சிலந்தி சிரித்தது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 26, 2021
பார்வையிட்டோர்: 2,444 
 

கட்டுரை எழுதுவதற்காகக் கற்பனைப் பறவையின் இறக்கைகளை அவிழ்த்துப் பறக்கவிட்டவாறு உச்சிமோட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கே சிதைந்த தன் வலையைச் சீர்ப்படுத்திக் கொண்டிருந்தது ஒரு சிலந்தி. அதன் செய்கை உலகம் ஒப்பும் ஒரு உண்மையை நினைவுறுத்தியது.

அந்த உண்மை – “உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் வாழ விரும்புகிறது; எப்படியாவது எந்த வழியிலாவது தான் வாழ வேண்டும் என்று நினைக்கிறது”. இல்லாவிட்டால் இந்தச் சிலந்தி பட்டிழையைவிட மெல்லிய மின்னும் இழைகளைக் கொண்டு அழகாக மாயவலை பின்னி அதிலே பல சிறு உயிர்களைச் சிக்க வைத்து அவைகளின் உயிர்களைப் போக்கி உண்டு மகிழுமா?

இந்த உலகப் படைப்பே எனக்கு விசித்திரமாக விடுவிக்க முடியாத புதிராகத் தோன்றியது; பதுங்கும் புலிக்குப் பாய்ந்தோடும் புள்ளி மான் இரையாகிறது. வாழ நிற்கும் கொக்கிற்கு நீரில் ஓடி விளையாடும் மீன் இரையாகிறது. ஒருவன் உழைத்துச் சாக மற்றொருவன் உண்டு மகிழ்ந்து உப்பரிகையிலே உலாவுகிறான். இப்படித்தானே உலகம் நடைபோடுகிறது. இயற்கையின் போக்கே இப்படித்தானோ? இயற்கையின் போக்கு இப்படி இருந்தால் விட்டு விடலாமா?… ஒன்றின் உயிரும், உழைப்பும் மற்றொன்றின் உணவிற்கும் உல்லாசத்திற்கும் உறைவிடமாக அமையத்தான் வேண்டுமா?….

இவ்விதமாக வினாக்களை எழுப்பி அதற்கு விடை கண்டு கொண்டிருக்கையில் “அண்ணா ! அண்ணா !! நரி! நரி!” என்று படத்தை எடுத்துக் கொண்டு என்னிடம் ஓடி வந்தான் ஏழாண்டுகள் நிரம்பிய என் தம்பி. படத்தைப் பார்த்தேன். மிக அழகாக இருந்தது. அதை ஒரு ஆற்றல் மிகுந்த ஓவியன்தான் தீட்டி இருக்க வேண்டும். வண்ணச் சேர்க்கையைச் சரியாகக் கூட்டிக் குழம்பாக்கி ஒளிவிடும் ஓவியமாக அவன் அந்த எழிலுருவைச் சமைத்ததற்காக மட்டும் நான் அவனைச் சிறந்த ஓவியக்கலைஞனாகக் கருதவில்லை. அவன் அந்த ஓவியத்தை அதன் நிலைக்கேற்ப உணர்வுகளை வெளியிடுமாறு வரைந்திருந்தான். அந்த ஓவியத்தில் நரியோடு நண்டும் இடம் பெற்றிருந்தது. ஆனால் எங்கே?

நரியின் வாயில் சிக்கிக் கொண்டு தன் உயிர்ப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது. ஆனால் நரியோ தன் கண்களின் விஷமச் சிரிப்பைச் சிந்தவிட்டு அது படும் துன்பத்தைக் கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தது! எப்படி இருக்கிறது ஓவியத்தின் முழு உருவம்!..

ஓவியத்தின் கீழே உள்ள வரிகளைப் படித்தேன். ‘நரிக்குக் கொண்டாட்டம், நண்டுக்குத் திண்டாட்டம்’ என்றிருந்தது. அந்த இரண்டு வரிகளில் அழகும் அர்த்தமும் பொதிந்து கிடப்பதைக் கண்டு வியந்தேன். வியப்பிற்குப் பிறகு என் இதழ் இணைகள் விரிந்து ஏளனச் சிரிப்பைச் சிந்தின. ஏன்?…

“ஸார் ! பேப்பர்!” என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். பையன் செய்தித்தாளைப் போட்டுவிட்டுப் போய்க் கொண்டிருந்தான். எடுத்துப் பார்த்தேன். பசுமையான இலைகளின் நடுவே வண்ண மலர்கள் எளிதில் தெரிவதைப் போல் அதிலிருந்த பெரிய எழுத்துக்கள் முதலில் தெரிந்தன. வாய்விட்டு தலைப்பை வாசித்தேன். ‘கோரக் கொலை! சிறு நிலத்தின் காரணமாக வாய்ச்சண்டை வளர்ந்து வாழ்வை முடித்துக் கொண்ட அதிசயம்’ என்றிருந்தது.

அறியாமை காரணமாக அழித்தொழித்துக் கொண்ட மக்களுக்காக அனுதாபப்பட்டுக் கொண்டிருந்தேன் அப்பொழுது சிரிப்பொலி கேட்டது. சுற்றிலும் பார்த்தேன், யாரையும் காணவில்லை. ஆனால் அந்தக் குரல் மட்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. எப்படி?

‘மழையின்மையின் காரணமாக வயல்கள் எல்லாம் வறண்டு வெடித்துப் பாழ்நிலமாகக் கிடக்கின்றன. அதனால் சிறிதும் பயனில்லை. அந்த நிலையிலே கூட இந்த மக்களுக்கு நிலத்தாசை விடவில்லை. வரப்பைப் பெயர்த்து ஒரு அடி தள்ளி அடுத்தவன் நிலத்தில் வரப்பிடுகிறான். ஏன்?.. பின்னால் எப்பொழுதோ ஒரு காலத்தில் மழை பெய்து விளையும் போது அதிக விளைவைப் பெற்றுச் சுகமடைவதற்கு! வரப்பைத் தள்ளிப்போடத் தெரிந்தவனுக்கு சினத்தைத் தள்ளிப்போடத் தெரியவில்லை. சுகமாக வாழ வரப்பைப் பெயர்த்தான். ஆனால் வாழ்ந்தானா?…

ஆறறிவு படைத்த மனிதனே அதிசயப் பிராணியாக இருக்கிறானே! அவனுக்கே தெரியாத பொழுது ஐயறிவு படைத்த விலங்குகளும் பூச்சிகளும் உயிர் வாழ் அவசியமான உணவிற்காகக் கொன்று கொள்வதைப் பற்றி வருந்துகிறாயே உனக்கு வெட்கமாக இல்லையா? என்று அந்தக் குரல் பலமாக நகைத்தது.

உச்சி மேட்டில் ஒலி வந்த திசையை நோக்கினேன். யாரையும் காணவில்லை. அந்தச் சிலந்தி தன் வலையின் நடுவே இருந்தவாறு மேலும் கீழுமாக ஆடிக் கொண்டிருந்தது. ஆம்! அந்தச் சிலந்திதான் சிரித்துப் பேசி இருக்க வேண்டும். அதைத் தவிர வேறு ஒருவரும்தான் இல்லையே.

நான் வெட்கிப் போனேன் – ‘தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது இன்னுயிர் நீக்கும் வினை’ என்ற குறள் மருந்தை நாடிக் குணமடையாமல் மக்கள் குத்திக் கொண்டு சாகிறார்களே என்றுதான்.

(தமிழ்ப் பொழில், ஜுன், 1954)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *