கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 24, 2024
பார்வையிட்டோர்: 613 
 
 

குருநாதன் வந்திருப்பாரா என்ற சந்தேகம் பையைவிட கனமாகத்தான் இருந்தது.

விமானத்தளத்தைவிட்டு வெளியேறும்போதே எங்கள் நான்கு கண்களும் அவரையே தேடின.

எங்கள் முதல் தமிழ்நாட்டுப் பயணம் என்பதால் மனம் மிகவும் விழிப்புநிலைக்குள்ளாகி இருந்தது. அன்றாட யதார்த்த வாழ்வில் இந்த மாதிரியான கவனக்குவிப்புக்ககான சந்தர்ப்பமே பெரும்பாலும் இல்லாமல் இருந்ததால், இந்தப் புதிய அனுபவம், புதிய இடம். புதிய மனிதர்கள், உள் பிரக்ஞயை தன்னிச்சையாக உஷார் நிலைக்குக் தள்ளிவிட்டிருந்தது. என்னைத் தாண்டிச் செல்பவர்களிடம், எனக்கு எதிரில் வருபவர்களிடம் என்னைக் கடத்திக்கொண்டிருக்கும் வியப்பும் , இனமறியா அச்சமும அவர்களின் கண்களில் பிரதிபலிக்கிறதா என்று நோட்டமிட்டேன். அவர்கள் இயல்பாகத்தான் இருந்தார்கள். அது எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாகவும் வெட்கமாகவும்தான் இருந்தது.

மனைவியின் பதற்ற நிலை கூடிக்கொண்டேதான் இருந்தது. அவள் விழிகளில் இயல்புக்கு மீறிய திறப்பும், அதில் பிரதிபலிக்கும் அசாதாரண அதிர்ச்சியும் அதனை மெய்ப்பித்தது.

“அவரு வந்திருப்பாரா, வந்திருப்பாரா?” என்று விமானம் தரை இறங்கும் வரை ஓயாமல் கேட்டுக்கொண்டே இருந்தாள்.

விமானத் தளத்தின் வாசலில் பயணிகளுக்காகக் காத்திருப்போர் கூட்டம் நெரிசலாக இருந்தது. பயணிகளின் பெயர் அட்டைகளை ஏந்தி நின்றிருந்தவர்கள் ஏதோ அரசியல் போராட்டக் களத்தில் தங்களுக்கான கோரிக்கையை விடுப்பவர்கள்போலத் தெரிந்தார்கள்.

என் மனைவிதான் என் தோளைத் தட்டி குருநாதனைக் காட்டினாள். எனக்கு ஆசுவாசமாக இருந்தது. தன் புன்னகையைப் பரிமாறியபடியே பெயர் தாளை மடித்து பாக்கெட்டில் திணித்துவிட்டு, என பையை வாங்கிக்கொண்டார். “வாங்க வாங்க பயணம் சௌரியமா இருந்ததா சார்?” என்ற வரவேற்கும் முகமாகக் கேட்டார். மனைவி கையெடுத்து வணங்கி தலையை ஆட்டி ஆமோதித்தாள். அவர் உறுதியளித்தபடியே எங்களுக்காகக் காத்திருந்தது அவளை நிம்மதிப் பெருமூச்செரிய வைத்தது. என்னைவிட சற்றே பதட்டத்தில் இருந்தவள், அவரைப் பார்த்த கணத்தில் உற்சாகமாகி விட்டிருந்தாள்.

நான், “பிரச்னை இல்லை குரு.” என்றேன்.

“சார் இங்கே கார் வாடகை அதிகம் வரும் , கொஞ்சம் வெளியே போனால் ஓட்டோ மலிவாகக் கிடைக்கும்,” என்றார். அவர் கரிசனம் என்னைத் தொட்டுப் ஊடுறுவியது. நான் தலையை ஆட்டினேன். எங்கள் கனமான பைகள் இரண்டையும் அவரே வாங்கிக்கொண்டார். ஐந்தடிக்குச் சற்றே உயரமான உடல் வாகு இந்த பைகள் கனத்தைத் தாங்காது போலிருந்தது. குருநாதன் முதல் பார்வையிலேயே கழிவிரக்கத்தை உணரவைக்கக்கூடியவராக இருந்தார். காலத்தை வென்று நிற்கும் பழுப்பேறிய ஜின்ஸ், இன்னதென்று கண்டுபிடிக்க முடியாத அதன் ஆதி வண்ணத்தை முற்றிலும் இழந்துபோன டி சர்ட், காலாவதியாகிப் போயும் அவர் காலில் சிக்கிகொண்ட செருப்பு போட்டிருந்தார். இளம் பனித்துளிகளையொத்த மென்முடிகள் துளிர்விட்டுக் கொண்டிருந்த முகத்தை வைத்தே அவர் இளமையைத் தொலைத்துவிட்டிருந்தார் என்று கனிக்கலாம்.

நான், “பரவாயில்லை நான் ஒரு பையை எடுத்துக்கிறேன்,” என்றேன்.

”ச்சும்மா கொடுங்க சார்,” என்று கூறியபடியே அதனை என் கையிலிருந்து இழுத்துச் சுமந்துகொண்டார். அவர் செயல் எனக்குத்தான் பாரமாக இருந்தது.

நல்ல வெயில். தார் இளகும் வெப்பம். “சார் ஓட்டல்ல பைய வச்சிட்டு நாம் சாப்பிடப் போறோம்,” என்றார்.

“மொதல்ல தாகத்துக்கு ஏதாவது அருந்தணும்” என்றேன். “ஓட்டல் லோபியிலியே இருங்க, தோ வந்திர்றேன் “ என்றுவிட்டு நொடி நேரத்தில் வாசலிலேயே இருந்த சுத்தமான அங்காடியில் இளநீரை வாங்கிவந்தார். இஞ்சி புதினா கலந்த மிதமான குளிரோடு தொண்டையை நனைத்து வயிறை குளிர்வித்து, அந்தக் குளிர்ச்சி உடல் முழுதும் இறங்கிச் சிலிர்க்கச் செய்தது. அந்தச்சிலிர்ப்பு அந்நியருக்கு அவர் காட்டிய அன்பும் கரிசனத்தாலும்கூட இருக்கலாம்.

குருநாதனை மலேசியாவின் எங்கள் ஊரில் நடந்த ஒரு நாட்டிய நிகழ்ச்சியில் சந்தித்த நாள்தொட்டு அவ்வப்போது நடந்த தொலைபேசி உரையாடல் எங்களை இணைத்திருந்தது. ‘உங்கள் அபிநயத்தில் நாங்கள் கிரங்கிப்போனோம்’ என்ற நாங்கள் சொன்ன வார்த்தைகளில் அவருடனான உறவு இந்தச் சந்திப்புவரை சாத்தியமாக்கியிருந்தது. தமிழ்நாட்டுக்கு வந்தா என்னைக் கூப்பிடுங்க என்று சொல்லி அவரின் முகவரி அட்டையைக் கொடுத்திருந்தார் நாட்டிய நிகழ்ச்சி முடிந்து.

உணவுக் கடைக்குப் போகும்போது “இன்னும டான்ஸ் ஆடுறீங்களா” என்று மனைவி கேட்டு வைத்தாள். “இல்லக்கா…அதுக்கு இங்க ரொம்பப் பேரு இருக்காங்க, நான் சினிமாவுல நடிச்சிக்கிட்டிருக்கேன்,” என்றார்.

மனைவிக்கும் எனக்கும் அச்செய்தி திகைப்பையும் களிப்பையும் உண்டாக்கியது. அதே நேரத்தில் குருநாதனை எந்தச் சினிமாவிலும் பார்த்த நினைவே வரவில்லை. எங்கள் முகத்தின் வியப்பைப் பார்த்தவர், அவராகவே சொன்னார், “சின்னச் சின்ன வேஷந்தான், அதனால நெனவுக்கு வராது. இப்ப கூட டைரக்டர் சாமிநாதன் அழைப்புக்குக் காத்திருக்கேன், எந்த நேரத்திலும் கூப்பிட்டுருவார். கூப்பிட்ட உடனே கெளம்பி வந்திடணும் என்று சொல்லியிருக்கிறார்,” என்றார். சாமிநாதன் நூறு நாள் படங்களைத் தந்த நல்ல டைரெக்டர் என்று நான் வாசித்திருக்கிறேன். சில படங்களையும் பார்த்தும் இருக்கிறேன். வசனங்களிலும் காட்சியமைப்பிலும் கலையமைதி நேர்த்தியாக கூடிவந்திருக்கும்.

நான் திடுக்கிட்டு “அய்யையோ நாங்க இடையூறா இருக்கமா?” என்றேன்.

“ச்சே… அப்படிலாம் இல்ல….கூப்பிட்ட ஒடனேதான கெளம்புவேன்”

“என்ன வேஷம்பா”

“இன்னும் சொல்லலக்கா…மூனு நாலு காட்சி காஸ்ட்டிங் இருக்குன்னாரு அதுல சான்ஸ் கெடச்சா ….மெல்ல மெல்ல நான் மக்களுக்குத் தெரிய ஆரம்பிச்சிடுவேன்.” அவன் முகத்தில் மெல்லிய நம்பிக்கை களைகட்டியிருந்தது. அப்போது கைப்பேசித் திரையை ஒருமுறை நோட்டமிட்டார். முகத்தில் மேக இருள். சற்றே ஏமாற்றம் கூடிக் கலைந்தது.

“நல்ல சுத்தமான கடையா இதுக்கட்டும்.” என்றேன். “தெரியும்கா, மலேசிய சிங்கப்பூர் காரங்க வந்தாங்கன்னா, அவங்கள ஏர்கோன் இல்லாத கடைக்குக் கொண்டு போக மாட்டேன், நீங்க தைரியமா வாங்க,”

மூன்று தட்டு மட்டன் பிரியாணி ஆர்டர் செய்தார், எங்களால் சாப்பிட்டு முடிக்க முடியவில்லை. அவர் சாப்பிடுவதைப் பார்த்து மலைத்த நான், இத நீங்க எடுத்துக்கோங்க என்று எஞ்சிய உணவை அவர் பக்கம் தள்ளினேன். அவர் மறுப்பேதும் சொல்லாமல் உண்டதில் சிறிய மகிழ்ச்சி உண்டானது. உண்ணும்போது அவன் கண்கள் அடிக்கடி மலர்ந்தது. சுவையாலா? பசியாலா? என்று புரியவில்லை.

சின்னதாய் ஏப்பம் விட்டவனை. “காலையில என்னப்பா சாப்பிட்டே..?” என்றாள். அந்தக் கேள்வி அவரைப் பாதிக்குமே என்று மனைவிடம் கண்களால் சொல்ல முயன்றேன். அவள் என்னைப் பார்க்கவில்லை.

“ஒன்னும் சாப்பிடல, வரும்போது டீ மட்டும் குடிச்சேன்,” என்றார்.

மீண்டும் சலனமின்றிக் கிடந்த தொலைபேசித் திரையைப் பார்த்தார். ஒரு தகவலும் வரவில்லை என்பதை அவன் விழிகளின் பிரதிபலிப்பை வைத்துத் தெரிந்து கொண்டேன்.

அன்று சில இடங்களைச் சுற்றிக் காட்டிவிட்டு இரவு சாயும் வரை எங்களோடு இருந்து உணவருந்திவிட்டுத்தான் வீட்டுக்குப் புறப்பட்டுவிட்டார்.

மறுநாள் காலையில் அவன் லோபியில் காத்திருந்ததை எதிர்பார்க்கவில்லை.

“ஏம்பா உங்களுக்கு செரமமில்லியா? சினிமா வாய்ப்புக்கு அழைப்பு வந்தா என்ன பண்ணுவ?”

“அப்படி வந்தா நா ஒடனே கிளம்பிடுவேன், என்ன நம்பி வந்த ஒங்கள கைவிடக்கூடாதுல்ல.” என்றார்.

“நாங்க பாத்துக்குவோம். எடத்த சொன்னா ஓட்டோக்காரன் வுட்டுட்டு போறான்”

“அப்படி இல்லைங்க சார்…. நீங்க தமிழ்நாட்டுக்காரவங்க இல்லன்னு அவனுங்க கண்டுபிடிச்சிடுவானுங்க…. தலையில மொலகா அறைச்சிடுவானுங்க.”

மனைவி ஆவலோடு கேட்டாள், “டைரெக்டரிடமிருந்து ஏதும் அழைப்பு வந்ததா?”

“காத்திருந்து காத்திருந்து நானே காலையில மூனு தடவ கூப்டேன்.. பதில் இல்ல. அடிக்கடி தொந்தரவு கொடுக்கக்கூடாதுன்னு காத்திருக்கேன். தொல்லையா எடுத்துக்குவாங்க, கெடைக்கிற வாய்ப்பும் போய்டும்கா, நான் கூப்பிடுற வரைக்கும் மசிறு காத்திருக்க மாட்டீங்களோன்னு கெட்ட வார்த்தையில திட்டுவானுங்க.” என்றார்..

அன்று மதிய உணவுக்கு நேற்றையைப் போலவே பசிகொண்டவன் போல அள்ளி அள்ளி சாப்பிட்டார். முதல் கவலத்தை வாயில் வைத்தவுடன் விழிகள் விரிந்து விரிந்து மெல்லிய பனிப்படலத்தைக் காட்டின. அப்போது கண்களில் புத்தெழுச்சி தெரிந்தது. கன்னங்கள் துடித்தன. நா சுழன்று சுழன்று அடுத்த கவலத்துக்கு துழாவியது. கைகள் சோற்றைப் பிசைந்து உருட்டி வாய்க்க்குக் கொண்டு போகத் தயார் நிலையில் இருந்தது.

இந்த முறையும் மனைவி காலையில என்ன சாப்பிட்டப்பா என்று கேட்டுவிடுவாளோ என்று பயந்தேன்.

“செத்த இருங்க சார்,” என்று சொல்லிவிட்டு கை அலம்பித் துடைத்தும் துடைக்காமல் போனை பாக்கெட்டிலிருந்து கையிலெடுத்தபடி வெளியே ஓடினார்.

“டைரெக்டர் கூப்பீட்டிருக்கலாம்:” என்றார் மனைவி.

மீண்டும் உள்ளே நுழைந்தபோது அவர் எதிர்பார்ப்பு நடக்கவில்லை என்று சொன்னது முகம்.

“ஏதும் வாய்ப்புக்குக் கூப்பிட்டாங்களா?”

“இல்லக்கா…நேத்தைய படப்பிடுப்பு முடிஞ்சிடுச்சாம், வெற ஆள போட்டு எடுத்திருக்காங்க. கூட்டாளி சொன்னார்.”

என் மனைவி சின்ன கோபத்தோடு “வேற ஆள போட்டுட்டோம்னு உங்ககிட்ட ஒரு வார்த்த மொதல்லியே சொல்ல மாட்டாங்களா?” என்றாள்.

“நாம என்ன பெரிய ஆளா சினிமாவுல? மெனக்கட்டு சொல்றதுக்கு! டைரெக்டர் எப்ப கூப்பிடுவாருன்னு அவரு கண்ணையே பாத்திட்டுருந்தாகூட கண்டுக்க மாட்டாங்க? பாத்து பாக்காத மாறி நடந்துக்குவாங்க! நாமே லொங்கு லொங்குன்னு காதிருந்துதான் சான்ஸ் வாங்கணும், அவனுங்களுக்கு எடுபிடி வேல செய்யணும். சார் சார்னு காலசுத்தியே கதியா கெடக்கணும், அப்பதான் நடக்கும். அதுக்குக்கூட சான்ஸுக்கு காத்திருக்கிறவங்க வரிசையில நிப்பாங்க.”

“வாய்ப்பே கெடைக்கலனா சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவே?”

“நான் ஒத்த ஆளுதான்… எப்படியாவது சமாளிச்சிடுவேன். சினிமாவுல அப்பப்ப வாய்ப்பு கெடைக்கிற பிரண்ஸ் உதவி இருக்கு. எனக்குக் கெடைக்கும்போது நான் ஒதவுவேன்”. பின்னர் சற்று நிறுத்தி கூச்சமான குரலில் “இங்கே கலையைச் சுமப்பவர்கள் வயிற்றைக் காயவைக்க பழகிக்கொள்ளணும்,” என்றார். அவருடைய சலிப்பை உள் வாங்கிக் கொள்ள சிரமமாக இருந்தது.

“வேற வேல ஏதும் செய்யலையா?”

“வேலைக்குப் போனா சினிமாவுக்குள் நுழைய முடியாது, எந்த நேரத்திலேயும் தயாரா இருக்கணும், வர வாய்ப்ப நல்லா பயன்படுத்திக்கணும், என்னைப் போல ஆயிரம் பேருக்கு மேல முகத்தக் காட்ட வாய்புக்குக் காத்திருக்காங்க! வேல செஞ்சா கூப்ட கொரலுக்கு ஓட முடியுமா?”

“கல்யாணம் ஆயிடுச்சா? அப்பா அம்மால்லாம் கூட இருக்காங்களா?”

“சினிமால ஜெயிக்கிற வரைக்கு கல்யாணத்த பத்தியெல்லாம் நெனச்சிக்கூட பாக்க மாட்டேன். அப்பா அம்மா ஒரு தங்கச்சி கிராமத்துல இருக்காங்க, வெவசாயம் பண்றாங்க.”

கலைஞனுக்கே உள்ள வைராக்கியம் சமயங்களில் அவன் மொத்த வாழ்க்கையையே காவு கேட்டுவிடுகிறது என்று மனம் தன்னிச்சையாக அசை போட்டது.

“நீங்க சினிமாவுக்கு வர்ரதுல அவங்களுக்கு ஆட்சேபனை இல்லியா?”

அவனை இவ்வளவு தூரம் விசாரிப்பதில் மனைவிக்கு சினிமா என்கிற மின்சாரச் சொல்லே காரணமாக இருந்திருக்கக்கூடும்.

“யாருக்கும் விருப்பமில்ல..நாந்தான் விடாப்பிடியா இருந்து, சண்டபோட்டுட்டு ஊரவிட்டுக் கெளம்பிட்டேன்!”

இரவு வரை எங்களோடு இருந்து சாப்பிட்டுவிட்டுத்தான் கிளம்பினார்.

“நாளைக்கு இன்னும் நல்ல எடத்துக்கு கூட்டிட்டு போறேன்.”

மறுநாள காலையில் லோபியில் காத்திருப்பார் என்பதை நாங்கள் யூகிக்கவே தேவையில்லாமல் இருந்தது. விடுதியை ஒட்டிய சாலையில் இயந்திர ஆமைகள் போல ஓட்டோக்கள் ஒடிக்கொண்டிருந்தன. சவாரிக்காகக் காத்திருந்த ஓட்டோ டிரைவர்கள் தூக்கம் தொலைத்த முகத்தோடு முக்கால் கால் வரை கட்டிய கைலியும், விரலிடுக்கில் சிக்கிக் கசங்கிய பீடியுமாக இருந்தார்கள். சென்னை உஷ்ணத்தால் காற்று வெளியில் நிறைத்திருக்கும் தூசு, சாம்பல் நிறப் படலமாகி பிடிவாதமாய்த் தேங்கி நிலைகொண்டிருந்தது. ஒட்டுக் கடைகள் சமதரையில் நிற்க பெருமுயற்சியில் இருந்தன. சற்றே பெரிய ஈக்கள் குழிமிக் கும்மாளமிட சர்பத் கடைகள் கடை விரித்திருந்தன.

“சார் இன்னிக்கி பார்த்தசாரதி கோயிலுக்குப் போலாம், பாரதிய யானை தாக்கச்சினு சொல்லுவாங்களே அந்தக் கோயில்தான் அது.. அங்கிருந்து செய்ண்ட் தோமஸ் சர்ச், அப்புறம் மெரினா பீச், அது முடிஞ்சி டி.நகர்ல ரெங்கநாதன் தெரு, அங்க மதிய உணவு சாப்பிடலாம்,” என்றார்.

ஓட்டோவைவிட்டு இறங்கிய உடனே குருநாதனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எங்களுக்குக் கேட்காத தூரத்தில் போய்ப் பேசினார்.

மனைவி அவனை நோட்டமிட்டபடி, “ஏதாவது சான்ஸ் கெடச்சிருந்தா நல்லது”

“சார் இயக்குனர் ஸ்டீவன் படம் ஒன்னு எடுக்கிறாராம். நாளைக்கு காலையில் ஹீரோவுக்கு ஒரு துணைப் பாத்திரத்துக்கான போட்டி நடக்குதாம். நீ கண்டிப்பா வாடா, துணை இயக்குனருக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன். அதனால நாளைக்கு வர மாட்டேங்க. எப்படியாவது சமாளிச்சிக்கோங்க,” அப்போது அவர் குரலிலும் உடலசைவிலும் உற்சாகம் கூடியிருந்தது. அவன் முகம் பூத்திருந்தது.

“பரவால்ல சான்ஸுக்காகத்தானே காத்திருக்க. மொதல்ல போய் கெடச்ச வாய்ப்ப கைவிட்ராத…. புத்திசாலித்தனமா பயன்படுத்திக்கோ,”

“ஆமாம்பா கெடச்சா எங்களுக்கு போன் பண்ணு”

பார்த்தசாரதி கோயில் நாங்கள் எதிர்பார்த்து போல விஸ்தாரமான வளாகத்தில் இல்லை. வீடமைப்புப் பகுதிகளில் இடுக்கில் இருந்தது. ஏதோ கிருஷ்ண பாராயணம் நடந்து கொண்டிருந்தது. பெரும்பாலும் மாமிகளே உட்கார்ந்து பக்தியில் திளைத்திருந்தார்கள். தலைகள் பாடலுக்குக் கிரங்கி ஆடிக்கொண்டிருந்தன.

“இங்க தாங்க பாரதிய யானை தாக்கிச்சி” என்றார். அவன் காட்டிய இடம் கோயில் சந்நிதிக்கு இடதுபுறத்தில் இருந்தது. மனிதர்கள் மிதித்து புல தரை மண்தரையாகி இருந்தது. பாரதி மண்ணில் வீழ்ந்து யானை மிதிப்பது போன்ற காட்சி நனவில் தோன்றியது. அங்கே ஒரு யானையைக் கூட பார்க்க முடியவில்லை என்பது சற்றே ஏமாற்றமாக இருந்தது. பாரதிதான் இல்லை, அங்கே ஒரு யானையாவது இருந்திருக்க வேண்டாமா?

டி.நகரை அடையும்போது மணி மூன்றுக்கு மேலாகிவிட்டிருந்தது. கருணையற்ற உஷ்ணமும் அலைக்கழிவும் களைப்பை உண்டாக்கியிருந்தது.

“மொதல்ல போய்ச் சாப்பிடலாம், எல்லாருக்கும் பசிக்குமில்ல,” என்றார். அவர் கண்கள் காலி மேசையொன்றைத் தேடின.

எப்போதும் போலவே காலையில் ஏதும் சாப்பிட்டிருக்க மாட்டார் என்றே யூகிக்க வைத்தது அவரின் உடல் மொழி. நடையை வேகமாகத் தள்ளிப் போட்டார்.

“இங்க முழுச் சைவம். இன்னிக்கி வெள்ளிக் கெழம ஸ்பெசலா இருக்கும் வாங்க” என்று சொல்லிக் கொண்டே விடுவிடுவென உள்ளே நுழைந்தார்.

நாற்காலியில் உட்கார்ந்தவர் எப்போது பரிமாறுவார்கள் என்று வேய்ட்டர்களை மாறி மாறி எதிர்பார்த்துக்கொண்டே இருந்தார்.

வாழையிலையில் நீர்த் தெளித்து துடைத்துக் கொண்டார்.

பனிப்பொதிபோல வெண்சோற்றை பரிமாறினான் வேய்ட்டர். அதிலிருந்து ஆவி மேலேறியது. பசியைத் தீண்டும் ஆவி. சுடுசோறு பட்ட வாழையிலை வாடித் துவண்டது. அதன் பச்சை மெல்லிய கருமையாக மாறிக்கொண்டிருந்தது. குருநாதன் சாம்பார், துணை உணவு போடும் வரை காத்திராமல் வெறும் சோற்றை வாயில் அள்ளிப் போட்டான். அவன் கைகள் லேசாக நடுங்குவதைப் பார்க்க முடிந்தது.

அதன் சூடு நாவைச் சுட்டிருக்க வேண்டும். உஸ் உஸ் என்று ஊதினார். கைகளை விசிறிக்கொண்டார்.

சாம்பார் ஊற்றப்பட்டு மேங்கறி வகைகள் பரிமாறப்பட்டன. சாம்பாரும் கொதிநிலையில் இருந்தது. கைவைத்து ஒரு முறை பிசைந்து சூடுபட்ட கையை விலக்கி, உதறி சோற்றில் விடாப் பிடியாய் கைவைத்து மீண்டும் பிசையத் தொடங்கினார். கொதிநிலை குறையவில்லை மீண்டும் ….சோற்றுக்குத் தன்னிச்சையாகக் கைபோவதை அவரால் தடுக்க முடியவில்லை! கைவைத்து பிசைந்தார். உடனே நீக்கி உள்ளங்கையைப் பார்த்தார். அது பழுத்து சிவப்பேறிவிட்டிருந்தது.

இரண்டு பிசையலுக்குப் பிறகு மீண்டும் கையை விலக்கி ஊதி ஆற்றுப்படுத்த முயன்றார்.

சூடு அவர் நினைத்த வேகத்தில் ஆறாது என்று முடிவெடுத்து மேங்கறி வகைகளை எடுத்து எடுத்து வாயில் போட்டார்.

பொறியல், அவியல், பிரட்டல், தயிர், ஊறுகாய், இனிப்பு என ஒவ்வொன்றையும் அவசரமாய் வாயில் போட்டார். சோறு ஆறியிருக்குமா என்று தொட்டுப் பார்த்ததும் அவர் முகம் மலர்ந்தது.

பிசைந்து பிசைந்து கவலம் கவலமாய் வாயில் போடும்போது உமிழ்நீர் சுரந்து கொண்டே இருந்தது.

மறு சோறு கேட்டு முடித்துவிட்டு மேலும் இரண்டு முறை கேட்டுச் சாப்பிட்டுக்கொண்டே இருந்தார். மோர் தயிர் ரசம் ஊற்றிக் குழைந்து குழைந்து உண்டான். மோரை உறிஞ்சி இழுக்கும் ஓசை கிளம்பியது. அவர் பசி ஓரளவுக்கு ஆறியிருக்க வேண்டும். முகம் வியர்த்திருந்தது. சட்டையின் நெஞ்சுப்பக்கம் நனைந்து உடம்போடு ஒட்டிக்கொண்டது.

முகத்தில் பசி வேட்கையின் களைப்பு முற்றாகத் தீர்ந்துவிடவில்லை. உணவு செரிக்கச் செரிக்க அந்தக் களைப்பு மறைந்து முகம் பழைய நிலைக்குத் திரும்பிவிடும்.

அவன் கைகழுவ போனபோது மனைவி என்னிடம் தனிந்த குரலில் சொன்னாள், ”காலையிலேர்ந்து ஒன்னும் சாப்பிடல போல இருக்கு!” நான் அவள் கையை அழுத்தினேன்.

சாப்பிட்டு முடித்தவுடன்தான், தான் அவதி அவதியாய் உணவுண்டதைக் கேவலமான சமிக்ஞை என உணர்ந்திருப்பார் போல, அதனை மறைக்கக் கொஞ்சம் முகம் குழைந்து, “சார் கொஞ்சம் ஒக்காந்திருங்க நான் போய் போன் பண்ணி கேட்டுட்டு வந்திற்ரேன், டைரெக்டர் ஸ்டீவன் ஏதும் சொல்லியிருக்கலாம்!”

வெளியே அவர் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தது தெரிந்தது. ஒரு வீட்டின் வெளிச்சுவரில் இருந்த மதிலில் இருந்த ஒரு கிண்ணத்தை நோக்கி ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து அதில் உள்ள நீரை உறிஞ்சிக் குடித்துவிட்டு சிறகு விரித்துச் சிலிர்த்து மீண்டும் மேலே பறந்தது.

“பாவம் இந்த வாய்ப்பாவது கிடைக்கணும்.” என்று ‘ப்ச்சு’ கொட்டினாள் மனைவி.

அவர் நின்றிருந்த முட்டுச் சந்து என் எதேட்சையான பார்வைக்குக் கிட்டியது. கைப்பேசியில் பேசியபடியே, பேண்ட் பையிலிருந்து எதையோ எடுத்தார். குஷ்ட ரோகம் கண்ட விரல் போலிருந்த ஒரு நெளிந்த துண்டு சிகிரெட்டை பற்ற வைத்து இழுக்கத் தொடங்கினான். அவசரமான நான்கைந்து இழுப்புக்குப் பிறகு சுவரில் அமுக்கி அணைத்துவிட்டு, மீண்டும் பையில் வைத்துக் கொண்டார்.

அவர் திரும்பிவந்த போது, “என்னப்பா ஏதும் நல்ல சேதி உண்டா?” என்று கேட்டேன்.

“இன்னிக்கி ராத்திரி சூட்டிங் இருக்காம், டைரெக்டர் என்ன வரச்சொல்லி இருக்கார்.”

“அப்படின்னா நாளைக்கு காலையில் நல்லா ரெஸ்ட்டு வேணும். நாங்க பாத்துக்கிறோம்.”

அன்று இரவு உணவை முடித்துவிட்டு, எங்களை விடுதியில் விட்ட பிறகே விடைபெற்றார்.

“இந்த முறை உனக்கு நல்லது நடக்கும், மருத மலை முருகன் கூட இருப்பான்.. தயங்காம போ” என்றாள் மனைவி.

“ஒங்க வாக்கு பலிக்கும்கா…”

நான் அவனை வழியனுப்புவதுபோல வெளியே போய் ஒரு நூறு ரூபாய்த் தாளைக் கையில் கொடுத்து, “சிகிரெட் வாங்கிக்கப்பா,”. என்றேன். அவர் கண்மாறாமல் என்னைப் பார்த்தார். விழிகளில் ஈரப்படலம் தோன்றி இருந்தது.

மறுநாள் காலை லோபிக்கு வந்தபோது அவர் சோபாவில் அமர்ந்து தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து திகைத்துப் போனோம். கண்களில் சோகை விழுந்து சுற்றி கருமை தட்டியிருந்தது.

மனைவி அவரைக் கூர்ந்து கவனித்து வருவாள் போல. ”ஒன்னு கவனிச்சீங்களா? அவண்ட இந்த ஒரு ஜீன்ஸ்தான் இருக்கு, அதத்தான் தெனைக்கும் பக்காய் பண்றான்” என்றாள் குரலை உயர்த்தாமல்.

அவரை லேசாகத் தட்டி எழுப்பினேன்.

“என்னாய்யா… நேத்து ராத்திரி போனியா?

கண்களை கசக்கியபடியே சொன்னார்.“போனேங்க்கா..ராத்திரியெல்லாம் காத்திருந்ததுதான் மிச்சம்…எனக்கான காஸ்டிங் அழைப்பு வரவேயில்லை. காத்திருந்து காத்திருந்து களைப்பா ஆயிடுச்சி, கண் செருக செருக விடிய விடிய முளிக்க வேண்டியதாச்சி, மத்த காட்சிகள் எடுக்கவே நேரம் ஓடிடுச்சு. இன்னிக்கி சொல்றேன்னு சொன்னாங்க!”

“ராத்திரியெல்லாம் தூங்காம இருந்திருக்கே….வீட்ல நல்லா ரெஸ்டாவது எடுத்திருக்கலாம்ல!”

மனைவியின் கரிசனப் படுவதிலிருந்து அவளை விடுவிக்க அவர் இப்படிச் சொன்னார், “பரவால்லாக்க அதெல்லாம் பழகிப்போச்சு, ஒங்கள யாரும் பழக்கமில்லாத இந்த சிட்டியில ஓரியா விட்டுட்டுப் போன கடவுள்கூட என்ன மன்னிக்கமாட்டார், உங்கள நல்லா கவனிச்சி அனுப்பனும்கா..” என்று பதிலிறுத்தித் தன்னையும் சமன் செய்துகொண்டார்.

“வீட்டுக்குச் சீக்கிரமா போய்டு. எங்களோடு இருந்து ஏன் லோல் படணும்?”

“பரவால்லக்கா நீங்க இருக்கிறது எனக்கும் ஒரு தொணையாத்தான் இருக்கு?”

“எத்தன வருஷமா சினிமாவு சான்ஸுக்கு டிரை பண்ணிட்டிருக்க குரு?”

“அஞ்சாறு வருஷம்கா…”

“காலம் இப்படியே போய்ட்டிருந்தா ஒனக்குன்னு ஒரு வாழ்க்க இருக்குல்ல! நாளைக்கு உன்நெல என்னாவும்நு பாக்கணும்ல?”

“அக்கா…. நான் இப்போ வாழ்றதுதான் வாழ்க்க. நான் சினிமாவுல ஜெயிக்கப்போறது உறுதி. அது நாலைக்கும் கெடைக்கலாம், நாலௌ வருஷம் கழிச்சும் கெடைக்கலாம், அந்த உறுதிதான் எனக்கு வாழ்க்க. ஒருகால் நான் சலிப்படைந்து வெளியேறிட்டா சினிமா என்ற பரவச நெனப்பே இல்லாம போயி, இது ஒரு வாழ்க்கையான்னு வாழக்கை திரும்ப என்னையே கேக்கும். ரஜினி ,விக்ரம்லாம் படாத கஷ்டமா நான் பட்டுட்டேன்?” அவருடைய வார்த்தைகளை என்னால் செரித்துக்கொள்ள முடியவில்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாத தினசரிகளை அவர் சந்தித்தே வருகிறார். ஆனாலும் அது ஒரு பொருட்டே அல்ல அவருக்கு, கலையை வரித்துக்கொள்பவர்களுக்கு, அந்த நினைப்பே மற்ற சிரமங்களைப் புறந் தள்ளுவது எனக்கு வியப்பை இரட்டிப்பாக்கியது.

புலனச் செய்தி ஓசை எழுப்பிய கைப்பேசி எடுத்துப் பார்த்தார்.

“அக்கா கமல் ஹாசன் புதுப் படத்துல ஒரு வேஷம் இருக்கு. டைரெக்டர் எனக்குத் தெரியும் . மணி எட்டுக்கு வந்திடுன்னு, கூட்டாளி செய்தி அனுப்பியிருக்கான். கமல்ஹாசன்கா…ஹய்யோ!” அவர் சொன்ன அந்த சினிமா என்கிற வார்த்தையின் காந்த நினைப்புதான் வாழ்க்கை, என்று சொன்னது இதைத்தான் என்று புரிந்தது. இந்த வாய்ப்பாவது கிடைத்தால் சரி பொழப்பு நடக்கட்டும் அவருக்கு!

அன்று மணி ஏழுக்கெல்லாம் புறப்பட்டுவிட்டார். இரவில் வெறும் வயிற்றோடு படுத்துவிடக் கூடாது என்பதற்காக உணவு சாப்பிட அழைத்தேன். மறப்பேதும் சொல்லாமல் உண்டுவிட்டுத்தான் போனார்.

மனைவி சற்றே எரிச்சல் தொனியில் சொன்னாள், “ஏங்க நம்மோட இப்படியே ஒட்டிக்கிட்டிருக்கானே…நாம் அவனுக்காக எக்ஸ்ட்றா செலவு செய்ய வேண்டியிருக்கே, ஒன்னு ரெண்டு நாள்னா பரவால்ல, இதே கதியாக் கெடக்கிறான். வரவேண்டாம்னு நாளைக்கு சொல்லிடுங்க, அவனுக்குச் சோறு போட்டே நமக்குக் கட்டுப்படியாகாது போலருக்கு!”

“வயித்துக்கு சாப்பிடத்தான் வரான். பசித்தவனுக்கு உணவு வழங்கும் சந்தர்ப்பம் இப்படி வந்தாதான் உண்டு. நாம் எப்பியாவது இல்லாதவங்களுக்கு மெனக்கெட்டுத் தேடிப்போயி சாப்பாடு போட்ருக்கமா?” என்றேன்.

“நாம இல்லனா என்னங்க செய்வான்?”

“நம்ம வர்றதுக்கு முன்ன எப்படி சாத்தியமானதோ அப்படித்தான் நாம இல்லாதப்பியும்! கடவுள் அவரவருக்கான உணவை எந்த ரூபத்திலியாவது கொடுத்துக்கிட்டுதான் இருக்காரு. இன்னிக்கி நாம நாளைக்கி வேறு யாரோ?”

இம்முறையும் நாங்கள் எதிர்பார்த்ததும், அவரின் ஆசையும் நடக்கவில்லை என்பதை அவரின் வழக்கமான வருகை உறுதிப்படுத்தியது,

நாங்கள் கேட்பதற்கு முன்னமேயே குரு முந்திக்கொண்டார். “ காலையிலியே சூட்டிங் ஸ்போட்டுக்குக் கெளம்பிட்டேன். வாஹினியில்தான் சூட்டிங். நான் போய்ச் சேர்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் நண்பன் வராதடா….. வேண்டாம் இந்த முறையும் ஏமாந்திடுவ…போய் சோலியப் பாரு! என்று எச்சரித்துவிட்டான்.”

நான், “ஏன் குரு என்னாச்சு?” என்று கேட்டேன்.

“டைரெக்டர் எவ்வளவோ கெஞ்சியும், வேற ஒரு துணை இயக்குனரே நடிக்கட்டும் என்று சொல்லிவிட்டாராம் தயாரிப்பாளர். தயாரிப்பாளர் பேச்சுக்கு மறுபேச்சு எடுக்குமா? படத்துக்குப் பணம் போடுறவங்களாச்சே?” அவரின் வார்த்தைகள் சுரத்திழந்து வெளியானது.

எனக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. சம்பிரதாயமாக.”பரவால்ல கடவுள் பெரிசா ஒன்னுக்கு உன்னத் தயார் பண்றார்னு நெனச்சிக்கோ. ஒரு வாசல் மூடுனா இன்னொரு வாசல் தெறக்காம போகாது எனறு அப்போதைக்கு ஒரு தேய்வழக்கை ஆறுதலாக சொல்லி வைத்தேன். மனைவி ஆமோத்திப்பதாய்ப் பட்டது.

அவன் சற்றுத் தள்ளி இருந்த நேரத்தில், ”நாளைக்கு சொல்லிக்கலாம். இப்போதைக்கு அவன இனிமே வரவேணாம்னு மூஞ்சிலடிச்சமாரி சொல்லிடாத!“ என்று அவள் காதுக்கு மட்டுமே கேட்கும்படி அறிவுறுத்தினேன்.

அவள் ஒன்றும் சொல்லவில்லை.

“கமலோட நடிக்க சான்ஸ் கெடச்சிருந்தா நான் வேற லெவலுக்குப் போயிருப்பேன்.” என்ற ஆற்றாமையில் முனு முனுத்தார்.

நான் மனதுக்குள்ளேயே நினைத்துக் கொண்டேன். ‘ஐந்தாறு வருஷமா அலைக்கழிந்தும் ஒரு அங்குலம் கூட முனனகர முடியாத நிலையில் சினிமா உலகம் இவருக்கு இருண்ட காலத்தையே திரும்பத் திரும்பக் காட்டிக்கொண்டிருக்கிறது. அந்த இருளில் ஒளியைத் தேடித் தேடி விட்டில் பூச்சாய் மோதி விழுந்துகொண்டே இருக்கிறான். ஆனால் தன் நம்பிக்கையை விட்டுவிடுவதாய் இல்லை! இவரே தன் லட்சியத்தை மாற்றிக்கொண்டால்தான் ஆயிற்று.’

“சார் இந்தச் சான்ஸ்சும் கைவிட்டுப் போயிடுச்சே “

நான் அவன் தோள்களைத் தொட்டு, “பரவால்ல இவ்ளோ காலம் காத்திருந்திட்ட. காலம் கனியும்.” என்றேன் அவர் எண்ண ஓட்டத்துக்கு ஒத்திசைவாக.

அப்போது என் கையைப் பற்றிக்கொண்டார் குரு.

அன்றிரவு கிளம்புவதற்கு முன்னர் மனைவி கண்களால் எனக்குச் சமிக்ஞை கொடுத்துக் கொண்டே இருந்தாள், எனக்கு வாய் வரவில்லை.

“அவன் போனபின்னர், போன் பண்ணியாவது சொல்லிடுங்க. அவனுக்குத் தெரியாது …..விருந்தாளிக்குத் தொந்தரவு கொடுக்கக்கூடாதுன்னு: விருந்து மருந்தும் மூனு நாளைக்குத்தான்னு இப்படி ஒரு வளந்த மனுஷனுக்குக்கூடத் தெரியலைனா எப்படி? நாம்தான் சொல்லிப் புரிய வைக்கணும்,” என்றாள்.

‘அவனுக்கு இதெல்லாம் புரியாமலா..வயிற்றுப் பசிக்கு அறிவு ஏது .!’ என்று மனதுக்குள்ளேயே சொல்லிக் கொண்டு, போனை எடுத்து டைல் செய்தேன்.

“குரு…”

“சொல்லுங்க சார்….நாளைக்கு நாங்க திருச்சிக்குக் கெளம்புறோம்…”:

“ஓகே சார் சூப்பர். எனக்கு அங்கியே சொல்லியிருக்கலாமே?

“இல்ல இது இப்ப எடுத்த முடிவு” என்று மனதறிய பொய் சொன்னேன். என் சொற்கள் மனசாட்சிக்கு ஒவ்வாமையாக இருந்ததால், அவை குரல் வளையத்திலேயே சிக்கிக்கொண்டன. என் போலியான வார்த்தைகளை என்னாலேயே செரித்துக்கொள்ள சிரமமாகத்தான் இருந்தது.

“நல்ல படியா போய்ட்டு வாங்க, எனக்கு மறக்காம போன் பண்ணுங்க” என்றார்.

நாங்கள் இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் மலேசியாவுக்கே பயணப்பட்டோம். சென்னை விமான நிலையத்தில் அவரை மீண்டும் சந்திப்போம் என்று எதிர்பார்க்கவில்லை! .

ஓடி வந்து கைகொடுத்து “திருச்சிக்குப் போனீங்களா?. எல்லாம் எப்படிப் போனிச்சி? சூப்பரா?” என்றார் வாஞ்சையோடு. மனைவி அவன் இருப்பை விரும்பாதவள் போல தென்பட்டாள்.

“இங்க என்ன பண்றே குரு?”

“சிங்கப்பூர்லேர்ந்து ஒரு குடும்பம் வருது…சார்”

“நல்லபடியா சுத்திக் காட்டுப்பா“

“சார் எத்தன மணிக்கு பிலைட்”

“பிலைட் டிலேய்னு அறிவிச்சிட்டாங்க, இன்னும் மூனு மணி நேரம் இருக்குப்பா?” என்று பெருமூச்செரிந்தேன் சலிப்போடு.

“செத்த இருங்க,” என்று சொல்லிவிட்டு விரைந்து வெளியேறினார் குரு.

பத்து நிமிடம் கழித்து இரண்டு நெகிழிப் பைகளை எங்கள் கைகளில் நீட்டிச் சொன்னார், “அக்கா பிலைட் கோலாலம்பூர் போய்ச்சேர்ந்து நீங்க வெளியேற ஏழு மணி நேரத்துக்கு மேலாகும், அது வரைக்கும் பசிக்கு இத சாப்பிட்டுக்கோங்க, அங்க ஒக்காந்தி சாப்பிட்டுங்க…..”

மனைவி அவனை ஏறிட்டுப் பார்த்தாள்…

“இல்லக்கா ரொம்ப மாசத்துக்கு அப்புறம் இன்னிக்கி காலைய்ல ஒரு காட்சியல நடிக்க சான்ஸ் கெடச்சது. ஒங்கள பாத்த நேரம், ஒங்களோடு ஆசிவாதம்னுகூட சொல்லலாம் அத. நாயகன் அப்பாவுக்கு டிரைவரா நடிச்சேன். ‘சரிங்கைய்யான்னு’ ஒரு வார்த்த வசனம்கூட பேசியிருக்கேன். ஆயிரம் ரூபா கொடுத்தாங்க…படத்தோட பேரு ‘மகான்கள் இல்லை” படம் வந்தா மறக்காம பாருங்க……”” என்று சொல்லிவிட்டு அகன்றார்.

பொட்டலத்தைப் பிறிக்கும்போது அதன் சூடு கையைச் சுட்டது .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *