(1980 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சரியான போஷாக்கின்மையே தன்னுடைய குழந்தைகளினதும், மனைவியினதும் நோய்க்கான ஒரே அடிப்படைக் காரணம் என்பதை சுந்தரேஸ்வரன் நன்றாகவே அறிவான். எனினும், அதற்கு மாறாக அவனால் எந்த முயற்சியையும் மேற்கொள்ள முடியவில்லை. எல்லாக் கடன்களையும் கழித்துவிட்டுப் பார்த்தால் அவனுக்கு கையிலே சம்பளமாக வந்து சேருவது முன்னூற்றி எட்டு ரூபா அறுபது சதங்கள் மட்டுமே.
அவனது நான்கு குழந்தைகளும் ஓரமாக ஒதுங்கிப் போய்ப் படுத்திருந்தன. பொழுது இப்போதே இலேசாக விடியத் தொடங்பியிருந்தது. மனைவி ஆனந்தலோசனி கிணற்றடியிலே, கடுமையாக வந்த இருமலை லேசாக இருமிச் சத்தமிட்டுக் கொண்டு பானை, சட்டிகழுவிக் கொண்டிருக்கின்றாள். முப்பதிரண்டு வயதிலேயே .வாழ்வின் பெரும் பகுதியை இழந்து விட்டவள் போல சோர்ந்த முகத்தையும், மகிழ்வறிந்திடாத சொற்களையும் தனக்குரிய இயல்புகளாக்கிக் கொண்ட அவளினைப் பார்க்கையிலே சுந்தரேஸ்வரனுக்கு மனதினுள் ஏக்கமும், பெருமூச்சும் சீறிக் கிளம்பும். தன்னால் தான் அவள் இவ்விதமான துயரத்தினை அடைந்திருக்கின்றாளோ என்று கூட அவன் ஏங்குவதுண்டு. எனினும் எந்த வேளையிலும், அவள் அவனைச் சினந்தறியாள். முன் நெற்றியிலே கவிந்து புரள்கிற மயிற் கற்றையினை புறங்கையினால் ஒதுக்கிக் கொண்டே கருணையோடு அவனைப் பார்த்து விட்டு போய்விடுவாள். இதே போன்ற ஒரு காலைப் பொழுதின் போது பதினான்கு ஆண்டுகளின் முன்னர் அவளுக்கும் அவனுக்கும் திருமணமாயிற்று. அப்போதைய அவளது முகத்தில் என்னநிறைவான மகிழ்வு குடியிருந்தது. கன்னக்கதுப்பு, அழகிய புன்னகை, பகமை பொலிந்த உருவம் என்ற வடிவமாக ஆனந்தலோசனி அவனோடு இணைந்திருந்தாள்……. இப்போது? அவன் சிந்தனை கலைந்தான்……. அவனுக்கு எதிரே பாடப்புத்தகப் பிரச்சினையோடு மூத்த மகளான ஜெயா நிற்கின்றாள். பன்னிரண்டு வயதான அவளது முகமும், வயதுக்கேயுரிய பசும் புன்னகையும், யௌவனம் மொட்டவிழ்கிற வசீகரமும்…..
‘என்ன ஜெயா….. என்ன சொல்லித்தாறது?’
ஜெயா பாடப் புத்தகத்தை விரித்து, தனது சந்தேகத்தை விளக்கினாள். அவளுக்கு விளக்கப் புத்தகமாயும், டியூசன் மாஸ்டராகவும் அவன் மாறி அரை மணி நேரம் சுழல்கிறது…..
மூன்ற பிள்ளைகளும் ஆனந்த லோசனியோடு சிணுங்கிச் சண்டையிட்டு விட்டு அப்பாவிடம் தீர்ப்பு வேண்டி கண்களைக் கசக்கிக் கொண்டு முன்னே வந்து நிற்கின்றனர். அவர்களைச் சமாதானப் படுத்தி, குளிக்கச் செய்து கொண்டிருக்கையில்….
அடுத்த வீட்டு ரேடியோவில் ஈரான் பிரச்சினை பிரஸ்தாபிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. ரேடியோவில் உலகச் செய்தி ஒலிபரப்பப் படுவது ஏழரை மணிக்கு என்பதனை சுந்தரேஸ்வரன் நன்கறிவான். அந்தச் சத்தம் காதில் விழுந்ததும் மனம் பதைபதைத்துக் கொள்கிறது.
‘ஏழரை மணிக்கு மேலையாகி விட்டது. இன்றைக்கும் ஒபிசிற்குப் பிந்தித்தான் போகவேண்டி வரப்போகிறது. மத்தியான உணவைக் கட்டிக் கொண்டு போய்ச் சாப்பிடுகிறதுதான் ஒரேவழி’ என்று மனதிற்குள் சொல்லியவாறு….
‘ஆனந்தி, நான் இப்ப சாப்பிடேல்லை. டிபன் கரியரிலை சாப்பாட்டை வையும். இரண்டு நேரச் சாப்பாட்டையும் மத்தியானமே ஒன்றாகச் சாப்பிடுகிறன்…..’
ஆனந்த லோசனி புகை படிந்த முகத்திலே சிறிது கண்டிப்பை வரவழைத்துக் கொண்டு அவனைப் பார்த்தாள்.
‘ஒரு கிழமையிலை மூன்று நாளுக்குத்தான் ஒழுங்காகச் சாப்பிடுறீங்கள். இப்பிடியே போனால் நோய் நொடி வந்து படுக்கையிலை படுத்திட வேண்டியது தான். இப்ப என்ன அவசரம்…. சாப்பிட்டுத்தான் போக வேணும்.’
பரபரப்பாக சாப்பாட்டை அவனுக்கு முன்னே வைக்கின்றாள், ஆனந்தலோசனி.
தண்ணீரை அவசர அவசரமாகக் குடித்தவாறு மனதிற்குள் நினைத்துக் கொள்கின்றான் சுந்தரேஸ்வரன்.
‘இவ்வளவு காலமாக நான் கிளாக் வேலை பார்க்கிறேன். என்னுடைய முழுக் கவனத்தையும் வைத்து செம்மையாக என்னுடைய கடமைகள் யாவற்றையும் செய்து வருகின்றேன். என்னுடைய சொந்த வீட்டுக் கடமைகளை விட மிகுந்த அக்கறையோடு தான் இந்தக் கடமைகளைச் செய்து வருகிறேன். ஆனால், இதற்கெல்லாம் தகுந்த கவனிப்பும், மதிப்பும் எனக்குத் தரப் படுகிறதா?’
***
மெல்லிய தென்றற் காற்று, யன்னல் வழியாக அறையினுள்ளே நுழைகின்றது. இள வெய்யிலின் ஒளி சரிவாகி, அறையினருகேயுள்ள பூஞ்செடிகளில் படிகின்றது. பெரிய அப்பங்களாவின் நடு ஹாலில் அப்போது தான் ரேடியோ மெல்ல முணுமுணுக்க ஆரம்பிக்கின்றது……
சமையல் அறையினுள்ளே வேலைக்காரி சரசு, காலை உணவைத் தயாரித்துக் கொண்டு, சமையல் அறைக்கு நேர் எதிரேயுள்ள சுவரிலே தெரிகின்ற மணிக்கூட்டைப் பார்க்கின்றாள். மணி ஏழு.
வழமையாக அவ் வீட்டிலே எல்லோரும் ஏழரை மணிக்குத் தான் உறக்கம் விட்டெழுவார்கள். அரசாங்க அலுவலகத்தில் உயர் அதிகாரியாகக் கடமையாற்றுகின்ற சிவகுருநாதன் ஏழரை மணிக்கு ‘பெட் காபி’யைக் குடித்து விட்டு காலைக் கடன்களை முடித்த பின்னர் பூஜை அறைக்குள் சரியாக எட்டுப் பதினைந்துக்கு நுழைவார். அவர் பூஜை அறைக்குள் நுழைகிறபோது யார் அவரைத் தேடி வந்தாலும் சந்திக்க மறுத்திடுவார்.
அவருடைய காலை உணவு வாழைப்பழங்களும், பாலும், வைட்டமின் மாத்திரைகளும் மட்டும்தான்.
மிஸிஸ் சிவகுருநாதன், சரசு கொண்டு வந்த பாலைக் குடித்துவிட்டு, மணிக்கூட்டைப் பார்க்கின்றாள். மணி ஒன்பது.
சிவகுருநாதன் அலுவலகத்துக்குப் போவதற்காகத் தயாரானபோது வெளியே அதுவரை நின்ற ஜீப் டிரைவர் தங்கராசா அவசரமாக உள்ளே வந்து அவரிடமிருந்த ‘பிறீப் கேஸை’ வாங்கிக் கொண்டு போய் ஜீப் வண்டியில் வைத்துவிட்டு, மீண்டும் வெளியே போய் அவருடைய உத்தரவுக்காகக் காத்துக் கொண்டு நின்றான்.
அது அரசாங்க ஜீப் வண்டி, அரசாங்கத் தேவைகளுக்காக மட்டுமே உபயோகிக்கப் படவேண்டிய அந்த ஜீப் வண்டியின் சாரதியாக ஐந்து வருஷங்களாகத் தங்கராசா கடமையாற்றி வருகின்றான்.
‘தங்கராசு, நான் முற்றாகவே மறந்து போனேன். இன்றைக்கு ஒரு வாழைக்குலையும், கொஞ்சம் மரக்கறியும் வாங்க வேணும். நான் ஜீப்பிலை வாறன். சரசுவையும் கூட்டிக் கொண்டு போகலாம். முதல் மார்க்கட்டுக்குப் போய் அலுவலை முடித்துக் கொண்டு பிறகு ஒபீசிற்குப் போகலாம்’ என்று கூறிய சிவகுருநாதன் மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டார்.
‘அட்டா, இன்றைக்கு ஒன்பது மணிக்கு ஒரு ‘மீட்டிங்’ கிராம அதிகாரிகளோடு ‘பிக்ஸ்’ பண்ணியிருந்தேன். மார்க்கெட்டுக்குப் போய்விட்டு ஒபிஸிற்குப் போக எப்படியும் பத்துமணி ஆகிவிடும்……. ஆ! அதிலென்ன, கிராமத்து ஆட்கள் தானே! ஒரு மணித்தியாலத்திற்குத் தானே பொறுத்திருக்க வேணும். அதற்குள் என்ன உலகமா கவிழ்ந்து விடப் போகிறது.’
***
காய்கறிச் சந்தை முடக்கடியில் வேகமாக வந்த காருக்காகச் சைக்கிளை ‘பிறேக்’ பிடித்து நிறுத்திய கந்தரேஸ்வரனுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. இச்சம்பவத்தை எதிர் பார்த்துக் காத்திருந்தது போலவே, றோட்டிலே குத்தி நின்ற கூரான ஆணியின் மேலே சைக்கிளின் முன் சில்லு ஏறி ‘ஸ்ஸ்ஸ்’ என்ற ஒலியோடு றிம்மில் பாரந்தாங்கி நின்றது.சில கணங்களிலேயே சைக்கிளின் முன் சக்கரத்தின் காற்று முற்றாயே போய்விட்டது.
சுந்தரேஸ்வரன் தடுமாறிப் போய்விட்டான். இப்போதே அலுவலகத்துக்குக் காலதாமதமாகிவிட்டது. இனி சைக்கிள் ரயரைப் பிரித்து ஒட்டிக் கொண்டு போவதானால் மேலும் அரைமணி நேரம் தாமதமாகும். அலுவலக அதிகாரிகளின் வெறுப்புமிழுகின்ற பார்வைகள். சிவப்புக் கோடு கீறப்பட்ட வரவு இடாப்புப் புத்தகம் ஆகியன கண்களிற்குள் தோன்றி மனதினை மிரட்டிக் கொண்டிருந்தன.
றிம்மோடு முட்டி, மனதினை அமுக்குகிற ரயரை மெதுவாக முன்புறமாக உயர்த்தி உருட்டியவாறு சைக்கிள் கடையினை நோக்கி நடந்தான் கந்தரேஸ்வரன். இரண்டு அடிகூட எடுத்து வைத்திருக்க மாட்டான். எதிரே உறுமிய ஜீப்பிற்காக வழிவிலகி நிமிர்ந்தவன் – எதிரே கண்ணுக்குப் பரிச்சயமான ஜீப்பைக் கண்டு மனம் துணுக்குற்றான். தங்கராசா பரிதாபகரமாக சுந்தரேஸ்வரனைப் பார்த்தான். ஜீப்பின் முன்புறமிருந்த சிவகுரு நாதன் அற்ப புழுவைப் பார்ப்பது போல சுந்தரேஸ்வரனைப் பார்ப்பதைத் தங்கராசா ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே, ஜீப்பைக் காய்கறிச் சந்தையின் மதில் ஓரமாகக் கொண்டுபோய் நிறுத்தினான்.
சிவகுருநாதன் மணிக்கூட்டைப் பார்க்கிறார்.
ஒன்பது பதினேழு.
‘எட்டரைக்குத் தொடங்குகிற கந்தோருக்கு, இந்த ஆள் இப்பதான் போய்க் கொண்டிருக்கு. இப்ப மணி ஒன்பதரையாகப் போகுது. கந்தோருக்கு இதிலையிருந்து ஒன்றரை மைல் தூரம் வரும். எப்படியும் பத்து மணிக்குத்தான் கந்தோருக்கு இவர் போகப் போகிறார்…… இவை தரவழி இருக்கிறவரை இந்த நாடு எப்படி உருப்படப் போகுது. விடிய விடியப் பெண்சாதிமாரோடை இவங்கள் படுத்திருக்கிறவன்கள் போலை’ என்று முணுமுணுத்தவர் இறுதியாக இரண்டொரு கெட்ட வார்த்தைகளை அழுத்தமாகச் சொல்லிக் காறித் துப்பினார்.
***
சிவப்புக் கோடிடப் பட்ட வரவு இடாப்பினைக் பரிதாபகரமாகப் பார்த்துக் கொண்டு, திறந்த பேனாவோடு நின்ற சுந்தரேஸ்வரனை மிகுந்த இரக்கத்தோடு, தனது கதிரையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த பிரதம லிகிதர் கிருஷ்ணபிள்ளை மெதுவாக எழுந்து அவ்விடத்துக்குப் போனார். அந்தக் கணங்களிற்றுக்ளேயே, ஒரு வேலையைப் பொறுப்பாகக் கொடுத்தால், அதிலேயே மனம் லயித்து உணவினையும் மறந்து அலுவலகம் முடிந்து இருளான போதிலும் அலுவலை முடித்துச் செல்கின்ற சுந்தரேஸ்வரனின் கடமையுணர்வினை, மனதினுள்ளே கிருஷ்ணபிள்ளை அசைபோட்டுக் கொண்டார்.
‘என்ன தம்பி, இன்றைக்கு நன்றாகப் பிந்தி வந்திட்டீர்…’ கிருஷ்ண பிள்ளையின் ஆறுதலான வார்த்தைகள் சுந்தரேஸ்வரனின் மன அலுப்பினை வருடி இதப் படுத்தின.
‘நேரத்துக்குத்தான் வந்தனான். வழியிலை சைக்கிளுக்கு காற்றுப் போயிட்டுது. அது தான் பிந்தி வந்திட்டன்.’
‘பறவாயில்லை’ என்றவாறு வரவு இடாப்பினைப் பார்த்தவர், ‘சரி எட்டு முப்பத்தைஞ்சு என்று கையெழுத்தை வையும்’ என்று விட்டு மீண்டும் பழைய இடத்திற்குச் சென்று உட்கார்ந்தார்.
***
வீட்டிற்குப் போய் ஜீப்பிலிருந்து இறங்கியபோது திருமதி சிவகுருநாதன் கவலை தோய்ந்த முகத்தோடு நிற்பதனைக் கண்டு சிவகுருநாதனின் மனம் துணுக்குற்றது.
‘நீங்கள் போறபோது சொல்ல மறந்திட்டன். மத்தியானம் கட்டாயம் முழுக வேணும். ஷம்போ வாங்க வேணும். அதோடை ஒரு ஓடிக்கொலோன் போத்தலும், லக்ரோ கலமைனும் வாங்கினால் சரி. நீங்கள் களைத்துப் போயிருப்பீங்கள். கொஞ்சம் றெஸ்ற் எடுங்கோ. தங்கராசா போய் வாங்கிக் கொண்டு வரட்டும். இந்தா தங்கராசா காசு……’
திருமதி சிவகுருநாதன், வார்த்தைகளாலேயே சிவகுருநாதனை ஜீப்பிலிருந்து கீழே இறக்கினாள்.
எல்லா அலுவல்களும் முடிந்து, அவர் அலுவலகத்துக்குள் போனபோது மணி பதினொன்று பத்து.
கதிரையில் உட்கார்ந்தவர் ‘காலிங் பெல்’ லைப் படீரெனத் தட்டினார். பியோன் சுந்தரம் வெகு பவ்வியமாக எதிரே நின்றான்.
‘ஐயா, காலமையிலையிருந்து ஆட்கள் வந்து காத்துக் கொண்டிருக்கினை…. கூட்டமாக……..’
எரிந்து விழுந்தார் சிவகுருநாதன்.
‘அவங்கள் நிற்கட்டும்……. நீ போய் அற்ரென்டன்ஸ் றிஜி ஸ்டரை எடுத்துக் கொண்டு வா…..’
வரவு இடாப்பில் அசட்டையாக தன்னுடைய இனிஷியலை வைத்து 8-35 என நேரமிட்டவர் ஏதோ நினைவில் மீண்டும் இடாப்பைப் பார்த்தவர் சுந்தரேஸ்வரனின் கையெழுத்துக்கு நேரே இடப்பட்டிருந்த நேரத்தைப் பார்த்தார். திடீரென அவருக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டது. ‘டேட்டி றாஸ் கல்ஸ்’ என்றவாறு காலிங் பெல்லை இறுக்கி அடித்தார். அந்தச் சத்தமும் அவரின் மனதிலே மூண்ட கோபாக்கினியாய் சிதறி ஒலித்தது.
***
தனக்கு முன்னே தயங்கியவாறு நின்ற சுந்தரேஸ்வரனுக்கு முன்னால் திறந்தபடியே வரவு இடாப்பினைத் தூக்கிப் போட்டார் சிவகுருநாதன்.
‘இதென்ன இதிலை எழுதியிருக்கிறீர்?’
உறுமிய குரலில் அலுவலகம் மௌனமாயிற்று. அதைத் தொடர்ந்து அலுவலக ஒழுங்குகள் பற்றியும், நேர்மையாகக் கடமையாற்றுவது குறித்தும், நீண்டதொரு பிரசங்கம் நிகழ்த்தினார் சிவகுருநாதன். ஒவ்வொரு வார்த்தையும் குண்டூசிச் சரமென சுந்தரேஸ்வரனின் இதயத்தைத் தாக்கி ரணப் படுத்தின. அந்த வேதனையிலிருந்தே படிப்படியான துணிவொன்று தலை நிமிர்ந்து விஸ்வரூபம் எடுத்து அவர் மனதினுள்ளே எழுந்து கொண்டிருந்தது.
‘இப்படியான களவு வேலையை இனிமேல் நீர் செய்யாமல் இருந்தால் சரி. எதிலும் நேர்மை வேண்டும்.’
குனிந்தவாறு மேசையைப் பார்த்துக் கொண்டிருந்த சுந்தரேஸ்வரனின் கண்கள் வரவு இடாப்பில் ஏறி இறங்கிய போது, புதிய ஒளியொன்று கண்களில் தீட்சண்யமாயிற்று.
‘சேர்…. நீங்கள் எனக்கு மேலதிகாரியாய் இருக்கலாம். ஆனால், வாய்க்கு வந்தபடி பேச முடியாது. நான் களவு வேலை செய்தனான் என்று பேசுறீங்கள், ஆனால் நீங்கள் செய்தது என்ன?
அவனது உறுதியான வார்த்தைகளால் மிகவும் ஆத்திர வசப்பட்ட சிவகுருநாதன் உரத்த குரலில் சத்தமிட்டார்.
‘ஐசே கெற் அவுட்…’
***
தமது மெதுவான ஆத்திரத்திலிருந்து விடுபட்ட சிவகுருநாதன் வாய்க்குள்ளே ‘இப்படி எத்தினை பேரை நான் கண்டிட்டன்’ என்று முணுமுணுத்தவாறே அந்த அந்தரங்க அறிக்கையை எழுதலானார். திரு.கே.சுந்தரேஸ்வரன் மேலதிகாரிகளின் உத்தரவை ஏற்று நடவாத படியினால் நிர்வாகத்தில் தடங்கல் உண்டாகிறது. வேலையும் ஒழுங்கில்லை, அதோடு இவரது போக்கு அரசாங்கத்திற்கு மாறாக உள்ளது. எனவே இவரை உடனடியாக இடமாற்றம் செய்ய…..
– இதழ் 143 மே-யூன் 1980, மல்லிகைச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஜூன் 2002, மல்லிகை பந்தல் வெளியீடு, கொழும்பு.