சிதைவுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 23, 2023
பார்வையிட்டோர்: 863 
 
 

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“என்ன மாஸ்டர் யோசனை?” என்று கேட்டுக் கொண்டே பாடசாலைப் பிரதான மண்டபத்தினுள் பிரவேசித்தான் அஹமது.

“ஒன்றுமில்லை … சும்மா…” சிறு சமாளிப்போடு சொன்னேன்.

வந்தவர் வழக்கம் போல் மாணவர் கதிரைகளையும், பெஞ்சுகளையும் இரைச்சலுடன் இழுத்து ஒழுங்குபடுத்துகிறார்

அவருடைய வருகையும், அந்தச் செய்கையும் எனக்கு அறவே பிடிக்கவில்லை .

“என்ன மாஸ்டர்? ஒரு மாதிரியாப் பாக்கிறீங்க?”

நான் ஒன்றும் பேசவில்லை.

“ஏற்கனவே அரைகுறையாய் இருக்கும் தளபாடங்களை, இப்படிக் கொஞ்சமும் பொறுப்புணர்ச்சி இல்லாமல் நாலுதரம் இழுத்தால் … அவை என்னத்துக்கு உதவும்? ஓர் ஆசிரியன் என்ற முறையில் நான் இதை எல்லாம் பார்த்துக்கொண்டு… அனுமதிப்பதா…?”

சொற்கள் சிலம்பமாடின.

நானோ இந்தக் கிராமத்திற்குப் புதியவன்.

நான்கு பேர் இருந்து சீட்டு விளையாடத்தக்கதாக மேசை நாற்காலிகளை ஒழுங்கு செய்து விட்டு, ‘சேர்ட்’ பொக்கட்டில் வைத்திருந்த சீட்டுக் கட்டை இழுத்தெடுத்தான் அஹமது. இவன் அயலவன். பாடசாலைக்கு சம்பந்தம் இல்லாதவன்.

சீட்டாட்டத்தில் காட்டும் இந்த ஆர்வமும் ஒற்றுமையும் கிராம முன்னேற்றத்தில் காட்டினால்…? ஆசிரியன் என்ற தரத்தில் என் மனம் ஏங்கியது.

நான் மௌனமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

“மாஸ்டர் உங்களுக்கு முன்நூற்றி நாலு’ விளையாடத் தெரியுமா?”

இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டுத் தன் பார்வையைப் பள்ளிக்கூட முன் வாயில் பக்கம் செலுத்துகிறான், அவனது முகத்தில் ஒரு முறுவல் இழையோடுகிறது.

பள்ளிக்கூடக் கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே வருகிறார்கள் ஆதம்பாவாவும் றஹீமும்.

இப்போது விளையாட்டை ஆரம்பிக்க மூன்று பேர் சேர்ந்து விட்டார்கள்.

“சே..! இன்னும் ஒரு ஆள்தானே” அஹமது மீண்டும் வாயில் பக்கம் பார்க்கிறான், தவிக்கிறான்.

என் மன ஆத்திரத்தைக் கொட்ட முடியாமல் இரைகிறேன்.

“ஆதம்பாவா, தயவு செய்து வாற ஆட்கள் அந்தப் பாடசாலைக் கேற்றை மூடிவிட்டு வாங்களேன். மாடுகள் உள்ளே வந்து பயிரை நாசப்படுத்தும்…”

என்குரலில், ஆத்திரமும் கோபமும், சற்றுக் கண்டிப்பும்… அவர்கள் பூட்டி , விட்டு வருகிறார்கள்.

“புதிதாக வந்து ஏதேதோ சட்டங்கள் போடுகிறார் போலிருக்கு, இவர் மட்டும் அதிபராயிட்டா… எங்கட பாடு…?”

ஆதம்பாவா தனது எண்ணத்தை றஹீமிடம் கூறுகிறான்…

“சே! இவர் மலைநாட்டுக்காரர்… இங்கே அதிபராக வைக்கமாட்டாங்க…..” என முணுமுணுத்தான் ரஹீம்.

“என்ன மாஸ்டர் சொன்னீங்க…?” என்று சற்று ஆக்ரோஷமாகக் கேட்டான்.

ஆதம்பாவா என்னைக் கூர்ந்து கவனிக்கிறான்.

“… இல்லை மாடுகள் உள்ளே வந்து வளரும் பயிரை நாசம் செய்யும்… மறுகா காலையில புள்ளைக பாடசாலைக்கு வந்தா… சாணம் அள்ளுவதற்கே நேரம் சரி…” என்றேன்.

“இந்தாங்க… மாஸ்டர்… சும்மா பைபோஸ் போடாதீங்க… சொல்லிட்டன்.. சரியா ….”

வம்பு வளரப் பார்க்கிறது. அஹமது வெளியே வருகிறான்.

“என்னப்பா இது, இந்த ஆள் புதுசு, அந்த ஆளோட போய்…”

“வாங்கடாப்பா விளையாடுவம்”

அஹமது எனக்கு உபதேசம் செய்ய வருகிறான்.

“மாஸ்டர், இந்த ஊர்ப் பொடியன்கள் அப்படித்தான். அவர்களுக்குப் பேசத் தெரியாது. நீங்க அவங்களோட எல்லாம் கவனமாக இருக்கணும்”

நான் அவனுடைய பேச்சைத் துரும்பாக மதித்து, நாற்காலியில் இருந்து அன்றைய பத்திரிகையை விரித்து வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தேன்.

மீண்டும் அஹமதுதான் அழைக்கிறான்.

“வாங்க சேர் விளையாடுவோம், நான் சொல்லித்தாறன்…”

“ஆ…! இதென்ன அநியாயம்… இவர்களுடைய பிள்ளைகளுக்கு.. திறம்பட ஆங்கிலப் பாடம் படிப்பிக்க அனுப்பப்பட்ட எனக்கு இவன் சீட்டு விளையாடப் படிப்பிக்கிறானாம்…”

“சே…! எனக்கு விருப்பமில்ல…” அதற்குப் பிறகு நான் ஒன்றும் பேசவில்லை .

ரோட்டில் போய்க்கொண்டிருந்த அல்லாப்பிச்சையைக் கூப்பிட மூவரும் ஏககாலத்தில் குரல் எழுப்பினர்.

அவன் வருகிறான்.

“என்ன இங்கிலிஸ் மாஸ்டரைக் கூப்பிட்டு விளையாடுறதுதானே..?”

“சே…! அவருக்கு ஒண்டுந் தெரியாது”

மூவரும் என்னைத் துரும்பாக எடை போட்டுக்கொண்டு அல்லாப் பிச்சையுடன் சீட்டு ஆடத் தொடங்குகின்றனர். அல்லாப்பிச்சையின் காதில் ஏதோ ‘கசமுசவென்று கூறுகிறான் ஆதம்பாவா, பென்னாம் பெரிய சிரிப்புகள் வெடிக்கின்றன. சுவாரஸ்யமாக ஆடிக்கொண்டிருக்கின்றனர். முதலாவது ஆட்டத்தில் அஹமதுவும் ஆதம்பாவாவும் “குவீனை” துரும்பாக வைத்து வென்று விட்டனராம். வெற்றிக் கோசங்கள் பாடசாலை மண்டபத்தையே அதிரச் செய்கின்றன.

அதற்கு அப்புறம் அது ஒரு சிறு இடைவேளை போலும்.

“மாஸ்டர், சிகரட் பற்றுவீங்களா..?”

“இல்லை …”

“வெற்றிலையாவது…?”

“அதுவும் இல்லை …”

“அப்ப அம்முக்குட்டி ஓட்டலில் ஒரு பிளேன் டீயாவது குடித்துவிட்டு வருவோமா…?”

“சரி போவோம்… நன்றாக இருட்டி விட்டது. விளக்கை ஏற்றிவிட்டுப் போகலாம்”

நானும் அஹமதுவும் புறப்படுகிறோம்.

“மாஸ்டர் உங்கடை ஊர் எது என்று சொன்னீங்க..?”

“மலைநாடு… கண்டி”

“அப்படியா, நான் இரண்டு வருடத்திற்கு முன் கண்டிக்குப் பெரஹரா பாக்க வந்திருக்கிறன்… ஆமா கண்டியில் எந்த இடம்…?”

“கண்டியிலிருந்து இருபது மைல் நாவலப்பிட்டி…”

“நீங்க அங்கேதான் படிச்சீங்களா…?”

“முதல்ல கற்றபூலா தோட்டப் பாடசாலை, அப்புறம் கம்பளை சாஹிரா…கடைசியாக நாவலப்பிட்டி சென்ற் மேரிஸ் கல்லூரி…”

எனக்கொரு கிரிகஹட்ட, அஹமதுவுக்கு ஒரு பிளேன்டீக்கும், சிகரட்டுக்கும்… காசைக் கொடுத்தேன். நாங்கள் திரும்பியபோது வெளியே சென்றிருந்த அதிபரும் மற்றைய ஆசிரியர்கள் இருவரும் முன் வாசலில் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களுடன் ஆதம்பாவா கதைத்துக் கொண்டிருந்தான்.

“என்ன மர்ஜான் மாஸ்டர், என்ன அது?” வந்ததும் வராததுமாக அதிபர் கேட்டார்.

“எதைப் பற்றிக் கேட்கிறீர்கள்?”

“என்னமோ… ஆதம்பாவா…?”

“அப்படி ஒன்றும் விசேஷமில்லை. பள்ளிக்கூடத்திற்கு வாற ஆட்கள் வாயில் மெயின் கேற்றை மூடிவிட்டு வரச் சொன்னேன். நேற்று ஐந்தாம் ஆண்டுப் பிள்ளைகள் வைத்த மிளகாய்க் கன்றுகளைப் பாருங்கள்.. மாடுகள் வந்து

அவைகளை மிதிச்சு நாசம் பண்ணுமே….”

அதிபர் என்னைக் கூர்ந்து கவனிக்கிறார்.

“மாஸ்டர், வேலியிலுள்ள கம்பிகளை இழுத்துக் கட்ட வேண்டும். கேற் வாயிலால மட்டுந்தான் மாடுகள் உள்ளே வருகின்றனவா?” ஆதம்பாவா சொன்னான்.

“ஆதம்பாவா, கோவிக்காதயுங்க… நீங்கள் சொல்வதும் சரிதான்…”

“வேலியை நன்றாக இறுக்கமாகப் போட்டிருந்தால்…?”

நான் அதிபரைப் பார்க்கிறேன். அவரது முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கின்றன.

நானும் அதிபரும், மற்றைய ஆசிரியர்களும் அறைகளை நோக்கி நடந்து கொண்டிருக்கிறோம்.

“மர்ஜான் மாஸ்டர் வேலி போடுவது, அது என்னுடைய வேலை… நான் அதைப் பார்த்துக் கொள்ளுவன்”

“ஐ ஆம் சொரி சேர்”

“ஆங்கில மாஸ்டர்… நீங்கள் ஊருக்குப் புதுசு, ஆட்களோடு பார்த்துப் பழகிக் கொள்ளணும். படிப்பிக்க வந்த நாம் எமது தொழிலை நன்றாகச் செய்ய வேண்டுமானால், நாம் ஊரோடும் ஒத்துப் போக வேண்டும்…”

அதிபரின் அறிவுரைக்கு நான் மறுப்புரை கூறவில்லை . அவருடைய ஆலோசனை எனக்கும் பிடித்தமானதுதான்.

மண்டபத்தில் சீட்டு ஆட்டம் உச்சக் கட்டத்தை அடைந்து கொண்டிருந்தது. ஆசிரியர்களும் தீவிரமாகப் பங்கு பற்றினார்கள். சீட்டில், சிகரட்டில் எல்லா வற்றிலும் நேரம் போவதே தெரியாமல், ஊரவரோடு ஒத்துழைத்துக் கொண்டிருந்தார்கள். இம்முறை அஹமதுவுக்கும் அல்லாப்பிச்சைக்கும் படுதோல்வி.

“ஓ…! இப்ப ஆசிரியர்களுக்கும் தோல்வி” அல்லாப்பிச்சை இரைந்தான்.

ஆசிரியர்கள் ‘ஜெக்’ஐ துரும்பாக வைத்து ஆடினார்கள்.

அவர்கள் தங்கள் துரும்பை மறந்து எதை எதையோ துரும்பாக வைத்து ஆடுகிறார்கள். ஆடிக்கொண்டே இருக்கிறார்கள்.

நானும் ஆசிரியர் புஞ்சிபண்டாவும் அம்முக்குட்டியில் இராப்போசனத்தை முடித்துக் கொண்டு வந்து படுக்கைக்குச் செல்லும்போது பத்துமணி பிந்தி விட்டிருந்தது.

ஆளுக்கு நான்கு தட்டையான மாணவர் மேசைகளைப் பொருத்தி, அதில் பன்பாயை விரித்து வைத்திருக்கிறோம். இதுதான் எங்கள் படுக்கை.

வந்ததும் படுக்கையில் சாய்ந்த புஞ்சிபண்டா மாஸ்டர் குறட்டை விடத் தொடங்கினார்.

மண்டபத்தில் மது பரிமாறப்பட்டதால் ஆட்டம் இன்னும் சூடுபிடித்துக் கொண்டிருந்தது!

ஆதம்பாவா வெறித்து இரைந்து கொண்டிருந்தான்.

தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கும் எனக்கு முதல் ஆசிரிய நியமன நாள் ஞாபகம் வந்தது. அன்று எனது மகிழ்ச்சிக்கு ஓர் எல்லையே இருக்கவில்லை.

இந்த முறை கல்வி அமைச்சராகப் பொறுப்பெடுத்திருப்பவர் தலைமைத்து வத்திற்கும் சமூக சேவைக்கும் பிறந்தவர். கறாரான பேர்வழி.

மலையகத்தைச் சேர்ந்த ஆறுபேரின் விண்ணப்பங்கள் மீள் பரிசீலனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு ஒரே வாரத்தில் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பும் வந்த போது, வீட்டில் நாங்கள் மகிழ்ந்ததை விட ஊர் நண்பர்களின் மகிழ்ச்சியே மேலோங்கியது.

ஆனாலும் இது ஒரு வித்தியாசமான நேர்முகத் தேர்வு.

வடித்தெடுக்கப்பட்ட நாற்பது பேரையும் அமைச்சர் சந்திக்க விரும்புகிறார் என்ற பணிப்புரையைத் தொடர்ந்து, ஒரே பரபரப்பு. என்ன ஆகப் போகுதோ?

அமைச்சரின் விசாலமான அலுவலக அறைக்குள் நுழைந்து வட்டமிட்டோம்.

ஒவ்வொருவரும் தத்தம் பெயரையும் ஊரையும் கூறிச் சுய அறிமுகம் செய்து கொண்டதைத் தொடர்ந்து அமைச்சரின் ஓர் உபதேசச் சிற்றுரையைக் கேட்ட பிறகுதான் எங்களுக்குச் சற்று ஆறுதலாக இருந்தது.

“உங்கள் எல்லாருக்கும் ஆங்கில ஆசிரியர் நியமனம் கிடைக்கும். ஆனால் நீங்கள் பார்த்திராத, கேள்விப்படாத மணித்தியாலங்களாகப் பிரயாணம் செய்ய வேண்டிய கஷ்டப் பிரதேச சிறு சிறு கிராமப் பாடசாலைகளுக்கு அனுப்பத் தீர்மானித்திருக்கிறோம். அங்கு நீங்கள் மனிதாபிமானத்துடன் கடமை செய்ய வேண்டும். அனைத்தும் குறைபாடுகள் உள்ள சிறு சிறு பாடசாலைகளே. முடிந்தவரை சமாளித்துக் கொண்டு விவசாயப் பெருமக்களுக்கு எடுத்துக்கூறி அவர்களின் பிள்ளைகளுக்கு ஆங்கிலக் கல்வியின் அவசியத்தை உணர்த்திப் படிப்பிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு… இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கஷ்டப் பிரதேச சேவை செய்தபின்… நீங்கள் நிச்சயமாக ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிக்குத் தெரிவு செய்யப்படுவீர்கள். அதற்குப் பின்னர் நீங்கள் விரும்பும் மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவீர்கள்…”

அவரது முகத்தில் மகிழ்ச்சி.

“கஷ்டப் பிரதேசம் என்று யோசிக்காதீர்கள்… திஸ் இஸ் ஏ கோல்டன் ஒப்பொச்சினிட்டி…”

“வயதான காலத்தில் அரச ஒய்வூதியம் கிடைக்கும் போதுதான்… இதன் அருமை புரியும்… அப்பொழுது நான் உயிருடன் இருக்கமாட்டேன்…”

“சரி இப்ப நீங்கள் போகலாம்… உத்தியோகபூர்வமான உங்கள் நியமனக் கடிதங்கள் அஞ்சலில் வரும்… இன்றிலிருந்து ‘தூர கிழக்கு’ போக ஆயத்தப் படுத்தத் தொடங்கலாம்” என்று நகைச்சுவையாகப் பேசினார்.

நாங்கள் நன்றியுடன், அவரது நல்லாசியைப் பெற்று இல்லங்களுக்குத் திரும்பினோம்.

சொல்லிவைத்தாற்போல் ஒரே வாரத்தில் நியமனக் கடிதம் வந்து எங்கள் கதவைத் தட்டியது.

வீட்டில் தடல்புடலாக ஆயத்த வேலைகள் நடந்து கொண்டிருந்தன.

அலுமாரிக்கு மேல் இடது பக்க மூலையில் சுவரோடு சிறைப்பட்டுக் கிடந்த அந்தக் கூடைப்பெட்டியை இறக்கி தூசு தட்டிக்கொண்டிருந்தார், தகப்பனார்.

“அடே… ங்… கப்பா! எவ்வளவு காலமாச்சி… இப்பதான் ஒனக்கு நல்ல காலம் பொறந்திருக்கு… இனி ஒன்ன அசைக்க ஏலாது… எங்கிருந்தாலும் போய் படிப்பி…” என எனக்கு கூறுவது போல் கூடைப் பெட்டிக்கு ஆசி கூறியவாறுஸ்டோர் றூமுக்குள் புகுந்தார்.

சற்று நேரத்தில் ‘வார்னிஸ்’ போத்தல் பிரஷ்சுடன் வந்து பூசத் தொடங்கினார்.

மெருகேற்றப்பட்ட கூடைப்பெட்டி பளிச்சென்று மின்னத் தொடங்கியது, புத்தம் புதியதாய்.

அப்புறம் சோப், டவல், சாரம் எல்லாம் எடுத்துச் சுற்றிக் கொண்டு பள்ளத்து ஊற்றுப் பீலிக்குக் குளிக்கச் சென்றேன். எனக்கு விருப்பமான ‘ஐஸ்’ தண்ணீர்…

குளித்துக் கொண்டிருக்கும் போதே கடமை புரிய வேண்டிய அனுராதபுரம்.. ஹம்மில்லாவ முஸ்லிம் பாடசாலை எப்படியிருக்குமோ என்று கற்பனை செய்தேன்.

என் மனக்கண் முன்னுக்கு அந்தக் கூடைப்பெட்டி காட்சி தந்தது. புத்தகங்கள் கொண்டு போவதற்கு மிகப் பொருத்தமானது.

கொஞ்சக் காலத்துக்கு முன் நாற்காலி பின்னும் ஒரு தொழிலாளி வந்திருந்தார். நாற்காலிகளைப் பின்னிக் கொண்டிருந்தவர் அப்பாவின் அன்பு உபசரிப்புகளுக்கு அடிமையாகி அந்தக் கூடைப் பெட்டியை அன்பளிப்பாகப் பின்னித் தந்துவிட்டுப் போனவர். உண்மையில் அது ஒரு அதிர்ஷ்ட கூடைப் பெட்டிதான்.!

அனுபவித்துக் குளித்துக் கொண்டு இருந்த நான் நாளை மறுநாள் காலை… வந்து உனக்கு குட்பை சொல்லப் போகிறேன்…’ என்று மானசீகமாகக் கூறி விட்டு, ஊற்றுப் பீலியை விட்டு நகர்ந்தேன்.

மாலையானதும் நூலகத்தில் நண்பர்களைச் சந்தித்து, உறவாடி விட்டுத் திரும்பும் போது ஒரு புதிய சூட்கேசையும் வாங்கி, சைக்கிள் பின் சீற்றில் வைத்துக் கட்டிக்கொண்டு வந்தேன்.

கூடைப் பெட்டி என்னை வரவேற்றது.

வார்னிஷ் நிறத்தின் மினுக்கமும் அதன் புதிய தோற்றமும் அன்று மலர்ந்த தாமரையைப் போல் ரம்மியமாக வசீகரமாக கையில் கொண்டு வந்த புதிய சூட்கேசுடன் போட்டி போட்டுக் கொண்டிருந்தது.

அன்று இராப்போசனத்திற்குப் பிறகு ஓய்வாய் இருந்து உடுப்பு வகையறாக்களைப் புதிய ‘சூட்கேசில்’ ஒழுங்காக அடுக்கினேன்.

மாணவர்களுக்குத் தேவையான ஆங்கில இலக்கணம், இலக்கியம், பயிற்சி நூல்கள்… கட்டுரைத் தொகுப்புகள்… என்று அலுமாரியிலிருந்து பத்து நூல்களைத் தெரிவு செய்து கூடைப்பெட்டிக்குள் அழகாக அடுக்கியாயிற்று. மேலதிகமாக ஒரு பைல், சி.ஆர். புத்தகம், இரண்டு குறிப்புப் புத்தகங்கள்.. அவ்வளவுதான் அதன் உள்ளடக்கம்.

அப்பா கூறியது போல் அப்பொழுதுதான் கூடைப்பெட்டியின் கல்விப்பணி உயர்ந்து நிற்கத் தொடங்கியது. அனுராதபுரம் செல்லும் நாள் பளீரென்று வந்து விட்டது.

அப்பாவின் ஆலோசனைப்படி, ‘நியமனக் கடிதம் கிடைத்தது, தொழிலைப் பொறுப்பேற்பதற்காகக் கடுகதி புகைவண்டியில் புறப்பட்டு விட்டேன்’ என்று பாடசாலை அதிபருக்கும் அனுராதபுரம் கல்வியதிகாரிக்கும் தந்தி கொடுத்து விட்டேன்!

அன்று மாலை ஐந்து முப்பதுக்கு புறப்பட்ட ரயிலில் சீற்கிடைத்தது. இராப் பயணம் அலுப்புத்தான். யன்னலூடாக இயற்கைக் காட்சிகள் ஒன்றையும் பார்க்க முடியாதே!

எப்படியோ மறுநாள் விடியலில் அனுராதபுர நிலையத்தில் இறங்கியதும், மிக அவசர அவசரமாக விரைந்து தயாராக நிற்கும் வவுனியா பஸ்ஸில் ஏறி இருக்கை பிடித்துக்கொண்டேன்.

வளைவுகள் இல்லாத ஒரே நேர்ப் பாதை மிக வேகமாகப் போய்க் கொண்டிருந்தது பேரூந்து.

தேநீருக்காக மதவாச்சியில் பதினைந்து நிமிடங்கள் நிறுத்தம்! அப்புறம் பயணம் தொடர்ந்தது.

பஸ் கண்டக்டரிடம் உறுதிப்படுத்திக் கொண்டு “பூனேவ” சந்தியில் இறங்கிக் கொண்டேன்.

ஆள் அரவம் இல்லை யாரிடம் விசாரிப்பது? வண்டிகள் எதுவும் இல்லை . நீண்டு செல்லும் செம்மண் பாதையில் இரண்டு பையன்கள் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்கள், மாணவர்கள் போல் தெரிகிறது. நான் விசாரிப்பதற்கு முன்.

“ஸேர் பள்ளிக்கூடத்திற்கா…? எங்களைப் பெரிய சேர்… அனுப்பினவர்…”

“அப்படியா…!”

விபரங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டபின் சைக்கிளில் சவாரி தொடர்ந்தது.

“தம்பி எவ்வளவு தூரம்…?”

“மூன்றுமைல் சேர்…”

எனக்கு வியர்த்துக் கொட்டியது.

இரண்டு மைல்களுக்குப் பிறகு ஒரு சிங்களக் குக்கிராமம் எதிர்பட்டது.

ஒரு விஹாரை. ஆங்காங்கே மண் வீடுகளும், கல் வீடுகளும், ஓலைக் குடிசைகளும்… என்னை வரவேற்றன.

ஒரேயொரு கடை. ஒரு பக்கம் மளிகைச் சாமான்கள். மறுபக்கம் சிறு தேநீர்க் கடை, டீ, பழம், பணிஸ், பாண்… என்று.

“கடையப்பம் சாப்பிட்டுப் போவோம்…” என்று உள்ளே சென்று அமர்ந்தேன்.

“தம்பிமார் உட்காருங்க…”

“வேணாம் சேர்… நாங்க பால் சாயம் குடிச்சம்…”

“பால் சாயமா…?”

“ஓம் சேர்… கிரிகஹட்ட…”

கடையை நடத்தும் இளைஞன் வந்து…

“சேர் முஸ்லிம் ஸ்கூலுக்கா….?” சிங்கள மொழியில் கேட்டான்.

அவன் முகத்தில் புன்முறுவல் தவழ்ந்தது.

மேசையில் திண்பண்டங்களைப் பரத்தினான். காலைச் சாப்பாடு திருப்தியாக முடிந்தது. சிற்றுண்டிக்குப் பணம் எடுக்க மறுத்துவிட்டான் இளைஞன்.

“முதன் முறையாகப் பக்கத்து முஸ்லிம் பாடசாலைக்கு வந்திருக்கிறீர்கள், உங்களை மனப்பூர்வமாக வரவேற்கிறோம். உங்களைச் சந்தித்ததில் பெரிய சந்தோஷம்.. இது எங்கள் கிராமம் ஆனைக்கட்டி. கடையும் நம்முடையதுதான். நான் நிமால். அது எங்கள் வளவு.”

“சேர், சைக்கிளில் வந்த மாணவர்களை அனுப்புங்க… உங்களைக் காரில் கொண்டு போய் விடுறன்… இன்னும் ஒரு மைல்தான் கிடக்கு”

நிமாலின் அன்புக்குக் கட்டுப்பட்டு விட்டேன்.

கடைக்குப் பின்னால் விரைந்து கராஜிலிருந்து காரைக் கொண்டு வந்து நிறுத்தினான். கைகளில் கனத்துக் கொண்டிருந்த பொதிகளைப் பின்சீற்றில் ஏற்றிவிட்டு “சேர்… ஏறுங்க…”

ஒஸ்டின் கேம்பிரிட்ஜ் செம்மண் புழுதியைக் கிளறிக் கொண்டு மெல்லக் கிளம்பியது.

மாணவர்கள் பின்னால் சைக்கிளில் ஓடி வந்தனர்.

நிமாலுடன் உரையாடிக் கொண்டே சென்றதால் பிரயாணக் களைப்பு ஆனைக்கட்டி வெப்பக்காற்றுடன் கலந்து கொண்டது.

பாடசாலை முன்றலில் ‘ஹம்மில்லாவ அரசினர் முஸ்லிம் வித்தியாலயம் பெயர்ப் பலகைக்கு அருகே வண்டி நின்றது.

கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே நடந்தேன். நிமாலும் கூடைப் பெட்டியை ரசித்துக் கொண்டே பின்னால் வந்தான்.

சைக்கிளில் வந்த மாணவர்கள் இல்லங்களுக்குப் போய் விட்டார்கள். பாடசாலை தொடங்க இன்னும் நேரமிருக்கு.

அதிபர் “அஸ்ஸலாமு அலைக்கும்” சொல்லி வரவேற்றார்.

அதிருக்கு முன்னால் நாற்காலியில் அமர்ந்து சம்பிரதாயபூர்வமாக என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

“நிமால்… ஸ்துதி…” என்று அதிபர் நன்றி கூறவும், நிமால் எங்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டான்.

நியமனக் கடிதத்தை வாங்கி துருவித் துருவிப் பரிசீலனை செய்த பிறகு பாடசாலை லொக்’ புத்தகத்தில் நியமனம் சார்ந்த விபரங்களைப் பதிவு செய்வதில் மூழ்கினார் அதிபர்.

அதே நேரத்தில் பாடசாலையில் கடமைகளை ஏற்றுக்கொண்டேன் என்று ஒரு கடமை ஏற்புக் கடிதத்தை என் கைப்படத் தயாரித்துக் கொண்டிருந்தேன்.

அதிபர் மூலம் கல்வியதிகாரிக்கு அனுப்ப வேண்டிய உத்தியோக பூர்வமான கடிதம் அது.

“மர்ஜான் மாஸ்டர்… இப்பாடசாலையில் தங்கு வசதிகள் இல்லை. எல்லாத்துக்கும் இரண்டு அறைகள்தான்… நானும் எனது சொந்தச் சாமான்களை, பெட்டி படுக்கைகளை ஒரு மூலையில் ஒதுக்கிவிட்டு, திறந்த மண்டபத்தில் … பெஞ்சுகளை இணைத்துத்தான் நித்திரை கொள்வேன். அது எனக்கு பழக்கப்பட்டு விட்டது. ஆனால் உங்களால் அது முடியாது. புஞ்சிபண்டா மாஸ்டரும் ரொம்பக் கஷ்டப்படுகிறார். மின்சார வசதியும் இல்ல. எல்லாத்துக்கும் சிமினி விளக்குத்தான்… புஞ்சிபண்டா மாஸ்டரின் அறையில் தற்காலிகமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் விரைவில் ஏற்பாடு செய்து தருவேன். சாப்பாடும் அம்முக்குட்டி ஓட்டலில் வைக்கணும்…”

“இன்னுமொரு பிரதேசத்திலிருந்து வரும் ஆசிரியர்களுக்கு உதவிகள் செய்து தரவேண்டியது, அதிபர் என்ற முறையில் எனது கடமை. கொஞ்சம் பொறுத்துக் கொள்ள வேண்டும்!” பண்போடு சொன்னார் அதிபர்.

மறுநாள் காலையில் எழுந்து குளித்து உடைகள் மாற்றிக் கூடைப் பெட்டியில் இருந்து இரண்டு நூல்களையும், பைல், குறிப்புப் புத்தகங்களையும் தயார்படுத்திக் கொண்டு, நானும் புஞ்சிபண்டா மாஸ்டரும் அம்முக்குட்டி’ மலையாளக் கடையில் காலைத்தேநீரை அருந்திவிட்டுத் திரும்பினோம்.

பாடசாலை முதல் மணி அடிப்பதற்கு ஐந்து நிமிடங்கள் இருந்தன.

“மர்ஜான் மாஸ்டர், இது உங்கட ரைம்ரேபிள். உங்கட ஆங்கில பாடத்தோடு, சுகாதாரமும், சூழலும் பாடங்களாகப் போட்டிருக்கிறேன்”

“பிரச்சினை இல்ல சேர்”

எனது கடமையைத் தொடங்கினேன். வகுப்பறைகளில் அமைதியும், ஒழுக்கமும், ஆங்கிலம் படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் பளிச்சிட்டது. அதுவே எனக்குப் பெரும் நிம்மதி.

திட்டமிட்டபடி மாணவர்களுடன் ஆங்கிலத்திலேயே உரையாடத் தொடங்கினேன்.

பாடநூல்களின் தரத்திற்கும் மேலாக மாணவர்களின் தரத்தை உயர்த்த வேண்டிய அவசியத்தை உணர்ந்து கொண்டேன்.

ஒரு பந்தியை வாசிக்கும் போது கவனிக்க வேண்டிய முறைகளை விளக்கிக் கூறினேன். நிறுத்த வேண்டிய இடங்களில் நிறுத்தி வாசித்தல், ஒரு வசனத்தில் அழுத்தமாகச் சொல்ல வேண்டிய தேவை… இப்படியான குறைபாடுகளை மனதிற் கொண்டு…

ஒரு மாதிரி வாசிப்பை (மொடல் ரீடிங்) நிகழ்த்திக் காட்டினேன்.

கையெழுத்துப் பரீட்சை, சொல்வதெழுதல், இலக்கணப் பயிற்சிகள்… என்று நாட்கள் சொல்லாமலே நகர்ந்தன. வாரங்கள் ஓடி ஒரு மாதமும் பிந்தி, இரண்டாம் மாதத்தின் மூன்றாம் வாரம் ஓடிக்கொண்டிருந்தது.

வாராந்தம் ஆங்கிலப் பத்திரிகைகளில் பிரசுரமாகும் சிறுவர்களுக்கான சிறுசிறு கட்டுரை, கவிதைத் துணுக்குகளை ரசித்துப் படித்து அவற்றை வெட்டி சீ.ஆர். புத்தகத்தில் ஒட்டிப் பாதுகாக்கும் அளவுக்கு மாணவர்கள் மொழியில் ஈடுபாடும் தரமும் உயர்ந்து கொண்டிருந்தது.

ஊருக்குப் போகும் போதெல்லாம் சிறு சிறு நூல்களைக் கொண்டு வந்து மாணவருக்குக் கொடுத்தேன். அவர்கள் ஒரு சிறு நூலகத்தையே ஆரம்பிக்கத் தொடங்கி விட்டார்கள்.

உண்மையில் கூடைப்பெட்டியின் கல்விச்சேவை மகத்தானதுதான்!

பாடசாலையில் என் கல்வி நடவடிக்கைகள் கிராமத்தின் கல்விமான் களுக்குப் பிடித்துக் கொண்டன.

“நல்ல பயிற்சிகளைப் பிள்ளைகள் பெற்றுக் கொள்கிறார்கள்” என்று மனம் மகிழ்ந்தார்கள்.

ஜூன் முதலாந்திகதி கடமையைப் பொறுப்பெடுத்த நான் டிசம்பர் முடிய உள்ள காலப் பகுதிக்கு, பாடத்திட்டத்தையும், பாடக் குறிப்புகளையும் தயாரித்து அதிபரின் கையொப்பத்திற்கும், அங்கீகாரத்திற்கும் சமர்ப்பித்த போது ஒரு கணம் அவர் அசந்தே போய்விட்டார்.

“மர்ஜான் மாஸ்டர், விதுஹல்பதி, கதாகரனவா…” மர்ஜான் மாஸ்டர் அதிபர் வரச் சொல்கிறார். நானும் புஞ்சி பண்டா மாஸ்டரும் அதிபரைச் சந்தித்தோம்.

“மாஸ்டர், இந்தக் கிராமத்தில் இஸ்மாயில் ஹாஜி மிக முக்கியமானவர். வசதி படைத்தவர். ஊருக்கும் பாடசாலைக்கும் பல வழிகளிலும் உதவி வருபவர். உங்கள் சேவையைக் கேள்விப்பட்டு அவர் உங்களை வெகுவாகப் பாராட்டுகிறார். அவரது வளவில் இரண்டு பெரிய அறைகள் சகல வசதிகளுடன் கட்டி முடித்திருக் கிறார். உங்களுக்கும் புஞ்சி பண்டா மாஸ்டருக்கும் வாடகைக்கு ஒரு தனிப் பெரிய அறையைத் தருவதாகக் கூறினார். பகல், இரவு, இருவேளை உணவையும் ஒழுங்கு பண்ணிக் கொள்ளலாம். அப்படி இல்லாவிட்டால், இருக்கவே இருக்கு ஆபத்துக்கு உதவும் அம்முக்குட்டி கடை”

அதிபரும், நானும், புஞ்சிபண்டா மாஸ்டரும் இஸ்மாயில் ஹாஜியின் இல்லத்திற்குச் சென்றோம்.

“இவர்தான் மர்ஜான் மாஸ்டர்…”

“ஆ… கேள்விப்பட்டன்… சந்தோசம்… வாங்க… ரூம் ரெடியாயிருக்கு… இன்றைக்கே பொறுப்பெடுத்துக் கெள்ளுங்க…” விசாலமான அறையைச் சுற்றிக் காட்டினார்… “தண்ணீ ர்… கரன்ட்… டொய்லெட்… எல்லாம் உள்ளுக்கே இருக்கு… ஒன்றுக்கும் யோசிக்கத் தேவையில்லை…”

ஒரு சமயம் பாடசாலை தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் போது மற்றுமொரு செற்றப்தான்.

முன்றலில் ஆதம்பாவா தலைமையில் ஒரு கோஷ்டி வந்து ஆர்ப்பாட்டம் செய்தது.

“அதிபர் சேர்… என் மகன் ஹசன் மாலை ஆறுமணிக்குப் பிறகு மஃரிப் தொழ மாட்டான். குர்ஆன் ஓதுவதை நிறுத்தி விட்டான். வேறு பாடங்கள் படிப்பு ஒன்றும் இல்லையா? இந்தப் பாடசாலையில் ஒரே ஆங்கிலப் பாட்டும், கூத்தும் தானா…?”

“பெரிய சேர்… அவன் மட்டும் இல்ல… இந்த ஊர்ல எல்லாப் புள்ளைகளும் அப்படித்தான்…” என்று உணர்ச்சி வசப்பட்டான் அபூதாலிப்.

“மர்ஜானை மலைநாட்டுக்கு அனுப்பு” “ஆங்கிலம் வேண்டாம்”

“மர்ஜானை இடமாற்றம் செய்…”

ஒரு சில இளைஞர்கள் இப்படிப் பல சுலோகங்களை ஏந்தினர்.

மண்ணெண்ணெய் வாங்கப் போன ஒரு பெற்றார் கலனை தரையில் ஓங்கி ஓங்கி அடித்துக் கூச்சல் போடுகிறார். “இந்தப் பாடசாலைக்கு ஆங்கிலம் தேவையில்லை… புள்ளைகள மண்ணாக்கிப் போடுவான்…”

இவற்றிற்குப் பின்புலமாக நிற்கும் சீட்டாடும் கோஷ்டி மௌனம் சாதித்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. இதெல்லாம்… ஆதம்பாவா ஏற்படுத்திய குழப்படிக்குப் பின் என்னை பாடசாலையில் தங்கவிடக் கூடாது என்று சீட்டாட்டக் காரர்கள் சீற்றம் கொண்டிருப்பார்களோ!

“சரி… நா அத கவனத்துக்கு எடுக்கிறன். இப்ப நீங்க கலைந்து போங்க…”

அதிபர் அவர்களைச் சாந்தப்படுத்தி அனுப்பிவிட்டார்.

நான் எனது கடமைகளில் தளர்ந்து விடவில்லை .

இந்த நிகழ்வு நடந்தது எப்பவோ….

மாதங்கள் ஓடி முதலாம் வருடப் பூர்த்தியை அண்மித்துக் கொண்டிருந்தது என் முதல் நியமனம். ஆர்ப்பாட்டமும் பிரச்சாரமும் எடுபடவில்லை .

இப்பொழுதெல்லாம் மாணவர்களினதும் பெற்றார்களினதும் நன் மதிப்பையும் அபிமானத்தையும் முழுமையாகப் பெற்றுக்கொண்டிருந்தேன். கிராமத்தில் எனக்கொரு ராஜமரியாதை.

அதிபர் பாடம் படிப்பிக்கும் போது அடிக்கடி கோபம் வந்துவிடுகிறது. “இந்தக் காட்டுப் பயல்களுக்கு ஒன்று சொன்னாக்கா… விளங்காது…”

அவரது கோபம் மாணவர்களின் கைகளில் சிவப்பு ஏறச் செய்வதில் ‘கெவிட்டி’ (பிரம்பு) கந்தலாகிவிடும்.

“அடித்துக் கனிய வைக்கும் கொள்கையோ, என்னவோ…”

ஒரு முறை ‘லொக்’ எழுதி பாடசாலைப் பொறுப்பை மௌலவி ஆசிரியரிடம் ஒப்படைத்து விட்டு ஆசிரியர்களின் சம்பளம் மாற்றப் போய்விட்டார் அதிபர்.

மறுநாள் காலை எட்டு மணிக்கு வந்துதான் பாடசாலைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

சம்பளத்தை ஆசிரியர்களுக்கு பங்கிட்டு விட்டு என்னை அழைத்தார். “மர்ஜான் மாஸ்டர், உங்களுக்கு கடிதங்கள் ஏதும் வந்ததா…?”

“இல்லை …”

“மாஸ்டர் உங்களுக்கு நான் எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை…”

“இந்தாங்க… உங்களுக்கு இடமாற்றம் வந்திருக்கு…”

“அப்படியா…? எங்கே …?”

“அது இதுபோல் பூனேவ சந்தியிலிருந்து மூன்று மைல் நடந்து பாடசாலையை அடையும் விசயமல்ல… பஸ் ரூட்டிலிருந்து எட்டு மைல் காட்டு வழியில் நடந்து செல்ல வேண்டும்”

பற்றைக்காடு எரிந்து பரவுவது போல் என் இடமாற்றச் செய்தி கிராம மெங்கும் பரவிக் கொண்டிருந்தது.

“இப்பதான் மாணவர்கள் ஏணிப்படியில் ஏறியிருக்கிறார்கள்… இன்னும் ஓரிரு வருடங்களில் அவர்கள் ஏணியின் உச்சத்தையே அடைவார்கள்… ஆனால் அதற்குள் இப்படி ஏணியை உதைத்து விழுத்தி விட்டார்களா? இதெல்லாம் சீட்டாட்டக்காரர்களின் சூழ்ச்சியா…? அப்ப என் முயற்சிகளுக்கு இதுதான் முடிவா…? எல்லாம்…? “

குறிப்பிட்ட தினத்தில் வெளியேறி பூனேவ சந்தியை நோக்கி நடந்து கொண்டிருக்கிறேன்… ஒரு கையில் கூடைப்பெட்டி, மறுகையில் “சூட்கேஸ்” என் பொதிகளை நானேதான் சுமக்க வேண்டும். என் சேவையை விரும்பும் ஒரு மனித சமூகம் எங்காவது ஒரு பாடசாலையில் காத்திருக்குந்தானே!

– ஜீவநதி 3வது ஆண்டு மலர் ஐப்பசி-2010

– கொங்கணி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: 2014, எஸ்.கொடகே சகோதரர்கள் பிரைவேட் லிமிடெட், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *