சவம் நினைந்து உரைத்தல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 8, 2024
பார்வையிட்டோர்: 472 
 
 

“சும்மச் சும்மா சொறிஞ்சுக்கிட்டே நிக்காதயும் வே! முடியாதுண்ணு ஒருக்கச் சொல்லியச்சுல்லா!”

குரலில் கடுப்பம் கூட்டித் தவசிப்பிள்ளை கண்ணுபிள்ளையிடம் வன்முகம் காட்டினார் கும்பமுனி.

நேரம், மாலை மயங்கிக்கொண்டிருந்தது. காகம், மைனா, கொக்கு, நாரை, செண்பகம், புறா, பருந்து, கிளி, சிட்டுக்குருவி, சாம்பல் குருவி, தேன்சிட்டு யாவும் கூடடையும் மும்முரத்தில் இருந்தன. காதலரை இணைக்கும் பசைபோல மந்த மாருதம் வீசியது. பகலில் இருந்து இரவுக்கான முன்தினம் குளிரக் குளிர மழை பெய்திருந்ததால் குளிர்ச்சியும் மரங்களின் இருள் பச்சையும் மாயக் கவர்ச்சி விரித்துப் பரப்பின. மண்வெட்டிகளைக் கழுவி வைத்த விவசாயக் கூலிகள், கறண்டி முழக்கோல், சாந்துச்சட்டிக் கழுவி ஊற்றிக் கொத்து வேலைக்கார்கள், சில்லறைத் தொழிற்கூடங்களின் தொழிலாளர் இன்னோரன்ன பிறர் யாரும் நாளையென்று ஒன்றில்லை எனும் அவசரகதியில் டாஸ்மாக் கடைகளின் திக்கில் சாயத் தலைப்பட்ட நேரம்.

சற்றே சாய்வான சூரல் நாற்காலியில் சாய்ந்து குந்தியிருந்தார் கும்பமுனி. குடமுனி, குறுமுனி, பொதியமுனி, மலயமுனி எல்லாம் அவரின் மூத்த எழுத்தாளர் ஒருவரின் பெயர். கால்களைத் தூக்கி நாற்காலியில் வைத்து சற்றேறக்குறைய சபரிமலை ஐயப்பனின் யோக இருப்பு. தவசிப்பிள்ளை , முற்றத்தின் வேலி ஓரத்தில் நொச்சிப்புதர் ஓரம் சரசரவென ஊர்ந்து சென்ற அரவம் ஒன்றைக் கண்ணுற்று நின்றிருந்தார். வாசல்படி நிலையில் சாய்ந்து, புற்றுக்காலை சுவரில் அண்டை கொடுத்து, நாயக்கர் கால நாட்டிய மகளிரின் சிற்ப முத்திரை போலக் கை வைத்து நின்றார்.

அதைக் கண்ணுற்ற கும்பமுனியின் உதடுகள் பாம்புக்கான தமிழ்ச் சொற்களாக முணுமுணுக்க ஆரம்பித்தன. அரவம், பணம், பாந்தள், மாசுணம், நாகம் என உடனேயே அவர் சிந்தனை பின்னவீனத்துப் பாணியில் வடிவ ஒழுகற்று ஓட ஆரம்பித்தது. அட்டமா நாகங்களான தக்கன், அனந்தன், குளிகன், பதுமன், கார்க்கோடகன், வாசுகி, மகா பதுமன், சங்கபாலன் இவர்களில் ஒருவரின் வழித்தோன்றலாக இருக்கலாம் என்று எண்ணினார், கும்பமுனியின் மனம் பாய்ச்சலை உணர்ந்த தவசிப்பிள்ளை கேட்டார்.

“இது என்ன இந்திய அரசியல் வாரிசு போலவா?” என்று.

“நீரு கூடு விட்டுக் கூடு பாஞ்சிருவேரு போல இருக்கே?”

“ ஏன்? ஒரு விண்ணப்பம் ஆளுநருக்கு அனுப்பினா உமக்கு என்ன கொறஞ்சு போகும்?” என்றார் தவசிப்பிள்ளை உரையாடலைக் கைவிட மனமின்றி.

“உமக்கு இப்பம் என்னுண்ணு வே வருகு? இதென்ன அஞ்சு எம்.பி. சீட்டும் அய்நூறு கோடி ரூபாயும் கேக்கப்பட்ட யாவாரமா? காலுலதான் உமக்கு ஆணிப் புத்துண்ணா மூலத்திலேயும் பூச்சி முள்ளுக் கொத்துப் போலக் குத்துகா வே சவம்?”

உடனே வழக்கம் போல, பணம் பார்த்துப் பணம் பாய்வது போல, கும்பமுனியின் சிந்தனைப் பெருவெள்ளம் உள்மூலம், வெளி மூலம், நிர்மூலம், கந்தமூலம், ஆதிமூலம், இகபர மூலம், திருமூலம், சிறுபஞ்ச மூலம் என்று கட்டற்று ஓடியது.

“ஏன் கேட்டா என்னா? உமக்கு அதுக்குத் தகுதி இல்லையா?” என்று மல்லுக்கட்டினார் தவசிப்பிள்ளை.

“என்ன தகுதி இருக்குண்ணுதான் நானும் கேக்கேன்? முதலமைச்சரா இருந்திருக்கேனா? இனமானத் தலைவனா? சினிமாவுல கதாநாயகனா? மொழியை முன்னூறு வருசம் முன்னெடுத்தேனா?”

“நீரு திருக்கோலூர் பெண்விள்ளை ரகசியம் மாரி பேசப்பிடாது கேட்டரா? என்ன தகுதி இல்லேங்கேன்? பத்து அம்பது பொஸ்தகம் எழுதிருக்கேரு அண்ணைக்கு வந்த பத்ரகாளியம்மன் பல்கலைக் கழகத்துப் பேராசிரியன், நீரு செய்திருக்கப்பட்ட காரியத்துக்கு ஏழெட்டு டாக்டர் பட்டம் உமக்குத் தரலாம்னு சொன்னான்”.

“உமக்கும் கூட ரெண்டு தரலாம்?”

“சும்ம தற்குத்தறம் பேசப்பிடாது பாத்துக்கிடும். அறுவது வருச மாட்டு எழுதிக்கிட்டுக் கெடக்கேரு… பத்து நாப்பது பேரு உம்ம பொய்தகத்திலே முனைவர் பட்டம் வாங்கியாச்சு… பேராதா?”

“அதைக்கொண்டு என்னத்துக்கு ஆவும் வே! துட்டில்லாம பஸ்சிலே ஏத்துவானா? அரைலிட்டர் பாலு வேண்ட முடியுமா?”

“காகம் உகக்கும் பொணம்ங்கிற மாதிரி, எதுக்கு உம்ம புத்தி இப்பிடி சில்லறை காரியத்திலே நிலை குத்தி நிய்க்கி? நீரு தானவே பாட்டா சொல்லுவேரு, பெரிதும் கேள்ணு?”

“ஆமா! அதுக்காக நாம ஒரு பத்மவிபூஷண் கேட்டிரலாம் பாரும்!”

அதுக்கு நீரு இரு நூறு சினிமால நாயகனா நடிக்கணும். சமஞ்ச கொமரிகளுக்கு குண்டியைப் புடிச்சு ஆடணும். ஒரு அரசியல் கட்சியாவது ஆரம்பிக்கணும்.”

“வேற காரியம் உண்டும்னா பேசும் வே!”

ஏன் பாட்டா, நீரே உம்ம தகுதியைக் கொறச்சுப் பேசுகேரு? சாகித்ய அகாதமி, கலைமாமணி எல்லாம் கெடச்சிருக்கு! பாரதியார், கல்கி, கண்ணதாசன், தமிழ்ச்செம்மல், முச்சுடர் எல்லாம் தந்திருக்கான்… அதெல்லாம் போறாதா?

“அதெல்லாம் நாட்ல நூறுபேரு வாங்கீருக்கான் வே! வடக்குத்தெரு நாஞ்சில்நாடன் கூட வாங்கீருக்கான். அதுக்கு மேலயும் பத்திருவது வாங்கி கக்கத்திலே வச்சுக்கிட்டு, நம்மள யாரும் கண்டுக்கிடல்லே என்று குதிச்சுக் குதிச்சு அம்மாடி தாயரே அடிக்கப்பட்டவனும் இருக்கான். எல்லாத் தகுதியும் இருந்து ஒண்ணுமே கெடைக்காதவனும் இருக்கான். நீரு அந்தப் பேச்சை விடும். நீரு ராத்திரிக்குப் பல்லுக்குப் பதமா புல்கா ரொட்டியும், பன்னீர் மசாலாவும் வய்க்கப்பட்ட வளியைப் பாரும். இல்லேண்ணா டால்டோக்ளா கூடப் போகும்…”

“ஏன், மட்டர் புலாவ்… மேத்தி பரோட்டா, தகி வடி, நவ்ரத்தன் மக்கன் குருமா எல்லாம் வேண்டாமா? எம்பெருமானே சொறிஞ் சுக்கிட்டு நடக்காராம் பூசாரி சொப்பன தாரகை வந்து மசாஜ் பண்ண வரம் கேட்டாராம்….

“வாரியல் கொண்டைக்கு பட்டுக் குஞ்சலமாண்ணு கேக்கேரு”

“ஆமா! பேச்சை மாத்தாதயும்.. இல்லேண்ணா நானே ஒரு கோரிக்கை மனு எழுதி செய்து கொண்டாறேன். நீரு ஒம்ம மாணிக்கக் கையொப்பம் மட்டும் போடும். மிச்சம் வேலையை நான் பாத்துக்கிடுகேன்….”

“நீரு என்னத்த வே பாப்பேரு? இது எவளாம் கெளவி குளிக்கச்சிலே ஒளிச்சு நிண்ணு பாக்கப்பட்ட காரியம்மா?”

“எந்த வயசிலே என்னப் பேச்சு பேசுகேரு? இப்பம் ஒரு பய உம்மைக் கூடக்கூட தேடீட்டு வாறாம்லா? ஏதோ ஆராய்ச்சி பண்ணு காம்லா? என்ன தலைப்பு பாட்டா? ஆங்…இப்பம் பிடி கெடச்சு… கும்பமுனி ஆக்கங்களில் சிவபரித் தத்துவம்… அவனுக்க சோலி முடியுது வரைக்கும், என்ன சொன்னாலும் கேப்பான்…”

“ஓ! அதுனாலதான் அவங்கிட்டே அண்ணைக்கி அரைலிட்டர் பால் பாக்கெட் வேண்டீட்டு வரச்சொன்னேரா? இப்பிடித் தரங்கெட்டுப் போயிட்டேரே!”

“நீரு ஒண்ணு.. அவனவன் காசு கொடுத்து தீசீஸ் எழுதி வாங்குகான் பாட்டா! அதுக்கு மேலயும் உண்டும். அதை இங்க பேச நீதி இல்லே.. நீரு கௌட்டுப்பசு செனையானது போல, ஈண முக்கவும் மாட்டேரு.. ஈணுன கன்றுக்குட்டியை நக்கவும் மாட்டேரு”

“சரி ஓய் தவசிப்பிள்ளே! அப்பிடியெல்லாம் எங்கைச் சாத்தை நீரே போட்டு கோரிக்கை மனு அனுப்பீராதயும்.. நான் கொஞ்சம் கெவுரமான பேரு சம்பாரிச்சு வச்சிருக்கேன்!”

“அந்தப் பேச்சை விடும் கேட்டேரா? எனக்கு அவுத்துப் போட்டுட்டு ஓடலாம போல சிரிப்புத்தான் வருகு….”

“ஆமா! புத்துக்காலையும் வச்சிக்கிட்டு…”

“ஆமா! கொஞ்சம் கிந்திக்கிந்தி ஓடுவேன்..”

“அது கெடக்கட்டும். என்னத்துக்காகச் சுட்டி ஒமக்கு சிரிப்பாணி வருகு, அம்மணங் குண்டியாட்டு ஓடும்படியா?”

“சும்ம தெரியாத மாரி கேக்காதீயும்…. இப்பம் சொன்னேருல்லா கெவுரவமான எளுத்தாளன்ணு.. அதுக்குத்தான்”

“ஏம்வே? அதுக்கு என்னா இப்பம்?”

“அதான் மார்க்சீய, அம்பேத்காரிய , பெரியாரிய விமர்சகன் எல்லாம் நீரு ஒரு சாதி வெறியன், இந்துத்துவான்ணெல்லாம் களுவிக் களுவி ஊத்துகானுகளா?”

“களுவப்பட்ட சோலி பாத்தா, ஊத்தித்தானவே ஆகணும்?”

“வேறயும் ஒண்ணு! நீரு யேதோ ஒரு பொண்ணை , உம்ம கிட்டே முன்னுரை கேக்க வந்தவளை, போன வருசம் கற்பழிச்சு அனுப்பீட்டேருண்ணு ஒரு குற்றச்சாட்டும் உண்டும்!”

– “கேணப் பயக்க டே! இந்த வயசிலே நான் எதை வச்சுடே கற்பழிக்க முடியும்? பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லாண்டமா?”

“பின்னேயும் ஒரு காரியம்! உம்மை சி.ஐ.ஓ. ஏஜண்டுன்னும் வருசத்துக்கு ரெண்டு மில்லியன் டாலர் வருகுண்ணும் முகநூல்லே எளுதிருக்கானாம்லா?”

“ரெண்டு மில்லியன் டாலர்னா எவ்வளவு டே?”

“எனக்கு என்னத்த தெரியும்? வாங்கப்பட்ட நீரே சொல்லும்?”

“ரெண்டு மில்லியன்ணா இருவது லெச்சம். ஒரு டாலருக்கு எளுவது ரூபாவையும்… பெருக்கிப் பாத்துக்கிடும்….”

“அது தெரிஞ்சா உம்மக்கிட்ட கேஸ் அடுப்புக்கூட இல்லாம, வெறகடுப்பிலே தென்னை மட்டை, தேங்காச் சவுரி, தேங்காச் செரட்டை எல்லாம் வச்சு ஊதி, வெந்து புழுங்கப்பட்ட குசினிப் பெரையிலே கெடந்து தவசிப்பிள்ளை உத்யோகம் பாப்பனா பாட்டா?”

“சரி டே! நீரு அந்தால ஆரோகணம் பாடாதீரும். டாலர் வெல ஏறக்கொறய இருந்தாலும் வருசத்துக்குப் பதினாலு கோடி வரும் பாத்துக்கிடும்!”

“பதினாலு கோடி? வருசத்துக்கு…ம்ம்ம்… இதையா ஒரு துட்டுண்ணு கூட்டாக்கிப் பேசுகானுருகா பாட்டா? ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ, சுயேச்சையோ ஒரு அஞ்சுவருசம் எம்மெல்லே ஆக இருந்தாப் போதாதா..? கொஞ்சம் கட்டப் பஞ்சாயத்து, தரகு கமிசன். ஆள் புடுச்சுக் கொடுக்கது எல்லாமா சேத்து ஆயிரம் கோடி தேத்தீரானுகோ! மேடையிலே என்னமும் பேசீட்டுப் போலாம்…..
காரியத்திலே கண்ணா இருக்கானுகோ…

“அதுக்கெல்லாம் மத்ததுலே மறு கெடக்கணும் வே!”

“அது கெடக்கட்டும் பாட்டா! வருசம் பதினாலுகோடி சொளை சொளையா எண்ணி வாங்கீட்டா, நீரு எனக்கு வச்சு வௌம்பதுக்கு ஆயிரத்தாஞ்ஞாறு ரூபாதாறேரு?”

கும்பமுனிக்கு அண்டியிலே தேள்கொட்டினது போல, வெப்ரளாம் ஏறி அடித்தது.

“ஏம் வே? மூணுவேளை தீவனம்… நாலு கட்டஞ்சாயா எல்லாம் கணக்குக் கெடையாதா? என்னப் பாக்க வரப்பட்டவனுகோ வாங்கீட்டு வரப்பட்ட பண்டம். ஆப்பிள், ஆரஞ்சு எல்லாம் நீரு தானவே திங்கேரு?”

“அதையெல்லாம் மறுவெலக்கி வித்து காசை நீரே முடிஞ்சுக்கிடுதேரு?”

கும்பமுனிக்கு வர்ம ஸ்தானத்தில் குத்தியது போலிருந்தது. நிலமை கட்டு மீறிப் போவதைக் கண்டு, தவசிப்பிள்ளையிடம் சொன்னார்.

“சரி சரி! நீரு போயி, நல்ல கடுப்பம் கூட்டி ஒரு சாயா எடும்… நல்ல கொதிக்கக் கொதிக்க இருக்கட்டும்…” என்றார்.

கட்டஞ்சாயாவைக் கண்ணாடி கிளாசில் குடிக்க வேண்டும் என்பது கும்பமுனியின் இலக்கியக் கொள்கைகளில் ஒன்று. இதுவரை அவர் உடைத்த கிளாசுகளின் எண்ணிக்கை, ஆறு காண்டங்களில் 118 படலங்களில் கம்பன் பாடிய பாடல்களைக் கடந்திருக்கும். அவரது இன்னொரு முக்கியமான இலக்கியக் கொள்கை, எவர்சில்வர், அலுமினியத் தம்ளரில் மது அருந்தக் கூடாது என்பதுவும், கண்ணாடித் தம்ளர் கைவசம் இல்லா விட்டால் தேங்காய்ச் சிரட்டையில் பருக முற்படுவார். தேள் கடுப்பன்ன நாள்படு தேறலை ஔவை அதில்தான் பருகி இருப்பாள்.

கண்ணாடித் தம்ளரை ஆட்டியாட்டி, சுடச்சுட கட்டஞ்சாயா பருகி முடித்ததும், நீடித்த காமத்தில் ஈடுபட்டதைப் போன்று, கும்பமுனிக்கு நெற்றியில் வியர்வை பொடித்தது. இடப்பக்கம், கைவாக்கில் இருந்த யன்னல் மேடையில் தம்ளரை வைத்தவர், கீழ்வானில் அவதரித்திருந்த நாள்மீன் ஒன்று கண்டு அதனை வெறித்தார்.

காரியங்களின் கிடப்பு உணர்ந்த தவசிப்பிள்ளை, இதை இனிமேலும் இப்படி நடக்க விட்டால் ஒக்காது என்று கருதி, உள் முறியில், கடலாசும் கையுமாக உட்கார்ந்தார். அவருக்கென, எவளே ஒரு வாசகர் அன்பளித்த ஊற்றுப்பேனா ஒன்றும் இருந்தது. கோணல் மாணலான தன் கையெழுத்தில், மகஜர் ஒன்று எழுத முனைந்தார்.

“மேன்மை தங்கிய” என்று தொடங்கி நிறுத்தினார்.

“பொண்ணு புடிக்கிறவன், மயானக் கொள்ளையடிக்கிறான், கல்வித் தலங்களில் மடி நிறைக்கிறவன், குற்றச்செயலுக்குக் கூட்டு நிற்கிறவன் எல்லா மயிராண்டியும் உமக்கு மேன்மை தங்குனவனா ஓய்?” என்று பிடரிப் பக்கம் இருந்து கும்பமுனியின் அறச்சீற்ற உறுமல் கேட்டது.

“சும்மா கெடயும் பாட்டா…. நீரு குடிக்கப்பட்ட தண்ணியிலே குஞ்சாமணியை விட்டுக் கலக்கப்பட்ட ஆளு! எனக்காச் சுட்டியா வே, இம்புட்டு மெனக்கெடுகேன்? எல்லாத்திலேயும் ஒரு நொலு நாட்டியம் பேசீட்டுத் திரிஞ்சா வௌங்கீரும்?”

“நடக்கப்பட்ட வேலையைப் பாரும் வே!”

“ஏன் நடக்காது? நீரு செத்தா புதைக்கதுக்கு மெரீனா கடற்கரையிலா அஞ்சு ஏக்கர் நெலம் கேக்கோம்? இன்னா கெடக்கு கன்னியாகுமரி கடற்புரம், காந்தி மண்டபத்துக்கு மேக்க, மணல்தேரிக்கு கெழக்க, மூணு மைல் நீளத்துக்கு கடப்புறம், பாறையும், மணலுமா சும்ம தான கெடக்கு?

“நாம என்னவே இன்னாள், முன்னாள், முதலமைச்சரா”

“ஏன் பாட்டா? அரசியல்வாதி மட்டும்தான், சினிமாக்காரன் மட்டும்தான் தேச சேவை செய்யானா? புகழ்பெற்ற ஓவியன் சிற்பி, மருத்துவர், சமூக சேவகர், தமிழறிஞர், கல்வித்தந்தை…”
“கல்வித்தந்தைன்னு சொல்லாதயும் வே! எனக்கு வாயிலே என்னவோ வருது…”

“சரி வேண்டாம் விடும்! தமிழ் மொழிக்கு அம்பது அறுவது வருசம் பாடுபட்ட ஒரு மூத்த எழுத்தாளர் செத்துப்போனா, குழி தோண்டிப் புதைச்சு ஒரு நினைவு மண்டபமும் கெட்டதுக்கு, அஞ்சு , ஏக்கர் பொறம்போக்கு நெலம் தரப்பிடாதா? முன்னாள் முதலமைச்சர் கெடந்தாத்தான் சுனாமி வரமா தடுப்பாரா? ஏன் நீரு சுனாமியை செறுக்க மாட்டேரா?”

“மணிமண்டபம் கெட்டதுக்கு காசு வச்சிருக்கீராவே!”

“அதை, செத்த பொறவுல்லா ஆலோசிக்கணும்!”

“மொதல்ல, இங்கேருந்து, பூதவுடலை கடப்புறத்துக்கு கொண்டு சேக்கதுக்கு ஆம்புலன்சு வாடகைக்கு துட்டு இருக்கா வே?”

“அதென்ன பாட்டா, நாங்க செத்தாசவம், பிரேதம், பாடி, பொணம்? நீரு செத்தா பூதவுடலா? நீரு தான பாட்டா சொல்லுவேரு? திருமூலர் பாடினார்னு! பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு அப்படீண்ணு? இப்ப உம்ம காரியம்ணா செத்த சவம் வந்து பூத உடலு ஆகீருமா?”

“சவத்தைத் தள்ளும் வே! நல்ல திட்டம்தான்லே கண்ணுபிள்ளே! கொஞ்சம் நிதி வசூல் பண்ணி, மணிமண்டபம் கட்டி, நீரு அதுக்கு அறங்காவலரா இருந்து, கொற காலத்தையும் அந்தசா ஓட்டீரலாம்!”
“பின்னே! செத்த பொறவு, கைகட்டி நிண்ணவன்லாம் கஸ்டோடியன் தாலா பாட்டமா? என்னவானாலும் உம்ம சமாதியிலே, தெனம் ரெண்டு வேளை, கண்ணாடி கிளாசுலே கட்டஞ்சாயா ஊத்தி வைப்பேன். பொறவு நீரு வாசிக்கப்பட்ட எல்லா தினசரி, வாராந்திரி, மாதாந்திரி, அனைத்து முற்போக்கு, பின்னவீனத்துவ பருவ இதழ்கள்…”

“மறக்காம கிழமைக்கு ரெண்டு நாளு நாலு அவுன்சு சரக்கும் வாங்கி வையும் வே!”

“தயிர் வடை வேண்டாமா?” என்றார் தவசிப்பிள்ளை.

மூஞ்சியைத் திருப்பிக்கொண்டு, வாசப்படிப்புரைக்குப் போன கும்பமுனி, சற்றே சாய்வான சூரல் நாற்காலியில் ஏறி, அவரது வழக்கமான யோக இருப்பில் உறைந்தார்.

கல்லா அரசனும் காலனும் நேர் ஒப்பர்
கல்லா அரசனில் காலன் மிக நல்லன்
கல்லா அரசன் அறம் ஓரான் கொல் என்பான்

என்று திருமூலர், கும்பமுனி மனத்தில் கனன்றார்.

– கதைசொல்லி, நவம்பர் 2019

நன்றி: https://nanjilnadan.com/2020/04/16/சவம்நினைந்துஉரைத்தல்/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *