(2015ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
காட்சி 5-8 | காட்சி 9-12 | காட்சி 13-16
ஒன்பதாம் காட்சி
(பின்னணியில் மருத்துவமனையின் முகப்புப் பகுதி போன்ற அமைப்பு. மேடையின் இடப்பக்கத்திலிருந்து சக்தி வருகிறான். மேடையின் வலப்பக்கத்திலிருந்து சதாசிவம் நாயர் வருகிறார்)
ச.சி. : வணக்கம். என் பேரு சதாசிவம்.
சக்தி : வணக்கம். நான் சக்தி… நீங்கதானே போன் பண்ணீங்க..?
ச.சி. : ஆமாம். ஒங்க அத்தையா அவங்க? எப்படி இருக்காங்க?
சக்தி : பரவாயில்லை. ட்ரீட்மென்ட் கொடுத்துகிட்டு இருக்காங்க. மிஸ்டர் சதாசிவம். ராஜமாணிக்கம் சார்தான் அத்தைய அட்மிட் பண்ணாருன்னு ஹாஸ்பிட்டல்ல சொன்னாங்க. சார் எங்கே?
ச.சி. : தினந்தோறும் கொண்டாட்டம் சீரியல் டிஸ்கஷன்ல இருக்காரு. ஊரெல்லாம் நிலநடுக்கம் பீதின்னு ஆபீஸ் ஸ்கூல் எல்லாம் லீவு விட்டதால் ட்ராபிக் ஜாம். ஆட்டோ கிடைக்கல. கார்ல மயங்கி விழுந்திருந்த உங்க அத்தைய ராஜமாணிக்கம் சார்தான் ஒரு கி.மீ. தூக்கிகிட்டு வந்து இந்த ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணியிருக்காரு.
சக்தி : அத்தைய தூக்கிகிட்டு வந்தாரா?
ச.சி. : எல்லாம் விட்ட குறை தொட்டகுறைதான்.
சக்தி : என்ன சொல்றீங்க?
ச.சி. : எதையும் விட்டுவிடாமல் அண்ணன் கொடுத்து அனுப்பியிருக்காருன்னு சொல்ல வந்தேன். இந்தாங்க அவங்களோட ரெண்டு செல்போன், வேலட், லேப்டாப், கார் சாவி… ஹேண்ட்பேக் வாங்கிக்கங்க.
(சக்தி, சதாசிவத்திடமிருந்து வாங்கிக் கொள்கிறான்)
ச.சி. : கார் ஆஸ்பத்திரிக்கு ஒரு கி.மீ.ல இருக்கிற மேம்பாலத்துக்கு கீழே பத்திரமா சேஃபா இருக்குன்னு சொல்லச் சொன்னாரு.
சக்தி : சரி. நான் போய் எடுத்துக்கறேன்.
(மேடையின் வலப் பக்கத்திலிருந்து வீணா வருகிறாள்)
வீணா : அங்கிள் கிருஷ்ணவேணி மேம் எங்கே அட்மிட் ஆகி இருக்காங்க…?
ச.சி. : ரூம் நம்பர் நூற்று முப்பதைஞ்சும்மா.
சக்தி : மிஸ்டர் சதாசிவம். எங்க அத்தைய பார்த்துக்க எனக்குத் தெரியும். அவங்கள போகச் சொல்லுங்க.
வீணா : இவரு வேலையே இவருக்கு செய்யத் தெரியாது. அத்தைக்குப் பணிவிடை செய்வாரா இவரு…?
ச.சி. : அடுத்த பிணக்கா…? நடக்கட்டும்.
வீணா : எங்க மேம பார்த்துக்க எனக்குத் தெரியும்னு சொல்லுங்க அங்கிள்..
சக்தி : (கத்துகிறான்) மிஸ்டர் சதாசிவம்…
(மேடையின் இடப்பக்கத்திலிருந்து கோட் சூட் அணிந்து டாக்டர் கைலாசம் வருகிறார். கம்பீரமான தோற்றம். சக்தி அடங்கிப் போகிறான்.)
கைலாசம் : என்னப்பா சத்தம்?
சக்தி : ஒண்ணும் இல்ல சார்.
(கைலாசம், சதாசிவத்தை ஏற இறங்கப் பார்க்கிறார்)
கைலாசம் : நீங்க… விசாலம் ஹாஸ்பிட்டல்ல உணவகம் நடத்தினவருதானே…?
ச.சி. : ஆமாம். வணக்கம் ஐயா.. நான்தான். என்பேரு சதாசிவம்.
கைலாசம் : வணக்கம். நான் டாக்டர் கைலாசம். உங்க உணவகத்துக்கு நல்ல பேர் இருந்திச்சே… சுத்தமான சுகாதாரமான உணவு… நானே ஒரு தடவை நேரடியாவே பார்த்தேன். ஆமாம், இப்பவும் அங்கதானே இருக்கீங்க…
ச.சி. : இல்ல சார்… அந்த ஆஸ்பத்திரி கான்ட்ராக்ட் கை மாறி ரெண்டு வருஷம் ஆச்சு. இப்ப இளவேனில் தொலைக்காட்சி அலுவலகத்துல…
கைலாசம் : சரி… இங்க உணவகம் ரெண்டு வாரமா சரியா நடக்கல. கான்ட்ராக்டர் சொதப்பிட்டாரு. நீங்க எடுத்து நடத்துங்க.
ச.சி. : ஐயா… அது…
கைலாசம் : என்ன சேனல் கேண்டீன் தானே. வேற யாராவது நம்பகமான ஆள்கிட்ட ஒப்படைங்க. சக்தி, இவருக்கு ஆர்டர் அடிச்சுக் கொடு. எப்பவும் கான்ட்ராக்டர் கிட்ட டெபாசிட் வாங்குவோம். ஆனா உங்களுக்கு நான் ஒரு இலட்சம் ரூபா அட்வான்ஸ் தர்றேன். இங்க சமையலறை சாதனம் எல்லாம் இருக்கு. உங்களுக்கு எங்க ஸ்டாஃப் நாலு பேர் அசிஸ்டன்ட் ஆக தர்றேன். உடனே வேலைய ஆரம்பிங்க. ரெண்டு மூணு நாள்ல உணவகத்தை ஆரம்பிச்சிடுங்க. சக்தி, இவருக்கு போக்குவரத்துக்கு நம்ம ஆட்டோவை கொடு.
(சதாசிவத்தின் முதுகில் தட்டுகிறார்)
நல்லா… ஜமாய்க்கணும். ஒங்க மனைவி கண்டிப்பா வரணும். அவங்க தான் பேஷன்ட்டுக்கு ஏத்த லைட் ஃபுட் நல்லா செய்வாங்க.
ச.சி. : அய்யா… எங்க மேலே இவ்வளவு நம்பிக்கை வெச்சிருக்கீங்க… நன்றிங்க அய்யா.
கைலாசம் : ஆமாம் சக்தி. நீ ‘ஹாஸ்பிட்டல் மேனேஜ்மெண்ட் ஸ்டாஃப். நீயே சத்தம் போடறே… என்ன விஷயம்?
சக்தி : அது எங்க அத்தையப் பார்த்துக்கறேன்னு இந்தப் பொண்ணு…
கைலாசம் : யார் இவங்க?
வீணா : சார்.. என் பேரு வீணா. கிருஷ்ணவேனி மேம் கிட்ட அசிஸ்டன்ட் ஆக இருந்தேன்.
கைலாசம் : வெரிகுட். ஒங்களப் பாராட்டறேன். சக்தி ஒங்க ஆண்ட்டிக்கு பெண்மை சார்ந்த உடல்நலப் பிரச்சினை. இவங்க பார்த்துக்கட்டும். வீட்ல சொல்லிட்டீங்களா…? நைட் தங்க முடியுமா?
வீணா : தங்கி பார்த்துக்கறேன் டாக்டர்.
கைலாசம் : குட். சரி. போய்ப் பார்த்துக்கங்க வீணா.
வீணா : தாங்க்ஸ் டாக்டர். (மேடையின் இடப்பக்கம் செல்கிறாள்.)
ச.சி. : அய்யா… நான் உத்தரவு வாங்கிக்கறேன்.
கைலாசம் : நல்லா செய்யணும் சதாசிவம். என் நம்பிக்கை வீணாயிடக் கூடாது. சக்திய வந்து பாருங்க.
ச.சி. : ஒங்க நம்பிக்கையைக் காப்பாத்துவேன் அய்யா. (மேடையின் வலப்பக்கம் நோக்கி சதாசிவம் செல்கிறார்) கைலாசம் : சக்தி, ஒன்கிட்ட கேட்கணும்னு நெனச்சேன்… காபி டேபிள் புக் என்ன ஆச்சுப்பா…
சக்தி : சியாமளா பார்த்துக்கறேன்னு சொல்லியிருக்காங்க சார்.
கைலாசம் : பாசிங் த பக்… ராஜமாணிக்கம் சார் சொன்ன மாதிரி பழைய ரிகார்டைத் தோண்டித் துருவி விஷயங்களை சேகரிக்க உழைக்கணும். உழைக்க யாரும் தயார் இல்ல அதானே…
சக்தி : அப்படி இல்ல… சார்.. அது வந்து..
(கைலாசத்தின் கைபேசி ஒலிக்கிறது)
கைலாசம் : (போன் பேசியபடியே) இதோ. கிளம்பிட்டேன். லேசான நிலநடுக்கத்தால ட்ராபிக்ஜாம். இப்பத்தான் கிளியர் ஆயிருக்கு. வர்றேன்.
(டாக்டர் கைலாசம் மேடையின் வலப்பக்கம் நோக்கிச் செல்கிறார்.)
(சக்தி மேடையின் இடப்பக்கம் நோக்கிச் செல்கிறான்)
(சில நொடிகள் கழித்து வீணா மேடையின் இடப்பக்கத்திலிருந்து கையில் மாத்திரை மருந்து சீட்டு உடன் வருகிறாள். மேடையின் வலப்பக்கத்திலிருந்து நாம் முதற் காட்சியில் சந்தித்த ஹேமாவும், அவளுடைய காதலன் இளங்கோவும் வருகின்றனர். வாட்டசாட்டமான இளைஞன் இளங்கோ, ஹேமாவைக் கைத்தாங்கலாக அழைத்து வருகிறான்.)
வீணா : ஹேமா… நீயா என்ன ஆச்சுடி உடம்புக்கு…?
இளங்கோ : பேசிக்கிட்டே இருக்கும் போது திடீர்னு மயங்கி விழுந்துட்டா…
வீணா : நீங்க…
இளங்கோ : என் பேரு இளங்கோ… நான் அவளோட… (தயக்கத்துடன்)
வீணா : புரியுது. ஹேமா இங்க உட்காருடி. (நாற்காலியில் அவளை அமர வைக்கிறாள்.)
வீணா : சார்… நான் ஹேமாவுக்காக டாக்டர் ரேவதி கைலாசம் கிட்ட டோக்கன் வாங்கிகிட்டு வர்றேன். நீங்க இந்த மருந்து மாத்திரை வாங்கி வர முடியுமா? இந்தாங்க பணம்… இளங்கோ : ஹேமா…
வீணா : அப்பா…என்ன கரிசனம்…நான் அவளோடயேதான் இருப்பேன். கவலைப்பட வேண்டாம். நீங்க போய்ட்டு வாங்க.
(இளங்கோ போகிறான்)
ஹேமா : இன்பேஷன்ட்டா எல்லாம் சேர்க்கச் சொல்லாதே வீணா.
வீணா : அதை நீயா சொல்ல முடியும்? உன் நிலைமையப் பார்த்து டாக்டர் சொல்வாங்க. ஈனஸ்வரத்துல பேசறியே… ஏன் உடம்பு வீக் ஆக்சு? ஓவர் வொர்க்கா, ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா?
ஹேமா : அதெல்லாம் ஒண்ணும் இல்ல. என்னன்னு தெரியல… படபடப்பு, மயக்கம்… பீச்ல இவரு பக்கத்தில வந்து உட்கார்ந்தது கூட தெரியல. மயங்கிட்டேன்..
வீணா : அதான் ஒன்னோட இவரு பொறுப்பா இங்க அழைச்சுகிட்டு வந்துட்டாரே… எழுந்திரு. போகலாம்… காதல்ல விழுந்ததை சொல்லவே இல்லையே கள்ளி.
(ஹேமாவைக் கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு வீணா மேடையின் இடப்பக்கம் நோக்கிச் செல்கிறாள்)
(சில நிமிடங்கள் கழித்து மொபைல் போனில் பேசியபடியே வீணா வருகிறாள்.)
வீணா : சதாசிவம் அங்கிள்… நான் வீணா பேசறேன்.
குரல் : சொல்லுங்க அம்மா.
வீணா : இங்க என் ஃப்ரெண்டு ஹேமாவுக்கு உடம்பு முடியாமல் அட்மிட் ஆகி இருக்கா. அவங்க வீட்ல அப்பா அம்மா யு.எஸ். ல இருக்கற அண்ணன்கிட்ட இருக்காங்களாம். அவளைப் பார்த்துக்க யாராவது வேணும். நான் எங்க மேம கிட்ட இருந்து கவனிச்சுக்கணும். ஜலஜா ஆண்ட்டி வருவாங்களா…?
குரல் : நைட் கண் முழிச்சா அடுத்த நாள் அவளால வேலை செய்ய முடியாதேம்மா. நான் ஒண்ணு செய்யறேன். ஷோபான்னு எங்க சொந்தக்காரப் பொண்ணு இருக்கு. ஆன்ட்டிகிட்ட சொல்லிட்டு அவளை அழைச்சுகிட்டு வரேன்.
வீணா : தேங்க்ஸ் அங்கிள். உங்க உதவியை மறக்க மாட்டேன்.
குரல் : ஒங்க மனசு தங்க மனசும்மா. உங்க புண்ணியத்துல நானும் கொஞ்சம் பங்கு எடுத்துக்கலாம்னு பார்க்கறேன். வெச்சிடறேன்ம்மா.
வீணா : தாங்கஸ் அங்கிள்.
(மேடையின் வலப்பக்கத்திலிருந்து வீணாவின் மாமா ராஜேஷ் வருகிறார்)
வீணா : என்ன மாமா… ஏன் இங்க வந்தே… சாரி வந்தீங்க… பொது இடமாச்சே மரியாதை கொடுக்கணும்.
ராஜேஷ் : உனக்கு நைட் டிஃபன் கொடுத்து அனுப்பி இருக்கா அக்கா. ஒங்க மேடம் சாப்பிடலாமான்னு தெரியல. அவங்களுக்கு இடியாப்பம் கொடுத்து அனுப்பி இருக்கா… இந்தா…
(வீணா கூடையை வாங்கிக் கொள்கிறாள்)
வீணா : ட்ரெஸ் டவல் கேட்டேனே… வெச்சிருக்காங்க அம்மா… என்ன மாமா… என்னையே இப்படி பார்க்கறீங்க…
ராஜேஷ் : ஐ யாம் ப்ரௌட் ஆஃப் யு மை டியர். வீட்லய அடைஞ்சு கிடந்த வீணாவா இதுன்னு ஆச்சரியமாகவும் இருக்கு. சந்தோஷமாகவும் இருக்கு.
வீணா : இந்த மாதிரி நேரத்தில தான் பக்கபலமாக இருக்கணும். உதவி செய்யணும். பாருங்க… எங்க மேமுக்கு கவனிச்சுக்க ஒரு துணை இல்ல. ஹேமாவுக்கும் யாரும் இல்ல. அதனால தெரிஞ்சவங்கதான் உறவா மாறணும்.
ராஜேஷ் : இடுக்கண் களைவதாம் நட்புங்கறதுக்கு இலக்கணமாக இருக்கேப்பா நீ. காட் ப்ளெஸ் யு.
வீணா : சரி மாமா. நான் மேமுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுக்கணும் வர்றேன்.
ராஜேஷ் : நீயும் சாப்பிடும்மா.
(மேடையின் இடப்பக்கம் நோக்கி வீணா விரைந்து செல்கிறாள். ராஜேஷ் அவள் போவதையே மனநிறைவுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்.)
(திரை)
பத்தாம் காட்சி
(பின்னணியில் பள்ளிக்கூட மைதானம் போன்ற அமைப்பு. மூன்று இளம் பெண்மணிகள் நின்று கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு பெண் கைப்பந்து ஆடிக் கொண்டிருக்கிறாள். மாலை நேரம். அவர்கள் மூவரும் முந்தைய காட்சிகளில் பேசப்பட்ட சஞ்சனா, ஹாசினி மற்றும் நாகலட்சுமி)
சஞ்சனா : (கைப்பந்து ஆடிக் கொண்டே) பள்ளிக்கூடம் நடத்துவது அறக்கட்டளைப் பணிகள் இதெல்லாம் சாதாரண காரியமா? நம்மால சமாளிக்க முடியுமா? நீ பாட்டுக்கு ஒத்துகிட்டு… இதுல எங்க ரெண்டு பேரையும் இறக்கி விட்டுட்டே… நாகு.
நாகலட்சுமி : நம்ம தலைமறைவு வாழ்க்கைக்கு இதுதான் ஏத்த இடம் சஞ்சனா. ஸ்கூல்ல ஸ்கூல்ல உன்னை என்ன பாடம் நடத்தவா சொல்றாங்க?
ஹாசினி : மேனேஜரியல் ஒர்க் அவ்வளவுதான். நீ ஓங்க ஆபீஸ்ல பார்த்த அட்மின் ஒர்க்தான்.
சஞ்சனா : சரி. எத்தனை நாளைக்கு இங்க இருக்கப் போறோம்…?
நாகலட்சுமி : எங்க சித்தி போன்னு சொல்ல மாட்டாங்க. அவங்க நமக்கு அடைக்கலம் கொடுத்திருக்காங்க. அவங்க பணிச்சுமைய நாம குறைப்போம்… நம்ம பிரச்சினைகள் ஓய்ஞ்ச பிறகு இங்கிருந்து செல்வது பத்தி முடிவு எடுப்போம்.
(சபாஷ் என்று குரல் ஒலிக்கிறது. மேடையின் இடப்பக்கத்திலிருந்து கீதா வருகிறாள்.)
நாகலட்சுமி : கீதா… என்ன சபாஷ்… (குரலில் கடுமை)
கீதா : நாகு அக்கா… நான் அதிகப்பிரசங்கித்தனமாக பேசறேன்னு நெனக்காதீங்க. ஊரு உலகத்துப் பிரச்சினைகளைப் பத்தி எல்லாம் பத்திரிகையில ஒண்ணா சேர்ந்து எழுதின உங்களால ஒங்களுக்குத் தொந்தரவு கொடுக்கறவங்கள ஒரு வழி பண்ணிப் பார்ப்போம்னு தோணலியா…? எஸ்கேபிசம் நீங்க இங்க வந்தது. அதுக்குத் தான் சபாஷ் சொன்னேன்.
நாகலட்சுமி : (குரலில் கடுமையுடன்) கீதா… நாங்க மூணு பேரும் சேர்ந்து பத்திரிகையில எழுதறோம்னு யாருடி சொன்னா… நாங்க இங்க வந்தது எஸ்கேபிசம்னு விமரிசனம் பண்றே. ஒங்க இடத்துல இருக்கோம்ங்கறதுனால வாய்க்கு வந்தபடி பேசறியா? வாய்த்துடுக்கை விடு.
கீதா : டி.வி. சீரியல்ல வர்ற இல்லத்தரசி மாதிரி எதையோ சொன்னா எது கூடவோ முடிச்சுப் போடறீங்க. நீங்க ஒங்க சித்தி இடத்துல இருக்கீங்க. நான் அதைப் பத்தி எதுவும் சொல்லலே. தப்பான எண்ணத்தை விடுங்க.
சஞ்சனா : கீதா… நாங்க பத்திரிகையில எழுதறவங்கன்னு எப்படி தெரியும்? அதை சொல்லு. எஸ்கேபிசம்னு எதை சொல்றே. அதையும் சொல்லு.
கீதா : பிரச்சினைகள் ஓயும்னு எதிர் பார்க்கறது அலை ஓஞ்சப்புறம் கடல்ல குளிக்கற மாதிரி… உங்களை நான் எப்படி கூப்பிடறது…?
சஞ்சனா : சஞ்சனான்னு பேர் சொல்லியே கூப்பிடு.
கீதா : தாங்க்ஸ் சஞ்சனா. நீங்க மூணு பேரும் சேர்ந்து எழுதறவங்கறதை ஒங்க ரூம்ல கதம்பம் இதழ்கள்ல சஹானாங்கற பேர்ல புக் மார்க் வெச்சிருக்கறதைப் பார்த்ததும் சஹானான்ற பேரை மனசுக்குள்ள ஓட்டிப் பார்த்ததும் கண்டுபிடிச்சேன்.
ஹாசினி : ஜேம்ஸ்பாண்டு கீதாதான். நாகு நீ ஏன் மூஞ்சிய தூக்கி வெச்சிருக்கே. கீதா என்னதான் சொல்றான்னு கேட்போம். நீ சொல்லும்மா.
கீதா : ஹாசினி… ஒங்களையும் பேர் சொல்லியே கூப்பிடறேன். நீங்க மூணு பேரும் நல்லா படிச்சவங்க. திறமைசாலிங்க. வேலைல கெட்டிக்காரங்கன்னு தெரியும். உலகத்துல யாருமே செய்யாததை மூணு பேர் சேர்ந்து எழுதறதை செஞ்சு இருக்கீங்க. ஒங்களுக்கு பிரச்சினை கொடுக்கறவங்களுக்கு பதிலடி கொடுக்காம இங்க வந்து தலைமறைவா இருக்கோம்னு சொல்லிக்கறது எஸ்கேபிசம்னு நான் நெனக்கறேன்.
நாகு : சபாஷ்னு சொன்னதெல்லாம் ஓவர்…
கீதா : டங் ஸ்லிப் ஆச்சு. வாய் தவறிய வார்த்தை. அந்த சொல்லுக்காக மன்னிச்சிடுங்க மூணு பேரும். ஒங்கள உசுப்பி விடறதுதான் என் நோக்கம்.
சஞ்சனா : கீதா… எங்களோட கதையை நாங்களே ஒங்க மதர் கிட்ட சுருக்கமாத்தான் சொன்னோம். அவங்க ஒன்கிட்ட இன்னும் சுருக்கமாத்தான் சொல்லியிருப்பாங்க. புலி பதுங்கித்தான் பாயும். வெற்றிக்கு சாதகமான சூழ்நிலை இல்லேன்னா பதுங்கறதுல தப்பு இல்ல. தக்க தருணம் பார்த்துத்தான் பதிலடி கொடுக்கணும். அதுக்குத்தான் நீ எஸ்கேபிசம்னு பேர் சூட்டறே.
கீதா : இது ஒங்க எண்ணமா தெரியல. ஒங்களுக்கு நீங்களே சொல்லிக்கற சமாதானமா தெரியுது.
நாகலட்சுமி : கீதா… எங்க பிரச்சினையை நாங்க ஹேண்டில் பாண்ணிக்கறோம். நீ மூக்கை நுழைக்காதே. (கண்டிப்பான தொனி).
கீதா : சரி அக்கா. நீங்க தவறா புரிஞ்சுக்கறீங்க. இனிமேல் இதைப் பத்தி எல்லாம் நான் பேச மாட்டேன்.
(மேடையின் இடப்பக்கத்திலிருந்து ராஜமாணிக்கம் வருகிறார்)
ரா.மா. : கீதா கண்ணு.
கீதா : வணக்கம். வாங்க அங்கிள்.
ரா.மா. : எப்படி இருக்கீங்க எல்லாரும்? ஸ்கூல் எல்லாம் எப்படி போவுது?
கீதா : நல்லாத்தான் போய்கிட்டு இருக்கு. நீங்க இல்லாததுதான் எங்க அம்மாவுக்கு கை ஒடிஞ்ச மாதிரி ஆயிடுச்சு.
ரா.மா. : அதனாலதான் போன் பண்ணி வரச் சொன்னாங்களா?
கீதா : ஆமாம். ஒடிஞ்ச கைய சரி பண்றதுக்கு. இவங்கள உங்களுக்கு அறிமுகப்படுத்தறேன். இவங்க என் கசின் நாகலட்சுமி. அவங்க சஞ்சனா, ஹாசினி.
மூவரும் : வணக்கம் சார்.
ரா.மா. : வணக்கம்.
கீதா : இவங்க மூணு பேருக்கும் நீங்க பள்ளிக்கூட நிர்வாகம் அறக்கட்டளை பணிகள் பத்தி விவரிக்கணும். ட்ரெயினிங் கொடுக்கணும்.
ரா.மா. : யங்ஸ்ட்டர்ஸ். அதுவும் பொண்ணுங்க…
கீதா : கோடு போட்டா ரோடு போட்டுடுவாங்கன்னு சொல்றீங்களா… பெண்கள் மதிநுட்பம் மிக்கவர்கள்ன்னு சொல்வாங்களே.
ரா.மா. : அதுல என்ன சந்தேகம்? அம்மா இவங்களைப் பத்தித்தான் சொன்னாங்களா…
கீதா : ஆமாம் மாமா. இருட்டப் போவுது… சஹானா வாங்க ஆபீஸ் ரூம்ல போய் உட்கார்ந்து பேசலாம்.
ரா.மா. : சஹானாவா…?
கீதா : அது ஒண்ணும் இல்ல அங்கிள். சஞ்சனாவை வாய் தவறி சஹானான்னு கூப்பிட்டுட்டேன்.
ரா.மா. : அப்படியா… வாங்க. போகலாம்.
(ராஜமாணிக்கமும், கீதாவும் மேடையின் இடப்பக்கம் நோக்கிப் போகிறார்கள்.)
சஞ்சனா : உன்னோட கசின் பாம்பா… பழுதான்னு தெரியல. பூனைய மடியில கட்டிக்கிட்டா மாதிரி இவளோட சகவாசம்…
நாகலட்சுமி : அவருக்கு நம்மைப் பத்தி தெரியாதுன்னு நெனக்கறியா? நாம எழுதாம விட்டப்புறமும் மூணு வாரமா சஹானா பேஜ் கதம்பம் வார இதழ்ல வந்துகிட்டு இருக்கே கவனிக்கலையா… நீங்க ரெண்டு பேரும்…
சஞ்சனா : ஆமாம் பார்த்தேன். நம்ம ஸ்டைல்ல யாரோ எழுதறாங்க.
நாகலட்சுமி : அந்த கோஸ்ட் ரைட்டிங் பண்ற ரைட்டர் இவுருதான். நாமதான் சஹானான்னு கீதாவே கண்டு பிடிச்சுட்டா. அவரால கண்டுபிடிக்க முடியாதா?
ஹாசினி : எப்படிடி இங்க ஒக்காந்துகிட்டு மெட்ராஸ்ல நடக்கறதை சொல்றே….?
நாகலட்சுமி : எனக்கு வர வேண்டிய நியுஸ் கொடுக்கறதுக்கு சோர்ஸ் இருக்கு… சரி. வாங்க போகலாம். அவரு நமக்காக காத்துகிட்டு இருப்பாரு.
மூவரும் மேடையின் இடப்பக்கம் நோக்கிச் செல்கிறார்கள்.)
(திரை)
பதினொன்றாம் காட்சி
(மேடையில் மங்கலான வெளிச்சம். பின்னணியில் ஒரு கார் மீது மற்றொரு கார் மோதும் சத்தம். பின்னணி குரல்களில் ஓட்டுநர்கள் வாக்குவாதம். ‘ஹைவேல பார்த்து ஓட்டத் தெரியாதாயா? ஒனக்கு எல்லாம் எவன்யா லைசன்ஸ் கொடுத்தான்?’
‘யோவ். பின்னால வந்த லாரிக்காரன் பண்ண கூத்து. ஒவர்டேக் பண்ண வந்து சொதப்பிட்டான். நான்ன என்ன செய்யறது?’
‘போய்யா. வண்டிய லாவகமா ஓட்டணும். எதையும் எதிர்பார்த்து ஓட்டணும்’
‘ஒன்கிட்ட கத்துக்க வர்றேன் சொல்லிக் கொடு.’)
(விளக்குகள் ஒளிர்கின்றன. மேடையில் லாட்ஜின் அறை போன்ற அமைப்பு. சோபாவில் கிருஷ்ணவேணி அமர்ந்திருக்கிறாள். டாக்டர் நர்மதா அவளுக்கு தலையில் கட்டு போட்டு விடுகிறாள்.)
நர்மதா : எத்தனை வருஷம் ஆச்சுடி ஒன்னப் பார்த்து… நீளமா இருந்த கூந்தல் என்ன ஆச்சு? இப்படி ஆக்சிடெண்ட்ல சந்திக்கணும்னு இருக்கு… ஒண்ணும் இல்ல லேசான அடிதான் ஹைவேல இருக்கிற இந்த லாட்ஜ்ல நைட் தங்கிட்டு காலைல போகலாம்.
கிருஷ்ணவேணி : ஒன்னப் பார்த்ததுல சந்தோஷம். ஆக்சிடென்ட் நடந்து நாம சந்திக்கணும்னு இருக்கு. நீ வயசானலும் ரொம்ப அழகா இருக்கே!
நர்மதா : என் டிரைவர் தங்கராஜ் நிதானமாத்தான் ஓட்டுவாரு. பின்னாடி வந்த லாரிக்காரனால உங்க கார்ல மோதிட்டேன்னு சொல்றாரு. கீதா, ஆன்ட்டிக்கு ஏதாவது ஜூஸ் வாங்கிட்டு வா.
(போய் வாங்கிட்டு வர்றேன்ம்மா என்று கீதாவின் குரல் ஒலிக்கிறது)
நர்மதா : நான் ஒரு முட்டாள் ஆன்ட்டின்னு சொல்றேன் பாரு. நீயும் அவளுக்கு அம்மா. நீதான் அவளுக்கு அம்மா. குழந்தைகிட்ட சொல்லிடட்டுமா?
கிருஷ்ணவேணி : அவ சின்னப் பெண்ணு. அவளைப் போட்டு குழப்பாதே. நம்ம ரகசியம் நம்மோடயே இருக்கட்டும்.
நர்மதா : நீ என்ன பண்றேன்னுதான் எனக்குத் தெரியும். உன்னைப் பத்தி நியூஸ் வந்துகிட்டே இருக்கு. சிறந்த ஒளிப்பதிவாளர்ன்னு கொடி கட்டிப் பறக்கற சாதனைப் பெண். ஒரு வாரம் உடம்பு சரியில்லை ஆஸ்பத்திரில இருந்தேன்னு கூட ஒரு சினிமா பத்திரிகையில உன்னைப் பத்தி நியுஸ் படிச்சேன். இப்ப எப்படி இருக்கே?
கிருஷ்ணவேணி : மெட்ராஸ் வர்றப்ப ஒரு தடவை கூட என்னைப் பார்க்க வரவே இல்லைடி நீ இத்தனை வருஷமா… இப்ப பேசற பேச்சு வாய் கிழிய.
நர்மதா : சரி கோபிச்சுக்காதே. தப்புதான். என்னவோ டச் விட்டுப் போச்சு. நீ மட்டும் என்னப் பார்க்க வந்தியா? கீதாவை பார்க்க வந்தியா. அது போகட்டும்… உனக்கு எத்தனை பசங்க. உன் குடும்பத்தைப் பத்தி சொல்லு.
கிருஷ்ணவேணி : எனக்கு குடும்பம் என் தொழில்தான்…
நர்மதா : என்னடி உளர்றே?
கிருஷ்ணவேணி : இருபது வருஷத்துக்கு முந்தின கதைய நீ கேட்கறே. இன்னிக்குத் தூக்கம் இல்லேன்னு ஆகிப் போச்சு. சுருக்கமா சொல்றேன் கேளு. கேட்டுட்டு என்னால உன் வாழக்கை சீரழிஞ்சு போச்சுன்னு பேசாதே. உனக்கு குழந்தை பெத்துக்க ஆசை. உன் உடம்பு இடம் கொடுக்கல. வாடகைத் தாய் ஆக ஒங்க ரெண்டு பேரோட குழந்தை கருவை சுமந்து குழந்தை பெத்துக் கொடுன்னு என்கிட்ட நீ கேட்டே. நான் அதுக்கு என்ன சரின்னு வாக்கு கொடுத்துட்டேன். ஏன்னா இந்தக் காலம் மாதிரி இல்ல… வாடகைத் தாயாக யாருமே முன் வராத காலம் அது. உன்னைப் பார்த்து பரிதாப்பட்டு ஒத்துகிட்டேன். என் கணவர்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடணும்னு நெனச்சேன். சொன்னேன். அவரு நமக்கே குழந்தை இல்லாதபோது வாடகைத்தாய் வேலை எல்லாம் வேணாம். ரிஸ்க்னு சொல்லிட்டாரு. ஆனா என்னால உனக்கு கொடுத்த வாக்கை மீற முடியல. அவரோட எதிர்ப்பையும் மீறி வாடகைத்தாய் ஆயிட்டேன். உறவினர் ஒருவர் மூலமா பெங்களூர்ல போட்டோகிராபி கத்துக்கற வாய்ப்பு கிடைச்சுது. அதுவும் வரப்பிரதாசராவ்னு பெரிய காமிராமேன்கிட்ட. அரை மனசோட ஹஸ்பண்ட் அனுப்பி வெச்சாரு. அங்க எட்டு மாதங்கள் இருந்தேன். நாலு மாதம் தொழில் கத்துகிட்டேன். மீதி நாலு மாசத்துல அங்க இருந்து குழந்தையைப் பபெத்துக்கிட்டேன். ஒன்கிட்ட வந்து ஒப்படைச்சுட்டேன். பெங்களூர்ல நான் வாயும் வயிறுமா இருக்கறத எதேச்சயைா பார்த்த என் ஹஸ்பெண்டோட நண்பர் ஒருத்தரு அவருக்கு வாழ்த்து சொல்லி இருக்காரு. அப்புறம் என்ன? வீட்டுக்குப் போனதும் பூகம்பம் வெடிச்சது. அவர் ஏமாற்றத்துல பேசக் கூடாத வார்த்தை எல்லாம் பேசினாரு… பிரிஞ்சுட்டோம் ரெண்டு பேரும்.
நர்மதா : ஏண்டி… இவ்வளவு நடந்திருக்கு. என்கிட்ட சொல்லாம கொள்ளாம மெட்ராஸ்ல போய் உட்கார்ந்துகிட்ட. எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு. நீ அப்பவே சொல்லியிருந்தா பேசி சமாதானப்படுத்தி இருக்கலாம். உன்னோட இல்லற வாழ்க்கைய வீணடிச்சுகிட்டியே.
கிருஷ்ணவேணி : நீ சொன்னியே… புரொஃபஷனலா கொடி கட்டிப் பறக்கறேன்னு… தொழில்ல ஜெயிச்சவங்க சிலபேரு குடும்ப வாழ்க்கையில கோட்டை விட்டுவிடுவாங்க. நான் அந்த மாதிரி. நீ குற்ற உணர்ச்சிக்கு ஆளாவேன்னுதான் இத்தனை வருஷமா இதெல்லாம் சொல்லாம இருந்தேன். வந்து பார்க்காம இருந்தேன். இப்ப என்னவோ உன்னைப் பார்த்ததும் உளறி கொட்டேன்.
நர்மதா : அவர் எங்கதான் இருக்காரு?
கிருஷ்ணவேணி : அவர் இங்கதான் ஒங்க ஊர்ல ஒரு ஸ்கூல்ல இருந்தாரு… இப்ப மெட்ராஸ் வந்திருக்காருன்னு கேள்விப்பட்டேன். அவரைப்பத்தி விசாரிச்சுகிட்டுத்தான் இருக்கேன்.
நர்மதா : யாரைடி சொல்றே? அவரு பேர் என்ன?
கிருஷ்ணவேணி : ராஜமாணிக்கம்.
நர்மதா : அடிப்பாவி. அவர் என் கணவரோட ஸ்கூல்லதான் இருந்தாரு. மனவேறுபாட்டால மனைவியப் பிரிஞ்சுட்டேன்னு சொன்னாரு. இத்தனை வருஷமா எங்க கூடதான் இருந்தாரு. அப்பவே உன் புருஷனை அறிமுகப்படுத்தியிருந்தா இவ்வளவு பிரச்சினை இருந்திருக்காதே. அவர்தான் உன் கணவர்னு தெரியாமப் போச்சே.
கிருஷ்ணவேணி : காலம் ஓடிப் போச்சு. நீ டாக்டர். சாதாரண பெண்மணி மாதிரி மறுகாதே. என்ன நடக்கணுமோ நடந்துச்சு… விடு.
நர்மதா : மெட்ராஸ்ல உன் கூட யாருடி இருக்கா…?
கிருஷ்ணவேணி : குடும்பத்துல நாட்டம் இல்லாமப் போனதும் கேமிரா பிடிச்சு ஓட ஆரம்பிச்சேன். ஜெயிச்சேன்.
(வீணா வருகிறாள்)
இவ என் அசிஸ்டன்ட் வீணா. துடிப்பா வேலை செய்வா. இங்க பிச்சாவரம்ல ஒரு ஷூட்டிங்குக்காக போய்க்கிட்டு இருந்தோம். என்ன கேட்டே… என் கூட என் அம்மா இருக்காங்க. அவங்களுக்கும், அண்ணிக்கும் ஆகாது. அதனால என் கூட இருக்காங்க. எங்க அண்ணன் ஒண்ணும் பாசமலர் அண்ணன் இல்லே அண்ணி அதற்கு மேல. ஆனாலும் அதிசயமா அவங்க பையன் சக்தி, அத்தை அத்தைன்னு என்கிட்ட ஒட்டிக்கிட்டு இருக்கான்.
(கீதா வருகிறாள். பழச்சாற்றை கிருஷ்ணவேணியிடம் தருகிறாள்). (வீணா, கீதா இருவரின் கண்களிலும் கண்ணீர் பெருகுகிறது.)
கீதா : என்னைப் பெத்தெடுக்க ஒங்களயே அழிச்சுகிட்டீங்களேம்மா. நீங்க பேசினதெல்லாம் கேட்டேன். கிருஷ்ணவேணி : எங்களுக்கு உள்ள ஒத்துப்போகல. பிரியறதுக்கு இது ஒரு காரணம் அவ்வளவுதான். நீ இதைப் பத்தி எல்லாம் நெனக்காதே. அழாதே. நர்மதா சொல்லு குழந்தை கிட்ட.
நர்மதா : அழுகை உணர்ச்சியோட வெளிப்பாடு. என்னால அழமுடியல. அவ அழறா.. அழட்டும்.
கிருஷ்ணவேணி : வீணா நீ ஏன் கண் கலங்கறே…?
வீணா : இவ்வளவு விஷயத்தையும் என்கிட்ட மறைச்சுட்டீங்களே மேம்.
கிருஷ்ணவேணி : சிலதெல்லாம் சொன்னாலும் வெட்கம் சொல்லவிட்டால் துக்கம். நல்ல விஷயமா பெருமையா சொல்லிக்கறதுக்கு.
வீணா : மேம். நீங்க மயங்கி விழுந்தப்ப… ஒங்கள ஹாஸ்ப்பிடல்ல சேர்த்தது….
கிருஷ்ணவேணி : என் ஹஸ்பண்டுதான்னு எனக்குத் தெரியும். அரைகுறையா சுயநினைவு வந்தப்ப தெரிஞ்சுது. மயக்கம் தெளிஞ்சு பார்த்தப்ப ஆளைக் காணோம். சக்தி தான் இருந்தான். நீ என்ன சொல்ல வரேன்னு தெரியும். தவிச்சது போதும். ஒண்ணு சேர்ந்திடுங்கன்னு சொல்வே… இதுக்குத்தான் நான் இதெல்லாம் பத்தி யார்கிட்டயும் வாய் திறக்கறேதே இல்ல…
(பேச்சை மாற்றுவதற்காக) நான் வாடகைத் தாய் மூலமா பொறந்தா அண்ணன் எப்படி பொறந்தான்னு கீதா நெனக்கறா அந்த முடிச்சைஅவிழ்த்துவிடு நர்மதா.
நர்மதா : மாட்டி விடறதா நெனப்பா. பேச்சை திசை திருப்பறியா? சொல்ல வேண்டிய வேளை வந்தா சொல்லித்தான் ஆகணும். கீதா… அண்ணன் சதீஷ், ஒங்க பெரியப்பா பெரியம்மாவோட ஒரே பையன். ஒரு ஃபயர் ஆக்சிடென்ட்ல ஒங்க அப்பாவோட அண்ணனும், அண்ணியும் அல்பாயுசல மேல போய்ட்டாங்க. ஆதரவு இல்லாத சதீஷை நாங்க வளர்த்தோம். எனக்குன்னு ஒரு குழந்தை பெத்துக்கணும்னு நெனச்சு பரிசோதனை செஞ்சுகிட்டப்ப என்னால குழந்தை பெத்துக்க முடியாதுன்னு தெரிய வந்தது. பெத்துக் குடுக்க உன்னோட இந்த இரண்டாவது அம்மா முன் வந்தா. அவளுக்கு தொப்புள் கொடியே சுருக்குக் கயிறா… (விம்முகிறாள்).
கிருஷ்ணவேணி : போதும் போதும். விம்மாதே. சுத்தி சுத்தி அந்த டாபிக்கே ஓடுது பேச்சுல. வீணா டி.வி. போடு. காமெடி கிளிப்பிங்ஸ் பார்ப்போம்.
நர்மதா : ஜூஸ் சாப்பிடு.
கிருஷ்ணவேணி : நான் மட்டும் எப்படி…
வீணா : நான் போய் டிஃபன் ஏதாவது கிடைக்குமான்னு பார்த்துகிட்டு வரேன் மேம். எல்லாரும் சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கலாம்.
(மேடையின் இடப் பக்கம் நோக்கிச் செல்கிறாள்)
(கீதா உணர்ச்சி பொங்க இரண்டு பெண்மணிகளையும் அணைத்துக் கொள்கிறாள்.)
(திரை)
பன்னிரெண்டாம் காட்சி
(ஒரு பெரிய பிரமுகரின் வீட்டு வரவேற்பறை போன்ற தோற்றம் மேடையில் காணப்படுகிறது. ஓரத்தில் இரண்டொருவர் நாற்காலிகளில் அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருக்கின்றனர். ஒல்லியான இளைஞன் ஒருவன் மேடையின் வலப்பக்கத்திலிருந்து வருகிறான். நடுவில் இருக்கிற மேசை அருகே உள்ள நாற்காலியில் அவன் அமர்கிறான். தொலைபேசி ஒலிக்கிறது. எடுத்துப் பேசுகிறான்)
இளைஞன் : நம்பி அண்ணன் வீட்லதான் இருக்காரு. குளிச்சிட்டு டிபன் சாப்பிட்டுட்டு வருவாரு. நீங்க வாங்க பார்க்கலாம். (தொலைபேசியை வைக்கிறான்.)
பொழுது விடிஞ்சு பொழுது போனா இவங்க பஞ்சாயத்துக்கே நேரம் சரியா இருக்கு. அரசியல்ல குதிச்சு பெரிய ஆளா ஆகாம நேரத்தை வீணடிச்சுகிட்டு இருக்காரு நம்ம அண்ணன்.
(மேடையின் வலப்பக்கத்திலிருந்து வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்த நபர் வருகிறார். கம்பீர தோற்றம். முகத்தில் பெரிய மீசை. பருத்த சரீரம். அவர்தான் நம்பி. இளைஞன் எழுந்து நிற்கிறான்.)
நம்பி : என்ன பரமு… காலங்கார்த்தால புலம்பிகிட்டு இருக்கே. நான் அரசியலுக்குப் போகணும்னு ஆசையா?
பரமு : ஆமாம். ஒங்களுக்கு இருக்கிற செல்வாக்குக்கு நீங்க உடனே அமைச்சர் ஆயிடுவீங்க. நான் ஒங்க பி.ஏ. ஆயிடுவேன் அண்ணே.
நம்பி : என் பேரைச் சொல்லி காசு பார்த்துடுவே அதானே… பரமு : பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை அண்ணே. நம்பி : அப்படியா.. கையூட்டு வாங்கித்தான் பொருளைச் சம்பாதிக்கணுமா?
பரமு : கையூட்டுன்னு ஏன் நெனக்கறீங்க. அன்பளிப்புன்னு பெயர் வைச்சிருக்காங்களே… அது தோன்றின காலத்திலிருந்தே.
நம்பி : சரி. இப்ப யார் போன் பண்ணாங்க?
பரமு : ஒருத்தரா ரெண்டு பேரா.. மூணு பேரு இப்ப உங்களைப் பார்க்க ஓடி வந்துகிட்டு இருக்காங்க.
நம்பி : யாரு?
பரமு : வேற யாரு… தொழிலதிபர் ராஜகிரியோட மகன் விஸ்வம், விஎம் பிரதர்ஸ் நிறுவனத்தோட ஜிஎம் ராஜப்பா, பாரதி நகர் தாதா செல்லையா…
நம்பி : சம்பந்தா சம்பந்தமில்லாத கூட்டணியா இருக்கு. பரமு : கூட்டணி பத்தி எல்லாம் பேச ஆரம்பிச்சுட்டீங்க. உங்களுக்குள்ள அரசியல் ஆர்வம் தலைதூக்குது.
நம்பி : சும்மா இருய்யா…
(மேடையின் இடப்பக்கத்திலிருந்து மூன்று பேர் வேகவேகமாக வருகின்றனர்.)
நம்பி : வாங்க யார் நீங்க?
முதல் நபர் : வணக்கம். நான் தொழிலதிபர் ராஜகிரியோட மகன் விஸ்வம்.
இரண்டாம் நபர் : வணக்கம் சார். நான் வி.எம். பிரதர்ஸ் ஜி.எம். ராஜப்பா.
மூன்றாம் நபர் : என்னைத் தெரியும் அவருக்கு. செல்லையாவைத் தெரியாதவங்க யாரு…?
நம்பி : என்ன விஷயம் சொல்லுங்க…?
செல்லையா : யோவ் நீங்க இருங்கய்யா. நானே சொல்றேன். நீ வளர்த்து வைச்சிருக்கியே ஜனா… அவன் எங்க கிட்ட அட்வான்ஸ் வாங்கிகிட்டு முடிக்கறேன்னு சொன்ன வேலைய முடிக்கல. நீதான் இதை பைசல் பண்ணனும்.
நம்பி : ஜனா… என்ன என் தம்பியா? பிள்ளையா? இங்க வந்து நிற்கறீங்க?
ராஜப்பா : சார். தப்பா நெனச்சுக்காதீங்க. அவுரு சூடா பேச்சை ஆரம்பிச்சுட்டாரு.
விஸ்வம் : அவுரு ஒங்க சிஷ்யன்தானே. நீங்கதான் கேட்கணும்.
செல்லையா : கேட்கணுமா? இல்ல வாங்கின பணத்தை ஒரு ரூபா குறையாம திருப்பிக் கொடுக்கச் சொல்லு.
நம்பி : (சிரிக்கிறார்)
செல்லையா : என்ன நம்பி சிரிக்கறே…?
நம்பி : சிரிக்காம… நீயே ஒரு தாதா. இவங்க ரெண்டு பேரும் பெரிய இடத்து ஆளுங்க. உங்ககிட்ட இருக்கிற ஆளு அம்பு சேனையால சாதிக்க முடியாமலா… ஜனா கிட்ட போய் நின்னீங்க…?
பரமு : இவங்களால முடியாமத்தான் அண்ணே ஜனா கிட்ட போய் நின்னு இருக்காங்க.
செல்லையா : நம்பி…
நம்பி : என்ன சவுண்ட் கொடுக்கறியா… ? நான் என்ன செய்யணும்ங்கற இப்ப…
செல்லையா : ஜனாவை வரவழைச்சு பணத்தைத் திருப்பிக் கொடுக்கச் சொல்லு.
நம்பி : கொடுக்கும்போது என்கிட்ட சொல்லிட்டா கொடுத்தீங்க…
செல்லையா : வேணாம் நம்பி. நல்லது இல்ல.
நம்பி : நல்லதைப் பத்தி பேசற ஆளைப் பாரு. பரமு… இவங்க இங்க ஏன் வந்திருக்காங்கன்னு உனக்குத் தெரியல… நான் சொல்றேன் கேளு. இந்த மெத்தப் படிச்ச பெரிய மனுஷன் பெங்களூர்ல இருக்கற பெரிய கம்பெனிக்கு மெட்ராஸ்ல ஜி.எம். ராஜப்பா… ஒரு பொண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து அவ முரண்டு பிடிச்சதால அவள பத்தி வதந்தி பரப்பி, அந்த வதந்தியால ஒரு ஹவுஸ்ஒய்ஃப் தற்கொலை வரைக்கும் போய்… இவ்வளவு நடந்தும் அடங்காம… அந்தப் பொண்ணுக்குத் தொந்தரவு கொடுத்து மெட்ராஸ் விட்டு ஓட வெச்சுட்டு… இப்ப அவளைப் பிடிச்சுக் கொடுன்னு ஜனாகிட்ட பணம் கொடுத்திருக்கான்.
இதோ இருக்கானே தொழிலதிபர் ராஜகிரியோட மகன்… சின்னம்மாவுக்குப் பொறந்த பொண்ணு தங்கச்சிக்கு வெறும் பத்து இலட்சத்தை மட்டும் கொடுத்துட்டு ஏமாத்தப் பார்த்திருக்கான். அவகிட்ட வேற எதுவும் வேணாம்னு எழுதி வாங்கத் துடிக்கறான். அந்தப் பொண்ணும் பட்டனத்தை விட்டுப் போயிடுச்சு. அவளைத் தேடிக் கொடுன்னு பாசமுள்ள அண்ணன் அண்ணன் ஒரு கோயில் ஜனா கிட்ட பணம் கொடுத்திருக்காரு.
இவுரு இருக்காரே… செல்லையா அண்ணன்… வயசுல பெரியவருதான். முதுமை முதிர்ச்சியைக் கொடுக்கறது இல்ல..
செல்லையா : நம்பி…
நம்பி : பனங்காட்டு நரி. உன் சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாது. பழைய டயலாக்தான். நல்லா இருக்கு இல்லை. யோவ் கேளுய்யா பரமு…
பரமு : (பயத்துடன்) சொல்லுங்க அண்ணே.
நம்பி : பையனோட முறைப்பொண்ணு இவரோட தங்கச்சி பொண்ணு. இவரு பிள்ளையை கல்யாணம் பண்ணிக்க காத்திருக்கும்போது அவளை விட்டுவிட்டு பையன் ஒரு பொண்ணை பார்த்திட்டு அவளைக் கட்டி வைன்னு சொல்ல… அவ மாட்டேன்னு சொல்ல… இவங்க கொடுத்த தொந்தரவு தாங்காம அவளும் ஓடிட்டா.
செல்லையா : இதோ பார். உனக்குத்தான் எல்லா கதையும் தெரிஞ்சு இருக்குது இல்ல. எங்க விஷயத்துக்காக ஒங்ககிட்ட வரலே. அதை நாங்க பார்த்துக்கறோம். ஆளுக்கு ஜம்பது இலட்சம் கொடுத்திருக்கோம். எடுத்து வைக்கச் சொல்லு. உடனே…
நம்பி : இவங்க நம்ம கிட்ட பாடம் கத்துக்காம போக மாட்டாங்க. பரமு.. நீ ஜனாவை வரச் சொல்லு. போன் போடு. செல்லையா : இவரு வாத்தியாரு பாடம் சொல்லப் போறாரு.
பரமு : ரிங் போவுது. எடுக்க மாட்டேங்கறாரு. இதோ எடுத்துட்டாரு அண்ணே.. ஜனா.. பரமேஸ்வரன் பேசறேன். அண்ணன் உடனே வரச் சொல்றாருப்பா. வர்றியா… வா… வராரு அண்ணே.
(சில நிமிடங்கள் மௌனம் நிலவுகிறது. செல்லையா உறுமிக் கொண்டே நடக்கிறார்.)
(சற்று நேரத்தில் இளைஞன் ஜனா வருகிறான்.)
நம்பி : என்னய்யா இது… ஜெர்கின் எல்லாம் போட்டுகிட்டு… சினிமா ஹீரோ மாதிரி…
ஜனா : வணக்கம் அண்ணே….
நம்பி : யோவ். நீ இவங்களுக்கு வேலைய முடிச்சுத் தர்றேன்னு பணம் வாங்கிட்டு ஏமாத்திட்டியாம். பணத்தைத் திருப்பித் தரச் சொல்றாங்க.
ஜனா கொடுக்கறேன் அண்ணே. கீழே கார்ல வெச்சிருக்கேன். அதுக்கு முன்னாடி…
செல்லையா : முன்னாடியாவது… பின்னாடியாவது.. போய் பணத்தைக் கொண்டு வந்து கொடுத்துட்டு கதையைப் பேசு. ஜனா : கதையப் பேசிட்டு கொடுத்தா நல்லா இருக்கும். என்ன அண்ணே சொல்றீங்க…?
நம்பி : என்னய்யா வித்தை காட்டறவன் மாதிரி பேசிகிட்டு இருக்கே… வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு தேங்காய் உடைச்சா மாதிரி பேசுய்யா. நறுக்குன்னு நச்சுன்னு சொல்லு.
ஜனா : சரிங்க அண்ணே. இப்ப என் கையில இருக்கற கடிதம் என்ன தெரியுமா…? செல்லையா சாரோட தங்கச்சி பொண்ணு… தங்கமான பொண்ணு தங்கம்னு பேரு. அது எழுதி வெச்சிருக்கிற சூசைட் நோட்… என்ன சொல்வாங்க பரமு…?
பரமு : தற்கொலைக் கடிதம்பா.
ஜனா : அதுதான்.
செல்லையா : என்ன ஊளை மிரட்டல் விடுறியா…
ஜனா : இதை நாளைக்கு போலீஸ்ல ஒப்படைச்சுடுன்னு என்கிட்ட கொடுத்து இருக்கு தங்கம். இங்க பாருங்க. தங்கம் பேசின வீடியோ காட்சி என் போன்ல…
(போனைக் காட்டுகிறான்)
குரல் : மாமா… ஒங்க பிள்ளை முத்துவுக்குத்தான் புத்தி கெட்டுப் போய்.. நாகலட்சுமிக்கு தொல்லை கொடுக்க றான்னா… நீங்க அதுக்குத் துணை போறீங்க. இன்னியோட ஒங்க ஆட்டத்தை நிறுத்தணும். திருந்தணும். இல்லேன்னா இன்னிக்கு என் தற்கொலை நிச்சயம். என்னை தன்னோட பிள்ளைக்குக் கட்டிக் குடுக்கறேன்னு தட்டை மாத்திட்டு எங்க மாமா என்னை ஏமாத்திட்டாரு. அதனால் மனசு உடைஞ்சு தற்கொலை பண்ணிக்கப் போறேன்னு லெட்டர் எழுதி ஜனாகிட்ட கொடுத்திருக்கேன். அசிஸ்டன்ட் கமிஷனர் பவானிகிட்டயும் கொடுத்திருக்கேன். என் தற்கொலைக்கு என் மாமாவும், அவரு பையனும் காரணமா இருப்பாங்கன்னு ஏ.சி. மேடம் கிட்ட அவங்க வீட்ல வேலை செய்யும்போது பல தடவை சொல்லி இருக்கேன். நான் பொறுமையா இருந்து பார்த்துட்டேன். ஒங்க ஆட்டம் நிற்கல. உயிரைக் கொடுத்து உங்களை உள்ளே வைச்சுப் பார்க்க முடிவு பண்ணிட்டேன். இன்னிக்கு நண்பகல் பன்னிரண்டு மணி வரைக்கும் உங்களுக்குக் கெடு. இதுக்கும் நீங்க அடங்கலேன்னா எங்க அண்ணியோட சாவுல மர்மம் இருக்குன்னு எங்கம்மா ஒரு வழக்கு போடவும் தயார் ஆயிட்டு இருக்காங்க… நீங்களே முடிவுக்கு வாங்க.
விஷ்வா : எப்படி இருந்தது கதை…?
செல்லையா : தம்பி தங்கத்துக்கு லைன் போடு நான் பேசறேன்.
(ஜனா கைபேசியைத் தருகிறான்) செல்லையா : தங்கம்… தங்கம்…
குரல் : ஜனா அண்ணனா சொங்க.
செல்லையா : நான் மாமா பேசறேன்ம்மா.. நீ தப்பான முடிவுக்கு வந்துடாதே. நான் வீட்டுக்கு வர்றேன்.
குரல் : நாகலட்சுமி…
செல்லையா : அவ இருக்கிற பக்கமே நானும் போக மாட்டேன். என் பையனும் போக மாட்டான். ஒங்க ஆயா மேல சத்தியம்மா…
குரல் : மாமா பாட்டி மேல சத்தியம் பண்ணி இருக்கே… பேச்சு மாற மாட்டியே… ஆனா… ஒன் பிள்ளை மனசு எப்படி இருக்குன்னு யாருக்குத் தெரியும்…?
செல்லையா : அவனை மாத்த வேண்டியது என் பொறுப்பு. நீ எதுவும் செஞ்சுடாதேம்மா..
குரல் : ஜனா அண்ணே. நன்றி அண்ணே. மாமா அங்கேயேதான் இருக்காரா?
ஜனா : கிளம்பிட்டாரு தங்கம்.
குரல் : நன்றி வெச்சுடறேன்.
ஜனா : சரிம்மா… என்ன சார்… கிளம்பிட்டீங்க இல்ல… நம்பலாமா? மனம் மாறிட்டீங்களா…?
செல்லையா : நம்பி. என்னை மன்னிச்சிடு. வரேன். (செல்லையா செல்ல முற்படுகிறார்)
ஜனா : இருங்க சார். பரமு… கார்ல இருக்கற மூணு சூட்கேஸ்ல இவருக்கு ஒரு சூட்கேஸ் கொடுத்திடு. இந்தா கார் சாவி.
பரமு : குருவுக்கு ஏத்த சிஷ்யன்.
(செல்லையாவும், பரமேஸ்வரனும் மேடையின் இடப்பக்கம் நோக்கிச் செல்கின்றனர்.)
ராஜப்பா : கிழவனை மிரட்டி அனுப்பிட்டே. எங்களுக்கு என்னய்யா சொல்லப் போற?
ஜனா : என்ன அண்ணே… இவுரு ரொம்ப அவசரப்படறாரு.
நம்பி : இவருக்கும் பணத்தைத் திருப்பிக் கொடுத்திட்டு சமாசாரத்தைச் சொல்லி அனுப்பு. வேலை வெட்டியப் பார்க்கட்டும்.. இவருக்கு என்ன காகிதம் வெச்சிருக்கே?
ஜனா : இவங்க ஹைடெக் ஆளு அண்ணே. ராஜப்பா சார்..எப்ப மெயில் செக் பண்ணீங்க?
ராஜப்பா : டேய்.. என்ன பேசறே…?
ஜனா : ஒங்க போன்ல இ-மெயில் செக் பண்ணுங்க பிரதர்.
(ராஜப்பா கைபேசியை எடுத்துப் பார்க்கிறார். முகத்தில் அதிர்ச்சி.)
நம்பி : என்ன ஆச்சு ஜனா? முகம் மாறிடுச்சு இவருக்கு… பேய் அறைஞ்சா மாதிரி.
ஜனா : அலுவலகத்துல வேலை செய்யற பெண்கள்கிட்ட ஒழுங்கீனமா நடந்துக்கிட்டதுக்காகவும், வேலை செய்யறவங்களப் பத்தி வதந்தி பரப்பினத்தாகவும் சமூக விரோதிகளுடன் தொடர்பு வெச்சுகிட்டதுக்காகவும் ரெண்டு மாசமா வேலைல முழுகவனம் செலுத்தாம இருந்தததுக்காவும் உங்களை வேலைய விட்டு டிஸ்மிஸ் பண்ணிட்டோம். இன்னிக்கு தினேஷ் பொறுப்பு எடுத்துப்பாரு. நீங்க இனிமேல் எங்க ஆபீஸ் பக்கமே வரவேணாம்னு மெயில்ல லெட்டர் அனுப்பி இருக்காங்க… மேலிடத்துல.
நம்பி : என்னய்யா நீதான் அனுப்பினா மாதிரி புட்டு புட்டு வைக்கறே…
ஜனா : அவங்க டாப்பாஸ் அனுப்பி இருக்காரு. இவுரு ஆடின ஆடட்டத்துக்கு அவங்க என்ன வாயில விரலை வெச்சுகிட்டு வேடிக்கையா பார்ப்பாங்க. நேத்து சாயங்காலமே டிஸ்மிஸ் ஆர்டர் அனுப்பிட்டாங்கன்னு அவங்க ஹெட் ஆபீஸ்லேந்து நியுஸ் எனக்கு வந்துச்சு. இன்னிக்கு இவர் வீட்டு முகவரிக்கு பதிவுத் தபால்ல மெயில் வந்த லெட்டர் வரும்.
நம்பி : படிப்பு இவங்கள நெறிப்படுத்தறது இல்லை ஜனா.
(ராஜப்பா செல்கிறான்)
ஜனா : இருங்க சார்.
நம்பி : வேலை போயிடுச்சு. அவுரு கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்துடு பாவம்…
ஜனா : ஆமாம் அண்ணே. நான் போய் கொடுத்துட்டு வரேன்.
(ஜனாவும் ராஜப்பாவும் மேடையின் வலப்பக்கம் நோக்கிச் செல்கிறார்கள். பரமேஸ்வரன் எதிரில் வருகிறான்.)
நம்பி : பரமு… என்ன இருந்தாலும் இவுரு பெரிய மனுஷன் வீட்டுப் பிள்ளை இவருக்கு டீ கொடு.
பரமு : சரிங்க அண்ணே. ஜனா.. இந்தா கார் சாவி.
(பரமேஸ்வரன் மேடையின் மேடையின் இடப்பக்கம் நோக்கிச் செல்கிறான். சில நிமிடங்களில் தேநீர் கோப்பையுடன் வருகிறான்.)
பரமு : இந்தாங்க சார்.
விஸ்வம் : இல்ல பரவாயில்லைங்க வேணாம்.
நம்பி : குடிங்க தம்பி. நம்ம பையன் பணத்தோட வருவாரு. (விஸ்வம் அருகில் உள்ள நாற்காலியில் அமர்கிறான்) (ஜனா கையில் சூட்கேஸ் உடன் மேடையின் வலப்பக்கத்திலிருந்து வருகிறான்.)
ஜனா : அண்ணே… இவர்கிட்ட பணத்தைத் திருப்பி கொடுத்திடறேன் அண்ணே.
நம்பி : சரிப்பா. இவுரு தங்கச்சிக்கு நல்லது செய்யணுமே. மனசு மாறுவாரா? அந்தப் பொண்ணு ஓடி ஒளியுதே பாவம்.
ஜனா : கண்டிப்பா செய்வார்ன்னு நம்புவோம். ஏன்னா இவரோட மனைவி, தம்பியோட மனைவி பசங்க எல்லாரும் வீட்டை விட்டுக் கிளம்பிக்கிட்டு இருக்காங்க. அண்ணனும் தம்பியும் தங்கைய ஏத்துகிட்டு அப்பா சொன்னபடி சொத்தைக் கொடுத்து கல்யாணம் பண்ணி வைக்கறோம்னு சொல்லணும். சொன்னபடி நடக்கணும். அப்பத்தான் திரும்பி வர்றதா இருக்காங்க.
நம்பி : அவங்க வீட்ல எடுத்த முடிவு உனக்குத் தெரியுதே? ஆச்சரியம்பா… இவுரு தலை குனிஞ்சு போச்சு. என்ன தம்பி சொல்றீங்க… ஒங்க அப்பா இரண்டாம் தாரம் கட்டிக்கிட்டது தப்புதான். அதுக்காக தங்கச்சி என்ன பாவம் செஞ்சுது… அதை இப்படி ஓட ஓட விரட்டினா… ஒங்க குடும்பம் விளங்குமா…?
விஸ்வம் : (எழுந்து நிற்கிறான்) தங்கையை ஏத்துக்கறேன் சார். அவளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யறேன். வரேன்.
ஜனா : சீக்கிரம் போங்க சார். அவங்க பெட்டி படுக்கை எல்லாம் கட்டிக்கிட்டு இருக்காங்க.
(விஸ்வம் மேடையின் வலப்பக்கம் நோக்கிச் செல்கிறான்)
நம்பி : எப்படிய்யா இவனுங்க ஒன்கிட்ட சிக்கிட்டானுங்க? செல்லையாவையும், விஸ்வத்தையும் திருத்தினே. ராஜாப்பாவுக்கு தண்டனையே கிடைச்சிடுச்சு.
பரமு : குருவ மிஞ்சிட்டார் சிஷ்யன் அண்ணே.
நம்பி : அப்ப நாளையிலிருந்து அவன் கூட போயிடு.
பரமு : என்ன அண்ணே.. இப்படி சொல்லிட்டீங்க. நெஞ்சுல ஈட்டிய குத்திட்டீங்களே அண்ணே.
ஜனா : அந்தப் பொண்ணுங்க மெட்ராஸ் விட்டுப் போனதும், இவங்களால கண்டுபிடிக்க முடியல. ராஜப்பா, செல்லையா, விஸ்வம் மூணு பேரும் இந்த விவகாரத்தால நண்பர்களாயிட்டாங்க. ஓர் ஆளை செட் பண்ணி ஜனாகிட்ட போனா காரியம் நடக்கும்னு சொல்ல வைச்சேன். விரிச்ச வலைல விழுந்துட்டானுங்க. ராஜப்பா செஞ்ச அட்டகாசத்தை எல்லாம் ஆதாரத்தோட பெங்களூர் போய் அவங்க எம்.டி.கிட்ட டைம் வாங்கி விளக்கமா எடுத்துச் சொன்னேன். சஞ்சனாவுக்கு அவன் கொடுத்த தொல்லைக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தேன். நாகலட்சுமிக்காக தங்கத்தைப் பார்த்துப் பேசினேன். நாகலட்சுமிக்கு அவங்க கொடுக்கற தொல்லைய வேடிக்கை பார்க்கலாமான்னு கேட்டேன். அவ புரிஞ்சுகிட்டா… ஒத்துழைச்சா.
நம்பி : ஹாசினிக்காக அவங்க அண்ணனோட இல்லத்தரசிகளைச் சந்திச்சு பேசினியா?
ஜனா : ஆமாம். வயசுப் பெண்ணை ஒங்க கணவர்கள் வாட்டி எடுக்கும்போது நீங்க உங்களுக்கு என்னன்னு இருக்கீங்களேன்னு கேட்டேன். அப்புறம்தான் அவங்க ஹாசினிக்கு உதவி செய்ய இறங்கி வந்தாங்க.
நம்பி : இதுல யார் உன் காதலி? பணக்காரப் பொண்ணு ஹாசினியா? நடுத்தரக் குடும்பத்து பொண்ணு சஞ்சனாவா? ஏழைப் பொண்ணு நாகலட்சுமியா?
ஜனா : என்ன அண்ணே… இப்டிப சொல்லிட்டீங்க?
நம்பி : இல்லய்யா… ஒரு பைசா கூட பார்க்காம இவ்வளவு தூரம் இறங்கி வேலை செஞ்சு இருக்கே. பாராட்டறேன். ஆனா யாருக்காக மெனக்கெட்டு செஞ்சே?
ஜனா : நீங்க சொன்ன விஷயம் கரெக்ட்…
நம்பி : என்ன அது?
ஜனா : காதலிக்காகத்தான் இப்படி களத்தில குதிச்சேங்கறது கரெக்ட். என்னோட காதலி அந்த மூணு பேர்ல யாருமே இல்லே…
நம்பி : என்னய்யா சொல்றே…?
ஜனா : நாகலட்சுமியோட கசின் கீதா. கடலூர்ல இருக்கிற பேமஸ் டாக்டர் நர்மதாவோட பொண்ணு. அவ சொல்லித்தான் மும்முரமா வேலை பார்த்து அந்த மூணு பேரோட பிரச்சினையைத் தீர்த்து வைக்கப் பாடுபட்டேன். (வெட்கத்துடன் பேசுகிறான்.) வரேன் அண்ணே. ஒங்க பேரைக் காப்பாத்திட்டேன். (மேடையின் வலப்பக்கம் நோக்கிச் செல்கிறான்.)
நம்பி : எப்படிய்யா… இங்க இருந்துகிட்டு ஊர்ல இருக்கிற பொண்ணுக்கு காதல் வலை விரிச்சான்.. ? வெட்கப்படறான் பாரு .
(நம்பி மேடையின் இடப்பக்கம் நோக்கிச் செல்கிறார்.)
பரமு : (தனக்குத் தானே பேசிக் கொள்கிறான்) ஆமாம். மெட்ராஸ்ல இருந்துகிட்டு அந்த ஊரு பெண்ண இவன் எப்படிப் பிடிச்சான்? ஃபேஸ்புக் மூலமா பிடிச்சிருப்பானா… ? நமக்குத்தான் யாருமே கிடைக்க மாட்டேங்கறாங்க. வயசு வேற கூடிக்கிட்டே போவுது.
(திரை)
– தொடரும்…
– சஹானா (நாடகம்), முதல் பதிப்பு: ஜூலை 2015, வெளியீட்டாளர்: எஸ்.மதுரகவி, சென்னை.