மழை இன்னும் விட்டபாடில்லை, மாடியிலிருக்கும் ஜன்னல்கதவினை திறந்துவிட்டான் குபேரன், மேற்கிலிருந்து வந்த குளிர்க்காற்று அவனது முகத்தை இதமாக வருடிச் சென்றது, அந்த ஸ்பரிசம் அவனுக்கு பிடித்திருந்ததினால் சிறிது நேரம் ஜன்னல் வழியாகத் தெரியும் இருண்ட ஆகாசத்தை பார்த்துக் கொண்டேயிருந்தான். பக்கத்தில் இருக்கும் குளத்திலிருந்து வரும் தவளைகளின் சப்தம் குபேரனின் காதில் தெளிவாகக் கேட்டுக் கொண்டிருந்தது. மழை ஆக்ரோசமாக விடாமல் “ச்சோ” வென பெய்து கொண்டிருந்தது ஊரே இருளில் மூழ்கியிருந்தது, வானில் இடியும், மின்னலும் மாறி மாறி பேசிக் கொள்வதைப் போல் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது, ஊரே மழையின் கட்டுக்குள் அடங்கியுள்ளது போன்ற உணர்வு குபேரனின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
பத்து நாட்கள் விடுமுறையில் சில தினங்கள் முன்புதான் டெல்லியிலிருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளான் குபேரன், இரயிலில் வரும் பொழுது அவன் இருந்த இரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டு பல பேர் உயிரிழந்ததில் குபேரன் எப்படியோ தப்பித்து வந்துவிட்டாலும் அந்த விபத்தில் பலியான குழந்தைகளின் முகங்களும், முதியவர்களின் முகங்களும், குபேரனின் மனதில் சுழன்றுகொண்டேயிருந்தனர். எல்லாவற்றையும் விட அவன் மனைவி லட்சுமி சொன்ன வார்த்தைதான் அவனை மிகவும் வாட்டி எடுத்தது.
இரயிலேயே செத்து தொலைஞ்சிருந்தா பணமாவது கெடச்சுருக்கும், நீ இருந்து என்னத்துக்கு, ஒரு பிரையோஜனமும் இல்லை எனக் கூறிவிட்டாள். யாருக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ அவளே இந்த மாதிரி பேசியது குபேரனின் நெஞ்சில் பளுக்க காய்ச்சிய கத்தியினால் குத்துவதை போன்றிருந்தது.
லட்சுமி ஏன் தன்னை புரிந்து கொள்ள மறுக்கிறாள் என தானாகவே புலம்பிக் கொண்டான். காலையில் மனைவி சொன்ன வார்த்தைகள் அவன் மனதில் தேளைப்போல் கொட்டிக் கொண்டிருந்தது.
இஞ்சினியரு மாப்ளேன்னு ஏமாந்து எங்கப்பா ஒனக்கு என்னைய கட்டிவச்சுட்டு செத்து போயிட்டாரு, இஞ்சினியரு படுச்சு என்னாத்துக்கு, புத்தகத்த மட்டும் வாங்கிவைக்க தெரியுது.. பணம் சேக்கத் தெரியாத ஒனக்கெல்லாம் ஏன் பொண்டாட்டி, அவன் அவன் எப்படி பொழைக்கிறான், பக்கத்து வீட்டு தனலட்சுமி எத்தாம் பெரிய வீடு கட்டிட்டா, அடுத்த தெரு கலைவாணியும் வீடுகட்ட போறாங்களாம் , நீயும் இருக்கையே,சில்லறைக்கு கூட லாயக்கில்லாம..
ஆகாசத்தையே பார்த்துக் கொண்டிருந்த குபேரன், ஜன்னல்கதவினை மூடினான். பின் தன் வாசிப்பு அறைக்கு வந்தபோது மதியம் லட்சுமி கிழித்து போட்ட நூத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் அறையெங்கும் சிதறிக்கிடப்பதைக் கண்டான்.
, கம்பனும், பாரதியும், ஷெல்லியும் கண்ணதாசனும், தஸ்தாயேவேஸ்கியும், டால்ஸ்ட்டாயும், விபூதிபூஷண் பந்தோபாத்யாய –வும் அறையெங்கும் மூலைக்கொருவராய் சிதறிக்கிடந்தனர். பொழுது விடிந்ததும், இங்கிருந்து கிளம்பிவிட வேண்டும், என அவனாகவே கூறிக் கொண்டே, கண்களை மூடி இரவோடும், மழையின் சப்தத்தோடும் ஐக்கியமானான்.
ஊரிலிருந்து வந்து இரு வாரங்கள் ஆனாலும், ஊரைப்பற்றிய நினைவுகள் மனதில் வந்து கொண்டேயிருந்தன. விடுப்பு வாங்கிய சான்றிதலோடு மிக நிதானமாக தன் இருக்கையை விட்டு எழுந்து நடந்தான் குபேரன். ஒரு வார காலம் எந்த வித பிக்கல் பிடுங்கள் இன்றி அமைதியான இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற அவனது எண்ணம் இன்றுதான் நிறைவேறியது. குளிர் சாதன வசதி செய்யப்பட்ட தனது அலுவலகத்திலிருந்து வெளியில் வந்ததும் சாலையெங்கும் விரவியிருந்த வெயில் குபேரனை அன்பாக இருகரம் சேர்த்து அணைத்துக் கொண்டது.
சாலையில் மிக சுதந்திரமாக நடந்தான் எந்த ஒரு பரபரப்பும் அவனுக்கு இல்லை, பரபரப்போடு வீட்டிலிருந்து புறப்பட்டு , பரபரப்போடு அலுவலகம் வந்து மீண்டும் பரபரப்போடு வீட்டிற்கு சென்று வாழும் மனிதர்களை பார்க்கும் பொழுது அவனுக்கு எரிச்சலாய் வந்தது ச்சீ எத்தனை பரபரப்பு.. என நொந்து கொண்டான். சாலை ஓரத்தில் புங்கை மரங்களும், வேப்ப மரங்களும் விரிந்து கிடந்தன. அதன் நிழலில் தள்ளுவண்டியில் பழரசம் விற்பவர்கள் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர்.
குபேரனுக்கு பழக்கமான இப்ராகிமின் கடை அங்குதான் உள்ளது. டெல்லியில் குபேரன் விளம்பர கம்பெனியொன்றில் டிசைனராக வேலைக்கு சேர்ந்த நாள் முதல் அவனுக்கு இருக்கும் நண்பர்களிலேயே , ஆத்மார்த்தமாக தனது சுக துக்கங்களை இப்ராகிமிடம்தான் பகிர்ந்து கொள்வான்.
இன்று எப்படி தன்னை மறந்து இவ்வளவு வேகமாக நடந்து செல்கிறான் என புரியாமல் குபேரனை நோக்கி சப்தமிட்டான் தன் முகத்தில் வலியும் வியர்வையை கைகளால் துடைத்துக் கொண்டே இப்ராகிம்.
அவன் வட மாநிலத்தை சேர்ந்தவன் என்பதால் குபேர்.. யேய் குபேர் என சப்தம் போட்டான். அவ்வேளையில் சிறிது தூரம் கடந்து சென்றிருந்த குபேரனின் செவிகளில் தாமதமாகத்தான் இப்ராகிமின் குரல் விழுந்தது.
என்னப்பா இப்ராகிம் எனக் கூறிக் கொண்டே விரைவாய் நடந்து அவன் கடையின் அருகில் வந்தான் குபேரன். தொழில் எல்லாம் எப்படி போகிறது என விசாரித்தான். அவன் படியாகே.. பகுத் படியாகே எனக் கூறிக் கொண்டே , என்ன என்னை கூட பார்க்காமல் வேகமாக போற எனக் கேட்டான்.
குபேரனின் சிறிய புன்னகையொன்றே அதற்கு பதிலாய் இருந்தது.
இப்ராகிம் சிவப்பாக குள்ளமாக இருப்பவன். அவன் கூர்மையான நாசியும் அழகிய கண்களும் அனைவரையும் வசீகரிக்கும், மேலும் அவன் வசீகரிக்கும் அன்பான பேச்சினை கேட்பதற்காகவே பக்கத்தில் இருக்கும் அலுவலகங்களில் இருந்து அவனிடம் பழரசம் குடிக்க வருவார்கள். எவ்வளவு கூட்டம் சேர்ந்தாலும் அனைவருக்கும் நேர்மையாகவும், தரமாகவும் பழரசங்களை செய்து தருவான்.
வெக்கை மிகுந்திருந்தது. சாலை நெடுகிலும் பழரசங்கள் விற்ப்பவர்கள், எழுமிச்சம் பழம் விற்ப்பவர்கள் என நடைபாதை வியாபாரிகள் நிறைய இருந்தனர்.இப்ராகிம் தனது பணியில் மூழ்கி இருந்தான். அவனது தள்ளுவண்டியில் சிதறிக் கிடந்த சில்லறைகள் குபேரனின் கண்ணில் பட்டது,சில்லறைகளின் மீது பட்ட சூரிய ஒளி, குபேரனின் முகத்தில் எதிரொலித்தது.சில்லறைகளைக் கண்டதும் லட்சுமி சொன்ன வார்த்தைகள் குபேரனின் நினைவில் வந்தது .தன்னை சில்லறைகள் கேலி செய்வதாக எண்ணிக் கொண்ட குபேரன் அங்கிருந்து வேகமாக சாலையை நோக்கி திரும்பி நடந்தான்..
டெல்லியிலிருக்கும் அடர்ந்த மரங்களைப் பார்ப்பது எப்போதுமே குபேரனுக்கு பிடிக்கும், அந்த மரங்கள்தான் எவ்வளவு அழகாகவும் கம்பீரமாக உள்ளன, எத்தனை மனிதர்களை இவைகள் பார்த்திருக்கும், மனித வாழ்க்கையின் ரகசியங்கள் எவ்வளவை அறிந்திருக்கும் என எண்ணிக்கொண்டான். விபூதிபூஷணின் நாவலில் வரும் மரங்களின் வருணனைகள் அவன் மனதில் வந்து சென்றது.
தொலை தூரத்திலிருந்து வரும் இரயிலின் ஓசை மெல்ல கேட்டது குபேரனின் செவிகளுக்கு, இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவன் சம்பளம் வாங்கியிருந்தான். மனைவிக்கு கொடுத்தது போக சிறிது கை செலவுக்கு வைத்திருந்தான்.வெக்கை மிகுந்திருந்தது. இப்போது இரயிலின் ஓசை மிக தெளிவாக அவனது செவிகளுக்கு கேட்டது. குபேரன் தில்லி பழைய இரயில் நிலையத்தை அடைந்திருந்தான். பயணிகள், சுமை தூக்குபவர்கள், விலைமாதர்கள், போலீஸ்காரர்கள், இராணுவத்தினர்கள் என இரயில் நிலையமே பரபரப்பாய் இருந்தது.
டெல்லியிலிருந்து ஹரிதுவார் வழியாக ரிஷிகேஸ் சென்று அங்கு பிரவாகமாக ஓடிக் கொண்டிருக்கும் கங்கையில் குளித்து, கரைகளில் அமர்ந்து கங்கையை பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும் என அவன் மனதில் எண்ணிக் கொண்டான். இரயில் நிலையத்தை ஒட்டியிருந்த தேநீர் கடையில் நின்றான். மனைவியின் நினைவுகள் மனதில் வந்துகொண்டேயிருந்தது. எவ்வளவு முயன்றும் ஏன் அவளின் நினைவை என்னால் மறக்க இயலவில்லை, என நினைத்துக் கொண்டே சிகரெட்டை வாங்கி பற்றவைத்தான், ஏனோ சிகரெட்டை உள்ளிழுத்து வெளி விடும்போது, புகையை போல தனது கவலைகளும் கலைந்து விடும் என நம்பினான்.
நடைபாதை எங்கும் எளிய மனிதர்கள் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தனர். வெக்கை மிகுந்திருந்தது. பிச்சைக்காரன் ஒருவன் ஒன்றிரண்டு சில்லறைகளுடன் தட்டைக் குளுக்கிக் கொண்டே குபேரனுக்கு முன்பு நீட்டினான் , அந்த பிச்சைக்காரன் முகத்தை வெள்ளை தாடி முழுவதும் மறைத்து அவனது கண்களும், நாசியும், மட்டுமே தெரிந்தது அவன் முகமெங்கும் ரோமங்கள் புற்களைப்போல் முளைத்திருந்தது. அந்த பிச்சைக்காரன் தொடர்ந்து தனது சிறிய பித்தளைத் தட்டினை குபேரனின் முன் ஆட்டிக் கொண்டேயிருந்தான் அவனது வாய் எதுவும் பேசவில்லை, ஆனால் கண்கள் குபேரனை உண்ணிப்பாக பார்த்துக் கொண்டேயிருந்தது.
குபேரன் தன் சட்டைப்பையிலிருந்து ஐந்து ரூபாய் சில்லறையை எடுத்துப் போட்டான். பிச்சைக்காரன் குபேரனை விட்டு நகர்ந்து பக்கத்தில் இருந்த தேநீர் கடைக்கு சென்று, தேநீரும் ரொட்டியும் வாங்கினான், அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே அவனருகில் வந்த சிவப்பு நிற நாய்க்கு கொஞ்சம் தான் சாப்பிடும் ரொட்டியில் இருந்து பிய்த்துப் போட்டான். இந்த செயல் குபேரனின் மனதில் சலனத்தை உண்டாக்கியது. குபேரன் தன் மனதில் “சில்லறைகள் அனைவருக்கும் தேவைப்படுகிறது சிலருக்கு அளவானதாக, சிலருக்கு அளவுக்கு அதிகமாகவும் தேவைப்படுகிறது என எண்ணிக் கொண்டான்.
இரவுதான் இரயில் அதுவரை என்ன செய்வது என எண்ணிக் கொண்டே இரயில் நிலையத்தை சுற்றி நடக்கத் துவங்கினான். அவன் கண்களில் பிச்சைக்காரர்கள்தான் நிறைய தெரிந்தனர். அவர்கள் கைகளில் ஏந்தி திரியும்சில்லறைகள்.
விண்மீண்கள் வானில் சிதறிக் கிடந்தன. வானில் முழு நிலவு அழகாகத் தெரிந்தது, இன்று பௌர்ணமியாக இருக்க வேண்டும் என மனதில் எண்ணிக் கொண்டான் குபேரன். சில மணி நேரத்திற்குப் பின் டேராடூனுக்கு செல்லும் இரயில் வந்து சேர்ந்தது. குபேரன் ஜென்ட்ரல் கம்பாட்மெண்ட்டில் ஏறிக் கொண்டான். குபேரனின் மனம் ஏழை எளிய மனிதர்களுடன் பயணிக்க விரும்பியது.
இரயிலில் ஏறி தனக்கென ஒரு சீட்டை பிடித்துக் கொண்டான், கூட்டம் அதிகமாக இருந்தது, பெரும்பாலும் சந்யாசிகள் கைகளில் தீர்த்தக் குவளையுடன். சிலர் கழிவறைக் கதவினை திறந்து விட்டும் அமர்ந்திருந்தனர். அந்தக் கூட்டத்தில்தான் பச்சை நிற சேலை உடுத்திய ஒரு நடுத்தர வயது பெண்ணை கண்டான் குபேரன். அவள் உதடு நிறைய சிவப்பு நிற சாயம் பூசியிருந்தாள். அவள் குபேரனின் அருகில் வந்தமர்ந்தாள் “ஏக் பார்க்கிலியே தீன்சோ ரூபியா என்றாள். அவள் அடிக்கடி புகையிலையை கைகளில் தேய்த்து வாயின் இடுக்கில்வைத்துக் கொண்டாள். ஏன் இந்த தொழில் செய்கிறாய் உடல் நலம் கெட்டுவிடாதா என்றான் குபேரன். அதற்கு அந்த பெண் “சாப் ஹியாக்கரூன் ஜீனேக்கிலியே சில்லர் சாய்யேன்னா என்றாள்.
அவள் சில்லர் என சில்லறையை பற்றி பேசியதும் குபேரனின் மனதில் லட்சுமி சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்து சென்றது. இப்போது அந்த பெண்ணின் முகத்தை பார்க்கவே எரிச்சலாய் இருந்தது, கண்களை மூடினான் பகலில் அலைந்து திறிந்த அயர்வு குபேரனுக்கு நல்ல தூக்கத்தை அளித்தது. ஜன்னலுக்கு வெளியே நிலவு வானில் காய்ந்து கொண்டிருந்தது. இரயில் இரவில் மிதந்து செல்வதைப்போன்ற உணர்வு குபேரனின் மனதில் உதித்தது.
இருள் மெள்ள மெள்ள அமிழ்ந்து பகல் மெள்ள மெள்ள முளைத்துக் கொண்டிருந்தது. பறவைகள் வானில் பறக்கத்துவங்கின. கங்கை பாய்ந்து ஓடிக் கொண்டிருக்கும் சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
ஹரிதுவார் இரயில் நிலையத்தில் இறங்கி தேநீர் அருந்தி விட்டு, இரயில் நிலையத்தை விட்டு வெளியேறினான் குபேரன்.
சில்லென்ற காற்றும், நதியோடும் சப்தமும் காதிற்கு இனிமையாய் கேட்டது. மனதில் நிரம்பியிருந்த வலிகள் அனைத்தையும் நதி களைந்துவிடுகிறது என குபேரனின் உதடுகள் முணுமுணுத்தன. சுற்றிலும் இயற்கை கம்பீரமாய் நின்றிருந்தது. ஓடித்திறியும் கங்கையின் அழகையும், பசுமையான வனங்களையும், உற்சாகமான பறவைகளையும் கண்டு கொண்டே ஹரிதுவாரிலிருந்து ரிஷிகேஸ் வந்து சேர்ந்தான் குபேரன்.
கங்கையில் நீராடிவிட்டு, கங்கையின் கரையில் அமர்ந்து நதியின் மகாசப்தத்தை கேட்டுக் கொண்டிருந்தான். நதிக்கரையில் இருக்கும் பல்வேறு வண்ணங்களில் இருக்கும் கூழாங்கற்களைக் கண்டு வியந்தான் நதியிலிருக்கும் கூழாங்கல் ஒன்றை எடுத்து செவியில் வைத்தான். நதியின் மகாசப்தம் கூழாங்கல்லில் உறைந்திருப்பதாக எண்ணிக் கொண்டான். அவ்வேளையில் நதிக்கரையோரம் ஒரு சிறுவன் எதையோ தேடிக் கொண்டிருந்தான். நதியில் இருக்கும் கற்களை புரட்டிப் போட்டுக் கொண்டே மிக நிதானமாக தேடிக் கொண்டிருந்தான். நீண்ட நேரம் தேடியும் அவனுக்கு எதுவும் கிடைக்கவில்லை, இருந்தும் தொடர்ந்து தலையை குணிந்தவாறே தேடிக் கொண்டிருந்தான். குபேரன் அமைதியாய் கரையில் அமர்ந்து அந்த சிறுவனையே பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்குப் பின் என்ன தேடிக் கொண்டிருக்கிறாய் என கேட்டதற்கு சிறுவன் தலையை உயர்த்தி குபேரனைப் பார்த்து சில்லர் (சில்லறை) என்றான்.
– கணையாழி ஜூலை 2013 மாத இதழில் வெளிவந்துள்ள சிறுகதை