இருவரும் ஒரே தந்தையிடத்தில் ஜனித்த புத்திரர்கள். ஆனால் அண்ணன் தம்பி இரண்டு பேருக்கும் இடையில் அமிர்தத் துக்கும் விஷத்துக்கும் இடையில் உள்ள வித்தியாசம் இருந்தது.
வெள்ளை மனம் என்று சொல்லு வார்களே, அப்படி இருந்தது முகால னுடைய உள்ளம். சாந்தமும் தயையும் அவனுடன் கூடப் பிறந்த குணங்கள். மன்னுயிரைத் தன்னுயிர் போல மதித்துப் பேணும் கருணை வள்ளல் அவன். அவனுடைய கோமள ஹிருதயத்தில் பொறாமை, துவேஷம் முதலிய துர்க் குணங்களுக்கு இடம் இல்லை. ஆனால் அவனுடைய தம்பி காசப்பன் அவனுக்கு முற்றும் மாறானவன். அண்ணனிடத்தில் இருக்கும் ஒவ்வொரு நல்ல அம்சத்துக்கும் நேர்மாறான கெட்ட அம்சம் தம்பியிடத்தில் சரிவரப் பொருந்தியிருந்தது.
தந்தை தத்துசேனனுக்கும் இதன் மர்மம் விளங்கவில்லை. முகாலன் பட்ட மகிஷியின் வயிற்றில் பிறந்தவன் என்பதும், காசப்பன் இரண்டாம் ராணியின் வயிற்றில் பிறந்தவன் என்பதும் உண்மையே. ஆனால் அதற்காக இவ்வளவு வித்தியாசமா!
காசப்பனுடைய துர்க்குணங்களை முளையிலேயே களைந்து விடவேண்டுமென்று தந்தையும் எவ்வளவோ பாடுபட்டான். போதனைகள் சாதனைகள் எவையும் பயனளிக்கவில்லை. பெரிய தவசீலரும் அறிவாளியுமான மகா விஹாரைப் பிரதம பிக்கு தன் மற்ற அலுவல்களைக்கூடப் புறக்கணித்துவிட்டுப் புத்தபெருமான் அருளிச் செய்த அறவாசகங்களையும், அவருடைய முற்பிறவிகளின் லீலைகளைக் குறிக்கும் ஜாதகக் கதைகளையும் பிழிந்து எடுத்துக் காசப்பனுக்கென்றே பிரத்தியேகமாகச் செய்த போதனைகள் எத்தனை! எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குபோல் ஆயின. தந்தையின் துயரம் மிகுந்தது. காசப்பனை முகாலனுடன் சேர்ந்து பழகவிடுவதே அபாயமாகப்பட்டது; பன்றியுடன் சேர்ந்த கன்றின் கதையாகிவிட்டால்?
பிள்ளைகள் இல்லாமல் இருந்துவிடலாம்; அதனால் பாதகம் இல்லை; மலடன் என்று மற்றவர்கள் பழிப்பார்கள். அவ்வளவு தான். ஆனால் ஒரு துஷ்டப் பிள்ளை பெறுவது… ஐயையோ! என்ன தீவினையின் விளைவோ!
தத்துசேனனைப் போன்ற ஒரு தர்ம சொரூபிக்கா இப்படிப் பட்ட துஷ்டப் பிள்ளை பிறக்க வேண்டும்! அவனுடைய மனம் உழைந்தது. குலம் கோத்திரம் இல்லாத பாண்டி நாட்டு வீணர்கள் சிலரின் அக்கிரம ஆட்சிக்கு உட்பட்டுக் கிடந்த இலங்கையை, அருஞ்சமர் புரிந்து மீண்டும் ஒரு சுதந்திர நாடாக்கி, அது மேன்மை உறுவதற்கு வேண்டிய முயற்சிகள் எல்லாம் குறைவறச் செய்தவனல்லவா தத்துசேனன்? இலங்காதேவியின் பணியே அவனுடைய வாழ்வின் முதற்பணி அன்றோ?
தமிழர்களின் பாராமுகத்தினால் சோபை குன்றி மங்கிப் போயிருந்த புத்த சமயத்தை மறுபடி தளிர்த்தோங்கச் செய்வதற்கு அவன் எவ்வளவு பாடுபட்டான்! அவன் கட்டிய விஹாரை களுக்கும் தூபிகளுக்கும், வடஇந்தியாவிலிருந்தும் பர்மாவிலிருந்தும் வருவித்த பிக்குகளைக் கொண்டு அவன் நிறுவிய சங்கங்களுக்கும் ஒரு கணக்கு உண்டா ?
அவை ஒருபுறம் இருக்கட்டும். விவசாயியின் ஜீவ நாடியே நாட்டின் ஜீவநாடி என்ற நுண்ணிய உண்மையை உணர்ந்து, விவசாயம் பரவி ஓங்குவதற்காக தத்துசேனன் காலவாவி முதலிய பல ஏரிகளையும் கால்வாய்களையும் நிறுவினான். இந்த ஒரு சேவைக்காக இலங்கை மக்கள் என்றென்றும் அவனுக்குக் கடமைப்பட்டவர்கள். அவனுடைய கீர்த்தி இலங்கை மக்களின் உள்ளங்களில் என்றும் அழியாது நின்று நிலவுதற்குக் காலவாவி என்ற அந்த ஒரு சாதனமே போதுமே!
இவ்வளவு தொண்டுகளெல்லாம் இயற்றியதன் பலன், இந்தத் துஷ்டப்பிள்ளை! ‘தர்மம்! அதெல்லாம் வெறும் பசப்பு வார்த்தை!’ என்றுகூட அவனுடைய மனம் சலிப்படைந்தது.
முகாலன், காசப்பன் ஆகிய இருவரும் வளர்ந்து வாலிய தசையை அடைந்தனர். தத்துவசேனனுக்கு முதுமை வந்து எய்தியது. இனி முகாலனுக்கு முடி சூட்டிவிட்டுத் தான் ராஜாங்க அலுவல் களினின்றும் விலகிக் கவலையில்லாமல் மரணத்தை எதிர்நோக்கி இருக்கலாம் என்ற நினைப்பு அவனுக்கு.
இந்த ஏற்பாடு காசப்பனுக்குப் பிடிக்கவில்லை. அவன் நெஞ்சில் பொறாமைக் கனல் மூண்டு எரிந்தது. முகாலன் ஏறுகிற சிம்மாசனத்தில் தான் ஏறினால் ஆகாதோ என்று அவன் வெம்பி னான். அதோடு முகாலனுக்குக் கொடுப்பதற்காகத் தந்தை எங்கோ ஒரு மறைவிடத்தில் திரவியம் சேமித்து வத்ைதிருக்கிறான் என்றும் யாரோ அவனுக்குத் தகவல் தெரிவித்து விட்டார்கள்.
ஆகவே காசப்பன் தன் மைத்துனனாகிய சேனாதிபதியுடன் சேர்ந்து இவ்விஷயங்களைக் குறித்துச் சதியாலோசனை செய்தான். பண்டை இராச்சியங்களில் அரசனுடைய பலம் முழுவதும் சேனாதிபதியின் கையிலேயே அடங்கியிருந்தது. சேனாதிபதி பகைத்தால், அரசன் கதி அதோ கதிதான்.
சதியாலோசனையின் விளைவாக ஒருநாள் காசப்பன் சூழ்ச்சி செய்து தன் கிழத்தந்தையைப் பிடித்துக் காராக்கிருகத்தில் அடைத்துவிட்டான். தத்துசேனன் இதை எதிர்பார்த்திராத படியால் அவனால் இதைத் தடுப்பதற்கு ஒன்றும் செய்யமுடிய வில்லை. அதோடு சேனாதிபதியானவன் காசப்பனின் சார்பாக இருந்தான்!
முகாலனும் சக்தியற்றவனாகிவிட்டான். தந்தையை மீட்பதற்கு அவனுக்கு ஒரு வழியும் தோன்றவில்லை. ஒருவன் தனியாக நின்று என்ன செய்யமுடியும்? ஆகவே, ஒரு படை திரட்டிக் காசப்பனுடைய துராக்கிருதத்துக்கு ஓர் எல்லை தேடுவதற்காக அவன் தென்னிந்தியாவுக்குச் சென்றான்.
அரியிருந்த ஆசனத்தில் நரியிருந்தது என்று ஒரு பழமொழி சொல்வார்களே, அப்படி இருந்தது காசப்பனுடைய ராஜ்யம். அவன் செய்த கொடுமைகள் அளவிறந்தன. புதுப்புது விதமான வரிகள், தர்மத்திற்கு மாறான தீர்ப்புகள், அரசசேவகர்களின் வழிப்பறி, பலவந்தம் முதலிய அநியாயங்கள். இவற்றால் “அப்பப்பா, தமிழ் ராஜ்யம் எவ்வளவோ மேலானது!” என்று சிங்கள மக்கள் நினைக்கும்படியான நிலைமை ஏற்பட்டுவிட்டது.
காசப்பன், காராக்கிருகத்தில் அடைபட்டுக் கிடந்த தத்துவ சேனனுக்கு ஓயாத தொந்தரவு கொடுத்துக்கொண்டு வந்தான். அந்தத் திரவியத்தைப் பற்றிய நினைப்பு இன்னும் அவன் மனத்தை விட்டு அகலவில்லை. அது மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தை அறிந்துவிடுவதற்காகத் தத்துசேனனுக்கு அவன் இழைத்த துன்பங்கள் கணக்கற்றவை.
ஒருநாள் தானே தந்தையைக் கேட்டு அதற்கு ஒரு முடிவு தேடுவது என்று நினைத்துக் காசப்பன் காராக்கிருகத்திற்குட் பிரவேசித்தான். அத்தருணத்தில் தத்துசேனன் சுவரில் உள்ள ஒரு துவாரத்தின் வழியாக ஏக்கம் நிறைந்த கண்களோடு வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது உடல் மெலிவுற்று, எலும்புகள் அங்கங்கே வெளிக்காட்டிக்கொண்டிருந்தன. கதவு திறந்த அரவத்தைக் கேட்டதும் தன் கண்களை மெதுவாக வாசற்பக்கம் திருப்பி அங்கே புலிபோல மூர்க்கத்தோடு நின்று கொண்டிருந்த காசப்பனைப் பார்த்தான்.
“இதுதான் நான் உனக்குக் கடைசியாகக் கொடுக்கும் தருணம். இப்பொழுதாவது அந்தத் திரவியத்தை ஒளித்து வைத்தி ருக்கும் இடத்தைக் கூறிவிடு. இல்லாவிட்டால்…” என்று ஒரு குரூர அர்த்தத்தோடு நிறுத்தினான் காசப்பன்.
“திரவியம் இருந்தாலல்லவோ கூறமுடியும்? அப்பா, என்னை ஏன் இப்படிச் சித்திரவதை செய்கிறாய்? என் ராஜ்யத்தைக் கவர்ந்தாய்; என் சுதந்திரத்தைக் கவர்ந்தாய். அவை எல்லாம் போதாவா? என் உயிரையும்..”
“நீ சொல்வதை நான் நம்பவில்லை என்று எத்தனை தரம் படித்துப் படித்துச் சொல்லியாகிவிட்டது! ம்…ம்…. வீணாக ஏன் சாவைத் தேடிக்கொள்கிறாய்?”
மூர்க்கனும் முதலையும் பிடித்த பிடியை விடா. வாதாடு வதால் என்ன பயன்? தத்துசேனனுடைய மனத்தில் தான் சிறைபுகுந்த நாள்முதல் ஒரு பெரிய ஆசை இருந்து வந்தது. அந்த ஆசையைப் பூர்த்தி செய்வதற்கு ஏற்ற தருணம் வாய்த்திருக்கிறது. அதை நழுவவிடக்கூடாது என்று அவன் நினைத்தான்.
“சரி காசப்பா, அந்த இடத்தைத் தெரிவிக்கிறேன். ஆனால் அதற்கு முன் நான் செய்யவேண்டிய காரியம் ஒன்று இருக்கிறது.”
“என்ன அது?”
“காலவாவியில் நான் ஒரு முறை – கடைசிமுறை நீராட வேண்டும். அவ்வளவுதான். அதன்பிறகு திரவியம் இருக்கும் இடத்தைக் கூறுகிறேன்.”
வேல் தாங்கிய காவலர் இருமருங்கும் வரத் தத்துசேனன் காலவாவிக் கரையை அடைந்தான். அதன் நீர் ஸ்படிகம் போலத் தெளிந்து கண்ணுக்கெட்டாத தூரம் வரை பரந்து கிடந்தது. அதைக் கண்டதும் மன்னனுடைய கண்களில் நீர் நிரம்பியது. அவனுடைய வாழ்வின் பெரிய கைங்கரியமல்லவா அது! தன் பிள்ளே நாளொருமேனியும், பொழுதொருவண்ணமும் வளர்வதைப் பார்த்து மகிழும் தந்தைபோல, முன்னெல்லாம் அது நாளுக்கு நாள் ஆழந்து அகன்று வளர்வதைக் கண்டு பூரிப்படைந்து வந்தனல்லவா!
தத்துசேனன் தன் மனம் கொண்டமட்டும் அந்த வாவியில் மூழ்கி மூழ்கி ஸ்நானஞ் செய்தான். அதைவிட்டு வெளியேற அவனுக்கு மனம் வரவில்லை . இறப்பதற்கு அவ்வளவு அவசரமா என்ன ?
கரையோரத்தில் நின்றவாறு காசப்பன் தந்தையைத் துரிதப் படுத்திக் கொண்டிருந்தான். ஆனால் தத்துசேனன் வெளியேறுவ தாகக் காணவில்லை. காசப்பனுக்கு ஆத்திரம் வந்தது. தந்தையை வெளியே இழுத்துவரும்படி காவலர்களை ஏவினான்.
தத்துசேனன் அஞ்சவில்லை. இன்னும் கொஞ்ச நேரத்தில் சாவது நிச்சயம். அவன் கரையில் நிற்கும் காசப்பனை அலக்ஷியமாகப் பார்த்தான்.
“அடே பாவி, உனக்குத் திரவியமா வேண்டும்? அற்பப் பதரே! என் திரவியம் எது என்பதை நீ இன்னும் அறிந்து கொள்ள வில்லையா? இதுதான் என்னுடைய திரவியம்!” என்று கூறி, தத்துசேனன் தன் இரண்டு கைகளாலும் காலவாவியின் தெளிந்த ஜலத்தை அள்ளிக் காசப்பனை நோக்கி வீசினான். “இதுதான் என் திரவியம், சம்பத்து, வாழ்வு எல்லாம்!” என்று கூவினான்.
காசப்பனுடைய கண்கள் நெருப்பைக் கக்கின. தான் செய்வது என்ன என்பதே அவனுக்குத் தெரியவில்லை. அவ்வளவு ரௌத்திரம்!
“அடம்பிடித்த கிழவனைக் கொண்டுபோய் உயிரோடு குழி வெட்டிப் புதையுங்கள்!” என்று தன் காவலர்களுக்கு உத்தர விட்டான்.
அவனுடைய கட்டளை ஓர் அக்ஷரம் பிசகாமல் நிறை வேற்றப்பட்டது.
தான் செய்த பாபத்தின் பலனைத் தானே அநுபவித்துத் தீர வேண்டும். இந்த நியதிதான் பிறவிச் சக்கரத்தைக் கொண்டு இயக்கும் சக்தி. அதுவும் பஞ்சமாபாதகங்களுள் தலையாய கொலை என்றால்! அப்பப்பா! அதன் விளைவுகளை எப்படிக் கூறமுடியும்?
காசப்பனுடைய வாழ்க்கை கோரமான நரகம் போல் ஆகிவிட்டது. அவன் சுய அறிவோடிருந்த ஒவ்வொரு கணமும், நரகமுள் கொண்டு துளைக்கும் ஒவ்வொரு வேதனை மாதிரி இருந்தது. அவனுடைய மனம் கொதிக்கும் எண்ணெய்க் கொப்பறை போல் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அவனுடைய மனச்சாட்சியே பயங்கரமான உருவங்கொண்டு அவனைச் சித்திரவதை செய்து கொண்டிருந்தது.
அதோடு பிரஜைகளின் வஞ்சத்தின் பயம் வேறொருபுறம். தர்மமே ஒரு வடிவு கொண்டது போன்ற தத்துசேன மன்னனை அநியாயமாகக் கொலை செய்த பாபியா தங்களை ஆள்வது என்ற எண்ணம் உதித்தது மக்களுக்கு. அதன் காரணமாக அநுராத புரத்திலும் மற்றும் பல இடங்களிலும் கலகங்களும் சச்சரவுகளும் தலையெடுத்தன.
இனி, இந்தியாவுக்குப் படை திரட்டுவதற்காகச் சென்ற முகாலன் எந்தக் கணத்தில் திரும்பி வருவான் என்று கூறமுடி யாமல் இருந்தது. அவன் மட்டும் வந்துவிட்டால் காசப்பனின் கதி அதோகதிதான். முகாலன் கொண்டு வரும் படையின் பலம் ஒருபுறமிருக்க, பிரஜைகள் எல்லோரும் அவன் பக்கம் சேர்ந்து விடுவார்கள்.
இந்த விஷயங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து காசப்பனுடைய மனத்தில் பெருந் திகிலை உண்டுபண்ணின. அநுராதபுரத்தில் வாசம் செய்வதே அபாயமெனப்பட்டது. ஆனால் அவன் இலங்கையின் அரசன் ஆயிற்றே! ராஜதானியைப் புறக்கணித்து விட்டு வேறு எங்கே போவது?
ஆம்; ஒரே ஒருவழிதான் இருக்கிறது. ராஜதானியை அநுராதபுரத்திலிருந்து வேறெங்காவது மாற்றிவிட வேண்டியது தான். கடந்த எண்ணூறு ஆண்டுகளுக்கு மேலாக அநுராதபுரமே இலங்கையின் ராஜதானியாக இருந்திருக்கிறது. புத்தமதம் வளர்ந்ததும், இலங்கை ராஜரிகம் ஓங்கியதும் அங்கேதான். இலங்கையின் பண்டை மேன்மையை உலகோர்க்கு எடுத்துக் காட்டும் விஹாரைகள், தூபிகள், ஆலயங்கள், நந்தவனங்கள், குளங்கள் முதலிய ஞாபகச் சின்னங்களெல்லாம் அங்கேதான் இருக்கின்றன. இவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டுப் போக வேண்டியிருப்பது காசப்பனுக்குச் சிறிது மனவேதனையைக் கொடுத்தது. ஆனால் அவனுடைய உயிரைவிடப் பெரியனவா இவையெல்லாம்?
ஆகவே. அவன் தன் ராஜதானியைச் சிகிரியா என்னும் சிங்ககிரி மலைக்கு மாற்றினான். கீழே நின்று பார்த்தால் அந்த மலை ஒரே செங்குத்தாகத் தெரியும். ஒரு பெரிய சமவெளியில் அந்த மலை தனியே ஒய்யாரமாகத் தலையெடுத்து நிற்கின்றது. அந்த மலையின் உச்சியில் காசப்பன் தன் மாளிகையை, ஆலயம், மதில்கள் முதலியவற்றை ஸ்தாபித்தான்.
அந்த மலையைப் பார்ப்பவர்களுக்கு, அதன்மேல் கோட்டை கட்டிய காசப்பனுடைய ஒன்றுக்கும் கலங்காத நெஞ்சத்தின் தன்மை தெரியவரும். ஒருவேளை அது பயத்தையே அடிப்படை யாகக் கொண்ட தைரியமாக இருக்கலாம். அந்த மலையின் உச்சியை அடைவதற்குக் காசப்பன் ஒரு படிக்கட்டு அமைத்தான். அதன் அமைப்பைக் கண்டு இக்காலத்திய கட்டிட நிபுணர்கள் கூட ஆச்சரியம் அடைகின்றனர்.
அந்தப் படிக்கட்டு மலை உச்சியை அடையும் இடத்தில் பெரிய சிங்கச் சிலை ஒன்றை அமைத்தான். அதனால்தான் அந்த மலைக்குச் சிங்ககிரி, சிகிரியா என்ற இரு பெயர்கள் உண்டாயின. அந்தச் சிங்கத்தின் முன்னங்கால்களுக்கூடாகச் சென்றால் கோட் டையின் உட்புறத்தை அடையலாம். அந்தச் சிங்கத்தின் பாதங் களை இப்பொழுதும் காணலாம்.
மலையின் உச்சியிலே, தன் மாளிகையையும் பூஞ்சோலை களையும் ஜலக்கிரீடை செய்யும் இடங்களையும் அமைத்தான். இவ்வாறு பல தற்காப்பு முறைகளெல்லாம் செய்து முடித்த பின் காசப்பனின் மனம் சிறிது சமாதானம் அடைந்தது. வெளிப் பயம் ஒருவாறு ஓய்ந்துவிட்டாலும், அவனுடைய அந்தரங்க உள்ளம் நீறுபூத்த நெருப்பைப் போல உள்ளே கனன்று கொண்டிருந்தது.
எத்தனையோ நற்கருமங்கள் எல்லாம் செய்து, தன் அந்தராத்மாவில் எரியும் கழிவிரக்கம் என்னும் ஜுவாலையைத் தணித்துக்கொள்ள முயன்றான்.
அவனுடைய உள்ளம் அழகுணர்ச்சி வயப்பட்டது. நீண்டு படர்ந்திருக்கும் பசும் புற்றரைகளிலும் தொலைவில் ஒய்யார மாகத் தலைதூக்கி நிற்கும் மலைத்தொடர்களிலும், சலசலவென்று பண்மிழற்றிப் பாயும் வெள்ளி அருவிகளிலும், மெய்ம்மறந்து மோகனப் பாட்டிசைக்கும் பட்சி ஜாலங்களிலும் அவன் மனம் சஞ்சரித்து மகிழ்வெய்தியது.
அவனை முற்றும் கொள்ளை கொண்ட இந்த அழகு ணர்ச்சியின் விளைவாக அவன் இயற்றி வைத்த சின்னம் ஒன்றும் இப்பொழுதும் அழியாமல் இருக்கிறது. அதை மேல்நாட்டவரும் கீழ்நாட்டவரும் வந்து தரிசித்துப் புகழ்ந்த வண்ணமாகவே இருக்கின்றனர். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, இன்றும் அந்தச் சின்னம் அதே ஜீவ களையோடு பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
அதுதான் சிகிரியா மலைமேல் இருக்கும் சித்திரச் சுவர். அந்தச் சித்திரங்களில் நாம் காணும் அப்ஸர ஸ்திரிகளின் முகங் களில் இன்றும் அதே காதற் களையும் இன்பக் களையும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவின் வடபாகத்தில் உஜ்ஜயினி வரையில் பரந்திருந்த ஆந்திர ராஜ்யம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டளவில் தன் செல்வாக்கை இழந்துவிட்டது. ஆனால் ஆந்திரார்கள் இயற்றி வைத்த சித்திரச் செல்வங்கள் மட்டும் அழியாமல் இருந்தன. அஜந்தா குகைச் சித்திரங்கள் எல்லாம் ஆந்திரர் காலத்தில் உண்டாயினவே. சிகிரியாவில் காணப்படும் சித்திரங்களுக்கும், அஜந்தாக் குகைச் சித்திரங்களுக்கும் நெருங்கிய ஒற்றுமை காணப்படுகின்றது.
சிகிரியாச் சித்திரங்களை வரைந்தவர் யார் என்பது இன்னும் தெரியவில்லை. அஜந்தா முதலிய இடங்களுக்குச் சென்று சித்திரக் கலை பயின்று வந்த சிங்களவர்கள் வரைந்தார்களேர், அல்லது இந்தியாவிலிருந்து வருவிக்கப்பட்ட சித்திரக் காரர்கள் வரைந்தார்களோ, எவர் என்பது மட்டும் தெரிய வில்லை . அது எப்படியாயினும் சிகிரியாச் சித்திரங்கள் காசப்பனுடைய இருண்ட வாழ்க்கையின் ஓர் ஒளிப்பிழம்பு போல விளங்குகின்றன.
ஒருநாள் திடீரென்று இந்தியாவிற்குச் சென்றிருந்த முகாலன் ஒரு பெரும் படையோடு இலங்கையில் வந்து இறங்கினான். காசப்பனுடைய சேனை முகாலனை எதிர்த்தது.
ஆனால், பிரஜைகளின் அநுதாபம் முகாலனுக்கே கிடைத்தது. அதோடு அவனுடைய படையும் மிகத் தேர்ச்சி பெற்றதாக இருந்தது.
அதனால் காசப்பனுடைய படை சின்னாபின்னமாக்கப்பட்டது.
காசப்பனுக்குத் தோல்வியை ஒப்புக்கொண்டு வாழ்வது நல்லதாகக் காணப்படவில்லை. ஆகவே, முகாலன் சிகிரியாவை அணுகுமுன்னரே அவன் தற்கொலை செய்துகொண்டு உயிரை விட்டான்.
முகாலன் ராஜதானியைப் பழையபடி அநுராதபுரத்துக்கு மாற்றி நல்லரசு புரிந்தான்.
– வெள்ளிப் பாதசரம், முதற் பதிப்பு: ஜனவரி 2008, மித்ரா ஆர்ட்ஸ் அண்ட் கிரியேஷன்ஸ், சென்னை.