் தண்ணிரா, ஆற்றுப் பெருக்கா என்று தெரிய வில்லை.

அவளுக்கு ஒரு எண்ணம் எழுந்தது. அறையின் ஒரு மூலையில் பெரிய தகரப்பெட்டி இருந்தது. அது சீதாவின் அம்மாவுக்கு உரியது. பயனுள்ள, மற்றும் மதிப்புள்ள பொருள்களை அதில் திணித்து, அதைக் கனமாக்கிவிட்டால்-ஆறு தீவுக்குள் வந்துவிட்டாலும் கூட-அது அடித்துச் செல்லப்படாமல் இருக்கும்….

தாத்தாவின் ஹூக்கா பெட்டிக்குள் போனது. பாட்டியின் கைத்தடியும் போயிற்று. அப்படியே பருப்பு, மசாலா வகைகள் கொண்ட சிறுசிறு டின்கள் பலவும் போயின. சீதா மரத்தின் மீது பல மணி நேரம் கழிக்க நேர்ந்தாலும் கூட, அவள் மீண்டும் கீழே வந்ததும் தின்பதற்கு ஏதேனும் இருக்குமே!

சீதா பெட்டியை நிரப்புவதில் தீவிரமாக இருந்ததால் குதிகால்களைக் குளிர்நீர் தொட்டதை அவள் கவனிக்கவேயில்லை. பெட்டியைப் பூட்டி, சாவியைப் பாறைச் சுவரில் உயரே இருந்த ஒரு பொந்தில் வைத்தாள். அதன் பிறகு தான் அவள் நீர் பரவிய தரையில் நடந்து கொண்டிருந்ததை உணர்ந்தாள்.

கண்டகாட்சி அச்சுறுத்தவும், அவள் அசைவற்று நின்றாள். தண்ணிர் கதவு விளிம்பு வழியாகக் கசிந்து அறைக்குள் புகுந்து கொண்டிருந்தது.

சீதா மற்ற அனைத்தையும் மறந்தாள். குடிசையைவிட்டு வெளியே பாய்ந்தாள். முழங்கால் அளவு நீரில் விரைந்து, அரச மரத்தின் பாதுகாப்பை நாடி ஒடினாள். தரையின் நன்கறிந்த சின்னமாக அந்த மரம் மட்டும் அங்கே இல்லையென்றால், அவள் ஆழமான தண்ணீரில், ஆற்றுக்குள், தவறி விழுந்திருப்பாள்.

மரத்தின் உறுதியான கிளைகளின் மீது அவள் வேகமாக ஏறினாள். பழக்கமான ஒரு கிளைமீது பாதுகாப்பாக அமர்ந்தாள். கண்ணில் விழுந்து மறைத்த சரக்கூந்தலை ஒதுக்கிவிட்டாள்.

*⁠*⁠*

அவசரமாக வந்ததற்காக அவள் சந்தோஷப்பட்டாள். இப்போது குடிசையை நீர் சூழ்ந்து கொண்டது. தீவின் மேட்டுப் பகுதிகள் மட்டுமே சில பாறைகள், குடிசை கட்டப்பட்டிருந்த பெரிய பாறை, சில செடிகள் முளைத்திருந்த சிறு குன்று ஒன்று-பார்வையில் பட்டன.

கோழிகள் குடிசையை விட்டு வெளியே வரவில்லை. அநேகமாக அவை படுக்கைச் சட்டத்தின் மேலே ஏறியிருக்கும்.

அசாதாரணப் பொருள்கள் நீரில் மிதந்து சென்றன-அலுமினிய கெட்டில், பிரம்பு நாற்காலி, பல்பொடி டப்பா, காலியான சிகரெட் பெட்டி, மரக் காலணி, பிளாஸ்டிக் பொம்மை…

தண்ணிர் மேலும் உயர்ந்திருந்தது. தீவு வேகமாக மறைந்து கொண்டிருந்தது.

ஏதோ ஒன்று குடிசைக்குள்ளிருந்து மிதந்து வெளிப்பட்டது.

அது ஒரு காலி மண்எண்ணெய்டப்பா. கோழி ஒன்று அதன் மேலே நின்றது. டப்பா தண்ணிரில் ஆடிஅசைந்தபடி, மரத்துக்குப் பக்கத்திலேயே வந்தது; நீரோட்டத்தில் சிக்கி, ஆற்றோடு இழுத்துச் செல்லப்பட்டது. கோழி இன்னும் அதில் தொத்தி நின்றது.

சற்று நேரத்துக்குப் பிறகு தண்ணிர் படுக்கையைத் தொட்டிருக்க வேண்டும். ஏனெனில் மீதமிருந்த கோழிகள் பாறை அடுக்கிற்குப் பறந்தன. அங்கிருந்த சிறு ஒதுக்கிடத்தில் ஒண்டின.

சீதா மேலும் சிறிது உயரே போனாள். கன்னங்கரிய காட்டுக் காகம் ஒன்று மேற்கிளைகளில் தங்கியிருந்தது. அங்கு காக்கைக் கூடு இருந்ததை சீதா பார்த்தாள். ஒரு கிளையின் கவட்டையில் சுள்ளிகள் தாறுமாறாக அடுக்கிவைக்கப்பட்ட ஒரு கூடு.

கூட்டில் நான்கு முட்டைகள். நீலப் பசுமை நிறமும் புள்ளிகளும் கொண்டவை. காகம் அவற்றின் மீது உட்கார்ந்து, வருத்தமாய்க்கத்தியது. காகம் துயரத்தோடு இருந்தபோதிலும், அது அங்கே இருந்தது சீதாவுக்கு உற்சாகம் ஊட்டியது. அவள் தனியாக இருக்கவில்லையே. யாரும் இல்லாமல் இருப்பதைவிட, துணைக்கு ஒரு காகம் இருப்பது மேல்தான்.

இதர பொருள்கள் குடிசைக்குள்ளிருந்து மிதந்து வந்தன-பெரிய பூசணிக்காய், தாத்தாவுக்குச் சொந்தமான சிவப்புத் தலைப்பாகை அது கட்டவிழ்ந்து நீளப் பாம்பு போல் நீரில் நெளிந்தது.

மரம் காற்றிலும் மழையிலும் ஆடியது. காகம் கத்தியது. மேலே பறந்தது. சிலமுறை மரத்தை வட்டமிட்டது. மீண்டும் கூட்டுக்குத் திரும்பியது. சீதா கிளையோடு ஒட்டிக்கொண்டாள்.

மரம் அடி முதல் நுனி வரை அதிர்ந்தது. சீதாவுக்கு அது பூமி அதிர்ச்சி மாதிரிப்பட்டது.

இப்போது ஆறு நெடுகிலும் அவளைச் சுற்றிச் சுழன்றது. குடிசையின் கூரையைத் தொட்டுவிட்டது. விரைவில் மண்சுவர்கள் இற்றுவிழுந்து மறையும். பெரிய பாறையையும் தூரத்தில் நின்ற சில மரங்களையும் தவிர, தண்ணிர் தான் பார்வைக்குப் புலனாயிற்று.

நெட்டையான பழைய அரசமரம் நெட்டுயிர்த்தது. அதன் நீண்டு சுருண்ட வேர்கள் கெட்டியாய் தரையைப் பற்றியிருந்தன. ஆனால் மண் இளகிக் கொண்டிருந்தது. கற்கள் நீரில் அடிபட்டுச் சென்றன. வேர்கள் வேகமாய்த் தங்கள் பிடியை இழந்தவாறிருந்தன.

ஏதோ கோளாறு என்று காகம் அறிந்திருக்க வேண்டும். அது மேலே பறந்து போய், மரத்தையே வளையமிட்டது. அதில் உட்காரவும் மனமின்றி, பறந்து போகவும் விரும்பாமல் தவித்தது.

சீதாவின் ஈர நூல் ஆடை அவளது மெலிந்த உடலோடு ஒட்டிக் கொண்டது. மழைநீர் அவளது நீண்ட கருங்கூந்தலிலிருந்து வடிந்தது. அது மரத்தின் ஒவ்வொரு இலையிலும் வழிந்தது. காகமும் நனைந்து நீர் சொட்டியது.

மரம் பெருமூச்சு விட்டு, மீண்டும் அசைந்தது. கீழிருந்து மண் திரண்டு புரண்டது. மரம் அசைந்ததும், அது சரிந்தது; மெதுவாக முன்னே அசைந்தது, பக்கத்துக்குப் பக்கம் சிறிது திரும்பியது. தரைமீது தன் வேர்களை இழுத்தபடி நகர்ந்தது. ஆற்றின் மைய ஒட்டத்தினுள் அது நழுவியது.

*⁠*⁠*

அவளைச் சுற்றிலும் கிளைகள் ஆடின. ஆயினும் சீதா தன் பிடியை விட்டுவிடவில்லை. இப்போது தண்ணிர் வெகு அருகில் இருந்தது. அவள் பயந்து போனாள். வெள்ளத்தின் பரப்பையோ, ஆற்றின் அகலத்தையோ அவளால் பார்க்க முடியவில்லை. உடனடி அபாயத்தை, தண்ணீர் தன்னைச் சூழந்து கொண்டிருப்பதை மட்டுமே அவள் காணமுடிந்தது.

காகம் மரத்தைச் சுற்றிப் பறந்தது. அது கடும் கோபம் கொண்டிருந்தது. அதன் கூடு இன்னும் கிளைகளிலேயே இருந்தது – ஆனால் நெடுநேரம் இராது. மரம் புரண்டது, ஒரு பக்கமாய்ச் சாய்ந்தது. கூடு நீரில் விழுந்தது. முட்டைகள் ஒவ்வொன்றாய் விழுவதை சீதா பார்த்தாள்.

காகம் நீருக்கு மேலே தணிவாய்ப்பறந்தது. ஆனாலும் அது செய்வதற்கு ஒன்றுமில்லை. சில நொடிகளில் கூடு மறைந்து விட்டது.

பறவை சற்றுத்தூரம் மரத்தைத் தொடர்ந்தது. அதில் ஏதேனும் தங்கியிருக்கும் என்று அது எண்ணியது போலும், பிறகு, சிறகுகளை அடித்தபடி, அது ஆகாயத்தில் மேலெழும்பி, ஆற்றைக் கடந்து பறந்து மறைந்தது.

சீதா மீண்டும் தனிமைப்பட்டாள். ஆனால் தனிமையை உணர அவளுக்கு நேரமில்லை. எல்லாம் ஆட்டத்தில் இருந்தது-மேலும் கீழுமாய், பக்கவாட்டிலும் முன்னேயுமாய், விரைவில் மரம் குப்புறக் கவிழும். நான் தண்ணிரில் விழுவேன்” என்று அவள் நினைத்தாள்.

தூரத்தில், வெள்ளத்தில் சிக்கிய ஒரு ஊரையும், ஆட்கள் படகுகளில் செல்வதையும் அவள் பார்த்தாள். ஆனால் அவர்கள் வெகு தொலைவில் இருந்தார்கள். அதன் பெரிய அளவு காரணமாக, அந்த மரம் ஆற்றில் வெகு வேகமாய் நகரவில்லை. சில சமயம், ஆழமில்லாத நீரில் போன போது, அதன் வேர்கள் பாறைகளில் மாட்டிக்கொள்ள, அது நின்றது. ஆனால் நெடுநேரம் அல்ல. ஆற்றின் ஒட்டம் அதை விரைவில் அடித்துச் சென்றது.

ஒரு இடத்தில், ஆற்றின் ஒரு வளைவில் மரம் ஒரு மணல்மேட்டில் தட்டி நின்றுவிட்டது.

சீதா மிகக் களைத்திருந்தாள். அவள் புஜங்கள் வலித்தன. அவள் நேராக நிமிர்ந்திருக்கவில்லை. மரம் பெரும்பாலும் ஒரு பக்கமாய் சாய்ந்திருந்ததால், அவள் கீழே விழாமல் இருப்பதற்காகக் கிளையை இறுகப் பற்றிக் கிடக்க நேர்ந்தது. மழை இன்னும் பெய்தது.

அப்போது தான் யாரோ கூப்பிடுவதை சீதா கேட்டாள். நதியின் முன்புறம் பார்ப்பதற்காக அவள் கழுத்தை வளைத்தாள். தன்னை நோக்கி ஒரு சிறு படகு வருவதை அவள் புரிந்து கொள்ள முடிந்தது.

அந்தப் படகில் ஒரு பையன் இருந்தான். அவன் படகை மரத்துக்கு அருகில் கொண்டு வந்தான். ஊன்றுவதற்காக ஒரு கையால் கிளைகளில் ஒன்றைப் பிடித்தபடி, மறு கையைச் சீதாவிடம் நீட்டினான்.

அவள் அவன் கையைப் பற்றி படகுக்குள் நழுவினாள். அவன் தன் காலை அடிமரத்தில் ஊன்றி, படகைத் தள்ளினான்.

சின்னப் படகு ஆற்றோடு வேகமாய்ப் போனது. பெரிய மரம் மிகப் பின்தங்கிவிட்டது. சீதா அதை மறுபடி பார்க்கவே மாட்டாள்.

*⁠*⁠*

அவள் படகில் படுத்துக் கிடந்தாள். பேச இயலாதபடி பயந்திருந்தாள். பையன் அவளைப் பார்த்தான். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. அவன் புன்னகை புரியவுமில்லை. அவன் தனது இரு சிறிய துடுப்புகள் மீதும் கவிழ்ந்து, படகு நடு ஆற்றுக்குப் போய்விடாதபடி கவனமாக, நிதானமாகத் தள்ளினான். படகு வேக நீரோட்டத்தில் செல்லாது தடுப்பதற்குப் போதிய பலம் அவனுக்கில்லை. ஆனாலும் அவன் பெரிதும் முயன்றான்.

அவன் இறுதியில், துடுப்புகளை நிறுத்திவிட்டுச் சொன்னான்: “நீ தீவில் தானே வசிக்கிறாய் சில நேரங்களில் நான் உன்னை பார்த்திருக்கிறேன். மற்றவர்கள் எங்கே? அவன் படகைச் சற்றே அதன் போக்கில் விட்டிருந்தான். ஏனெனில், ஆற்றின் அதிக விசாலமான, அதிக அமைதியுள்ள பரப்பை அடைந்திருந்தான்.

“என் பாட்டிக்கு சீக்கு, தாத்தா அவளை ஷாகன்ஞ்சில் இருக்கும் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போயிருக்கிறார்” என்று சீதா சொன்னாள்.

“நீ எங்கிருந்து வருகிறாய்” என்று கேட்டாள். ஏனெனில் அவள் அவனை இதற்கு முன் பார்த்ததேயில்லை.

“மலையடிவாரத்தில் ஒரு ஊரிலிருந்து ஊரில் வெள்ளம் புகுந்து விட்டது என்பதை ஆற்றின் அக்கரையில் இருப்பவர்களிடம் சொல்வதற்காக நான் என் படகில் வந்தேன். ஆனால் நீரின் வேகம் வெகு அதிகம். அது என்னை உன் தீவுக்கு அருகாக இழுத்து வந்தது. நாம் ஆற்றுடன் போராட முடியாது. அது நம்மை எங்கே எடுத்துச் செல்கிறதோ அங்கே போக வேண்டியது தான்.”

அவன் ஒரு துடுப்பைப் பற்றியிருந்தான். மறுகையால் இருப்பிடத்தின் கீழே துழாவினான். அங்கு சிறு கூடை இருந்தது. அதிலிருந்து இரண்டு மாம்பழங்கள் எடுத்தான். ஒன்றை சீதாவுக்குக் கொடுத்தான்.

பழுத்து சதையோடிருந்த மாம்பழங்களை அவர்கள் கடித்துச் சுவைத்தார்கள். பற்களால் தோலை அகற்றினார்கள். இனிய சாறு அவர்கள் மோவாய் வழியே சொட்டியது. பழத்தின் வாசனை ரம்மியமாக இருந்தது. சீதா மாம்பழம் தின்று ஒரு வருடத்துக்கு மேலாகியிருந்தது. சில கணங்கள் அவள் ஆற்றை மறந்திருந்தாள்-மாம்பழத்தில் பூரணமாக லயித்துவிட்டாள்.

படகு மிதந்து சென்றது. ஆனால் முன்போல் வேகமாக அல்ல. மலைப் பக்கமிருந்து தள்ளிப்போகப் போக, ஆறு தனது சக்தியையும் சீற்றத்தையும் அதிகம் இழந்துவிட்டது.

“என் பெயர் கிருஷ்ணன்” என்றான் பையன். “என் அப்பா நிறைய பசுக்களும் எருமைகளும் வைத்திருக்கிறார். ஆனால் பல வெள்ளத்தோடு போய்விட்டன.”

“நீ பள்ளிக்கூடம் போகிறாயா?” என்று சீதா கேட்டாள்.

ஆமாம். நான் பள்ளிக்கூடம் போவது உண்டு. எங்கள் ஊருக்கு அருகில் ஒன்று இருக்கிறது. நீ பள்ளிக்குப் போக வேண்டுமா?”

“இல்லை-எனக்கு வீட்டில் வேலை மிக அதிகம்.”

அவள் வீட்டுக்கு ஆசைப்பட்டுப் பயனில்லை-இனி அங்கே வீடு எதுவும் இராது!

“மரங்கள் நிற்கும் இடத்துக்குப் போக முயல்வோம். நாம் இரவுப் பொழுதில் ஆற்றிலே இருக்கமுடியாது.” என்றான் அவன்.

எனவே மரங்களை நோக்கிப் படகை தள்ளினான். பத்து நிமிடங்கள் சிரமப்பட்ட பிறகு, ஆற்றின் ஒரு வளைவை அடைந்தான். ஆற்றின் மைய நீரோட்டத்திலிருந்து அவர்கள் தப்புவது சாத்தியமாயிற்று.

விரைவில் அவர்கள் ஒரு காட்டில் இருந்தார்கள். நெடிய பசும் மரங்களுக்கிடையே படகு சென்றது.

கிருஷ்ணன் சொன்னான்: “நாம் படகை இங்கு ஒரு மரத்தில் கட்டி வைப்போம். அப்புறம் ஒய்வெடுக்கலாம். நாளை நாம் காட்டை விட்டு வெளியேற வழி காண்போம்.”

அவன் படகின் அடியிலிருந்து நீளக் கயிறு ஒன்றை எடுத்தான். அதன் ஒரு நுனியைப் படகின் பின்பக்கம் கட்டினான். மறுமுனையைத் தண்ணிருக்குச் சிறிதளவே உயர்ந்து தொங்கிய கனமான கிளை ஒன்றின் மேல் வீசி முடிந்தான். படகு அடிமரத்தை ஒட்டி அமைதியாக நின்றது.

இரவில் வனவிலங்குகள் வெளிப்பட்டு நகர்ந்தன. பொந்துகள், குகைகள், வளைகளிலிருந்து வெள்ளத்தால் துரத்தப்பட்ட பிராணிகள் பாதுகாப்பையும் வறண்ட தரையையும் தேடித் திரிந்தன.

ஒரு பெரிய மலைப்பாம்பு நீரில் நீந்தித் தங்களை நோக்கி வருவதை சீதாவும் கிருஷ்ணனும் கண்டார்கள். அது படகினுள் வரக்கூடும் என்று சீதா பயந்தாள். ஆனால் அது அவர்களைகக் கடந்து சென்றது. தலை நீருக்கு மேலிருக்க, அதன் பெரிய நீண்ட பகுதி பின்னே இழுபட நீந்திய அது கரும் நிழல்களிடையே மறைந்தது.

ஒரு பெரிய சாம்பர் மான் தண்ணிரைச் சிதறியடித்து வந்தது. அது நீந்த நேரவில்லை. அது மிக உயரம், அதன் தலையும் தோள்களும் நீருக்கு மேலாகவே இருந்தன. அதன் கொம்புகள் பெரியன, அழகானவை.

“இதர மிருகங்களும் வரும். புலி கூட வரும். நாம் மரத்தின் மேல் ஏறிக்கொள்ளலாமா?” என்று சீதா கேட்டாள்.

“படகில் நாம் பத்திரமாக இருப்போம். நீபடுத்துத் துாங்கு. நான் காவல் காப்பேன்” என்று கிருஷ்ணன் சொன்னான்.

சீதா படகில் படுத்துக் கண்களை மூடினாள். படகின் புறங்களில் தட்டிச் சென்ற நீரின் ஒசை அவளைத் தாலாட்டி விரைவில் உறங்க வைத்தது. ஒரு சமயம், ஏதோ ஒரு பறவை தலைக்கு மேலே கூவியபோது, அவள் கண்விழித்தாள். தலையைத் தூக்கிப் பார்த்தாள். கிருஷ்ணன் விழிப்போடிருந்தான், படகின் முன்புறம் இருந்த அவன், அவளுக்கு நம்பிக்கை தரும் விதத்தில் முறுவலித்தான்.

கிருஷ்ணன் படகின் அடிப்பாகத்தில் படுத்துத் தூங்கினான். மேல் நோக்கிய அவன் முகத்தில் ஒரு இலை விழுந்தது. அது அவனை எழுப்ப வில்லை. அவன் கன்னத்தின் மேல் அது கிடந்தது, அங்கேயே முளைத்திருந்தது போல.

முடிவாக அவன் கண்விழித்தான்-கொட்டாவி விட்டான், சோம்பல் முறித்தான்; சீதாவின் பக்கத்தில் உட்கார்ந்தான்.

“தண்ணிர் மேலும் அதிகரிக்கவில்லை. ஆனால் எனக்குப் பசிக்கிறது” என்று கூறினான்.

“எனக்கும் தான்” என்றாள் சீதா.

அவன் கடைசியாக இருந்த இரண்டு மாம்பழங்களை எடுத்துக் கூடையைக் காலி செய்தான். கடைசி மாம்பழங்கள்” என்றான்.

தின்று முடித்ததும், கிருஷ்ணன் படகை மரங்களினூடாகச் செலுத்தினான். வெள்ளம் நிறைந்த காட்டில் சுமார் ஒரு மணி நேரம் அவர்கள் மிதந்து சென்றார்கள். மழையில் குளித்த மரங்களின் கிளைகளிலிருந்து அவர்கள் மீது நீர் சொட்டியது. சில கொடிகளையும் கிளைகளையும் அவர்கள் துடுப்புகளினால் தள்ள நேரிட்டது. சிலவேளை, நீரில் மூழ்கியிருந்த செடிகள் அவர்களைத் தடுத்தன. ஆயினும் மதியத்துக்கு முன் அவர்கள் காட்டை விட்டு வெளியேறினார்கள்.

தொலைவில் ஒரு ஊர் தெரிந்தது. அது மேட்டின் மீதிருந்தது. அவர்கள் வெள்ளம் பரவிய வயல்கள் மீது படகில் போனார்கள். வரவர ஆழம் குறைந்தது.

அந்தக் கிராமத்தின் மக்கள் அன்புடன் உதவினர். சீதாவுக்கும் கிருஷ்ணனுக்கும் உணவும் பாதுகாப்பும் தந்தார்கள். சீதா தன் தாத்தா வையும் பாட்டியையும் காண தவித்தாள். ஷாகன்ஞ் நகருக்கு வேலையாகச் செல்லவிருந்த ஒரு முதிய விவசாயி அவளைத் தன்னுடன் கூட்டிச் செல்ல முன் வந்தான்.கிருஷ்ணனும் தன்னோடு வருவான் எனஅவள் நம்பினாள். ஆனால் அவன் கிராமத்தில் காத்திருப்பதாகக் கூறினான். மற்றும் பலர் அங்கு வருவார்கள், அவர்களிடையே தன் சொந்தக்காரர்களும் இருப்பர் என அவன் அறிவான்.

“இனி உனக்கு கஷ்டம் இல்லை. உன் தாத்தாவை நீ சீக்கிரமே கண்டாக வேண்டும். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் தண்ணிர் வற்றிவிடும். நீங்கள் தீவுக்குத் திரும்பி விடலாம்” என்று அவன் சொன்னான்.

“அந்தத் தீவு அங்கே இருந்தால்” என்றாள் சீதா.

விவசாயியின் மாட்டுவண்டியில் அவள் ஏறியதும், அவளிடம் கிருஷ்ணன் ஒரு புல்லாங்குழல் கொடுத்தான்.

“இதை எனக்காக வைத்திரு. இதைப் பெற ஒரு நாள் நான் வருவேன்” என்றான். அவள் தயங்குவதைக் கண்டதும், அவன் சொன்னான். இது ஒரு நல்ல குழல்!”

*⁠*⁠*

மாட்டுவண்டி மெதுவாகத்தான் போயிற்று. கிராமத்து சாலைகள் பெரும்பாலும் அழிந்திருந்தன. வண்டிச் சக்கரங்கள் சேற்றில் சிக்குண்டன. குடியானவனும் அவன் பெரிய மகனும், சீதாவும்.அடிக்கடி கீழே இறங்கி, கிறீச்சிடும் பெரிய மரச் சக்கரங்களை மேலே தூக்கித் தள்ளிவிட நேரிட்டது. காளைகள் உடல் முழுதும் சேறு தெறித்திருந்தது. சீதாவின் கால்களிலும் அது அப்பியிருந்தது.

ஒரு பகலும் ஒரு இரவும் வண்டியில் பயணம் செய்து அவர்கள் ஷாகன்ஞை அடைந்தார்கள். அதற்குள், சீதா அடையாளம் தெரியாதபடி மாறியிருந்தாள். சுறுசுறுப்பான சந்தை நகரின் குறுகிய கடைவீதியில் அவள் நடந்தான்.

தாத்தா அவளைக் கண்டு கொள்ளவில்லை. அவர் நேரே பார்த்தபடி நிமிர்ந்து நடந்து சென்றார். துளசி படிந்து தலைமுடி குலைந்து காணப்பட்ட சிறுபெண்ணைக் கடந்து போயிருந்திருப்பார் அவர். ஆனால் அவள் நேரே அவருடைய மெலிந்து தள்ளாடிய கால்களில் பாய்ந்து, அவரை இடுப்பை வளைத்துக் கட்டிப்பிடித்தாள்.

அவர் தன்னிலை பெற்று மூச்சுவிடத் தொடங்கியதும், “சீதா!” எனக் கூவினார். “நீ இங்கே எப்படி வந்தாய்? ஏன் தீவை விட்டு வந்தாய்? அங்கிருந்து எப்படி வெளிப்பட்டாய்? எனக்கு ஒரே கவலை-சென்ற இரண்டு நாட்களாக நிலைமை மோசம்….”

“பாட்டி?” என்று சீதா கேட்டாள்.

அப்படிக் கேட்டபோதே, பாட்டி தங்களை விட்டுப் போய்விட்டாள் என அவள் அறிந்தாள். தாத்தாவின் வெறித்த பார்வை அவளுக்கு அதைப் புலப்படுத்தியது. அவள் அழ விரும்பினாள்-மேலும் துன்பம் அனுபவிக்க வேண்டாத பாட்டிக்காக அல்ல; மிக உதவியற்று, குழப்பமுற்றுக் காணப்பட்ட தாத்தாவுக்காக, ஆனால் அவள் தன் கண்ணிரை அடக்கிக் கொண்டாள். அவரது நரம்புகளோடிய, நடுங்கும் கரங்களைப் பற்றி, நெருக்கடியான தெருவில் அவரை நடத்திச் சென்றாள். வரவிருக்கும் காலத்தில் அவர் அவளையே நம்பி வாழ்வார் என்பதை அவள் அப்போதே உணர்ந்தாள்.

சில தினங்களுக்குப் பிறகு அவர்கள் தீவுக்குத் திரும்பினார்கள். ஆற்றில் வெள்ளம் இல்லை. மேலும் மழை பெய்தது. ஆனால் அபாய நிலை நீங்கிவிட்டது. தாத்தாவிடம் இரண்டு வெள்ளாடுகள் எஞ்சியிருந்தன. ஒரு ஆட்டை விற்றதே செலவுகளுக்குப் போதுமானதாக இருந்தது.

தீவிலிருந்து அரசமரம் போய்விட்டதைக் கண்டதும், அவருக்குத் தன் கண்களையே நம்பமுடியவில்லை-தீவின் கற்பாறைகளைப் போல் நிலையானதாய் தோன்றிய மரம் அது; ஆற்றைப் போலவே அதுவும் அவர்கள் வாழ்வின் ஒரு பகுதியாக இருந்தது. சீதா தப்பிப்பிழைத்ததை எண்ணி அவர் அதிசயித்தார்.

“அந்த மரம் தான் உன்னைக் காப்பாற்றியது” என்று அவர் சொன்னார்.

“அந்தப் பையனும்” என்றாள் சீதா.

அந்தப் பையனை நினைத்தாள் அவள். அவள் திரும்பவும் அவனை பார்க்க முடியுமா என எண்ணினாள். ஆனாலும் அவள் அடிக்கடி அவனை நினைக்கவில்லை. அவள் செய்தாக வேண்டிய வேலைகள் மிக அதிகமிருந்தன.

கோணிப்பைகளைக் கொண்டு அமைத்த ஒழுங்கற்ற ஒரு தடுப்பின் கீழேதான் அவர்கள் மூன்று இரவுகள் தூங்கினார்கள். பகலில் குடிசையைப் புதுப்பிக்க அவள் தாத்தாவுக்கு உதவினாள்.

அவள் கவனத்துடன் நிரப்பிய பெட்டி நீரால் இழுத்துச் செல்லப் படவில்லை. ஆனால் தண்ணிர் அதனுள் புகுந்திருந்தது. உணவும், துணி களும் கெட்டுப் போயின. எனினும் தாத்தாவின் ஹல்க்கா சேதமுற வில்லை. மாலை வேளைகளில், வேலை முடிந்த பிறகு, சீதா தயாரித்த சிற்றுண்டியை உண்ட பின், அவர் பழைய திருப்தியோடு புகை பிடிப்பார்.

சீதா, அரச மரம் நின்ற அதே இடத்தில், ஒரு மாங்கொட்டையை விதைத்தாள். அது முளைத்துப் பெரிய மரமாக வளர அநேக வருடங்கள் ஆகும். ஆனாலும், அதன் கிளைகளில் அமர்ந்து அதன் பழங்களை அவள் தின்று மகிழும் ஒரு நாளை சீதா கற்பனை செய்து களித்தாள்!

மெதுவாக மழை ஒய்ந்தது. கிராமங்களில் மக்கள் மறுபடியும் நிலத்தை உழுது, குளிர் காலத்திற்கான புதிய பயிர்களை நடத் தொடங்கினார்கள். மாட்டுச் சந்தைகளும், குத்துச் சண்டைகளும் நடந்தன. பகல் நேரங்கள் வெப்பத்தோடு புழுக்கமாய் இருந்தன. ஆற்றில் தண்ணிர் கலங்கலாக இல்லை. ஒரு மாலையில் தாத்தா பெரிய மாவுதிர் மீனைப் பிடித்தார். சீதா அதை ருசியான கறியாக ஆக்கினாள்.

*⁠*⁠*

தாத்தா குடிசைக்கு வெளியே புகை பிடித்துக் கொண்டிருந்தார். சீதா தீவின் கடைகோடியில் பாறைகள் மீது துணிகளை உலர்த்தியவாறு இருந்தாள்.

அவளுக்குப் பின்னால் மெல்லிய காலடி ஒசை எழுந்தது. அவள் திரும்பிப் பார்த்தாள். அங்கே கிருஷ்ணன் சிரித்தபடி நின்றான்.

“நீ வரவே மாட்டாய் என்று நினைத்தேன்” என்றாள் சீதா.

“எங்கள் ஊரில் நிறைய வேலை இருந்தது. என் புல்லாங்குழலை நீ வைத்திருக்கிறாயா?”

“ஆமாம். ஆனால் நான் அதைச் சரியாக வாசிக்க முடியவில்லை.”

“நான் உனக்குக் கற்றுத் தருவேன்” என்று கிருஷ்ணன் கூறினான்.

அவன் அவள் அருகில் அமர்ந்தான். இருவரும் தங்கள் கால்களை நீரில் நனைத்தார்கள். தண்ணிர் இப்போது தெளிவாக இருந்தது. அதில் நீல வானம் பிரதிபலித்தது. ஆற்றுப் படுகையின் மணலையும் சிறு கற்களையும் நன்கு பார்க்க முடிந்தது.

“சில வேளை ஆறு கோபமாகவும், சில வேளை அன்பாகவும் இருக்கிறது” என்றாள் சீதா.

நாம் ஆற்றைச் சேர்ந்தவர்கள் என்று கிருஷ்ணன் சொன்னான்.

அது ஒரு நல்ல ஆறு. ஆழமானது. வலியது. மலைகளில் தொடங்கி, கடலில் முடிந்தது.

அதன் கரைகளில், பல நூறு மைல்களுக்கு, லட்சக் கணக்கான மக்கள் வசித்தார்கள். சீதா அவர்களில் ஒரு சிறு பெண். அவளைப் பற்றி எவரும் கேள்விப்பட்டதில்லை. அந்தக் கிழவர், பையன், ஆறு தவிர வேறு எவரும் அவளை அறிந்ததும் இல்லை.

– ஸ்கின் பாண்ட், ஆங்கிலக் கதை.

– சிறந்த கதைகள் பதிமூன்று, 13 இந்திய மொழிகளிலிருந்து சிறந்த கதைத்தொகுப்பு, முதற் பதிப்பு: 1935, தமிழில்: வல்லிக்கண்ணன், நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *