சாயங்கால மேகங்கள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 17, 2013
பார்வையிட்டோர்: 12,405 
 
 

நன்றி சார்…

அந்த வயதானவர் நாற்காலியில் இருந்து எழுந்து நின்று கைக்கூப்பினார். ராஜசேகர் சிரித்து தலையாட்டினார்.பெரியவர் மஞ்சள் பையை நெஞ்சோடு அணைத்தபடி நகர்ந்தார்.

கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் பென்ஷன் பேப்பர் சம்பந்தமாக கலெக்டர் அலுவலகத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார். சரியான பதில் தராமல் அலைக்கழிக்க விட்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து இரண்டே சந்திப்புகளில் வேண்டிய விளக்கங்களை பெற்று பிரச்னையை தீர்த்து வைத்த திருப்தி ராஜசேகருக்கு.

பெல் அடித்து வரவழைத்த அட்டெண்டரிடம் டீ சொல்லு.
அவன் தயங்கியபடி சார் செந்தில்ன்னு ஒருத்தர் உங்களை பார்க்க ரொம்ப நேரமா வெயிட் பண்றாரு…. கஸின்னு சொல்றாரு
ராஜசேகர் சங்கடமாக உணர்ந்தார். போன் வரும் என்று எதிர்பார்த்திருந்தார். மாறாக ஆளே வந்து விட்டான்.

கான்பரன்ஸ் ஹால்ல உட்காரவை. காபி வஒவழைச்சுக்கொடு. பத்து நிமிஷத்துல வந்திடறேன்னு சொல்லு.

அட்டெண்டர் தலையாட்டியபடி நகர்ந்தான்.

இன்டர்காம் உயிர்ப்பித்து. ஏபிடிஓ ரமணன் என்னை பார்க்க வர்றதா சொல்லியிருந்தார். நாளைக்கு மீட் பண்றேன்னு சொல்லுங்க. ஆந்தக்குடி யூனியன் வாட்டர் டேங்க் பைலை கொண்டு வந்து வைங்க.

ராஜசேகர் ஆயாசமாக சேரில் சாய்ந்தார் செந்தில். மேகலையின் அண்ணன். வந்திருப்பதற்கான காரணத்தை யூகிக்க முடிந்தது. தர்மசங்கடமான சூழல். என்ன பேசுவது. எப்படி பதில் சொல்வது.
பொதுமக்களின் பிரச்னையை புரிந்து கொண்டு தீர்த்து வைக்கும் பதவியில் இருப்பவருக்கு தம் பிரச்னையை எப்படி எதிர் கொள்வது என்று குழப்பமாக இருந்தது.

திருமணமான இந்த பதினைந்து வருடத்தில் மேகலை கோபித்து கொண்டு அம்மா வீட்டுக்கு போனது இதுவே முதல்முறை. காரணம் யோசிக்க… தர்ம சங்கடமாக இருந்தது.

வாங்க மச்சான்.

குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்த விட்டு செந்தில் முகத்தை வேறு பக்கம் திருப்பி கொண்டார். எதிர்பார்த்தது தான். அந்த அளவுக்கு மேகலை ஏத்தி விட்டிருக்கிறாள்.

அத்தை எப்படி இருக்காங்க…

ம்… இருக்காங்க…

மேகலை நல்லா இருக்காளா… போன் கூட பண்ணல. நான் பண்ணினாலும் எடுக்க மாட்டேங்கிறா.

எப்படி எடுப்பா… நீங்க அதமாதிரி காரியமா பண்ணிக்கிட்டு இருக்கீங்க.

ராஜசேகருக்கு சுள்ளென்று கோபம் வந்தது. அதற்கான நேரமில்லை என்பது புரிய அடக்கி கொண்டார்.

டீ வந்தது.

டீ சாப்புடுங்க மச்சான்.

வேணாம். மாப்புள… அம்மாவுக்கு உடம்பு சரியில்ல. மேகலைய பார்த்ததுலேர்ந்து அழுதுகிட்டே இருக்காங்க.

அப்படி என்ன மச்சான் நடந்து போச்சு.?

செந்தில் ஒரு முறை அவரை மேலிருந்து கீழாக பார்த்தார். நக்கலாக சிரித்தார்.

எதுவுமே தெரியாத மாதிரி பேசறீங்க. பதினஞ்சு வருஷ தாம்பத்தியத்து பிறகு இதெல்லாம் நல்லால்ல..

ராஜசேகரால் புரிந்து கொள்ள முடிந்தாலும், செந்தில் வாயால் அதை சொல்ல வைக்க வேண்டும். மேகலை கொடுத்திருக்கிற தகவலின் ஆழத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென நினைத்தார்.
எது மச்சான் நல்லால்ல?

எவளோ ஒருத்தி வீட்டுக்கு இன்வெர்ட்டர் வாங்கி கொடுத்து போய் வர இருக்கீங்களாமே… வயசுக்கு வந்ஙுத பொண்ணு இருக்கா மாப்புள…

சடாரென நெஞ்சில் குத்திய மாதிரி இருந்தது.

திருமணமான தினத்திலிருந்து மேகலையின் அவரசரப்போக்கு. எதையும் தெளிவாக புரிந்து கொள்ளாமை. கோபம், வேகம், அவசரம், அத்தனையும் சேர்த்து இப்போது அவர் மீது ஏவுகணை போல் பாய்கிறது.

இதற்கு விளக்கம் சொல்ல முடியாது. சொன்னாலும் புரியாது. அலுவலக பேக்கை தமக்கு தெரியாமல் திறந்து பார்த்து கிளறி, அதில் இருந்த இன்வெர்ட்டர் பில்லை எடுத்து அது கணவரின் பெயரில் இருந்ததும் டென்ஷனாகி வீட்டில் இன்வெர்ட்டர் இருக்க இன்னொன்று எதற்கு என்று கேட்காமல் சில இரவுகள் அலுவலக வேலை காரணமாக தாமதமாக வந்ததை அதோடு சேர்த்து முடிச்சு போட்டு கணவனுக்கு இன்னொரு வீடு இருக்கிறது. அங்கே ஒருத்தி இருக்கிறாள் என்று நினைத்து, பெட்டியை தூக்கி கொண்டு அம்மா வீடு போய் தமது அண்ணனை பஞ்சாயத்துக்கு அனுப்பி…

ராஜசேகருக்கு எரிச்சலாக வந்தது.

பைக்கை நிறுத்தி இறங்கினார்.

கருந்தாட்டாங்குடி, பாரதி சாலையில் நிறைய குடிசை வீடுகள்.
மச்சான் இறங்குங்க…

தயங்கியபடி இறங்கினார் செந்தில் வீட்டுக்குள் நுழைந்தார் ராஜசேகர்.

சும்மா தயங்காம உள்ள வாங்க. மச்சானை அழைத்தார்.
உள்ளே இன்வெர்ட்டர் வெளிச்சத்தில் இருபது பிள்ளைகள் படித்து கொண்டிருந்தனர்.

ராஜசேகரை பார்த்ததும் அனைவரும் எழுந்து நின்றார்கள்.
வணக்கம் சார் ராஜசேகர் சிரித்தார்.

வணக்கம் பிள்ளைகளா…

ஒரு நடுத்தர வயது பெண்மணி ராஜசேகரை பார்த்ததும் பெரிதாக சிரித்து வரவேற்றாள்.

எனக்கு பாடம் எடுத்த டீச்சர். அவங்க வீடு தான். இதெல்லாம் ஊர் புள்ளைங்க. டென்த், ப்ளஸ்டூ எக்ஸாமுக்கு ரெடியாகிறாங்க. இது செந்தில், மேகலையோட அண்ணன்.

அந்த பெண்மணி கைகுவித்து வணங்கினாள்.

டீ போட்டு கொண்டு வர்றேன்.

என்றபடி அடுப்படிக்கள் நுழைந்தாள்.

எல்லாரும் எப்படிப்படிக்கிறீங்க.?

நல்ல படிக்கிறோம் சார். கூடுதலாக இரண்டு தலைகள் இருப்பதைஉணர்ந்தார். அதை உணர்ந்த ஒரு பெண், மேப்பலம் கிராமத்துலேர்ந்து இன்னும் ரெண்டு பேர் இன்னைக்கு வந்திருக்காங்க சார். … அவங்களும் இனிமே இங்கதான் படிக்க போறாங்க.

அந்த இரண்டு பெண்களும் எழுந்து நின்றனர்.

நன்றி சார்…

வெரிகுட்..

டீ குடித்து விட்டு இருவரும் வெளியே வந்தார்கள்.

தலைகுனிந்து நின்றிருந்த செந்திலை பார்த்து ராஜசேகர் சிரித்தார்.
அவளுக்கு தெரிஞ்சே இத செஞ்சிருக்கலாம். ஆனா ஒத்துக்க மாட்டா. என்னால இன்வெர்ட்டர் வாங்கி கொடுத்திருக்க முடியாது. இந்த நிமிஷம் அனுபவிக்கிற திருப்தியை அடைய முடிஞ்சிருக்காது. மேகலைய நான் குறை சொல்லல. எல்லாருக்கும் பரந்த மனப்பாண்மை இருக்கணுங்கறது இல்ல. அவகிட்ட சொல்லி அவ மறுத்து நான் வாங்கி கொடுத்திருந்தாலும் பொட்டிய தூக்கிட்டு உங்க வீட்டுக்கு வந்திருப்பா.

செந்திலின் முகம் மாறியது.

மேகலை தங்கமான பொண்ணு மச்சான். என்ன… மழைக்காலத்துல சாயங்கால நேரம் சட்டுன்னு இருட்டற வானம் மாதிரி பொசுக்குன்னு கோபம் வந்திடும். பல விஷயங்கள அவளுக்கு ஏத்தமாதிரி என்னால் தான் நடந்துக்க முடியல. கலெக்டர் ஆபீஸ்ல பார்த்தேன். பவர் கட்டால கிராமத்து புள்ளைங்க படிப்பு ரொம்ப பாதிக்கப்படுது. பணக்கார நடுத்தர குடும்பத்துல இருக்கறவங்களுக்கு பிரச்னை இல்ல. ஏழைக்குழுந்தைகளுக்கு ரொம்ப பிரச்னை. அவங்க எதிர்காலமே பாதிக்கப்படற சூழ்நிலை. உன்னால ஏதாச்சும் செய்ய முடியுமாப்பான்னு கேட்டாங்க. அவங்க வீட்டு புள்ளைங்களுக்குன்னு கேக்காம தம்மோட கிராமத்து புள்ளைங்களுக்குன் கேட்டது எனக்குப் புடிச்சிருந்துச்சு. அதுவுமில்லாம எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த டீச்சருக்கு நான் செஞ்ச கைம்மாறுன்னும் சொல்லலாம். இருபதாயிரம் ரூவா முக்கியமில்லை. இருபது புள்ளைங்களோட எதிர்காலம் முக்கியம்.

செந்தில் பேச்சற்று நிற்க…விட்டு தள்ளுங்க மச்சான். அம்மா வீட்டுக்கு கிளம்பற அவசரத்துல மருந்து மாத்திரயெல்லாம் எடுத்துக்காம போயிட்டா. மாத்திர பேர் கூட அவளுக்கு தெரியாது மச்சான். வாங்கி தர்றேன். இப்பல்லாம் அடிக்கடி அவளுக்கு தலைவலி வருது. அத்தைய ரொம்ப விசாரிச்சதா சொல்லுங்க. நீங்க ஒண்ணும் பீல் பண்ணிக்க வேணாம். ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு வர்றதா மேகலைகிட்ட சொல்லுங்க. உட்காருங்க மச்சான். பஸ் ஸ்டாண்டுல டிராப் பண்றேன்.செந்தில் அமைதியாக நிற்க உங்க தெருவுல பரீட்சைக்கு படிக்கிற ஏழைக்குழந்தைகள் இருந்தா வாசல்ல உட்கார வச்சாவது லைட்டபோட்டு விடுங்க. குறிப்பா பொம்பள புள்ளைங்க படிக்க உதவி பண்ணுங்க. நல்ல உறவுகளும் சமுதாயமும் நாம உருவாக்கறதுதான் மச்சான்.

உள்ளுக்குள் வெட்கப்பட்டவராக செந்தில். ராஜசேகரின் முகத்தை பார்க்க தயங்கியபடி பைக்கில் ஏறினார்.

– ஜனவரி 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *