சிதம்பரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 118 
 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்றிரவு இராமேஸ்வரம் ரயிலில் நாங்கள் சிதம்பரம் போக இருப்பதாகத் தெரிந்ததும், தமிழ்நாடு வரைபடத்தையும் ரயில்வே நேர அட்டவணையையும் எடுத்து அவர் விபரிக்கத் தொடங்கினார். “இரவு ஒன்பதரை மணியளவில் சென்னை சென்றல் நிலையத்திலிருந்து புறப்படும் வண்டி இரவு பன்னிரண்டரை மணியளவில் சிதம்பரம் ஸ்டேசனை அடையும். நீங்கள் இரண்டாம் வகுப்பில் ‘பேர்த்’ புக் பண்ணி போவீர்களானால், இரவில் சிதம்பரம் புகையிரத நிலைய ஓய்வறையில் தங்கி, அடுத்த நாள் காலையில் நீங்கள் செய்ய வேண்டியவற்றைச் செய்து கொண்டு கோயில் தரிசனத்துக்குப் புறப்படலாம்” 

“நாங்கள் ஏற்கனவே புக் பண்ணித்தான் வைத்திருக்கிறோம்” என்று சொன்னோம். 

“மிச்சம் நல்லது; அப்படியானால் உங்கள் பிரயாணம் தரிசனம் எல்லாம் சுகமாக அமையும்” என்றார் அவர். 

திடீரென ஒரு வித நிர்ப்பந்தத்தின் பேரில் தான் அவ்வாறு முடிவெடுக்க வேண்டி ஏற்பட்டது. நாங்கள் நாலைந்து பேரும் ஒன்றாக இராமேஸ்வரம் வரை போவதாகத்தான் தீர்மானித்திருந்தோம். அவ்வாறு தான் பயணச் சீட்டுக்களும் ‘ரிசேவ்’ செய்திருந்தோம். ஆனால் ஏதோ விதமாக நானும் அவளும் வந்த பயணத்தின் அடிப்படை நோக்கங்கள் அவள் நினைவுக்கு வர, வாய்ப்புக்களும் வர, செய்ய வேண்டியவற்றைச் செய்து கொடுக்கக் கூடிய ஆட்களும் தோதாக வர எங்கள் இருவரதும் பயணங்கள் மட்டும் அடுத்த நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுச் சிதம்பரம் வரையுமே பயணம் செய்வதென்றும் தீர்மானமாயிற்று. 

முதல்நாளே மற்றவர்கள் ராமேஸ்வரம் நோக்கிப் பயணப்பட்டு விட்டார்கள். இறுதி நேரத்தில் ஆண் துணையின்றிப் பெண்கள் பயணம் செய்வதா என்ற நண்பர்களின் பரபரப்பில்… கைசுட்டி எங்களையே குறைசொல்லிப் பேசிய அதிர்ச்சியில்… வழியனுப்ப வந்த நண்பர் ஒருவரே ஆண் துணையாகவும் பயணப்பட வேண்டியதாயிற்று. 

இன்று நாங்கள் சிதம்பரத்துக்குப் போகிறோம். கூட வரும் பிராமணக் குடும்பம். ஒரு அறையின் நாலுபடுக்கைகளில் இரண்டு எங்களுக்கு; இரண்டு அவர்களுக்கு… எங்களை விசாரிக்கிறார்கள் ஏதேதோவெல்லாம் சொல்கிறார்கள்; கோயில்… தீர்த்தம்… தரிசனம்… வரம்… இவ்வாறாக… 

கடகடகட வென்ற இரைச்சலுடன் ஓடிக் கொண்டிருக்கும் புகையிரதம். இருட்டுக்குள் மின்னி மின்னி மறையும் ஒளிப்பொட்டுக்கள். சள சள சளவென்ற பேச்சற்ற அமைதி. ஒரு விதமான அயர்ச்சி கண்களைக் கிறங்க வைக்கிறது. எங்கள் பக்கம் மேல் ‘பேர்த்’தில் படுத்துக் கொள்கின்றேன். அடுத்த பக்க மேல் ‘பேர்த்’ தில் பிராமணரும் படுக்க, கீழே பெண்கள். 

கண்களில் அயர்ச்சி இருந்தாலும் நித்திரை வரவில்லை. ‘இராமேஸ்வரம் போனவர்கள் போய்ச் சேர்ந்திருப்பார்களா? அகதி முகாமில் அவர்களுக்கும் இடம் கிடைத்திருக்குமா? அடுத்த வாரம் அகதிகளை ஏற்றிக் கொண்டு காங்கேசன்துறை போக இருக்கும் கப்பலில் அவர்களும் போக முடியுமா? அவர்களுடன் ஆண் துணையாகச் சென்ற இந்திய நண்பர் திரும்பப் புறப்பட்டிருப்பாரா?’ விடை தெரியாத வினாக்களும் மனக்குடைச்சல்களுமாய்…..’ 

கையைத் தூக்கி நேரத்தைப் பார்க்கின்றேன். மணி பதினொன்றரை ஆகின்றது. இன்னும் ஏறக்குறைய ஒரு மணித்தியாலப் பயணம். 

மீண்டும் அதே எண்ணங்கள் ஒன்று மாறி ஒன்றாய் மனதிற்குள் சுழல்கின்றன. இராமேஸ்வரம் அகதிமுகாமில் தஞ்சம் புகச் சென்ற தங்கையும் அவள் தோழிகளும்… வரம் வேண்டி திருத்தல யாத்திரைகள் செல்லும் நானும் அவளும்… அக்கறையுடன் பயண ஏற்பாடுகளைப் பற்றி விசாரித்து வழிகாட்டற் குறிப்புக்களைத் தந்த மூத்த எழுத்தாளர்… ஆதரவு அற்றவர்களுக்கு உதவுவதே தனது கடமை எனக் கொண்டு அலைந்து திரியும் தெலுங்கு நண்பர்… அவர் ராமேஸ்வரம் போய்விட்ட செய்தியைத் தொலைபேசியில் சொன்னபோது தெலுங்கு கலந்த மழலைத்தமிழ் பேசிய அவர் சகோதரி… சென்றல் நிலையத்தில் வழி அனுப்புதல்கள்… கை அசைப்புக்கள்… கண்ணீர்த்துளிகள்… 

நிமிடத்தின் கூறுகளின் கூறுகளில் மாறிவிடும் மன அவசங்கள், சம்பவ முடிச்சுக்கள்… நேரம் பன்னிரண்டு மணி ஆகிவிட்டிருந்தது. சத்தம் சந்தடி இன்றி மெதுவாக மேலே இருந்து இறங்கினேன். பிராமணக் குடும்பத்தினர் அயர்ந்து தூங்கி இருந்தனர். அவளும் தூங்கி இருக்கக் கூடும். வாசற் பக்கத்துக் கம்பியில் கையைப் பிடித்து நின்று வெளியே அசையும் கரும்பூதங்களையும், ஒளிப் பொட்டுக்களையும் பார்த்துக் கொண்டு நின்றேன். 

தூரத்து வானத்துச் சரிவில் தெரிந்த ஒளிப்புள்ளி பெரிதாகிப் பெரிதாகிப் பெரிதாகி….. பெரிதாகி….. 

நாங்கள் இறங்க வேண்டிய சிதம்பரம் ஸ்டேசன் வந்துவிட்டது. அவளும் விழிப்பாகத்தான் இருந்திருக்கிறாள். சூட்கேஸ், பைகளுடன் இறங்குவதற்குத் தயாராகத்தான் இருந்தாள். பிராமணக் குடும்பத்திடம் சொல்லிக் கொண்டு இறங்கினோம். அவர்களுக்குக் கேட்டதோ தெரியவில்லை. 

இறங்கினோர் தொகை குறைவு. ஏறினோர் தொகையும் குறைவுதான். நாலைந்து நிமிடச் சந்தடிக்குப் பின் நீண்ட குரல் எடுத்துக் கூவிக் கொண்டு வண்டி மீண்டும் புறப்பட்டுப் போயிற்று. 

வெள்ளை யூனிபோர்ம்மில் நீலத்தொப்பியுடன் ஸ்டேஸன் மாஸ்டர் எங்களை வந்து பார்த்தார். “நீங்கள் பேர்த் புக்பண்ணி வந்திருக்கிறீர்கள். தனியான ஓய்வு அறையில் உங்களுக்கு வசதிகளைச் செய்து தரவேணும். ஆனால் கரண்ட் கட்டாய் இருப்பதனால் லைட்வசதிகள் ஒன்றும் இல்லை. இன்றைய இரவை இந்தப் பொது ஓய்வறையில் கழித்துக் கொள்ளுங்கள்”. 

ஒருவித தயக்கத்துடன் தான் என்றாலும், அவர் சொல்லி விட்டுப் போய்விட்டார். 

பொதுவறையின் மங்கிய வெளிச்சத்தில் ஏற்கனவே ஐந்தாறு பேர் தூங்கி இருந்தார்கள். சீமெந்துத் தரையிலும், வாங்கிலும், பத்திரிகையை விரித்துப் போட்டும் பல்வேறு கோணங்களில் அவர்கள் படுத்திருந்தார்கள். நானும் அவளும் எங்களுக்காக ஒரு பக்கத்தைத் தேடிக் கொண்டோம். எங்களுடன் கொண்டு சென்ற பெற்சீட்களை விரித்து முடங்கிக் கொண்டோம். 

நித்திரை வராது. நித்திரை வரவில்லை. 

புதிய இடம். ஆரைத்தான் நம்பமுடியும். பயணமோ ஏற்கெனவே இலக்குகள் வரையறுக்கப்படாத அல்லது திட்டமிடப்படாத நெடும்பயணம். பணமும், பாஸ்ப்போட்டும், திரும்பும் விமானப் பயணத்திற்கான ரிக்கெற்றும் பைகளில்….. 

‘கூர்மீசைக்காறன் நித்திரை கொள்வது போல நடிக்கிறானா? புரண்டு புரண்டு படுக்கிறான். தாடிக்காறக் கிழவன் நித்திரையாகத்தான் இருக்க வேணும். ஒரே சீராக மார்பு ஏறி ஏறி இறங்குகிறது. நடுத்தர வயது – சிவப்புச் சேலைக்காரி…? சொல்லமுடியவில்லை. பக்கத்தில் ஊன்று கோல் வைத்திருக்கும் அந்த நொண்டி மனிதன் அடிக்கடி முழித்துப் முழித்துப் பார்த்தவாறு படுத்திருக்கிறான்’. 

பயணப் பையை என் மார்புடன் அணைத்தவாறே படுத்திருக்கிறேன். அவள் நன்றாகத் தூங்கிவிட்டிருக்க வேண்டும். 

மீண்டும் மீண்டும் சுற்றிச் சுழலும் நினைவுகள்; ஊர்ச் சனங்களை எல்லாம் கோயிலில் சேருமாறு கூட்டி அட்டகாசம் செய்த இந்திய ராணுவம்; அகதிகளோடு அகதியாக இந்தியாவிற்குப் போன தங்கை; எங்களுக்கு வைத்தியம் பார்த்த கம்பீரமான பெண் டாக்டர்; நம்பிகையூட்டிய சாத்திரக்காரன்; யாத்திரை போகுமாறு திரும்பத் திரும்ப தூண்டிக் கொண்டே இருந்த கிராமத்துப் பெரிய மனிசன்… சென்றலில் கண்ணீருடன் கையசைத்துச் சென்ற தங்கையின் முகம்; அவள் தோழிகள்; வல்லிபுரம், வல்லிபுரம் என்று வாயோயாது என்னை அழைக்கும் இந்திய நண்பன்….. 

விடியலுக்கான ஆரவாரங்கள் தொடங்கிவிட்டன. 

உதயத்தை வரவேற்கும் தூரத்துப் பறவைகளின் கூட்டோசை; சனசந்தடி; நடமாட்டங்களின் அல்லோலம். 

பத்திரிகை விற்பவனின் தனித்த குரல், 

ஆலய மணியோசை. 

எல்லோரும் ஒவ்வொருவராக எழுந்து புறப்படத் தயாராகி விட்டனர். அதிகாலைப் பொழுதிலேயே நானும் அவளும் எழுந்து ஸ்டேஷனை விட்டு வெளிக் கிளம்பினோம். தங்கும் இடம் தேடும் அலைச்சல்….. 

ஒரு கால்வாய் அல்லது வாய்க்காலைக் கடந்து விசாரித்த போது ஒருவர் சொன்னார் ‘தமிழ்நாடு சுற்றுலா விடுதியில் விசாரித்துப் பாருங்கள்’ 

தயக்கத்துடன் உள்நுழைந்த போதே, வாயிற் காவலன் ‘சல்யூட் அடித்து வரவேற்றான். 

உள் கவுண்டரில், அறையொன்று வேண்டுமென்றோம். “தாராளமாக; அறுபத்தியேழாம் இலக்க அறையை ஒதுக்கிச் சுத்தம் செய்து கொடுங்கள்” 

ஏவலாளர்கள் பம்பரமாய்ச் சுழன்றார்கள். 

அடுத்த இரண்டு மூன்று நிமிடங்களில் எங்கள் கையில் திறப்பு வர இராசோபசாரம் தான். 

வடிவாகக் குளித்து முழுகி வெளியிலிருந்து எடுப்பித்த காலை ஆகாரத்தை உண்டு – படுத்தெழுந்து, சிறிது ஆசுவாசப் படுத்தியபின் கோயிற் தரிசனத்திற்காய்ப் புறப்பட்டோம். அப்போதும் மின்னலாய் முகம் காட்டும் நினைவுகள்….. 

சுற்றிச்… சுற்றிச்… சுற்றிக் கோயிலை வந்தடைந்தோம். 

மனதில் கட்டியிருந்த பிரமாண்டத்திலும் பார்க்கச் சிறியதாகவே இருந்தது கோவில்; ஆனால் பெரிதாக இருந்தது; உண்மையில் பெரிதாகத்தான் இருந்தது. 

“சிதம்பரம் போகாமல் இருப்பேனோ -இந்தச் சென்மத்தை வீணாகக் கழிப்பேனோ” என்று பாடி அவளைச் சீண்டினேன். அப்படிப்பாடி அவளைச் சீண்டுவதனால், என் மன அவசங்களிலிருந்து மீளலாம் எனவும் எண்ணினேன். 

என் சீண்டல்களுக்கு அவள் எடுபடுவதாகவேயில்லை. சிதம்பர தரிசனத்தில் ஒன்றிப் போயிருந்தாள்; உருகிப் போயிருந்தாள். ‘நல்ல வேளை நேராகவே ராமேஸ்வரம் போயிருந்தால், கிடைக்காத சிதம்பர தரிசனத்திற்கான தொண தொணப்புக்களில் இருந்து தப்பியிருக்கவே முடியாது’. 

தில்லைவாழ் அந்தணர்களின் அதிகாரச் சூழலில் (ஆண்கள் மேல் வஸ்திரங்கள் அணியக் கூடாது) சிறிய ஒடுங்கிய பாதையூடாகச் சென்று, உட்கோயிலில் இடதுபாதம் தூக்கியாடும் நடராஜனின் தரிசனம்; அவள் கண்கள் பரவசத்தில் மின்ன, மெல்லிய குரலில் அவள் பாடுவது அருகில் இருந்த எனக்கும் கேட்டது. 

குனித்த புருவமும் 
கொவ்வைச் செவ்வாயிற் குமிண்சிரிப்பும் 
பனித்த சடையும் 
பவளம் போல் மேனியில் பால்வெண்ணீறும் 
இனித்தமுடைய 
எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் 
மனித்தப் பிறவியும் வேண்டுவதே….. 
நிசப்தம் நிசப்தம் நிசப்தம். 

ஒரு பருத்த அந்தணரின் வழிகாட்டலில் சிதம்பர இரகசியத்தை அறியும் எத்தனம். 

‘அந்த நடராஜர் சிலையின் மேற்புறத்தில் மூலையில் பாருங்கள்…பாருங்கள்; தெரிகிறதா… தெரிகிறதா… தெரிகிறதா… தெரிகிறதா…ஓம்… ஓம்… ஓம்… ஓம்…” 

மீண்டும் மீண்டும் நினைவுகள் கிளர்ந்த ஒரு பொழுதில் பின்னர் அவளிடம் கேட்டேன். 

‘உனக்கு ஏதாவது தெரிந்ததா’ நிமிர்ந்து என் கண்களை உற்றுப் பார்த்து வெறுமனே சிரித்தாள் அவள்.

– ஏகலைவன், பங்குனி-சித்திரை 2004

– உதிரிகளும்…(சிறுகதைகள்), முதலாம் பதிப்பு: ஆவணி 2006, புதிய தரிசனம் வெளியீடு.

ஐ. சண்முகலிங்கம் (பிறப்பு 1 ஆகத்து 1946 – 24 ஏப்ரல் 2023, குப்பிழான், யாழ்ப்பாணம்) குப்பிழான் ஐ. சண்முகம் என்ற பெயரில் எழுதும் ஈழத்து எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலைப்பட்டம் பெற்ற இவர் ஓர் ஆசிரியர். சிறுகதையாசிரியராக கவனம் பெற்ற சண்முகன் இசை, சினிமா, ஓவியம் போன்றவற்றிலும் ஈடுபாடுடையவர். அலையின் ஆரம்ப ஆசிரியர் குழுவில் இடம்பெற்றவர். ஜீவநதி 2022.06 (174) (குப்பிழான் ஐ. சண்முகன் சிறப்பிதழ்)https://noolaham.net/project/1029/102876/102876.pdf இவரது…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *