சிறு வழிப் பயணம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினகரன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 13, 2022
பார்வையிட்டோர்: 6,009 
 
 

(2013ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாளில் ஒரு பங்கு, பேருந்துக்கு காத்து நிற்பதில் தொலைகிறது. பலருக்கும், ஒன்றுமே செய் யாமல், நாளே தொலைகிறது என்பார்கள்! அவர்களுக்கு யோக சாதகம். சிலசமயம், முக்கால் மணி நேரம் காத்து நின்றபின் வரும் பேருந்து சௌரிபாளையம் வரைதான் போகும் என்பார் நடத்துநர், பெருங்குரலில். அது பாதி தூரம்தான் போகும் இலக்குக்கு. நடத்துநர் நெருக்கடி நடத்திப் பார்த்தால்தானே நமக்கு அனுபவமாகும்! பயணத் தடத்தில் ஊர்வலம், மறியல், விபத்து, பல்வகை நெரிசல்கள் எனப் பல இருக் கலாம். ஏற்கனவே அவர் முக்கால் மணி நேரம் தாமதமாகி இருக்கலாம். பேருந்துப் பணிமனை ஒரு லிட்டர் டீசலுக்கு எட்டு கிலோ மீட்டர் இலக்கு தீர்மானித்திருக்கலாம். பிழிந்த எலுமிச் சையில் சாறெடுக்கச் சொல்வார்கள்.

உப்பிலிப்பாளையம் நிறுத்தம் போகும் அடுத்த பேருந்துக்கு மேலும் முப்பது, நாற்பது நிமிடங்கள் காத்திருக்க நேரலாம். பாவலர் மாசிலாமணிக்கு, உடனே குறுக்கு வெட்டுகிறது பிற் போக்குச் சிந்தனை ஒன்று. ஆண்டுகள் அறுபது. நாளின் நாழிகைகள் அறுபது, மணித்துளிகள் அறுபது, விநாடிகள் அறு பது, அறு எனில் அறுப்பது…பற்றை அறுப்பது. ‘ஆசை அறுமின், ஆசை அறு மின், ஈசனோடாயினும் ஆசை அறு மின்…’ ஆனால், உணவின் மீதான ஆசையே இன்னும் அறுபடவில்லை. மூன்று நாட்கள் பட்டினி போலப் பசித்தது. மணி பிற்பகல் மூன்றும் கடந்து விட்டது.

இந்த நிறுத்தத்தில் காத்துக் கிடப்பதற் குப் பதிலாக, வீட்டில் இருந்து மூன்று கிலோ மீட்டர் அண்மையில் இருக்கும் சௌரிபாளையம் நிறுத்தத்திலேயே நிற்கலாம், கால் மாற்றி. ஒரு இழப்பு, இரண்டு முறை பயணச்சீட்டு வாங்க வேண்டும். இரட்டிப்புத் தொகை, நான்கு ரூபாயில் போய்ச் சேரவேண்டிய தூரத் துக்கு எட்டு ரூபாய் ஆகும். அடுத்த தேர் தல் அறிவிப்பாக, இலவசப் பேருந்துப் பயணம் என எவரேனும் முன்னெடுக் கலாம். நான்கு ரூபாய் அதிகச் செலவு என்றால் சும்மாவா? ஒரு கிலோ தக்காளி வாங்கலாம்.

சௌரிபாளையமா, சபரி பாளையமா, சவேரியார் பாளையமா என பாவலருக்குக் குழப்பம் உண்டு. கிறித்துவ சமய மக்களும், வேதக் கோயிலும், கிறித்துவ பள்ளியும், கல்லறைத் தோட்டங் களும் நிறைந்த பகுதி அது. எனவே, சவேரியார் பாளையம் என்றே இருக்க வாய்ப்பு அதிகம். ஆனால், முத்து சவரிப் பிள்ளை என்ற கிறித்துவர் பெயரால் திருமண மண்டபம் ஒன்றும் இருந்தது. பேருந்துப் பெயர், தபால் அலுவலகம், பிற அரசுக் கோப்புகள் செளரிபாளையம் என்றே எழுதுகின்றன. எப்போதும் பாவலருக்குக் குழப்பம்தான்.

கால் மாற்றி அசைந்தார் மாசிலா மணிப் பாவலர். இரண்டாண்டுகளுக்கு முன்பு வந்த சிக்குன் குனியா இன்னும் கால் முட்டில் சுரம் பேசியது.

இதுவே போல் ஒரு நாள், சௌரி பாளையம் பேருந்து தரிப்பில் காத்து நின்றபோது, இருசக்கர வாகனம் ஒன்று பக்கத்தில் வந்து நின்றது. வண்டியில் இருந்தவாறே கேட்டார். “பாவலர், எந்தப் பக்கம் போகணுமுங்க?”

“வீட்டுக்குத்தான்…”

“சரிங்க… சுங்கம் பக்கம் போறதானா எறக்கி விட்டுப் போகலாம்ணு கேட்டேனுங்க!”

“இல்லீங்க…. அங்கேருந்துதான் வாறேனுங்க…”

வண்டியில் வந்தவர், கிளப்பிக் கொண்டு போய்விட்டார்.

பிறிதொரு நாள், அதே பழைய ஏற் பாட்டின்படி நின்று கிடந்தார் பாவலர். காத்திருப்புத் தலத்தின் எதிர் ஒரு பேக் கரி. இதைக் கதாசிரியரின் சொந்தத் தமிழில் எழுத வேண்டுமானால் ‘பேக்கறி’ என்று எழுத வேண்டும். கொங்கு நாட் டில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். டிக் கெட் என்பதை ஈழத்தமிழன் ‘றிக்கெட்’ என்று எழுதுகிறான். சிட்டியை ‘சிற்றி’ என்றும். இதில் நகைப்புக்கு என்ன உண்டு? எதுவானாலும் அயல்மொழிச் சொல். பொட்டேட்டோ என்பதை நாம் பொட்டட்டோ என்கிறோம். பீகாரில் பட்டாட்டா என்கிறான். டொமேட்டோ என்பதை நாம் டொமாட்டோ என்கி றோம், மராத்தி டமாட்டர் என்கிறான். எது சரி, எது தப்பு என்று உச்சநீதி மன்றம் பொது நல வழக்காக இதனை ஏற்று, இருபத்தெட்டு ஆண்டுகள் குறைந்த கால அவகாசத்தில் தீர்ப்பு வழங்க இயலுமா? அதற்கு பாராளுமன்றம் திருத்தம் கொணராமல் இருக்குமா?

இப்போ அதுவல்ல விடயம்! பேக்கரியில் இருந்து இருவர் இறங்கி வந்து பாவலரை நெருங்கி நின்றனர்.

“தோழர், வாங்க, டீ சாப்பிடலாம்!”

“இல்ல தோழர்… வீட்டுக்குப் போயி சாப்பிடணும். இன்னைக்கு அரிசீம் பருப்பு சாதம்…”

அதனை கொங்கு பிரியாணி என்றார் கள். பிக்கானீர், ஐதராபாத் பிரியாணி போல, கொங்கு பிரியாணி. ஆனால், இது சுத்த சைவம். காய்கறி கூட இல்லை, வெஜிடபிள் பிரியாணி போல. அரிசி, பருப்பு, சின்ன வெங்காயம், கடலை எண் ணெய், பூண்டு, சீரகம், பச்சை மிளகாய், கடுகு, குருமிளகு, பெருங்காயம், மிள காய்ப்பொடி, மஞ்சள் பொடி, தக்காளி, உப்பு… எதை விளைவித்தானோ, அதைத் தின்றான்.

“மணி மூணரை ஆகுதுங்க தோழர்… சரி! ஏறுங்க… வீட்டிலே விட்டுருறேனுங்க…”

தோழர் புண்ணியத்தில் – அவர்களுக்கு பாவம் புண்ணியம் உண்டோ என்னவோ? நான்கு ரூபாய் மிச்சம். நான்கு ரூபாய்க்கு ரெண்டு கட்டுக் காட்டுக் கீரை வாங்கலாம்.

ஆறு மாதங்கள் முன்பு, தனது குடியிருப்பு வாசலில், காலை பதினொன்றே முக்காலுக்கு, பேருந்துக்கு நின்றிருந்தார் பாவலர். பள்ளி செல்வோர், அலுவலகம் எப்போதும் போலத் தாமதமாகப் போவோர், பிறபணிகள் பார்க்க விரைவோர் கூட்டம் எல்லாம் குறைந்து, நடத்துநர் மனிதர் போல் உரையாடும் நேரம். பத்துப் பதினைந்து நிமிடங்களாய் நின்றிருந்தார். சுமார் ஐம்பத்தைந்து வயது செல்லும் ஒருவர், மோட்டார் பைக்கை அவரருகில் ஓரங்கட்டினார்.

“வாங்க… சுங்கம் வரைக்கும் போறேன்!”

முக அமைப்பும் பேசிய தமிழும் கொல்லங்கோடு – கொழிஞ்சாம்பாறை மணம் அடித்தது.

“வரதராஜபுரத்திலே தாமசம்… கொறய நாள் அரேபியாவிலே இருந் தேன். தேவராஜ் பேரு… சார் இங்க தானா?”

“ஆமா… வீடு கிட்டத்தான்…”

“ஒரு தீராத நோவு வயத்திலே குணமாக்கித் தந்தா கர்த்தருக்குள்ளே வரலாமான்னு கேட்டாரு சாமியாரு… சரீன்னேன். பந்நிரெண்டு வருசமாச்சு… இன்னும் திரிச்சு நோவு வரல்லே… உங் களுக்கு தெய்வ விசுவாசம் உண்டா?”

“உண்டும்னும் சொல்லலாம்… இல்லேன்னும் சொல்லலாம்…”

“ச்சே! அது வரை மோசமாக்கும். இல்லேன்னு சொல்லப்பட்ட மனிசனைக் கூட்டாக்கலாம். உண்டும்னு சொன்னா பிரச்னை இல்லே. இந்த ரெண்டுங்கெட்டானாக்கும் கஷ்டம். கேட்டேளா?”

“சரி! நம் பிக்கை இல்லேன்னு வச்சுக்கிடுங்களேன்…”

மோட்டார் பைக் சௌரிபாளையம் தாண்டி, புளியகுளம் சாலையில் நிதான மாகப் போய்க்கொண்டிருந்தது. தோல் உரித்து, இரண்டாய்ப் பிளந்த புன்னை மரக்கிளைகள் போல் மாட்டுத் தொடைகள் தொங்கிக் கிடந்தன. சௌரி பாளையம் தரிப்பில் கிடந்த கூட்டம், ஏதோ கோயிலுக்குப் போவதான ஏற்பாட்டில். சிவப்பு சாரி, சிவப்பு ஜாக்கெட், சிவப்பு மணிமாலை, சிவப்பு பயணப்பை…

வண்டி சவாரி உதவியவர், தொடர்ந்து பேசினார்.

“சாருக்கு நீலிக்கோனாம்பாளையம் தெரியுமா?”

“தெரியும். முன்பு அங்கு தான் குடியிருந்தேன்!”

“அங்க தண்ணி டேங்கு கிட்டே ஒரு கோயிலு உண்டும்….”

“பிளேக் மாரியம்மனா?”

“இல்லல்லே … வேத சபை… ஒரு நாள் கோயிலுக்கு வாங்க…”

பாவலர் சற்று எள்ளலுடன் சொன்னார்.

“அதுக்கு எனக்கு வயத்து வலி எதுவும் இல்லையே!”

“இப்பிடித் தற்குத்தறம் பேசப்பிடாது. பேசினவம் போன எடம் எல்லாம் புல்லு மொளச்சாச்சு…!”

“எங்கே! எங்கூர்லே சந்திக்குச் சந்தி செலையா நின்னு மாலையென்ன, மரியாதை என்ன? இன்னும் பூச்சாட்டு ஒண்ணுதான் மிச்சம்…”

“அதாணு பறஞ்சு வாறது…தமிளம்மார்க்கு புத்தி இல்லேன்னு…”

“அது தெரிஞ்ச சங்கதிதானே! புத்தி இருந்தா ஒங்களை உள்ளே விடுவானா?”

“அது போட்டு.. சார், ஒரு திவசம் கோயிலுக்கு வரணும்”

“என்னத்துக்கு?”

“வந்து நோக்கணும்…. ஒருக்க வந்தா பின்னேயும் வரும்!”

“பின்னையும் வந்தா?”

“பேரெண்ணும் மாற்றணும் என்று இல்லா… இதோ ஈ ஞான் பேரு மாற்றீல்லல்லோ! அண்ணும் தேவராஜ், இண்ணும் தேவராஜ்..”

புளிய குளம் தாண்டி, கார் மல் கார்டன் பள்ளி, கல்லறைத் தோட்டங்கள் தாண்டி, வாகனம் சுங்கம் சிக்னலில் திரும்பியது. பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தினார். பாவலர் இறங்கிக்கொண்டார்.

“சார் நிக்கணும்” என்று சொல்லி, மோட்டார் பைக்கின் பக்கப் பெட்டி யைத் திறந்து கற்றையாக அச்சிட்ட பிரசுரங்களைக் கொடுத்தார்.

“தீர்ச்சையாட்டும் ஒரு திவசம் வர ணும் சாரே!’ என்று சொல்லி, வண்டியைக் கிளப்பிக்கொண்டு போனார். தான் இப்போது எந்த மதத்தில் இருக்கிறோம் என்பதே பாவலருக்கு சந்தேகமாக இருந்தது. ஞானஸ்நானம் ஆகவில்லை இன்னும் என்பது ஞாபகம் இருந்தது.

மூன்று மாதங்கள் முன்பு, இரவு சேரன் விரைவு ரயிலில் நண்பரை வழிய னுப்பிவிட்டு, வீட்டுக்குப் போக பெரி யாஸ்பத்திரி நிறுத்தத்தில் நின்றபோது, சௌரிபாளையம் வரைக்குமே போகும் பேருந்து வந்தது. அந்நேரத்தில் அதற்கு மேல் உப்பிலிப்பாளையம் போக வண்டி கிடைக்குமோ கிடைக்காதோ எனும் அச்சத்தில் ஏறி அமர்ந்து சௌரிபாளை யத்தில் இறங்கினார். காந்திபுரத்தில் இருந்து வரும் கடைசி 95 வருமோ? வாராது போகுமோ? ஒன்றும் இல்லாது போனால் உப்பிலிபாளையம், வரதராஜ புரம், சிங்காநல்லூர் போகும் ஸ்கூட்டர், டிவிஎஸ்-50, மோட்டார் பைக் வராமலா போகும்?

போக்கு வண்டிகள் வந்தால் கை காட்டும் தோதில், சாலையில் நின்றார் பாவலர். ஒன்றும் கிடைக்காவிட்டால் நடந்தும் விடலாம். ஆட்டோ நாற்பது ஐம்பது கேட்பான். ஐந்து பெரிய தேங்காய் வாங்கலாம், வரக்காயாகப் பார்த்து.

நிறைய இருசக்கர வாகனங்கள் பறந்து கொண்டிருந்தன. எல்லாப் பின்னிருக்கைகளிலும் முன்பதிவு. மகாலட்சுமி கோயில் பக்கம் இருந்து ஒருசேர நான்கைந்து இருசக்கர வாகனங்கள் வந்தன. ஒன்றில்தான் பின்னிருக்கையில் ஆள் இருந்தது. எல்லோரும் வாக னங்களைக் குறுக்கும் மறுக்கு மாக சாலையில் நிறுத்தி சிகரெட் வாங்கினார்கள். சற்று உலகப் பொருளாதார நடப்புகளைப் பேசினார்கள்.

அன்று சனிக்கிழமை, வாரச்சம்பளம் வாங்கி வீட்டுக்குப் போகும் தெம்மாங்கு. காற்றில் காட்டமாய் உற்சாக பான வாசனை. பாவலருக்குக் கேட்பதில் சற் றுத் தயக்கம் இருந்தது. என்றாலும் இரவு பத்தரைக்கு மேல், பேயடிக்க, பாம்பு கொத்த நடக்கும் நடையை அஞ்சி, துணிவு கைக்கொண்டு, மெதுவாகக் கேட்டார்.

“தம்பி, உப்பிலிப்பாளையத்திலே எறங்கிக்கிடட்டுமா?”

“ஏறுங்க பெரிசு” என்றார் வாகனக்காரர்.

ஏறி அமர்ந்த பின்பு, வண்டி தார்ச் சாலையில் சாரைப் பாம்பு போல வளைந்தும் நெளிந்தும் ஓடியது. முதலில் பேலன்ஸ் ஆகவில்லை போலும் என்று எண்ணினார். பிறகு தோன்றியது புதிதாய் ஓட்டப் பழகியவர் போலும் என்று. எதிர் காற்று பறித்து வந்து முகத்தில் எறிந்த வாகன ஓட்டியின் மூச்சுக் காற்று, குவார்ட்டர் அறுபத்தெட்டு ரூபாய் விற்கும் சரக்கைச் சொன்னது.

பாவலருக்கு அதுவரை கற்ற இறை வணக்கப் பாடல்கள் எல்லாம் நினை வுக்கு வந்தது. விராதன் துதி எதுக்களித்தது. தலைக்கவசமும் இல்லை . பின் வந்த வாகனங்கள், சமாளித்து, வளைந்து கடந்தன. முன்னால் வந்த ஊர்திகளும் அவ்விதமே! மணல், செங்கல், கருங்கல், கடத்தல் ரேஷன் அரிசி பாரம் ஏற்றிய கனரக வாகனம் எதுவும் எதிர்வந்து விடலாகாதே என சிங்காநல்லூரின் உலகளந்த பெருமாளையும் வெள்ளலூர் தேனீசுவரரையும் உப்பிலிப்பாளையம் மாரியம்மனையும் வேண்டிக் கொண்டார்.

மார்புத் துடிப்பு, பத்துப் பத்துப் புள்ளிகளாக உயர்ந்து கொண்டிருந்தது. வண்டி நிதானமான வேகம்தான் என்றா லும் குதிக்க முடியாது. பழக்கமும் இல்லை. இறையருளாலோ, ஈருருளி திறத்தாலோ, தனது நிறுத்தத்தில் இறங்கி நெடுமூச்சு எறிந்தார். அத்துடன் சங்கல்பம் ஒன்றும் செய்துகொண்டார்.

இனிமேல் சனிக்கிழமை இரவு எவன் வண்டியானாலும் ஏறுவதில்லை என.

நாலைந்து நாட்கள் முன்பு. வாராது வந்த மாமழை. பளீரென வெயிலடித்துக் கொண்டிருந்தது. நெடுநேரமாய் உக்கடம் மார்க்கமாய்ப் போகும் பேருந்து எதையும் காணோம். வீட்டுக்குத் திரும்பி விடலாமா என்று யோசித்தார் பாவலர். இன்று செய்ய வேண்டிய வேலையை நாளையும் செய்யலாம். ஒன்றும் கூரை விழுந்து விடாது.

தேங்கிக் கிடந்த மழைத் தண்ணீரை ஒதுக்கி, பாவலர் பக்கம் ஒரு மோட்டார் பைக் வந்து நின்றது.

“பஸ் வராது சார்… ரெண்டு லாரி மோதி ரோடு பிளாக்… வாங்க சுங்கத்திலே விட்டிருகேன்!”

இவர் போகிற வழியிலேயே நம்மை வேறேதும் மார்க்கத்துக்கு மாற்றிவிட மாட்டார் எனும் நம்பிக்கையில் ஏறி அமர்ந்தார் பாவலர்.

“சார் இந்தக் காலனியிலா இருக்கிறீங்க?”

“ஆமா! நீங்க?”

“ஈஎஸ்ஐ பக்கம்…”

“இன்று விடுமுறையா?” – பாவலர்.

“ஒரு வாரம் லீவு போட்டிருக்கேன் சார்!”

“எங்க வேல பாக்குறீங்க?”

“சேலத்துலே… பேங்கிலே… எக்ஸ் சர்வீஸ்மேன்!”

“ஓ! அப்பம் குடும்பம் இங்க இருக்கா ?”

“ஆமாங்க…”

“வீட்ல ஒர்க் பண்றாங்களா?”

“ஆமாங்க… கார்ப்பரேஷன்லே…”

“பசங்க?”

“ஒரே பொண்ணு. எட்டாம் வகுப்பு போறாளுங்க…”

பாவலர் மனதுக்குள் கணக்குப் போட் டுப் பார்த்தார். நாற்பது வயது இருக்கலாம். முன்னாள் படை வீரருக்கான உடலமைப்பு இருந்தது. தோள் தொய்தலும் தொந்தி சரிதலும் இல்லை. மனையாட்டி மகிழ்வுடன் இருப்பாள் என்று எண்ணிக்கொண்டார்.

அந்தச் சாலையில் அதிவேகமாகப் பயணம் செய்ய இயலாது. குடித்தன வாசல்கள், கடை கண்ணிகள், டாஸ்மாக் கடை, மாடு, ஆடு, பன்றி, நாய், கோழி, சாலை நடுவே வீசப்பட்ட செத்த பெருச்சாளி, தண்ணீர் பிடிப்போர், சுமப்போர், ரேஷன் கடையில் மண்ணெண்ணெய்க்கு நிற்போர் வரிசை…

வண்டி ஓட்டியவர், இடது கையை அவருக்குப் பின்புறம் கொணர்ந்து, பாவலருக்கு முன்புறம் இருந்த இடை வெளியில் செலுத்தி ஏதோ துழாவினார். சட்டையைச் சரிசெய்வாராக இருக்கும் என்று எண்ணிக் கொண்டார். இருக் கையில் இடுப்பை அசைத்து, நகட்டி, நெருக்கமாக உட்கார்ந்தார். உரையாடல் பாட்டுக்குப் போய்க்கொண்டிருந்தது. கத்தரிக்காய் விலை, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, சில குடும்பங்களை மட்டுமே பேணி வளர்க்கும் மதச்சார்பற்ற, சாதிமத பேதமற்ற, சமத்துவக் குடியரசு…

வாகனம் ஓட்டியவர் மறுபடியும் அசைந்து, பின்னோக்கி நகர்ந்து, இடுப்பை நெருக்கி, இடது கையை இருவருக்கும் நடுவில் ஒட்டி, உருண்டு போகும் கோழி முட்டை பிடிப்பதுபோல் பட்டும் படாமலும் துழாவினார்.

பாவலருக்கு வியாதி என்னவென்று புரிந்தது. இறங்கும் இடத்துக்கு இன்னும் இரண்டு கற்கள் இருந்தன. ஓடும் வண் டியில் இருந்து குதித்துவிட இயலாது. மூன்றாம் முறையும் இடுப்பு அசைப்பு, நெருக்கல், நண்டு பிடித்தல்… இனியும் வாளாதிருந்தால் ‘உடன்படு மெய்’ எனக் கருதிவிடல் ஆகும் என்று கருதி, “வேண்டாங்க, ப்ளீஸ்…” என்றார் பாவலர்.

என்றாலும் சுங்கம் சிக்னல் தாண்டி, பேருந்து நிறுத்தமும் தாண்டி, பந்தயச் சாலைக்குத் திரும்பும் முனையில் வாகனம் நிறுத்தும் வரை புட்டம் அசைப்பும் நண்டு பிடிப்பும்.

இறங்கி, பதற்றமடைந்த மனதை சற்று ஆற்றி, தபால் நிலைய வளாகம் எய்தினார் பாவலர். அருவறுப்புக் கூச்சம் கிளர்ந்தது. அனுதாபமாகவும் இருந்தது. அவரது மனையாட்டி நினைவு வந்தது. தன்பால், அயற்பால், இருபால் கலவிகள் பற்றிய சொற்றொடர்கள் ஓடின. பதினைந்து நிமிட பயண தூரத்தில் என்ன பரவசம் கூடிவிட இயலும்?

பேருந்தில் பெண்களை இடிக்கும், அம்மன் சந்நதி நெருக்கத்தில் இடிக்கும் பேராண்மைகளும் உண்டுதானே! தபால் நிலைய வாசலில் மோர் விநியோகம் ஆகிக் கொண்டிருந்தது. பாவலர் இரு தம்ளர்கள் வாங்கிப் பருகி வாயைத் துடைத்தார்.

சாலையைக் கடந்து, உக்கடம் போகும். பேருந்து பிடிக்க நடந்தார். எளிதே சிரிப்பொன்றும் வந்தது. ‘ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்’ என்றொரு வரி ஓடியது. பாவலருக்கு வயது அறுபத்தாறு நடக்கிறது என்பதும் நினைவுக்கு வந்தது.

– தினகரன் தீபாவளி மலர் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *