மதியத்துக்கு மேல் கல்லூரிக்கு மட்டம் போட்டு விட்டு சினிமா போகலாம் என கடைசி பெஞ்ச மாணவர்கள் குழு முடிவு செய்தது. இந்த யோசனையை சொன்ன சாமியப்பனும், அவன் அருகில் உட்கார்ந்திருக்கும் கார்த்தி, சரவணன், இந்த மூவரும் திட்டமிட்டபடி மதிய உணவை நண்பர்களுக்கு தாரை வார்த்து விட்டு அந்த வெயிலில் சினிமா பார்க்க வரிசையில் நின்று கொண்டிருந்தனர். வெயில் தாளமுடியாமல் சரவணன் கண்களுக்கு மேல் பக்கவாட்டில் கைகளை வைத்துக்கொண்டு ஸ்..அப்பப்பா என்று சொன்னான். இப்ப டிக்கெட் கொடுத்துடுவாங்க, பொறுத்துக்க ஆறுதல் சொன்னான் சாமியப்பன்.
ஒரு வழியாக டிக்கெட் கவுண்டர் திறக்கப்பட்டு அடித்து பிடித்து வரிசையில் சென்று சினிமாவிற்கு டிக்கெட் வாங்கிய பின் தான் பெருமூச்சு விட்டனர் மூவரும்.
கார்த்தி பசிக்குதுடா என்று சொன்னான். இங்க எல்லாமே விலை அதிகம் அதனாலே படம் பார்த்துட்டு வெளியே போய் சாப்பிட்டுக்குவோம் என்று சாமியப்பன் சொல்ல பசி காதை அடைத்தாலும் இருக்கும் பணத்தில் திரைப்படத்திற்கே முக்கால் அளவு செலவு செய்து விட்டதால் வேறு வழியின்றி தலையாட்டினர் மற்ற இருவரும்.
விளம்பரம் ஓட ஆரம்பித்த்து. பசியால் என்ன ஓடுகிறது என்று மூவருக்குமே புரியவில்லை, பேசாம நம்ம டிபன் பாக்சையாவது எடுத்துட்டு வந்திருக்கலாம், பெரிசா தானம் பண்ணீட்ட, கடு கடுவென சொன்னான் சரவணன். நீ தாண்ட சொன்ன தியேட்டர்ல டிபன் பாக்செல்லாம் கொண்டு போனா நல்லாயிருக்காது அப்படீன்னு, சூடாக பதில் சொன்னான் சாமியப்பன்.கார்த்தி சரி சரி சண்டை போடாதீங்க இரண்டு பேரும்.படம் போடப்போறாங்க.
படம் ஓட ஆரம்பித்தது. கதாநாயகன், கதாநாயகிகளின் ஆடல் பாடல்களில் கொஞ்சம் மனதை ஒடவிட்டதால் பசி தெரியவில்லை.படத்தின் இடைவேளையில் பசி அதிகமாக தெரிய
ஆரம்பித்த்து. பல்லைக்கடித்துக்கொண்டார்கள். ஒரு பாப்கார்ன் பாக்கெட் வாங்கினாலும் மாலை சாப்பிடுவதற்கு பணம் காணாது. சே..இந்த லட்சணத்துல படத்துக்கு வந்துட்டோம் என்று அலுத்துக்கொண்டான் கார்த்தி.
பேசாம கிளாஸ் அட்டெண்ட் பண்ணீட்டு போயிருக்கலாம், இப்ப பசியில வந்து படம் பாக்கணும்னு என்ன தலையெழுத்து அலுத்துக்கொண்டான் சரவணன். சாமியப்பனுக்கு சுர்ரென்று கோபம் பொத்துக்கொண்டு வந்தாலும், ஒன்றும் சொல்லவில்லை. படம் பார்க்க போகலாம் என்று சொன்னவுடன் இலவசமாய் செலவு செய்பவன் இவன் தானே என்று தலையை ஆட்டிய இவர்கள், சாப்பிடுவதற்காவது பணம் கையில் வைத்திருக்க வேண்டாமா?
அதைக்கூட நான் தான் செலவு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.இருவரும் பணம் வைத்திருப்பார்கள், ஆனால் எடுத்தால் செலவாகிவிடும் என்று பதுங்குகிறார்கள். மனதுக்குள் நினைத்துக்கொண்ட சாமியப்பன் சினிமாவுக்கு இவர்களை அழைத்தற்கு தன்னையே நொந்து கொண்டான்.
ஒரு வழியாக இடைவேளை முடிந்து படம் போட ஆரம்பித்துவிட்டார்கள். இப்பொழுது இவர்கள் மூவருமே படம் எப்பொழுது முடியும் என நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இனிமேல் காசு இருந்தாதான் படத்துக்கு வரணும் இல்லை காசு இருக்கறவன் கூடத்தான் வரணும் என்று மூவருமே தனித்தனியாக மனதுக்குள் சொல்லிக்கொண்டார்கள்.முதலில் கதாநாயகனும், கதாநாயகியும் மகிழ்ச்சியாய் ஆடிக்கொண்டிருந்ததை இரசித்தவர்கள் இப்பொழுது பசியால் அங்கும் இங்கும் இவர்களே ஆடிக்கொண்டிருந்தார்கள்.படம் எப்பொழுது முடியும் என நினைக்க ஆரம்ப்பித்துவிட்டார்கள்.
அப்பாடா ! ஒர் வழியாய் கதாநாயகன் மற்றும் அனைவரும் சேர்ந்து கதையை சுபமாக்கினர்.இவர்களுக்கு விட்டால் போதும் என்று வெளியே வந்தனர்.அப்பொழுது மாலை ஆகியிருந்தது.மூவருக்கும் ஏதாவது ஒரு ஓட்டலில் சாப்பிடவேண்டும் என்று தேடித்தேடி ஒரு ஓட்டலை கண்டு பிடித்தனர். முதலில் விலைப்பட்டியலை கவனமாக பார்த்தான் சாமியப்பன். இந்த பயலுகளை நம்ப முடியாது. பைசா செலவு செய்ய மாட்டார்கள். நம் கையில் உள்ள அளவே செலவு செய்ய வேண்டும்.என்ன செய்வது?சினிமாவுக்கு கூப்பிட்ட பாவத்திற்கு இவர்களுக்கும் அழுது தொலைக்க வேண்டி இருக்கிறது.
அவர்களுக்கு இருந்த யானைப்பசிக்கு இவர்கள் வைத்திருந்த அப்படி சொல்வதை விட சாமியப்பன் வைத்திருந்த பணத்துக்கு சோளப்பொரிதான் சாபிட்ட கதையாக பெயர் பண்ணிவிட்டு புத்தகங்களை எடுக்க கல்லூரிக்குள் நுழைந்தனர். காவலர் வகுப்புக்களை பூட்டுமுன் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தவர்கள் மெல்ல பாதையில் நடக்க ஆரம்பித்தனர்.
மூவருக்கும் மூன்று சிந்தனைகள், சாமியப்பனுக்கு இன்று தண்ட செலவு என்றும், கார்த்திக்கு பசியால் துன்பப்பட்டாலும் இலவசமாய் ஒரு சினிமா,கொஞ்சம் டிபன் என்று மனசை தேற்றிக்கொண்டான், சரவணனுக்கு நாமும் கொஞ்சம் பையில் வைத்திருந்த பணத்தை எடுத்திருந்தால் மூவரும் கொஞ்சம் நிம்மதியாய் சாப்பிட்டு இருக்கலாம் என்ற எண்ணம்.
இவர்கள் மூவரும் இப்படி வெற்றிகரமாய் கல்லூரிக்கு மட்டம் போட்டு விட்டு சினிமா பார்த்துவிட்டு வந்ததை கொண்டாட முடியாமல் வழியில் அவர்கள் கண்ட காட்சிகள் அவர்களை குறு குறுக்க வைத்தது.
வழியில் கை வண்டி இழுப்போரும்,அந்த மாலை வெயிலையும் பொருட்படுத்தாமல் பூ விற்க உட்கார்ந்திருக்கும் பெண்களும், காலையில் பார்த்த இடத்தில் இருந்த அதே பிச்சைக்காரன் கூட அந்த வெயிலையும் பொருட்படுத்தாமல் கையேந்திக்கொண்டிருக்க, மற்றும் எல்லோரும் அவரவர்கள் ஏதோவொரு வேலை செய்து கொண்டிருக்க இவர்கள் மூவரும் இன்றைய நாளை இப்படி செலவு செய்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியுடன் சென்று கொண்டிருந்தார்கள்.