(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
விடிந்த அரவத்தில் முழிப்புத் தட்டிய மயிலப்பனுக்கு, தலை ‘விண்ண்’ ணென்றிருந்தது. பாறையாகக் கனத்தது. கெட்ட கெட்ட கனாக்கள் நிறையக் கண்ட களைப்பு. தீப்பிடித்த மாதிரிக் கண்கள் எரிந்தன. நாசிக்குள் வெப்ப அலைகள். காய்ச்சலாக இருக்குமோ…? அவன் மார்பில் கைவைத்துப் பார்த்துக் கொண்டான். நெருப்பாகத் தகித்தது. எழுந்திருக்க முயன்றான்.
ம்ஹூம். முடியலே. அப்படியே கிடக்க வேண்டும் போல ஓர் அயற்சி. மூச்சுப் பிடித்துக் கொண்டு எழுந்தான்.
மூட்டுக்கு மூட்டு வலி. இடுப்பைச் சுற்றிக் கடுகடுப்பு. தொடைச் சதைகளில் முறுக்கிப் பிழிகிற வலி.
அப்படியே குத்துக் காலிட்டுச் சுவரில் சாய்ந்து கொண்டான். பெருமூச்சு விட்டபோது… நாசித் துளைகள் காந்தலெடுத்தது.
‘…இதென்ன கடவுளே, ஒறங்கி முழிக்குறதுக்குள்ளே காச்ச வந்து பேயா அமுக்கிக்கிடுச்சு. பன்னிகளைப் பத் தணுமே! எப்படி மேய்க்கப் போறது? ஏலாது போலிருக்கே…’
பங்குனி மாசம். வலுத்த கோடை. மழைத் தண்ணி யில்லாமல் வறண்ட கோடை. இந்தக்காலத்தில் இப்படிகூதல் நடுக்குகிறதே, மார்கழி மாசம் மாதிரி…
விரித்திருந்த பழைய கிழிந்த சேலைத்துணியை எடுத்து மூடிக்கொண்டான். கொக்கு நோய் கண்ட கோழி மாதிரி, தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு, அப்படியே உட்கார்ந்திருந்தான்.
குடிசைக்கு வெளியே, கூட்டுக்குள் பன்றிகளின் இரைச்சல். நேரம் தப்பிவிட்டதால் ஒன்றையொன்று கடிக்கிறதோ…?
அவன் மனசுக்குள் பன்றிகளின் உறுமல்களும், அலறல்களும், குட்டிகளின் கீச்சிடல்களும்.
‘பன்னிகளைத் தொறந்து விடணுமே… என்ன செய்யறது?”
மகளைக் கூப்பிட நினைத்தான். உதடுகள் காய்ந்து வெடித்துக் கிடந்தன. வாயில் வறட்சி. நாவெல்லாம் கசப்பு. சிரமப்பட்டு வாயைத் திறந்தால்… உயிரும் உஷ்ணமும் வெளியேறுவதைப் போன்ற பிரமை.
‘செந்தட்டி… செந்தட்டி…’
அவ்வளவு சத்தமிட்டு அழைத்ததில் அயற்சி. கண்களை மூடிக்கொண்டான். இமைகளின் அழுத்த உரசலில் மெல்லிய சுகம்.
காய்ந்த தலையைச் சொறிந்து கொண்டு, தூக்க அசதியோடு வந்து நின்றாள், சிறுமி. பத்து வயசுக்கு மீறாத அரும்பு. சாயம் போய்க் கிழிந்த பாவாடை, உடலில் ஒட்டியிருந்தது.
இந்தச் சின்னஞ்சிறுசு, இத்தனை பன்னிகளையும் எப்படிக் கவனிச்சு மேச்சுடும்? விளையாட்டுப் போக்கில் கவனம் பிசகிட்டா ஏதாச்சும் தப்பு வந்து சேருமே… ஆனால் வேறு கதியில்லியே…
மகராசி போனவருஷம் போய்ச் சேர்ந்துட்டாள். வரிசையாய் நாலு புள்ளைகளைப் பெத்துப் பெத்துச் சாவின் கையில் பறிகொடுத்தவள், அஞ்சாவதைப் பெறுகிறபோது… புள்ளையோடு சேர்ந்து அவளும் பறிபோயிட்டா…
பிரசவத்திலே கஷ்டம் வந்துட்டா… இந்தப் பட்டிக் காட்டுலே என்ன வைத்திய வசதி இருக்கு? ஒரு ஆசுபத்திரி யோ… ஒரு டாக்டரோ… ஒரு எழவும் கிடையாது… பொழைச்சு எந்திரிச்சா… சாமிக்குப் பொங்கல் வைக்குறது. போய்ச் சேர்ந்துட்டா விதியைச் சொல்லிப் பொலம்ப வேண்டியது. வேறென்ன செய்ய..?ஹூம்!
‘அவ கண்ணை மூடுன அன்னிக்கே…நானும் போய்ச் சேர்ந்திருக்கணும். முடியலியே…எப்படி முடியும்? தாயில் லாத இந்தப் பச்சை மண்ணை நாதியத்த அனாதையாக்கிட்டு, நாம மட்டும் எப்படிக் கண்ணை மூடுறது?’
“என்ன அய்யா…?”
செந்தட்டியின் மூன்றாவது அழைப்புக் குரலில் தலையைத் தூக்கி மகளைப் பரிவோடும், பச்சாதாபத்தோடும் பார்த்தான். நாவால் உதட்டை ஈரமாக்கிக் கொண்டான்.
“அய்யாவுக்குக் காச்சலா இருக்கு. எந்திரிக்கக்கூட முடியலே.பன்னியைப் பத்திக்கிட்டுப்போய் மேச்சுட்டுவா…என்ன?”
சின்ன உடம்பை ஏழு கோணலாக வளைத்தாள். முகத் தில் செல்லச் சிணுங்கல். மறுக்கிறாள். மனிதர்கள் ‘உட்கார்ந்து’ கொண்டிருக்கிற ஓடைக்காட்டில், போக அவளுக்கு இஷ்டமில்லை.
காய்ச்சல் வெறியில் இந்தச் சின்ன மறுப்பைக் கூடச் சகித்துக் கொள்ள முடியவில்லை. சண்டாளமாக வந்த கோபத்தில் மட்டியைக் கடித்தான். ஆத்திரத்தில் கண்களை விரித்தான்.
மனசுக்குள் ஒரு சின்ன மனித நேயக்குரல்… ‘பாவம், தாயில்லாப்புள்ளை… பச்சை மண்ணு.’
கடித்த அடி உதட்டை விடுவித்தான். பார்வையில் கனிவை வரவழைத்துக் கொண்டான். குரலை மிருதுவாக்கிக் கொண்டான்.
“அய்யாவுக்கு முடியலேம்மா… பன்னி கத்துது பாரு… பத்திக்கிட்டுப் போம்மா… சொன்னதைக் கேளு… நல்ல புள்ளை இல்லே நீ? அடுத்த மாசம் பொங்கலுக்குப் புதுச் சட்டை தைச்சுத் தாரேன், என்ன?”
“சரி…” முகத்தில் பயத்தின் வாட்டம். சம்மதிக்காத மனதோடு சம்மதித்தாள்.
“கூட்டை மறைச்சிருக்கிற பலகைக் கல்லை நகர்த்தி வைச்சுடு. கூடையைக் கையிலே எடுத்துக்க. சாணி பொறுக் கணும்லே? வெள்ளாமையிலே தப்பி வுழுந்துராமப் பாத்துக் கோ. அந்தச் சலவனும், ‘வால் வெள்ளையும்’ கள்ளத்தட்டுலேயே திரியும். அதுகளைக் கவனிச்சுக்கோ… என்னம்மா…”
“சரிய்யா.”
அவ்வளவு பேசிய களைப்பில் கழுத்து வலிக்க, மறுபடியும் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டான். கண்களை மூடிக்கொண்டான். மூடிய இமைகளுக்குள் வர்ண வர்ணமாய் ரேகைகள் மிதந்தன.
அகலக் கல்லை ‘முக்கிப்’ புரட்டுகிற சப்தம். விடுதலையான களி வெறியில் சப்த இரைச்சல்களோடு ஓடுகிற பன்றிகளின் சப்தம். பன்றிகளை அதட்டிக் கொண்டே ஓடுகிற செந்தட்டியின் காலடிச் சப்தம்.
கிராமத்தின்விளிம்புகளாக ஊரைச்சுற்றிலும் ஓடைகள். மழை நாள் தவிர, மற்ற நாட்களில் நீரோட்டமில்லாத ஓடைகள். சில இடங்களில் பாறைகள்… சில இடங்களில் மணல், சில இடங்களில் கரிசல்… இன்னும் சில இடங்களில் பொட்டல் தரைகள். ஆனால், எல்லா இடங்களிலும் வஞ்சனையில்லாமல் அடர்த்தியான வேலிச் செடிகள்.
இந்த ஓடைகள்தான் கிராமத்து மக்களுக்குத் திறந்த வெளிக் கழிவறைகள். காற்றோட்டமான கழிவறைகள். மனிதர்கள் அவஸ்தையோடு கழித்துவிட்டுப் போகும் அசிங்கத்தை… வாலையாட்டிக் கொண்டு ஆவலோடு வாரித் தின்று கொண்டே பன்றிகள்…
ஓடைகளைச் சுற்றிவிட்டுக் கூடு வந்து சேர மணி பத்துக்கு மேலாகி விடும்.
“முதலாளி… நல்ல ஸ்ட்ராங்கா ஒரு டீ குடுங்க!”
“என்னப்பா மயிலு. ஆளு ரொம்ப அசந்துருக்கிறே, நேத்துச் சாயங்காலம் தண்ணி சாஸ்தியா?”
“தண்ணிக்கு வழியேது முதலாளி? என்னமோ தெரியலே, ராவோட ராவா வந்து காய்ச்சல் அமுக்கிக்கிடுச்சு. உசுர் போற மாதிரி மேலெல்லாம் வலி. மண்டைக்குத்து. நீங்க குடுக்குற டீயிலேதான், காச்சவுடணும். பன்னி பத்தப் போவணும்.”
“இந்தா அடி. கஷாயமா எறக்கியாச்சு. உதட்டுலே ஒட்டும்.”
வெள்ளை மாத்திரையை வாய்க்குள் போட்டு, டீயை உறிஞ்சினான். மாத்திரை தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது. முகத்தைக் கோணி, கண்களைச் சுருக்கி, வாயை அழுந்த மூடி…அப்பாடா ஒரு வழியாக உள்ளுக்குள் இறங்கிவிட்டது.
டீயைக் குடித்தான். வழக்கம் போல் பீடியைப் பற்ற வைத்தான். பீடிப் புகை ஒவ்வவில்லை. வாயெல்லாம் கசந்து அழறியது.
பீடியைத் தரையில் தேய்த்து எறிந்தான். வெளியே வந்து, வெறுப்புடன் எச்சிலைத்துப்பினான்.
உள்ளுக்குள் இறங்கிய டீயில், உடம்பு கதகதப்பாகியது. சீலைத் துணியை மூடிக்கொண்டு, முட்டங்காலைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்தான்.
நேரம் என்ன இருக்கும்?
ஒரு கொள்ளைக்காரனைப் போல் பேய் வேகத்தில் வந்து, வட்டமடித்து நின்றது பால் லாரி. வெற்றுக் கேன்களை இறக்கிவிட்டு, பால் நிரம்பிய கேன்களை ஏற்றிக் கொண்டு, வந்த வேலை முடிந்த திருடனைப்போல் வெறி வேகத்தில் புறப்பட்டுப் போய்விட்டது.
இந்தப் பால் லாரி ஊருக்குள் வரத் துவங்கிய பிறகு… பிள்ளைப் பால், ஓசி மோர், உறவுக்காரர்களுக்கு வெண்ணெய் தருதல் என்ற வழக்கங்களெல்லாம் ‘ஒரு காலத்து விஷயமாக ஆகிவிட்டன.
பால் லாரி வந்து திரும்பினால், மணி ஏழரை என்று அர்த்தம். இம்புட்டு நேரத்துக்கு, செந்தட்டி எங்கே போயிருப்பாள்? முத்தையா நாடார் புஞ்சைக்கு நேராகவா, ரெங்கசாமி நாயக்கர் புஞ்சைக்கு நேராகவா?
பாவம், சின்னப்புள்ளை! கவலைன்னா என்ன, வேலைன்னா என்னன்னு தெரியாம, தெருப் புழுதியிலே வீடு கட்டி விளையாட வேண்டிய வயசு. பெரிய மனுஷியைப் போல வீட்டுப் பொறுப்பேத்து, சட்டி பானை கழுவி, விறகு பாத்து, அடுப்புப் புகையிலே அல்லாடி… சோறாக்கி, காப்பி போட்டு, ஆணம் காச்சி… எல்லாம் விதிக் கொடுமை!
ஏதோ… நொண்டிவீரன் சாமி புண்ணியத்துலே… இந்த ஒரு பொட்டப் புள்ளையாச்சும் தப்பிப் பிழைச்சுத் தங்கி யிருக்குறதுனாலேதான் … நாம் ஒரு குடும்பம்ங்கிற அந்தஸ்துலே இருக்கோம். வீடு வாசலோட இருக்கோம். இந்த அரும்பு இல்லேன்னா… நா ஒண்டிக்கட்டையா… பொறம் போக்கா… தண்ணி குடுக்கக் கூட நாதியத்த அனாதையாகத் தான் அலையணும்…
மயிலப்பன் அயற்சியோடு கண்களை மூடி… இறுக அழுத்திவிட்டுத் திறக்கையில் இமை ரோமங்கள் ஈரத்தில் நனைந்திருந்தன.
நோய்வாய்ப்பட்ட நேரத்தில்தான் எந்த இழப்பும் பூதாகாரமாகத் தெரியும். மயிலப்பனுக்கும் மனைவியின் இழப்பு, எந்த நேரத்தையும் விட, இப்போது பெரிதாகத் தோன்றியது.
கொதிக்கிற நெற்றியைத் தொட்டுப் பார்க்கிற ஈரமான கைகள் இல்லை. ‘ஐயய்யோ, காச்சதீயா பொறியுதே’ என்று பதறித் துடிக்கிற, அந்த இதயம் இல்லை. ‘படுத்துரு. பத்து அரைச்சுப் போடுதேன். கசாயம் காச்சித் தாரேன்’ என பதைத்துப் போய் – பரபரத்துத் திரிகிற -அந்தப் பரிவு – அன்பு – உறவு – இல்லை.
ஆ…எம்புட்டுப் பெரிய இல்லை! சூன்யத்தையே சூழலாக்கிவிட்ட குரூரமான இல்லை. அட பாதரவே, எந்த மனுஷனுக்கும் வாய்த்துவிடக் கூடாத கொடுமையான இல்லை…!
உடம்பெல்லாம் வியர்த்துவிட்டதை, கொஞ்ச நேரம் கழித்தே உணர்ந்தான். தலை முடிக்குள் வியர்வைக் கசகசப்பு. கனம் குறைந்துவிட்டது. நாசிக் காந்தல், எரிச்சல் எல்லாம் மட்டுப்பட்டிருந்தது.
சீலைத் துணியால் நெஞ்சு, முகம் எல்லாம் துடைத்துக் கொண்டான்! துணியைத் தலையைச் சுற்றிக் கட்டிக் கொண்டான். மேய்ச்சல் தளத்துக்குப் போகலாம் என்ற நினைப்பில், வீட்டுக்குப் போய்க் குச்சியை எடுத்துக் கொண்டான்.
ஊரையொட்டி நடந்தான். சாக்கடை வாய்க்கால் கட்டுமானத்துக்கான செங்கற் குவியல்… கற்குவியல்… சத்துணவுக் கூடத்துக்கான ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள்… ஊரையொட்டி ரோடு ரோலர்… புதுச்சாலை…
எல்லாம் நடந்து முடிந்த பஞ்சாயத்துத் தேர்தலின் உடனடிப் பலன்கள்.
ஓடைக்குள் இறங்கினான். மனிதக் கழிவுகள், வேலிச் செடியைச் சுற்றி அசிங்கங்கள். பழகிப் போன வேலைத்தளம். அருவருப்பில்லாமல் ‘வில், வில்’ லென்று விறைப்பாக நடந்தான்.
மேல் பக்க ஓடையிலிருந்து வடப்பக்க, ஓடைக்குப் போவதற்காகத் தோட்டங்கள் வழியாகக் குறுக்காக விழுந்து நடந்தான். மிளகாய்த் தோட்டங்கள் அஸ்தமன கதியில் இருந்தன. தொங்கட்டான் மாதிரி சின்னக் காய்கள் உச்சியில் தொங்க, இலைகள் பச்சை மாறிப் பழுப்பு நிறத்தில் நரைத்துப் போயிருந்தன.
அகத்தி வரிசைகள் மொட்டை மொட்டையாக நின்றன.
அந்த ஓடைக் கரையிலிருந்த புஞ்சை மண்ணை மிதித்தபோது…உடம்பில் சிலிர்த்தது. தொட்டுக்கும்பிடணும் போல் மனசுக்குள் ஒரு புல்லரிப்பு.
இந்தத் தோட்டத்தில்தான்… அது நடந்தது. அட, இந்தப் புஞ்சைக்கார முதலாளி எம்புட்டு நல்ல மனுசர்…!
அன்னிக்கு நடந்ததென்ன, சாமான்யமான தப்பா? முந்நூறு நானூறுன்னு அபராதம் போட்டுத் தள்ளி யிருப்பாகளே… அதுக்கும் மேலே தானே அவருக்குச் சேதாரம் இருக்கும். ஆனா, எம்புட்டுப் பெருந்தன்மையாச் சொன்னாரு…
‘சரி சரி, போய்ட்டு வா… தப்பு யாருக்கும் வரத் தானே செய்யும். அதுக்காக எளியவன் – ஒன்னை என்ன செய்யறது? எனக்கு நேரம் சரியில்லேன்னு நெனைச்சுக்கிட வேண்டியது தான்… ம்.’
நொண்டிவீரன் சாமியே அவர் மனசுக்குள் நின்னு பேசின மாதிரி, என்ன அருமையா -மனுசத் தன்மையோட – பெருந்தன்மையோட பேசினாரு! அவரு காலுக்குப் பூப்போட்டுத்தான் கும்புடணும். முடிஞ்சா… அவரு கைக்குத் தங்கக் காப்புக் கூடப் போடலாம். அவரு குடும்பம் ஒரு கொறையில்லாம தழைக்கணும்…
அப்போது-
மயிலப்பனிடம் நிறைமாதச் சினையாக, ஒரு பன்றி இருந்தது.இன்றைக்கோ, நாளைக்கோ எப்பவும் குட்டி போடலாம் என்ற விளிம்பில் நின்றது.
அந்தச் சினைப் பன்றியைக் கூட்டுக்குள் அடைக்க முடியாது. மற்ற பன்றிகள் இதைச் சித்திரவதைப்படுத்திவிடக் கூடும். அல்லது பிரசவ வேதனை வெறியில் இதுவும் மற்றப் பன்றிகளைக் கடித்துக் குதறிவிடக் கூடும்.
சினைப் பன்றியின் பின்னங்காலில் கயிறு போட்டு, கூட்டுக்கு வெளியே இரும்பு முளையில் கட்டிப் போட்டிருந் தான். அதன் முன் தரையில் பதித்திருந்த பட்டியில் வாடாமல் கஞ்சித் தண்ணீர். அந்தக் கர்ப்பிணியை ராவும் பகலுமாகக் கவனித்துக் கொண்டிருந்தான். பணம் பெத்த பன்னி!
விடிந்து வெளியே வந்து பார்த்தான். கண்ணில் தேள் கொட்டியது போலிருந்தது. கயிறு அறுந்து இற்றுக் கிடந்தது. பன்றியைக் காணோம்.
பயமும் திகிலுமாய் நெஞ்சடைத்துப் போனான்.
பணம் பெத்த பன்னி பாழாயிடுமோ…
பழியைக் கொண்ணாந்து சேர்த்திடுமோ…
இரண்டு வகையான பயம் மனத்தைக் கவ்விக் கொண்டது.
மனத்தின் பரபரப்பு, காலில் இறங்க… மின்னலாகக் காடுகளில் ஓடித் திரிந்தான். முள்ளு மொடல்களைப் பொருட்படுத்தாமல், கண் மூக்குத் தெரியாத வெறி வேகத்தில் அங்குமிங்குமாய்ப் பாய்ந்தான்.
கடைசியில்-
இந்தத் தோட்டத்தில் வந்து பார்த்தால்-
நிலம் உழுது புரட்டப்பட்டுக் கிடக்கிறது. வடகிழக்கு மூலையில் மிளகாய் நாற்றங்கால். பத்துப் பதினாறு பாத்திகள். 30 நாள் வயசான நாற்றுகள். பிறந்து நாலைஞ்சு நாளான கோழிக் குஞ்சுகளைப் போல் மென்மையா… அழகா… சின்னஞ் சிறுசா… அடர்த்தியான இளம்பசுமையாய்.
நாற்றங்கால் முழுவதும் சினைப் பன்றி உருண்டு புரண்டு, குரூரமாக நாசக் காடாகிக் கிடந்தது. ஒடிந்துபோன நாற்றுகளின் மிருதுவில் அரைமயக்கத்தில் பன்றி படுத்துக் கிடந்தது.
அந்த மயக்கத்திலும் பார்ப்பவர்கள் மிரளுகிற மாதிரியான மிரட்டலான உறுமல். ‘மூசு… மூசு’ என்று பெரிதாக மூச்சு விட்டுக் கொண்டிருந்தது. சுற்றிலும் நிறைய குட்டிகள்… ‘மொய் மொய்’ யென்று.
அப்பாடா…! மனத்தின் கனம் பாதியாகக் குறைந்தது. உள்ளுக்குள் ஒரு கதவு திறந்து கொண்டதைப் போல… பாய்ந்த இளங்காற்றில் மனத்தின் வியர்வைதுடைக்கப்பட்டது. பணம் பெத்த பன்னி பாழாகிவிடவில்லை.
ஆனால், இன்னோர் அச்சம் மனத்தை அறுத்தது. நாசக்காடாகிக் கிடந்த நாற்றங்கால்!
நாற்றங்கால் என்பது சம்சாரிக்கு மூலவித்தல்லவா? வெள்ளாமையை விட மதிப்புமிக்கதல்லவா! நடுவைக்குப் பணம் போட்டு நாற்று வாங்கப் போனால்… ஆயிரத்துக்கும் மேலாகுமே! அம்புட்டையும் நாசமாக்கிடுச்சே!
மனசு மருகித் தவித்தது.
அடக் கொடுமையே… என்னதான் ஆகுமோ…? எம்புட்டுதான் அபராதம் போடுவாகளோ… நம்ம குடும்பமே, இதுலே நொறுங்கி, ‘நொத்தவிடா’ போயிடுமோ…
பீதியும் திகிலும் சினைப் பன்றியாகப் புரள, மனசு நாற்றங்காலாய்ச் சீரழிந்து கொண்டிருந்தது.
பிரசவ வலி பொறுக்காமல், வேதனை வெறியில் கயிற்றை அறுத்துக்கொண்டு, கண் மூக்குத் தெரியாமல் ஓடித் திரிந்து, படுக்கச் சுகமாக இருந்த இந்த நாற்றங்காலில் வந்து புரண்டிருக்கிறது.
சே! மிருகங்கிறது சரியாய்ப் போச்சே! அது குணத்தைக் காட்டிடுச்சே! பச்சைப் புள்ளை மாதிரி இருக்கிற இந்த நாத்துலே படுத்துப் புரள மனுசனுக்கு மனசு வருமா?
அடக் கொடுமையே…! இப்ப என்ன செய்யறது?
ஒரு வழியாக பன்றியை வீடு சேர்த்துவிட்டு, புஞ்சைக்கார முதலாளி வீட்டை நோக்கிப் பறந்தான். சிபிச் சக்கரவர்த்தி காலடியில் வந்து விழுந்த அடிபட்ட புறாவைப் போல… மயிலப்பனும் அவர் காலடியில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கும்பிட்டான்.
அவரும் பெரிய பணக்காரரல்ல. சாதாரண நடுத்தர சம்சாரிதான். பதறிப் போன அவர், “எந்தி, எந்தி… எதுக்கப்பா கால்லே வந்து வுழறே?”
பயத்தில் வாய் உளற… கண்ணில் நீர் மாலை மாலையாக வழிய… காய்ச்சல் கண்டவன் புலம்புகிற மாதிரி, தவித்துத் தவித்துச் சொல்லி முடித்தான். கடைசியில்-
‘முதலாளி, நானறியாமல் நடந்து போன தப்புதான். ஆனாலும், ஒங்களுக்கு நட்டம் நட்டந்தானே! நீங்க எனக்குத் தகப்பன் போல. நா, உங்க நெழல்லே -ஆதரவுலே பொழைக்கிறவன். நீங்க பாத்து, மனசு வச்சு, என்ன நியாயம் சொன்னாலும்… மறு பேச்சில்லாமல் நான் கட்டுப்படுதேன் முதலாளி” என்று சொல்லிவிட்டு மருகி நின்றான்.
அப்போதுதான் அந்த வார்த்தைகளைக் கூறினார், தங்கமான மனுசராய்… தெய்வத்தைவிட உயர்ந்த மனுசராய் – சிபிச்சக்கரவர்த்தியாய்…
“சரி சரி, தப்பு யாருக்கும் வரத்தானே செய்யும். அதுக்காக எளியவன் – ஒன்னை என்ன செய்யறது? எனக்கு நேரம் சரியில்லேன்னு நெனைச்சுக்கிட வேண்டியதுதான்…”
அந்த மனித நேயக் குரல், இதோ… இப்பொழுது கூட ஒலிப்பது போலிருக்கிறது. நெஞ்சுக்குள் ஒரு சிலிர்ப்பு… தேகமெல்லாம் புல்லரிப்பு.
அடடா… எம்புட்டு அருமையான மனுசர் மனுசர்னா, இவருதான் மனுசர்…
அந்தத் தோட்டத்தின் சரிவில் இறங்கி, மயிலப்பன் ஓடைக்குள் விழுந்தான். முள் செடிகளுக்கு மத்தியில் ஊடுருவி, கிழக்காகச் செல்கிறபோது நிமிர்ந்து பார்த்தான்.
கருமை கருமையாக நிறைய மேகங்கள். கல்யாணமாகி இன்னும் கர்ப்பம் தரிக்காத பெண்ணைப் போன்ற மேகங்களாக மாறவும் செய்யலாம். மலட்டு மேகங்களாகப் போய்விடவும் செய்யலாம். எல்லாம்… அடிக்கிற காற்றைப் பொறுத்த விஷயம்.
காலைச்சூரியனின் கோடைக் கிரணங்களைத் தவிர்க்க, கையால் கண்ணுக்குக் குடையமைத்துப் பார்த்தான். செந்தட்டி கண்ணில் தட்டுப்படவேயில்லை. குச்சியைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு, மனிதக் கழிவுகளிடையே நடந்தான். தெற்காகத் திரும்பிவிட்டான்.
ஓடையிலேயே அதோ… அந்த இடம் பெரும் பள்ளம். ஆள் நின்றால் தலை தெரியாத ஆழம்.
அந்தத் தங்கமான மனிதருக்கு அந்த இடத்திலும் ஒரு துண்டுப் புஞ்சை இருக்கிறது.
ஓடையின் ஆழமான இடத்தைத் தாண்டிய மேட்டில், பன்றிகள் மேய்வது தெரிந்தது. செந்தட்டி எங்கே?
‘விளையாட்டுப் போக்காக எங்காச்சும் நிக்காளா? பன்னிகளைத் தன்போக்கில் விட்டுவிட்டு, கவனப் பிசகாக இருக்காளா?”
மயிலப்பனுக்குள் ஒரு சின்ன உதைப்பு.
நடையை எட்டிப் போட்டான். பத்தடி தூரத்தைத் துடியாய்க் கடந்திருப்பான். மகளின் கதறல், துல்லியமாகக் கேட்டது. மனசுக்குள் திக்கென்றது.
”ஐயய்யோ……ஐயய்யோ… அம்மா… அய்யா… ஐயய்யோ……. வலிக்கே.’
வலி தாளாமல் துடித்தலறுகிற தனது ரத்தத்தின் குரல். தாயில்லாப் பிஞ்சின் அவலக் குரல்.
அவனது குலை பதறியது. ஈரக் குலையைப் பிடுங்குவதைப் போன்றதொரு திகிலுணர்வு. திக்திக்கென்று அடிப்பதைக் கூட மனசு நிறுத்திக் கொள்ள…ஓட்டமும் நடையுமாக முட்செடிகளைக் கிழித்துக் கொண்டு பாய…
அந்த ஓடையின் ஆள் தெரியாத ஆழத்தில்-
செந்தட்டியின் காய்ந்த தலைமயிரை இடது கை பற்றியிழுக்க, வலது கையால் கன்னத்திலும், முதுகிலும் ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டிருந்தார், ஒருவர்.
அவள் துடியாய்த்துடித்தாள்.
”புஞ்சையிலே இனிமே பன்னியெ விடுவீயா? இனிமே விடுவீயா? பன்னியைப் புஞ்சையிலே… இனிமே விட்டே… கொன்று தோலை உரிச்சிடுவேன்… சாக்கிரதை”.
அவரின் முரட்டுக் குரல். அதே குரல். தங்கமான அதே மனிதரா… இப்படி…….! புறாக் குஞ்சை வதைக்கிற சிபியாக, அவரா, இப்படி!
“முதலாளி, முதலாளி” என்று கூப்பாடு போட்டுக் கொண்டே, ஒரே பாய்ச்சலில் வந்து சேர்ந்தான். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வந்த மயிலப்பன், மகளைப் பிடுங்கித் தொடையோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
அந்தப் புறாக் குஞ்சின் கன்னத்திலும் முதுகிலும் முரட்டுக் கை விளையாடிய தடங்கள்… தடிப்பாக… ரத்தம் கன்றிப்போய்…
அவனுள் தீக்கோலைச் சொருகியது போலிருந்தது. மனசெல்லாம் கிடந்து கொதிக்க… “முதலாளி, இந்தப் பச்சை மதலையை எதுக்கு இப்படி அடிச்சுக் கொன்னுருக்கீக…?”
“தண்ணி பாஞ்சு கெடக்குற வெள்ளாமையிலே பன்னிகளை வுட்டு, ஒழப்புனா,எப்படி இருக்கும்?”
செந்தட்டி பயத்தில் ஒட்டிக்கொண்டு, விக்கி விக்கியழுதாள். அவள் விம்மித் துடிக்கிற துடிப்பைப் பார்க்கப் பார்க்க மனசுக்குள் குத்துண்ட வேதனை,
“இதுக்காகவா முதலாளி, இப்படிப் புள்ளையைத் தொலைச்சு எடுக்கணும்? இது நியாயமா முதலாளி? தாயில்லாப் புள்ளை முதலாளி!”
“தாயில்லாப் புள்ளைங்கிறதுக்காக… புஞ்சையிலே பன்னியை விட்டுப் பாழாக்குனா… முத்தமா கொஞ்சுவாக? நியாயமாம்… நியாயம்!”
“பாழாக்கணும்னு நெனைச்சா முதலாளி செய்திருப்பா? தப்பித் தவறித்தானே விழுந்திருக்கும்? இதுக்குப் போய் இப்படி அடிச்சுக் கொன்னுருக்கீங்களே… அப்படியே தப்பித் தவறிப் புஞ்சையிலே விழுந்துட்டாலும், என்ன அழிமானம் ஆயிருக்கும் முதலாளி? ஓஞ்சு போன வெள்ளாமைதானே? இதைக் கூட முதலாளிமார் பொறுத்துப் போகக் கூடாதா முதலாளி?”
“எதுக்குடா பொறுத்துப் போகணும்? பஞ்சாயத்துத் தேர்தல்லே ஏஞ்சாதிக்காரனுக்கு ஓட்டுப் போடாத சாதிக்காரனுக்கெல்லாம் என்னத்துக்குப் பொறுத்துப் போகணும்? நாலு போடு போட்டு, வைக்கிற இடத்துலே உங்களை வச்சாத்தான்… உங்களுக்கெல்லாம் மனசுலே பயம் வரும்.”
வாயடைத்துப் போனான் மயிலப்பன். இதுக்கு மேலே என்னத்தைப் பேச?
இவர் இவரா இருந்தப்போ,எம்புட்டு அருமையான மனுசரா இருந்தாரு…! மனுசனை மனுசனா மதிக்கிற, மனுசரா இருந்தாரே…!
பூப்போட்டு கும்புடக் கூடிய காலாக… தங்கக் காப்பு செய்து போடத்தக்க கையாக இருந்தாரே…!
அதே கைதான்… செந்தட்டியை – சின்னஞ்சிறு மலரை- கிள்ளி நசுக்கி எறிஞ்சிருக்கு…
அப்பேர்ப்பட்ட மனுசர்… எப்படி இப்படி மாறிட்டாரு? எது இவரை இப்படி மாத்துச்சு? அதான்… அவரே சொல்லிட்டாரே…
‘ஏஞ்சாதிக்காரனுக்கு ஓட்டுப் போடாத சாதிக்காரனுக்…’
காலோடு ஒட்டி நிற்கிற மகள் நடுங்குகிறாள். விக்கி விக்கி அழுகிறாள். அவள் பாவாடை மூத்திரத்தில் நனைந்து கிடந்தது.
‘அடிபட்ட பயத்திலேயே காச்சல் வந்து செத்துப் போவாளோ…’
அவன் மனசு நினைக்க நினைக்கக் கொதித்தது…
மகளைத் தடவிக் கொடுத்தபோது… கழுகின்காலடியில் சிக்கிக்கொண்ட புறாவைப் போலத்துடித்தது, அவனது மனம்.
பி.கு : (முதலாளி என்பது நிலச்சுவான்தார் என்பதனாலல்ல, ஜாதி இந்துக்களைத் தாழ்த்தப்பட்ட மக்கள் அழைக்கிற மரியாதைச் சொல்)
– கல்கி, 3-8-86, 1000 ரூ. முதல் பரிசுக் கதை
– சிபிகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1987, கங்கை புத்தக நிலையம், சென்னை.