சிக்கமுக்கிக் கற்கள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 11, 2021
பார்வையிட்டோர்: 3,646 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

காடுகொன்று நாடாக்காமல், நாடுகொன்று, காடான மலைக்காடு……..

பார்வதி, படுக்கையாய் பயன்பட்ட கோணிப்பையின் இருமுனைகளையும், வீட்டுக்கூரையின் அடிவாரமான மூங்கில் கழியில் சொருகினாள். புறத்தே கதவாகவும், அகத்தே படுக்கையாகவும் ஆகிப்போன அந்தக் கோணி, இந்த இரண்டிற்கும் தாராளமாகவே இருந்தது. மூங்கில் நிலைவாசலில் தொங்கி, இந்தக் கோணிக்கதவு, தரையில் மடிந்தும் படிந்தும் தவழும் வகையிலான பொந்து வாசல்: அதுவே படுக்கையாகும்போதும் அப்படித்தான். முன்தலையையும் முட்டிக்கால்களையும் முட்ட வைத்தால் மட்டுமே படுக்கக்கூடிய தலை. ஆகையால், கோணிக்குச் சிக்கல் இல்லை. அவனும் இவளும் சேர்ந்து படுக்கும்போதுதான் இடச்கிக்கல். ஒருவரையொருவர் கிட்டத்தட்ட படுக்கையாக்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பெரும்பாலும் அசல் படுக்கைகளாகத்தான் கிடப்பார்கள்.

“யாரும்மா உள்ளே இருக்கறது?”

பார்வதி, ஆவலோடு வெளியே வந்தாள். பொந்து வாசலில் இருந்து மனிதப் பெருச்சாளியாய் தவழ்ந்து வந்தாள். அது ஜாமீனில் வந்திருக்கும் என்ற அனுமானத்துடன் வெளிப்பட்டாள். அந்த அனுமான வேகத்தில் பெண்குரல் கூட ஆண்குரலாக – அதுவும் அவனுடைய குரலாகவே கேட்டது. உதட்டைக் கடித்தபடியே, எதிர் நின்றவளையும் அவளது இடுப்பையும் கையையும் பற்றி நின்ற சின்னஞ்சிறுசுகளையும் பார்த்தாள். இந்தச் சிறுசுகளை வரிசையாக நிறுத்தினால் இவர்களின் தலைகள் படிக்கட்டுகள்போல் தோன்றும். இப்படிப்போன்றவற்றை ரசித்துப் பார்க்கும் பார்வதிக்கு இப்போது அவளும் அந்தக் குழந்தைகளும் வெறும் பிம்பங்களாக மட்டுமே தெரிந்தன. குரல்கொடுத்தவளை ஏறிட்டுப் பார்த்தாள் புளியம்பழம் போல் தோல்வேறு. எலும்பு வேறாய் தோன்றிய முப்பது வயதுப்பெண். இவளுக்கு அவள், தன் வருகையின் நோக்கத்தைச் சொன்னாள்.

“எங்கள இந்த வீட்டுல குடியிருக்கச் சொன்னாங்கே… நீ நாட்டுப்புறத்துக்குப் போறீயாமே… வேணுமுன்னா நான் ஒரு நாள் கழிச்சு வரட்டுமா….. அதுவரைக்கும் அந்த மரத்தடியில இருந்துக்கிறோம்.”

பார்வதி, வேண்டாம் என்பதுபோல் தலையை ஆட்டி, அவள் முன்னால் விசிறிபோல் கையையும் ஆட்டினாள். வந்தவளும், அவளது குட்டிக்குருமாக்களும் உள்ளே போகலாம் என்பது போல் கையை துடுப்பு போல் ஆக்கிக் காட்டினாள். வந்தவள், நின்றவளை தயங்கித் தயங்கி கேட்டாள்.

“ஒன் சாமான் செட்ட எடுக்கலியாம்மா? பரவாயில்ல. அப்புறமா வந்துகூட…”

பார்வதிக்கு இப்போது பேசியாக வேண்டிய கட்டாயம். முகம் திருப்பி, கண்துடைத்து மீண்டும் முகம் கொடுத்துப் பேசினாள்.

“ஒரு பிளாஸ்டிக் குடமும்….. வெண்கலச் செம்பும் இரண்டு, ஈயத்தட்டுந்தான் இருக்குது….. நீயே வச்சுக்க தலைச்சுமை மிச்சம்”

“எங்களுக்கும் வெளியூர்தான். திருவண்ணாமலை பக்கம். நேற்றுதான் வந்தோம். அவரு மலை மேஸ்திரியைப் பார்த்துட்டு, அப்படியே வவுத்த கழுவுறதுக்கு ஏதாவது வாங்கிட்டு வர போயிருக்காரு….. ஒனக்கு எந்த ஊரும்மா?”

“எந்த ஊருமே சொந்தமில்ல.”

பார்வதி, கண்ணிர்த்திவலைகளுக்கு இடையே, நிழல் உருவமாய் தெரியும் புதியவளை ஏறிட்டுப் பார்க்காமலேயே நடந்தாள். வீடு பறிகோகும் நிலைமையிலும் அசத்தலாய் நின்றவள்தான். ஆனால், புதியவள். தன் வீட்டுக்காரரைப் பற்றிச் சொன்னதும், அவளுக்கு அவன் ஞாபகம், நெஞ்சில் முட்டி மோதியது. வீடு போகலாம்….. வீட்டுக்காரன் போகலாமோ…

பத்தில் மூன்றாக கனத்த அடிவயிற்றைப் பிடித்தபடியே, பார்வதி நிற்பதும் நடப்பதுமாய் போனாள். அண்ணாந்தும் கவிழ்ந்தும் பார்த்தவள். பின்னர், சுற்றுமுற்றும் நோக்கி, சூன்யமாய் நின்றாள். அந்த சூன்ய்த்தை சுற்றுச்சூழல் வக்கரித்துப் பார்த்தது. சிறிது தொலைவில் உள்நோக்கிப் பாய்ந்த மலைப்படுகை… மலையின் அடிவாரத்துக்குக் கீழே போன பாறைப் பள்ளத்தாக்கு…. அந்தப் பகுதிமேல், அப்படியே கவிழ்ந்த ஆகாயம். மண்சட்டியில் வெள்ளைக்கிண்ணத்தை தலைகீழாய் கவிழ்த்த தோரணை. இவள் நிற்கும் பாதையும், நீள நடந்து, அதே பாதாள படுகையில் கீழ்நோக்கி விழுகிறது. அது விழுந்த இடத்தின் எதிர்ப்புறம், ஒரு காலத்தில் கம்பீரமாய் நின்று. இப்போது படுத்துக்கிடக்கும் குற்றுயிரும் குலையுயிருமாய் துடிக்கும் மலை. இதன்மீது, ஆண்டுக்கணக்கில் நடத்தப்பட்ட சித்திரவதைகள், அதன் செடிகொடி ரோமங்களைக் கொண்ட மண் தலையை கொய்துவிட்டன. ஆங்காங்கே அதன் கருநீல எலும்புகள் உடைபட்டு, நாடிநரம்புகள் வெள்ளை வெள்ளையாய் நைய்ந்து கிடக்கின்றன. இப்போதும், அதன் அடிவயிற்றில் வெடிகள் வைக்கப்பட்டு பாறைச்சதைகள் பிய்ந்து விழுகின்றன. குய்யோ முறையோ என்கிற கூக்குரலோடு கற்கள் பறக்கின்றன. அந்த மலையே குலுங்கி அழுவதுபோன்ற ஒலம். அந்த அழுகைக்கு இடையே ஏங்குவது போன்ற இயந்திரச்சத்தங்கள்…. அழுதழுது களைத்துப்போய், ஆசுவாசப் படுவது போன்ற சம்மட்டிச் சத்தங்கள்.

பார்வதியின் உடம்பை, அவள் கால்கள் இழுத்துக்கொண்டு போகின்றன. நடக்க நடக்க, மனமும் நடக்கிறது. முன்னோக்கியும் பின்னோக்கியும் அலைபாய்கிறது. ஒவ்வொரு நினைவுக் கொடூரமும், தனித்தனியாய் வராமல், கூட்டாய், கலப்பாய், கும்பல் கும்பலாய் ஒன்றோடு ஒன்று பின்னியபடியே தலை கால் காட்டாமல் சாயாய்கிரகமாய் நிழலாடுகிறது.

முதலிரவுக்கு மறுநாள் அவளும் அவனும் விவசாயக்கூலிகளாய், ஆளுக்கொரு வரப்பில் வாய்க்கால் இடைவெளியோடு நடக்கிறார்கள். அவன் தோளில் மண் வெட்டி கவ்விக்கிடக்கிறது. இவள் கையில் பன்னருவாள் விளையாட்டுத்தனமாய் சுழல்கிறது. சிறிதுதான் நடந்திருப்பார்கள். சோளத்தட்டைகளுக்குள் பதுங்கிக் கிடந்த ஒரு கும்பலில், அடையாளம் தெரியாத ஒரு முகம், இவர்களைப் பார்த்து அந்தக் கும்பலுக்கு அடையாளப்படுத்துகிறது. உடனே, பத்து பதினைந்து பேர், கத்தியும் வேல்கம்புமாய் இவர்களை துரத்தியதும், இவர்கள் தலை தெறிக்க ஓடியதும், இப்போதும் கண்முன்னால் நடப்பதுபோல் தோன்றுகிறது. உடனடியாய் அந்தத் தோற்றம், மாய்ந்து இன்னொரு நினைவுக் கொடூரம் முன்னிலையாகிறது. நான்கு நாட்களுக்கு முன்பு, காக்கிச்சட்டைக்காரர்கள், அவள் வீட்டுக்காரனை, விலங்குபோட்டு இழுத்துப் போகிறார்கள். இவள், தன் தலையில் அடித்துக் கொள்கிறாள். கூரைக்கம்பில் மோதி மோதி ரத்தம் சிந்துகிறாள். அதோடு அந்த நினைவும் அறுபட்டு வயல்காட்டு நினைவு மீண்டும் வருகிறது. துரத்தும் கும்பலில் ஒருத்தன், இவர்களை நெருங்கி, இவள் கழுத்துக்கெதிரே, அரிவாளை ஓங்குகிறான். உடனே பார்வதியின் கணவன், அனிச்சையாகவோ அல்லது உத்தி தெரிந்தோ தோளில் தொங்கிய மாப்பிள்ளைத் துண்டை எடுத்து, வெட்டரிவாள்கார்ன் முகத்தை முக்காடு போடுகிறான். சாதிக்கலவர எதிரியின் முகம் பன்னாடைக்குள் சிக்கிய பனங்காயாய் ஆனபோது, இன்னொருத்தன் நெருங்கி வந்து, அவன் தலைக்கு, வேல் கம்பை குறிவைக்கிறான். உடனே இவன் இடது தோளை அப்பிப்பிடித்த மண்வெட்டியால், வேல்கம்பை வீழ்த்திவிட்டு, அவன் கழுத்தில் ஒரு போடு போடுகிறான். அரிவாள்காரன் அடியற்று சாய்கிறான்.

இதுபோதும் என்ற மனம், பார்வதிக்கு இன்னொரு நினைவை கொண்டுவருகிறது. இந்தப் பகுதிக்கு அரசாங்கச் ஜீப்பில் கோட்டும் சூட்டுமாய் வந்தவர்களிடம் இவள் வாயை விற்று விடுகிறாள். விற்றாள் என்பதைவிட இந்த மலைப்பகுதி மனித கொடுரங்களை இவளிடம் இருந்து அவர்கள் வாங்கி விடுகிறார்கள். விவகாரம் மலை மேஸ்திரிகளின் முக்கிய கொம்பன்களின் காதுகளை எட்டுகிறது. இவளுக்கும் அவனுக்கும், கெடு வைத்துவிட்டார்கள். இந்த பகுதியை விட்டு மூன்று நாட்களுக்குள் வேளியேற வேண்டும். இல்லையானால் நடப்பது வேறாம் என்ற மிரட்டல்.

அவள் மனத்தளத்தில் மலைக்கார கொம்பன்கள் போய், மீண்டும் கிராமத்து வம்பன்கள் வருகிறார்கள். இவர்களை துரத்திய அந்தக் கும்பல், கீழே விழுந்தவனை தூக்குகிறது. இவர்களோ, அடுத்த சாதிக்காரன் அதிகமாய் வாழும் ஊர்ப்பக்கம் போகாமல், அப்படியே கட்டிய துணியோடு காடுமலை தாண்டி, ஓடாக்குறையாய் நடந்து, தென்காசியில் ரயில் ஏறி, தாம்பாரத்தில் இறங்கி, இடமறியா இந்தப் பகுதிக்குள் இடறி விழுகிறார்கள்.

இந்த நினைவை மீறி மீண்டும் மலைக்கொம்பன்கள் மன பிம்பங்களாகிறார்கள். அவர்களிடம் நயந்தும் பயந்தும் பேசிய இவள் வீட்டுக்காரன், இறுதியில் வேளியேற முடியாது செய்யுறத செய்யுங்க என்கிறான். அவர்கள் மெல்லச் சிரிக்கிறார்கள். சரிப்பா இருக்க முடியுமுன்னா இருந்துட்டுப்போ என்று அவனை ஆழக்கண் போட்டு அகலமாய்ப் பார்க்கிறார்கள்.

இப்போது அதே மனோதளத்தில், வீட்டுக்காரன் போய் மெகா போன்காரர்கள் வருகிறார்கள். போனவாரம் நடந்த கொடூரம்…. மொத்தம் பத்து பதினைந்து பேர்… அத்தனைபேரும் முகமறியா இளைஞர்கள்…. ஒருவன் மெகாபோனை எடுத்துக்கொண்டு ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்!’, என்று உரத்துக் கூறுகிறான். தொழிலாளர் வரவில்லை. அடியாட்கள் தான் வருகிறார்கள். மெகாபோன்காரர்கள் மண்டையை இரண்டாக்குகிறார்கள். கூடவந்த தோழர்கள், அவனை தூக்கிக் கொண்டு ஓடுகிறார்கள். மீண்டும் அவர்கள் ஆள்பலத்தோடு வருவார்கள் என்று, போனவர்கள் போனவர்கள்தான். அரைக்கிணறு தாண்டிய கதை. ஆபத்தான கதை.

இந்த நினைவுத் துரயரம் போய், மீண்டும் அவள் மனதுள் இன்னொரு நினைவுக் கொடூரம் நுழைகிறது. கட்டிய கணவன் விலங்கும் கையுமாய் அவளைப் பார்க்கிறான். ஆறுதல் சொல்ல முடியாமல் அழுகிறான். பிறகு, நம்முடைய இனத்தான்கள் என்ன கைவிடமாட்டாங்க. எப்படியும் சீக்கிரம் ஜாமீன்ல வந்துவிடுவேன் அதுவரைக்கும் இங்கேயே மூச்சைப்பிடிச்சுக்கிட்டு தாக்குப்பிடி என்கிறான். கைவிலங்கை வைத்து அவள் தலையை ஆசிர்வதிக்கிறான்.

பார்வதி, நினைவுகளை உதறிப்போட்டு, கசிந்து நிற்கும் பாறை மேட்டில் நடந்து, பூசணிக்கொடிகளில் ஊடுறுவி அவற்றின் மஞ்சள் பூக்களில் நடைபோட்டு, கருவேலமுட்களில் தடம்போட்டு, பூவின் மென்மைக்கும், முள்ளின் வன்மைக்கும் வித்தியாசம் காணாது நடந்து நடந்து இயந்திரமேட்டுக்கு வந்துவிட்டாள்.

அந்த மேட்டை நோக்கி லாரிகள் தவளைபோல குதித்துக்குதித்து வருகின்றன. அவற்றைப் பார்த்ததும் இயந்திர மேஸ்திரி கூலி ஆட்களை அதட்டுகிறார். இயந்திரச்சக்கரங்களை இரும்பு பட்டைகள் ஆட்டுவிக்கின்றன. இதன் இரும்பு வாய்க்குள், சக்கைக்கற்களை, கூலிப் பெண்கள் தலையில் ஏற்றிக் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். பேர்தான் சக்கை. ஒருத்தி, சிரமப்பட்டு தூக்க வேண்டிய ஒரே கல். அந்த இரும்பு வாய், இந்தச் சக்கைகளை, நொறுக்குத் தீனியாக்கி கீழே உள்ள செவ்வக வடிவ தகர வாயிற்றுக்குள் அனுப்புகிறது. தலைச்சுமை சக்கைகள் கைச்சுமை கற்களாகின்றன. மிஷின் முக்கா, ஓவர் முக்கா, அரை, கால், துகள் என்று தரம் பார்த்து, வகைக்பிரித்து அந்தச் செவ்வக வயிறு குறுக்கும் நெடுக்குமாய் போகும் இரும்பு குழாய்களுக்குள், தனித்தனியாய் வழியனுப்பி வைக்கிறது. அந்தக் குழாய்கள். அங்குமிங்குமாய் நீண்டு, சுமந்து சென்ற குவியல்களை தரையில் போடுகின்றன. ஒவ்வொரு யந்திர மேட்டிலும் பத்துப் பதினைந்து பெண்கள். ஆண்கள் அறவே இல்லை. ஒவ்வொருத்தி முகத்திலும், கல் துகள்கள் அப்பிக்கிடக்கின்றன. காது, மூக்கு ஒட்டைகள் அடைக்கின்றன. கல் புகை, மேகமாக்கி அவர்கள் கண்களை இருளச் செய்கிறது. நுரையீரல்களில் படிந்த துகள்களோடு, பறந்த துகள்கள் கூட்டணி வைத்துக்கொண்டு, ஒருத்தியை இரும வைக்கின்றன. இன்னொருத்தியை நெஞ்சைப் பிடிக்க வைக்கின்றன. உடனே, ‘முதல்ல உடம்ப பார்த்துக்கிட்டு வேலைக்கு வாங்க’ என்கிற ஒரு அதட்டல் யந்திரச் சத்தத்தையும் மீறி ஒலிக்கிறது.

பார்வதி, தடபுடலாய் அங்குமிங்கும் சுற்றிய யந்திர மேஸ்திரியின் முன்னால்போய் கையை பிசைந்து கண்களால் யாசிக்கிறாள். இங்கே வந்த புதிதில், இதே யந்திர மேட்டில், இவளை கல் சுமக்கம் வேலையில் சேரச் சொன்னவர்தான். இவள் ஊர்பக்கமாம்…. சுற்றி வளைத்துப் பார்த்தாள் உறவுதான். இவள்தான், இந்த வேலையை மென்மையாய் மறுத்தாள். கல்லுடைக்கும் வேலையே சத்திரியத்தனமானது. யந்திரத்துக்கு கல் சுமப்பது சூத்திரத்தனமானது என்கிற அர்த்தத்தில், இவளிடம் பழக்கப்பட்டவள்கள், சொல்லிவிட்டார்கள். இவளுக்கும் இங்கேயாவது, தான் சத்திரிகையாய் இருக்க வேண்டும் என்ற ஆசை. இப்போதோ மீண்டும் சூத்திர புத்திரியாய் செயல்பட தயாரானாள். ஆனால் அவரோ, மேயுற மாட்ட கெடுக்குமாம் நக்குற மாடு… ஒங்க வேலைய பாருங்களேன்…. எவ்வளவு நேரமா லாரியை காக்கவைக்கிறது? என்று இவளை நின்று ஓரங்கட்டிப் பார்த்த கூலிப் பெண்களுக்கு ஆணையிட்டார். இவளிடம் பேசுவதை கவுரக்குறைவாக நினைத்தாரோ அல்லது மலைக்கொம்பன்களால் இருக்கும் கவுரமும் பறிக்கப்படும் என்று பயந்தாரோ…

பார்வதியின் நினைவுகளைப் போல், கால்களும் பின்னின; ஆனாலும், அந்த நினைவுகளை ஆழ்மனக்குழியில் புதைத்துவிட்டு, நடக்கக்கூடிய நிசங்களை, மனதிற்கு முன் வைத்தாள். கைது செய்யப்பட்ட கணவனை, இனத்தான்கள் கைவிட மாட்டார்கள்தான். ‘அதுக்கு’ ஜாமீன் கிடைச்சிடும். அய்யய்யோ. ஜாமீன்ல ‘அது’ வெளிவரும்போது. அடுத்த சாதிக்காரன் ஒரே வெட்டா வெட்டிடப்படாதே. எத்தனையோ இடத்துல இப்படி கோர்ட்டு வாசலிலேயே வெட்டிப் போடுற காலமாச்சே. ‘அதுக்கு’ ஒண்னு கிடக்க ஒண்ணு ஆயிடக்கூடாதே… இசக்கியம்மா… பகை மறக்குறது வரைக்கும் அது ஜெயிலிலேயே கிடக்கட்டும். அப்போ… என் கெதி… ஊருக்குப் போனாலும் அடுத்தச் சாதிக்காரன் உண்டு இல்லன்ன பண்ணிடுவானே. இங்கேயும் இருக்க விடமாட்டான்களே…

‘திக்கற்றோர்க்கு தெய்வமே துணை என்பாங்க. இப்போ அந்த தெய்வமே திக்கற்றுப் போயிட்டோ… இல்லாட்டால் வெள்ளையும் சொள்ளையுமா ஜீப்ல வந்த ஆபிலர் பயலுக, இப்படி ஈரத்துணியைப் போட்டு கழுத்த அறுப்பாங்களா? உள்ளத உள்ளபடி சொன்னால், பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் வரும் சத்துணவு கிடைக்கும் ஆஸ்பத்திரி நிச்சயம். இப்படி லொக்கு லொக்குன்னு இருமுறதுக்கு காரணமான கல்புகையை நீருல கரைக்கிறதுக்கு ஏற்பாடு செய்யப்படும். ஒவ்வொரு தொழிலாளிக்கும் சம்பளம் ரெட்டிப்பாகும். ஞாயிற்றுக் கிழமையிலும், நல்லநாளு, கெட்ட நாளிலும், வேலை செய்யாமலிலேயே கூலி கிடைக்குமுன்ன எப்படி பசப்பிட்டாங்க! நான் சொன்னத எல்லாம் மலை மேஸ்திரிங்கக்கிட்ட அப்படியே சொல்லிட்டாங்களே… அடுத்துக் கெடுத்த அயோக்கியப் பயலுகளா! உங்க ஜீப்ல லாரி மோதுண்டா… என்னைமாதிரி நிக்கதியாய் திரிவிங்கடா… வாய்க்கரிசி வேணுமுன்னா, அவனுங்கக்கிட்ட வாங்கிட்டுப் போகவேண்டியதுதானடா. கூடுதலா பணம் பறிக்க நான்தானடா உங்களுக்குக் கிடைச்சேன்? நீங்க நாசமாப் போக… ஏழையோட சாபம் எப்போதும் பலிக்குண்டா…

பார்வதி, தன்பாட்டுக்குப் பேசியபடியே, கால்களைத் தேய்த்துக் தேய்த்து நடந்தாள். ஊரில் எல்லையற்ற ஆகாயப்பரப்பையும் கண் தாவிய பசுமையான நிலப்பரப்பையும் ஊருறுவிய அவள் கண்கள், இங்கே திசைமறைத்த மலைகளையும் கூனிக்குறுகிப் போன நிலத்தையும் கண்முட்டப் பார்த்து, கால் தட்ட நடந்தாள். சுற்று முற்றிலும், கூட்டம் கூட்டமான கூலிப்பெண்கள்… ஒப்புக்கு ஒன்றிரண்டு ஆண் கூலிகள்… கூடவே பாளம்பாளமான சக்கைக் கற்கள். அவற்றில் சம்மட்டிகள் விழுவது தெரியாமல் எழுந்து, எழுவது தெரியாமல் விழுகின்றன. தாளலமான சத்தங்கள்… குறிதவறாத குத்துக்கள்… சக்கைக் கற்கள் கைக்கு அடக்கமாய் சிதறுகின்றன. இந்த சக்கைகளில், மெத்தப் படித்த பொறியாளர்களைப் போல வடிவுக்கு ஏற்ப கோடுகளோ வரைபடங்களோ போடப்படவில்லை. ஆனாலும், ஆங்காங்கே இயங்கும் கூலிப்பட்டாளம் சாலைக்கான ‘ஒன்றரையாய்’, தளத்துக்கான ‘முக்காலாய்’, கான்கீரிட்டுக்கான ‘காலாய்’, ஒரு அனுமானத்தோடு, சக்கைக் கற்களை வெட்டி வீழ்த்தி சிதறடிக்கின்றனர். கையும் மனமும் ஒன்றுபட்டதால் அந்த அனுமானம் பொய்க்கவில்லை. அத்தனைப் பேருக்கும் வேர்வைக் குளியல். இவர்களது கையில் பெருக்கெடுத்த வேர்வை, சம்மட்டிக் கணையில் பெருக்கெடுத்து, கற்களுக்கு ஈரப்பதம் கொடுக்கிறது. அவ்வப்போது நிமிர்ந்து நெற்றியில் திரண்டும், மூக்கில் வழிந்தோடியும் கண்ணிமைகளில் தேக்கமாகவும் உள்ள வேர்வை நீரை ஒவ்வொருத்தரும், இடது கை ஆள்காட்டி விரலால் அங்குமிங்குமாய் வழித்து விடுகிறார்கள்.

பார்வதி, ஒரு பள்ளப்பகுதியில், தோளுக்குக் கீழே அரையடி நீளத்தில் தொங்கிய கைச்சதை அங்குமிங்குமாய் ஆட, வலதுகையால், ஊராட்சிப் பம்பின் இரும்புச் சடையை மேலும் கீழுமாய் ஆட்டுகிறவரை, தன் சுமை மறந்தும் – மறுத்தும் பரிதாபமாய் பார்க்கிறாள். ஒத்தைக்கையாலேயே கல் உடைக்கிறவர். அந்த பாவப்பட்ட மனிதரை பார்த்தபடியே பின்பக்ககமாய் நடக்கிறாள்; நடந்து நடந்து, ஒரு பூவரசு மரத்தின் பக்கமாய் வருகிறாள். ஒரு பெண் கூட்டம், கல்லும், கைப்பிடி சம்மட்டியுமாய் இயங்குகிறது. இவள் வேலை பார்த்த இடம்…. இவளோடு தாயாய் பிள்ளையாய் பழகிய பெண்கூட்டம். அவர்களை பார்த்தபடியே மெளனமாய் நிற்கிறாள். அவர்கள் கையிலும் காலிலும் ரத்தத்துளிகள்… ஒரு சம்மட்டித் திசைமாறி, ஒருத்தியின் பெருவிரலை ரத்த முலாமாக்குகிறது. கீழ்நோக்கிப் பாயும் சம்மட்டிகளை கற்கள் மேல்நோக்கியே திருப்புகின்றன. சரணடைய மறுக்கின்றன. இந்தப் போரில் சக்கைக்கற்களில் இருந்து தெறிக்கும் துக்கடா கற்களும் துகள்களும் மேலெழும்பி ஒருத்தியின் குனித்த முகத்தில் உதட்டை வீங்க வைக்கிறது. இன்னொருத்தியின் மூக்கிற்குள் நுழைந்து மூச்சைப் தடுக்கிறது. எல்லாப் பெண்களும் சேர்ந்தாற்போல் நிமிர்ந்து முதுகுகளை பின்பக்கமாக வளைத்துவிட்டு, பூவரசுத்துரில் சாய்ந்து கிடக்கும் கையுடைப்பு மேஸ்திரியைப் பார்க்கிறார்கள். ஒருத்தி. எல்லோரையும் கையமர்த்திவிட்டு பேசுகிறாள்.

“இது சொரிக்கல்லு மேஸ்திரி. சில்லி சில்லியாய் தெறிக்குது. இதை ஒடைச்சா ஒடம்பே ரத்தக்காடாயிடும். மாவுக்கல்ல கொண்டுவாங்க”.

அந்த மரத்தின் வேர் போல் கிடந்த, கையுடப்பு மேஸ்திரி எக்காளமாய் சிரித்தபடியே சொரிக்கல் சூட்சமத்தைச் சொல்கிறார்.

“உண்ட இடத்துக்கு ரெண்டகம் செய்தவளோட உறவாடுற உங்களுங்கு. இந்த மாதிரி சொரிக்கல்லத்தான் கொடுக்கணுமுன்னு உத்தரவு. வேணுமுன்னா வேலை செய்யுங்க… வேண்டாட்டிப் நடையக்கட்டுங்க… இந்த பார்வதியே உங்களுக்கு கூட்டுறவு சங்கத்துல வேலை வாங்கிக் கொடுப்பா… ஏம்மா! இன்னும்மா… நீ இடத்தைக் காலி பண்ணல? நாங்க சொன்னத லேசா எடுத்துக்காதம்மா…. இல்லன்னா போலீஸ் வைச்சு…”

பார்வதி, அவர் முடிக்காத வார்த்தையை அர்த்தப்படுத்துகிறாள். யாராலும் கண்டுபிடிக்க முடியாத இந்த இடத்திற்கு போலீஸ்காரர்கள் வந்து ‘அதை’ இழுத்துக் கொண்டு போனதில் ஒரு சூது இருப்பது, இப்போது அவளுக்கு புரிகிறது. இனத்தான்கள் என்று நம்பி ஊரில் நடந்த சங்கதியை ஒரு சிலரிடம் ரகசியமாய் சொன்னது எவ்வளவு தப்பாப் போயிற்று! இல்லன்னா காகங்கூட நுழையமுடியாத இந்தக் காட்டுக்குள்ள திருநெல்வேலி போலீஸ் நுழையமுடியுமா…

பார்வதி, அவரை கணமாகப் பார்க்கிறாள். சொரிகல் பெண்களையும், மாவுக்கல், கருங்கல் பெண்களையும் நேருக்குநேராய் பார்க்கிறாள். கோபம்கோபமாய் முறைக்கிறாள். இவள்களின் தூண்டுதலால்தான், அப்படி உளறிக் கொட்டியதாக சொல்லிவிடலாமா என்றும் யோசித்தாள். பிறகு இவர்களாவது நல்லா இருக்கட்டும் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே மறுபக்கமாய் மெல்ல நடக்கிறாள். கல்லுடைப்புப் பெண்களோ சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கிறார்கள். காக்காய்ப் பொன் நிறத்தில் வசிடெடுத்து வாரிச்சுருட்டிய கொண்டையோடு கவ்விப்பிடிக்கும் கண்களைக் கொண்ட அவள், இப்போது பறட்டைத் தலையாய், பாழ்குழி கண்களாய் நிர்க்கதி பார்வையாய் பார்ப்பதில், அந்தக் கூலிப் பெண்களுக்கு குற்ற உணர்வு பெருக்கெடுக்கிறது. ஆத்திரமும் அழுகையும் ஏற்படுகின்றன. அதை, கல்லில் கடினமாகவும் வேர்வை சிந்தலாகவும் வெளிப்படுத்துகிறார்கள்.

இதற்குள், எல்லா திசைகளில் இருந்தும் ஆளுக்காள் ஓடுகிறார்கள். நான்கைந்து பெண்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்தபடியே, ஒரு யந்திர மேட்டில் இருந்து குதிக்கிறார்கள். இங்கே நின்றவர்களும் கையுடைப்பு மேஸ்திரியிடம் சொல்லாமல் கொள்ளாமலேயே ஓடுகிறார்கள். எல்லா இடங்களில் இருந்தும், துளித்துளியாய் வந்தவர்கள். ஆறாய்ப் பெருக்கெடுத்து, அந்த முதலை வாய் பாதாளக்குகைக்குள் அருவியாய் பாய்கிறார்கள். அந்தப் பள்ளத்தாக்கே ஓலமிடுவதுபோல் தோன்றுகிறது. உரத்துக் கத்துவதுபோல் கேட்கிறது. பார்வதி மெல்லத்தான் நடந்தாள். ஆனாலும், கீழே எழுந்த கூக்குரல் மேலோங்க மேலோங்க, அவள், இதுவரை ஓடாத ஓட்டமாய் ஓடினாள். ஒடி ஒடி அந்தப் கல்படுகைக்குள் இறங்கி, கூட்டத்துள் முண்டியடித்து அதன் முகப்பிற்கு வந்துவிட்டாள். அங்கே கண் காட்சியை பார்த்துவிட்டு கண்களை மூடுவதும் திறப்பதுமாக இருந்தாள்.

நடுத்தரவயது பெண்ணொருத்தியின் காலில் விழுந்த பாறைக்கல்லை பத்து பதினைந்து பேர், எப்பூடியோ மேலே உருட்டி அதற்கு அணைபோட்டு நிற்கிறார்கள். அந்தப் பெண்ணின் வலது கால் சதைக்குழம்பாய் சிதைந்து கிடக்கிறது. செத்தாளோ… இருக்காளே… ஒரு முனங்கல் கூட இல்லை. அவள் கணவன், ஒரு கல்லை எடுத்து தனது தலையிலேயே குத்திக் கொள்கிறார். ஆரம்பத்தில் அவரை யாரும் பார்க்காததால் அவரும் தலைபிளந்து விழுகிறார். நான்கைந்து பெண்கள் ஒப்பாரி போடுகிறார்கள். அம்மாவுக்கு ஒன்றம் அப்பாவுக்கு ஒன்றுமாய் மாறி மாறி தலையில் அடித்துக் கொள்கிறார்கள். வாயில் குத்திக் கொள்கிறார்கள். கூட்டம், ஒட்டு மொத்தமாய் அய்யய்யோ என்று அரற்றுகிறயது. விசாரித்துப் பார்த்தால், வெடி மேஸ்திரி, ஒருவர் அந்தப் பெண்ணை சிதறிக் கிடக்கும் சின்னதும் பெரியதுமான கற்களை ஒன்று சேர்க்கும்படி சொல்லி இருக்கிறார். இவளும், வெடி வைப்பால், உருளும் நிலையில் இருந்த ஒரு பாறைக் கல்லுக்கு அணைகொடுத்த சின்னஞ்சிறு கற்களை பிடுங்கி இருக்கிறாள். இதனால் பாறைக்கல் உருண்டது. இவள் காலே அந்தக் கல்லுக்கு அணைப்பானது.

சேதிகேட்டு, ஏழெட்டு மலைமேஸ்திரிகள் நிதானமாய் ஆடியசைந்து வந்தார்கள். இப்படி நடப்பது சகஜம் என்பது போன்ற பார்வை, அதே சமயம், பார்வதியைப் பார்த்ததும் ஒரு முன்னெச்சரிக்கை; இந்த மாதிரி சந்தர்ப்பங்களில், முன்பு எதையுமே பேசாத அவர்கள், இப்போது உபதேசம் செய்ய நினைத்தார்கள். ‘ஒருவருக்கொருவர் காதைக் கடித்துக் கொண்டார்கள். பின்னர் இவர்களில் ஒரு பெரிய கொம்பன் கூட்டத்தை இருகையாலும் ஆற்றுப்படுத்தியபடியே பேசினார். அவர் பேசப்பேச, அவரது கைக்கடிகாரம் சூரியக்கற்றைகளை ஒளிபரப்பியது. கழுத்துச் செயின் டாலடித்தது. பார்த்தாலே பயம் கொடுக்கும் முகத்தை பயமுறுத்துவதுபோல் வைத்துக்கொண்டு எதேச்சையாக பேசுவதுபோல் பேசினார்.

‘நல்ல வேளை… தலையோட போகாமல் காலோட போச்சுது. இந்தாப்பா… லாரி வந்துட்டுது… இவங்க ரெண்டு பேரையும் தூக்கிட்டுப் போங்க அப்புறம்… எல்லாரும் ஒரு விசயத்த தெரிஞ்சுக்கணும். இந்த பூமியில் நாம அண்ணன் தம்பியாய் பழகுறோம். ஏதோ போதாத காலம் இப்படி ஆயிட்டுது. ஆனாலும் நிச்சயம் ஒரு தொகையை போட்டுக் கொடுக்கச் சொல்லுறோம். இங்கே யாரவாது வெளியாளு வந்தால், ஒருத்தரும் மூச்சு விடக்கூடாது. அப்படிவிட்டால் மறு நிமிஷமே நாங்க மோப்பம் பிடிச்சுடுவோம். அப்புறம் எங்கமேல வருத்தப்படக்கூடாது. உங்களுக்கு தெரிஞ்சத நீங்க செய்தால், எங்களுக்கு தெரிஞ்சத நாங்க செய்வோம். செய்திருக்கோம். இதுல ஒளிவு மறைவு வேண்டியதில்ல. ஏண்டா பெருமாள் மாடு மாதிரி பார்க்குற? சட்டையில ரத்தக்கறை பட்டா படட்டுமே. நீயும் அந்த அம்மாவுக்கு ஒரு கைகுடு, பழையபடியும் சொல்றேன். இப்படி நடக்கிறது இங்க சகஜம். இது வெளில தெரிஞ்சால் மாமூல் ரேட்டு கூடுமே தவிர மத்தபடி எதுவும் நடக்காது’.

விம்மி வெடிப்பது போல் நின்ற ஒரு சொரி கல்காரி, கொம்பன் மேஸ்திரியை நிமிர்ந்து பார்க்கிறாள். ஆண்டாண்டு காலமாக தொலைந்து போன முகத்தை கண்டு பிடித்தவள் போல், இதுவரை கத்தாத கத்தாய் கத்தினாள். கொம்பன் மேஸ்திரியின் சத்தத்தால் மெளனப்பட்ட கூட்டம் சொரிகல் காரி கத்தி முடித்துவிட்டு பேசியதை உற்றுக் கேட்டது.

“எதுவும் நடக்காதா ஏன் நடக்காது? இந்த பார்வதி கூட்டுறவு பயலுகக்கிட்டயோ, தொழிலாளர் நல பயல்கள் கிட்டயோ சொன்னது மாதிரி, ஆயிரம் பேரை மெம்பரா கொண்ட நம்ம கூட்டுறவுச் சங்கத்துக்கு இந்த மலை சொந்தம். இந்த மலையை எல்லாரும் உழைச்சு அனுபவிக்கனும் என்கிறது தான் சட்டம்”.

ஆளுக்கு ஆள் பேசப் போனார்கள், சந்தை இரைச்சல், இதற்குள் ஒரு நடுத்தர உழைப்பாளி அனைவரையும் கை அமர்த்தி விட்டு சொரிகல் காரி விட்ட இடத்தை தொடர்ந்தார்”

“கிடைக்கிற லாபத்த சமமா பங்கு போடணும். ஆனால், ஆயிரம் பேர்ல. உங்கள மாதிரி இருபது பேரு, ஒண்ணாச் சேர்ந்து இந்த மலையை பங்கு போட்டு சம்பாதிக்கீங்க… ஒங்கள மாதிரி மெம்பரான எங்களுக்கு கூலிதான் கொடுக்கிங்க…”

அந்த கூட்டுறவு இல்லாத சங்கத்தில் பகுதி கிளார்க்காக இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட ஒரு இளைஞன்… உள்ளதைச் சொன்னால் உயிரோடு கொளுத்தி விடுவார்கள் என்று பயந்து கிடந்தவன். இப்போது கொம்பன்களின் கணக்கை தீர்ப்பது போல் கணக்கைச் சொன்னான்.

“முந்நூறு ரூபாய் லோடுல, இவங்களுக்கு கிடைக்கிறது எழுபது ரூபாய்தான். நீங்க உழைக்காமலே திங்கிறது இருநூற்று முப்பது ரூபாய்… இலைமறைவு காய்மறைவாய், இதை தட்டிக் கேக்கிறவங்கள, போலீஸ்ல ஒப்படைக்கிறீங்க. இல்லன்னா… கைகால முறிக்கிறீக… இந்த அப்பாவிப் பொண்ணோட ஆம்படையான், வீட்டுக்காரிக்கு வக்கலாத்து வாங்குனதுக்காக, அவன் தஞ்சமுன்னு நினைச்சுச் சொன்ன சேதிய, போலீசுக்குச் சொல்லி விலங்குபோட வைச்சிங்க… ஏய்… ராமய்யா… இங்க வாய்யா…”

இதே மாதிரி சந்தர்ப்பத்தில் ஒரு கையை இழந்த ராமய்யா கூட்டத்திற்கு முன்னால் வந்தார். அவர் தோளில் கை போட்ட படியே ஒரு மூதாட்டி வேட்டைக்குபோகும் பெண் சிங்கமாய் கர்ஜித்தாள். வழக்கமாய் நடுங்கும் அவளது குரல், இப்போது நடுங்க வைப்பதுபோல் ஒலித்தது.

“இவன் வேலையும் பறிபோச்சு… கல்யாணமும் நின்னுபோச்சு… இப்படி எத்தனையோ பேரு… இவங்களுக்கும் ஏதோ செய்யப் போறதாத்தான் சொன்னீங்க.. என்ன செய்து கிழிச்சிங்க?

அந்த மூதாட்டியின் குரல் கட்டிப் போனதால் இன்னொருத்தி தொடர்ந்தாள்.

“பார்வதி அதிகாரி பயலுககிட்ட சொன்னவள்தான்… அவளை அப்படி சொல்ல வச்சது நாங்கதான். இந்த மலைக்கு நாங்க கூலி ஆட்கள் இல்ல. சொந்தக்காரிங்க… சங்கத்துக்கு சந்தா கட்டுற மெம்பருங்க… இப்பவே ரெண்டுல ஒண்னு தெரிஞ்சாகனும்”

ஆங்காங்கே சிதறி நின்ற கூட்டம், ஒருவரோடு ஒருவர் நெருங்கி கும்பலாகிறது. அத்தனைக் கண்களிலும் சின்னச்சின்ன பொறிகள்… அவை ஒட்டுமொத்தமாய் மனிதத்தீயாகி, அந்த மலைக்காடு முழுவதும் வியாபிக்கிறது. கரிக்கட்டையாய் போன பார்வதியும், மீண்டும் ஒரு சிறு பொறியாகி, அந்த மனிதத்தீயில் சங்கமிக்கிறாள்.

– அவள் விகடன் – நவம்பர், 1999

– சிக்கிமுக்கிக் கற்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதல் பதிப்பு: டிசம்பர் 1999, ஏகலைவன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *