சின்னவளின் சாமர்த்தியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: December 6, 2022
பார்வையிட்டோர்: 3,685 
 
 

(1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஏய் கணபதி! என்ன செய்யுற? இங்கிட்டு வா! சீக்கிரம் புள்ள! அம்புட்டுப் பேரும் வேலைக்குப் போறாவ” குரல் கேட்டுச் சுதாரித்த கணபதி நெற்றியில் வைத்த நிலாப்பொட்டை நிலையில் தொங்கிய கண்ணாடியில் சரிபார்த்தாள்.

அவளுக்கு அப்படி என்ன சர்க்கார் உத்தியோகம் என்றால் அதுதான் இல்லை. ஆனால் அவளைப் பொறுத்தவரை அது நேர்மை மாறாத உத்தியோகம். வயலில் களை பிடுங்கல், நாற்று நடல், அறுவடை செய்தல் எனப் பல கூலிவேலைகள் செய்தல்தான் அவளது வேலை.

அவள் வயதொத்த பல பெண்கள் பீடி சுற்றும் குடிசைத் தொழிலில் ஈடுபட்டிருப்பதால் வீட்டை விட்டு வேகாத வெயிலில் வந்து வேக வேண்டியதில்லை. தவிர அவர்களுக்கு இருக்கும் பேறுகால விடுப்பு, போனஸ் போன்ற சலுகைகள் இவளுக்கு இல்லை. ஏதோ நான்காம் வகுப்புவரை கிராமத்தில் உள்ள கூரைப் பள்ளியில் படித்துவந்தவள்; படிப்புக்கும் அவளுக்கும் ஒத்துவராத நிலையில் குடும்பப்பாரத்தைச் சுமக்கும் பொறுப்புத் தலைமேல் விழுந்தது; படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

காலுக்கு ஏற்ற மிதியடியை அணிந்துகொண்டு தலைவாசலுக்கு வந்தவளைச் சக தோழிகள், ” ஏ……….ய்யப்போ இப்புட்டு நேரமா? பெரிய சினிமா நடிக கெட்டா போ” என்று கூறிக் கேலி செய்தனர். இந்த விஷயத்தில் கிராமத்துப் பெண்கள் நகரத்துப் பெண்களுக்குச் சளைத்தவர்கள் அல்லர். எங்கும் சுற்றம், உறவு எனக் கிராமமே அவர்களுக்கு நெருக்கம் என்பதாலும், கிராமத்தில் உள்ள இயற்கைக் காட்சிகள் அவர்களுக்கே சொந்தம் என்பதாலும் சுதந்திரமும் துணிச்சலும் அவர்களிடத்தில் ஒருங்கிணைந்து நின்றன.

அனைவரும் பொடிநடையாய் நடந்து நடந்து வயலுக்குப் போனார்கள். அங்கு இவர்களது இவர்களது வரவை எதிர்நோக்கிக் காத்திருந்த பெரியவரை முதலாளியாய்ப் பார்த்தார்கள். “ஊம்……… வாங்க…….!” என்று வாய் வானத்தைப் பார்க்க, அன்புடன் வரவேற்றார். “ம்…… ஏய்….. என்ன, பெரிசு இன்னைக்கு வெள்ளையும் சொள்ளையுமா நிக்குது. வீட்டுல அம்மா இன்னைக்கு நெறஞ்ச மொகத்தோட வழியனுப்பி வச்சாகளா இல்ல மருமவ கொஞ்சம் நல்லா சமைச்சுப் போட்டாளா….?” என்று தோழிகள் தங்களுக்குத் தெரிந்த இமயமலை ரகசியங்களைப் பந்தி வைத்தனர்.

“ம்..சொர்ணம்… நீ கடைகோடி பக்கம் போ…. அன்னத்தாய் நீ மேக்கால இருக்க பக்கம் CLIT……… கணவதி நீ தெக்கால இருக்க பக்கம் போ… இன்னைக்கே எல்லாத்தையும் முடிச்சாகணும். இன்னும் ரெண்டு நாளையில் பிள்ளிய கடலையை ஓடைச்சுக் குடுக்க வருவாக. பெறவு, காயவச்சுச் செக்குக்கனுப்பத் தோதா இருக்கும்” என்று கூறி அவர்களைச் சுறுசுறுப்பாக்கினார். அறுவடைக்குத் தயாராக உள்ள நிலக்கடலைச் செடியைப் பிடுங்கும் வேலைக்குப் பல வயல்கள் தயாராக இருந்தன. முதலாளி சொன்ன பகுதிகளில் எல்லாம் இவர்களுக்கு மேற்பார்வையாளர்களாக வாலிப வயது இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் முதலாளியின் தம்பிகளாகவோ பிள்ளைகளாகவோ இருந்தனர்.

கையோடு கொண்டு போன போணிச்சட்டியை ஒரு மூலையில் வைத்துவிட்டுத் தயாராகக் கொண்டுவந்த தலை ‘சும்மாட்டு’த் துணியைத் தலையில் கட்டியபடி தமக்குரிய வயலுள் இறங்கினர். அருகிருந்த சிறிய மண்வெட்டி, கொத்தும் கருவிகள், நீர் வாளிகள், ஓலைக்கூடைகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வயலுக்குள் இறங்கினர், பெண்கள். முன்பே நீர் ஊற்றி ஊறிய வெதவெதப்பான வயல், நிலக்கடலைச் செடிகளை வேருடன் எளிதாகப் பிடுங்க வசதியாக அமைந்தது. அளவோடு பேசிக்கொண்டே வேலையில் ஈடுபட்ட பெண்கள் அவ்வப்போது கீழே விழுந்த கடலைகளைப் பக்கத்தில் உள்ள நீர்வாளிகளில் போட்டு வைத்தனர். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை கிடைக்கும் சிறு இடைவேளைகளில் அவற்றை உடைத்து நொறுக்குத் தீனியாக உண்பர்.

மதிய நேரம் வந்தது. கட்டுச் சோற்றைச் சாப்பிட்டுவிட்டு அப்படியே கண்ணயர்வர், பலர்; கதை அளப்பவர், சிலர். ஆனால், கணபதியோ ஓய்வு நேரத்தில் காலாற நடந்து பல இடங்களையும் மெல்ல வெள்ளோட்டம் விடும் குணமுடையவள். அவளுக்கு வெட்டிப்பேச்சுப் பேசுவதிலும் குட்டித் தூக்கம் போடுவதிலும் ஆர்வமில்லை. கும்பல் சேர்ந்தால் குட்டிச் சுவரு என்று யாரோ சொன்ன பழங்காலத்துப் பழமொழியைப் பொன்னே போல் போற்றுபவள். உண்மையில் அது தவறு என்பதை அறியாதவள், அந்தப் பாமர மகள்.

கொண்டுவந்த சோளச்சோற்றைச் சின்ன ஈராங்கியத்தைக் கடித்துக் கொண்டு சாப்பிட்டாள். தன்னை ஆயாசப்படுத்திக் கொண்டவள், மெல்ல நடைபோடத் தொடங்கினாள்.

மேற்காலே சுமார் சுமார் ஐந்து நிமிடம்போல நடந்தவள், சற்றே போனதும் பெரிய வாய்க்காலில் நீர் ஓடுவதைப் பார்த்து ரசித்தாள். ‘சடக்’கென அது அளவில் சிறிதாகிச் செல்வதைப் பார்த்தாள். இன்னும் சென்றவள், அந்த அளவு சுருங்கிய வாய்க்கால், பக்கத்திலுள்ள வரப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்ததைப் பார்த்தாள். நதிமூலம், ரிஷிமூலம் எல்லாம் பார்க்கக்கூடாது என்பார்கள். ஆனால் அந்த நீர் எங்கேயோ செல்கிறது என்பதை உணர்ந்தவளுக்குச் சூது ஏதும் படவில்லை. இது ஏதாவது புதிய இடத்தைக் காட்டக்கூடும் என்று உணர்ந்தாள்.

“சரி…..இன்னைக்கு வேண்டிய வேலை முடிஞ்சாச்சு. இனி நம்ம வேலயப் பாப்போம்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டு கிழக்கை நோக்கி நடைபோட்டாள்.

தலையில் கட்ட வேண்டிய ‘சும்மாட்டு’த் துணியை நீட்டி மடித்துக் கொண்டிருந்த சக தோழிகள் இவளைப் பார்த்ததும், “என்ன தாயீ இன்னைய பொளப்பு முடிஞ்சிட்டா…எங்கிட்டுப் போய்ட்டுவர? அடேங்கப்பா என்னதான் செய்வியோ?” என்று தொணதொணத்தனர், சற்றுச் சத்தமாகவே. சிலர் ஏதோ அவளது காதலனுடன் பேசிவிட்டு வருவதுபோல எண்ணிக் கேலியும் கிண்டலும் செய்வார்கள்,

வேலை தொடங்கியது. அனைவரும் கவனத்துடன் காரியத்தில் ஈடுபட்டனர்.

மறுநாளும் வந்தது. மதியமும் வந்தது.

அன்றும் கணபதி தனக்குப் புதிய மகிழ்ச்சியைத் தரக்கூடிய வரப்புப் பகுதிக்குச் சென்றாள். அன்று அவளுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. வரப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த வாய்க்கால் தண்ணீர் மெல்ல மெல்ல அதிகமாகியது. சிறிது தூரம் சென்ற அந்த நீர், மேலும் தொடர்ந்து செல்லும்வகையில் வேறொரு வாய்க்கால் ஒன்று வெட்டப்பட்டிருந்தது. இதற்கிடையில் அந்த நீரின் நிறம் புதிய தண்ணீரைப் போலத் தெளிவாக இல்லை. அது ஓடிய பகுதியிலிருந்த வயல் யாருக்குச் சொந்தமான வயல் என்ற கேள்வி அவளுள் எழுந்தது. ஆழமாகச் சிந்தித்தபோது, அது பிழைப்புத் தேடித் துபாய்க்குச் சென்றுள்ள பொன்னுவேலுக்குச் சொந்தமானது என்று உணர்ந்தாள். அவனது தாய்வழிப் பாட்டி பொன்னுடையாள் சொத்து (ஒரே பெண்ணாக உள்ள குடும்பத்தில் உள்ள சொத்து பெண்ணுக்கே சேரும்போது அது பொன்னுடையாள் சொத்து என அழைக்கப்படும்) மூலம் கிடைத்தது என்பது தெரிந்து வருத்தப்பட்டாள். மேய்ப்பார் இல்லாவிட்டால் எல்லாரும் ஏய்ப்பார்கள் என்பதுபோல அவனது குடும்பமும் இந்த வயலில் அதிக அக்கறை செலுத்தாததை உணர்ந்தாள்.

உச்சி வெயில் மண்டையில் உறைக்க, இன்னும் நடந்தாள். பொன்னுவேல் வயலுக்குப் பக்கத்தில் சென்ற வாய்க்கால் கண்ணிமைக்கும் தூரத்தில் மறைந்து போயிருந்தது. “என்னடா! இதுவரை வந்த வாய்க்கா எங்கிட்டுப் போச்சுது? அடப்பாவமே? இதென்ன மாயமா இருக்கே?” என்றவள் தொடர்ந்து சென்றாள். ஓர் ஓர் அரை மைல் தூரத்தில் மலைக்குப் பக்கத்தில் இருந்த புதருக்கருகில் ஒரு சிறிய பிளாஸ்டிக் குழாயிலிருந்து நீர் மெல்ல வருவது தெரிந்தது. அந்த நீரில் அவள் வானவில்லைப் பார்த்தாள். பல நிறங்களில் தெரிந்த தண்ணீர் ஒருவித வாடையைப் பெற்றிருந்தது. இதில் ஏதோ உள்ளது என்று அவளுக்குப் பொறி தட்டியது. எனினும் அப்போது சிந்திக்க நேரமில்லை. அதே நேரம் இதைப்பற்றி மற்றவர்களிடம் பற்ற வைக்கவும் அவளுக்கு மனமில்லை. பொறுமையாக யோசிக்க முனைந்தாள்.

தன் வேலையிடத்துக்கு அவள் வரவும், வேலையைத் தொடங்கும் நேரம் வரவும் சரியாக இருந்தது. ஏதோ போனோம் வந்தோம் கஞ்சி குடித்தோம் என்றில்லாமல் வித்தியாசமாக இருந்த கணபதியைச் சிலநேரம் அவளது அம்மாவும் ‘அதிகப்பிரசங்கி’ என்று வைவாள். ஆனால், கணபதி கிராமத்தில் கிராமத்தில் பிறந்தாலும் எதையும் கருத்துடன் சிந்திக்கும் அறிவுக் கூர்மை மிக்கவள். ஏனோ ஏட்டுக்கல்விதான் வரவில்லை. அவள் மட்டும் பட்டணத்தில் பிறந்து படித்திருந்தால் உயர்ந்திருப்பாள். இதுதான் விதி என்பதோ?

பலரும் சந்தேகப்படுவார்கள் எப்படியெல்லாமோ என்ற எண்ணத்தில் மறுநாள் செல்லாமல் அடுத்த நாள் சென்றாள். அப்போது அவளுக்கு மேலும் பல செய்திகள் தெரிந்தன. மலைப்பகுதியின் அருகிலுள்ள புதரில் கொஞ்சம் அதிகமாக நீர் தேங்கியிருந்தது. ஆனால் அது பார்ப்பவர் கண்களுக்குத் தெளிவாகத் தெரிய வாய்ப்பில்லை.

சரி, இந்த நீர் எங்கிருந்துதான் வருகிறது? ஏன் இங்கு வந்து முடிகிறது?- இவை போன்ற வினாக்கள் அவளுக்கு மேலும் பல தேடல் முயற்சிகளைத் தந்தன. சுற்றுமுற்றும் பார்த்தாள். பார்த்தவள் கண்ணுக்கு எட்டியவரை யாருமே தென்படவில்லை.

அன்று மாலை வேலையை முடித்தவள், “ஏச்சிக்கி நான் எங்கய்யாவுக்கு மருந்து ஒன்னு எடுக்க மலைகிட்டப் போறேன்” என்றாள். தோழிகள் “சரி” என்று கூறினார்கள். அவ்வப்போது சளியும் தும்மலுமாய்க் காட்சியளிக்கும் அவளது அப்பா தக்கநேரத்தில் சாக்குப்போக்காக வந்து உதவினார். புதரருகில் சென்றவள் நீரின் அளவு மேலும் அதிகமாகி இருப்பதுடன் வாடையும் சற்றுத் தூக்கலாக இருப்பதை உணர்ந்தாள்.இதைப் பற்றி யாரிடம் சொல்வது? ஆனால் சொல்லாமல் இருப்பது என்பது அவளைப் பொறுத்தவரை இயலாத ஒன்று. சிந்தித்துப் பார்த்தாள், அவள். வீட்டில் பெற்றோரிடம்? வேறு வம்பே வேண்டாம். விட்டால் அவளுக்குப் பைத்தியம் என்றும் சொல்லிவிடக்கூடும். உடன் வேலைக்கு வரும் தோழிகள்? அவர்களுக்கு இவள் சொல்வது புரியுமா என்பது சந்தேகம். எனவே, பக்கத்தில் சேந்தமரம் கிராமத்தில் வாத்தியார் வேலை பார்க்கும் சொர்ணம் அக்காவிடம் சொல்ல முடிவு செய்தாள். அன்று நேராக அவர் வீட்டுக்குச் சென்றாள். தான் கண்டவற்றை ஒன்று விடாமல் எடுத்துக் கூறினாள்.

எல்லாவற்றையும் கேட்ட சொர்ணம், “கணவதி, நான் வேலை செய்ற கிராமத்துல பட்டணத்துலருந்து ஒரு டாக்டர் வந்திருக்காரு. அவருட்ட சொல்லிப்புடுவோம். அவருக்கு ஏதாச்சும் தெரியும்னு நெனைக்கேன். ஏன்னா இது நோய் சம்மந்தமா இருக்கும்போலத் தெரியுது பிள்ள” என்றார்.

நம்பிக்கை தந்த அவரிடம், “சரிக்கா! நீங்க சொல்லுங்க! நான் ரெண்டு நா களிச்சு வாரேன். வேற யாருட்டயும் சொல்லாதீங்கக்காவ்!” மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினாள்.

சொர்ணம் அக்காவிடம் கூறியபடி கணபதி, இரண்டு நாள்கள் கழித்து அவரது வீட்டுக்குச் சென்றாள். அவளை வரவேற்ற சொர்ணம், இது உடல்நலம் தொடர்புடைய செய்திபோல் தோன்றுவதாகப் பட்டணத்திலிருந்து வந்த மருத்துவர் கூறியதாகவும் மறுநாள் கணபதியைச் சந்திக்கப் போவதாகவும் கூறியதைத் தெரிவித்தார். மனம் மகிழ்ந்த கணபதி, மறுநாள் மாலையில் பொன்னுவேலின் வயலுக்கருகில் மருத்துவரை அழைத்துவரும்படி சொர்ணத்திடம் தெரிவித்துவிட்டுச் சென்றாள். அவளது உள்ளத்தில் ஓராயிரம் பட்டாம்பூச்சிகள் வட்டமிடுவதுபோன்ற உணர்வு. தனது செயலின் சிறப்பைப் பற்றிய மகிழ்ச்சியாக அது இருக்கலாம்போல் தோன்றுகிறது.

காலை வந்த கதிரவன் மாலையில் தன் வீடு நோக்கிச் செல்லும் பொழுது. முன்பே குறித்தபடி, பொன்னுவேலுக்குச் சொந்தமான வயல் பகுதியில் சொர்ணத்தையும் பட்டணத்திலிருந்து வந்த மருத்துவர் குமாரையும் சந்தித்தாள், கணபதி. அனைவரும் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் புதருக்கு அழைத்துச் சென்றாள், கணபதி.

“வா….வ்…இதென்ன இப்டி ‘டெர்ட்டி’யா இருக்கு? மெட்ராஸ்ல ஓடுற சாக்கடைத் தண்ணி மாதிரி இருக்கே? நிச்சயமா இதுல ஏதோ ‘ப்ராப்ளம்’ இருக்குங்க” என்றவர் பேசிய ஓரிரண்டு ஆங்கில வார்த்தைகளுக்குப் பொருள் கூறினார் சொர்ணம். புரிந்து கொண்ட கணபதி ஆமாம் என்று தலையை வேகமாக ஆட்டினாள். குமார், தான் கொண்டுவந்திருந்த பாட்டிலில் புதரருகில் தேங்கி நின்ற நீரில் சிறிதளவை எடுத்துக் கொண்டார். முன்பு வந்தபோது இருந்த அளவைவிடத் தற்போது நீரின் அளவு அதிகமாகி இருப்பதைக் கண்டாள் கணபதி.

“சரிங்க. அப்போ நான் நாளைக்கே பாளையங்கோட்டை ஆஸ்பத்திரிக்குப் போய் இது பற்றி விசாரிக்கிறேன். அதுல கெடைக்கிற தகவலை இவங்ககிட்ட சொல்றேன். ரொம்ப நன்றிங்க…” என்று சொர்ணத்தைக் காட்டியபடி கணபதியிடமிருந்து விடைபெற்றார்.

அவர் போனதும், “கணபதி, நீ ரொம்ப புத்திசாலி. பாரு ஒரு பெரிய நல்ல காரியத்தைச் செஞ்ச புண்ணியம் ஒன்னைத் தேடி வரப்போவது” என முதுகில் தட்டினார் சொர்ணம்.

“சே…போங்கக்கா.. ஏதோ நான் கண்டதை ஒங்கட்ட சொன்னேன். அம்புட்டுத்தா…..ன்” மிகவும் அடக்கத்துடன் நாணினாள், கணபதி,

“வாங்க…வாங்க… என்னக்கா இந்தப்பக்கம்?” என்றபடி எதை எடுக்க எதை ஒளிக்க என்ற நிலையில், அருகிருந்த பாயை எடுத்து விரித்தாள் கணபதி. பள்ளியிலிருந்து வீடு திரும்பும் வழியில் கணபதியைப் பார்க்க வந்த சொர்ணம், “கணவதி! நம்ம நினைச்சது சரியாப் போச்சு. அந்தத் தண்ணி ரொம்ப மோசமான தண்ணி. அது கைல பட்டாலே சொறி, சிரங்குன்னு நோய் வருமாம். வருமாம். குமார் டாக்டர் சொல்லச் சொன்னார். இது சம்மந்தமா ஊர்த்தலைவர்கிட்ட சொல்லச் சொன்னாரு” என்றார் சொர்ணம்.

“இது சம்மந்தமா அவருட்ட சொன்னா ஏதும் சடைச்சுக்க மாட்டாரே?!” என்று கேட்டாள் கணபதி.

‘அவர் ஏன் சடைச்சுக்கப் போறார்? இன்னுங்கேட்டா சந்தோசமில்ல படணும்!” என்றவர் எதுக்கும் நாளைக்கிப் போயிப் பார். பெறவு ஒரு வாரம் களிச்சு நான் ஒன்னப் பாக்கறேன்” என்ற சொர்ணத்திடம், “ஏக்கா… உக்காருங்க… எங்காத்தா பக்கத்துத் தெருல எங்க மாமாவப் பாக்கப் போயிருக்கு. நான் கொஞ்சம் மோரு கொண்டாறேன்” என்றவள் செம்புக் குவளையில் அன்று கடைந்த மோர் கொண்டுவந்தாள்.

மகிழ்ச்சியுடன் மோரை அருந்திய சொர்ணம் அவளிடமிருந்து விடை பெற்றாள். அப்போதுமுதல் கணபதியின் மனம் ஊர்த்தலைவரைப் பார்த்துப் பேசுவது பற்றியே சிந்தித்தது. எல்லாவற்றையும் மனக்கண்ணாடியில் பேசிப் பார்த்தாள்.

மறுநாள் காலையில் ஊர்த்தலைவரைப் பார்த்துத் தான் கண்ட விவரங்களைத் தெளிவாகக் கூறினாள். அவரும் உடனே ஆவன செய்வதாகத் தெரிவித்தார். அவர், கணபதியின் சமூக உணர்வையும் பாராட்டினார். அதைக் கேட்டு, இன்னும் ஒரு வாரத்தில் புதரருகில் தேங்கிய நீரில் பெரிய மாற்றம் தென்படும் என்று கனவு கண்டாள், கணபதி.

ஆனால்…

அடுத்த வாரம் புதரருகில் தேங்கிய நீரின் அளவு அதிகமாகி இருந்ததேயொழிய வேறு ஏதும் மாற்றம் தென்படவில்லை. மனத்தில் கவலையும் ஊர்த் தலைவரின் மீது வெறுப்பும் உண்டாகின. “ச்…சே…இந்த தலைவரு இப்டிச் செய்வாகன்னு நெனைக்கவே இல்லை. எல்லாருக்கும் நல்லது வேணும்னா அவுக ஏதாவது செஞ்சாத்தானே ஆகும்! என்ன மனுசக?” என்றபடி பிற்பகல் வேலைக்குத் திரும்பி வந்தாள்.

அன்று மாலை மீண்டும் சொர்ணம் அக்காவைத் தேடிச் சென்றாள். அவளது நல்ல நேரம், டாக்டர் குமாரும் அங்கு இருந்தார். அவரிடம் தமது மனக்கவலையை எடுத்துக் கூறினாள். இதற்கு மேலும் தாமதிப்பது பயனளிக்காது என்பதை உணர்ந்த குமார் சென்னையில் குமார் சென்னையில் உள்ள தனது நண்பனுக்குத் தகவல் தருவதாகத் தெரிவித்தார். சொர்ணமும் “எல்லாம் நல்லபடி நடக்கும் கணபதி! நம்பிக்கையோட இரும்மா!” என்றார்.

எதையோ பிடிக்கப்போய் எதுவோ ஆனதுமாதிரி சுற்றிப்பார்க்கலாம் என்று போனவளது பயணம் பெரும் சிக்கலை உடையதாக அமைந்ததை எண்ணிப் பார்த்தாள். அது தொடர்பான நினைவுகளை மனத்தில் அசைபோட்டவாறே வீடு நோக்கி வந்தாள். வந்தவளை, “ஏலேய்…கணவதீ…ஏ..பிள்ளை…என்ன..ஏதோ வெசனமாப் போறமாதிரி தெரியுது…என்ன ஆத்தா, ஐயா ஏதாச்சும் சொன்னாகளா?” என்றபடி அருகே வந்து பேசிய அவளது சின்னம்மாவின் குரல் நிஜ உலகிற்குக் கொண்டு வந்தது. “ஆங்..ங்…இல்ல ஆத்தா….என்ன… சின்னத்தா….இன்னைக்குக் கொஞ்சம் காச்ச அடிக்கதுமாறி இருக்கு. மேலெல்லாம் வலிக்கு. அதான்…ஒங்களச் சரியா கவனிக்கலத்தா..” என்று குழறியவள் தன் தவற்றை உணர்ந்தாள். தெருவில் செல்லும்போது விழிப்பாக இருக்க வேண்டும் என்று உணர்ந்தாள்.

“சுருக்காப் போயி வேவு புடிச்சிட்டு தூங்குல” என்ற சின்னம்மாவின் கரிசனத்தில் மனம் மகிழ்ந்தாள், கணபதி.

“கணபதீ! மிஸ் கணபதீ” உரக்க ஒலித்த குரல்களைச் செவிமடுத்த கணபதியின் அம்மா, தலைவாசலுக்கு வேகமாக வந்தாள். அவளைத் தொடர்ந்து வந்தாள் கணபதி. அங்கே நின்ற சொர்ணத்தையும், டாக்டர் குமாரையும் பார்த்ததும் “வாங்கய்யா!” என்றவள் அவர்களுடன் நின்ற காவலர் உட்பட மூவரும் யார் என்று கண்களால் கேட்டாள்.

“கணபதீ! வாழ்த்துக்கள்! நீங்க ஒரு பெரிய காரியம் செஞ்சிருக்கீங்க. நீங்க ஒரு மாசத்துக்கு முன்னால புதர்ல தேங்கி நின்ன தண்ணீ பத்திச் சொன்னீங்களே அது சம்மந்தமாதான் வந்துருக்கோம்” – டாக்டர் குமார்.

“அட அதுவா மாசம் ஒன்னாச்சே! ஏதும் தெரியலன்னு நாம்பாட்டுக்கு மறந்துட்டேன். நமக்கேன் வம்புன்னு அங்கிட்டு போகவே இல்லங்கய்யா. இதெல்லாம் இதெல்லாம் பெரிய மனுசக வெவகாரம்னு தோணுது” என்று பணிவுடன் பேசினாள்.

“என்ன கணபதீ, அப்படிச் சொல்லிட்டீங்க? என் ஃப்ரெண்ட் ராமு கிட்ட இதைப் பத்தி நான் சொன்னதும் அவன் அங்கருக்க சில போலீஸ் அதிகாரிக்கிட்டச் சொல்லிருக்கான். அத்தோட சில டாக்டர்க்கிட்டவும் சொல்லிருக்கான். அந்தத் தண்ணியால தோல் அரிப்பு, காலரா, தீராத நோயெல்லாம் வருமாம். உடனே நெறய பேருகிட்ட புதர்ல தேங்குன தண்ணி பத்தி விசாரிச்சிருக்காங்க. மலைக்குப் பக்கத்துல இருக்கிற ஒரு தோல் கம்பெனியில இருந்து வர்ற கழிவுத் தண்ணிய பலப்பல எடங்கள்ல கொட்டியிருக்காங்க. அதுல ஒரு வழிதான் நீங்க புதர்ல பாத்த தண்ணீ. இதுக்கு ஊர்த்தலைவரும் ஒடந்தையா இருந்ததால அவர் எதுவும் கண்டுக்கல. இன்னுங்கேட்டா நீங்க போய் சொன்னதும் தண்ணிய வேற வாய்க்கா வழியா திருப்பி விட்டுட்டாங்க. எல்லாத்தையும் போலீஸ்காரங்க கண்டுபிடிச்சிட்டாங்க. இப்ப நெறய பேர் மேல வழக்கு போட்டுருக்காங்க. நல்ல காலம்! அந்தத் தண்ணீ உங்க ஊரு ஓடையில கலக்காமத் தடுத்திட்டீங்க!” சொல்லி முடித்தார் குமார்.

“எல்லாம் மெய்யாவா?” என்று கேட்டவளைப் பார்த்து, “ஆமாம் கணவதி” என்றார் சொர்ணம். கணபதியின் அம்மாவுக்குத் தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. ஆனால், என்னவோ நல்லது நடந்திருக்கிறது என்று மட்டும் உணர்ந்துகொண்டாள். என்னவோ ஏதோ என்று சற்று முன்பு வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தவள் முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள் தென்பட்டன.

“கணபதீ! உங்களுடைய சேவையைப் பாராட்டி இந்த ஊர்லயே நடக்கப்போகிற விழாவுல உங்களுக்கு விருது வழங்கப்போறாங்க!” என்று குமார் தெரிவித்ததும் கண்களில் சந்தோஷ விளக்குகள் ‘பளிச்’ ‘பளிச்’சென்றன. அந்த ‘பளிச்’ மகிழ்ச்சி அங்கிருந்த எல்லார் முகங்களிலும் கண்ணிமைக்குமுன் பரவியது.

(1987-இல் சென்னைப் பல்கலைக்கழகம் நடத்திய அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான சுற்றுச்சூழல் தொடர்பான சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை)

– 1987, கண்ணாடி நினைவுகள், முதற் பதிப்பு: ஜூன் 2001, சிங்கப்பூர்.

திருமதி சீதாலட்சுமி B.A., M.A., M Phil., PGDE, Dip in Translation. திருமதி சீதாலட்சுமி தமிழ் நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை, நிறைநிலை ஆகிய பட்டங்கள் பெற்றவர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மொழிபெயர்ப்பியல் பட்டயம் பெற்றவர். 1990-இல் சிங்கபூருக்குக் குடிபெயர்ந்த பிறகு, தேசியக் கல்விக் கழகத்தில் பட்டத்திற்குப் பிந்திய பட்டயக்கல்வி பயின்றவர். உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்த இவர், தற்போது தேசியக் கல்விக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வருகிறார். அண்மையில்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *