சாந்தி குடியிருப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: November 13, 2024
பார்வையிட்டோர்: 1,336 
 
 

அத்தை…உங்க போன் அடிச்சிட்டே இருக்கு…ரொம்ப நேரமா…

கல்யாண வீடு…! ஒரே சத்தம்…ஒரே சிரிப்பு…போன் சத்தம் கேட்கவே இல்லை.

சங்கீதா…போனை எடுத்தாள். பத்து மிஸ்டு கால்கள். இறைவா….? யார் இப்படி பத்து தடவை போன் செய்தது. கால் ஹிஸ்டரியை பார்த்தாள்.

சென்னையில்…நமது சாந்தி அபார்ட்மெண்ட்டில் இருந்து, அத்தனை பேரும் போன் செய்துள்ளார்கள். ஒன்றுமே புரியவில்லையே.

நேற்று தான்…அங்கிருந்து புதுக்கோட்டைக்கு வந்தேன். தங்கையின் திருமணத்திற்காக… அதற்குள் என்ன நடந்தது.

ஏதேதோ…கற்பனை.
நமது வீட்டில் திருடு ஏதும் போய்விட்டதோ.…!
யாராவது இறந்து போய் விட்டார்களோ…!
நமது அப்பார்ட்மெண்ட்டில் தீப்பிடித்திருக்குமோ….!
கட்டிடம் ஏதும் இடிந்து விட்டதோ…!
40 வருட பழைய கட்டிடம். ஆங்காங்கே ஆயிரம் விரிசல்கள்….!

ஒரு நொடியில் பலவிதமான எண்ணங்கள்…!

யாருக்கு முதலில் போன் செய்து கேட்பது…? போன் செய்யவே…. மனதிற்குள் ஒரு பயம்… என்னவாக இருக்கும்…? ஒரு நொடியில் ரொம்பவும் …. நொருங்கித் தான் போனேன். முதலில் விமலாவிற்கு போன் செய்தேன்.

என்ன விமலா…என்ன ஆச்சு…? எல்லாரும் போன் பண்ணி இருக்கீங்க. நான் என் தங்கை கல்யாணத்திற்காக ஊருக்கு வந்தது தெரியும் இல்லையா…?

தெரியும் தெரியும். அதனால தான் சங்கீதா போன் செய்தோம். கோர்ட்டில் இருந்து நோட்டீஸ் வந்து இருக்கு. நாளைக்கு நாம எல்லாரும் கோர்ட்டில் ஆஜர் ஆகணுமாம். இப்பதான் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி, கோர்ட்ல இருந்து, நேரில் வந்து, ஒருத்தர் கொடுத்துட்டு போனார்.

என்ன…. கோர்ட்?… என்ன….நோட்டீஸ் ?….எதுக்கு ? எனக்கு ஒன்னுமே… புரியல விமலா.

அந்த திலகா… பைத்தியம்… நம்ம மேல கேஸ் போட்டு இருக்கு.

எதுக்கு அவ கேஸ் போட்டு இருக்கா…?

எங்களுக்கே எதுவும் புரியல. ஆனா நாளைக்கு நாம கண்டிப்பா கோர்ட்டுல ஆஜராகனுமாம்.

அய்யய்யோ…நாளைக்கு தான் என் தங்கை கல்யாணம்.

நீங்க…இருந்துட்டு, உங்க வீட்டுக்காரரை உடனே அனுப்பி வையுங்க…ராத்திரி பத்து மணிக்கு, ரயில் ஏறினாக் கூட காலையில வந்துரலாம்.

என்ன விமலா இது. எனக்கு தலையே சுத்துது. அவளுக்கு பைத்தியம் முத்தி போச்சா…? அவ சும்மாவே இருக்க மாட்டாளா…? கண்டிப்பா வரணுமா விமலா..? நீங்க போயிட்டு வாங்க. நாங்க நாளைக் கழிச்சு வந்துருவோம்.

ஐயோ…சங்கீதா புரிஞ்சுக்கோங்க. கண்டிப்பா நாம எல்லாரும் போகணுமாம். இல்லாட்டினா எக்ஸ் பார்ட்டி ஆயிருமாம்.

எக்ஸ் பார்ட்டி….யா. அப்படின்னா…?

அதெல்லாம் எனக்கு தெரியாது. சாரை கண்டிப்பா உடனே புறப்பட்டு வரச் சொல்லுங்க.


சங்கீதாவிற்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.

கணவரை தேடினாள். அவர் யாருடனோ உற்சாகமாய் பேசிக் கொண்டிருந்தார். ஓடிச்சென்ற சங்கீதா.

ஏங்க…இங்க… கொஞ்சம் வாங்களேன்.

என்ன …ஏன் இப்படி கத்துற…?

ஐயோ…. கொஞ்சம் வாங்களேன்.

என்ன…?

நம்ம அப்பார்ட்மெண்டில் இருந்து ஒரே போன் கால். அந்த சனியன் நம்ம எல்லார் மேலயும் கேஸ் போட்டு இருக்காம். நாளைக்கு கண்டிப்பா கோர்ட்டுக்கு போகணுமாம்.

எந்த சனியன்…?

அந்த சனியன் தான். அந்த திலகா சனியன்.

கேஸா…. நாளைக்கு கோர்ட்டுக்கு போணுமா…? என்ன சொல்ற சங்கீதா.?

ஆமாங்க ….நாளைக்கு போகணுமாம். நீங்க போய் உடனே ஒரு பஸ் புடிச்சு கிளம்புங்க. ட்ரெயின்ல டிக்கெட் கிடைக்குமா என்ன..! திருச்சி பஸ் ஈசியா கிடைக்கும். திருச்சி போய், சென்னைக்கு போங்க.

ஜீவாவிற்கு ஒரே குழப்பமா இருந்தது. விமலாவின் கணவருக்கு போன் செய்து, விவரம் அறிந்து, அரை மணி நேரத்தில் புறப்பட தயாரானார். கிடைத்த பேருந்தில் ஏறி, திருச்சி சென்று, சென்னை செல்ல முடிவு செய்தார்.

சங்கீதாவிற்கு..அத்தனை சந்தோஷமும் பறந்து போனது. அந்த திலகாவின் மேல்… அப்படி ஒரு கோவம். எப்போ தங்கையின் திருமணம் முடியும். எப்போ சென்னை புறப்படலாம் என இருந்தது சங்கீதாவிற்கு.


தங்கையின் திருமணம் முடிந்து…அம்மாவிடம் ஏதோ சாக்கு சொல்லிவிட்டு,
அடுத்த நாள் சென்னைக்கு புறப்பட்டு சென்றாள் சங்கீதா. சாந்தி குடியிருப்பில்…ஒரு வாரத்திற்கு…இதே பேச்சாய் இருந்தது.

சங்கீதாவால் ஜீரணிக்க முடியவில்லை. இதற்குப் போய் கேஸா….! இதற்காகவா கோர்ட்டில் கேஸ் போட்டுள்ளாள்..?

20 நாளில் அடுத்த வாய்தா வந்தது. அவசரத்திற்கு ஏதோ ஒரு வக்கீலை பிடித்திருந்தார்கள். நமது வக்கீல் கோர்ட்டுக்கு போனால் போதும் என்றாலும் , கோர்ட்டில் என்ன நடக்கிறது என்பதற்காக, அத்தனை பேரும் கோர்ட்டிற்கு சென்று வந்தோம்..

அவ பெட்டிசனுக்கு பதில் எழுதி கொடுத்தோம். விசாரணை கமிஷனர் வந்து குடியிருப்பை பார்வையிட்டு சென்றார். நீதிபதி கேட்டுக்கொண்டபடி எங்க வக்கீல் சமாதானம் பேச சென்றார். அவள் சமாதானத்திற்கு வருவதாய் இல்லை. கோர்ட்டில் ஆர்டர் போடட்டும். இல்லையெனில் நான் சுப்ரீம் கோர்ட் போய் கூட ஆர்டர் வாங்கி வருவேன் என்றாள்.

உண்மையில் எங்களுக்கு ஒரே சிரிப்பு. இதுக்கு டில்லிக்கு போய் ஆர்டர் வாங்குவாளா…? பேஸ்…பேஸ்….இவளுக்கு ஈகோவா….? பைத்தியமா….? ஒன்னும் புரியல.

வாய்தா….வாய்தா….என ஒரு வருடத்திற்க்கு மேல் ஓடிவிட்டது.


புதுக்கோட்டையில் இருந்து….மீனா சென்னைக்கு வந்து, மூன்று நாட்கள் ஆகிவிட்டது. மகள் சங்கீதாவை பார்த்து விட்டு செல்லலாம் என வந்திருந்தாள்.

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில், யாரும் யாருடனும் பேசுவது குறைவு. மீனாவிற்கு மூன்று நாளில், எப்போது புதுக்கோட்டை செல்லலாம் என இருந்தது..

சங்கீதா…. நாளைக்கு நான் ஊருக்கு கிளம்புறேம்மா…

ஏம்மா…. ஒரு வருஷம் கழிச்சு இப்பதான் வந்திருக்க .ஒரு வாரம் இருந்துட்டு போக கூடாதா…?

மனுச…மக்கள… பாக்காம வீட்டுக்குள்ளேயே இருக்க முடியலம்மா…

கீழ் வீட்டில், ஒரு ஜானகி பாட்டி இருக்காங்க. போய் அவங்க கூட பேசிட்டு இரு. உனக்கு நல்லா பொழுது போகும்.

சங்கீதா..அம்மாவை அழைத்துக் கொண்டு போய், ஜானகி பாட்டியிடம் அறிமுகப்படுத்தினாள்.


இரண்டு நாட்களாக… ஜானகி பாட்டியோடு நன்றாக பொழுது போனது இருவருக்கும் ஐந்தாறு வயசு வித்தியாசம் இருக்கும். இருப்பினும் பெயர் சொல்லி பேசிக்கொண்டார்கள்.

என்ன ஜானகி ….ஏதோ சங்கீதா சொல்லிக்கிட்டு இருக்கா. கோர்ட்டுல கேஸ்.. அது இதுன்னு இந்த பிளாட்டில். எவ அவ… புதுசா இங்க வீடு வாங்கிட்டு வந்திருக்காளாமே…!

ஆமா மீனா…அதை ஏன் கேக்குற….? கொஞ்ச நாளா எங்க நிம்மதியே போச்சு….! சனியம் புடிச்சவ…எங்க இருந்து இந்த பிளாட்க்கு வந்தாளோ தெரியல….! அவளை…. நினைச்சாலே வயிறு எரியுது.

சென்னையில, இதுக்கு கூடவா கேஸ் போடுவாங்க. ஆச்சரியமா இருக்கு. 15 பேர் குடியிருக்கிற இந்த இடத்துல, தாயா புள்ளையா பழக வேண்டாம். ஏதாவது பிரச்சனைனா சுமுகமா பேசி முடிவு செய்யணும்.

ஐயோ…நீ வேற…அவ வீடு வாங்கிட்டு வந்ததிலிருந்து, அது குறை இது குறை…அத மாத்து…இதை மாத்துனு….ஒரே பிரச்சனை தான். அவ வீடு வாங்கிட்டு வந்தப்புறம் மூணு மாதம்தான், மாத பராமரிப்பு தொகை கொடுத்தா…அப்புறம் இதுவரை மூணு வருஷமா, கொடுக்கவே இல்ல. கேட்டா….நீங்க கட்டிடத்தை இதுவரை நல்ல பராமரிக்கல. அதனால… நான் காசு தரமாட்டேன் அப்படிங்கிறா…! என்ன செய்றதுனே தெரியல…!

அடக்கடவுளே…. மூணு வருஷமா கொடுக்கலையா….? அப்புறம் எப்படி பொது கட்டிடத்தை பராமரிக்கிறது..? பொது தண்ணீர் , பொது மின்சாரம் , மோட்டர் சரி செய்வது….அதுக்கு யார் காசு கொடுக்கிறது…?

என்ன செய்ய… போலீஸ்ல சொன்னா ஒன்னும் கண்டுக்க மாட்டேங்கிறாங்க. சிவில் கேசில் நாங்க தலையிட மாட்டோம்ன்னு சொல்றாங்க. அடிதடி நடந்தா வாங்கன்னு சொல்றாங்க. அதுக்காக அவளை அடிக்கவா முடியும்.?

இந்த கேஸ் மட்டும் என்னவாம். அவள் மேல் மாடில இருக்கா. அவ வீட்டுக்கு மேல் மொட்டை மாடி இருக்கு. பக்கத்து வீட்டு பகுதியில விழுகிற மழை தண்ணீர், அவ வீட்டு மொட்டை மாடி பகுதிக்கு போகுதாம். அதனால ஒழுகுதாம். மொட்டை மாடியில் மழைத்தண்ணீர் வாட்டம் அவள் வீட்டு பக்கம் இருப்பதால் ,மழை தண்ணீர் அப்படி செல்கிறது. 40 வருஷத்துக்கு முன்னாடி, அப்படி மழைவாட்டம் வச்சிருக்காங்க. இப்ப என்ன செய்ய முடியும். இது வரை யாரும் எதுவும் சொல்லல. ஒரு பிரச்சனையும் இல்லை. பழைய வீட்ட இவ வாங்கிட்டு வந்திட்டு, இவ சொல்றபடி மத்தவங்க ஆடணும்னு நினைக்கிறாள்.

மழைத் தண்ணீர் இவ வீட்டு மொட்டை மாடி பக்கம் வரக்கூடாதாம். எல்லாருக்கும் பொதுவான மொட்டை மாடில குறுக்கால இரண்டு அடி உயரத்திற்கு தடுப்புச்சுவர் கட்ட ஆரம்பிச்சிட்டா…! நாங்க எவ்வளவோ சொன்னோம். மேல் தளத்தில் இருக்கிற எல்லாருக்குமே ஒழுகத்தான் செய்யுது. மத்தவங்க கெமிக்கல் பேஸ்ட் போட்டு சிம்பிளா சரி செய்து கொண்டார்கள். அது மாதிரி பண்ணிக்கோன்னு சொன்னோம். கேட்க மாட்டேங்கிறாள்.

குறுக்கால சுவர் கட்டுவதை நாங்க தடுத்தோம். அவளே 100க்கு போன் செய்தாள். போலீஸ் வந்து விசாரிச்சிட்டு, பொதுவான இடத்தில் இது போல் சுவர் கட்டக்கூடாது எனக்கு கூறி, வேலையை நிறுத்தி விட்டார்கள்.

வேலையை நிறுத்தியதால் எனக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என கூறி எங்க எல்லார் மேலயும் கேஸ் போட்டு விட்டாள். இதுதான் கதை. கேஸ் போட்டு 18 மாதம் ஆச்சு. இதுவரை ஒன்றரை லட்சம் செலவு ஆயிடுச்சு. உப்புச்சப்பு இல்லாத விஷயம். வக்கீல் தான் சாப்பிட்டு போறார். 25 வாய்தா வந்திருச்சு.. ஒவ்வொரு வாய்தாவுக்கும் 5000 ரூபாய் வக்கீலுக்கு அழனும். கட்டிடத்தை பராமரிப்பதற்கு செலவு செய்தாலும் பரவாயில்லை. யாருக்குமே பயனில்லாமல் பணம் போகுது.

வக்கீல் வச்சா… நாம எதுவும் கோர்ட்டில் பேச கூடாதாம். வக்கீல் தான் பேசணுமாம் . வக்கீலுக்கு என்ன கவலை இந்தக் கட்டிடத்தை பத்தி…வாய்தா வரவர… அவருக்கு 5000 ரூபாய் கொடுக்கனும்.. இதுதான் நியதி, இதுதான் நடைமுறை….! இதுவரை, ஒரே ஒரு நாள் தான், வக்கீல் நீதிபதியுடன் பேசி இருக்கார். ஜூனியரை அனுப்பி …வாய்தா வாங்கிட்டு…ஐயாயிரம் வாங்கிட்டு போயிடுவாரு. வாய்தா…வாய்தான்னு சொல்லி வெட்டியா கோர்ட்டுக்கு அலஞ்சுகிட்டு இருக்கோம். போறோம்…வாறோம். அவ்வளவுதான்.

என்னதான் சொல்றாங்க ஜட்ஜூ அம்மா..

அவங்களுக்கு ஆயிரம் கேஸ். எங்க கேஸை முழுசும் புரிஞ்சுக்கிட்டாங்களா…என்னன்னு தெரியல. அவ பெட்டிசனுக்கு பதில் எழுதி கொடுக்க சொன்னாங்க. எழுதிக் கொடுத்தோம். ஜட்ஜூ எல்லாத்தையும் படித்து புரிந்து , 15 பேருக்கு சொந்தமான பொதுவான மொட்டை மாடியில், நீ குறுக்கே தனியாக சுவர் எழுப்ப ,அடுக்குமாடி விதிகளின்படி, உனக்கு எந்த உரிமையும் கிடையாதுன்னு, இந்த கேசை டிஸ்மிஸ் செய்யணும். இதுவரை நடக்கல.

ஜட்ஜ் அம்மா சொன்னபடி. … முதலில் ஒரு வக்கீல் வந்து, மொட்டை மாடியை பார்த்துட்டு போனாரு. அப்புறம் ஒரு இன்ஜினியர் வந்து மொட்டை மாடியை பாத்துட்டு போனாரு. இதுதான் இதுவரை நடந்தது மீனா.

இது… உலகத்துல இல்லாத கதையாவுல இருக்கு…உலகம் முழுதும் அடுக்குமாடி கட்டிடம் இருக்கு. கடைசி மாடியில் இருக்கிறதாலே, எப்படி இவ சுவர் கட்டுவாளாம்..?. கோர்ட் சுவர் கட்ட அனுமதி கொடுத்திடுமா..? இவளுக்கு அனுமதி கொடுத்தா, அப்புறம் அடுக்குமாடில, மேல் தளத்தில் இருக்கிறவங்க அத்தனை பேரும், அவங்க இஷ்டத்துக்கு கட்ட ஆரம்பிக்க மாட்டாங்களா….?

மழை தண்ணி ஒரு பக்கத்துல இருந்து, வாட்டம் வச்ச பக்கம், போகத்தானே செய்யும். நாம மழையை தடுத்தா நிறுத்த முடியும்? மழைத் தண்ணீர் வாட்டம்…அவ வீட்டுப் பக்கம் இருக்குன்னு தெரிஞ்சு தானே வாங்குனா…! நடுவுல சுவர் கட்டுனா, தண்ணி தேங்கி கட்டிடம் முழுவதுமே பாழாகி விடுமே..!

அட நீ வேற மீனா. கட்டிடம் ரொம்ப பழுதடைந்ததாலே, இடிச்சு கட்ட போறாங்க…அப்படின்னு நல்லா தெரிஞ்சு தான்….குறைத்து பாதி விலைக்கு வாங்கினாள்.

அடிப்பாவி…பாதி விலைக்கு வாங்கிட்டு தான்… இப்படி சுவர் கட்ட போறாளா?
இது ஒரு கேஸ்ன்னு….கோர்ட்ல நடக்குது…? நீங்களும் அலையறீங்க. அப்பப்பா…. எனக்கு நினைச்சாலே தலையை சுத்துது ஜானகி.

ஒரு மணி நேரத்துல, பேசி முடிக்கிற விஷயம் மீனா…ஒன்றறை வருஷத்துக்கு மேல வாய்தா…வாய்தானு…ஓடிட்டு இருக்கு. சிவில் கேஸ்னா குறைந்தது மூணு, நாலு வருஷம் ஆகுமாம்…ஏன் பத்து வருஷம் கூட ஆகுமாம். அதுக்குள்ள, கட்டிடம் இடிஞ்சு விழுந்துரும்.

எப்பதான்…விசாரிச்சு தீர்ப்பு சொல்லுவாங்களாம்..?

கடவுளுக்குத்தான் வெளிச்சம். அதுதான் கோர்ட்டு. அதுதான் நீதித்துறையின் நீதி. உலகம் பூரா கேஸ் இப்படித்தானே பத்து வருஷம் 15 வருஷம்னு இழுத்துகிட்டு கிடக்கு. அதுல வேற… ஜட்ஜையும் அடிக்கடி மாத்திடறாங்க. காலம் கடந்த நீதி எதுக்கு…. ஜானகி..?

பத்து வயசு பெண் குழந்தையை, 30 வயது வாலிபன் பாலியல் வல்லுறவு செய்து கொன்றான் என் நியூஸ் வரும். ரெண்டு நாள் அதை பற்றியே பேச்சு டிவியில. பிறகு மயான அமைதி. அப்புறம் கோர்ட்டு ,கேஸ், விசாரணைன்னு வருஷங்கள் ஓடும். ரெண்டு நாள்ல விசாரிச்சு …அவனை நிக்க வச்சு சுடுவதை விட்டுட்டு…நீதிக்காக அம்மா அப்பா , அலையோ அலையோனு அலைந்து, நிம்மதி இழந்து சாவாங்க. இதுதான் நாட்டுல நடக்குது. வாழ்க்கையில கோர்ட்டுக்கு போற நிலைமையே வரக்கூடாது சாமி… ஜானகி புலம்பினாள்.

சரியா சொன்ன ஜானகி. நம்ம பணம் வீணாகும் . நம்ம நிம்மதி போயிடும். நம்ம நேரமும் வீணாகும். மன உளைச்சல் தான் மிச்சமாகும்.

கோர்ட் நடைமுறையை நெனச்சா…கோவமா…வருது ஜானகி! கேஸ் திர்ப்பு வருவதற்குள்…பாதி பேர் செத்தே…போயிருவான்.

ஐயோ.. மீனா… இத பேசினாலே மனசு கொதிக்குது. இவ பண்றதை நினைச்சு வேதனைப்படுவதா? வக்கீல் பண்றதை நினைச்சு வேதனைப்படுவதா? நீதிபதி வாய்தா கொடுப்பதை நினைத்து வேதனைப்படுவதா..? அடிக்கடி நீதிபதியை மாத்துறாங்களே. அதை நினைச்சது வேதனைப்படுவதா.? ஒன்னும் புரியல. இந்த 70 வயசுல நானும் பல தடவை கோர்ட்டுக்கு போய் வந்துட்டேன். மனசு எறியுது மீனா. வேற ஏதாவது பேசு.

கேட்கிற எனக்கே அப்படித்தான் இருக்கு. இருந்தாலும் என்ன செய்ய. கோர்ட் நடைமுறை அப்படித்தானே இருக்கு…! அத நம்மனால மாற்ற முடியுமா…?ஆனா ….நிச்சயம் நான் சொல்றேன். ஒருநாள் அவ….இதுக்கெல்லாம் நல்லா வருத்தப்படுவா. தூங்கி உயிரோட எழுந்தா தான் அடுத்த நாள் வாழ்க்கை நிச்சயம். இப்படி வீண்பா..கேஸ் போட்டு அவளும் அலைந்து, நம்மளும் அலைந்து, காச வக்கீலுக்கு கொட்டிட்டு, எல்லாரோட மன நிம்மதியும் போயி…ச்சே….

நான் இதுவரை சினிமால தான் கோர்ட்டு சீன் பார்த்து இருக்கேன். சினிமாவில ஒரு ஐந்து தடவையில தீர்ப்பு சொல்லிடறாங்களே என்ற மீனாவிடம்,

சினிமால அப்படித்தான். ஆனால் நடைமுறையில் அப்படி இல்ல மீனா என்றாள் ஜானகி.

சரி ஜானகி. இதுக்கு காலம் தான் பதில் சொல்லனும். எதையும் மாற்றுகிற சக்தி காலத்திற்கு உண்டு. பிரச்சினையை காலத்தின் கையில் விட்டு விடுங்கள். வருத்தப்படாதீங்க. வருத்தப்பட்டு ஒரு பிரயோஜனமும் இல்லை. அவளே ஒரு நாள் மனம் திரும்பி வருவாள் அல்லது காலம் அவளுக்கு நல்ல பாடம் புகட்டும். நாளை நான் புதுக்கோட்டை கிளம்புறேன் ஜானகி.

ம்….போய் அடிக்கடி போன் பண்ணு மீனா.

போன் பண்றேன்… நீங்க இதையே நெனச்சு வருத்தப்படாதீங்க, என சொல்லிவிட்டு, மாடிப்படி ஏறினாள் மீனா. திடீரென்று ஏதோ விழுகிற பெரிய சத்தம் கேட்டு திடுக்கிட்டு அலறினாள். ஒரு நொடியில், மேல் படிக்கட்டின்… கூறை தொப்பென்று திலகாவின் கைகளின் மேல் விழுந்திருந்தது. ரத்த வெள்ளத்தில் திலகா…! வலது கை முட்டிக்கு கீழே முழுவதும் நசுங்கி விட்டது.

சங்கீதாவின் அம்மா ஓடிப்போய் திலகாவை தாங்கிப் பிடித்தாள்.

பதறிப் போன விமலா விரைந்து ஆம்புலன்ஸுக்கு போன் செய்தாள்.

– ஜூலை 2023, தாமரை இலக்கிய மாத இதழில் வெளியிடப்பட்டது.


இவர் வீரமங்கை வேலு நாச்சியார் அரசாட்சி செய்த, சிவகங்கை சீமையில் பிறந்து, வளர்ந்து, கல்லூரி படிப்பை சிவகங்கையில் முடித்து, திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்து, தலைமை செயலக அரசு பணியில் அமர்ந்து, பல அரசுத் துறைகளில் பணிபுரிந்து, தற்போது ஓய்வு பெற்றுள்ள ,உயர் அரசு அதிகாரி. இவரது கணவர் மத்திய அரசு  நிறுவனத்தில் , தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். ஒரே மகன் மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராய் பணி புரிகிறார்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *