கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 1, 2022
பார்வையிட்டோர்: 5,223 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓல்கா நதிக் கரையில் அமைந்த ஒரு நகரத்தின் விபச்சார விடுதியொன்றில் வாஸ்கா என்ற நாற்பது வயது மனிதன் வேலை பார்த்து வந்தான், அவனுக்கு ‘சிவப்பன்’ என்ற பட்டப் பெயரும் உண்டு. கனத்துத் தோன்றும் அவனது முகத்தின் பச்சை மாமிச நிறமும், ஒளி நிறைந்த செம்பட்டைச் சிகையுமே, இந்தப் பட்டப் பெயருக்குக் காரணங்கள்.

தடித்த உதடுகள்; சருவச் சட்டியின் கைப்பிடியைப் போல, கபால மூலத்திலிருந்து துருத்தி நிற்கும் பெரிய காதுகள்; ஒளியற்ற தன் சிறு கண்களில் கொடூர பாவம் தெறிக்க, அவன் பிறரைப் பார்க்கும் பார்வை; தடித்து மதமதர்த்த உடற்கட்டு அவனுக்கு இருந்த போதிலும் சதைக்குள் புதைந்து பனிக்கட்டித் துண்டுகள் போல் ஒளிரும் அந்தக் கண்களில் அகோரப் பசிவேட்கையே தென்பட்டுக் கொண்டிருக்கும். குள்ளமும் குண்டுமாயிருந்த வாஸ்கா , நீலநிற ‘கோசாக் கோட்டும், அகன்ற கம்பளிக் கால்சராயும், மெல்லிய கோடிட்ட பூட்ஸுகளும் மாட்டியிருந்தான். அவனுடைய செம்பட்டைத் தலைமயிர் சுருள் சுருளாக வளர்ந்திருந்தது. அவன் தொப்பி வைத்துக்கொண்டால், அவை தொப்பி யோரங்களில் சுருண்டெழுந்து, சிவப்புப் பூக்கள் போல அழகு காட்டிக்கொண்டிருக்கும்.

அவனுடைய தோழர்கள் அவனை ‘சிவப்பன்’ என்று அழைத்தார்கள்; அங்குள்ள பெண்கள் அவனைக் கொலை காரன்’ என்று அழைத்தார்கள். காரணம், அவன் அவர் களைச் சித்திரவகை செய்ய விரும்புவான். அந்த நகரில் பல வகைப் படிப்புப் பெற்றவர்களின் கழகங்கள் பல உண்டு; வாலிபர்களும் அதிகம். எனவே, அந்த வட்டாரம் முழு வதிலும் பல விபச்சார விடுதிகள் தெருத் தெருவாக, வரிசை வரிசையாக இருந்தன. அந்த விடுதிகளிலெல் லாம் வாஸ்கா அறிமுகமான பேர்வழி. அவனுடைய பெயரைக் கேட்டாலே அங்குள்ள பெண்களுக்குக் கிலி உண்டாகும். அவர்களுக்கும், விடுதித் தலைவிக்கும் ஏதா வது சண்டை மூண்டால் உடனே தன் எதிராளியைப் பார்த்துத் தலைவி பயமுறுத்திச் சொல்வாள் :

“இங்கே பார் . என் பொறுமையைச் சோதிக்காதே இல்லையென்றால் நான் சிவப்பனைக் கூப்பிடுவேன்”

சமயங்களில் இந்தப் பயமுறுத்தலே தலைவியின் காரியத்தைச் சாதிப்பதற்கும், பெண்கள் அடங்கிப் போவதற்கும் போதுமானதாகும். அவர்கள் காரியங்கள் எல்லாம் அநேகமாக நியாயமான கோரிக்கைகளாகவே இருக்கும்.

நல்ல உணவுக்காக, அல்லது காற்று வாங்குவதற்கு வெளியில் சென்று வர – இப்படி ஏதாவது கோரிக்கை தான். வெறும் பயமுறுத்தல் மட்டும் பலனளிக்கவில்லை யானால், விடுதித் தலைவி வாஸ்காவுக்கு ஆள்மூலம் சொல்லி அனுப்புவாள்.

வாஸ்கா அவசரமே அற்ற மனிதன் போல் நிதான மாக வருவான், தலைவியின் அறைக்குள் சென்று தாளிட் டுக் கொள்வான். தலைவி தண்டிக்கப்பட வேண்டிய பெண்களின் பெயர்களை வரிசையாக ஒப்பிப்பாள். அவன் வாய்திறந்து ஒரு வார்த்தையேனும் பேசாது, முற்றும் கேட்டு விட்டுக் கடைசியில் பதில் சொல்வான்.

“சரி, ஆகட்டும்.”

பிறகு அவன் அந்தப் பெண்களிடம் வருவான் அந்தப் பெண்கள் பயத்தால் வெளுத்து வெலவெலத்துப் போவார்கள். அவன் அந்தப் பயத்தைக் கண்டு ஆனந்திப் பான். அந்தப் பெண்கள் சமையலறையில் இருந்து உணவோ தேநீரோ அருந்திக் கொண்டிருக்கும் சமயமா விருந்தால், அவன் வாசல் நடையில் சாய்ந்து அசைவற்ற சிலையைப் போல் அவர்களையே பார்த்துக் கொண்டிருப் பான், அந்தப் பெண்களுக்குத் தாம் அனுபவிக்கப் போகும் துன்பங்களை விட அந்தப் பார்வையின் ஒவ் வொரு கணமுமே துயருறுத்துவதாக இருக்கும். ஒரு கணம் அப்படியே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, அவன் வாய்விட்டு அழைப்பான் :

“மாஸ்கா, வா இங்கே”

“வாஸிலி மிரோனிச் , என்னைத் தொடாதே. தொட் டால், நான் என் தொண்டையை நெரித்து விடுவேன்…” என்று அந்தப் பெண் சமயங்களில் அழுத்தமாகவும் கண்டிப்பாகவும் சொல்லுவாள்.

“சீ, முட்டாள் / வா இங்கே. உனக்கு நானே கயிறு தருகிறேன்.” வாஸ்கா கொஞ்சங்கூடத் தயக்கமே இல்லாது சொல்லுவான். குற்றவாளிகள் தாமாகவே தன்னிடம் வர வேண்டும் என்பது அவன் விருப்பம்.

“நான் உதவி கோரிக் கூச்சலிடுவேன்! ஜன்னல்களை உடைத்தெறிவேன்.”

அந்தப் பெண் பயத்தால் தொண்டை யடைக்க, தான் செய்ய வேண்டியவற்றை ஒரு கணம் நினைத்துப் பார்ப்பாள்.

“ஜன்னலை மாத்திரம் உடை, பார்ப்போம். உடைந்த கண்ணாடி முழுவதையும் உன்னையே தின்ன வைக்கிறேன்” என்பான் வாஸ்கா.

பல தடவைகளில், அந்தப் பெண்ணே தனது பிடிவாதத்தைக் கைவிட்டு அந்தக் ‘கொலைகாரனை’ நெருங்குவாள். அவள் வர மறுத்தால், வாஸ்காவே அவளிடம் நெருங்கிச் சென்று அவள் தலைமயிரைப் பற்றிப் பிடித்திழுத்து, தரையில் மோதியெறிவான். அவளைப் போலவே மனஉணர்ச்சி பெற்ற அவளுடைய தோழிகளே அவளுடைய கையையும் காலையும் கட்டி, அசைய வொட்டாது செய்ய, அந்தத் தோழியரின் கண்முன்னாலேயே குற்றவாளி சமையல் கட்டிலேயே உருட்டித் தள்ளப்பட்டு தண்டனையை அனுபவிப்பாள். அந்தப் பெண் மட்டும் உணர்ச்சி ஆவேசமுள்ளவளாயிருந்து, எதிர்த்துக் குற்றம் சாட்டுவதாயிருந்தால், தோலைப் பிய்த்தெறிந்து தடித்துப் போகாத வண்ணம் செய்யும் ஈரத் துணியால் சுற்றப்பட்ட பலத்த தோல்வாரால் விளாசப்படுவாள்.

கல்லும் மணலும் கலந்து பொதிந்த நீளத் துணிச் சுருளை களும் இதற்குப் பயன்படுத்தப்படும். இம் மாதிரியான துணிச் சுருளையைக் கொண்டு, பிருஷ்ட பாகத்தில் அடித்கால், காமையடி பலத்து விழுந்து, தாங்க முடியாத வேதனை புகுந்து பல நாள் அந்த ஸ்தானத்தில் நிலைத்து நிற்கும்……

தண்டனையின் குரூரம் குற்றவாளியின் குணத்தைப் பொறுத்ததல்ல; சிவப்பனின் மன இரக்கத்தையும், குற்றத்தின் தன்மையையும் பொறுத்ததே. சமயங்களில் எந்த வித முன்னேற்பாடுகளும் இல்லாமல், ஈவிரக்கமின்றித் தன்னை எதிர்த்துப் போராடும் பெண்களை விளாசித் தள்ளி விடுவான். அவனுடைய கால் சராய்ப் பையில் எப்போதும் மூன்று கவருள்ள ஒரு சாட்டை இருக்கும்; சாட் டையின் மரக் கைப்பிடி பழகிப் பழகி மெருகேறிப்போ யிருக்கும். சவுக்குக் கவர்களில் மெல்லிய கம்பிகளும் சேர்த்துப் பின்னப்பட்டு, முனையில் ஒரு குஞ்சம் போலத் தொங்கும். அதனால், அந்தச் சவுக்கின் முதல் சொடுக்கி லேயே அது தோலைப் பிய்த்திறங்கி, உள்ளெலும்பைத் தொட்டுப் பார்க்கும். பியந்து போன பாகத்திலுள்ள வேதனையை அதிகமாக்குவதற்காக, மசாலாவாவது, உப்புத் தண்ணீரில் நனைத்த துணியாவது காயத்தின் மேலே போடப்படும்.

அந்தப் பெண்களைத் தண்டிக்கும் போது, வாஸ்கா எந்தவித உணர்ச்சியையும் காட்டிக் கொள்ள மாட்டான். கடினசித்தமும் அமைதியும் எப்போதும் அவனிடம் ஒன்று போலவே இருக்கும்; அவன் கண்களிலுள்ள அகோரப் பசியும் தணிந்திருக்காது. சமயங்களில் அந்தப் பசி அதிகரித்துத் தீக்ஷண்யமாகப் பிரதி பலிக்கவும் செய்யும்.

தண்டனை முறைகள் இத்துடன் நின்று விடுவதில்லை. புதுப் புது முறைகளைக் கண்டு பிடித்துக் கொண்டிருப்பதில் வாஸ்கா சளைத்தவனல்ல. தண்டனை முறைகளைக் கண்டு பிடிப்பதில் அவன் தனது சிருஷ்டி சக்தியின் சிகரத்துக்கே சென்று விடுவான்.

உதாரணமாக, அந்த விடுதிகளில் ஒன்றிலிருந்து வீரா கோப்டெவா என்ற பெண்ணின் கதையைப் பார்க்க லாம். வந்திருந்த விருந்தாளியிடமிருந்து ஐயாயிரம் ரூபிள் களைத் திருடி விட்டதாக அவள் மீது சந்தேகம். சைபீரிய வியாபாரியான அந்த விருந்தாளி, தான் வீராவின் அறையில் வீராவுடனும், ஸாராஷெர்மான் என்ற இன் னொரு ஜோடியுடனும் இருந்ததாகப் போலீஸில் தாக்கல் செய்தான். அன்றிரவு ஒரு மணி நேர காலத்துக்குப் பின் ஸாரா போய் விட்டதாகவும், மீதிப் பொழுதையும் தான் வீராவுடனேயே கழித்ததாகவும், அவளை விட்டுப் பிரிந்த நேரத்தில், தான் குடிவெறியில் இருந்ததாகவும் பிராது பண்ணினான்.

வழக்கு தன் போக்கில் சென்றது. விசாரணை நடந்து கொண்டேயிருந்தது. பிரதிவாதிகள் இருவரும் ஜெயிலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். முடிவில் தக்க சாட்சிய மில்லாததால், கேஸ் தள்ளுபடி செய்யப்பட்டது.

அந்தப் பெண்கள் தங்கள் எஜமானியிடம் திரும்பி வந்ததும், இன்னொரு விசாரணை ஆரம்பமாயிற்று. எஜ மானி அவர்கள் தான் திருடினார்கள் என்பதில் நிச்சய புத்தி யுடனிருந்ததால், தனக்குரிய பங்கைக் கொடுக்கும்படி கேட்டாள்.

தனக்கும் அந்தத் திருட்டுக்கும் எந்த விதச் சம்பந்த மும் கிடையாது என்பதை நிரூபிப்பதில் ஸாரா வெற்றி பெற்று விட்டாள். ஆகவே, எஜமானி வீராவைப் பரி சீலனை செய்ய ஆரம்பித்தாள். வீராவைக் குளிக்கும் அறையில் அடைத்து வைத்து, உப்பு அதிகம் சேர்ந்த உப்புமாவையே உணவாகக் கொடுத்து வந்தாள். எனி னும், அந்தப் பெண், தான் பணத்தை ஒளித்து வைத்திருக் கும் இடத்தைச் சொல்பவளாய்க் காணோம். ஆகவே, எஜமானி வாஸ்காவின் உதவியை நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பணம் இருக்குமிடத்தை மட் டும் அவன் கண்டு பிடித்துச் சொல்லிவிட்டால், நூறு ரூபிள்கள் இனாம் தரப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.

ஆகவே, அந்தப் பிசாசு வீராவிடம் வந்தது. வீரா குளிக்கும் அறையில் கூனிக் குறுகி, பசியாலும், பயத்தாலும், இருளாலும் வெருண்டு வாடி, முடங்கிக் கிடந் தாள் . வாஸ்காவின் தொளதொளத்த கரிய உடம்பி விருந்து பாஸ்வர நாற்றமும் புகை நாற்றமும் அடித்தன. கண்களிருந்த இடத்தில் இரு நெருப்புக் கங்குகள் கனன் மன், அவன் அவள் முன் நின்று கிடுகிடுக்கும் குரலில் கேட்டான்,

“பணத்தை எங்கே?”

பீதியினால் அவள் மதிமயங்கி விட்டாள். இந்தச் சம்பவம் மாரி காலத்தில்தான் நடந்தது. மறுநாள் காலை யில் கனத்துப் பெய்யும் மூடுபனியின் வழியாக , ரவிக்கை யைத் தவிர வேறு ஆடையின்றி அவள் வெளியே அழைத்து வரப்பட்டாள். அவள் மெதுவாகச் சிரித்துக் கொண்டே, களிப்புடன் சொன்னாள்

“நான் காளைக்கு அம்மாவிடம் போய்விடுவேன்! அம்மாவோடு கலந்து விடுவேன்”

ஸாரா இதையெல்லாம் பார்த்த பிறகு, திகிலடித்துப் போய் ஒவ்வொருவரிடமும் சொன்னாள்:

“ஆனால்- பணத்தைத் திருடியவள் நான் தான்.”

அந்தப் பெண்கள் வாஸ்காவை மிகவும் வெறுத்துப் பயந்தொதுங்கினார்களா என்பதைச் சொல்வது கடினம். அவனுக்கு வசதிகள் செய்து கொடுத்து அவன் பிரியத்தைச் சம்பாதிக்க எண்ணினார்கள். ஒவ்வொருத்தியும் தான் தான் அவனுடைய நபர்’ என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமைப் பட்டார்கள். அதே வேளையில் தம்மிடம் வரும் டாபர்கள், விருந்தாளிகள், புரட்டுக்காரர்கள் முதலியோரிடம் சிவப்பனை மொக்கி உதைப்பதற்கும் தூண்டிவிட்டார்கள். ஆனால், அவனோ மிகுந்த பலம் படைத்தவன்; மேலும் அவன் குடிப்பதுமில்லை. ஆகவே அவனை யாரும் நெருங்க முடியவில்லை. பல தடவைகளில் அவனுக்குக் கொடுக்கும் உணவிலும், தேநீரிலும், நஞ்சு கலந்து வைக்கப்பட்டது. அதனால் அவன் ஓரளவு கஷ்டப்பட்டாலும், மீண்டும் கடைத்தேறி வந்து விட்டான். மேலும், தனக்கு எதிராக வீசும் சூழ்நிலையை எப்படியோ அவன் மோப்பம் பிடித்து விடுவான். எண்ணற்ற விரோதிகளின் மத்தியில் உயிருக்கு ஆபத்து வரக் கூடிய சூழ்நிலையில் வாழ்கிறோம் என்ற பிரக்ஞை அவனுக்கு இருந்த போதிலும், அதனால் அவனுடைய கொடுமை குறையவோ கூடவோ செய்யவில்லை. தனக்கே உரிய வழக்கமான திடசித்தத்தோடு அவன் கூறுவான்:

“உங்களுக்குச் சந்தர்ப்பம் மட்டும் கிடைத்தால், என்னைக் கடித்துக் குதைத்து எறிந்து விடுவீர்கள் என்பது எனக்குத் தெரியத்தான் செய்யும். ஆனால் உங்கள் சதியெல்லாம் பிரயோசனப்படாது. நான் எதற்கும் அசைய மாட்டேன்.”

தனது தடித்த உதடுகளைப் பிதுக்கிக் காட்டிக் கொண்டு அவன் அவர்களைப் பார்த்து உறுமுவான். இப்படித்தான் அவன் அவர்களை நக்கல் செய்வான்.

அவனுடைய கூட்டாளிகள் எல்லாம் போலீஸ்காரர் களாகவும், புரட்டுக்காரர்களாவும், துப்பறிபவர்களாக வுமே இருப்பார்கள். அவர்களும் எங்கேனும் விபச்சார விடுதிகளில் தான் அநேகமாய்க் காணப்படுவார்கள். அவர் களில் எவருமே அவனிடம் நெருங்கிய நண்பரானது கிடை யாது; அவனும் யார் மீதும் பிரத்தியேகத் தொடர்போ அன்போ கொள்வது கிடையாது. எல்லோரிடமும் அவன் ஒரே மாதிரியான முசுறுக் குணத்தோடு தான் பழகு வான். அவன் அவர்களோடு பீர் அருந்துவான்; ஊரில் உலவும் ராத்திரி வதந்திகளைப் பற்றிப் பேசுவான். தனது எஜமானியின் வீட்டை விட்டு வேலை யிருந்தா லொறிய வெளியே போகமாட்டான்; வேலை என்பது எங்கேனும் அடி கொடுப்பதாக – அதாவது, அவர்கள் பாஷையில், ஒரு பெண்ணின் மனத்தில் ஈசுவர பயத்தைச் சிருஷ் டிப்பதாகவே – இருக்கும். அவன் வேலை பார்த்து வந்த விடுதி ஒரு மத்தியதர வகுப்பைச் சேர்ந்தது. அதற்குப் பிரவேசக் கட்டணம் மூன்று ரூபிள்கள் , இரவு முழுது மென்றால் ஐந்து ரூபிள்கள். விடுதித் தலைவி பெக்லாயெர் மோலாயிவ்னா ஐம்பது வயதான தடித்த மாது; குரோத மும் கோபமும் குடிகொண்டவள். அவள் வாஸ்காவைக் கண்டு மிகவும் பயப்படுவாள். ஆகவே, தான் அவனுக்கு லைப்பாயிருந்ததும் போதாதென்று, அதிகப்படிச் சம்பள மாக மாதம் பதினைந்து ரூபிள்களும் கொடுத்து வந்தாள். விடுதியில் வாஸ்காவுக்கு சவப் பெட்டி போன்ற தனியறை உண்டு. வாஸ்கா அங்கேயே குடியிருந்ததனால், விடுதிப் பெண்களுக்கிடையே அமைதி நிலவியது. அங்கு பதினோரு பேர் இருந்தனர் ; அத்தனை பேரும் ஆடுகள் மாதிரி பயந்தாங் கொள்ளிகள்.

விடுதித் தலைவி எப்போதாவது தனது விருந்தாளி களிடம் அங்குள்ள பெண்களைப் பற்றி, ஆடுமாடு பன்றி களைப் பற்றிப் பெருமை யடித்துக் கொள்வது போலப் புகழ்ந்து பேசுவாள்.

“என்னிடமுள்ள சரக்கெல்லாம் நயமானவை” என்று சிரித்துக்கொண்டே கர்வத்துடனும் திருப்தியுடனும் சொல்வாள். இங்குள்ள பெண்களெல்லாம் புதுசு , நயமா னவர்கள். எல்லோருக்கும் மூத்தவளுக்கே இருபத்தாறு வயசு தான். அவள் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருப் பதற்கு ஏற்றவளில்லைதான்! ஆனால் – அவள் உடம்பு இருக்கிறதே! அம்மாடி – நீங்களே ஒரு பார்வை பாருங்க ளேன் . பெண்ணா அவள்?- பேரதிசயமல்லவா – சூஸ்க்கா !

“இங்கே வாடியம்மா?….” என்பாள்.

சூஸ்க்கா வாத்து நடை பழகி வந்து சேருவாள். விருந்தாளி அவளைக் கூர்ந்து பார்த்து எடை போடுவார் : அவளுடைய உடற்கட்டு அவருக்குத் திருப்தியளிக்கும்.

அவள் மிதமான உயரமும் சதைப்பிடிப்பும் கொண்டவள்; ஓரே உலோகத்தில் அடித்து உருவாக்கியது போலத் திண்மை நிறைந்தும் இருந்தாள். பருத்து உயர்ந்த மார்பகம்; வட்டமான முகம் ; செக்கச் சிவந்த இதழ்கள் கொண்ட சிறிய வாய்; பொம்மையின் பாசி மணிக் கண்களைப் போல் ஒளியற்று உணர்ச்சியற்றுப் போன கண்கள் ; மொட்டை மழுங்கட்டையான மூக்கு; கத்தரித்து விடப்பட்ட புருவக்கீற்று – இத்தனையும் சேர்ந்த அந்தப் பொம்மையின் உருவம் விருந்தாளிக்கு அவளிடம் பேச வேண்டும் என்றிருந்த உணர்ச்சியையும் கொன்றுவிடும். ஆகவே அவர் ஒரே ஒரு வார்த்தைதான் சொல்வார்.

“வா.”

அவளும் உடம்பை ஆட்டி அசைத்து நடைபழகி, அர்த்தமற்ற புன்னகை செய்து கொண்டு கண்களை இட மும் வலமும் உருட்டி விழித்தவாறே அவருடன் செல்வாள். இதெல்லாம் விடுதித் தலைவியால் அவளுக்குக் கற்றுத்தரப்பட்ட சாகசங்கள். இதற்கு அதிதியை ஆகர்ஷிப்பது என்று பெயர். அதிதியை ஆகர்ஷிக்கும் இந் தக் கண்வெட்டு எல்லாம், நன்றாக உடை உடுத்தியவுட னேயே வந்துவிடும். பிறகு அவள் தனிமையிலிருந்தா லும், பிற பெண்களுட னிருந்தாலும், அதிதியுடனிருந்தா லும் அந்தக் கண்கள் மட்டும் அர்த்தமற்று உருண்டு கொண்டே இருக்கும்.

அவளிடம் இன்னொரு விபரீதச் செய்கையும் உண்டு. தனது நீண்ட ஜடையை கழுத்தைச் சுற்றிப் போட்டு, ஜடை முனை மார்பின் மேல் தொங்க, அதைத் தனது கை யால் பிடித்து, ஏதோ சுறுக்குக் கயிற்றைத் தாங்கும் பாவனையில் நிற்பாள்.

மேலும் அவள் தன்னைப் பற்றியே அதிகம் சொல்லிக் கொள்வாள். தன் பெயர் அக்சின்யா காலுஜினா என்றும், தான் ரைய்ஜான் மாகாணத்தைச் சேர்ந்தவள் என்றும், ஒரு தடவை பெட்காவுடன் பாபகிரியை செய்ததால், ஒரு குழந்தைக்குத் தாயானாள் என்றும், அதன் பின் ஒரு ஆப்காரி உத்தியோகஸ்தரின் குடும்பத்தோடு நகருக்கு வந்தாள் என்றும், வந்த இடத்தில் செவிலித் தாயாக வேலை பார்த்தாள் என்றும், பிறகு தன் குழந்தை இறந்து போகவே, வேலையிலிருந்து விலக்கப்பட்டு, இந்த விடுதியில் வேலை பார்க்க வந்ததாயும், வந்து நாலு வருஷ காலம் ஆகிறதென்றும் தெரிவிப்பாள்.

“இந்த இடம் பிடித்திருக்கிறதா?” என்று அதிதியிடமிருந்து கேள்வி பிறக்கும்.

“பிடித்திருக்கிறது. வேண்டு மட்டும் உணவு உடை கிடைக்கிறது. காலுக்குச் செருப்பும் கிடைக்கிறது……….. இங்கே அமைதி மட்டும் கிடையாது … மேலும், வாஸ்கா … அவன் வேறு அடித்துத் தொலைப்பான் – பிசாசு”

“அப்படியானால், இங்கு இருக்க உனக்கு சந்தோஷமா மிருக்கிறதல்லவா?”

“அது எங்கே?” என்று தலையைத் திருப்பிக் கொண்டே பதிலளிப்பாள் ; பிறகு தாழ்வாரத்தில் கண் களைப் பாய்ச்சி , மகிழ்ச்சி நிறைந்த காலத்தை எதிர்பார்ப் பது போல் பார்ப்பாள்.

அந்த இடத்தைச் சுற்றிக் குடிவெறியும் கூச்சலும் கும்மாளம் போடும். தலைவியும் பிற பெண்களும் மேல் மாடியில் கூத்தடிப்பதும் கேட்கும். இதெல்லாம் அவளுக்குப் பழகிப் போனவை.

அவள் உச்சஸ்தாயியில் தான் பேசுவாள்; கிண்டலுக்கு ஆளாகும் போது உரத்த குரல் படைத்த விவசாயியைப் போல, பலத்துச் சிரிப்பாள்; சிரித்து அதிர்வாள். அங்குள்ள பெண்களுக்குள் குறும்பிலும், ஆரோக்கியத்திலும் அவளே சிறந்தவள். ஆகவே அவள் பிறரை விட அதிகச் சந்தோஷம் கொள்பவளாகவே இருப்பாள். ஏனெனில் அவர்களுக்குள் அவள் தான் மிருகத் தன்மையை அணுகிவிட்டவள்.

வாஸ்கா அந்த விடுதியில் வேலை பார்க்கப் போய், விடுதிப் பெண்களின் பகையையும் பயத்தையும் அவன் சம்பாதித்திருந்தது வாஸ்தவம். எனினும் அந்தப் பெண் கள் குடிவெறியில் தமது உணர்ச்சிகளை மறைத்து வைக் காது. அதிதிகளிடம் வாய் திறந்து வாஸ்காவைப் பற்றிக் குற்றம் கூறுவார்கள். ஆனால் அதிதிகள் அவர்களைக் காப்பாற்றுவதற்காக அங்கு வராத காரணத்தால், அவர் களுடைய குற்றச் சாட்டுகளில் அர்த்தமும் கிடையாது; அதனால் பலனும் கிடையாது. சமயங்களில் அவர்கள் அழுது கொண்டே பெருங் கூச்சலிட்டால், வாஸ்காவின் காதுகளில் அந்தக் குரல் விழுந்துவிடும். உடனே, அவனது தலை தாழ்வாரத்தில் தோன்றும், அதைத் தொடர்ந்து உணர்ச்சியற்ற குரலில் அவனுடைய ஆணைக் குரலும் கேட்கும்.

“ஹி – உன்னைத்தானே ! – முட்டாள் தனமாய் நடக்காதே”

“கொலைகாரா ! பூதமே!” என்று அந்தப் பெண் கத்துவாள். “என்னை எப்படி நீ மரியாதைக் குறைவாய்ப் பேசலாம்? பாருங்கள், மிஸ்டர் ! பாருங்கள் – அவன் எப்படி என் முதுகைச் சவுக்கினால் அடித்திருக்கிறான்” என்று கூறிக்கொண்டே, தனது ரவிக்கையைக் கிழித்துக் காட்ட முயல்வாள்.

வாஸ்கா நேராக அவளிடம் சென்று அவனைக் கையோடு பிடித்திழுத்து ஸ்திரமான பயங்கரக் குரலில் கண்டித்துக் கூறுவான் :

“ம், சத்தம் போடாதே, உஷ் – என்ன உளறுகிறாய்! குடித்திருக்கிறாயா? பார் இப்போ .”

இந்தக் கண்டிப்பே அவளுக்குப் போதும், அந்தப் பெண்ணை வெளியில் இழுத்துக் கொண்டு வரவேண்டிய நிர்ப்பந்தம் சில சமயங்களில் தான் ஏற்படும்.

பல பெண்கள் அவனுடைய வைப்பாட்டிகளாக இருந்த போதிலும், எவளும் அவனிடமிருந்து ஒரு அன் பான வார்த்தையைக் கேட்டதில்லை. அவனாகவே அவர் களை நாடிச் செல்வான். எவளாவது அவனுடைய இஷ் டத்தைப் புரிந்து கொண்டால், உடனே சொல்வான் :

“இன்றிவு உன்னோடு தங்கப் போகிறேன்.”

அன்று முதல் கொஞ்ச காலத்துக்கு அந்தப் பெண்ணிடமே போய் வந்து கொண்டிருப்பான்; திடீரென்று எந்த விதப்பேச்சு வார்த்தையுமில்லாமல் பிரிந்தும் போய் விடுவான்.

“பிசாசுப் பயல்/ அவன் உடம்பு கட்டையால் ஆனது தான்” என்று பெண்கள் அவனைப் பற்றிப் பேசிக் கொள்வார்கள்.

அவன் வேலை பார்த்து வந்த விடுதிப் பெண்கள் ஒவ் வொருவரோடும் அவன் வரிசைக் கிரமமாகப் பழகிப் பார்த்திருக்கிறான் : அக்சின் யாவுடனுந்தான். அவளோடு வாழ்ந்துவரும் காலத்தில் தான் ஒருதடவை அவளைப் பல மாகக் கொடுமைக்கு ஆளாக்கினான்.

சோம்பலும் சுகாரோக்கியமும் கொண்டவளாதலால், அவளுக்குத் தூக்கத்தில் பரம பிரீதி. வீட்டில் எவ்வளவு சப்தமிருந்தாலுங்கூட, அவள் அசைவற்றுத் தூங்குவாள். எங்கேனும் மூலையில் போய் உட்கார்ந்து கொண்டு, அதி தியை ஆகர்ஷிக்கும்’ கண்வெட்டுக் கருமத்தைக் கூட மறந்து போய் விடுவாள். அதிதிகள் வேறு எங்கேனும் கவனம் செலுத்தும் போது, அவளுடைய கண்ணிமைகள் குவித்து மூடும்; உதடுகள் பிரிந்து, வெள்ளிய பெரும் பற் கள் வெளித்தெரியும். குறட்டையும் வரும். குறட்டைச் சப்தம் கேட்ட மற்றப் பெண்களும் அதிதிகளும் வாய் விட்டுச் சிரிப்பார்கள்; அந்தச் சிரிப்புங்கூட அவளை எழுப்பாது.

இது பல முறை நடந்தது. விடுதித் தலைவி அவளை முகத்தில் அறைந்தும் கண்டித்தாள். எனினும் அவள் தூக்கம் பயந்து ஒதுங்கி விடவில்லை. கொஞ்ச நேரம் அமு வாள், பிறகு தூங்கிப் போய் விடுவாள்.

கடைசியாய் இந்த விஷயம் வாஸ்காவிடம் வந்து சேர்ந்தது. ஒரு நாள் இரவு அவள் அதிதியின் பக்கத் திலிருந்த சோபாவில் தூங்கி விழுந்து கொண்டிருந்தாள்; அதிதியும் தூங்கி வழிந்து கொண்டிருந்தார். வாஸ்கா உள்ளே சென்று, ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அவளைக் கையைப் பிடித்து வெளியே இழுத்து வந்தான்.

“நீ என்னை அடிக்கத்தான் போகிறாயா?” என்று அக்சின்யா கேட்டாள்.

“அப்படித்தான்” என்றான் வாஸ்கா.

அவர்கள் சமயலறையை அடைந்ததும், அவன் அவளுடைய ஆடைகளைக் களையச் சொன்னான்.

“என்னை அதிகமாய் அடிக்காதே” என்று இரங்கி வேண்டிக் கொண்டாள்.

“ம்….சீக்கிரம்-கழற்று-கழற்று!”

அவள் ரவிக்கை வரையிலும் களைந்து விட்டாள்.

“அதையும் கழற்று” என்று வாஸ்கா உத்தர விட்டான்.

“என்ன படுபோக்கிரித்தனம்!” என்று பெருமூச் செறிந்து கொண்டே, ரவிக்கையையும் கழற்றினாள்.

வாஸ்கா அவளுடைய தோள்பட்டையில் சவுக்கால் அறைந்தான்.

“போ – முற்றத்துக்குப் போ.”

“என்ன சொல்கிறாய்?- இது குளிர்காலம். எனக்குக் குளிருமே”

அவன் அவளைச் சமையல் கட்டிலிருந்து வெளியே தள்ளிக்கொண்டு போனான்; சவுக்கால் கட்டி இழுத்துக் கொண்டு போனான். முற்றத்தில் கிடந்த பனிக் கட்டிக் குவியலின் மேல் அவளை மல்லாந்து படுக்கச் சொன்னான்.

“வாஸ்கா ! எப்படி நீ என்னை …”

“படு – போய்ப் படு”

அவன் அவளைக் கீழே தள்ளி அவள் முகத்தைப் பனிக்குள் புதைத்தான். அவளுடைய கூக்குரல் கூட வெளியே கேட்கவில்லை. பிறகு வெகு நேரம் அவளைச் சவுக்கால் அறைந்து கொண்டே, கத்தினான்.

“இனிமேல் தூங்காதே – தூங்காதே தூங்காதே…”

அவன் அவளை விடுவித்த பிறகு, அவள் கண்ணீர் சொரிந்து கொண்டு விக்கி விக்கிச் சொன்னாள்: “வாஸ்கா காத்திரு உனக்கும் காலம் வரும்! நீயும் ஒரு நாள் அழுவாய். கடவுள் ஒருவர் இருக்கிறார், வாஸ்கா”

“பேசு பேசு. இனிமேல் நீ தூங்கு உன்னை வெளியே கொண்டு வந்து சவுக்கடியும் கொடுத்து, தண்ணீரையும் மேலே ஊற்றுகிறேன்” என்றான்.

வாழ்க்கைக்கும் அதற்குரிய புத்தி சாதுரியம் உண்டு; அதன் பெயரே விபத்து!” சமயங்களில் அது நமக்குப் பரிசனிக்கிறது. அநேகமாய் நம்மைப் பழிதான் வாங்குகிறது. சூரிய ஒளி ஒவ்வொரு பொருளுக்கும் நிழலையும் கொடுத்து உதவுவது போல், வாழ்க்கையும் ஒவ்வொருவருடைய கரு மத்துக்கும் பிரதிபலன் அளிக்கிறது. இது உண்மை, தவிர்க்க முடியாதது. ஒவ்வொருவரும் இதை உணர்ந்தே ஆகவேண்டும்.

வாஸ்காவுக்கும் அந்தப் ‘பிற்பகல்’ வந்தது.

ஒரு நாள் மாலை சயன அறைக்குள் செல்வதற்குள் அரையாடை அணிந்து, விடுதிப்பெண்கள் உணவருந்திக் கொண்டிருந்தபோது, விடா செர்னோ கோரோவா என்ற பொறாமையும் உணர்ச்சியும் கொண்ட பெண்ணொருத்தி இன்னல் வெளியே எட்டிப் பார்த்துவிட்டுச் சொன்னாள்:

“வாஸ்கா வந்துவிட்டான்” பல பெண்கள் அதிருப்தி கொண்டனர்.

“பாருங்கள் அவன் குடித்துவிட்டிருக்கிறான். கூட ஒரு போலீஸ்காரன் வருகிறான்” என்று லிடா கத்தினாள்.

எல்லோரும் ஜன்னலுக்கு ஓடினர்.

“அவனை வண்டியிலிருந்தல்லவா இறக்குகிறார்கள் அவனால் நடக்க முடியாது. தோழிகளே! அவனுக்கு எதோ விபத்து நேர்ந்திருக்கிறது!” என்று ஆரவாரத்துடன் சொன்னாள் லிடா.

சமையல் கட்டு முழுதும் சாபங்களும் பழிவாங்கும் சிரிப்பொலிகளும் எதிரொலித்தன. ஒவ்வொருத்தியும் விழுந்தடித்து ஓடிவந்து, தமது வீழ்ச்சியுற்ற விரோதியைக் காண விரைந்தனர்.

போலீஸ்காரனும் வண்டிக்காரனும் தாங்கியவாறே உள்ளே வரும் வாஸ்காவைப் பார்த்தனர். அவன் முகம் சாம்பல் பூத்திருந்தது; நெற்றியில் வேர்வைத் துளிகள் துளிர்த்து நின்றன. அவனுடைய இடது காலை இழுத்து இழுத்து வந்தான்.

“வாஸிலி மிரோனிச்! உனக்கு என்ன நேர்ந்து விட்டது?” என்று விடுதித் தலைவி கேட்டாள்.

வாஸ்கா தலையை ஆட்டிக்கொண்டே கரகரத்த குரலில் சொன்னான் :

“நான் விழுந்து …”

“இவன் ஒரு ட்ராலி வண்டியிலிருந்து விழுந்துவிட்டான்” என்றான் போலீஸ்காரன்.

“விழுந்தான். விழுந்தவுடன் அவன் கால் பைதா வுக்குள் அகப்பட்டுக் கொண்டது. முறிந்தது. – அவ வளவுதான்.”

அந்தப் பெண்கள் அமைதியோடிருந்தாலும், அவர்கள் கண்கள் மட்டும் நெருப்புக்கனல் மாதிரி கணித்து நின்றன.

அவர்கள் வாஸ்காவைத் தூக்கி மேல் மாடியில் ஒரு அறைக்குக் கொண்டு போய்ப் படுக்க வைத்தார்கள், டாக்டருக்குச் சொல்லியனுப்பினார்கள். அந்தப் பெண்கள் அவனுடைய படுக்கையைச் சுற்றி நின்று பார்வை பரிமாறினர்; வார்த்தை பரிமாறவில்லை.

“போங்கள் வெளியே” என்று வாஸ்கா சத்தமிட்டான்.

எவளும் அசையவில்லை. “ஆ! உங்களுக்குச் சந்தோஷமாயிருக்கிறதா?”

“நாங்கள் உனக்காக அழமாட்டோம்” என்று விடா சிலுப்பிக்கொண்டே சொன்னாள்.

“அம்மா, இவர்களை வெளியே விரட்டு. இவர்கள் எதற்காக இங்கு வரவேண்டும்?”

“பயமாயிருக்கிறதா?” என்று அவன் மீது குனிந்து கொண்டு கேட்டாள் லிடா.

“போங்கள் – கீழே போங்கள்” என்று தலைவி ஆணையிட்டாள்.

அவர்கள் சென்றனர். போகும்போது ஒவ்வொருத்தியும் அவனைப் பார்த்தாள். லிடா மட்டும் மெல்லச் சொன்னாள் :

“நாங்கள் திரும்பவும் வருவோம்.”

அக்சின்யா முஷ்டியை உயர்த்தி அவனைப் பயமுறுத்திக்கொண்டே சொன்னாள் “பிசாசுப் பயலே… நொண்டியானாயா! வேணும் உனக்கு”

அவளுடைய துணிச்சல் பிற பெண்களைப் பிரமிக்கச் செய்தது. கீழே சென்ற அந்தப் பெண்களின் உள்ளத்தில் இதற்கு முன் அனுபவித்திராத ஆனந்தமான இனிமையும், பழி வாங்கியதனால் ஏற்பட்ட பெருமிதமும் நிரம்பித் ததும்பின. ஆனந்தப் பைத்தியத்தில் வாஸ்காவைக் கேலி செய்வதும் விடுதித் தலைவியை விறைத்துப் பார்ப்பதும் புண்படுத்துவதுமாக இருந்தனர், அவர்கள்.

விடுதித் தலைவியுங்கூட வாஸ்கா விதியின் வலிமையால் தண்டிக்கப்பெற்றதற்காகச் சந்தோஷப்பட்டாள். தான் அவளிடம் வேலை பார்ப்பவன் என்பதை வாஸ்கா மறந்து, தானே உயர்ந்தவன், தனக்குத் தாழ்ந்தவளே அவள்’ என்ற மனப்பான்மையோடு பழகி வந்ததால், அவள் அவனுக்கு அடங்கி நடந்து வரவேண்டியிருந்தது. ஆனால், அவனுடைய உதவியின்றி அந்தப் பெண்களைக் கட்டி மேய்க்க முடியாதென்பதை அவள் உணர்ந்ததனால் வாஸ்காவைப் பற்றிய தன் மன உணர்ச்சிகளை வெளிமடாதிருந்தாள்.

டாக்டர் வந்தார்; நோயாளிக்குக் கட்டுக் கட்டினார். மருந்தெழுதிக் கொடுத்தார். பிறகு, வாஸ்காவை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பது தான் உசிதம் என்று தலைவியிடம் கூறிவிட்டுப் போய்விட்டார்.

“நல்லது தோழிகளே. நமது அருமை நோயாளியை இன்னொரு தரம் போய்ப் பார்க்கலாமா?” என்று துணர்ச்சல் நிறைந்த குரலில் கேட்டாள் லிடா.

அவர்கள் அனைவரும் கூச்சலுடனும், கும்மாளியுடனும் மாடிக்கு விரைந்தனர்.

வாஸ்கா கண்களை மூடிக் கிடந்தான். கண்களைத் திறக்காமலேயே, அவன் சொன்னான்: ”திரும்பவும் வந்து விட்டீர்களா?”

“வாஸிலி மிரோனிச்! உன் நிலைக்காக, நாங்கள் வருந்தாமலா இருக்கிறோம்?”

“உன்னை நாங்கள் விரும்பவில்லையா?….”

“நினைத்துப் பார் நீ எப்படி…..”

அவர்கள் அவனுடைய படுக்கையைச் சுற்றி நின்று, குதூகலமும் குரோதமும் நிறைந்த கண்களுடன் அவனுடைய முகத்தைப் பார்த்தனர். அமைதியும் அழுத்தமுங் கொண்ட குரலில் பேசிக் கொண்டனர். அவனும் அவர்களைப் பார்த்தான். எனினும் அந்தக் கண்களில் என்று மில்லாத அதிருப்தி நிறைந்த பசி, தீர்க்க முடியாத பசி கனன்று எரிந்து கொண்டிருந்தது.

“ஏ, பெண்களே!….. நான் குணமாகிவிடுவேன் ……. அதன்பின் …”

“ஐயோ ! – கடவுள் நல்லாயிருக்கணும். நீ குணமாகவே போவதில்லை” என்று லிடா குறுக்கே பேசினாள்.

வாஸ்கா தனது உதடுகளைக் கடித்து, பொறுமையைக் காப்பாற்றினான்.

“என் அன்பே ! எந்தக் கால் வலிக்கிறது?” என்று ஒரு பெண் அவன் மீது குனிந்து கொண்டே கேட்டாள். அவள் முகம் வெளுத்திருந்தது; பற்களும் வெளியே தெரிந்தன; “இந்தக் கால்தானா?”

உடனே வாஸ்காவின் ஊனமுற்ற காலைப்பற்றி விறிட்டென்று இழுத்தாள், அவள்.

வாஸ்கா பற்களை நெரித்துக் கூச்சலிட்டான். அவனுனுடைய இடத கையும் ஊனமானதால், தனது வலது கையால் அந்தப் பெண்ணை அடிக்க முயன்று, தன் வயிற்றிலேயே அடித்துக் கொண்டான். உடனே அவனைச் சுற்றிச் சிரிப்புக் கலகலத்தது.

“சிரிப்பா? பாருங்கள், உங்களை நான் கொன்று விடுவேன்” என்று சத்தமிட்டு, தனது கண்களைப் பயங்கர மாய்ச் சுழற்றினான்.

ஆனால் அவர்களோ அவனுடைய படுக்கையைச் சுற்றி நடமாடினர்; அவனைக் கிள்ளினர்; தலைமயிரைப் பிடித்து இழுத்தனர்; முகத்தில் காரியுமிழ்ந்தனர்; அவனுடைய சேதமுற்ற காலைப் பற்றி வெட்டியிழுத்தனர். அவர்கள் கண்கள் கனன்றன அவர்கள் வாய்விட்டுச் சிரித்தனர்; வசைமாரி பொழிந்தனர்; நாய்களைப் போல ஊளையிட்டனர். அவர்களுடைய கேலிக்கூத்து வார்த்தைக் கடங்காத கசப்பும் கடுமையுங் கொண்டதாயிருந்தது. அவர்கள் வஞ்சின வெறி அத்துமீறிப் போன, மயக்க நிலையில் இருந்தனர்.

அரையுடை உடுத்தி அவர்கள் போடும் அந்தக் கும்கானி பயங்கரமாக இருந்தது.

வாஸ்கா வலது கையை ஆட்டியவாறே கூச்சலிட்டான், விடுதித் தலைவி வாசல் நடையில் வந்து நின்று கடுரமாக அதட்டினாள் :

“போதும் போதும். விடுங்கள் அவனை / அல்லது நான் போலீஸைக் கூப்பிடுவேன் ……. நீங்கள் அவனைக் கொன்று விடுவீர்கள்!… என் அன்பே …… என் …….”

ஆனால் அவர்கள் அவள் சொல்லுக்குச் செவிசாய்க்க வில்லை. அவனோ அவர்களை வருஷக் கணக்காகச் சித்திரவதை செய்திருக்கிறான் ! அதற்குப் பதிலுக்குப் பதில் செய்ய, அவர்களுக்கு சில நிமிஷ காலந்தான் இருக்கிறது! ஆகடவ அவர்கள் ஆத்திரத்துடன் இருந்தனர்………

திடீரென அந்தக் கும்மாளியையும் கூத்தையும் ஊடுருவி, உச்சஸ்தாயியில் ஒரு குரல் எழுந்தது.

“தோழிகளே! போதும். அவன் மீது கருணை கொள்ளூங்கள். அவனும் – அவனுங்கூட வேதனைப்படுகிறான்! எனது அருமைத் தோழிகளே / கிறிஸ்துவின் நாமத்துக் காகவேனும்… எனது அருமை..”

இந்தக் குரல் அந்தப் பெண்களைச் சில்லிடச் செய்தது ; பயந்து போய் வாஸ்காவை விட்டு ஒதுங்கிச் சென்றனர்.

அக்சின்யாதான் அப்படிப் பேசினாள். ஜன்னலருகே நடுங்கி நின்று, அந்தப் பெண் தன் தலையைத் தாழ்த்தி வணங்கி, வயிற்றைப் பிசைந்து கேட்டுக்கொண்டாள்.

வாஸ்கா ; அசைவற்றுக் கிடந்தான். அவனுடைய சட்டை மார்பின் பக்கம் கிழிந்திருந்தது; அவனுடைய அகன்ற மார்பின் மேல் படர்ந்த செம்மயிர்ப் புதருக்குக் கீழே ஏதோ ஒன்று முண்டியடித்துத் தப்பிக்க முயல்வது. போன்று துடித்துக் கொண்டிருந்தது. அவனுடைய தொண்டைக் குழியில் கரகரப்பு எழுந்தது. கண்கள் மூடிக் கிடந்தன.

அந்தப் பெண்களெல்லாம் வாசல் நடையில் ஒன்றாகக் குழுமி நின்று அக்சின்யாவின் முன்கலையும் வாஸ்காவின் கரகரப்பையும் காது கொடுத்துக் கேட்டனர். லிடா அவர்களுக்கு முன்னால் நின்று கொண்டு, தனது விரல் களில் சுற்றியிருந்த செம்பட்டை மயிர்களை விலக்கிக் கொண்டிருந்தாள்.

“அவன் செத்துப் போனால்…” என்று எவளோ பேசினாள். பிறகு ஒரே மௌனம்.

ஒவ்வொருத்தியாக வாய் பேசாது வாஸ்காவின் அறையை விட்டு அமைதியாகக் கீழே இறங்கினர். அவர்கள் சென்றவுடன் அறையில் கிழிபட்ட துணிகளும் ரோமங்களும் தான் தரையில் கிடந்தன.

அக்சின்யா அங்கேயே தங்கிவிட்டாள். பெருமூச்சு விட்டுக் கொண்டே அவள் வாஸ்காவை நெருங்கி, தனது ஆழ்ந்த குரலில் கேட்டாள் :

“என்னால் உனக்கு என்ன ஆகவேண்டும்?”

அவன் கண்களைத் திறந்து அவளைப் பார்த்தான் ஆனால் பேசவில்லை.

“நீ பேசலாம். உன்னைச் சுத்தப்படுத்த வேண்டுமா? நான் சுத்தப்படுத்துகிறேன். குடிக்கத் தண்ணீர் வேண்டுமா? தருகிறேன்.”

வாஸ்கா அமைதியுடன் தலையை ஆட்டினான்; உதடுகளை அசைத்தான். வாய் பேசவில்லை.

“இப்படியா ஆச்சு! உன்னால் பேசக்கூட முடியாதா?’ என்று அக்சின்யா தனது ஜடையைக் கழுத் தைச் சுற்றிப் போட்டவாறே கேட்டாள். நாங்கள் உன்னிடம் படுமோசமாய் நடந்து கொண்டோம். அது உன்னைத் துன்புறுத்துகிறதா, வாஸ்கா ! அமைதியாயிரு. எல்லாம் சரியாய் விடும். முதலில்தான் வேதனை இருக்கும்.”

“… எனக்குத் தெரியும்”

அவனுடைய முகத்தில் சதை திரண்டு அசைந்தது, அவன் கரகரத்துச் சொன்னான்:

“….. தண்ணீர்….”

திருப்தியற்ற பசி அவன் கண்களிலிருந்து மறைந்தது.

அக்சின்யா வாஸ்காவுடன் மாடியிலேயே தங்கி விட்டாள். சாப்பிடவோ , டீ குடிக்கவோ, நோயாளிக்குச் சாமான் ஏதேனும் எடுக்கவோதான் கீழிறங்கி வருவாள். மற்றப் பெண்கள் அவளிடம் பேசவும் இல்லை; எதுவும் கேட்கவும் இல்லை; விடுதித் தலைவியும் அவள் வாஸ்காருக்கு பண்டுவம் பார்ப்பதைத் தடை செய்யாதது மட்டுமல்லாமல் அதிதிகளுக்கு அவளை விருந்தளிக்கவும் இல்லை. அக்சின்யா வாஸ்காவின் அறைச் சன்னலில் உட்கார்ந்து, பனிபடிந்த வீடுகளையும், மூடுபனி உறைந்த மரங்களையும் வானோக்கி எழும்பும் பனிமேகக் கூட்டங் களையும் பார்த்துக் கொண்டிருப்பாள். அதில் சலித்து அலுத்துப் போகும் போது நாற்காலியில் அமர்ந்தவாறே மேஜை மீது குப்புற விழுந்து தூங்கிப் போவாள். இரவு நேரங்களில் வாஸ்காவின் படுக்கையருகே தரையில் விழுந்து கிடந்து உறங்குவாள்.

அவர்கள் இருவருக்கிடையேயும் அநேகமாய்ப் பேச்சு வார்த்தையே இருக்காது. வாஸ்கா தண்ணீரேனும், வேறு ஏதேனும் கேட்டால், அவள் அதைச் கொண்டு வந்து கொடுப்பாள்; அவனை நோக்கிப் பெருமூச் செறிவாள் ; ஜன்னலைப் பார்த்துப் போய்விடுவாள்.

நாலு நாட்கள் கழிந்தன. விடுதித் தலைவி வாஸ்காவை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட வேண்டும் என்று அரும்பாடுபட்டாள்; எனினும் ஆஸ்பத்திரியில் அந்தச் சமயம் கட்டில் காலியில்லை.

ஒரு நாள் மாலை இருள் சூழும் நேரத்தில் வாஸ்கா தலையை உயர்த்திக் கேட்டான். ‘அக்சின்யா, நீ அங்கேயா இருக்கிறாய்?”

அவள் தூங்கி வழிந்து கொண்டிருந்த போதிலும், அந்தக் கேள்வி அவளை எழுப்பி விட்டது.

“பின் நான் எங்கேயிருக்க வேண்டும்?’ என்று கேட்டாள்.

“இங்கே வா.”

அவள் அவனுடைய படுக்கையருகே சென்று, வழக்கம் போல், தனது ஜடையைக் கழுத்தைச் சுற்றிப் போட்டுக் கை விரலால் தாங்கி நின்றாள்.

“உனக்கு என்ன வேணும்?”

“ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு, இப்படி உட்கார்”

பெருமூச்சுடன் அவள் ஜன்னலருகே சென்று அங்கு கிடந்த நாற்காலியை எடுத்து வந்து போட்டு உட்கார்ந் தாள்.

“சரிதானா?”

“ஒன்றுமில்லை …… நான் …… கொஞ்சம் இங்கேயே இரேன்”

சுவரில் வாஸ்காவின் வெள்ளிக் கடிகாரம் டிக்டிக் கென்று ஒலித்துக் கொண்டிருந்தது. வெளியில் ஒரு பனிப் பாதை வண்டி நழுவி ஓடுவதும், அதிலுள்ளவர்கள் சத்த மிடுவதும் கேட்டது. கீழ் வீட்டில் பெண்கள் சிரிப்பதும், யாரோ ஒருத்தி உச்சஸ்தாயியில் உரக்கப் பாடுவதும் கேட்டன:

“மாணவன் ஒருவன் – என்
மனசைக் கொள்ளை கொண்டான் ……”

“அக்கின்யா” என்றான் வாஸ்கா

“என்ன?”

“இங்கே பார்…. நாமிருவரும் ஒன்றாக வாழலாம்”

“இப்போது மட்டும் வாழவில்லையா?” என்று அவள் அமைதியாகக் கேட்டாள்.

“இல்லையில்லை. பொறு. நாம் ஒழுங்கான முறைமயிலேயே வாழ்வோம்.”

“ரொம்ப சரி” என்றாள் அவள்.

அவன் மீண்டும் மௌனியானான். கண்களை மூடி அப்படியே கிடந்தான். பிபிகு , “ஆமாம்… நாம் இங்கிருந்து கிளம்பிச் சென்று, புது வாழ்வு நடத்தலாம்.”

“எங்கே போவது?” என்றாள் அக்சினயா.

“எங்கேயாவது? அந்த ட்ராலி வண்டிக் கம்பெனி மீது நான் இந்த விபத்துக்காகக் கேஸ் போடுவேன். அவர்கள் எனக்கு நஷ்ட ஈடு தரவேண்டும். அதுதான் சட்டம். மேலும், என்னிடம் கைவசம் அறுநூறு ரூபிள்களுக்குமேல் இருக்கின்றது.

“எவ்வளவு?”

“அறுநூறு ரூபிள்களுக்கு மேல்”

“சரி, சொல்லாதே” என்று சொல்லி விட்டு, அவள் கொட்டாவி விட்டாள்.

“ஆமாம். அந்தப் பணத்தைக் கொண்டு, ஒரு வீடு கட்டலாம். கம்பெனியிலிருந்தும் கொஞ்சம் பணம் கிடைக்கும். நாம் சிம்பர்ஸ்க்காவது சமாராவுக்காவது போய் விடுவோம். அங்கு அந்த ஊரிலேயே சிறந்த இடமாக வீடு அமைப்போம். நல்ல பெண்களைத் தருவிப்போம். நபருக்கு ஐந்து ரூபிள் என ரேட்டு விதிப்போம்”

“என்னமாய்ப் பேசுகிறாய்?” அக்சின்யா புன்னகை புரிந்தாள்.

“ஏன்? அப்படித்தான் இருக்க முடியும்!”

“உண்மையாகவா?”

“ஆமாம் அப்படித்தான். நீ விரும்பினால், நாமிரு வரும் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம்.”

“என்..ன?” அசட்டுத்தனமாய் விழித்துக்கொண்டே கேட்டாள் அக்சின்யா.

“நாம் மணம் புரிந்து கொள்வோம்” என்று உணர்ச்சி யுடன் சொன்னான், வாஸ்கா.

“நீயும் நானுமா?”

“ஆமாம்.”

அக்சின்யா வாய்விட்டுச் சிரித்தாள். தனது நாற்காலி யில் மேலும் கீழும் ஆடிச் சிரித்துக் கொண்டு, தனது வயிற்றைப் பிடித்துக் கொண்டு மெதுவாகச் சிரித்தாள்; அது அவளிடம் அசாதாரணமாகத் தோன்றிய சிரிப்பு.

“உனக்கு என்ன நேர்ந்து விட்டது” என்று வாஸ்கா கேட்டான். மீண்டும் அந்தப் பசி அவன் கண்களில் குடி கொண்டது. அவள் சிரித்துக் கொண்டே இருந்தாள்.

“என்ன விஷயம்?” என்று அவன் மீண்டும் கேட்டான்.

முடிவாக, அவள் தனது கூச்சலுக்கும் சிரிப்புக்கும் இடையே எப்படியோ சொல்ல ஆரம்பித்தாள்:

“எல்லாம் கல்யாணத்தைப் பற்றித்தான், அது நம்மிருவருக்கும் ஒத்து வருமா, என்ன? நான் தேவாலயத்துக்குச் சென்றே வருஷம் மூன்றுக்கு மேலாகிறதே! என்ன விபரீத ஆசாமியப்பா, நீ நானா, உன் மனைவி?….. உன்னைக் கட்டிக் கொண்டு, உனக்குப் பிள்ளைகளும் பெற்றுத் தரவேண்டுமென்றா எதிர்பார்க்கிறாய்! ஹா, ஹா.”

குழந்தைகளைப் பற்றிய எண்ணம் அவள் மனத்தில் மீண்டும் புதுச் சிரிப்பலையை உண்டாக்கி விட்டது. வாஸ்கா மௌனமாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“நான் உன்னோடு எங்கேயும் வந்துவிடுவேன் என்றா எண்ணுகிறாய்? என்ன யோசனை! நீ எங்கேயும் கொண்டு போய், உன் இஷ்டப்படி நடத்துவாய். உன்னுடைய சித்திரவதையைப் பற்றித்தான் எல்லோருக்கும் தெரியுமே”

“சே! சத்தம் போடாதே!” என்றான் வாஸ்வா. அவளோ அவனுடைய கொடுமையைப் பற்றி, பற்பல சம்பவங்களை நினைவுக்கிழுத்தவாறே அளந்து கொட்டினான்.

“அமைதியாய் இரேன்” என்று அவன் வேண்டினான். அவள் அதற்குப் பணியாததைக் கண்டு உரக்கச் சத்தமிட்டான். “நான் சொல்கிறேன். அமைதியாயிரு!”

அன்று மாலை அவர்கள் இருவரும் வேறொன்றும் பேசிக் கொள்ளவில்லை. இரவில் வாஸ்காவுக்கு ஜன்னி கண்டது. அவனுடைய மார்புக்குள்ளிருந்து துரத்தலும், கரகரப்பும் வந்தது. அவன் பற்களைக் கடித்தான். வலது கையை ஆட்டினான். தனது நெஞ்சிலேயே அறைந்து கொண்டான்.

“உனக்கு என்ன செய்கிறது? இந்த அறையில் உனக்குத் திகை முட்டுகிறதா? அல்லது ……”

“ஒன்றுமில்லை. கனவுகண்டேன்…” என்று மெதுவாகச் சொன்னான் வாஸ்கா.

“எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடு.”

தண்ணீர் குடித்து முடிந்ததும், அவன் தலையை ஆட்டிக்கொண்டே சொன்னான் :

“இல்லை …. நான் ஒரு வீடு வாங்கப் போவதில்லை. ஒரு கடைதான் வைப்பேன் …. அதுதான் நல்லது… வீடு எனக்கு வேண்டாம்!”

“கடையா? கடையென்றால், ரொம்ப நல்லதாச்சோ!” என்றாள் அக்சின்யா

“என்னோடு நீ வருவாயா? வருவாயா?” என்று ஆத்திரத்துடன் கேட்டான் வாஸ்கா.

“அதைத்தானே கேட்கிறாய்?” என்று படுக்கையில் புரண்டவாறே கேட்டாள் அக்சின்யா.

‘அக்சின்யா’ என்று தெளிந்த குரலில் தலையணையை விட்டுத் தலையை உயர்த்திக் கொண்டே சொன்னான் வாஸ்கா : “சத்தியமாய் …”

அவன் கையைக் காற்றில் அசைத்தவாறே, மௌனியானான். “உன்னோடு நான் எங்கேயும் வரமாட்டேன்” என்று தீர்மானமான குரலில் கூறினாள் அக்சின்யா. ஒரு கணம் கழித்து மீண்டும். எங்கேயும் வரமாட்டேன் என்று அழுத்திக் கூறினாள்.

“நான் உன்னை விரும்பினால் – நீ?” என்று வாஸ்கா கேட்டான்.

“நான் எங்கேயும் வரப் போவதில்லை”

“நான் அதைச் சொல்லவில்லை, நான் போகச் சொன்னால், போய்விடுவாயல்லவா?”

“அதுவும் முடியாது”

“நாசமாப் போக” அவன் எரிச்சலுடன் சத்தமிட்டான். ‘இங்கு வந்து எனக்குப் பணிவிடைகள் செய்கிறாய் ! பராமரிக்கிறாய்! அப்படியானால், நான் விரும்புவது போல நீ ஏன் செய்யக்கூடாது?”

“அது வேறு விஷயம். உன்னோடு வாழ்வதென்றால் அது – உன்னைக் கண்டாலே எனக்குப் பயமாயிருக்கிறது. நீ ஒரு துஷ்டன்!”

வாஸ்கா கசந்து பதிலளித்தான் : “உனக்கு அதைப் பற்றி என்ன தெரியும்? ‘துஷ்டன் / நீ ஒரு முட்டாள்! துஷ்டனென்றா சொல்கிறாய் தீமை இழைப்பதென்பது அத்தனை லேசானது என்றா நினைக்கிறாய்”

பேச்சு முறிந்தது; அவன் தனது கையால் நெஞ்சைத் தடவிக் கொடுத்தான். பிறகு குரலிலே ஆவலும், கண்களிலே பயமும் தோன்ற மீண்டும் பேச ஆரம்பித்தான்.

“நீ அதைப் பிரமாதப் படுத்துகிறாய். தீமை! – அது ஒன்றுதானா உன்னுடைய குற்றச்சாட்டு? ஆ! என்னிடமிருந்து அவர்கள் வேறு எதைத்தான் விரும்பினார்கள்? அக்சின்யா என்னோடு வரமாட்டாயா?”

“மீண்டும் அதைப்பற்றி வாய் பேசாதே. என்னால் முடியாது” என்று அக்சின்யா திடமாகச் சொல்லிவிட்டு, சந்தேக நோக்குடன் அவனை விட்டு விலகினாள்.

அவர்கள் பேச்சு மீண்டும் நின்றது. சந்திர ஒளி அறைக்குள் பிரகாசித்தது; அதன் ஒளியில் வாஸ்காவின் முகம் பசந்து போயிருந்தது. வெகுநேரம் அவன் கண்களைத் திறந்தவாறே கிடந்துவிட்டு, மீண்டும் கண்களை மூடினான். கீழ் வீட்டிலோ கூத்து, கும்மாளம், பாட்டுக்கள்!….

அக்சின்யா குறட்டைவிட ஆரம்பித்து விட்டாள்; வாஸ்கா ஆழ்ந்த பெருமூச்சு விட்டான்.

இரண்டு நாட்கள் கழிந்தன. விடுதித் தலைவி ஆஸ்பத்திரியில் வாஸ்காவுக்கு இடந்தேடி விட்டாள்.

ஒரு ஆம்புலன்ஸ் காரில் உதவி டாக்டரும், ஆஸ்பத்திரிச் சேவகனும் வந்தார்கள். அவனை மெதுவாக, கீழ் வீட்டுக்கு இறக்கி, சமையலறைப் பக்கம் கொண்டு வந்தனர். அங்கு எல்லாப் பெண்களும் வாசல் நடையில் குழுமி நிற்பதை அவன் கண்டான். அவனுடைய முகம் சுருங்கிற்று ; எதுவும் பேசவில்லை. அவர்கள் அவனை ஆர்வத்துடனும் அமைதியுடனும் கூர்ந்து நோக்கினர். அந்தப் பார்வையிலிருந்து எதுவுமே தெரிந்துகொள்ள முடியவில்லை. அக்சின்யாவும் விடுதித் தலைவியும் அவனுக்குக் கோட்டை மாட்டி விட்டார்கள். சமையல் கட்டில் பரிபூரண சவ அமைதி நிலவிற்று.

“வருகிறேன்” என்று எல்லாப் பெண்களுக்கும் தலை தாழ்த்திச் சொன்னான் வாஸ்கா: “வருகிறேன்…”

சிலர் அமைதியாகத் தலையாட்டினர்; அவன் எதையும் கவனிக்கவில்லை.

லிடா அமைதியுடன் சொன்னாள் : “குட்பைவாஸ்கா!”

“குட்பை …ஆம்…”

உதவி டாக்டரும் சேவகனும் அவனுடைய கட்கத்துள் கை கொடுத்துத் தாங்கித் தூக்கி வாசலுக்குக் கொண்டு போனார்கள். அவன் மீண்டும் அந்தப் பெண்களிடம் திரும்பிச் சொன்னான் :

“வருகிறேன். நான் உங்களிடம் நடந்து கொண்டது… அது வாஸ்தவந்தான் …”

“குட்பை – வாஸிலி!” என்று இரண்டு மூன்று குரல்கள் பதிலளித்தன.

“என்ன பிரயோசனம்!” அவன் தலையை ஆட்டினான்; முகத்தில் அவனிடம் இதற்கு முன் கண்டறியாத ஓர் புது உணர்ச்சி தோன்றியது. “என்னை மன்னித்து விடுங்கள். கிறிஸ்துவுக்காகவேனும், என்னை மன்னியுங்கள். என்னால் யார் யார் … யாரெல்லாம்…”

“ஐயோ ! அவர்கள் அவனைக் கொண்டு போகிறார்களே; என் அன்பைக் கொண்டு போகிறார்களே!” என்று அக்சின்யா கதறிக் கொண்டு பெஞ்சு மீது விழுந்தாள்.

வாஸ்கா குரல் கேட்டு விட்டு, தலையை நிமிர்த்தினான். அவன் கண்கள் பயங்கரமாய் ஜொலித்தன. அவன் அவளுடைய பிரலாபத்தை முழுதுங் கேட்டுவிட்டு, நடுங்கும் உதடுகளால் அமைதியுடன் சொன்னான்!

“சீ! என்ன முட்டாளாயிருக்கிறாய்? ஏன் இந்தப் பட படப்பு?”

“சரிசரி . புறப்படு” என்று உதவி டாக்டர் முகத்தைச் சுழித்துக்கொண்டே சொன்னார்.

“வருகிறேன், அக்சின்யா! உன்னை நான் ஆஸ்பத்திரியில் எதிர்நோக்கிக் கொண்டிருப்பேன்” என்று சத்தமிட்டுச் சொன்னான் வாஸ்கா.

அக்சின்யா மீண்டும் கதறினாள்: “ஐயோ ! எனக்கு… இனி … யார் …. ஆறுதல்?”

அந்தப் பெண்களெல்லாம் அவள் பக்கம் திரும்பி கண்ணீர் பொழியும் அவள் முகத்தை நோக்கினார்கள்.

லிடா அவளைக் குனிந்து பார்த்து, திடமான குரலில் சொன்னாள்:

“சூஸ்க்கா ! நீ ஏன் கதறுகிறாய்? அவன் இறந்து போகவில்லையே! நீ அவனைப் போய்ப் பார்க்கலாம்…….. நாளையே வேண்டுமானாலும் போகலாம்”

– சந்திப்பு – ஸ்டார் பிரசுரம், திருவல்லிக்கேணி, சென்னை – எழுதியவர்: மாக்சிம் கார்க்கி – தமிழில்: தொ.மு.சி.ரகுநாதன் – முதற் பதிப்பு – டிசம்பர் 1951

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *