சாத்தானை வென்ற சரித்திரங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 11, 2016
பார்வையிட்டோர்: 8,154 
 
 

மலை நாட்டில் ஒரு கண்டக்டராக நெடுங்காலம் வேலை பார்த்து வந்த சிதம்பரநாதன் தோட்டத்துரையோடு ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் அந்த வேலையை ஒரு பொருட்டாக நம்பாமல் தூக்கி எறிந்து விட்டுச் சுதந்திரப் போக்குள்ள இலட்சிய மனம் கொண்ட ஒரு வீர இளைஞனாய் தனது சொந்த ஊரான ஏழாலைக்கு வந்து களம் இறங்கிய நேரம். அப்போது அவன் தன் அக்கா வீட்டிலேயே தங்கி இருந்தான் வேறு புகலிடம் இல்லை அவனுக்கு பிறந்ததிலிருந்தே அவன் அனாதை தான் அக்காவும் இல்லாமல் போயிருந்தால் என்றோ அவன் கதை முடிந்திருக்கும்

சிறுவயதிலிருந்தே தான் பிறந்த அந்த மண்ணை உயிராக நேசித்து வளர்ந்த மனப் பாங்கு அவனுடையது அது கனல் கொண்டு எரியும் போது எல்லாமே அவனுக்குத் துச்சம் தாம் அப்படிப்பட்ட புனிதமான உயிர் வார்ப்பை அவன் கொண்டீருந்ததால் சராசரி இளைஞர்கள் போலில்லாத அவனின் அத்தகைய உயர் நிலை பண்பு மனதையே கண்டு அவன் காலடியில் வந்து விழ இளமைக் கனவு காணும் யுவதிகள் முண்டியடித்துக் கொண்டிருந்த நேரம் அது வேலை பதவி அந்தஸ்து என்று பார்க்கும் பார்க்கும் போது ஒரு தரம் குறைந்த வேலையில் இருக்கும் அவனுக்கு யார் தான் பெண் கொடுக்க முன் வருவர்? அப்படி என்ன வேலை அவனுக்கு? சுன்னாகத்திலுள்ள கூல் பார் ஒன்றில் தேனீர் பரிமாறும் கீழ் மட்டச் சேவகன் தான் அவன்

அதிகாலையே அதற்காகப் பூரணி இருக்கும் அந்த ஒழுங்கை வழியாகத் தான் அவன் சைக்கிளில் ஊர்வலம் போவது அழகான ஒரு காட்சி லயமாகக் கண்களுக்கு விருந்தாகும் வெறும் கண்களால் பார்க்கும் போது அவன் அப்படி ஒன்றும் பேரழகனல்லன் கறுத்த ஒல்லியான அவனுக்குக் சற்றே நீண்ட முகம் இடுங்கி வெறித்த கண்களுடன் களை இழந்த முகம் அவனுக்கு தீர்க்கமாக அதை மறந்து அவன் மனசையே நினைவு கூர்ந்து உற்று நோக்கும் போது அவனைச் சுற்றி இருள் நீங்கிய ஒளிச் சுவடுகளே பிரகாசித்துக் கொண்டிருப்பதாய் பூரணி அவனை அந்த வழியில் காணும் போதெல்லாம் மெய் சிலிர்க்க அதை ஓர் ஆத்ம அனுபவமாக உணர்வதுண்டு

`வாழ்க்கையின் நிழல் சம்பவங்களோடு ஒன்றாமல் ஆன்மீக அனுபூதியில் கரை கண்ட ஞானி போல எப்போதும் நிலை குலையாத உயிரை உற்று நோக்கும் தீட்சண்யமான உள் நோக்கையே கொண்டு கனவில் மிதக்கிற மாதிரி களை கட்டித் தடம் புரளாத அவனைக் காணும் போதெல்லாம் கையெடுத்துக் கும்பிடவே தோன்றும் பூரணிக்கு அவனோடு பழகுவதே இளமை உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீக அனுபவம்

வேதா அவளின் நெருங்கிய சிநேகிதி. அதிலும் பக்கத்து வீட்டுக்காரி. அவள் தூரத்து உறவு என்பதை விட அவளின் ஆத்மார்த்தமான உறவையே மனதில் கொண்டு பூரணிக்கு அவளோடு பழகுவதே ஒரு சுகமான அனுபவம். மனம் விட்டு தன் அந்தரங்க விடயங்களையெல்லாம் வெளிப்படையாகவே அவளோடு பேசுவாள். வாழ்க்கை குறித்த சிக்கலான பிரச்சனைகளுக்கும் தீர்வு கூறுகின்ற அறிவியல் அனுபவ ஞானத்தை அவள் நிறையவே கொண்டிருந்தாள். அவளுக்குச் சிதம்பரநாதன் ஒன்ற விட்ட சகோதரன். இரவு கடையிலிருந்து திரும்பும் போதெல்லாம் வேதா வீட்டிற்கு வர அவன் தவறுவதில்லை வேதாவின் அம்மாவோடும் வேதாவோடும் அவனுக்கு மனம் விட்டுப் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன அதிலும் அவன் ஓர் இலட்சியவாதி. அதிகம் படிக்காவிட்டாலும் வாழ்க்கை அனுபவ ஞானத்தைக் கொண்டு, சரளமாகப் பேசக் கூடிய சிறந்த மேடைப் பேச்சாளன். கணீரென்ற குரல் வளத்தோடு அவன் பேசுவதைக் கேட்பதற்கென்றே ஊரில் நிறைய ரசிகர்கள் இருந்தார்கள் பூரணி அதிலே முக்கியமானவள் அவளுக்கு என்னவோ அவன் குரல் மீது அப்படியொரு லயிப்பு

ஆனால் அது வெறும் மாயப் போக்கான உடற் கவர்ச்சியால் வருகின்ற பாலியல் உணர்ச்சிகளுக்கு வடிகாலாய் மனதில் சலனம் கொண்டு ஏற்படும் காதல் மயக்கமல்ல. அதையும் தாண்டி அவனை ஆன்மீக உறவுக்கு நெருக்கமான வேறு எந்த வகையிலும் நோக்கியறியாத ஒரு புனித உடன்பிறப்பாகவே எண்ணி அவனோடு அவள் மானஸீகமாக உயிர் கலந்து பழகிவதுண்டு வேதா வீட்டிலேயே அதற்காக அவனைச் சந்திப்பதற்காக இரவு வெகு நேரம் கண் விழித்துக் அவள் காத்திருப்பதுமுண்டு

வாழ்க்கையின் நிமிஷத்தில் மாறும் நிழல் போக்கு வலைகளுக்குள் சிக்காது, சுதந்திரமாக உயிர் வானில் பறப்பதாகவே இருக்கும் அவளின் மனப்பறவை .அதை இனம் கண்டு உயிர்த்து நிற்பது போல அவன் நிலை. கலை வழிபாடு செய்வதற்கென்றே இருவர் மனங்களும் ஒரே இலக்கில் பயணம் செய்வது அபூர்வமாகத் தோன்றும் ஒரு காட்சி ஒளி போல் களை கட்டி நிற்பதைக் கண்டு கொள்ள மறுக்கிற, வரட்டு மனம் படைத்த மனிதர்களுக்கு அவர்களிடையே ஒளிரும் ஆன்மீக தீபம் கூடக் கண்களில் எடுபட வாய்ப்பில்லாமல் போவது எதிர்மறையாகத் தோன்றும் வாழ்க்கையின் ஒரு நிழல் போக்குத் தான் என்பது அவளுக்கு அறிவு சூட்சுமமாகவே விளங்கும் மாய வடிவான ஓர் இருள் தோற்றம் மாதிரிக் கண்களை அடைக்கும்

அதைப் புறம் தள்ளி வாழ வேண்டிய முற்றிலும் சாத்வீக நினைப்பிலேயே உயிர் வாழும் அவளுக்கு அவனோடு மனம் விட்டுப் பழகுவதே ஓர் உயிரின் வரம் கை கூடிய மானஸீக தவம் மாதிரி. அவனோடு பழகினால் தான் அதைப் பெற முடியுமென்பது அவள் மனதில் வேரூன்றிய நம்பிக்கை விருட்சம்

சிறு வயதிருந்தே அவள் ஒரு சிறந்த வாசகி. இலக்கியம் சார்ந்து வருகின்ற சிறுகதைகள் கவிதைகள் வாசிப்பதென்றால் அவளுக்கு உலகமே மறந்து போகும் தமிழின் மீது அப்படியொரு பிடிப்பு. அந்தக் காலஎஸ் எஸ்ஸியோடு அவள் படிப்பு நின்று போனாலும் கலை ஈடுபாடான கலங்கரை விளக்கம் போல் தெரிகின்ற தெய்வீக வாழ்க்கை மீதுள்ள அதீத பற்று அவளிடம் ஒரு ஞானிக்குரிய மிடுக்குடன் ஒளிரவே செய்தது. சதா அவள் பேச்சில் அதன் சுவடுகளையே கண்டு மனம் குளிர்ந்து போகின்ற பிரமிப்பு சிதம்பநாதனுக்கு .

அதன் அடியொற்றியே அவள் நிழலில் அவன் இளைப்பாறுவதே வழக்கமாகிவிட்டிருந்தது. அவள் என்ன சொன்னாலும் அதற்கு மறு பேச்சில்லாமல் அதை ஒரு வேதமாகவே அவன் எடுத்துக் கொள்வான். ஒரு நாள் இப்படித் தான் இரவு எட்டு மணிக்கு வேலை முடிந்து அவன் வேதா வீட்டிற்கு வரும் போது பூரணி அறைக்குள் இருந்தவாறே அவனை எதிர் கொண்டாள். வேதாவின் ஐயா ரயில்வேயில் சாதாரண கிளார்க்காக இருந்தபடியால் ஒரு கல் வீடு கட்டக் கூட அவரால் இயலவில்லை. வேதாவின் அம்மாவுக்குச் சீதனமாகக் கிடைத்த ஓலையால் வேய்ந்த சாதாரண மண் வீட்டிலேயே அவர்கள் குடிருந்தார்கள் .சாணம் மெழுகிய மண் தரையாக இருந்தபடியால் ஒரே குளிர்ச்சியாக இருக்கும். அந்தக் குளிர்ச்சியை உள் வாங்கியபடியே நாதனின் கணீரென்ற குரல் பேசுவதை கவனம் சிதறாது கிரகித்தபடியே அவள் தன்னை மறந்து அமர்ந்திருந்த போது தான் சற்றும் எதிர்பாராதவிதமாக அந்த அதிர்ச்சிச் செய்திக்கு அவள் முகம் கொடுக்க நேர்ந்தது

மங்கிய விளக்கொளியில் வராந்தாவின் அவன் அசைவுகள் தெரிந்தன வேதாவின் அம்மா ஒரு பக்கம் சாய்மணையில் படுத்துக் கிடந்தவாறு அவனிடம் கேட்டாள்

“என்னடா? பைக்குள்ளையிருந்து புதையல் எடுக்கிறய்>?”

“ஒன்றுமில்லை சின்னம்மா. இது ஐயா குலசிங்கத்தின்ரை படம் பிரேம் போடக் குடுத்தனான் நீங்களும் பார்க்கிறியளே?”

“வேதா ஓடி வந்து படத்தைப் பறித்தாள்

“இஞ்சை பாரடி பூரணி என்ன களையான முகம் பார்த்தியே” மாபெரும் தலைவன் வேறு எப்படி இருப்பான்”?”என்று அதை அவளுக்குக் காட்டினாள்

தமிழை நேசித்தே உயிரின் மாசற்ற புனிதங்களைப் புரிந்து கொண்டு ஒரு சத்திய தேவதை போல் உள்ளே இருந்த அவளுக்கு அதைப் பார்க்க நெஞ்சு பதறியது. புனிதமான அரசியல் படித்தே வளர்ந்தவள் அவள். ஊரை ஏமாற்றும் இந்தக் கள்வர்கள் ஒரு புறம். குலசிங்கமும் அப்படிப்பட்ட ஒருவன் தான் சிங்கப்பூரில் பிறந்து ஓர் ஆங்கிலக் கனவானாக இருந்தவன் அவனின் பூர்வீகம் இலங்கை. அதிலும் யாழ்ப்பாணம் என்பதால் அரசியலில் தமிழைக் காப்பாற்ற அவன் எடுத்த விசுவரூப தரிசனம் இது. இந்த நிழல் போட்டோ. இதை நம்பி நாதனின் கையில் ஒரு புனிதமான தமிழ் மாலையை இனம் கண்ட கொதிப்பில், பூரணிக்கு வ்ந்ததே ஒரு தார்மீகச் சினம். வெட்கத்தை மறந்து விட்டு முகத்தில் கோபத்தீ கனல் கொண்டு எரிய அவளின் வெளிப் பிரவேசம் கண்டு திடுக்கிட்ட நாதன் வாய் குழறிக் கேட்டான்

“என்ன பூரணி அவசரமாய் ஓடி வாறாய்? எதைத் தடுத்த நிறுத்த இந்த நெருப்புக் கோலம்?”

“விளையாடதேங்கோ நாதன் உண்மை அறியாமல் ஒரு சாத்தானைக் கொண்டு வந்து படமாய்க் காட்டுறியளே” உங்கள் கையில் அவனுக்கு ஒரு தமிழ் மாலை இதைப் பாக்க என்ரை கண்ணே எரிஞ்சிடும் போலை இருக்கு சாத்தானை வைச்சு நீங்கள் கும்பிடவா போறியள்?”

“நீ அப்படியா சொல்ல வாறாய்?”

“பின் எப்படி? நல்ல தலைவர்கள் வந்தால் அது தமிழுக்கு வாழ்வு. இவன் ஒரு அரைவேக்காட்டுத் தமிழன். தமிழின் முகமூடி தரித்த ஒரு சாத்தான் இவனைப் போய் …….. சீ சொல்ல நாக்கூசுது கோவில் கட்டிக் கும்பிடுற மாதிரி இந்த அசிங்கத்தை போய் இவன் ஓர் ஆளென்று பிரேம் போட்டுக் கொண்டு வந்து காட்டுறியளே தூக்கிக் குப்பையிலை போடுங்கோ அப்ப தான் என்ரை மனம் ஆறும்”

எல்லோரும் அறியும்படியாக அதை ஒரு வேதவாக்காகப் பிரகடனப்படுத்தி ஆவேசம் கொண்டு சொல்லி முடித்து விட்டு அவள் ஓய்ந்த போது அங்கு அமைதி நிலவியது சாத்தான் பற்றிக் கூறுகின்ற அந்தச் சத்தியத்தை எதிர்த்துப் பேச யாருக்கும் நா எழவில்லை. அவனைப் பொறுத்தவரை அவள் பேச்சுக்கு மறு பேச்சு ஏது அவள் வாய் திறந்தால் வேதமே கண் திறப்பதாக நம்பி அவள் காலடியே சரணம் என்று நம்புகிற அவனா இனி மறு பேச்சுப் பேசுவான்?

“போதும் பூரணி நீ சொன்னால் அது எனக்கு வேதம் தான். ஒரு தமிழ் துரோகிக்குக்குச் சாத்தனுக்கு மாலை போட நினைச்சேனே என்னை மன்னிச்சிடு என்னைச் செருப்பால் அடிக்க வேணும் இதைத் தூக்கி நான் குப்பையிலை போடுறன் சரிதானே?””

“ என் பேச்சைக் கேட்டு இப்படித் தமிழை வாழ வைச்ச உங்களை நினைச்சு நான் பெருமைப் படுறன் அண்ணா இது போதும் தமிழ் வாழ நாங்கள் தமிழைக் காப்பாற்றுவோம் அதன் மூலமே எங்கள் மண்ணும் வாழ வேண்டும்”

அவளின் ஆழ்ந்த உயிர் நோக்கான தமிழ் பற்றுக் கண்டு பிறகு பேச்சொழிந்த மெளனம் தான் அவனிடம் அது உயிர் தழைத்து நிற்கும் வரை தமிழும் வாழுமென்று மிகவும் நம்பிக்கையுடன் நினைவு கூர்ந்தான் அவன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *