காசியில் கங்கைக்கரையில் தஸாஸ்வமேத கட்டத்தில் ஏழு அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அங்கே மாலை நேர கங்கா ஆரத்திக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்தன. ஒரே மாதிரி உடையலங்காரத்துடன் ஒவ்வொரு வளைவிலும் பன்னிரண்டிலிருந்து பதினைந்து வயதுக்குட்பட்ட பாலகர்கள் பூஜையை ஆரம்பித்தனர்.
கரையிலிருந்து சற்று நேரம் ஆரத்தி ஏற்பாடுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எங்களை படகுக்காரர்கள் படகில் ஏறி கங்கையிலிருந்து ஆரத்தி பார்க்கும்படி நச்சரிக்க ஆரம்பித்தனர். “உதர் ஸே ஆரத்தி தேக்னா தோ பஹ§த் சுந்தர் ஹோதா ஹை!”
ஜனங்கள் நிறைந்து கிளம்ப இருந்த ஒரு படகில் நாங்கள் ஏறியதும், ஏழெட்டு வயது மதிக்கத்தக்க ஒரு சிறு பெண் கையில் ஆரத்தி விளக்குகளுடன் படகில் தாவி ஏறிக் கொண்டாள்.
முகத்தில் குறுஞ்சிரிப்பு மிளிர ,” ஏக் தீப் லே லோ மா! நதி மே கங்கா மாதா கோ ஆரத்தி டாலோ!” என்று படகுக்குள் சுற்றி சுற்றி வந்து ஒரு தீபம் ஐந்து ரூபாய் என்று விற்க ஆரம்பித்தாள். அவளுடைய இன்முகத்தாலும், சுறுசுறுப்பான நடவடிக்கையாலும் கவரப்பெற்ற நிறைய பேர் தீபங்களை வாங்கினர். அழகாக அவளே அந்த தீபங்களை காற்று அலைக்கழிக்காமல் கைகளை குவித்து தீக்குச்சி கொண்டு ஏற்றிக் கொடுத்து, படகிலிருந்து குனிந்து நதியில் விடச் சொன்னாள். விடத் தயங்கியவர்களிடமிருந்து வாங்கி அவளே லாகவமாக கங்கையில் விளக்கை மிதக்க விட்டாள். உலகெங்கிலும் நதிகள் உள்ளன. ஆனால் நதியை ‘புண்ணிய நதி’ என்று சொல்லி பெண்ணின் உருவாக பாவித்து, போற்றி அதற்கு ஆரத்தி எடுப்பதும் நமது புண்ணிய பாரத பூமியில் தானே என்று நினைத்த போது உடலும் மனமும் ஒருங்கே சிலிர்த்தது.
ஆங்காங்கே மிதக்கும் தீபங்களுடன் மாலை நேரத்து கங்கையின் நளினமான ஓட்டத்தைப் பார்ப்பது மனதிற்கு ரம்மியமாக இருந்தது. ஓரிரு தீபங்கள் காற்று வேகத்திலும் நதியின் சுழற்சியிலும் சட்டென்று கவிழ்ந்து விட, உடனே அதற்கு மாற்றாக மற்றொரு தீபத்தை எடுத்து, திரும்ப காசு ஏதும் வாங்காமலேயே பெருந்தன்மையுடன் ஏற்றிக் கொடுத்தாள். அவ்வப்போது தன் கையில் சேர்ந்திருந்த காசை எண்ணி, ‘இவ்வளவு பணத்திற்கு வியாபாரம் செய்திருக்கிறேன்’ என்று படகுக்காரன் அருகில் போய் உட்கார்ந்து பெருமிதப்பட்டாள். அவளையே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த நான் ‘அவள் பள்ளிக்குச் செல்லவில்லையா?’ என்று கேட்டேன். தான் நாலாவது படிப்பதாகவும், பள்ளியில் பரீட்சை முடிந்து விடுமுறை விட்டாகி விட்டது என்றும் சொன்ன அவள், “பீஸ் தினோம்மே ரிஸல்ட் ஆயேகா. மை பான்ச் கா க்ளாஸ் சலேகா” என்று மிகுந்த தன்னம்பிக்கையுடன் பதில் சொன்ன விதம் எங்களை பிரமிக்க வைக்க, நாங்கள் மிகுந்த வாத்ஸல்யத்துடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தோம்.
இதற்குள் பக்கத்தில் வந்து கொண்டிருந்த மற்றொரு மின்விசைப் படகில் ஏதோ கோளாறு! இந்த படகுக்காரர் சட்டென்று கயிறு கொண்டு அதை தன் படகுடன் இணைத்து ஓடச்செய்தார். இதைப் பார்த்ததும் அந்த சிறு பெண்ணிற்கு குஷியாகி விட்டது. மெதுவாக படகின் ஓரத்திற்கு நடந்து போய், இந்தப் படகிலிருந்து அந்தப் படகிற்குள் குதித்து இங்கும் அங்கும் ஓடி, அங்கே உள்ளவர்களிடம் வியாபாரத்தை ஆரம்பித்தாள். அங்கு விற்பனை முடிந்ததும் திரும்ப இந்த படகிற்கு வந்து படகுக்காரன் அருகில் போய் உட்கார்ந்து முகம் நிறைய பூரிப்புடன் ரூபாய் நோட்டுக்களை எண்ணினாள்.
படகுக்குள் எல்லோருக்கும் செல்லமாக ஆகி விட்ட அந்தப் பெண்ணை அருகில் அழைத்த ஒரு மாது, அவள் கையில் பத்து ரூபாயை வைத்து, “உனக்கு ஏதாவது சாப்பிட வாங்கிக்கொள்!” என்றாள் அன்புடன்.
புன்சிரிப்பு மாறாத முகத்துடன், “நை மாஜி!” என்று அழகாக மறுத்த அந்தப் பெண்,”ஆப்கோ ஏக் அவுர் தீப் சாஹியேனா?” என்று தன் கையில் மிச்சமிருந்த ஒரே ஒரு தீபத்தை எடுத்து ஏற்றிக் கொடுத்தாள். பணம் கொடுக்க முன் வந்த அந்த மாதுவின் கரத்தை குறுஞ்சிரிப்புடன் கம்பீரமாக ஒதுக்கி விட்டு, “இது உங்கள் சார்பாக கங்கா மாதாவுக்கு நான் ஏற்றும் ஆரத்தி!” என்று கூறி கங்கையில் மிதக்க விட்ட சமயம், கரையில் ஆரத்தி குழுவினர் ஒவ்வொரு திசையாகத் திரும்பி ஆரத்தி எடுக்க ஆரம்பிக்க, முகம் நிறைய மகிழ்ச்சியுடன் கரையைச் சுட்டிக் காட்டி, “அங்கேயும் ஆரத்தி, இங்கேயும் ஆரத்தி” என்று பூரிப்படைந்தாள்.
படகு கரையை அடைந்து விட, அந்தப் பெண் முதலில் படகிலிருந்து குதித்து கரையை நோக்கி குதூகலமாக ஓடி, படிகளில் ஏறி சட்டென்று கண் பார்வையிலிருந்து மறைந்து போனாள். அந்தப் பெண்ணின் சுயகௌரவமும், தன்னம்பிக்கையும் நிறைந்த கம்பீரமான உருவம் எங்கள் நெஞ்சை நிறைக்க, அந்த சமத்துக் குழந்தையின் பெயரைக் கூட கேட்காமல் விட்டு விட்டோமே என்று நாங்கள் வருத்தப்பட்ட போது கரையிலிருந்து “ஓம் ஜய கங்கே மாதா! ஸ்ரீ கங்கே மாதா!” என்று ஆரத்திப் பாடல் ஒலித்ததைக் கேட்டதும் கங்கா மாதாவே சின்னஞ்சிறுப் பெண்ணாக உருக்கொண்டு எங்களுக்கு ஆரத்தி ஏற்ற தீபம் கொண்டு வந்தாளோ என்று மெய் சிலிர்த்துப் போய் அந்தப் பெண்குழந்தை போன திசையையே பார்த்துக் கொண்டிருந்தோம்.