சிந்திக்காமல் செயலில் இறங்கினால்…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 14, 2021
பார்வையிட்டோர்: 4,008 
 
 

”குருவே, என்னை எல்லோரும் ஏமாளி என்கிறார்கள்” என்று வருத்தத்தோடு கூறியவனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு.

“என்ன பிரச்சனை?”

“என்னை எல்லோரும் எளிதில் ஏமாற்றிவிடுகிறார்கள். நான் ஏமாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான் இளைஞன்.

அவனின் பிரச்சனை குருவுக்கு புரிந்தது. அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.

‘ஒரு ஊருக்கு புதியவன் ஒருவன் வந்தான். ஊரில் அலைந்துக் கொண்டிருக்கும் குரங்குகளைப் பிடித்துக் கொடுத்தால் பத்து ரூபாய் கொடுப்பதாக அறிவித்தான். ஊர் மக்களுக்கு உற்சாகமாகிவிட்டது. உடனே ஊருக்குள் திரிந்துக் கொண்டிருந்த குரங்குகளைப் பிடித்து, அவனிடம் பத்து ரூபாய்க்கு விற்றார்கள். கொஞ்ச காலத்தில் குரங்குகள் குறையத் துவங்கியது. அந்த சமயம் ஒரு குரங்குக்கு இருபது ரூபாய் என்று அறிவித்தான். ஊர் மக்கள் இன்னும் தேடித் தேடி குரங்குகளைப் பிடித்துக் கொடுத்தார்கள். எல்லா குரங்குகளையும் கூண்டுகளில் அடைத்து வேறு ஊருக்கு அனுப்பிக் கொண்டிருந்தான் வந்தவன். குரங்குகள் தட்டுப்பாடு அதிகரித்ததும் குரங்குகளுக்கு கொடுக்கும் விலையை அதிகரித்தான். இப்போது ஒரு குரங்குக்கு நாப்பது ரூபாய். அப்படியும் அவனுக்கு குரங்குகள் கிடைக்கவில்லை. உடனே அவன் ஊர் மக்களிடம், ‘ நான் பக்கத்து ஊருக்குப் போகிறேன். நீங்கள் குரங்குகள் கிடைத்தால் பிடித்து வையுங்கள்.எனக்கு தேவை இருக்கிறது. நான் ஐம்பது ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்கிறேன்’ என்று சொல்லி கிளம்பிவிட்டான்.

சில நாட்களுக்குப் பிறகு நிறைய குரங்குகளுடன் ஒரு வண்டி அந்த ஊருக்கு வந்தது. அதைப் பார்த்ததும் ஊர் மக்களுக்கு கொண்டாட்டம். உடனே அந்த வண்டியை நிறுத்தி குரங்குகளை விற்பனைக்கா என்று கேட்டார்கள். வண்டிக்காரனும் ‘ஆமாம், ஒரு குரங்கு நாப்பது ரூபாய்’ என்று சொல்ல ஊர் மக்கள் உடனே அத்தனை குரங்குகளையும் வாங்கிக் கொண்டார்கள். குரங்குக்காரன் வந்தால் ஐம்பது ரூபாய்க்கு விற்று லாபம் சம்பாதிக்கலாம் என்று.

ஆனால் குரங்குக்காரனும் வரவில்லை, வண்டிக்காரனும் வரவில்லை. இருவரும் கூட்டாளிகள் என்பதும் இருவரும் சேர்ந்து ஏமாற்றி பணம் சம்பாதித்திருக்கிறார்கள் என்பது வெகு காலம் பின்னே ஊர் மக்களுக்கு தெரிந்தது’

இந்தக் கதையை குரு சொன்னதும் வந்தவனுக்கு தான் எப்படி ஏமாறுகிறோம் என்பது புரிந்தது.

அப்போது குரு அவனுக்கு சொன்ன WINமொழி: சிந்திக்காமல் செயலில் இறங்குவது ஏமாற்றங்களைக் கொடுக்கும்.

– வெளியான ஆண்டு: 2011 (நன்றி: http://ranjan360.blogspot.com)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *