சில நேரங்களில் சில விஷயங்கள்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 10,130 
 
 

சில நேரங்களில் சில விஷயங்கள் மிகச் சரியாகவே நடந்து விடுகின்றன.
அன்றைக்கு, நான் செல்ல வேண்டிய பஸ் காலியாக வந்தது. உட்கார இடம் கிடைத்தது. பத்து ரூபாயை நீட்டி நான்கு ரூபாய் டிக்கெட் போக, மீதி ஆறு ரூபாயை, மூன்று இரண்டு ரூபாய் நாணயங்களாகப் பெற்றுக்கொண்டேன். அதில் ஒரு நாணயம் நசுங்கி, நெளிந்திருந்தது.

கண்டக்டரிடம் மாற்றிக் கேட்கக் கூச்சமாக இருந்தது. கேட்டாலும் என்ன சொல்வார்… ‘நான் என்ன வீட்ல செஞ்சா கொண்டு வரேன்? உங்களை மாதிரி பாசஞ்சர் கொடுக்கறதுதான்!’ என்பார். மேற்கொண்டு, அற்பம் இரண்டு ரூபாய்க்காக அவரிடம் வாக்குவாதம் செய்து வாங்கிக் கட்டிக்கொள்ள நான் விரும்பவில்லை.

அதன்பின் ஆபீஸ் போய், அலுவலக வேலைகளில் அந்த இரண்டு ரூபாயை மறந்தே போனேன். மதியம் ஆபீஸ் பையனை அனுப்பி பிளாஸ்கில் காபி வாங்கி வரச் சொன்னபோதுகூட, அந்த நாணயத்தைக் கொடுத்து அனுப்ப மறந்துவிட்டேன்.

சாயந்திரம், வீடு திரும்ப பஸ் பிடித்தபோதுதான், அந்த நசுங்கிப்போன நாணயம் என் ஞாபகத்துக்கு வந்தது. அந்த இரண்டு ரூபாயோடு, இன்னொரு இரண்டு ரூபாய் நாணயத்தையும் சேர்த்துக் கொடுத்து டிக்கெட் கேட்டேன்.

காசை வாங்கிய கண்டக்டர், அந்த அவசரத்திலும் நாணயங்களைப் புரட்டிப் பார்த்து, நெளிந்துபோனதை என்னிடமே திருப்பிக் கொடுத்து, ‘‘என்ன சார் இது… வேற கொடுங்க’’ என்றார் எரிச்சலுடன்.

‘‘சார், காலைல இது உங்களை மாதிரி ஒரு கண்டக்டர் கொடுத்ததுதான்!’’

‘‘அப்படின்னா அதை அவர்ட்டயே கொடுத்திருக் கணும். புடி, புடி… வேற காசு கொடு!’’

அவர் பேச்சில் மரியாதை குறைந்ததை கவனித்தவனாய், ‘‘வேற காசு இல்லே’’ என்றேன் எரிச்சலோடு.

‘‘இல்லையா… அப்ப கீழ இறங்கி அடுத்த பஸ்ஸல வா!’’ என்ற கண்டக்டர், விசிலை ஊதினார்.

‘‘என்னது, கீழ இறங்கணுமா? எதுக்கு? பப்ளிக்குக்காகத்தான் பஸ் ஓடுது. நாங்க டிக்கெட் எடுத்தாதான் உனக்குச் சம்பளம்… தெரியுமில்லே?’’

‘‘தோடா! இவரு கொடுக்கிற இந்த செல்லாக் காசுலதான் எங்களுக்குச் சம்பளம் தராங்க. சும்மா வளவளனு பேசாம, இறங்குய்யா!’’

கடுப்புடன், வேறு ஒரு இரண்டு ரூபாய் நாணயத்தை எடுத்து நீட்டி, ‘’இந்தா, டிக்கெட் கொடு!’’ என்றேன்.

வெடுக்கென்று அதைப் பிடுங்கிப் பையில் போட்டுக்கொண்ட கண்டக்டர், ‘’இதை முன்னாடியே கொடுக்கறது’’ என்றபடி டிக்கெட் கிழித்து நீட்டினார்.

ஒரு வாரமாக, நானும் அந்த நசுங்கிப்போன இரண்டு ரூபாய் நாணயத்தை மாற்ற எவ்வளவோ முயற்சி செய்தும், பலன் இல்லாமல் போயிற்று. டீக் கடை, பங்க் கடை என எல்லா இடத்திலும் அது செல்லாதென நிராகரிக்கப்பட்டது. தூக்கிப் போடவும் மனசில்லாமல் அதைப் பர்ஸிலேயே போட்டு வைத்திருந்தேன்.

ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று, நண்பன் ஒருவன் என்னைப் பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்தான். பேசி முடித்து விடைபெறும்போது, வழியனுப்புவதற்காக நானும் அவனுடன் பஸ் ஸ்டாப் வரை போனேன். பஸ் வரும் வரை பேசிக்கொண்டு நின்றோம். அப்போது ஒரு பிச்சைக்காரன் வந்து எங்கள் முன் கை நீட்டினான். நண்பனிடம் சில்லரை இல்லை. அந்த நசுங்கிப் போன நாணயத்தைத் தவிர, சில்லரையாக என்னிடமும் வேறு பைசா இல்லை. அதை எடுத்து அவனிடம் காட்டி, ‘‘இந்த ரெண்டு ரூபாதாம்பா இருக்கு. ஆனா, இது செல்லுமானு தெரியாது’’ என்றேன்.

அவன், ‘‘பரவாயில்லே சாமி, போடுங்க’’ என்று அலுமினியத் தட்டை என் முன் நீட்டினான். நான் நாணயத்தைப் போட்டதும், பெரிதாக ஒரு கும்பிடு போட்டு விட்டு நகர்ந்தான்.

கொஞ்ச நேரத்தில் பஸ் வரவும், நண்பனை அனுப்பிவிட்டு நின்ற எனக்கு, ஏதோ பாரம் இறங்கியது போன்ற உணர்வும், கூடவே செல்லாத காசை அந்தப் பிச்சைக்காரன் தலையில் கட்டிவிட்டோமே என்கிற குற்ற உணர்வும் எழுந்தது.

லேசாகத் தலை வலிப்பது போல் இருக்கவே, அருகில் இருந்த டீக்கடை நோக்கிச் சென்றேன். அங்கே, அந்தப் பிச்சைக்காரன் இருந்தான். நான் தந்த நசுங்கிப்போன அந்த இரண்டு ரூபாய் நாணயத்தை எடுத்து நீட்டி, டீ கேட்டான். கடைக்காரர் எதுவும் சொல்லாமல் அதை வாங்கிப் போட்டுக்கொண்டு, டீ கொடுத்தார். நான் எவ்வளவு முயற்சி செய்தும் மாற்ற முடியாத அந்த நாணயம் இப்போது எந்தச் சிக்கலுமின்றி செல்லுபடியானதில், எனக்கு ஒரு வித சந்தோஷமும், நிம்மதியும் கிடைத்தாற் போலிருந்தது.

ஒரு ஸ்ட்ராங் டீ போடச் சொல்லி, நிதானமாகக் குடித்து முடித்து கிளாஸைக் கொடுத்துவிட்டு, பத்து ரூபாயை எடுத்து நீட்டினேன். கடைக்காரர் வாங்கிப் போட்டுக்கொண்டு, மீதிச் சில்லரை தந்தார். அதில், நசுங்கி நெளிந்துபோன அந்த இரண்டு ரூபாய் நாணயமும் இருந்தது.

நான் மாற்றித் தரச் சொல்லிக் கேட்கவில்லை.

சில நேரங்களில் சில விஷயங்கள் மிகச் சரியாகவே நடந்துவிடுகின்றன.

வெளியான தேதி: 26 பெப்ரவரி 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *