கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 9, 2019
பார்வையிட்டோர்: 6,690 
 
 

(நினைவுகளை இரை மீட்பதற்காக எழுதிய தொடர்)

அத்தியாயம் ஒன்று! | அத்தியாயம் இரண்டு! | அத்தியாயம் மூன்று! | அத்தியாயம் நான்கு!

பொதுவாக,‌ உள்ளேயிருப்பவர்களிற்கு தெரியிற விசயங்கள் வெளியில் இருப்பவர்களிற்கு தெரிய வருவதில்லை. அதுவும் பொய்யாக தெரிவதென்றால்…?? ஏன், உலகநாடுகள், தணிக்கை செய்து தமக்கென செய்தி ஊடகங்களை பிறிம்பாக வைத்திருக்கிறார்கள் என்பதும் புரிவது போல இருக்கிறது.

புலம்பெயர்ந்தவர்கள், கூட்டு கைகளாகச் சேர்ந்து ‘ஆயிரதெட்டு பத்திரிகைகளை வெளியிடாமல் உறுதியான கனமான ஒரே ஒரு செய்திப்பத்திரிக்கையை’ மட்டும் வெளியிட மாட்டார்களா? வெளியிட்டால் இவர்களது செய்திகள் இடம் பெறுவது குறையும்.வெளியிடப் பழக வேண்டும். ஈழத்தமிழர்களும் உலகம் முழுதும் நிருபர்களை அனுப்ப வேண்டும்.சிறிலங்காவும் அடக்கம்.அங்கே, லசந்த…போன்றவர்களும் உண்மைகளைக் கண்டறிய இருக்கிறார்கள்.

இந்திய விடுதலையை வென்றெடுத்த ‘காங்கிரஸைப் போல ஒரு அமைப்பாக’ அரசியல் அமைப்புகள் பரிணமிக்க வேண்டும்.

இந்த ஒற்றுமை தான் எல்லாருக்கும் சரிவராத விசய மாக‌ சண்டித்தனம் பண்ணுகிறது . சேர்ந்திருக்கிற அமைப்பையே இரண்டாக உடைக்கத் தான் தெர யிற அளவிற்கு சேரத் தெரியவில்லை.இதற்கெல்லாம் (அரசியல் அறிவு)தெளிவு இல்லாதது தாம் காரணம்.

உண்மையிலே, கடந்த போராட்டப் பாதையில் எத்தனையோ நல்ல‌ உயிர்களை இழந்திருக்க வேண்டியவை இல்லை. மெண்டிஸ் போன்றவர்கள் இருக்க வேண்டியவர்கள்.

“முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை”நகுலன் நெடுமூச்செறிந்தான்.

வந்திருந்த பெட்டைகளிற்கு அரசியலில் நாட்டம்… இருக்கவில்லை. வாசுகியோட விக்கி கடைக்கு கிளம்பியவர்கள் வார போது குண்டுப் பெண்ணான சந்திராவை கூட்டி வந்தார்கள். சந்திரா,உடுவிலில் இருந்தவள்.அராலியில் அவளுடைய அக்கா கமலா, பார்திப‌னை முடித்திருந்தார்.பலாலி வீதியால் இந்தியனாமி வரப் போகிறது…என்ற பதட்டத்தில் அக்கா வீட்ட வந்திருந்தாள். வாசுகியை அவளுக்கு ஏற்கனவே கொஞ்சம் தெரியும், கடையில் இவர்களையும் பார்த்தவுடன் ஒட்டிக் கொண்டு விட்டாள்.

ஆனால், நீண்ட பொழுதுகள் இருக்கின்றனவே. அதைப் போக்க‌… வேண்டுமே! அதற்கு பக்கத்து வீட்டு ராகவன் அண்ணை யின் பெடியளான சுஜே, சிறிது கை கொடுத்தான் . கொழும்புவாசிகளான அவர்கள் 83 கலவரத்திற்குப் பிறகு வந்தவர்கள்.இவர்களைப் போல அராலியே தெரியாத‌ இன்னும் பல குடும்பங்கள் கிராமத்தில் அடைந்திருக்கிறார்கள். சிங்களம்,ஆங்கிலம்,தமிழ் என‌ 3 பாசைகளையும் நல்லாய் பே சுவார்கள். ஆனால், இவர்கள் என்ன, லேசிலேஒருத்தருடன் ஒருத்தர் பழகி விடவா போறார்கள்? அதற்கு விதி முறைகளை மீற‌ வேண்டும்.! மெல்ல மெல்ல தானே நடைபெறும். அதற்கு முதல் இந்தியனாமி அராலியாலேயும் போய் விடலாம்.

83ம் ஆண்டு, அரச தரப்பே தேர்த்தல் வாக்காளர் பட்டியலைக் கொடுத்து எண்ணெய் ஊற்றி பற்றி எரிய வைத்த கலவரம். அது தான் பெயர்ந்து வந்திருக்கிறார்கள். .அதற்குப் பிறகே, “ஆயுதப்போராட்டமே”சரியான வழி என மக்கள் உட்பட பெரும்பாலான தமிழ் இளைஞர்களும் கண்டறிந்தார்கள். இந்தியாவும் ஐ.நா.சபையில், இங்கே “நடைபெறுவது எல்லாம் இனப்படுகொலைகள் “என தெரிவித்து ஆதரவு தர முன்வந்தது.

வெளிநாடுகளின் சதி,பாகிஸ்தான் பகுதியிலுள்ள பஞ்சாப்பினுள்ளால் நுழைந்து அப்பிரதமர் இறந்து குழுப்பமுற ஈழ விடுதலை தொலைவிற்குப் போய் விட்டது அவர் மகன் பிரதமராகி…இந்தியனாமி வந்தது எல்லாம் நல்லபடியாய்யே ஆரம்பித்தது. அவரும் பிள்ளையார் சுழியை நல்லபடியாய் தான் போட்டார் .அதை,.இந்தியாவிற்கு எதிரான அமைப்புகள் குழப்பி விட்டதில்…அரசியல் அனுபவம் இல்லாத இந்திய பிரதமரும் தன்னிஸ்டப்படி முடிவுகள் எடுக்க வெளிக்கிட‌ கழுகு இந்திய மோதலில் வந்து நிற்கிறது !

நகுலன் வீட்டு வேலியில் கிடக்கிற பொட்டுக்குள்ளாக புகுந்து ராகவன் வீட்ட போகலாம்.யாழ்ப்பாண வீடுகளில் எல்லாம் ஊரடங்கு போடப் படுகிற போது மக்கள் பொட்டுக்குள்ளாலே போய் வருவார்கள்.இரவிலே ,அரிக்கன்லாந்தருடன் அவசரத்திற்கு போய் வாரதெல்லாம் இதனூடாகத் தான். சந்திரா,”விமலா அன்ரியை போய் பார்த்து விட்டு வருவோம் வா “ஜமுனா” என்று இழுத்துக் கொண்டு ராகவன் வீட்ட போய்,ஜமுனாவையும் அறிமுகப்படுத்தி விட்டு ஊர்ப் புதினங்களைக் கதைத்தவள், சுஜேயிடம் “வீட்ட இருகிற உனக்கு எப்படி பொழுது போகிறது?”எனக் கேட்டாள்.

“முந்தி தம்பி சுளியுடன். செஸ் விளையாடுவேன், இப்ப அவ்வளவாக விளையாடுறதில்லை” என அலுத்துக் கொண்டான். “அப்ப செஸ் மட்டையை தருவியா?”எனக் கேட்க அவன் காய்களுடன் தூக்கிக் கொடுத்து விட்டான்.

வீட்டிலே, இரண்டு பேர் விளையாடுற விளையாட்டை இரண்டு இரண்டு பேராக கோஸ்டி சேர்ந்து சேர்ந்து இங்கே விளையாடினார்கள்.சந்திராவும் ,வாசுகியும் ஒவ்வொரு அணித் தலைவிகள்.சந்திரா நல்லா விளையாடக் கூடியவள்.அவள் அணியே வென்று கொண்டிருந்தது. தோற்கிற அணி கடைசியில் ஆட்டத்தைக் குழப்பி விட்டது. போகவர கவனிக்கிற நகுலனுக்கு சந்திராவிடம் அசாத்தியமான பொறுமை இருந்தது ஆச்சரியத்தை அளித்தது.

சரி, வளவைப் போய் ஆராய்வோம்” என சந்திரா கிளப்பினாள். அவளுக்கு கோபம் வராது போல இருக்கிறது.

ஜ‌முனா”என்ன உங்கட அண்ணை குறுக்க, மறுக்க போறார்.ஒரு சிரிப்பு,ஒரு கதை இல்லை, பொம்மிள்ளைகளோட கதைக்க கூச்சப்படுற பிறவியா?”என்று வாசுகியிடம் கேட்டாள்.

அவள்,”உள்ளுக்க வேற மாதிரி நினைப்பாங்கள், சரியான கள்ளன்கள்,கவனமடி”என்று சொல்லி சிரித்தாள். இவர்களும் கம்பஸிலே படித்திருக்க வேண்டும். அப்ப தான் பிரண்ட்சிப்பைப் பற்றி ஓரளவு புரிந்திருப்பார்கள்; ஐ மீன் ஆண்,பெண் பிரெண்ட்சிப்,” என்றாள் ஜ‌முனா சிந்தனையுடன்.

வாசுகி,”என்னடி சிரீயஸாக கதைக்கிறாய்,இவங்கள் இப்படி தான் விடு”என்றாள்.

அராலிப் பெடியள்,பாடசாலையில் படிக்கிற காலங்களில் “சரக்கு சுழட்ட போகிறோம்”என சைக்கிளில் மானிப்பாய்ப் பக்கம் கிளம்பிற‌வர்கள். இங்கே,’சரக்கு’என்கிறது குடிக்கிறசாராயம் இல்லை,பெட்டைகளை த் தான் குறிப்பிடுவார்கள் .அவர்களில் ஒருத்தன் தானே இவனும்.

பிறகு, வீசிய இயக்கக்காற்றே இந்தப் பெடியள்களையும் கொஞ்சம் திருப்பிப் போட்டிருக்கிறது என்பது என்னவோ உண்மை தான். வாசுகிக்கு அராலி நிலவரம் தெரியாதா,என்ன! ஒரு தடவை அவன்ர ரூமிலே “இப்ப பெட்டைகளே கனவிலே வருகிறார்களில்லையடா”என ஆச்சரியமாகக் கதைப்பதையும் ஒட்டு கேட்டிருக்கிறாள்.

தொடக்கத்தில்,இயக்கங்கள் காதலிப்பவர்களை,கல்யாணம் கட்டியவர்களை சேர்த்துக் கொள்வதில்லை என்பதை அவளும் அறிவாள்.அவர்கள் ஆதரவாளர்களாக மட்டும் தான் இருக்கலாம். அப்படி, ‌தப்பும் தவறுமான நிறைய விதிமுறைகளை யே வைத்திருக்கிறார்கள்.எங்கே இருந்து பொறுக்கி எடுத்தார்களோ?.இவர்களுடையதில் பொம்பிள்ளைகள் போராட முடியாது. பிறகு தான் …சேர்த்துக் கொண்டார்கள்.

பொம்பிள்ளைப் பிரச்சனை…என்றால் மரண தண்டனை என்றும் முடிச்சும் போட்டுக் கொண்டார்கள்.அது,’முட்டாள் தனமானது’என அவர்களிற்குப் புரியவே இல்லை.இயல்பு வாழ்க்கைக்குப் போய் விட்டார்களா?”சரி,உள்வாரி அங்கத்துவம் இல்லை,வெளிவாரி அங்கத்தவராய் விரும்பினால் இருங்கள்”என்ற ஜனநாயகமும் இல்லை,சொல்லிக் கொள்ளுற அளவிற்கு சிமார்ட்டும் இருக்கவில்லை.காட்டிக் கொடுத்து விடுவார்கள் என்ற பயம் கூடையளவு இருந்தன‌ சிறிலங்காவரசின் “பயங்கரவாததிற்கு எதிரான பாரபட்சமான‌ சட்டங்கள்” வேற‌ இவர்களை சரியாகவே குழப்புகின்றன என்பதும் அவளுக்கு தெரியும்.

சிலசமயம், மகளிர் அமைப்பினர் சிலர் அந்த வீட்டிற்கு வந்திருக்கிறார்கள்.வாசுகி தான் அவர்களோட பழகிறவள்,கதைக்கிறவள்.கடைசியில், தம்பி முறையான தோழர்களே அவர்களை சைக்கிளில் ஏற்றிச் செல்வார்கள். .இப்ப தான் இவர்களுற்கு இயக்கமே இல்லை என்றாச்சே! ஓரேயடியாய் தடை செய்து விட்டார்களே ! பலர் இறந்ததை,காணாமல் போனதை நம்ப முடியாமல் இருப்பது போல,இவர்களாலும் தடை செய்யப் பட்டதையும் நம்ப முடியாமல் இருக்கின்றது. ‘கொழும்புப் பக்கம் போக வேண்டும் என்று கதைத்துக் கொண் டிருக்கிறான்..அம்மாவும் அதற்கு மறுப்பு சொல்லவில்லை.

ஆனால், கொழும்பில் தெரிந்தவர்,சொந்தக்காரர் என எவரும் எங்களிற்கு இருக்கவில்லை. எப்படிப் போய் தங்கப் போறான் ? அவளுக்கும் தெரியவில்லை? நகுலனுக்கு.. ‘தான் கடைசியில், குஞ்சனோடத் தான் போகப் போறேனோ?’எனத் தோன்றியது.ஆனால்,அவனை அவன்ர‌ மனிசி .நிச்சியமாய் போக விடப் போவதில்லை . தவிர‌,.கொழும்பும் ஒன்றும் உல்லாசபுரி இல்லை. அது, எப்பவும் கொலைக்களமாகவும் மாறக்கு கூடியது. இருந்தா இருந்தாப் போல கலவரம் வெடிக்கிற நகரம்.அவற்றுக்கு மத்தியில் அங்கே இருக்க பழகி விட்டவர்களும் இருக்கிறார்கள். பிறகும் கூட அப்படி இருந்தவர்களை காவும் எடுத்திருக்கின்றது .

இப்ப, இந்தியனாமியின் பிரச்சனை பதட்டமாய் எழுந்து மற்ற பிரச்சனைகளை அமுக்கி விட் டிருக்கின்றன‌ . வாசுகியின் தோழிகள் அகதிகளாக வந்திருந்தாலும்,அவர்களுக்கு கிராமம் பற்றி அவ்வளவாக தெரியாது.அதை ஓரளவு அறிய விரும்பினார்கள். அறிந்த சந்திராவை சரியாய் தான் பிடித்திருக்கிறார்கள். முதலில் , அந்த செட் வெளிய செல்ல விரும்பவில்லை.ரிலாக்ஸாக, சமையல் கட்டுக்குப் போய் தேனீரும் குடித்து.. விட்டு . வளவைச் சுற்றி ஒரு ரவுண்ட் அடித்தது.
,

நாலைந்து அன்னமுன்னாமரங்களில் காய்களும்,பழங்களும் கிடந்தன. டெனிஸ் பந்தளவான‌ பழங்களை பறித்து சுவைத்தார்கள்.நல்ல இனிப்பு.இதை சீத்தாப்பழம் என்கிறார்கள்.’ராமாயணக் கதை’ சிறிலங்காவில் தானே நடக்கிறது.சீதை சிறை இருந்த போது விரும்பிச் சாப்பிட்ட பழமாக இருக்கலாம்.அது தான் அந்த பெயரோ? பரங்கி அன்னமுன்னா என்று ஒரு மரமும் இருந்தது.முள்ளு மேற்பரப்பைக் கொண்ட பெரிய பந்து போல‌ பழம்.அன்னமுன்னாவை ஈ.எம்.ஒ ஆக்கி இருப்பார்களோ?இது புளிப்புடன் கூடிய இனிப்பு. வளவு மூலையில் புளியம்மரம். கீழே …சூடு,எனவே அங்கே நிற்கவில்லை தவிர முனியும் மேலே இருக்கலாம். பலதென்னைகள் நிரைக்கு நின்றன‌,வீதிப்பக்க வேலியில் செவ்வரத்தைப் பூக்களும்,தலை கவழ்ந்த பூக்களைக் கொண்ட‌ மரமும் இருந்தது.”இது என்ன மரமடி?”ஜமுனா கேட்டாள்.வாசுகி”குடிகாரன் பூ”என்றாள்.மற்றவர்களும் சிரித்தார்கள்.அவை உண்மையிலே குடிகாரன் போல தலை கவிழ்ந்தே இருந்தன..

சீமைப்பழமரம்.சப்படில்லா மரத்தை தான் அப்படி பொறுத்தமாக சொல்கிறார்கள், அது சடைச்சு வளர்ந்து சிறிய சிறிய காய்களுடன் பெரிய மரமாய் நின்றது. அதை விட பெரிய மாமரம் ஒன்று.வாசுகி”நார்த் தன்மையான பழங்கடி”என்றாள்.காய்க்கிற‌ நேரம் கட்டாயம் வருவோமடி”ரேவதி கூறிச் சிரித்தாள்.பனைமரம் இல்லை. யாழ்ப்பாணவளவுகளில் நெல்லியையும்,ஜம்புவையும் அனேகமாகக் காணலாம். இங்கே ,அவை இல்லை.அதை விட, அங்கே வாழை,சுண்டங்காய்ச் செடி…என வீட்டுத் தோட்டமாக , வைத்திருப்பதும் இங்கே இல்லை. வயல்க் காணிகள் நிறைய இருப்பதும்,அதிலேயே சிலர் காணிகளிலே தோட்டமும் செய்கிறதால் அப்படி இருக்கலாம். முருங்கை மரம் எல்லார் வீட்டிலேயும் இருக்கிறன. இங்கே, வளவுப்பக்கமாக‌ நாற்சார வெளிகதவுக்கு கிட்டவாக முருங்கை நிற்கிறது. அதைப் பார்த்த‌ சந்திரா “மயிர்க்கொட்டி காலத்திலே மயிர்க்கொட்டிகள் எல்லாம் வீட்டுக்குள்ள படை எடுக்குமே”என்றாள்.

“ஐயோ, மயிர்க்கொட்டி யா? அப்ப‌ கிராமமே வேண்டாம்”என்று ஜமுனா சிரித்தாள். . மயிர்க்கொட்டிகளை மரத்திலே கொத்தாய் இருக்கிற போதே தீப்பந்தத்தால் தீய்த்து கொல்வார்கள்.அவற்றை கொல்லாது விட்டால்…அவை தான் கூட்டுப்புழுவாகி வண்ணாத்துப் பூச்சியாகி பிறகு பறக்கின்றன. வண்ணாத்துப் பூச்சியிற்கு மயங்காதவர்கள் யார் இருக்கிறார்கள்.ஆயிரக்கணக்கில் கிடக்கிற மயிர்க்கொட்டிகளைக் கொன்றாலும் வண்ணாத்துப்பூச்சிகளிற்கும் குறைவில்லை தான். வன்னிக்காடுகளிலும் முருங்கைமரங்கள் கிடக்கின்றனவா?தெரியவில்லை. அங்கே, வேற மரங்களிலும் முட்டையிட்டுப் பெருகின்றன போலும். அங்கேயும் வண்ணாத்துப் பூச்சிகளிற்கு குறைவில்லை. அன்று, அந்த பழங்களை சாப்பிடுவதிலும் அப்படியே நிழலில் இருந்து அலட்டுவதிலுமாக பொழுதைக் கழித்தார்கள்.

“என்னடி சப்படில்லா பாலாய் கயறுதடி”ரேவதி கடித்துக் போட்டு கூற”ஏய்,ஏய் அதைக் காய்யிலே சாப்பிடுறதில்லை.துப்படி.பழத்த பிறகு தான் தேன் போல இனிக்குமடி. எதற்கும் பொறுக்க வேண்டும் “என்று வாசுகி கத்தினாள். நல்ல காலம் அரலி மரம் இல்லை.எதைக் கண்டாலும் பறித்து தின்று விடுவார்கள் போல இருக்கிறார்களே’, கவனமாக இருக்கத் தான் வேன்டும்!…என வாசுகி நினைத்துக் கொண்டாள். ஒரு காலத்தில் அரலி மரங்கள் காடு பத்திக் கிடந்ததால் தான் இந்த கிராமத்திற்கே ‘அராலி’என்ற பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள். காலையிலே வந்த சந்திரா,அவர்களோடேயே இருந்தாள், அங்கேயே சாப்பிட்டாள்.பின்னேரமே போனாள்.

பாவம்! அவளுக்கு வேற சினேகிதிகள் அவளுடைய பக்கத்தில் இல்லை. அடுத்த நாள் வந்த சந்திரா அவர்களை அழைத்துக் கொண்டு அவளுடைய வீட்டுப் பக்கமாக இருந்த குடவைக் கிணறுப்புறமாக இருந்த வயல்வரம்பு மேலாக நடந்து சிந்தாமணிபிள்ளையார்க் கோவிலுக்குக் கூட்டிச் சென்றாள்.

அதற்கு முதல் கிடக்கிற குளத்துப் பக்கமாக… காட்டி “ ஒரு கோவில் இருக்கிறது.”அதன் பேர் தெரியவில்லை.அரிவுவெட்டிய பிறகு அங்கே,பொங்கல் செய்து மேள தாளத்துடன் ஒரு விழா கொண்டாடுவார்கள். மிச்சப்படி இடைக்கிடை பூஜைகள் நடக்கும் . அதற்கு இன்னொரு நாளைக்குப் போவோம்” என்றாள்.

ஆனால், சிந்தாமணிக் கோவில் எல்லா நாளும் திறக்கிற பெரிய கோவில். வயல் நடுவே தென்னைமரங்களுடன் சோலையின் நடுவே இருப்பது போல கம்பீரமாக‌ எழுந்திருந்தது. இவர்களுடைய‌ குடும்பம் அந்த கிராமத்திற்கு வந்த போது ,அந்த கோவிலுக்குப் பக்கத்தாலே போய், தெற்கராலியில் இருக்கிற சரஸ்வதிமகாவித்தியாலயதிற்குப் பக்கத்தாலே போற மண் பாதை இருக்கவில்லை.” வயலுக்க பயப்படாம எப்படி தனியே இருக்கிறார்கள்” என்று வாசுகி ஆச்சரியப்பட்டிருக்கிறாள்.பிறகு தான் போட்டவர்கள்.

அது தெற்கராலியருடைய கோவில். தர்மகர்த்தா சபை யும் அங்கேயே இருந்தது அதற்குரிய கோயில்க் காணிகளும் சூழ இருந்தன.அதில் செய்யிற நெற்செய்கையையும் சபை யே செவ்வனே கவனித்தது. அவர்களிற்கு எப்பவும் யாழ்ப்பாண சிவன்கோவில் ஒரு ஈர்ப்பு இருக்கிறது.அந்த கோவில் ஐய்யரின் வம்சத்தவரைத் தான் இந்த கோவில் ஐய்யராக கொண்டு வந்து …நீண்டகாலமாக இருக்கிறார்.அவருடைய மகன்,அந்த சிவன் கோவில் ஒரு ஐய்யரின் மகளை முடித்து வேற ஒரு கோவில் ஐய்யராக போய் விட்டான்

.மகள் சுபத்திரையும் மணமுடித்து ..போய் விட்டாள்.தற்போது ஐய்யரும்,ஐய்யரம்மாவும்,கடைசிப் பெண்ணும் மட்டுமே இருக்கிறார்கள்.கம்பஸ் பெட்டைகளான இவர்கள் போன போது ஐய்யரம்மாவிற்கு மகளைப் போல இருந்த இவர்களை நல்லா பிடித்து விட்டது. தன்ர பிள்ளகளும் இவர்களைப் போல பட்டப்படிப்பு படித்து வரணும் என்று ஏக்கம் கொண்டிருந்தாரோ?மகனும்,மகளும் எட்டாம் வகுப்பு வரையில் தான் சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் படிக்க முடிந்தது . மகன் வேளைக்கே கோவிலுக்கு பூஜை செய்ய போய் விட்டான்.மகளுக்கு கல்யாண மாகி மேற்கொண்டு படிக்கிறதெல்லாம் நிறைவேறவில்லை எல்லாமே.நிறைவேறாத ஆசைகள்.

இருக்கிற‌ கலையும் பள்ளிக்கூடம் போய் வந்து கொண்டிருக்கிறாள்.இவளும் கம்பஸில் …போய் படிக்கப் போறதில்லை. இதுவும் ஒரு சமூகப்பிரச்சனை தான். மாகாணவரசுகள் ‘பைலோ’க்களாக ஏற்படுத்தி தான் இங்கையும் மாற்றங்களைக் கொண்டு வர முடியும். அவருடைய பேச்சில் ஏக்கம் வெளிப்படையாய்யே தெரிந்தது சிறிலங்காவரசு,மாகாணவரசிற்கு அதிகாரங்களை கொடுக்க வேண்டும் .இவர்களுடைய கனவுகளும் நிறைவேற வேண்டும் . பெண்களிற்கு அவருடைய பேச்சைக் கேட்க அநுதாபமாக இருந்தது.நகரப்புறத்தில் ஏற்படுற மாற்றங்கள் கிராமத்தில் வர‌ காலம் இழுக்கும் என்பது வேற தலையிடி,.எவ்வளவு காலமாகும் என்பது.. எவருக்குமே தெரியாது.

அவர், வாசுகியிடம்”நானும் வண்ணார்பண்ணை தான்.உங்க ஆச்சியை, அம்மாவை தெரியவில்லையே “என்றார்.அதில் ஆச்சரியமில்லை.அதுவும் பெரிய கிராமம் தான்.இப்ப அது யாழ்ப்பாண நகரத்தின் ஒரு பகுதியாகி விட்டது. .இப்ப அது நகரம்! அங்கேயே நின்று பூஜையைப் பார்த்து,புளிச்சாதம், வடை..சாப்பிட்டு,ஐய்யர்ம்மா தனிப்பாலிலே ‘டீ’ சுடச் சுட போட்டுக் கொடுக்க குடித்தார்கள். கோவிலுக்குள்ளேயே சிறிய பூந்தோட்டமும் இருந்தது.பூக்கள் அங்கே பறிக்கப் பட்டன.வயலிலே போதியளவு விளைந்தன.கோவில்க்குழுவைச் சேர்ந்தவர்கள் விவசாயிகள்.தம் வயலைக் கவனிக்கிற போது,கோயில் வயலையும் நல்லபடியாய் கவனித்தார்கள்.நெல்லை திரித்து அரிசியாக்கி வேறு கொடுத்தார்கள்.ஐய்யர் கேட்டதிற்காக எள்ளும் விதைத்தார்கள்.

பூந்தோட்டப் பகுதியிலே ஐய்யரம்மா சிறிதாக கத்தரி,வெண்டி,மிளகாய்..போல தோட்டமும் செய்தார்.திருவிழாக் காலங்களில் காய்கறிகளும் கொண்டுவந்து கொடுத்தார்கள். காய்கறிகளை வத்தலாக்கி சமைக்கிறதாகவும் சொன்னார். குளுத்தி,திருவிழாக்கள் எல்லாம் கோலாகலமாக நடைப்பெற்றன. இவர்களிற்கு நிறைய நேரம் இருந்தன.நிருபர்களைப் போல… கேள்விகளைக் கேட்டு ஐய்யரம்மாவை திணறடித்தார்கள்.திரும்பி வார போது அவர்களிற்கு அவரே தயாரித்த எள்ளுப்பாகு உருண்டைகளும் கொடுத்தார். “நேரம் இருந்தால் திரும்பவும் வாருங்கள்”என்று அன்புடன் வழி அனுப்பினார்.

ஆடிப்பாடி வீட்ட வந்த போது,வாசுகியின் அம்மா “சந்திரா கூட்டிப் போனபடியால் கிராமத்தை மேய்ந்து போட்டு தான் வருவார்கள் .பயப்பட ஒன்றுமில்லை” என ஜமுனா,ரேவதியின் அம்மாவிற்குச் சொன்னவர்,”எங்க போய் தொலைந்தீங்கள்”என்று இவர்களை பார்த்து கேட்டார். வாசுகி,என்ன,என்ன…என போட்டு,ஆர அமர சொல்லத் தொடங்க…, .”எடியே,நீ சொல்லடி”என்று விட்டு சினேகிதிகள் உள்ளே போய் விட்டார்கள். அவள் முடிக்கிற போது சேவல் கூட கூவி விடும்.எதையும் விளக்கமாகவே இழுப்பாள்.கேட்பவரிற்கு பொறுமை பறி போய் விடும்.

“கிளிநொச்சிக்கு சைக்கிளில்… வேற என்ன,அதற்கும்ஒரு கள்ளப்பாதை வைத்திருக்கிறார்கள்,அதிலே போய் சீனி வாங்கி வந்து சங்கரத்தையில்,’ஒரு கிலோ’முற்பது ரூபாய்படி விற்கிறார்கள்” எனக் கேள்விப்பட்டு,வாப்பாவும்,நகுலனும் வாங்கப் போய்யிருந்தார்கள்.

கிராமம் நெற்களஞ்சியம். இளைப்பாரிய‌ சங்கீத ரீச்சர், நல்ல‌ சினேகிதி,எப்பவும் நகுலனின் அம்மாவிற்கு ஒவ்வொரு முறையும் அரிவு வெட்டுற போது அரைமூட்டை நெல்லை அனுப்பி விடுறவ‌ர்.

இவர்களிடம் எங்கையுமே காணி,வீடு எதுவுமே சொந்தமாக இருக்கவிலை.வாடகை வீட்டில் தான் வசிக்கிறவர்கள்.இவர் பிள்ளகள் கூட நகுலனின் அண்ணர் செந்திலும்,அக்கா புஸ்பாவும் வெளிநாடு போய்யிருந்தார்கள். ஏற்கனவே புஸ்பாவின் சினேகிதி விஜயா,அவருடைய அம்மாவைப் பார்க்க வந்தவரிடம் கொஞ்சம் காசு அனுப்பி இருக்க, இந்த நிலமையிலே டொலரை போய் மாத்துறது எல்லாம் கஸ்டம் என புரிந்து கொண்டு புத்திசாலித் தனமாக‌ மாற்றியே வந்து கொடுத்திருந்தார். அதனாலே தான் இவர்களால் ‘சாமான்கள் குதிரை,கழுதை விலை’களாக உயர்ந்திருந்த போதிலும் வாங்கக் கூடியதாக இருந்தன .வாசுகியின் சினேகிதிகளின் குடும்பமும் காசை,காசாக பார்ப்பவரில்லை.அவர்களும் மறக்கறிகள்…வாங்க, அது வாங்க… என்று கொடுத்துக் கொண்டிருந்தார்கள்

குட்டித் தூக்கம் போடுவோம் என ஜமுனாவும்,ரேவதியும் போற போது,லொரி, ஒன்று கேட்டை திறந்து கொண்டு வந்து இவர்கள் வீட்டு போர்ட்டிக்கோவில் நின்றது.நகுலனும் வாப்பாவும் அப்ப தான் வந்து சேர்ந்தார்கள்.”என்னடா லொரி நிற்கிறது உங்க வீட்டிலே?”என்று வாப்பா கேட்க,எனக்கும் புரியல்லை,போய்ப் பார்ப்போம்”என, சாரு சின்னம்மா,வராந்தாவில் இருந்த வெளிப்பட்டவர்,”சிவம்,இங்கே இரண்டு பேர் இருக்கினம்,போதுமா?”என்று லொரியில் இருந்தவரிடம் கேட்டார்.லொரியின் பின் கதவு திறந்திருந்தது

.உள்ளே தள்ளி கதிரையில் யாரோ ஒருவர் இருப்பது,தெரிய நகுலன் ஏறிப் பார்க்க,”அடே ஆச்சி,நீங்களா?”என வியப்புடன் கூவினான்.”பேராண்டி,எப்படி இருக்கிறாய்?”அந்த நிலையிலும் குசலம் விசாரித்தார். சின்னம்மா,”ஆச்சியை கீழே இறக்க வேண்டும்,எப்படி இறக்கலாம்?”என்று கேட்டார்.ஆச்சி எழும்பி நடமாட மாட்டார். கதிரையோட இறக்க வேண்டும்.சிவம்,அவருடைய தான் லொரி,வர்த்தகர்,மற்றவர் ரைவர்,அடுத்தவர் கிளினர்.அங்கே ஏற்றுற போது ,நிறைய பேர் இருந்தார்கள்.மூன்று பேராக இறக்கிறது கஸ்டம். இவர்களோட ஐந்து பேர். வாப்பா, ஒரு நொடியிலே பிரச்சனைக்கு தீர்வு சொன்னான்.”ரீச்சர்,உங்களிட்ட இரண்டு உலக்கைகளிருக்கா?”கேட்டான்.நகுனன்ர அம்மா “இருக்கு”என்றார்.ஜமுனாவிற்கும்,ரேவதிக்கும் இனி என்ன நித்திரை? வாசுகியும்,ஜமுனாவும் உலக்கையை எடுத்துக்கொண்டு வந்தார்கள்.நகுலனிடம்”டேய் கயிரும் வேண்டுமடா?”என்று வாப்பா சொன்னான்.”கயிறு லொரியிலே இருக்கிறது”என்றார் சிவம்.”கோயிலே சாமி தூக்கிற மாதிரி கதிரையின் புறத்திலே உலக்கையை வைத்துக் கட்ட வேண்டும்”என்றான் வாப்பா.

அவன்ர ‘ஐடியா’ புரிய “நல்ல யோசனையப்பா”என்ற சிவம்”மகேஸ்,கயிரை எடுத்துக் குடுத்து இவன்களோட சேர்ந்து உலக்கையைக் கட்டு”என்று கிளினரிடம் கூறினார்.அடுத்த பத்து நிமிசத்திலே ஆச்சிட கதிரையோட உலக்கை கட்டப் பட்டு விட்டது.அப்படியே இரண்டு பேரே உலக்கையைப் பிடித்து ஆச்சியை ஆட்டாமல் லொரியின் விளிம்பிற்கு கொண்டு வந்தார்கள்.பிறகு நாலு பேருமாக கவனமாக பிடித்து ஆச்சியை லொரியிலிருந்து இறக்கி விட்டார்கள்.அப்படியே தூக்கிக் கொண்டு வீட்டிற்குளே கொண்டு வந்தார்கள்.

“என்ன சின்னம்மா தீடிரென…?”நகுலன் கேட்டான்.”கோட்டையிலிருந்து செல் அடிக்கிறான்கள்.நாதன்ர பின் வேலியிலே விழுந்து ஒன்று வெடித்தது.பயந்து போனோம்.இனி அங்க இருக்கேலாது… வருகிறோம்”என்றார். இலங்கைப்படையினர் மோசமாக அடித்த போதிலும், அவர்களின் வீச்செல்லை வலு குறைவு. அப்ப‌, எவ்வளவு கொட்டினாலும் ஆச்சி வீட் டு அயலை எல்லாம் செல் எட்டிப் பார்த்தில்லை. இந்தியனாமி, அங்கேயும் அடிக்கிறான்.இந்தியனாமி,”இலங்கைப்படையினர் ஆயுதம் பாவிக்க தடை செய்திருக்கிறோம்”என்று சொல்லி இருக்கிற படியால் ,யார் அடித்தாலும் வெளியில் தெரியப் போவதில்லை.கோட்டையைப் போய்ச் சேர முதல் அடிக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது?.இவர்களும் ” ஒபரேசன் லிபரேசன் 2″எடுக்கவே வீழ்ந்து விட்டார்கள் என்பது.. வெளியில் புலப்படாமல் குழப்புவற்காக தான் போலும் அங்கேயிருந்தும் அடிக்கிறார்கள்..
.சிவா,உதவுறவர்..என்றாலும்,அவர் தன்னுடைய ‘லொரியை பாதுகாப்பாக நிறுத்தலாம்’என்ற எண்ணத்துடனும் வருகிறார்.

அவர் இளவயதினர்.தீவாருக்கு ‘வர்த்தகம்’… கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை. சிவில் போரே நடந்தாலும் கூட முயற்சிகளை கை விடாதவர்கள். சீதனம்,தன்ர பணம் எல்லாவற்றையும் போட்டு 3 லொரிகளை வாங்கியிருந்தார்..பல சிறிலங்காவின் படைத் தடைகளையும் மீறி யாழ்ப்பாணப் பொருட்களை கொழும்பிற்கும்,அங்கிருந்து இங்கிருக்கிற வர்த்தகர் கொடுக்கிற பட்டியல்படி …பொருட்களையும் வாங்கி வருகிற ட்ரான்ஸ்போர்ட் சேர்விஸ் தான் அவருடைய வர்த்தகம்.ஒருவாறு தப்பிப்பிழைத்து வந்த லொரிகளில் ஒன்றை,இந்திய தடை ஒன்றில் செக் பண்ணி, வெளிய‌ வந்த போது, அங்கிருந்த‌ சிவில் உடையில் இருந்த‌ சிறிலங்காப்படையினர், அந்த சென்ரியிலிருந்தே வாகனம் ஒன்றி லே பின் தொடர்ந்து வந்து சிறிது தொலைவில் வைத்து,ரைவரையும் கிளினரையும் துரத்து விட்டு நெருப்பு வைத்து விட்டார்கள். அவர்கள் திரும்ப வந்து இந்தியனாமியிடம் முறையிட்ட போது,”எங்களால் ஒன்றும் செய்ய முடியாது,கண்காணிப்புக்குழுவிடம் சென்று முறையிடுங்கள்”என்று கையை விரித்து விட்டார்கள்.”உங்களோட நின்ற படையினர் தான் செய்தவர்கள்”என சொல்லிய போதிலும் கூட எதுவும் நடைபெறவில்லை.

இலங்கைப்படை படு முட்டாள்கள்.நூலகம்,கடை கண்ணிகள்,ஏன் தமிழ் மக்களையே அவர்கள் ஊர்களிலேயே எரிக்கிறவர்கள். தமிழருக்கும்,சிங்களவருக்கும் உரிய இந்த நாட்டின் .நிலம்,மண்,காற்று,நீர்…காப்பாற்றப்படுவது எல்லோருக்கும் அவசியமானது,என்பது கூடத் தெரியாமல் எல்லாவற்றையும் மாசு படுத்தியவர்கள்.இவர்களை ‘மோடயர்’என தமிழர் சொல்லவதில் அர்த்தம் இல்லாமல் இல்லை.ஒவ்வொருவரும் தம்மை நேசிக்க வேண்டும்.அப்படி நேசிக்கத் தெரியாததாலே..கொரூரம் காவியவர்களாக சிறிலங்காவிற்கே களைகளாகிப் போய்க் கிடக்கிறார்கள்.
இந்தியனாமியும் கையை விரிப்பவர்கள்.

ஒரு லொரியை சாவற்சேரிப் பக்கம் கொண்டு சென்று பாதுகாப்பாய் நிறுத்தி விட்டிருந்தார்.அராலியைக் கேள்விப்பட்டிருந்தார்.ஆச்சிட மகள் அங்கே இருப்பதைக் அறிந்த போது,”அக்கா,உங்களை கொண்டு போய்ச் சேர்க்கிறோம்,லொரியை கொஞ்சகாலத்திற்கு நிறுத்தி வைக்க கேட்டுப் பாருங்கள்”என்று வந்திருக்கிறார்.

அவர், கல்யாணம் கட்டியதிலிருந்து அவருடைய மனைவிக்கு சின்னம்மா, ‘அம்மா’போல இருப்பவர்.இரண்டு வீடு தள்ளி அயலிலே இருந்ததால் க‌டையிலே நெடுக நிற்கிற போது,அவர் மனைவி,இவர்களோடேயே நிற்பார்.சிலவேளை, சின்னம்மா அவரோட நிற்பார். அவருக்கு அராலி ஆட்களை அவ்வளவாக‌ தெரிந்திருக்கவில்லை ஆனால் மரங்கள் அடர்ந்ததான வளவுள்ள வீடுகள் இருக்கிறதா?என மேலொட்டமாக பார்க்கப் போனார்கள்.

வாப்பா வும், வீட்ட போனான். நகுலன் வீட்டிலே எல்லாருக்கும் சாப்பாடு. குஞ்சன் வந்திருந்தான். பெரிய திண்ணையில் குட்டித் தூக்கம் போட்டு எழும்பியவர்களை,”அண்ணை பக்கத்து வீட்டு வளவு எப்படி?என வந்து பாருங்கள்”என நகுலனும் குஞ்சனும் பொட்டுக்குள்ளாலே கூட்டிக் கொண்டு போனார்கள். சுஜேயின் வீடு,நேரான ஒழுங்கையில் இருக்கவில்லை.சேர்ச் ஒழுங்கை யாலே வந்து, நகுலன் வீட்டோடு ‘ட’னாவாக திரும்பிச் செல்கிறது.அந்த ‘ட’னாவிலிருந்து தனியாரின் ஒரு வாகனம் மட்டும் போகக் கூடிய பாதை ஒன்று சுஜே வீட்டிற்குச் செல்கிறது. அந்த பாதை இன்னொரு வளவினுள் இருந்தது.வளவில்லிருந்த பழைய வீட்டினில் தான் சங்கக்கடையும் இருந்தது.தற்போது அக்கடை வேற இடத்திற்கு போய் விட்டது.எனவே,புதியவர்கள் எவருக்குமே சுஜேயின் வீடு இருப்பது தெரிய வராது.பல தடவைகள் ‘அவர்கள் வீட்ட தேடி வாரவர்கள்’ நகுலன் வீட்ட தான் வந்தார்கள்.
பிறகு,இவர்கள் தான் கூட்டிச் சென்று விடுகிறவர்கள்.தவிர கிளிசீரீயா மரம்,வேம்பு மரம் என நெடுக ‌ உயர்ந்து வளர்ந்து ரைவே இருண்டே கிடந்தது. அதற்குள்ளே வீடு இருக்கிறதே துப்பரவாக தெரியாது.கிராமத்தில் வீடுகள் எல்லாமே பெரிய வளவுகள் பெரிய ‘ரைவே’ என இருப்பவை.

பொட்டுக்குள்ளாக வந்த சிவத்திற்கு இதை விட சிறந்த இடம் இல்லை என்பது உடனேயே தெரிந்து விட்டது.சுஜேயிடம் “சும்மா பொட்டுப் பாதையைப் பார்க்க வந்தவர்கள்”என்று .நகுலன் கூறினான்.அப்படியே திரும்பி விட்டார்கள். சிவம்,சின்னம்மாவிடம் தெரிவிக்க,அவர் அம்மாவிடம் கேட்கச் சொன்னார்.. .

நகுலனின் அம்மா கேட்ட போது”தாராளமாக விடலாம் ரீச்சர்”என பார்வதி அன்ரி பெருந்தன்மையுடன் கூறினார்.லொரியை அந்த பாதையில் சர்க்கஸில் ஓட்டுவது போல வளைத்து ஓட்டி வந்து அவர்களுடைய பெரிய ரைவேயில் ஓரமாக ரைவர் நிறுத்தினார்.சிவம்’கீ’யை அவர்களிடமே கொடுத்து”எப்ப வந்து எடுப்பேன்?எனத் தெரியாது.உங்களுக்கு எப்படி தாங்ஸ் சொல்லுறது எனத் தெரியவில்லை”என்று கரைந்தார்.இருளுற போது அராலி வீதியால் போற வாகனங்களில் தொற்றி யாழ்ப்பாணம் போய் விட்டார்கள்.சிவம்,அவர் மனைவியை ஏற்கனவே புங்குடுதீவில் கொண்டு போய் விட்டிருந்தார். ?.குஞ்சன் 7.30,8 மணிபோல கழன்று விட்டிருந்தான். தூங்கி எழுந்த பெண்கள் ‘டீ’யைக் குடித்த பிறகு ,பொழுதை போக்க வேண்டியிருந்தது.வாசுகியோடு சேர்ந்து ஆச்சியோடு பழங்கதைகள் கேட்பதில் இறங்கி விட்டார்கள்.

எண்பது வயதுக்கு மேலாகி இருந்தாலும் அவருக்கு மறதி நோய் ஏற்பட்டிருக்கவில்லை.”பேத்திக் குஞ்சுகளா…”என்று கேட்கிற எல்லாக் கேள்விகளிற்கும் அன்பாகவும்,ஆதரவாகவும்,பொறுமையாகவும்… பதில் சொன்னார்.அவர்களிற்கு பிறகு ஏன் ஆச்சியை பிடிக்காமல் போகப் போகிறது! ஆச்சியின் அம்மாவின் பூர்வீகம் கும்பகோணம்.கலைக்குடும்பத்தில் ஐந்து அண்ணர்மாருக்கு கடைக்குட்டிச் சகோதரி அவர். அண்ணர்மார் ‘’பஞ்ச வித்துவான்கள்’’ எனப் பேர் பெற்று கலக்கியவர்கள். பருத்தித்துறை வர்த்தகர் சுந்தரம்பிள்ளை, அந்த தவில்,நாதஸ்வர வித்துவான்களை இங்கிருக்கும் கோவிலின் வாசிப்பிற்காக அழைத்து வந்த‌ போது,அவர்கள் சகோதரியையும் ஊரைப் பார்க்க அழைத்து வந்தார்கள். அவர்களின் பெற்றோர் இறந்து விட்டார்களா, தங்கச்சியை தனிய விட்டு வர விரும்பாது கூட்டி வந்தார்களா…தெரியாது.வயதில் இளைஞராகவிருந்த வர்த்தகருக்கு கண்மணியின் சுபாபம் பிடித்துப் போக பெற்றோர் மூலமாக மணமுடிக்க கேட்டார்.

அப்படி சுபமாக தொடங்கியது அவர்களது வாழ்க்கை. இவர்களிற்கு எட்டுப் பிள்ளைகள்.பெரிய குடும்பம். ஒரே தங்கச்சி என்பதால் அடிக்கடி அண்ணர்மாரைப் பார்க்க போய் வருவார். தாய்யோடு பிள்ளைகளில் ஒருவர் எப்பவும் போய் வருவார்கள். ஆச்சி மட்டுமே இப்ப உயிரோடு இருப்பவர்.அப்படி போய் வந்ததில் கும்பகோணத்தில் பக்கத்து வீட்டிலிருந்த பிரபல பாடகி சுந்தராம்பாளோடு ஆச்சிக்கு சிறுவயதிலிருந்தே சினேகிதம் ஏற்பட்டு விட்டது.ஆச்சியிற்கும் சிறுவயதில் நல்ல குரல் வளம்.காந்தியின் போராட்டக் காலங்களில் இலங்கையிலும் இந்தியக் கலைஞ்ர்கள் பலரை அழைத்து வந்து நாடகங்கள் போடுறதும் பரவலாக நடந்தன.வர்த்தகர் மகள் பாடகி என்ற பேர் நிலவியது.நாடகம் போடுறவர்கள் திரையை இறக்கிற போது அல்லது லேட்டாகிற போது எல்லாம் தம்மோடு வந்தவர்களில் பாடக்கூடியவர்களை திரைக்கு பின்னால் இருந்து பாட வைப்பார்கள்.வர்த்தகரின் மகளின் குரல் நல்லா இருக்கவே அவரை அடிக்கடி பாட வைத்தார்கள்.

தாத்தா முத்துவேல் பள்ளி ஆசிரியர்.தவறாமல் நாடகம் பார்க்க வருவார்.இவருடைய பாடல்கள் பிடித்துப் போக ஒருமுறை நேரில் சந்திக்கிற விருப்பத்தைத் தெரிவித்தார். பார்த்தவர்,பார்த்தவர் தான்.”மணம் முடிக்க விரும்புகிறேன்”என வர்த்தகரிடம் கேட்க ,அவரை அறிந்திருந்த அவரும் “நல்ல நாளில் அப்பா,அம்மாவை கூட்டிக் கொண்டு வா”என்று அனுப்பினார்.அன்று வீசிய காந்திய அலை தான் பலரை முற்போக்குடையவர்களாக மாற்றியிருக்க வேண்டும்.தற்போது ஏற்பட்ட இயக்க ஜனனம் சாதியவேலிகளை எல்லாம் அசைத்து விட்டிருக்கவில்லையா? இதைப் போல அப்பவும் நடந்திருக்கிறது.அப்படி தான் தாத்தா ஆச்சியை மணந்தார்.

ஜமுனாவிற்கு படு ஆச்சரியமாய் இருந்தது.”ஆச்சி,நீங்க இந்தியரா,இலங்கையரா?”என ரேவதி குறுக்குக் கேள்வி கேட்டாள்.ஆச்சி சிரித்துக் கொண்டு “இலங்கையர் தான்”என்றார். ஜமுனா, “ஆச்சி ஏதாவது பாட்டு பாடுங்களன்”என்று கேட்டாள். “இப்ப பாட்டு எல்லாம் மறந்து விட்டது.பாட வராது”என்றார். ஆனால்,சுவாரசியமான தகவல் ஒன்றை தெரிவித்தார்.”வாசுகிட அம்மா சுமாராக பாடுவார்”என்றார்.நகுலனின் அம்மாவை பாட தொந்தரவு பண்ண,கடைசியில்..”பிருந்தாவனமும் நந்தகுமாரனும்..”என்ற பாட்டை முழுமையாக பாடினார்.ஆச்சியைப் போல இல்லா விட்டாலும் கேட்கக் கூடியதாகவிருந்தது.ஜமுனா,ரேவதியின் அம்மாமாரையும் அரைகுறையாவது பாட வைத்தார்கள்.ஆனால் பெட்டைகள் யாரும் பாடவில்லை.”பெரிய பாடகிகள் முன்னால் எங்கள் பாட்டுகள்..எடுபடாது”என ஒரேயடியாய் மறுத்து விட்டார்கள்.எப்படி தான் கம்பஸ் பெட்டைகளாக இருக்கிறார்களோ,தெரியவில்லை.ரூமுலே இருந்த நகுலனுக்கு பாட்டைப் பற்றிய ஞானமெல்லாம் இல்லை.அப்படியே கேட்டுக் கொண்டு நித்திரையாகி விட்டான்.

நகுலன் வேளைக்கே எழும்பி விட்டான்.கரியை எடுத்துக் கொண்டு பல்லை விளக்க முன்பக்க கதவைத் திறந்து திண்ணையில் வெளிப்பட்ட போது,மதிலோடு வளவுக்குள் இருந்த குச்சுப் பாதையில் சுளி தெரிந்தான்.இந்த காலையிலே எங்கே போறான்?புரியவில்லை.அவனுடைய ஆச்சி வீடு உள்ளக்க சிறிது தொலைவில் இருக்கிறது.போரவன்”அண்ணை,ரேடியோவிலே வெறித்தாஸ் போய்க் கொண்டிருக்கிறது.போய்க் கேளுங்கள்”என்று விட்டுப் போனான்.ரேடியோவிற்கு எப்ப உயிர் வந்தது.”பற்றரி வாங்கி விட்டீர்களா?”என்று ஆச்சரியமாய்க் கேட்டான்.அவன் சிரித்துக் கொண்டு போய் விட்டான்.பிறகு பல்லை விளக்கலாம்,பொட்டுக்குள்ளால் நுழைந்து போனான். அவன் பொய் சொல்லவில்லை. சுஜே ,வெறித்தாஸ் ரேடியோ கேட்டுக் கொண்டிருந்தான். வல்லையால்,பலாலி வீதியால் சென்ற இந்தியனாமி வழியில் சென்றிக்கு சிறு முகாம்களை அமைத்துக் கொண்டு யாழ்க் கோட்டையை அடைந்து விட்டது.கழுகுப் பெடியள்களின் எதிர்ப்பும் இருக்கத் தான் செய்தன.இருவரின் சண்டைக்கிடையில் அகப்பட்டு பொதுமக்கள் சிலரும்,அகப்பட்டிருக்க மாட்டார்கள்,வீட்டுக்குள் புகுந்து இழுத்து வந்து வீதியில் வைத்து சுட்டிருப்பார்கள்,இறந்திருக்கிறார்கள்…என்று போய்க் கொண்டிருந்தது.

அப்ப,அராலி வீதியாலும் வருவார்களோ..?மாதகல்,காரைநகர் முகாம்களிலிருக்கிற இந்தியனாமி வர சாத்தியமிருக்கிறது தான். அரை மணிநேர ஒலிபரப்பு.அதற்குப் பிறகு ஏழு மணி போல இந்தியனாமியின் ‘அன்பின் கரங்கள்’வானொலியில் “தமிழுக்கும் அமுதென்று பேர்..”பாட்டு போய்க் கொண்டிருந்தது.இலங்கை வானொலி,தமிழ்ச்சேவையில்.. அந்தப் பாட் டு தடை செய்யப்பட்டிருந்தது.

இவர்களுடன் சேர்ந்திருந்த இயக்கங்களின், ‘கழுகின் சேதாரங்கள் பற்றிய செய்திகளும்’ அதில் ஒலிபரப்பாகியது. 7.30 மணி போல இலங்கையாமியின் ஒலிப்பரப்பு ஒன்றும் ஒலிபரப்பாகியது.அவை கழுகுத் தலைவர்கள் பற்றிய தரக்குறைவான செய்திகளாக இருந்தன.சிங்களவர் ஒருவர் தமிழில் வாசிப்பது போலவும் இருந்தது.இயக்கங்கள் எதுவும் சிங்கள ஆமியுடன் சேர்ந்ததாக இருக்கவில்லை.சேர்த்துக் கொண்டதாகவும் இருக்கவில்லை. எல்லாச் செய்திகளுமே அரை மணி நேரமாகவே இருந்தன. எப்படி பற்றரி கிடைத்தது? நகுலன் விசாரித்த போது, “லொரியிலிருந்து பற்றரியை எடுத்து இதற்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன்”என்றான் . வீட்ட வந்தவன், வாசுகியிடம் “சுஜே வீட்டு ரேடியோ வேலை செய்கிறது”என்று தெரியப்படுத்தி இருந்தான்.

சந்திராவுக்கும் நகுலனைப் போல‌ வழுக்கியாற்று வாய்க்காலிலே எப்பவும் ஒரு மயக்கம் இருக்கிறது.முந்தி,அவள் வந்த போது சின்ன பெடியள்,பெட்டைகளை கூட்டிக் கொண்டு ஒரு விசிட் அடித்திருக்கிறாள்.அடுத்த நாள் வந்தவள்‌ “இன்றைக்கு வழுக்கியாறு பக்கம் போய் வரலாமா”என்று கேட்டாள். வழுக்கியாற்றை, நீர் கொழும்பு வாய்க்கால் போல பெரிசாக்கி‌ அதிலே, போர்ட்டிலே ஏறி போக வேண்டும் என்பது அவள் ஆசை. யார்,யாரோவெல்லாம் போர்ட்டிலே போக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.அவள் படக் கூடாதா?கழுகிலே சேர்ந்திருந்தால் அவள் ஆசைப்பட தேவையே இல்லை.போர்ட்டிலே பயணம் செய்திருப்பாள்.அவளுக்கு ‘கழுகும் இன்னொரு ராணுவம்’ என்ற பயமே நெடுக இருந்தது. மற்ற இயக்கங்களிலும் சேரக் கூடியவள் இல்லை தான்.

அதற்கெல்லாம் கண்ணுக்குத் தெறியாத ஒரு உந்துதல்,சக்தி அவளுள் புக வேண்டும்.அவள் நிலையில் அதற்கு சாத்தியமில்லை. சொந்தமாக‌ போர்ட்டை வாங்கி ஓடினால் தான் உண்டு.அவள் கெளரவம் பார்க்கிற பிறவியும் இல்லை.அராலித்துறையில் மீன் பிடிக்கிற வள்ளத்தில் ஒரு நாள் பயணிக்கவே போறாள். யாருக்குமே சின்னச் சின்ன ஆசைகள் நிறைவேற இவ்வவளவு தடைகள் இருக்கக் கூடாது தான் .இந்த நிலமைகளை .யார் எல்லாம் மாற்றுவார்களோ? நகுலன்ர அம்மா,”வேணாம் தங்கச்சி,அது ஊர் எல்லை,உள்ளுக்க இருக்கிற வயல் பரவாய்யில்லை.ஆனால் இதிலே இந்தியனாமி வந்து படுத்து கிடந்தாலும் தெரியாது.நாள் கணக்கிலே அங்கே,இங்கே என நிலை எடுத்து கிடக்கிறவர்கள். போறது பாதுகாப்பு இல்லை”என்று ஓரேயடியாய் மறித்து விட்டார். மற்ற அம்மாமாரும் “ஐயோ வேணாம்”என்றார்கள். .

இந்தியனாமி சிறு குழுக்களாக வந்து நாள் கணக்கிலே பதுங்கி இருக்கிறதை அவளும் கேள்விப்பட்டிருந்தாள். இப்ப ,அவளுக்கும் பயம் வந்தது. “எடியே பக்கத்து வீட்டிலே ரேடியோ வேலை செய்துதாம்.போய்க் கேட்போமடி”என்று வாசுகி சொல்ல,ரேவதி”லெவ்ட்,ரைட்”என ஸ்டெப்ஸைப் போட்டாள்.சிரித்துக் கொண்டு கிளம்பி விட்டார்கள். ரேடியோவில் தமிழ்ச்சேவையை கேட்டது,பாட்டுக் கசட்டைப் போட்டு கேட்டது எல்லாம் காதில் தேன் பாய்ந்தது போல இருந்தது,பார்வதி அன்ரியோடு சமையலில் அரட்டை அடித்ததோடு களைத்து விட்டார்கள்.

வாப்பாவும்,குஞ்சனும் நகுலன்ர்ர வந்ததார்கள்.இதைக் கேள்விப் பட்ட வாப்பா,”அராலிப் பெடியள்களிற்கு மூளை இந்தளவுக்கு வேலை செய்யாது “என்றான்.குஞ்சனுக்கு எம்.ஜி.ஆரண்ணை நினைவுக்கு வந்தார்.” அவனும் பாடுறவன் தானே, தன்ர பாட்டை கசட்டிலே பதிந்து கேட்க ஆசைபட்டு,” மயிலிட்டி ஆட்களின் பாட்டை டேப்பிலே பதியலாமடா,சுஜேற்ற கேட்டுப் பாரேன்”என்று கேட்டான். ” எல்லாம் வெல்லாம்”என்று நகுலன் சொல்லி விட்டு,வேற எதை,எதையோவெல்லாம் அலம்பினார்கள்.
பின்னேரம் வெறித்தாஸ் கேட்க இவர்கள் கிளம்பின போது பெட்டைகளும் வந்தார்கள். “சில பாதைகளில் வெளிக்கிட்ட இந்தியனாமி இன்னமும் யாழ்க்கோட்டையைப் போய்ச் சேரவில்லை என்ற செய்திகளோடு, வெளிநாடு ஒன்றுக்கு ஏஜென்ஜியால் கூட்டிச் செல்லப்பட்ட ஈழத் தமிழர்கள் விமானநிலயத்தில் பிடிக்கப்பட்டு தடுத்து வைத்திருக்கிறார்கள்”…என்ற செய்தியும் தொடர்ந்தது.

தமிழ் பி.பி.சியில், விமல் சொக்கநாதனின் தமிழரங்க நிகழ்ச்சி கவரக் கூடியமாதிரி அழகுத் தமிழில் ஒலித்தது.என்ன குரல் வளம்.வெறித்தாஸ் அளவில் செய்திகள் இல்லா விட்டாலும் ,கம்பீரத் தமிழ்,கேட்க , அதுவும் கன காலத்திற்குப் பிறகு கேட்க‌ சந்தோசமாய்யே இருந்தது.பெண்களிற்கும் தான். வாப்பாவிற்கு தான் அந்த யோசனை ஏற்பட்டது.”சுஜே,லொரியிலே இரண்டு கார் பற்றரி அல்லவா இருக்க வேண்டும்.இன்னொன்றும் இருக்கிறதா?”என்று கேட்டான். .”இருக்கிறது”என்று அவன் பதிலளித்தான்.
வாசுகிக்கு உடனே மூளை கிளிக் பண்ண, “நடேஸ்(வாப்பாட பெயர்)எங்க வீட்டிலே கிடக்கிற டி.வி.யை அந்த பற்றரியைக் கொண்டு உயிர்ப்பிக்க‌முடியுமா?”என்று கேட்டாள். வாப்பா “முடியும்” என்றான்.

அன்றிரவு அந்த பற்றரியையும் கழற்றி சுஜே வீட்டிலே வைத்தார்கள். கொஞ்சநேரம் வீட்டிலே அலட்டிக் கொண்டிருந்தவர்கள் “நேரமாய்யிட்டுடா,நாளை சந்திப்போம்,வாடா குஞ்சன்”என வாப்பா எழும்பினான்.போறவழியில் குஞ்சனை,அவன்ர குடியிப்பு வீதியிலே இறக்கி விட்டு, உழக்கிக் கொண்டு போனான்.இரவு பயத்தை ஏற்படுத்தினாலும்,சுவாரசியமாய் தான் இருக்கிறது.இந்த நேரத்தில் இந்தியனாமி வந்தால்…’என்ற சிந்தனை வர,வேகமாக உழக்கி பிரதான வீதியை விட்டு ஒழுங்கையிலே இறக்கிய பிறகு தான் மூச்சு வந்தது.எப்பவும் வன்முறைகள் சடுதியாக ஏற்பட்டு அடங்கி விடுகின்றன.அந்த கணத்தில் அகப்படக்கூடாது. அகப்பட்டவர்கள் காயம் மாறாமல் வேதனைப்பட்டுக் கொண்டிருக்க,மற்றவர்கள் அந்த பயங்கரத்தை கடந்து விட்டவர்களாக, ஒன்றுமே நடவாதவர்கள் போல இருப்பார்கள்அது .பட்ட வலியை விட அதிகமான வலிக்கும் . சபிக்கப்பட்டவர்கள் போல, தீண்டாதவர்கள்…போல,காந்தி சரியாய் தான் சொன்னார்.’கடவுளின் குழந்தைகள்’என்று.கண்ணுக்குத் தெரியாத ஒரு தாய் வாஞ்ஞையுடன் இருக்கிறாள்.

இவன் நகுலனுடன் திரிய வெளிக்கிட்ட பிறகு ,இப்படிக் குழப்பளடி நினைப்புக்கள் வருகின்றன.சிரித்துக் கொண்டான். ஆனால்,இந்தியனாமி,சிறிலங்காவைப் போல சுனாமியா, அல்லது புயலா,மழையா?எனவும் தெரியவில்லை.ஆனால்,எல்லா நாட்டின் ராணுவமும்,அந்த நாட்டில் கதாநாயகர்களாக கொண்டாடப்பட்டாலும் அதன் எதிர் போக்கான நடத்தைகளை,தணிக்கை செய்து விட்டு நேர்த் தன்மைகளையே சிலாய்க்கிறது. குற்றம் புரிந்த அவர்களைக் காப்பாற்ற அந்தந்த நாட்டு அரசாங்களும் முய‌ல்கின்றன‌. உண்மையிலே ‘அது ஒரு கொலைகளைச் செய்கிற‌ மெசின் தான்’என்பதும் மறைக்கப்படுகிறது .அதிலே அவர்கள் ஒருவித போதையும் கண்டு விட்டார்கள். அடுத்த நாள் பத்து மணி போல வாப்பாவும்,குஞ்சனும் வர‌ பொறுத்துற வேலைகளை தொடங்கினார்கள்.

நகுலன் போய் சுஜேயோடு பற்றரியை காவிக் கொண்டு வந்தான். சுஜே, எதிலும் விசயம் அறிந்தவனாயே இருந்தான். வாப்பா, குஞ்சனிடம் ” நீ இவனோடு ஓட்டிலே ஏறி, அன்டனாவை கட்டு”என்று கூறினான். சுஜே, அதை கயிற்றால் கட்டி லாவகமாக நிறுத்தி விட்டான். கொழும்பிலே அவர்களிட்ட டி.வி இருந்திருக்க வேண்டும்.அகதியாய் வந்ததால் கனசாமான்களை விட்டு விட்டு வந்திருக்கிறார்கள். நகுலன்,வெளிய நின்று,வாப்பா”அப்படி திருப்பு,இப்படி திருப்பு”என சொல்லுறதை யன்னலுக்குள்ளாலே கேட்டு, மேலே பார்த்து சொல்லி அட்டகாசப்படுத்திக் கொண்டிருந்தான். குஞ்சன்”இங்கே இருந்து கீழே பார்க்கிறது அழகாய் இருக்கிறது என்ன”என்று சுஜேயிடம் கேட்டான். அவன் சிரித்தான். ” சரி இறங்கலாமடா”கத்தினான் நகுலன். இலங்கை ரூபவாகினி தெளிவாக இழுத்தது.

மண்டைதீவில் இருந்த பெரிய‌ கோபுரம் தகர்த்த‌ பிறகு,இலங்கை ராணுவம் சிறிய கோபுரங்களை ஆமிக்காம்களில் அமைத்திருந்தார்கள். வடக்குக்கு தனியாக ரூபவாகினி ஒளிப்பரப்பாகிறது போலவே படுகிறது. ஆனால்,பெட்டைகள் டி.வியிலே, தூரதர்சனைப் பார் க்க ஆசைப்பட்டார்கள்.”வானம் ஈரநிலையில் இருக்கிறதால் ….சென்னைச் சனலை இலகுவாக இழுக்கிறது” என்றான் வாப்பா.சிவாஜி, பழைய பாடலை பாடிக் கொண்டிருந்தார்.”பாலும் பழமும் கைகளில் ஏந்தி,பவள வாய்யில் புன்னகைச் சிந்தி..”யார் தான் இந்த பாட்டுக்கு மயங்க மாட்டார்கள். சிவாஜியின் வாய் அசைவு தத்ரூபமாக இருந்தது. சிவாஜியைப் போல நடக்கிறது;வசனம் பேசுறது;நடிக்கிறதுக்கு என ஒரு கூட்டமே நகரம்,கிராமம் எல்லாம் இருக்கின்றன‌. பெண்களைக் கவர்ந்த நடிகர் அவர்.எனவே பெடியள்களும் பெட்டைகளைக் கவர நடிக்கிறார்கள். சுளியும் வந்து விட்டான்.பெடியள் இருவரும் டி.வியை விட்டு நகரவில்லை,முன்னாலே…இருந்து விட்டார்கள். “இவர்களிற்கு இனி சோறு, தண்ணி தேவைப்படாது.டீ குடித்தால் நல்லாய்யிருக்குமடா”என்று வாப்பா சொல்ல,எல்லாருக்கும் ‘டீ’போடச் சொல்ல வாசுகி சமையல் கட்டுக்குப் போனாள்.

அம்மாமாருக்கு டி.வி.ருசிக்கவில்லை. சமைய லில் ஈடுபட்டு கதைத்துக் கொண்டு கொண்டிருந்தார்கள்.ஆச்சியின் அலுவல்களை பார்ப்பதில் சின்னம்மா மும்முறமாக இருந்தார்.பிறகு,பெடியளைக் கூப்பிட, பெடியள் ஆச்சியை கதிரையோடு தூக்கிக் கொண்டு வந்து டி.வி குரூப்பிலே விட்டார்கள்.

ரூமிலே அடைந்து விட்ட இவர்களிடம் வாசுகி வந்து “‘டீ’ரெடி வந்து எடு”என்று நகுலனிடம் சொன்னாள். இவன் போய் எடுத்து வந்தான். முதல் நாள் முழுவதும் தூரதர்சனை ஆராய்வதிலே …பெண்கள் இருந்தார்கள்.இரவு 7.30ற்கும் ஒலியும், ஒளியும்(படப் பாடல்கள்),சுஜேயும்,சுளியையும் பார்வதி அன்ரி வந்து கூட்டிக் கொண்டு போக வேண்டியிருந்தது.அடுத்த நாள் ரூபவாகினியிற்கு மாற்றி… பார்த்தார்கள். பக்கத்து வீட்டு பெடியள்களிற்கு அதில் வந்த‌ “நைட் ரைடர்”(க‌ம்பியூட்டர்க் காரின் விஞ்ஞானத் தொடர்)நல்லாய்ப் பிடித்தது. .”அலெக்சி கெயிலியின் நாவலான வேர்கள் ; அடிமைப்பட்ட அமெரிக்க கறுப்பிளைஞனின் டி.வி.தொடரை இலங்கையரசு ரூபவாகினியில் ஒளிபரப்பியதைத் தான் பெடியள்களால் நம்பவே முடியவில்லை?

ஒரு அடக்குமுறையரசு,ஒரு விடுதலைத் தொடரை அதுவும்,சித்திரவதைத் தொடரை எப்படிப் பார்த்தாலும் அதுவும் தமிழ் பகுதியில் நிச்சியமாக ஒளிபரப்பாக்காது, ஆனால், ஒளிபரப்பாக்கிறது. அத்தொடர் …ஒரேயடியாய் கட்டிப் போட்டு விட்டது.”அதனால் தான் இவர்கள் வடக்குக்கு ரூபவாகினி தனியாக ஒளிபரப்புகிறது என சந்தேகிறார்கள் இலங்கையரசின் ராணுவ முகாமிலிருந்து ஒளிபரப்பாக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆமியிலிருக்கிற ஜே.வி.பி.காரர்களின் வேலையாக இருக்குமோ?.

கழுகு, உட்பட எல்லா இயக்கங்களிற்கும் ஜே.வி.பி.யிலே மரியாதை இருக்கிறது.கழுகின் ஒரு புத்தகம் கூட ஜே.வி.பி.யினரும் தமிழீழ போராட்டமும்’என்ற ஆய்வுக் கட்டுரையை தாங்கியே வந்தது.அரச தரப்பினர் பலரை இயக்கங்கள் கொன்றனர்.ஆனால்,ஒரு ஜே.வி.பி.க் காரர் மீதும் எவருமே கை வைக்கவில்லை.தாமரை இயக்கமும் ஒரு தடவை தழிழீழ உரிமைகளை ஆதரித்த சிங்கள இளைஞர்கள் சிலரை தங்கட முகாமிற்கு அழைத்து வந்து யாழ்ப்பாணத்தில் தங்க வைத்திருந்தனர்.அவர்களிடம் மற்ற இயக்கத்தவர்கள் பேட்டி எடுக்க வந்தார்கள் தவிர எவரும் ஊறு விளைவிக்கவில்லை. அவர்கள் பல மாதங்கள் வரையில் அங்கேயே இருந்தார்கள்.

ஜே.வி.பி.என்ன பேசினாலும்,முரண்டு பிடித்தாலும்…அவர்கள் போராட்டத்தைப் பார்த்தே தமிழ் விடுதலைக்குழுக்கள் எழுந்தன,கட்டப்பட்டன. துரோணர் போல ஒரு பொசிசன்.

இயக்கங்களிற்கு , ‘தமிழருக்கான உரிமைகள் அவர்கள் மூலமாகத் தான் கிடைக்கலாம்’ என்ற நம்பிக்கை இருக்கின்றது. இயக்கங்களைப் போல,நிறைய தோழர்களை அரசபடைகளால் வதைப்பட பறி கொடுத்தவர்கள்;இங்கேயிருக்கும் இளைஞர்களின் வலிகளை புரியக் கூடியவர்கள் . இவர்களிற்கு குழப்பமான நிலையில் கூட இந்த நிலைப்பாடு சரியவில்லை. இலங்கை ஆமியில் சேர்ந்த அவர்களது வேலையாகத் தான் இருக்கும் என நகுல‌ன் செட்டும் நினைத்தது.இதைத் தவிர மைக்கெயர் தொடர்,ஒரு கராட்டி மனிதனின் தனிப்பயணத் தொடர்…. (பெயர் மறந்து விட்டது) என்பன ஒரே நாளிலே பார்க்கக் கூடியதாக இருந்தன‌ .பெட்டைகளும் கொஞ்சம் பார்த்தார்கள். எல்லாம் ஆங்கிலத் தொடர்கள். அவர்களை இவை நெடுக கவரவில்லை.

வேர்களிலே, அந்த இளைஞன் பல தடவைகள் தப்பி , தப்பி ஓடுகிறான். எல்லா முறையுமே பிடிபடுகிறான். பயங்கரமாக வதைப்படுகிறான்.ஒரு தடவை அவன் கை விரலைக் கூட வெட்டி எறிகிறார்கள்.இருந்தாலும் அடுத்த முறையும் தப்பி ஓடுகிறான். .இயக்கத்தில் சேர்ந்த பிறகு,அதிலே பல தண்டனைகளை நேரிலே பார்த்திருக்கிறார்கள். ஒரு அடிமையை அமெரிக்கர்கள் என்ன ,லேசிலே தப்பி ஓடவிடுவார்களா? ஒவ்வொரு நாளும், அந்த நேரத்தில் இவர்க‌ள் பிரசன்னமாகி விடுவார்கள். அந்த தொடரை தவற விட்டதேயில்லை. சின்ன செட்டுக்கு அதைப் பார்ப்பதில் அவ்வளவாக‌ நாட்டம் இருக்கவில்லை.

தமிழில், இரண்டு சினிமாப் படங்களை நெடுக திரும்பத் திரும்ப போட்டார்கள். அம்மாருக்கு பிடித்த படம், மண்ணுக்குள் வைரம், சிவாஜியின் படம்.அதில், கடைசி சீனிலே ஆயுதங்களை எல்லாம் கீழே போடுற காட்சி இடம் பெறுகிறது..அதற்காகவே 108 முறைகளிற்கு மேலாக பார்க்க வைத்தார்கள். அவர்கள் அதை ஒரு தடவைக்கு மேலே பார்க்கப் பிரியப்படவில்லை மற்ற படம்,புன்னகைமன்னன் . இது, இயக்கச் செயற்பாடுகள் சமயத்தில் பயங்கரவாதமாக மாறி விடும் என்பதை அழுத்தமாகச் சொல்லுற படம்.

“ஜனநாயகத் தன்மையையை விட்டு விலகிற எல்லா முறைகளுமே ஒருவித பயங்கரவாதம் தான்” என்று படம் எடுப்பதற்கு அசாத்திய‌ துணிச்சல் வேண்டும்! .ஜனநாயக ஆட்சியில், இருக்கிற‌ படையினரே பயங்கரவாத அமைப்புக்கள் தான் இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு ஈழ விடுதலைப் பெடியள்ககளால் கொலை அச்சுறுத்தல் கூட விடப்பட்டட்தாக அறியப் படுகிறது.

அதாவது ஆயுதம் தாங்கியவர்களுக்கிடையில் ஒரு கோடு தான் இருக்கிறது.அங்கால காலை வைத்தார்கள் என்றால் பயங்கரவாதம்.இங்கால வைத்தார்கள் என்றால்…காப்பவர்கள்.தலைமையில் நேர்மை இல்லாது இன,மத வாதம் அதிகளவு காவிக் கிடந்தால் நல்லாட்சி இருக்காது.சிறிலங்காவில் எப்பவும் பக்கச் சார்பான அரசியலே பேசப் படுகிறது.

இந்த படமும் பல தடவைகள் ஒளிப்பரப்பாகின. ஜமுனா,ரேவதியின் விசிறி,அவள் புன்னகை மன்னனை தவற விட மாட்டாள் இந்த சந்தடியில் குஞ்சன் கேட்டதை நகுலன் மறந்தே போய் விட்டான்.அவன் ஒரு நாள் “டேய்,மயிலிட்டி ஆட்கள் போய்யிட்டினம் என்றால் சந்தர்ப்பத்தை தவற விட்டு விடுவோமடா,கேளன்”என்று உழுக்கி ஞாபகப் படுத்தவே,”சரி இன்றைக்கு கேட்போம்”என்றவன் “நைட் ரைடரை நாமும் போய் பார்ப்போம், பார்த்த பிறகு சுஜேயை ரூமுக்கு கூட்டி வந்து கதைப்போம்”என்றான்.ரேவதிக்கும்,சந்திராவுக்கும் அந்த தொடர் சுவாரசியம் தட்ட பார்த்துக் கொண்டிருந்தார்கள்.இவர்களும் போய் இருந்து பார்த்தார்கள்.

தொடர் முடிய “சுஜே,இவன் உன்னட்ட கொஞ்சம் பேச வேண்டுமாம்.வாவன் ரூமுக்கு”என நகுலன் கூப்பிட,சுளி கழற வந்தா ன்.”இங்கே,மயிலிட்டி அகதிகள் வந்திருந்தது தெரியும் தானே, அவயளோட வந்தவயள்,எங்கயலில் இருக்கிற எம்.ஜி.ஆர்.குடும்பத்தினர்,நல்லாய் சினிமாப் பாட்டுக்களைப் பாடுகிறார்கள்.அவற்றை உங்கட கசட் செட்டிலே,டேப் கசட்டுக்களைப் போட்டு ரெக்கோர்ட் பண்ணலாமா?”என்று குஞ்சன் கேட்டான்.”செய்யலாம். அம்மாட்ட கேட்க வேண்டும்.ஆனால்,சும்மா டேப் பண்ணினால் அவ்வளவு நல்லாய் இருப்பதில்லை”என்று அவன் குறை பட்டான்”.எங்கட கலைமகள் வாசிகசாலைக்காக வாங்கிய மைக் செட்டுகள் என்னிடம் இருக்கின்றன.அவற்றை பொறுத்தி கிளியராக டேப் பண்ணலாம்.நீ வீட்டிலே கேட்டு விட்டுச் சொல்லு”என்றான் வாப்பா.
“பின்னேரம் போல சொல்றேன்”என்று அவனும் கழ‌ன்றான். “எதையும் பொசிட்டிவ்வாய் நம்பு,அவர்கள் மறுக்க மாட்டார்கள்,கவலைப்படாதே”என்று குஞ்சனிடம் வாப்பா சொன்னான்.பிறகு ,அலம்பி விட்டே பிரிந்து போனார்கள்.

இந்த முறை, இந்தியனாமி போற பாதையில் கழுகு, கண்ணிவெடிகளை புதைக்க மக்கள் விடுவதாய்யில்லை.இந்தியனாமி, வீதியை விட்டு விலகி நகர்ந்து வந்ததும் ஒரு காரணம். இவர்களிடம், அந்த ‌பதட்டச் சூழலிலே உடனுக்குடன் கொஞ்சப்பேர்களை சுட்டுத் தள்ளுறதும் நெடுக‌ இருக் கின்றன.இலங்கை ஆமியைப் போல,பிறகு, அதிகமாக பலி எடுக்கிற இனத்துவேச நஞ்சு.. இல்லை.ஆனால்,சாவு, சாவு தானே!கொஞ்சபேர் செத்தாலும் வலிக்கத் தானே செய்யும். ஏற்பு வலி போல அந்த குடும்ப‌த்தை அப்பப்ப சுளிர்.சுளிரென …இழுக்கத் தானே செய்யும்.தனிமையில் அழுகிறது எவ்வளவு கொடுமையானது என்பது அதையதை உணர்கிற குடும்பங்களிற்குத் தெரியும் யாராகவிருந்தாலும்.குற்றவாளிகள் அழுகிப் புளுத்துச் சாக வேண்டும்.

கனரக வாகனங்களை பெரிதாகப் பாவிக்கவில்லை.சிலபகுதிகளில் ‘ரக்’குகளில்,வாகனங்களிலும் சென்றார்கள் தான்.இந்த நகர்வில் 50,60…பேர்கள்,சிலவேளை கூட பேர்கள்,போற போது பொதுமக்களும் பக்கத்தாலே நடமாடினார்கள்.கண்ணுக்குத் தெரியாத ஒரு அபாயமே மறைந்திருந்தது.

சிறிலங்கா ஆமி என்றால்,எப்பவுமே எதிரி நாட்டுப்படைகள் என்ற‌ அச்சமே நிலவின.சிறுவர் பெரியவர் என …பார்த்துப் பாராமல் கொல்கிற கொரூரம் அவர்களிடம் எப்பவுமே காணப்பட்டது. அராலி வீதியால் .. பாட்டுக் கச்சேரி முடியிற வரைக்கும் வராமல் இருக்கோணும்’என குஞ்சன் முருகப் பெருமான் இருக்கிற திக்கை நோக்கி கூம்பிட்டான்.கடவுள் அருள் பாலிக்கிறவர், சக்தி படைத்தவர் என்பதை அவன் சுயத்தில் கூட சமயங்களில் இனம் காண்கிறான். ஏன் எங்களை மட்டும் சாகிற பகுதியில் தள்ளி விட்டார்.’எவருமே சாக வேண்டாம்’எனத் தடுக்கிற‌ உன்னதத் தன்மை ஏன் அவரிட‌ம் இல்லாமல் போய் விட்டது? என்றது தான் அவனுக்கு புரியவில்லை அகிம்ஸையைப் போதித்துப் கொல்லாமையை வலியுறுத்திய புத்தரை பின்பற்றுறவர்கள் என்று சொல்கிற கூட்டமே நெஞ்சில் இரக்கமில்லாது இனப்படுகொலையையேச் செய்கிறது.புத்தர்,சரியானவர் தான்.இவர்களால் தான் மாற முடியவில்லையோ?காலம் தான், ம்…!, தலை கீழாய் மாறிப் போய் விட்டது.

பின்னேரம்,வெறித்தாஸ் கேட்கிற போது,”இங்க‌ வைத்து டேப் பண்ணுறதென்றால் ஒ.கே, வெளிய கொண்டு போக வேண்டாம் என்கிறார் அம்மா “என்றான். “நாலைந்து பேர்கள் வருவார்களே”என்று குஞ்சன் கேட்க‌,”பெரிய கோல் கிடக்கிறது,இடம் பத்தும்”என்றான் சுஜே.

“பிறகென்ன?”என்று நகுலன் சொல்ல ,”டேய்,டீ,வடை,சன்விச் …போலவும் சேர்வ் பண்ணோனுமடா”என்று நினைவுபடுத்தினான் வாப்பா. ” நான் தேயிலையும்,சீனியும் அம்மாட்ட கேட்டு வாங்கி வாரன்”என்றான் நகுலன். “வடை சுட அம்மாவைக் கேட்டுப் பார்க்கிறேன்”என்று சுஜே சொன்னான். சுஜேக்கு.அதில் சுவாரசியம் ஏற்பட்டு விட்டிருந்தது.பார்வதி அன்ரியும் நல்லவரே.நகுலன் அம்மாவிடம் கேட்கிற போது,கேட்டுக் கொண்டிருந்த ரேவதி,”நாங்களும் வந்து கேட்கிறோம்”சன்விச்சை நாங்க செய்து கொண்டு வாரோம்”என்றார்கள்.குஞ்சன் அவர்களோட இழுபடுறவன் எனவே,.அவன்ர ஆசைக்கு தோள் கொடுக்க எல்லோருமே முன் வந்தார்கள். சுஜேயின் அப்பா,பழையபடி கொழும்பிற்கே வேலைக்கு போய் விட்டதால் அவர் இருக்கவில்லை. இனி,குஞ்சன் அவர்களிடம் சொல்லி கூட்டி வர வேண்டியது தான்.அவர்களிடம் கேட்டு,இவர்களிடம் சொல்லி ஒரு நாள் இரவை தெரிந்தார்கள்.

எம்.ஜி.ஆரண்ணை,சித்திரா அக்கா,அவர்களுடைய மகன் விமல்,கூட குஞ்சன்…இவ்வளவு பேர்கள் தான் பாட்டுக் குழு. எம்.ஜி.ஆரண்ணை, ஓரளவு தோற்றத்தில் கறுப்பாய் சிறிது குண்டாய்,தொழிலாளிபோல‌ இருந்தார்.சித்திராக்கா ஒல்லி.ஆனால்,இருவர் முகமும் களையாக இருந்தது.வாசுகி,ஜமுனாவிற்கு இவரைப் போல தின்னவேலியில் பக்கத்து வீட்டிலே இருக்கிற அண்ணர்ர ஞாபகம் வந்தது.இலங்கையாமியின் செல்லடிகளின் போதெல்லாம் இவர்கள் அவர்கள் வீட்டேயே ஓடுவார்களாம்.பெரிய குடும்பம் அவர்களுடையது.அங்கேயே பாதுகாப்பாக இருந்து சீரான பிறகு…அவரவர் வீட்டிலே செய்தி அனுப்பி கூட்டி போறது நடக்கும்
.நகுலன்,இரண்டொரு தடவை அந்த வீட்டுக்குப் போய் வாசுகியை சைக்கிளில் அராலிக்கு ஏற்றி வந்திருக்கிறான்.பெரும் எடுப்புகள் எடுக்கிற போதெல்லாம் கம்பஸ் கால வரையின்று மூடப்பட்டு விடும். ‘அது ஒரு காலம்’என்றிருக்கிற மாதிரி இந்தியனாமி வந்திருந்தாலும்,இப்படி சண்டைகளைப் பார்க்கிற போது,அது மீளவும் வரலாம் என்ற பயம், எழவே செய்கிறது,

சித்திரா அக்கா,சிறு மகளை குஞ்சனிட மனைவி மாலாவிடம் விட்டிருந்தார்.”உன்ர ஆளையும் ஏன் கூட்டி வரவில்லை”என்று பெண்கள் குஞ்சனிடம் கேட்டார்கள்.”இதே பெரிய டீம்.பிறகு டேப்பை போட்டு கேட்கட்டும்”என்று அவன் பதிலளித்தான்.”சரி உன்ர ஆளை எங்களிடம் காட்ட விரும்பவில்லை”என்று பகிடி விட,”இன்னொரு நாளைக்கு கூட்டி வாரனே”என்றான். கதிரைகளை ஒதுக்கி விட்டு மேடையில் இருப்பது போல நிலத்திலே இருந்தார்கள்.வாப்பா ,வயருடன் கூடிய மைக்கை அவர்களிற்கு முன்னால் நிறுத்தி சரி பார்த்தான்.ரேடியோ செட்டை தனக்கு பக்கத்தில் வைத்துக் கொண்டான்.சந்திராவும் அன்று அவர்கள் வீட்டிலேதங்கிறாள்.பெண்கள் ஒருபகுதியில் குழுமி நிலத்தில் இருக்க,அவர்களோடு பார்வதி அன்ரியும் கேட்க வந்து அமர்ந்தார்.பெடியள் ஒரு குழுவாக இருந்தார்கள்.

மற்ற அம்மாமார் வரவில்லை. பதிந்த பிறகு ஒரு தடவை அந்த கசட்டை போட்டுக் கேட்டுப் பார்த்தால் சரியாய் போகிறது”என்றார்கள்.பட்ஜ் வித்தியாசம் தான்.

குஞ்சன் தான் பகிடி.அவனுடைய சேர்ட்டை திறந்து வயிற்றில் குடத்தின் ஒரளவான வாய்யைக் கவ்வ வைத்திருந்தான். எம்ஜிஆரண்ணை தனக்குப் பக்கத்திலே சிறிய ஸ்டுல் ஒன்றையும் கேட்டு எடுத்து வைத்திருந்தார்.அவையே இசைக் கருவிகள்.அவர்,வாப்பாவைப் பார்த்து கையசைத்து,சித்திரா அக்காவை’ பாடு’ என சைகை காட்டினார்.

“ஆலைய மணியின் ஓசையைக் கேட்டேன்..”சுசிலாவின் பாட்டை அந்த மாதிரி பாடினார்.பெண் தரப்பிற்கு நல்லாய் பிடித்து விட்டது. நகுலன்,ஏற்கனவே மயிலிட்டியில் கேட்டு…. சொக்கிப் போய்யிருந்தான்.குஞ்சன் பரவாய்யில்லாமல் கடம் வாசிக்க அண்ணர்,”ஸ்டூலிலே மேளம் தட்டிப்பாடினார். அவர்,”சிவகாமி,பொன் எழில் பூத்தது புது வானில்..”என்ற வாத்தியார் பாட்டை பாட எல்லாரும் உறைந்து போனார்கள்.என்ன குரல் வளம் . !குஞ்சனும் ஒரு பாட்டை பாடினான்.”இவன், இதைப் பாடித் தான் மாலாவை மயக்கியது” என்று வாப்பா பகிடியாகச் சொன்னான்.. அக்கா, பல சுசிலாவின் பாடல்களை கேட்க கேட்க, நல்ல மாதிரி பாடினார்.விமல்,”பொன் வீணையே…”ஜெயச்சந்திரனின் பாட்டை சுரம்,லயம் மாறாமல் மழைக்குரலில் பாடிக் கலக்கினான்

.அண்ணரும் பல பாடல்கள் பாடினார்.அவர்க்கு கிடைத்த வரம் அது.
இங்கே, எவருமே சங்கீதம் படித்தவர்கள் இல்லை.கேள்வி ஞானம் தான்.இதெல்லாம் கடவுளின் கொடைஅண்ணர்”மயிலிட்டியில் இந்தியனாமி வந்த பிறகு மின்சாரம் கிடைத்தது தான். பிறகு, மின்சார த்தை நிறுத்தி விட்டார்கள். ஆனால்,கிடைத்திருந்த போதுஎங்களிற்கு இப்படி பதியோனும் என்று தோன்றவேயில்லை.குஞ்சனால் தான் முதல் தடவையாக பதியிறோம் “என்றார். அவர் குரல் நெகிழ்ந்தது.

அதற்கு குஞ்சன்” பாட்டுக்காரர்களிற்கு தாம் ‘பாட்டுக்காரர்’ என தெரிவதேயில்லை”என்று சொல்லிச் சிரித்தான்.

இடையில் டீ,வடை ,சன்விச்சுக்களை…பார்வதி அன்ரி,சமையல் கட்டிலிருந்து அனுப்ப பெட்டைகள் பரிமாறினார்கள். பாட்டு முடிய முதல் பார்வதி அன்ரி படுக்கப் போய் விட்டார்.ரேவதியும் “நான் போகப் போறேன்”என்ற போது, சுளி கொண்டு போய் விட்டு விட்டு வந்தான்.விமல்,அக்காவின் மடியில் நித்திரையாகக் கிடந்தான்.ஒருமாதிரி… கச்சேரி ஒய்ந்தது. 3 கசட்டுகள் பதிய முடிந்திருந்தன.”இங்கேயே இருந்து விட்டு நாளை போங்களன்”என்று சுஜே கேட்ட போது,”தூரமாய் இருக்கிறோம்,கிட்ட தானே,போய்க் கொள்ளலாம்” என்று எழுந்தார் அண்ணர்.விமலை தூக்கி தோளில் போட்டுக் கொண்டார்.தூக்கக் கலக்கத்தோடு சென்றார்கள்.

நகுலன், வீட்டின் பின் கதவைத் தட்ட அம்மாவே எழும்பி வந்து திறந்து விட்டார்.மற்றவர்கள் எல்லோரும் நித்திரை.ஆச்சி,சின்னம்மா ..வேளைக்கே நித்திரையாகி விடுவார்கள்.பெட்டைகள் பட்டாளம் தான் டி.வி.பார்க்கிறவர்கள்.அவர்கள் போய் விட்டதால் கனநேரம் டி.வி . பார்க்கவில்லை.அம்மாமார் ஒரே பட்ஜ்.”நீங்க படுங்கள்,நான் பார்த்து கதவை திறக்கிறேன்”என்று அம்மா சொல்ல நித்திரையாகி விட்டார்கள். வாப்பா,நகுன்ர ரூமிலே… தங்கினான்.

இவர்கள் வராது என அசட்டுத்தனமாக எண்ணியதை பொய்யாக்க இந்தியனாமி ‘ரக்’சகிதம் 50,60 பேர்கள் அடங்கிய ஒரு அணி அராலி பிரதான வீதியால் வந்தது.ஊர் மனைக்குள் இறங்கவில்லை.ஊர்மனைகளின் எல்லையில் பஸ் நிறுத்தமாக இருக்கிற‌ சீமேந்து திண்டும்,ஓலைக் கூரையும் கொண்ட சிறிய கொட்டில் _நாகேந்திரமடம்_ எனப்படுகிறது..அதை இந்தியனாமி கடக்கிற போது,ஓலைவேலியில் மறைந்திருந்த கழுகுச் சேர்ந்த‌ சிறுவர் இருவர்,’கிளிப்பைக் கழற்றி விட்டு கிரனைற்’ ஒன்றை எறிந்து விட்டு குடல் தெறிக்க ஓடி விட்டார்கள்.அதில் ஒரு இந்தியனாமி இறந்து, இருவர் காயமடைந்தார்கள்..என செய்தி காற்றில் வந்தது.அதைப் போலவே,சிறுவர்களை நோக்கி துவக்கை நீட்டிய போது,தலைவர் தரத்தில் இருந்தவர்,ஆகச் சிறியவர்களாக‌ இருக்கிறதைப் பார்த்து “சுட வேண்டாம்”என மறித்து விட்டதாகவும் சொன்னார்கள். எதையுமேவெரிபை பண்ண முடியவில்லை.

கிரனைற் வெடிச்சத்தம் கேட்டது மாதிரியே இருக்கவில்லை . அந்த அணி திரும்பி ஊருக்குள் வரவில்லை.அப்படியே போய் கிரிஸ்தவ சுடலையில் ‘டென்ட்’ அடித்து இருந்து விட்டது.சீமேந்துக் கட்டுகள் பல உள்ளே இருந்த தால் படுக்கிறதுக்கு ஈசி என அதை தெரிந்திருக்கலாம். இந்தியனாமிக் குறித்து சனங்கள் சொல்லிய தொகை தவறாக இருக்க வேண்டும்.100 பேர்களிற்கு மேலேயாவது இருக்க வேண்டும்.அல்லது இன்னொரு அணி தெற்கராலிப் பக்கமாக வந்து தான் சேர்ந்ததோ?இரவு போல சுடலையிலிருந்த அவ்வணி, மோட்டரில் ஒரு செல்லைப் போட்டு வடக்கராலிப் பக்கமாக‌ அடித்து விட்டது.நகுலன் வீட்டிலே இருந்தவர்கள் பொட்டுக்குள்ளாலே சுஜே வீட்ட விழுந்தடித்து ஓடினார்கள். சுஜேயும்,சுளியும் கை கொடுத்தும் கூட ஆச்சியை பொட்டுக்கிள்ளாலே கதிரையோட தூக்கிச் செல்றதிலே வாப்பா,நகுலன்,குஞ்சனும் சிரமப்பட்டு தான் விட்டார்கள்.

அவர்கள் வீட்டின் சுவர்கள் சுண்ணாம்புச் சாந்தில் முருகைக் கற்களை வைத்து இவர்களது சுவர்களைப் போல இரண்டு மடங்காக தடிப்பாக கட்டப்பட்டே இருந்தன. அதனாலே, அங்கே ஓடினார்கள். ஆகப் பழைய வீடுகளை அப்படியே கட்டினார்கள். அந்த மாதிரி வீடுகளை எல்லாம் யார் காப்பாற்றுவார்கள்.பிறகு இலங்கைப் படையும் வரலாற்று அடையாளமுள்ள பழைய வீடுகள் பலவற்றை…வேணுமென்றே செல்லுகளைக் கொட்டி தரைமட்டமாக்கி இருப்பார்கள் என்று படுகிறது. “அதில் இருப்ப‌வர்கள் சிங்களவரில்லையே,தமிழர் தானே,செத்து ஒழியட்டும்”என்ற வன்சினம் கொண்டவர்கள் .சின்னக்கடையே எரித்தவர்கள்.இப்ப அதே மாதிரியா கட்டி இருக்கிறார்கள்?அந்த இடத்தில் புதிய‌ பஸ் நிலையம் ஒன்று கட்டப்பட்டிருப்பதாகக் கேள்வி.சின்னக்கடைச் சந்தை நகுலனுக்குக் கூட ஞாபகம் வருகிறது.கவிஞர்.வ.ஜெ.ஜெயபாலன் “என்ன அழகு,அதே வடிவில் திரும்பவும் சந்தை எழுப்பப் பட வேண்டும்”என நகுலனின் அண்ணரிடம் தெரிவித்திருப்பதாக கூறியிருக்கிறார்.

நகுலனின் வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளிய வீட்டின் பின் வேலியில் அந்த செல் விழுந்து வெடித்தது.அவ்வேலியோடு இருந்த சிறிய வீட்டில் காது அவ்வளவாக கேட்காத ‘புளுகர்’என பகிடியாக அழைக்கப்பட்ட கிழவரும்,பாட்டியும் இருந்தார்கள்.அப்பு, எந்த நேரமும் முன் விராந்தையில் இருக்கிற‌ சாய்வு நாற்காலியிலே இருப்பார்.பாட்டி குடு,குடுவென‌ நடமாடிக் கொண்டிருப்பார்.செல் விழுந்த இரவு,பாட்டி உள்ளே இருந்தார்.தாத்தா,அதிலே சாய்ஞ்சிருந்தார். வெடித்த செல்லின் ஒரு சிறிய துண்டு தாத்தாவின் உடலில் தைத்து விட்டது.இரத்தம் ஓடி ஓடி பகலில் பாட்டி பார்த்த போது தாத்தா இறந்து கிடந்தார்.

அதற்குப் பிறகு, இருளில் கறுப்பு கெலிகப்டர் ஒன்றும் வானில் படபடத்தது.

அதிலிருந்து பொலிவாக மக்கள் கூட்டம் இருந்த மையிலியப்புல கந்தசாமிக் கோவிலை நோக்கி சுட்டிருக்கிறார்கள்.குலனை சுடலைக்கு கிட்டவாக இருந்ததால் அங்கிருந்தவர்கள் இந்த கோவிலை வந்தடைந்திருக்கிறார்கள்.இவர்களை விட வேறு பலரும் கூட பயத்தில் கோவிலுக்கே வந்திருக்கிறார்கள்.சின்னத்தாய்யின் கையில் இருந்த குழந்தை ஒன்றில் குண்டு பாய்ந்திருக்கிறது.குலனையைச் சேர்ந்த சிவசேக‌ரம் மாஸ்ரிலும் ஒரு குண்டு தைத்திருக்கிறது.குண்டு பாய்ந்தவுடனே உடம்பில் ஏறியது தெரிவதில்லை.வலி கொஞ்சநேரத்திற்குப் பிறகே சிறுக கடித்தது மாதிரித் தெரியத் தொடங்கும்.இருளில் அதற்கிடையில் ரத்தம் ஓடி ஓடி இருவரும் இறந்து விட்டார்கள். விதி வலியது.

மாஸ்ரர்,.அராலியிலே இயற்கை உரங்களை பாவித்து தோட்டம் செய்வதில் வல்லவர்,நிபுணர்.அவருடைய நெற்காணியில் பொலிவுடன் இருக்கிற தோடத்தைப் பார்க்கலாம். மாஸ்ரரின் இழப்பு பெரும் இழப்பு. அவருக்கு நாலு பிள்ளைகள் இருக்கிறார்கள்.இனி,அவர்கள் தான் அவருடைய இழப்பை ஈடு கட்ட வேண்டும். பலிக்குப் பலி எடுத்திருக்கிறார்கள்.

இந்தியனாமி,அ ங்கிருந்து முற்றாக பெயர்ந்து பிரதான வீதியில் சிறிது தொலைவில் மாட்டொழுங்கையில், கடலுக்கு முன்னால் (அவ்விதம் ஒழுங்கை எதுவும் தற்போது கிடையாது, முன்னொருகாலத்தில் இருந்திருக்க வேண்டும்,)சிறிய முகாம் ஒன்றை அமைத்து, சென்ரியை ஏற்படுத்தி க் கொண்டு (மிச்ச) இந்தியனாமி யாழ்கோட்டைக்கு சென்று விட்டது.

சென்ரியில்,சைக்கிளில்,மாட்டு வண்டியில், வாகனங்களில் போறவர்கள் எவரையுமே… நிறுத்தி சோதனை இட்டே போக,வர விட்டார்கள். கனகாலமாக அந்த சென்ரி இருந்தது.மக்கள் பயப்படாமல் போய் வாரார்கள் என ஏற்பட்ட பிறகு,யாழ்ப்பாணத்திலேயே இருந்து விட்ட ஆண் தரப்பினர் வந்து,ஜமுனா,ரேவதி வீட்டாரை சைக்கிளில் ஏற்றிக் கொண்டுச் சென்றார்கள்.

கந்தைய்யா மாஸ்ரரின் மாட்டு வண்டிலை வாடகைக்கு எடுத்து குஞ்சனும்,நகுலனும் அதில் ஆச்சியையும்,சின்னம்மாவையும் ஏற்றிக் கொண்டு அப்பாதையில் விட்டார்கள். சென்ரியில் வைத்து மறித்து விட்டார்கள். தலைப்பாகையுடன் சீக்கியர்கள் வண்டிலுக்கு கிட்ட வர,ஆச்சி,”எப்படி,சுகமாய் இருக்கிறாயா மகனே”என கிந்தியில் அன்பாக‌ விசாரித்தார். அவர் சரளமாக பேசி இருக்க வேண்டும்.சீக்கியர்களிற்கு படு ஆச்சரியம்.”மாதாஜி சலோ,சலோ”என இருவர் கையை விரித்து வழியை விட ,பின்னால் நின்ற இருவர் விறைப்பாகச் சலூட் அடித்தார்கள். வண்டிலை சோதனை இடவே இல்லை. .நகுலனுக்கும்,குஞ்சனுக்கும் ஆச்சரியமாக இருந்தது

.”ஆச்சி,அப்படி என்ன தான் சொன்னனீங்கள்”என கேட்ட போது ,”எப்படி சுகமாய் இருக்கிறாயா?எனக் கேட்டேன்”என்றார். சின்ன வயதில் ஆச்சி சரளமாக கிந்தி பேசுறவர் என்பது அப்ப தான் புரிந்தது.பலதை மறந்து விட்டாலும் அவரையும் மீறி ‘கிந்தி’ வந்து விட்டிருக்கிறது. வீட்டிலே,சின்னம்மா, நல்ல ‘டீ’போட்டுத் தந்தார்.2,3மணித்தியாலத்துக்குப் பிறகு திரும்பி வந்த போது,அவன்ர வண்டியை ஞாபகம் வைத்திருந்து சீக்கியர்கள்”சலோ,சலோ”என நிறுத்தவே இல்லை,விட்டு விட்டார்கள்.

இரண்டொரு நாட்களுக்குப் பிறகு லொரிக்காரரும் வந்தார்.”பற்றரியை எடுத்து பாவிக்கிறோம்”என்று நகுலன் தெரிவித்தான்.”பரவாய்யில்லை”என கூறியவர்,கிளினரை விட்டு பற்றரிகளை எடுத்து வர‌ அனுப்பினார்.நகுலனும்,சுஜேயும் தாங்களே காவிக் கொண்டு லொரியடிக்கு கொண்டு வந்தார்கள்.அராலியில் இருக்கிற யாரோ ஒருவரின் வாகனத்தைக் கொண்டு வந்து,பூஸ்ட் கொடுத்து ஸ்டார் பண்ணினார்கள். ரீச்சர்ர வீட்டினர் என தெரிந்த பிறகு, அவரும் சிவம் காசு கொடுத்த போது வாங்காது சென்றார்.

சரித்திரம் படைத்த லொரியும் அகன்றது.

(முற்றும்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *