“ஆர்டர் கொடுத்து, இருபது நிமிடங்கள் ஆவுது. சர்வர் இன்னும் நான் கேட்டதைக் கொண்டு வரவில்லை.
இந்த மாதிரி சின்னப் பையன்களை வச்சுக்கிட்டு ஓட்டல் நடத்தினால் வர்றவங்க பட்டினியால் சாக வேண்டியதுதான்’
என்று முதலாளியிடம் கோபமாக கத்திவிட்டு எழுந்தார் சக்கரபாணி.
“ஏண்டா சோம்பேறி! அவருக்குப் பின்னாடி ஆர்டர் கொடுத்தவங்களுக்கெல்லாம் கொண்டுவந்துட்டு, சாரை மட்டும் வெயிட் பண்ண வச்சுட்டே!’ தன் பங்குக்கு, சர்வர் குமாரை முதலாளி கடிந்து கொண்டார்.
“டென்ஷன் ஆகாதீங்க முதலாளி. சர்க்கரை வியாதிக்கு சாப்பிட வேண்டிய மருந்தை நான்தான் நேற்று உங்களுக்கு பக்கத்து பார்மஸியில் வாங்கி வந்தேன். அந்த மாத்திரையை விழுங்கி, இருபது நிமிடங்களுக்குப் பிறகுதான், டிபன் சாப்பிடணும்னு நீங்க சொன்னீங்க.
சாரும், அதே மாத்திரையைத்தான் இங்கு வந்து உட்கார்ந்ததும் வாயில் போட்டுக்கிட்டார். இருபது நிமிடங்களுக்கு பிறகு
சாப்பிட்டால் தான், மாத்திரையின் எஃபெக்ட் இருக்கும். அதனால்தான் லேட் பண்ணேன். தப்பா இருந்தால் மன்னிச்சுடுங்க…’ என்று அவர்களைப் பார்த்து குமார் கைகளைக் கூப்பினான்.
“தீயா வேலை செய்யற குமாரு நீ நல்லா வருவே’ என்று இருவரும் அவனை பாராட்டி, கூலாயினர்.
– ஜூலை 2013
——————————–
–
நன்றி: குமுதம்