சில நேரம் சில விபத்துகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 12, 2018
பார்வையிட்டோர்: 6,490 
 
 

இரயில் பயணம் அழகானது. ஜன்னல் ஓரம் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே ஹெட்செடில் இளையராஜா பாடல்களுக்கு மதி மயங்குவது ஒரு விதம் என்றால், நமது பெட்டியில் இருப்பவரிடம் பேசி கொண்டே போவது இன்னொரு விதம். எதிலும் நம்மை சலிக்காமல் கொண்டு போவது தான் இரயில் பயணத்தின் சிறப்பு. நாளை திருமணம் என்று மகிழ்ச்சியின் களிப்பில் மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸில் ஏறி என் இருக்கையில் அமர்ந்தேன் இருந்தும் அசட்டு தனம் என் எதிர் இருக்கையில் இருப்பவர் யாரென்று தெரிந்து கொள்ள எழுந்த ஆர்வம், அதற்கு ஒரு பெண் சாயலை கற்பனையிலே பூசி இருந்தது. அதுவும் வீண் போகவில்லை, என் ஆர்வத்தை தாண்டிய ஒரு அழகான பெண் எதிர் இருக்கையில் வந்த அமர்ந்தாள். இதயத்தில் பூத்த சந்தோசம் புன்னகையாய் மாறுவதற்குள் அவளது குழந்தையும் அவள் அருகில் அமர்ந்தான். என் கண்ணியம் மனதில் பதார் என அடிக்க மீண்டும் இளையராஜாவிடம் தஞ்சம் அடைந்தேன்.

இராயிலில் வழக்கமாய் திருநங்கைகள் காசு கேட்டு வருவது வழக்கம். அவர்கள் இந்த பெண்ணை பார்த்தவுடனே புன்னகைத்து அவளின் குழந்தையும் தூக்கி கொஞ்சினார்கள். எனக்கு சற்று ஆச்சரியம். அவர்கள் சென்ற பின் அந்த பெண்ணிடம், அவர்களிடம் பார்த்து இருக்குமாறு அறிவுரை கூற தொடங்கிய மாத்திரத்தில் அவள் என்னை ‌நோக்கி ஒரு முறை முறைத்தாள். என் பேச்சுப் பின்வாங்கிய நேரத்தில் அவள் சிறு கடுப்புடன் திருநங்கையர்கள் சமுதாயம் பற்றியும் அவர்களது அவல நிலை குறித்து அதற்கு நாம் தான் ‌காரணம் என பல செய்திகளை சொல்ல நானும் என் மன‌ நிலையை குறித்து வெட்கி கவனம் சிதறாமல் கேட்டு கொண்டு இருந்தேன். மேலும் திருநங்கைகள் சிலரின் படிப்புக்கு இவள் உதவி வருகிறார் என கூறினாள். அவள் மேல் உள்ள மதிப்பு மேலும் உயர்ந்தது.

பேச்சுகள் தொடர்ந்தது. அறிமுகங்கள் தாண்டி சமுதாயம் அரசியல் என தொடர்ந்த உரையாடல் அவளின் முற்போக்கு கண்டு சிறு பொறாமை எட்டி பார்த்தது. மேலும் காதலில் தொடங்கி விவகாரத்தில் முடிந்த அவளின் திருமணம் வாழ்வு சற்று கலக்கத்தை தந்தது. என்னைப்பற்றி பெரிதாக சொல்லி கொள்ள கூட எதுவும் இல்லை என்ற நிலையில் தான் இருந்தது என் வாழ்க்கை.

நான் பார்த்த, கடந்த பெண்களில அவள் ஒரு வித்தியாசம். என்னுடைய சமுதாய பார்வை ஒரு நிமிடம் திருப்பி போட்டாள். பேச்சுகள் தீர அவள் புத்தகத்தை நாடி சென்றாள். எனக்கோ திடிரென ஒரு கலக்கம். ஒரு நல்ல திரைப்படம் பார்த்த பின் ஏற்படும் கலக்கம் போன்ற ஒரு மனநிலை. என் அன்பான கண்ணியம் காணாமல் போய் மனதில் அவள் மீது ஒரு ஆசை, ஈர்ப்பு. என் வாழ்வின் மிக அற்புதமான இந்த மூன்று மணி நேரத்தை வாழ்க்கை முழுவதும் இருக்காதா என மெதுவாக ஏக்க விதைகளை விதைத்து மனம். என் கண்களோ அவளை மைய படுத்திக் அங்கும் இங்கும் ஓடியது. இது காதலா என்று எனக்கு தெரியவில்லை ஆனால் எனக்குள் இப்போது பல தரப்பட்ட எண்ணங்கள் சிறகடித்தது.

இறங்கும் இடம் வந்தது, அவளிடம் என் மனதில் ஓடுவதை சொல்ல எனக்கு போதிய தைரியம் இல்லை. நாளை திருமணம் என்ற நிலையில் இருந்த மகிழ்ச்சிகள் கரைந்து குழப்ப கடலில் தவித்தேன். கட்டாயம் என்ற பெயரில் போலி புன்னகையுடன் விடைப்பெற்று பிரிய மனம் இல்லாமல் இறங்கினேன்.

சிறு தூரம் வந்த பிறகு. ஒரு யோசனை உதித்தது. ஒரு காகிதத்தில் “I will Miss you Forever” என்று எழுதி, அவளை தேடி அவளிடம் சென்று “Sorry Don’t take me wrong” என்று சொல்லி அந்த காகிதத்தை நீட்டினென். அவள் சாதரணமாக அதை வாங்கினாள. நான் கொடுத்த மாத்திரத்தில் திரும்பி நடந்தேன்.

எல்லோர் வாழ்க்கையிலும் இது போன்ற விபத்து நடக்கிறது. சிலர் சொல்கிறார்கள் சிலர் கடந்து செல்கிறார்கள். ஆனால் இது போன்றவைகள் அழகிய தருணங்களாய் என்றும் வாடா மலர்களாக நம் மன தோட்டத்தில் பூத்துக்குலுங்கும்!!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *