சிலாபோகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 9, 2023
பார்வையிட்டோர்: 2,088 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஊருக்கு ஏற்ற கோவில்; கோவிலுக்கு ஏற்ற குருக்கள். மூன்று வருஷத்துக்கு முன் நான் தஞ்சா வூர் போயிருந்தபோது சின்னமி குருக்களைச் சந்திக்க நேர்ந்தது. மாலை ஆறு மணிக்கு நன்னிலத்திலிருந்து மாட்டு வண்டியில் ஸ்ரீவாஞ்சியம் போய்விட்டு வருகையில் திடீரென்று மழை பிடித்துக்கொண்டது. மழையென்றால் மழையா? கன்னத்தில் அறைவதுபோல் இருந்தது, ஒவ்வொரு தூறலும். மாடோ மிரண்டு அடி எடுத்து வைக்க மறுத்தது. வண்டிக்காரன் உயிருக்குப் பயந்து வண்டிக்குள் பதுங்கிக் கொண்டான். மையிருட்டு! நடு நடுவே தோன்றும் மின்னலால் ஓடும் ஆற்றின் பிரவாகம் தெரிந்தது.

“பக்கத்தில் ஊர் ஒன்றும் இல்லையா, அப்பா?” என்று கேட்டேன் நான்.

“இருக்குங்க; இன்னும் அரை மைல் போவணுமே! மாடு எழுந்திருச்சாத்தானே?” என்றான் வண்டிக்காரன்.

“மெதுவாகக் கிளப்பிப் பாரப்பா!” என்றார் வண்டியிலிருந்த என் மாமா. வண்டிக்காரனின் ஹிம்ஸை தாள முடியாமல் மாடு தள்ளாடிக்கொண்டு கிளம்பிற்று.

ஊர் என்று சொன்னானே தவிர, வீடு, வாசல் ஒன்றையும் காணோம். இடிந்து சரிந்த வீடு ஒன்றின் பக்கம் வண்டியைக் கொண்டுபோய் நிறுத்தினான் வண்டிக்காரன். வீட்டில் சந்தடியே இல்லை. வண்டிக்காரன் வாசற்படியண்டை போய்ப் பல முறை கூப்பிட்டபின் நடுங்கும் குரலில், “எந்த அபஸ்மாரம் எழவு கொடுக்கிறது?” என்று சொல்லிக்கொண்டே கிழவர் ஒருவர் வெளியே வந்தார்.

வந்தவர் அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “மழைக்குத் தங்க வந்தாயா? இல்லை, வீட்டில் இருக்கிற ஓட்டைச் செம்பைச் சுருட்டிக்கொண்டு போக வந்தாயா?” என்று கேட்டார்.

அவன் பதில் சொல்வதற்குள், “ஸ்வாமி! ஸ்ரீவாஞ்சிய தரிசனம் எங்களை நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டது. மழையைப் பார்த்தால் ஊர் போய்ச் சேரமுடியும் என்று தோன்றவில்லை. இராப் பொழுதை இங்கே கழிப்பதற்கு உதவி செய்யவேண்டும்” என்றார் மாமா. அவர் இவ்வளவு விநயமாகப் பேசியது இதுதான் முதல் தடவை. கிழவர் பேசாமல் எங்களை உள்ளே அழைத்துக் கொண்டு போனார். கூடத்தில் எரிந்து கொண்டிருந்த கரியேறிய விளக்கைத் தூண்டிவிட்டு, “மழையாவது மழை! என் ஆயுளில் இதுதான் இரண்டாவது தடவை இப்படி மழை கொட்டுகிறது. என்ன, தெரிந்ததா? எனக்கு இருபத்தைந்து வயசிலே இந்த மாதிரி ஒரு தரம் மழை பெய்தது. பாவம், சிறிசோடு தனியாக அகப்பட்டுக்கொண்டீர்களே?” என்று அநுதாபப்பட்டார்.

வானம் டமடமவென்று இடித்தது.

நான் காது இரண்டையும் பொத்திக்கொண்டேன்.

இடியென்றால் எனக்கு மகா பயம். என்னைப் பார்த்துக் கிழவர் தம் பொக்கை வாயைத் திறந்து சிரித்து விட்டு, “சிறிசு, பயப்படுகிறது. ஏனம்மா, பயமாயிருக்கா?” என்று விசாரித்தார்.

“இடியென்றால் யாருக்குத்தான் பயமாயிருக்காது?” என்றேன் நான்.

“உனக்குப் பயம் தோணாமல் இருக்க ஒரு கதை சொல்லட்டுமா?” என்றார் கிழவர்.

இது மாமாவுக்குப் பிடிக்கவில்லை.

“நீ என்ன ராத்திரி பூராவும் கதை கேட்டுக்கொண்டிருக்கப் போறயா?” என்று கேட்டார்.

“ஆமாம், உங்களுக்குத் தூக்கம் வந்தால் தூங்குங்கள். இந்த இடியிலும் மின்னலிலும் நான் தூங்கவே மாட்டேன்” என்றேன். மாமா துண்டை விரித்துக் கொண்டு படுத்தார். அதற்குள் எப்படித் தூங்கினாரோ? அதுதான் ஆச்சரியம்.

“உன் பேர் என்னம்மா?” என்றார் கிழவர்.

பெயரைச் சொன்னேன்.

“ஆகா ! லட்சணமாக இருக்கிறது” என்று சொல்லவிட்டு, நான் கேட்பதற்குள், “என் பேர் சின்ன ஸ்வாமி குருக்கள். இந்த ஊர் மங்களேசுவரனும், மங்களாம்பிகையுந்தான் எனக்குத் துணை. கதை சொல்லட்டுமா?” என்றார் குருக்கள்.

“ஊம்” என்றேன் நான்.

“இந்த ஊரின் பேர் தெரியுமா உனக்கு?”

“தெரியாதே! தஞ்சை ஜில்லாவுக்கே நான் புதிது” என்றேன்.

“ஓகோ, அப்படியா? இலந்தங்குடி என்று பெயர். ஒரு காலத்தில் நன்றாயிருந்த ஊர் இப்போது குட்டிச் சுவரும், கொல்லை வெளியுமாகக் கிடக்கிறது. நூறு வருஷத்துக்கு முன்னே யாரோ ஒரு புலவர் இங்கே வந்தாராம். அகோர வெயில். ஒரு பிராமணர் வீட்டில் போய்ச் சாப்பாடு கேட்டாராம். அந்தப் பிராமணன் கொடுக்காததனால் அறம் பாடிவிட்டுப் போய்விட்டாராம். என்ன தெரிந்ததா? பகவான் மாத்திரம் என்ன பண்ணுவார்? புலவர் வாக்கில் வந்தது வந்ததுதானே? நாளைக்கு அழைத்துக்கொண்டுபோய்க் காட்டுகிறேன். கோவில் என்னவோ ஜீரண தசையை அடைந்து வருகிறது. உள்ளே கால் வைக்க இடமில்லாமல் மேடும் பள்ளமுந்தான். ஆனால், ஈசுவரன் மாத்திரம் தேஜஸ் குறையவில்லை. யாராவது தர்மப் பிரபு வந்து கும்பாபிஷேகம் செய்து வைத்தால் தேவலை. இந்தக் காலத்தில் யார் அந்தக் கைங்கரிய மெல்லாம் செய்கிறார்கள்? அந்தப் பணத்தைப் போட்டு நாலு சினிமாக் கொட்டகைகள் கட்டலாமே! என்னவோ, ‘நரா யோகம், சிலா போகம்’ என்று சொன்ன மாதிரி பகவானுக்கு இஷ்டம் வரபோது யார் மனசிலாவது புகுந்து நடத்திக் கொள்ளட்டுமே. என்ன நான் சொல்வது?” என்றார் கிழவர்.

“வாஸ்தவம்” என்றேன் நான்.

கிழவர் மேலும் ஆரம்பித்தார்:

“கிராமத்தில் குடிவளம் இல்லை. முப்பது வருஷத்துக்கு முன்னே குடியானத் தெருவில் தன் முறைப் பெண்ணை வேறொருத்தன் கல்யாணம் செய்துகொண்டான் என்று ஒரு கலகம் ஆரம்பித்தது. கோர்ட்டு வரைக்கும் போய், எல்லாரும் ஆஸ்தியைத் தோற்றுவிட்டுத் தலையில் துணியைப் போட்டுக்கொண்டு பட்டணம் பக்கம் போய்விட்டான்கள். குடிவளம் இல்லாத ஊரில் நிலத்தை யார் வாங்குகிறார்கள்? பாதிக்குமேல் கரம்பாய்க் கிடக்கிறது. எனக்குக் கோவில் மான்யம் முக்கால் காணி நிலம். தோட்டக்காரன் ஒருத்தன் பழைய விசுவாசத்தை வைத்துக்கொண்டு பயிரிடுகிறான். அவன் பார்த்துக் கொடுத்தது. ஊரில் பதினைந்து வீடுகளுக்குமேல் உருப்படியாய் இல்லை” என்றார் கிழவர்.

“உங்களுக்குப் பந்துக்கள் யாரும் இல்லையா?” என்றேன்.

“முதலிலேயேதான் சொன்னேனே! ஈசுவரனும் அம்பிகையும் தவிர வேறு யாரும் இல்லை. தங்கை பிள்ளை திருச்சிப் பள்ளியில் வேலையாயிருக்கிறான் ‘என்னவோ அப்பா, என் கட்டை கீழே விழுந்தால் ஆனதைச் செய்து விடு’ என்று கூறியிருக்கிறேன். ‘என் சம்சாரம் போய் இருபது வருஷம் ஆகிறது. அவள் வீட்டை மெழுகிக் கோலம் போட்டால் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோவிலுக்குக் கோலம் போடுவாள். ஊர் ஜனங்கள் அத்தனை பேரும் மெச்சுவதைக் கேட்டு எனக்கே பெருமை தாங்காது. பிரதி வெள்ளிக்கிழமையும் ஒரு ரூபாய் போல் சில்லறையும் தேங்காய் பழம் முதலியவைகளும் கிடைக்கும். அந்த ஈசுவரனுக்குத் தான் என்ன மனசோ தெரியவில்லை. அந்த மகாலக்ஷ்மி போய்விட்டாள். யாரைச் சொல்லுகிறேன் தெரிந்ததா? என் சம்சாரத்தைத்தான். அப்புறம் ஊருக்கே பிடித்தது சனியன்” என்றார்.

“யாரோ அறம் பாடி ஊர் இப்படி ஆய்விட்டது என்றீர்களே!”

“அத்தோடு இதுவுந்தான் என்று வைத்துக்கொள்ளேன்” எனறார் கிழவர்.

“ஏதோ கதை சொல்லுவதாகச் சொன்னீர்களே” என்றேன் நான்.

“கதையா? இப்பச் சொன்னேனே கதை மாதிரி இல்லையா?” என்றார் கிழவர்.

“சரிதான்.”

“உதயத்துக்கு இன்னும் நாலு நாழிகை இருக்கு. கொஞ்சம் தூங்கு. விடிந்ததும் ஸ்வாமி தரிசனம் செய்து விட்டுக் கிளம்பலாம்”.

எனக்குத் தூக்கமே வரவில்லை. ‘உலகில் உற்றார் உறவினர் தாங்கும்போதே ஒரு கஷ்டம் வந்துவிட்டால் நாம் பிரமாதப்படுத்துகிறோமே. இந்தக் கிழவருக்கு யார் இருக்கிறார்கள்? கள்ளங் கபடற்ற இந்த ஆத்மா ஈசுவர கைங்கரியம் ஒன்றுக்காகவே உயிர் வாழ்கிறது அல்லவா?’ என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.


விடியற்காலம் வீசும் குளிர்ந்த காற்றினால் நான் கண்ணயர்ந்தபோது குருக்கள் ஸ்நானம் செய்துவிட்டு ஈர வேஷ்டியோடு, “அம்மா, எழுந்திருக்கவில்லையா? உதயமாய் விட்டதே” என்று எழுப்பினார். காலையில் வீட்டுக்கு வெளியே வந்து அவ்வூரைச் சுற்றிப் பார்த்ததில் குட்டிச் சுவர்களும், சரிந்த கூரைகளும், சப்பாத்திப் புதர்களும் நிறைந்திருந்தன.

குருக்கள் வீட்டுக்கு மேலண்டையில் கோவில்.

“இதுவா மங்களேசுவரன் கோவில்? நமக்குக் கஷ டம் ஏற்படும் காலத்தில் நம்மை அறியாமல், ‘ஸ்வாமி தலையில் கோவில் இடிந்து விழ’ என்று சாபம் கொடுக்கிறோமே, அது சில சமயம் பலித்துவிடும்போல் இருக்கிறதே?” என்றேன்.

“அதுதான் சொல்லிவிட்டேனே, நராயோகம் சிலா போகம்” என்றார் குருக்கள்.

‘மூலக் கிருகத்தில் இந்தத் தள்ளாத கிழவர் எப்படி நுழையப் போகிறார்?’ என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது கிழவர் விடு விடு என்று உள்ளே போய், “வாருங்கள்” என்று அழைத்தார். பகவானுக்கு அபிஷேகம் செய்யவேண்டிய வேலையே இல்லை. ஆவடையாரில் ஜலம் தேங்கியிருந்தது. ஷட் காலமும் அபிஷேகப் பிரியனான மகேசுவரன் ஜலத்தில் மிதந்துகொண்டிருந்தார்!

பக்கத்திலிருந்த விளக்கைத் துடைத்து ஏற்றிவிட் டுப் பூஜை செய்தார் கிழவர். “மங்களேசுவரனை நன்றாகத் தரிசனம் பண்ணுங்கள் ” என்றார்.

அப்படியே நன்றாகத் தரிசனமும் கிடைத்தது.அங்கே போட்டியாக வர யார் இருக்கிறார்கள்?

அம்பிகையின் சந்நிதிக்குப் போகும் வழியிலிருந்த மாமரத்தைப் பார்த்து, “இதில் காய்க்கும் காய்களை என்ன செய்கிறீர்கள்?” என்றேன்.

“பொறுக்கினாற்போல் இருபது காய்களுக்குமேல் இருக்காது. ஊறுகாய் போட்டு வைத்துக் கொள்ளுவேன். ஸ்வாமி பிரசாதத்தைக் காலணாத் தயிரோடு இந்த ஊறுகாயால் உள்ளே செலுத்த முடிகிறது” என்றார் கிழவர்.

மங்களாம்பிகை மங்களமாகவே இருந்தாள். காவியேறிய சிற்றாடை தரித்திருக்கும் அவள் இடையைக் கண்டு நான் வியந்தேன். இதே சிலை பெரிய தேவஸ்தானங்களில் இருந்தால் எவ்வளவு உயர்வோடு பிரகாசிக்கும்! அதுதான் குருக்கள் சொல்லிவிடுகிறாரே, நரா யோகம் சிலா போகம் என்று!’

“இந்த ஊரே கதி என்று கிடக்கிறீர்களே? பெரிய பட்டணங்களைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை இல்லையா?” என்று கேட்டேன்.

குருக்கள் சிரித்தார்.

“என்னை ரக்ஷிக்கும் ஈசுவரனைப்பட்டினியாகப் போட்டுவிட்டா கிளம்புவேன்? மாட்டேன் அம்மா ! என் ஆத்மா போகும்வரையில் என் கைங்கரியத்தை விடாமல் செய்துவிடுகிறேன், பிறகு, அவன் இஷ்டம்” என்றார்.

அவன் அவருடைய மனப் போக்கை இன்று நினைத்தாலும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

காலை ஒன்பது மணிக்கு அதை விட்டுக் கிளம்பி நன்னிலம் அடைந்தோம்.

“என்னை மறந்துவிடாதே, அம்மா! இலந்தங்குடியை நினைவில் வைத்துக்கொள்” என்று கிழவர் சொன்னார்.


தஞ்சாவூரை விட்டு வந்து மூன்று வருஷத்துக்கு மேல் ஆகிவிட்டது. இரண்டு மாதங்களுக்கு முன் என் மாமா வந்திருந்தார். ஏதோ பேச்சுப் பராக்கில், “இலந்தங்குடி ஞாபகம் இருக்கிறதா?” என்றார்.

“இல்லாமல் என்ன?” என்றேன்.

“அந்த ஊர்க் கோவிலுக்குச் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. போயிருந்தேன்” என்றார்.

“அப்படியா? யார் செய்து வைத்தார்கள்?”

“யாரோ ஒரு தனவான் இலந்தங்குடியிலுள்ள நிலம் முழுவதையும் வாங்கினாராம். சின்னசாமி குருக்கள் தாம் பேச்சில் கை தேர்ந்த பேர்வழியாயிற்றே! அந்தத் தனிகரிடம் போய், ‘ஸ்வாமி! இந்த ஊருக்கே சொந்தக்காரர் ஆகிவிட்டீர். மங்களேசுவரர் – மங்களாம்பிகை கோவிலையும் நீங்களே ஒப்புக்கொள்ள வேண்டியது’ என்றாராம். அவ்வளவுதான், ஸ்வாமிக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது. பழைய கோவிலை இடித்துப் புதிய கோவில் கட்டிக் கும்பாபிஷேகமும் நடந்தது. அன்று அம்பிகையின் சிலையின் அழகை வியந்தாயே? ஆகா! இப்போது அம்பிகையின் சௌந்தரியத்தை என்ன சொல்லப் போகிறேன்!” என்று ஆனந்தத்தால் கண்ணை மூடிக்கொண்டார் மாமா.

“குருக்களைப் பார்த்தீர்களா? என்ன சொன்னார்?” என்றேன் நான்.

“உன்னைப் பற்றி ரொம்ப விசாரித்தாம். ‘குழந்தை சௌக்கியமாயிருக்கிறாளா? கோவில் நிர்மாணம் ஆகிவிட்டதென்று சொல்லுங்கள்’ என்றார்.”


சென்ற மாதத்தில் மாமாவுடன் தஞ்சாவூர் போயிருந்தபோது இலந்தங்குடிக்கும் போயிருந்தேன். கோவிலை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. சின்னசாமி குருக்கள் உண்டி ப் பெட்டியின் அருகில் உட்கார்ந்து கொண்டு சில்லறையை எண்ணிக்கொண்டிருந்தார். என்னைக் கண்டதும், “ஸ்வாமி தரிசனம் ஆச்சா?” என்று விசாரித்தார்.

கோவிலின் சிலைக்குத்தான் யோகம் வந்ததென்றால் குருக்களுக்கும் யோகந்தான்! இல்லாவிட்டால் அவர் கையின் கீழ் மூன்று நான்குபேர் வேலை செய்த நாள் உண்டா? ‘நரா யோகம், சிலா போகம்’ என்று அவர் அடிக்கடி சொன்னது எவ்வளவு உண்மை?

– நவராத்திரிப் பரிசு, முதற் பதிப்பு: 1947 , கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *