சாமி குத்தம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 25, 2023
பார்வையிட்டோர்: 1,593 
 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாளைக்கு வீட்டிலே வேத பாராயணம் இன்னும் நிறைய பொருள் வாங்கணும் அதுனாலே நீங்க போயி இந்தப் பட்டியல்ல இருக்கறதெல்லாம் வங்கிண்டு வந்திருங்கோ என்றாள் காமாட்சி. சரி வாங்கிண்டு வரேன் என்று கடைக்குக் கிளம்பினார் விஸ்வநாதன். பழமுதிர்ச்சோலை வாயிலில் காரை நிறுத்தவே இடமில்லாமல் திண்டாடி, கடைசியில் ஒரு இடத்தைக் கண்டுபிடித்து காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்று, பட்டியலில் உள்ள காய்கறிகள், பழ வகைகளை விஸ்வநாதன் எடுக்க ஆரம்பித்தார். 

காமாட்சி சொன்ன அனைத்தையும் வங்கிக்கொண்டு விட்டுக்குள் நுழைந்தார் விஸ்வநாதன் “என்ன எல்லாம் வாங்கிட்டீங்களா” என்றாள் காமாட்சி. “எல்லாம் வாங்கிட்டேன். தொணதொணன்னு கேட்டுண்டே இருக்காதே” என்றார் விஸ்வநாதன். “என்ன ஆச்சு உங்களுக்கு இப்போதானே ஒரு தடவை கேட்டேன். அதுக்குள்ளே எரிஞ்சி விழறீங்க” என்றாள் காமாட்சி. “சரி விடு. ஏதோ கோவம். அந்தக் கடைக்குப் போனேனா” என்று அந்தக் கடையில் நடந்ததை விவரிக்க ஆரம்பித்தார் விஸ்வநாதன். 

காரை விட இடமே இல்லை. பழமுதிர்ச்சோலை வாசலில் ஒரு வழியாக ஒரு காரின் பின்னால் இருந்த இடத்தில் காரை நிறுத்திவிட்டு, உள்ளே நுழைந்து காய்கறிகள் பழங்கள் வாழை இலை வெற்றிலை எல்லாம் எடுத்து கூடையில் நிரப்பிக் கொண்டிருந்தார் விஸ்வநாதன். அந்த அங்காடியின் வாயிற்காவலர் அவரைத் தேடிக்கொண்டு வந்து, “சார் நீங்க காரை நிறுத்தி இருக்கீங்களே அந்தக் காருக்கு முன்னாடி இருக்கற காரை வெளியே எடுக்கணுமாம். உங்க காரை கொஞ்சம் நகத்தறீங்களா?” என்றார். 

“அடடா இதோ வந்துட்டேன்” என்றபடி, சேகரித்த காய்கறிகளை வைத்துவிட்டு “இதுக்கு பில் போடுங்கோ இதோ வந்து பணம் குடுக்கறேன்” என்றபடி வெளியே வந்தார். எதிரே ஒரு பெண்மணி முகத்திலே பணக்காரக் களை சொட்டியது. “ஏன் என்னோட காருக்குப் பின்னாடி உங்க காரை நிறுத்தினீங்க நாங்க காரை எப்பிடி எடுக்கறது கொஞ்சமாவது யோசனை வேண்டாமா?” என்றாள் அதிகாரமாக அவருடைய வயதுக்கும் மதிப்பு தராமல் அதிகாரக் குரலில். “சரி அதுக்குதானே பில் கூடப் போடாமல் வந்திருக்கேன், எடுத்துடறேன்” என்றார் விஸ்வநாதன். அந்தப் பெண்மணி “இதெல்லாம் முன்னாடியே யோசிக்கணும்” என்றாள் திமிராக. 

விஸ்வநாதன் “இதோ பாருங்க நீங்க நிறுத்தின இடமே காரை நிறுத்தக் கூடாத இடம்தான். என்ன செய்யிறது காரை நிறுத்த இடமே இல்லே. அதான் நான் வந்துட்டேனே. அதுக்கும் மேலே பேசிண்டே போறீங்களே” என்று சொல்லிக்கொண்டே காரைப் பின்பக்கமாக நகர்த்தினார்.

முன்னால் இருந்த காரில் உட்கார்ந்தாள் அந்தப் பெண்மணி. அந்தக் காரின் ஓட்டுனர் காரை எடுத்தார். போகும்போது “இனிமேலாவது காரை நிறுத்தறதுக்கு முன்னாடியே யோசிங்க” என்றாள் அந்தப் பெண்மணி. 

விஸ்வநாதனுக்கு கோவம் வந்தது “சரிங்க, இனிமே பாத்து உங்க கார் இல்லாத இடமா நிறுத்தறேன்” என்றார். உடனே அந்தப் பெண்மணி, “உங்களுக்கு ரொம்பத் திமிரு கிண்டல் செய்றீங்க. இந்தக் கிண்டலெல்லாம் என்கிட்ட வேண்டாம்” என்றாள். கார் கிளம்பியது. 

எனக்கு வந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு கடையின் உள்ளே நுழைந்து, மீண்டும் காய்கறிகளை எடுத்துக்கொண்டு . பணம் கொடுத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினேன். “என்ன வரவர நாட்டிலே பெண்களெல்லாம் கொஞ்சம் கூடப் பொறுமையில்லாமே இப்பிடிப் பேசறாங்க” என்றார் விஸ்வநாதன். 

“சரி சரி அப்பிடித்தான் இருக்கும். இதுக்கெல்லாம் நீங்க டென்ஷனாகாதீங்க” என்று சமாதானப்படுத்தினாள் காமாட்சி. 

மறுநாள் வேத பாராயணக் கோஷ்டி வந்து வேத பாராயணமும் ஆரம்பித்தாயிற்று. சுமூகமாக நடந்து முடிந்தது வேத பாராயணம். வந்திருந்த அனைவருமே சந்தோஷமாய்ப் பிரசாதங்களைச் சாப்பிட்டுவிட்டு, வெற்றிலை பாக்கு வாங்கிக்கொண்டு கிளம்பினர்.

மறு நாள் விஸ்வநாதன் காரை எடுத்துக்கொண்டு அலுவலகம் புறப்பட்டார். செல்லும் வழியில் ஒரு போலீஸ்காரர் அவர் காரை மடக்கி நிறுத்தச் சொன்னார். விஸ்வநாதனும் நிறுத்தினார். அந்த போலீஸ்காரர் கேட்ட அனைத்து விவரங்களையும் முறையாக அளித்தார். ஆனால் அந்தப் போலீஸ்காரர் “இதெல்லாம் சரியா இருக்கு. ஆனா நீங்க இங்கே வரவேண்டிய வேகத்தை விட அதிக வேகமா வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தீங்க. அதுனாலே அபராதம் கட்டிட்டுப் போங்க” என்று ஒரு தொகை எழுதி, அவரிடம் கொடுத்தார்.

விஸ்வநாதனுக்கு ஏதோ புரிந்தது. மௌனமாக அவர் நீட்டிய காகிதத்தைப் பெற்றுக்கொண்டு தொகையைக் கட்டி, ரசீது வங்கிக்கொண்டு கிளம்பினார்.

மறுநாள் அவர் காரை வாயிலில் நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்தார். காமாட்சி கொடுத்த காப்பியைக் குடிக்கும் போது, வாசலில் நாலு பேர் குடி போதையில் கலாட்டா செய்துகொண்டிருந்தனர். வெளியே வந்து எட்டிப் பார்த்தார். அந்த நால்வரில் ஒருவன் “டேய் இந்தக் காரை அடிச்சு நொறுக்கலாமா? நம்மை யார்றா என்னா செய்ய முடியும்?” என்றபடி கையிலுள்ள கைத்தடியால் காரை அடிக்க ஓங்கினான்.

விஸ்வநாதன் ஓடி வந்து “ஏம்பா எதுக்கு எங்க காரை அடிக்கிறீங்க. நான் போலீஸ்லே கம்ப்ளைண்ட் குடுப்பேன்” என்றார். 

அதில் ஒருவன் “இதோ பார்றா போலீஸ்லே கம்ப்ளைண்ட் குடுப்பாராம்” என்றபடி நக்கலாய்ச் சிரித்தான். அதற்குள் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் வரவே, அவர்கள் “சரி இன்னிக்கு வேண்டாம். இன்னொரு நாள் பாத்துக்குவோம்” என்றபடி கலைந்து போனார்கள். 

மறுநாள் விஸ்வநாதன், காரை எடுக்க அலுவலகத்திலிருந்து கீழே வந்து காரில் ஏறினார். கார் அப்படியே அமுங்கியது. என்ன இது என்று வெளியே வந்து பார்த்தால், காரின் இரண்டு பின்பக்க டயர்களும் யாரோ கத்தியால் கிழித்தது போல் கிழிந்து போயிருந்தன.

‘ஏன் இப்பிடி நமக்கு மட்டும் எல்லாம் தவறாகவே நடக்கிறது’ என்று யோசித்தபடியே அதிர்ந்தார் விஸ்வநாதன். மீண்டும் அவருக்குள் பழைய நினைவு வந்தது ஏன் இப்பிடி ஆகிறது. யார் இதையெல்லாம் செய்கிறார்கள் என்று யோசித்தார். “சரி ஏதோ சாமி குத்தம் போலிருக்கு, நேரமே சரியில்லே” என்று வாய்விட்டு முணுமுணுத்தார். 

“சார் நீங்களா, இதுதான் உங்க ஆபீசா” என்றார் ஒருவர். விஸ்வநாதன், “ஆமாம், அது சரி நீங்க யாருன்னு தெரியலையே” என்றார்.

“சார், என்னைத் தெரியலையா நான்தான் சார் அன்னிக்குப் பழமுதிர்ச்சோலை கடை வாசல்லே ஒரு அம்மா தகராறு பண்ணாங்களே அந்தக் காரோட டிரைவர்” என்ற அவர், தொடர்ந்தார்.

“சார் நீங்க நினைக்கிறா மாதிரி சாமி குத்தமெல்லாம் ஒண்ணுமில்லே. அந்த அம்மாவோட புருஷன் பெரிய அதிகாரியா இருக்காரு. அது தெரியாமே, நீங்க அந்த அம்மாகிட்டே நியாயமெல்லாம் பேசினீங்க. அதுதான் காரணம் இதுக்கெல்லாம். இது சாமி குத்தமில்லே, சார். சில திமிர் பிடிச்ச மனுஷங்களோட குத்தம். ஆமா சார் சாமி குத்தம் இல்லே மனுஷ குத்தம்” என்றார்.

– வெற்றிச் சக்கரம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: அக்டோபர் 2012, தமிழ்க் கமலம் பதிப்பகம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *